’ஒரு தூக்கு’ – ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை

This entry is part 7 of 33 in the series 14 ஏப்ரல் 2013

’ஒரு தூக்கு’ – ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை

(‘A Hanging’- An Essay by George Orwell)

(1)

ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்

பர்மாவில் மழையில் முழுதும் நனைந்த ஒரு காலை வேளை. மஞ்சள் தகர மென்தகடு(tinfoil) போன்று நலிந்த வெளிச்சம் உயர்ந்தோங்கிய சுவர்களுக்குச் சாய்வாக, சிறைவெளியில் விழும். சிறிய மிருகங்களின் கூண்டுகள் போல், முன்புறம் இணை கம்பிகளால் கட்டமைக்கப்பட்டு வரிசையாய் இருக்கும் கொட்டங்கள்(sheds) போன்ற மரணக்குற்றக் கூடங்கள்.(condemned cells) வெளியே நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு கூடமும் பத்தடிக்குப் பத்து என்ற அளவினதாய் இருக்கும். ஒரு மரப்பலகைப் படுக்கையும், ஒரு தண்ணீர்க் குடுவையும் தவிர வேறொன்றுமில்லாமல் வெறிச்சென்றிருக்கும். கூடங்கள் சிலவற்றில், கம்பளங்களைச் சுற்றிப் போர்த்திக் கொண்டு, கம்பிகளின் பின்னால் பேசாது பழுப்பு(brown) மனிதர்கள் தரையில் சப்பணம் போட்டு உட்கார்ந்திருப்பர். இவர்கள் மரணக் குற்ற மனிதர்கள்.(condemned men) இன்னும் ஒன்றிரண்டு வாரங்களுக்குள் தூக்கிலடப்படப் போகிறவர்கள்.

ஒரு கைதி அவனுடைய கூடத்திலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டான். அவன் ஒரு இந்து.  மழிக்கப்பட்ட தலையும், வெறித்த கலங்கிய கண்களுமாய் சின்ன ஒல்லிக் குச்சியெனும்  ஒரு ஆள். அவன் அடர்த்தியாய் முளைவிட்ட மீசையோடிருந்தான். சினிமாக்களில் வருகின்ற கோமாளியின் மீசை போன்று ,அவனது உடலுக்குப் பொருத்தமில்லாமல் அது மிகப் பெரிதாய் இருந்தது.  உயரமான ஆறு இந்தியக் காவலர்கள் அவனைக் காவல் காத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அவனைத் தூக்கு மேடைக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். இரு காவலர்கள் அவனுக்கருகில் துப்பாக்கியும், துப்பாக்கியில் பொருத்தப்பட்ட ஈட்டியும்(bayonet) சகிதமாய் நிற்க, மற்ற காவலர்கள் அவனைக் கைவிலங்கிட்டு, ஒரு சங்கிலியைக் கைவிலங்கின் உள் விட்டு அவர்களுடைய  அரைக்கச்சுகளோடு(belts) பிணைத்து அவனது கைகளை அவன் பக்கங்களில் இழுத்துச் சேர்த்தனர். அவன் எப்போதும் அங்கிருக்கும் உணர்வை உறுதி செய்வது போல அவன் மேல் கவனமாய் அழுந்தியிருக்கும் பிடிப்போடு தங்கள் கைகளை வைத்துக் கொண்டு அவனை நெருக்கடித்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் உயிரோடும், ஆனால் தண்ணீருக்குள் மீண்டும்  குதித்து விடலாம் என்று ஒரு மீனைப் பிடித்திருக்கும் மனிதர்கள் போல் அவர்கள் இருந்தார்கள். ஆனால் என்ன நடக்கிறது  என்பதையே கவனியாதவனாய், கைகளைப் பிணையின் இழுத்த இழுப்பிற்கேற்ப எந்தவித எதிர்ப்புமின்றி அவன் நிற்பான்.

தூரத்துக் காவல் குடியிருப்பிலிருந்து(barracks) எட்டு மணியென்று அடிக்கும் கடிகார ஓசையும், விசில் ஒலியும் ஈரக் காற்றில் அனாதையாய் மிதந்து வரும். எங்களிடமிருந்து தனியாக நின்று , குச்சியால் சரளைக்கற்களை தற்போக்கில் குத்திக் கொண்டிருந்த சிறை மேலதிகாரி, ஓசை கேட்டதும் தலையை நிமிர்த்தினார். சாம்பல் நிறப் பல்துலக்கி( grey toothbrush) போன்ற மீசையோடும், கரகரத்த குரலுமுடைய அவர் ராணுவத்திலிருந்த மருத்துவர். ’கடவுளைக் கருதியாவது, ஃபிரான்சிஸ், சீக்கிரமாகட்டும் ”(For God’s sake hurry up, Francis) என்று எரிச்சலோடு சொல்வார். ‘இந்த நேரத்திற்குள் இவன்  போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்; இன்னும் நீ ஆயத்தமாயில்லையா?’

பொன்னிறக் கண்ணாடியும், வெள்ளை அணிவகுப்பு உடையும் அணிந்த ஒரு பருத்த திராவிடனான தலைமை ஜெயிலர்( head jailer)ஃபிரான்சிஸ் தன்னுடைய கருங் கைகளை ஆட்டுவான். ‘ ஆமாம் சார், ஆமாம் சார்’- அவன் குமிழியிடுவான். ‘எல்லாம் திருப்திகரமாக  தயார் செய்யப்பட்டுள்ளது; தூக்காள்(hang man) காத்துக் கொண்டிருக்கிறான். நாம் செல்லலாம்.(All iss satisfactorily prepared. The hangman iss waiting. We shall proceed)

‘நல்லது, விரைவில் நட பின்; இந்த வேலை முடியும் வரை கைதிகளுக்கு காலை உணவு கிடைக்காது.’

நாங்கள் தூக்கு மேடையை நோக்கிச் சென்றோம். துப்பாக்கிகளைச் சாய்த்து வைத்துக் கொண்டு இரண்டு காவலர்கள் முறையே கைதியின் இருபுறமும் அணிவகுத்துப் போயினர். மற்ற இரண்டு காவலர்கள் அவனுக்கு நெருக்கமாய் அவனின் கையும் தோளும் இறுக்கி, ஒரே சமயத்தில் தள்ளியும் பிடித்துமாய் நடந்தனர். மாஜிஸ்டிரேட்கள் மற்றும் ஏனையோரும் பின்பற்றிச் சென்றோம். பத்து கெஜ தூரத்தைக் கடந்த போது, திடீரென்று ஊர்வலம்  எந்த உத்தரவும், எச்சரிக்கையுமின்றி முன் நின்றது;  ஒரு அச்சமூட்டும் நிகழ்வு நடந்திருந்தது- கடவுளுக்குத் தான் வெளிச்சம் எங்கிருந்தென்று-  ஒரு நாய் வெளியில் வந்திருந்தது.( A dreadful thing had happened-a dog, come goodness knows whence, had appeared in the yard). அது உரத்த சரமாரியான குரைப்புகளில் எங்களிடையே  சுற்றி வளைத்து, உடல் முழுதும் ஆட்டிக் கொண்டு இத்தனை மனிதர்கள் கூடியிருப்பதைக் கண்டு மீதூர்ந்து களி கொண்டதாய் துள்ளிக் குதிக்கும். அது கம்பளி உரோமம் மிகுந்த ஒரு பெரிய நாய்- பாதி ஏய்ர்டேல்(half Airedale) ஜாதி—–. ஒரு கணம் அது எங்களைச் சுற்றி வந்து துள்ளும்; அதன் பின் யாரும் தடுப்பதற்கு முன் கைதியை நோக்கி ஓட்டம் பிடிக்கும்; குதித்து அவன் முகத்தை நக்க முயலும். நாயைப் பிடிக்கக் கூட நிலையிலில்லாத அதிர்ச்சியில் எல்லோரும் அச்சத்தில் திகைத்து நிற்பர்.

‘யார் அந்தக் கொடும் மிருகத்தை இங்கே உள்ளே விட்டது?’ மேலதிகாரி கோபத்துடன் கேட்பார். ‘யாராவது பிடியுங்கள் அதை!.’

காவலிலிருந்து விடுவித்துக் கொண்டு ஒரு காவலர் நாயின் பின்னால் குளறுபடியாய்ப் பாய்வார். ஆனால் நாய், ஒவ்வொன்றையும் விளையாட்டின் பகுதியாய் எடுத்துக் கொண்டு, ஆடியும், துள்ளிக் குதித்தும் அவன் பிடிக்குள் அகப்படாது போகும். ஒரு இளவயது யுரேசியன் ஜெயிலர் சில சரளைக்கற்களை அள்ளி நாயின் மேல் வீசி விரட்ட முயல்வான். ஆனால் நாய் கற்களை ஏமாற்றி விட்டு எங்களின் பின்னால் மீண்டும் தொடரும். சிறையிலிருந்து எதிரொலிக்கும் அதன் குரைப்புகள் புலம்பும். ஏதோ இது தூக்கில் போடுவதற்கான இன்னொரு வழக்கமென்பது போல் இரண்டு காவலர்கள் பிடியிலிருந்த கைதி எந்த சுவாரசியமுமின்றி ( incuriously) பார்த்துக் கொண்டிருப்பான். யாரோ ஒருவன் அதைப் பிடிப்பதற்குள் பல நிமிடங்களாகியிருக்கும். பிறகு எனது கைக்குட்டையை அதனது கழுத்தில் மாட்டி, இன்னும் சண்டித்தனமும், சிணுங்கவும் செய்யும் நாயை நாங்கள் மறுபடியும் இழுத்துக் கொண்டு நகர்ந்தோம்.

தூக்கு மேடைக்கு ஏறத்தாழ இன்னும் நாற்பது கெஜ தூரம். என் முன்னால் போய்க் கொண்டிருந்த கைதியின் திறந்த பழுப்பு முதுகினைக் கவனித்தேன். மூட்டுகளை நிமிர்த்தாமல் நடக்கும் இந்தியன் மெல்ல ஆடி நடப்பது போல் கைகள் பிணைக்கப்பட்ட அவன் குளறுபடியாய் ஆனால் நிதானமாய் நடப்பான். எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டிலும் அவனுடைய தசைகள் சரியாகத் தாழ்ந்து இடஞ்சேரும்; மண்டையின் குடுமி மேலும் கீழுமாய் ஆடும். அவனது பாதங்கள் ஈரச் சரளைக்கற்களில் தம் பதிவுகளைப் பதிக்கும். அவனது தோள் ஒவ்வொன்றையும் ஆட்கள் இறுகப்பற்றியிருந்தாலும், ஒரு கணம், வழியில் கண்ட மழைக்குட்டையைத் (puddle) தவிர்க்க சிறிது விலகி எட்டு வைப்பான்.

இது விநோதமாயிருக்கும்;(it is curious) அந்த நிமிடம் வரைக்கும் நல்ல உடல் நிலையும், பிரக்ஞையும் கொண்ட ஒரு மனிதனை அழிப்பது எப்படிப்பட்டது என்பதை அறியாதவனாய் இருந்தேன். மழைக்குட்டையைத் தவிர்க்க கைதி விலகி எட்டு வைத்ததைக் கண்ட போது, முழு வீச்சில் இருக்கும் ஒரு வாழ்க்கையை முன்கூட்டியே வெட்டி விடுவதில் இருக்கும் சொல்லவொண்ணா அதர்மத்தையும், புதிரையும் கண்டேன். இந்த மனிதன் செத்துக் கொண்டிருப்பவனில்லை;நாம் உயிரோடு இருப்பது போல் அவனும் உயிரோடு இருப்பான். அவனது எல்லா உறுப்புகளும் இயக்கத்தில் உள்ளன- குடல்கள் உணவை ஜீரணம் செய்யும்; தோல் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும்; நகங்கள் வளரும்; திசுக்கள் வடிவம் பெறும்- எல்லாம் பவித்திரமான அபத்தத்தில் செயல்படும். தொங்கப் போகும் அவன் நிற்கும் ஞான்றும், ஒரு விநாடியில் பத்தில் ஒரு பங்கே வாழ்வதற்கு இருக்கும் போது காற்றுவெளியில் வீழும் ஞான்றும், அவன் நகங்கள் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும்; அவன் கண்கள் மஞ்சள் சரளைக்கற்களையும், சாம்பல் சுவர்களையும் பார்க்கும்; அவனது மூளை இன்னும் நினைவு கொள்ளும்; முன் அனுமானிக்கும்; காரணம் தேரும்;- மழைக்குட்டையைப் பற்றிக் கூடக் காரணம் தேரும். அவனும் யாமும் ஒரே உலகத்தைக் கண்டும், கேட்டும், உணர்ந்தும்,புரிந்தும் ஒருங்கே நடந்து செல்லும் ஒரே வகுப்பைச் சேர்ந்த மனிதர்கள் தாம். இரண்டு நிமிடங்களில், சட்டென்று ஒடிந்து  எங்களில் ஒருவன் போய் விடுவான். –  சித்தமொன்று குறைந்து,  உலகமொன்று குறைந்து (and in two minutes, with a sudden snap, one of us would be gone- one mind less, one world less)

சிறையின் மைய வெளியை விட்டு தனித்து, உயர்ந்த முட் களைச்செடிகள் வளர்ந்து கிடக்கும் ஒரு சிறிய வெளியில் தூக்கு மேடை அமைந்திருந்தது. அது முப்புறமமைந்த கொட்டம் போல் செங்கல்லால் கட்டப்பட்டு  மேலே மரப்பலகைத் தளம் போடப்பட்டிருக்கும். அதன் மேல் இரண்டு தூலங்களும்(beams) , கயிறு தொங்கும் குறுக்குக் கம்பியும்(crossbar) இருக்கும். சிறையின் வெள்ளைச் சீருடையில் நரைத்த முடியுடைய ஒரு குற்றவாளியான தூக்காள் இயந்திரத்திற்குப் பக்கத்தில் காத்திருந்தான். நாங்கள் நுழைந்த போது குனிந்து கூழைக்கும்பிடு போட்டு வரவேற்றான். ஃப்ரான்சிஸ் சொன்ன மாத்திரத்தில்,இரண்டு காவலர்கள் கைதியை முன்னை விட நெருக்கமாய் இறுகப் பற்றி, தூக்கு மேடைக்குப் பாதி நடத்தியும் பாதி தள்ளியும் விட்டனர். அவன் ஏணி மேலேறக் குளறுபடியாய்(clumsily) உதவினர். பிறகு தூக்காள் மேலேறி கயிற்றைக் கைதியின் கழுத்தைச் சுற்றி மாட்டினான்.

நாங்கள் ஐந்து கெஜ தூரத்தில் காத்துக் கொண்டிருந்தோம். காவலர்கள் தூக்கு மேடையைச் சுற்றி ஏறத்தாழ வட்டமாய் நின்றனர். அதன் பின், சுருக்கு கழுத்தில் மாட்டப்பட்ட போது, கைதி அவனுடைய கடவுளை இறைஞ்சி அழ ஆரம்பித்தான். அது ராம்!ராம்!ராம்!ராம்! என்று திரும்பத் திரும்ப உச்ச கதியிலான கூக்குரலாய் இருக்கும். அது பிரார்த்தனை போல் அவசரமானதாயும், பயத்துடனதாயுமில்லை; உதவிக்கான கூக்குரலாயுமில்லை. ஏறத்தாழ ஒரு மணியின் ஓசை போல் நிதானமாயும், ஒரு தாளகதியிலும் இருக்கும். நாய் அதைக் கேட்டு தன் ஊளையைப் பதிலாக்கும். தூக்கு மேடையில் இன்னும் நின்று கொண்டிருந்த தூக்காள் மாவுப்பை போன்ற ஒரு சிறிய பருத்திப் பையை உருவி அதைக் கைதியின் முகத்தில் மூடினான். ஆனாலும் துணி மூடி நலிவுபட்ட ஓசை இன்னும் மீண்டும் மீண்டும் தொடரும்: ராம்!ராம்!ராம்!ராம்!ராம்!.

தூக்காள் கீழே இறங்கி நெம்புகோலைப்(lever) பிடித்துக் கொண்டு ஆயத்தமாய் இருப்பான். விநாடிகள் கடந்தது போலிருக்கும். கைதியின் நலிவான கூக்குரல் தாளகதியில் தொடர்ந்து கொண்டே இருக்கும்; ராம்!ராம்!ராம்!; ஒரு கணம் கூட சிறிதும் தடுமாறாமல்; தலையை மார்பில் புதைத்துக் கொண்டு மேலதிகாரி தரையைத் தன் குச்சியால் குத்திக் கொண்டிருந்தான்; ஒரு வேளை கைதியின் கூக்குரல்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை வரையில்- ஐம்பது அல்லது நூறு கூட இருக்கலாம்- அனுமதிப்பதாய் எண்ணிக் கொண்டே இருந்தான்; எல்லோரும் வெளிறிப் போயிருந்தனர். இந்தியர்கள் கெட்டுப்போன காபி போல சாம்பல் நிறமாகினர்; ஒன்றிரண்டு துப்பாக்கிகளின் ஈட்டிகள் அலைந்து கொண்டிருந்தன. இறுக்கப்பட்டு முகமூடியிடப்பட்டு தொங்கப் போகும் மனிதனை நோக்கினோம்; அவனுடைய கூக்குரல்களை கவனித்தோம்;- ஒவ்வொரு கூக்குரலும் வாழ்க்கையின் இன்னொரு விநாடி; எங்கள் எல்லோரின் மனங்களிலும் இந்த ஒரே எண்ணம் தான் : ’ஓ,விரைவில் அவனைக் கொன்று விடு; முடித்து விடு; அந்த விரும்பத்தகாத சத்தத்தை ஒடுக்கி விடு!

சடுதியில் சிறை மேலதிகாரி மனத்தைத் தீர்மானம் செய்து கொண்டான். தலையை மேல்நிமிர்த்தி தன் குச்சியை விரைவாக ஆட்டினான். ‘சலோ! (chalo!) ஏறக்குறைய பயங்கரமாய்ச் சத்தமிட்டான்;

’கிண்’ணென்று(clanking) ஒரு சப்தம்; அதன் பின் மயான அமைதி. கைதி ’பறந்து’ விட்டான்; தூக்குக் கயிறு தன்னில் முறுக்கிக் கொண்டிருக்கும்; நான் நாயை அவிழ்த்து விட்டேன். உடனே அது தூக்கு மேடையின் பின்புறம் நோக்கிப் பாயும்; ஆனால் அங்கு போய்ச் சேர்ந்ததும் முன்னமே நின்று கொண்டு குரைக்கும். பிறகு வெளியின் ஒரு மூலைக்குப் பின்வாங்கிப் போய், களைச்செடிகளின் மத்தியில் நின்று அச்சத்தோடு எங்களை நோக்கும். கைதியின் உடலைப் பரிசோதிக்க நாங்கள் தூக்கு மேடையைச் சுற்றி வந்தோம். கால்விரல்கள் கீழே நேராய் நோக்கியதாய் அவன் உடல் மிக மெதுவாகச் சுழன்று , ஒரு உயிரற்ற கல் எப்படியோ அப்படி  ஊசலாடிக் கொண்டிருக்கும்.

சிறை மேலதிகாரி குச்சியை எடுத்துக் கொண்டு வெற்றுடலைக் குத்திப் பார்ப்பான். அது சிறிது ஊசலாடும். ‘அவன் சரியாக உள்ளான்’(He is all right) என்பான் மேலதிகாரி. தூக்கு மேடையிலிருந்து திரும்பி ஆழ்ந்த மூச்சை வெளிவிடுவான். ஒருமாதிரியாய்(moody) இருந்த அவன் முகத் தோற்றம் சடுதியில் மாறியிருந்தது. தன் கைக்கடியாரத்தை அவன் ஒரு பார்வை பார்ப்பான்.’எட்டாகி எட்டு நிமிடங்கள்; நல்லது; இந்தக் காலையில் இவ்வளவு தான்; கடவுளுக்கு நன்றி’

காவலர்கள் ஈட்டிகளைக் கழற்றி விட்டு வெளியேறுவார்கள். நாய் தன் சரியற்ற நடத்தையை உணர்ந்ததாக கண்ணியத்துடன் அவர்களின் பின்னால் நழுவி விடும். நாங்கள் தூக்கு மேடை வெளியிலிருந்து, கைதிகள் காத்திருக்கும் மரணக்குற்றக் கூடங்களைக் கடந்து ,சிறையின் பெரிய மைய வெளிக்கு வந்தோம். குறுந்தடிகளை ஏந்திய காவலர்களின் கட்டுப்பாட்டின் கீழ், கைதிகள் ஏற்கனவே காலை உண்டி வழங்கப்பட்டிருப்பர். ஒவ்வொருவரும் தகரத்தட்டை வைத்துக் கொண்டு நீள் வரிசைகளில் தரையில் சப்பணம் போட்டு உட்கார்ந்திருக்க, இரண்டு காவலர்கள் வாளிகளில் சோற்றை அகப்பையிலள்ளிப் போட்டுப் போய்க் கொண்டிருப்பர். தூக்குக்குப் பின் இந்தக் காட்சி மிகவும் இயல்பானதாயும் ஜாலியானதாயும் தோன்றும். எல்லோருக்கும் வேலை முடிந்தது என்று பெரிய ஆறுதலாயிருக்கும். பாடவும், ஓடவும், மெல்ல நகைக்கவும் ஒரு உந்துதலை ஒருவர் உணர்வர். எல்லோரும் உடனே தங்களுக்குள் மகிழ்ச்சியாக அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்.

என்னுடன் கூட வந்து கொண்டிருந்த யுரேசியப் பையன், நாங்கள் நடந்து வந்திருந்த வழியை நோக்கி தலையசைத்து, பழக்கமான ஒரு புன்னகையுடன்: ’உங்களுக்குத் தெரியுமா சார், அவனது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதைக் கேள்விப்பட்டதும், நமது நண்பன்( செத்த ஆளைக் குறிப்பிடுவான்) பயத்தில் சிறைக்கூடத்திலேயே சிறுநீர் கழித்து விட்டான்- தயவு செய்து ஒரு சிகரெட்டை எடுத்துக் கொள்ளுங்கள் சார், எனது புதிய வெள்ளிப்பெட்டியைப் பாராட்டமாட்டீர்களா, சார்? டப்பாக்காரனிடமிருந்து இரண்டு ரூபாய்கள் நான்காணாக்களுக்கு– மேன்மையான் ஐரோப்பிய ரகம்.’ பலர் சிரித்தனர்-எதற்காக சிரிக்கிறோம் என்ற நிச்சயமில்லாமல்.

மேலதிகாரியின் அருகில் வாயடித்துக் கொண்டு ஃபிரான்சிஸ் போய்க் கொண்டிருந்தான். ’நல்லது சார், மிகவும் திருப்திகரமாக எல்லாம் நல்லபடியாக நடந்தேறி விட்டது. எல்லாமே முடிந்து போச்சு- ஃபிளிக்! (flick!)  இது போல; எப்போதும் இப்படியில்லை- ஓ- இல்லை! தூக்கு மேடைக்குக் கீழே போய், சாவை உறுதிப்படுத்த கைதியின் கால்களை மருத்துவர் இழுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கக் கூடிய சம்பவங்களையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன்.” மிக இணக்கமுடையதல்ல! (Most disagreeable!). ‘ நெளித்திழுத்தா, ஏ? அது மோசம்’ மேலதிகாரி சொல்வான்.

‘அச், சார், அவர்கள் பிடிவாதம் பிடிக்கும் போது இன்னும் மோசம்! எனக்கு ஞாபகம், ஒரு ஆளை வெளியில் தூக்கி வரப் போன போது, அவன் கூண்டின் கம்பியை இறுக்கப் பிடித்தபடி இருந்தான். நீங்கள் நம்புவது கடினம்; மூன்று காவலர்கள் முறையே ஒவ்வொரு காலையும் இழுக்க, ஆறு காவலர்கள் வேண்டியிருந்தது அவனைப் பிடித்தகற்ற. நாங்கள் அவனிடம் அறிவார்த்தமாய்ப் பேசினோம். ”எங்கள் இனிய தோழனே” ,  எங்களுக்கு நீ தரும் எல்லாத் தொல்லைகளையும், வலிகளையும் எண்ணிப் பார்’. என்றோம். ஆனால், அவன் கேட்கிறபாடில்லை. அச், அவன் மிகவும் தொந்தரவு பிடித்தவன்.”

நான் மிகவும் உரத்துச் சிரித்துக் கொண்டிருப்பதை நான் கண்டு கொண்டேன். ஒவ்வொருவரும் சிரித்துக் கொண்டிருந்தனர். மேலதிகாரி கூட          பொறுமையுடன் இளித்தான்.‘  நல்லது,எல்லோரும் வெளியே வாருங்கள்’- அவன் மிகவும்  நட்புடன் அழைத்தான். ’என் காரில் ஒரு விஸ்கி பாட்டில்(a bottle of whisky) இருக்கிறது. நாம் அதை வைத்து சமாளித்து விட முடியும்’.

சிறையின் பெரிய இரட்டைக் கதவுகளின் வழியாக சாலைக்கு வந்தோம், ”அவனுடைய கால்களை இழுத்து!”-ஒரு பர்மா மாஜிஸ்டிரேட் திடீரென்று வியந்து, உள்ளூரச் சிரிப்பு சத்தமாய் வெடிக்கச்  சிரிப்பார். நாங்கள் எல்லோரும் மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தோம். அந்த சமயத்தில் ஃபிரான்சிஸ் சொன்ன உபகதை(anecdote) அசாதராணமான வேடிக்கையாய்த் தோன்றியது. மண்ணின் மைந்தர்(native), ஐரோப்பியர் என்றில்லை,  நாங்கள் எல்லோரும் சமமாய், மிகவும் சமாதானமாய்ச் சேர்ந்து குடித்தோம் நூறு கெஜங்கள் தள்ளி செத்த மனிதன்.

(2)

கட்டுரை குறித்த சில குறிப்புகள்

ஜார்ஜ் ஆர்வெல்லின் (George Orwell) இந்தக் குறிப்பிடத்தக்க குறுங்கட்டுரை 1931-ல் அடெல்பி( The Adelphi) என்ற பிரிட்டனின்  இலக்கிய இதழில் முதலில் வெளியானது. ஜார்ஜ் ஆர்வெல்லின் இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளெய்ர்(Eric Arthur Blair). இவர் பர்மாவில் பிரிட்டன் பேரரசுக் காவல்துறையில்(British Imperial Police) 1922 முதல் 1927 வரை பணிபுரிந்தார். இந்தக் கட்டுரையில் வரும் தூக்கை ஜார்ஜ் ஆர்வெல் எங்கு, எப்போது பர்மாவில் பணிபுரிந்த காலத்தில் கண்டார் என்பதற்கு சாட்சியம் எதுவும் இல்லை. ஆனால் இக்கட்டுரை குறித்து தனது பல படைப்புக்களில் அவர் குறிப்பிடுகிறார். இந்தக் கட்டுரை இணையதளத்தில் உள்ளது. இந்து நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது( August 31, 2011)

தூக்கைக் குறித்த நிகழ்வின் விவரணத்தில் தூக்குக்கெதிரான மன எழுச்சியையும் , தார்மீகத்தையும் இந்தக் கட்டுரை நிகழ்த்துகிறது. இதில் தூக்கிலிடப்படுபவன் இழைத்த குற்றம் பற்றிய தகவல்கள் இல்லை. ஏனென்றால் அத் தகவல்கள் வாசகரிடம் குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து தூக்கு பற்றிய எதிர்வினைகளை உருவாக்கும். அவை சார்பு நிலைப்பாடானவை.(relative stand) குற்றம் எத்தகைத்தானும் தூக்கு மனிதநேயமற்றது என்ற முழுமையான நிலைப்பாட்டை (absolute stand) வாசகருக்கு கட்டுரை முன்வைப்பது போல் இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் தூக்கில் தொங்கப் போகிறவன், எப்படி மழைநீர்க் குட்டையைப் பார்த்தவுடன் இயல்பாகவே ஒதுங்கிப் போகிறான்? எப்படி உயிர் போவதற்கு சற்று முன்பு கூட, உயிர் ’உயிர்’ வாழ விரும்புகிறது? எப்படி அமைப்பு நீதி என்ற பெயரில் அந்த உயிரை –வாழ்க்கையைப்- பறிப்பது நியாயம்? இங்கு ஜார்ஜ் ஆர்வெல் நேரடியாகத் தூக்கினை எதிர்த்து உணர்வலைகளை எழுப்புகிறார். இந்த உணர்வலைகள் நாயின் பாத்திரம் மூலம் மேலும் சுழலாகின்றன. திடீரென்று எங்கிருந்தோ சிறைவெளியில் துள்ளிக்குதித்து வரும் நாய் தூக்கிலிடப்படப்போகும் கைதியின் முகத்தை நக்குகிறது. எப்படி ஒரு உயிர்- நாயின் உயிர் என்றாலும்- இன்னொரு உயிரை-மனித உயிரைத் தான் – நேசிக்கிறது? பின் அதே நாய் கைதியின் ராம்!ராம் கூக்குரல்களுக்கு தன் ஊளையைப் பதிலாக்குகிறது. எப்படி ஒரு உயிர்- நாயின் உயிரென்றாலும்- இன்னொரு உயிரின் –மனித உயிரின் துயரத்திற்கு- இரங்குகிறது? கடைசியில் தூக்கிலிடப்பட்டவனின் உயிரற்ற உடலைப் பார்த்து விட்டுப் பம்மி அச்சமாகி நாய் மூலையில் போய் ஒதுங்கிறது. எப்படி ஒரு உயிர் –நாயின் உயிரென்றாலும்- இன்னொரு உயிர் –மனித உயிர்- பறிக்கப்பட்ட வன்மையின் அச்சத்தில் குலைநடுங்கிப் போகிறது? நாய்க்கு இருக்கும் உயிர்ப்புரிதல் கூட மனிதனுக்கு சகமனித உயிர் மேல் இல்லையா ( மற்ற உயிர்களை விட்டு விடுங்கள்) என்று கட்டுரையாளர் கேட்பது போல் இருக்கிறது.

தூக்கிலிடப்படுவது ‘வேலை’யாய் விடுகிறது; வேலை முடிந்தவுடன் எல்லோருக்கும் ஆறுதலாகிறது. எல்லோரும் அரட்டையடிக்கிறார்கள்; ஜாலியாகச் சிரிக்கிறார்கள்; சேர்ந்து குடிக்கிறார்கள்; செத்த மனிதன் நூறு கெஜங்கள் தள்ளி; கட்டுரை முடியும் போது எப்படி மனிதரின் சொரணை(sensitivity) மழுங்கி இதை விடக் குரூரமாய் இருக்க முடியும் என்று அங்கலாய்க்காமல் இருக்க முடியவில்லை.

 

 

Series Navigationபிறவிக் கடல்.மலேசியா ரெ கார்த்திகேசுவின் “நீர் மேல் எழுத்து” சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து…
author

கு.அழகர்சாமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *