அறம் வெல்லும் அஞ்சற்க – அகரமுதல்வனின் கவிதைத் தொகுப்பு. ஒரு வாசிப்பு அனுபவம்

author
1
0 minutes, 3 seconds Read
This entry is part 1 of 25 in the series 5 அக்டோபர் 2014

akara

ஜெயந்தன் சீராளன்

அவமானம் தாங்கிய முகத்துடன், சற்று தலை கவிழ்ந்தே இதைத் தொடங்குகிறேன். என் சகோதரனின் மனத்தில் ஆறா ரணங்களின் ரத்தம் வடிந்துகொண்டேதான் இருக்கிறது. அவனுக்கு பஞ்செடுத்து துடைத்து மருந்திட எனக்கு வக்கும் வாகும் இல்லை. அவனுக்கும் அதுவல்ல தேவை. உன் கவிதைகள் குறித்துப் பேசும் யோக்கியதை எனக்கில்லை.

இரத்தச் சேற்றில் விழுந்து புரண்டு துரோகத்தால் விரட்டப்பட்டு நீங்கள் வந்து சேர்ந்த பொழுதில் நாங்கள் காமெடி நேரங்களில் மயங்கியிருந்தோம். வசதியான, பொருள் நிறைந்த வாழ்க்கை என்கிற இலக்கு நோக்கி மொத்த நாடும், ஒவ்வொரு குடும்பமும் ஓடிக் கொண்டிருக்கும் போது, உன்னைத் தூக்கிவிட யார் வருவர்? உன்னை சகோதரனென்று கொஞ்சம் நினைத்துவிட்ட சிலபேர் மட்டும் அவமானத்துடன் உன் முன் நிற்கிறோம். நீ சொல்வது போல்,

“ஏதுமறியா அக்குழந்தை எப்படியறியும்

தன்னை இரக்கப்பட இங்கு யாருமில்லையென”

சாப்பாட்டுத் தட்டில் மீன் விழுந்த போது அதிர்ந்து சட்டென்று கையை உதறிக்கொண்டேன். மனதில் குத்தியது உன் கவிதை முள். இனி நான் மீன் சாப்பிட முடியாமலேயே போகலாம்.

குழந்தையொன்று விரும்பி உண்ணும்

மீன்களின் தசைகளில்

உருமாறியிருக்கும்

அந்த மீனவனின் கண்களும்

கதறல்களும்

எமக்குத் தெரியாமலும் கேட்காமலும்

போனதுவாய்.

இன்றைய நவீன கவிதை வசனத்துக்கு மிக நெருக்கமானது என்று புதிய இலக்கணம் பேசிக் கொள்கிறார்கள். மேற்கண்ட வரிகளில் நிச்சயமாக வசனத்திற்கும் கவிதைக்கும் நிறைய தூரம் இருக்கிறது என்று தெளிவாகிறது.

அகரமுதல்வன் ஒவ்வொரு கவிதையிலும் சொல்லும் காட்சிகள் நமக்கு சுலபமாய் படிமங்களாய் மனதில் உருவெடுக்கின்றன. ஏன்? அது அவரது கவித்திறனா? படிம உத்தியா? சொல்லாடல் மட்டுமேவா? இல்லை. இல்லையில்லை. இல்லவேயில்லை. அவர் சொல்வதற்கு முன்பே உடல் நடுங்குகிறது. தொடக்கத்திலேயே புதிதாய் என்ன கொடுமை குறித்து சொல்லிவிடுவாரோ என்று பயம் தொற்றிக்கொள்கிறது. அப்படியே சொல்லியும் விடுகிறார். தாங்க திராணியற்று நாம்தான் அந்தப் படிமத்தில் அடிபட்டு வீழ்ந்து போகிறோம்.

“குருதிப் பிரியர்களால் துயிலுரியப்பட்டவள்

அவயங்களைக் கீறிய மிருகங்களின் முகத்தில்

காறி உமிழ்ந்து மரணத்தை அழைத்திருப்பாள்”

ஒரு பெரிய சாதனையின் கடைசி எல்லையை எட்டித் தொடுவதுபோல் பெருமிதம் கொள்ளச் செய்கிற வெற்றியாகத் மனதில் படுகிறது அவள் மரணத்தை அழைக்கும் படிமம்.

உரிமைகளை காப்பதற்காக போராட்டங்களை நடத்தியவர்கள், நாடற்று, நாதியற்று நிற்கிறார்கள். ஒரு முறை நேரில் சொன்னார், “நான் எப்போதும் பேருந்திற்காக காத்திருக்கிற பயணியென்று. எப்போது வரும், எங்கே செல்வோம் என்றுதான் தெரியாது”. கேட்டபோது சோகமாய்த்தான் இருந்தது. மாபெரும் வரலாற்றுச் சோகம். இந்த தொப்புள்கொடி உறவுகளுக்கு என்னவென்றே புரியாத சோகம்.

நாடற்ற கவிஞனொருவனின் நாள்

எங்கேயும் பதியப்படாமல் பிரபஞ்சமெங்கும் உபரியாய்

தலையற்று

கை கால்களற்று

உயிருமற்று வீழ்கிறது.

 

கவிதைகளில் அழகியல் பற்றி பேசினால் கோபம் வரும் அகரமுதல்வனுக்கு.   ஆனால் முதல் தொகுப்பிற்கும் இரண்டாம் தொகுப்பிற்கும் நிறையவே மாற்றம் காண்பித்திருக்கும் கவிதையின் அழகை பாராட்டத்தானே வேண்டும்.

உனது போர் பரணிக்கு முன்னால் காணாமல் போகும் எல்லா இலக்கணங்களும் வீண் என்றாகி இதோ இந்த வரிகளில் கவிதை தனியே தானாக எழுந்து நிற்கிறது.

உயிர்த்தெழ முடியாதபடிக்கு

உடல்துளைத்துக் கிழிக்கப்பட்டு

சிலுவையொன்றில் அறையப்பட்டான்

எமக்கான இயேசு.

அவனது மரித்தலின் ஆழத்தை நீந்துகிற போது

பொறுத்தலுக்கு அப்பாற்பட்டு

கடலின் ஜீவன் எழுச்சியாகிக் கொண்டிருக்கிறது.

 

இன்றைய கயவர்களின் கொடுமைகளால் இப்படித்தான் சிந்திக்கத் தோன்றுகிறது, ஒரு வேளை இயேசு இவர்களிடம் உயிர்த்தெழ முடியாதபடிக்கு சித்திரவதை பட்டிருப்பார், காந்தி அஹிம்சை பேசும் முன் பற்கள் உடைபட்டு, உண்ணாவிரதத்தில் உயிர் துறந்திருப்பார்.

“மேலும் ஒளியற்று பகல் மண்டியிட்டது

நாயகன் களத்திடை வீழ்ந்தது உறுதியானது”

.

.

.

.

.

.

(சற்று மௌனம் காத்து பிறகு வாசிக்கத் தொடங்குங்கள்)

ஒரு மாபெரும் வீழ்ச்சியை, அதன் கனபரிமாணத்தை, பகல் மண்டியிட்டது போல் உருவகப்படுத்துகிறார். பகல் என்பது ஒரு அரூபம் (ஆங்கில இலக்கணப்படி abstract noun) ஆனால் அகன்ற பரிமாணம். எல்லையற்றதொரு மாபெரும் உருவம் மண்டியிட்டது போல் அந்த வீழ்ச்சி!. உணர்வுகளைக் கடத்தும் கவிதைக்கு நல்லுதாரணம்.

முன்னுரையில் கோவை ஞானி சொல்வதுபோல் நெஞ்சில் வெடிக்கத்தான் செய்கின்றன கவிதைத் துவக்குகள்.

எல்லாக் கவிதைகளிலும் இனஒடுக்கு முறையும், வன்கொடுமையும், ரத்தமும் சாக்காடுமுமாகவா இருக்கிறது. இல்லை, கவிஞரின் மனநிலை புலம்பல் தன்மை கொண்டது இல்லை.   எல்லா வீழ்ச்சியிலும் எழுந்து எழுந்து நெஞ்சு நிமிர்த்தி நிற்கிறார்.

எமக்கென வரைந்த அனுகூலங்களில்

போர்கள் பிரகடனமாவது தவிர

வாழ்வு வேறொன்றும் பரிசளித்ததில்லை.

 

அவரின் தேவை, அல்லது அவர்களின் தேவை போர் பிரகடனம்தான் என்று தெளிவுபடுத்துகிறார். அதுவே அவர்களுக்கு அனுகூலமாக இருக்கும்-

 

மண்ணை முத்தமிட்டவர்களின் முகங்கள்

நான் அணிந்திருந்த தேசப்பற்றாளன்

முகமூடியின் மேல் காறி உமிழ்ந்தது.

 

மண்ணில் விழுந்தவர்களை வென்றவர்களாக நினைக்கிறார். வீழாமலும், வெல்லாமலும் நிற்பதையே அவர் அவமானமாக கருதுகிறார். ஒரு போராளியின் மனநிலை நமக்கு யூகிக்கக் கிடைப்பதாய் இல்லை.

“அஞ்சற்கவென்று

அவனை நகலெடுத்து விரைகிறேன்

மனவெளியில் விரியும் போர்க்களத்திற்கு”

கனவிலும் கூட போர்க்களத்திற்கு சென்று தன் சகோதரனுக்கு அஞ்சற்கவென உரமேற்றுகிறார். இவரது நெஞ்சுறம் ஆச்சரியப்படுத்துகிறது.

 

“கொள்வனவு அரசியலில் விளம்பரப் பொருளாக்கி

நாடற்ற மக்களின் துயர் பாடி

வீடு வாங்கி கொண்டிருக்கின்றனர் பதாகை

புரட்சியாளர்கள்.”

மிகக் கசப்பான அங்கதம். (ஹிட்லரை எல்லாம் மிஞ்சியாகிவிட்டது இன்றைய கயவர். அவர் கொடியவனுக்கோர் எடுத்துக்காட்டு அல்ல) தமிழகத்தில் புழக்கத்தில் இல்லாத, ஏன் தெரியவே தெரியாத பல சொற்களை கவிதையில் கையாளுகிறார், அவற்றில் ஒன்று இந்த ‘கொள்வனவு’. இதற்கென்ன பொருள்? வியாபாரம் என்பதுதான் பொருளாக இருக்க முடியும். ஆனால் இது அழகாக இருக்கிறது. ஒரு நீண்ட பட்டியலே உருவாக்கலாம். சிலப் பல சொற்களை நாமும் இங்கு எடுத்தாள முயற்சித்தால் நமது மொழி வளம்பெறலாம். சில சொற்கள்,

கொள்வனவு

வதை முகாம்

நான்காம் மாடிப் பார்வை

தகட்டிலக்கம்

ஏவறை

இந்தப் போர் வீரன் வாளை இடுப்பில் சொருகிவிட்டு மலர்க்கொத்துகளோடும் போரிடுகிறார், ஏனென்றால் அந்த எதிரி ‘அவள்‘ அல்லவா. பதில் சொல்லாத காதலிக்கு ‘செவிட்டுத் தனங்களை பரிசளிப்பவள்’ என்கிற புதிய அடைமொழி கொடுக்கிறார். ஆனாலும் நூலின் குணாம்சத்திற்கு நடுவே காதல் கவிதைகள் நெருடலாகவே இருக்கிறது. கொஞ்சநாள் கழித்து இடைவெளிவிட்டு மீண்டும் ஒருமுறை காதல் கவிதைகள் மட்டுமே படித்துப் பார்க்க வேண்டும்.

வாசிப்பிற்கு பிறகான சிந்தனையில் ஒன்று தோன்றுகிறது. நாமும் ஈழத் தமிழர்களும் ஒரு பொதுவான மொழி தெரிந்தவர்கள் என்பது தவிர வேறு எந்த வகையில் நாம் ஒரே தளத்தில் இயங்குகிறோம் என்ற கேள்வி. பல நூறு ஆண்டுகளாக தங்கள் உரிமைகளையும், இனத்தையும், தங்கள் தனித் தன்மையையும் காத்து வென்றெடுக்க போராடி வரும், போராட்ட குணம் மிக்க ஆளுமையுடனும் நெஞ்சுறுதியோடும் நிற்கிற அவர்களுக்கு நாம், இன்றைய தமிழ்நாட்டு தமிழர்கள் எப்படி ஆளுமையில் ஈடுகொடுப்போம்?. இங்கு கடைசியாக எப்போது, ஒரு பொது எதிரிக்கான ஒரு மாபெரும் கிளர்ச்சி நடந்திருக்கிறது? பெரியாரின் ஹிந்தி எதிர்ப்பு என்கிற கிளர்ச்சிக்கு முன்னோ பின்னோ வெகுகாலமா எந்தவொரு பெரும் இயக்கமோ அல்லது ஒரு பொது எதிரியோ இருந்தது போல் தெரியவில்லை. பெரியாருக்குப்பின் (அரசியலற்ற) சமூகப் போராளி யார் இங்கே? தமிழர் வீரம் பற்றி தாழ்த்திக் கூறாதே என கூச்சலிடலாம். மஞ்சுவிரட்டிலும், கபடி விளையாட்டிலும், அரிவாள் வெட்டிலும் காட்டும் உடல் திறன் மட்டுமல்ல ஒரு சமூகத்திற்கான ஒட்டு மொத்தமான வீரம் அல்லது ஆளுமை. எந்தவொரு பொது பிரச்சினையிலும் பொதுவாய் கூடிப் போராட இங்கு யாருமில்லை. ஒரு பொதுவான உள்ளுறை இயங்கு குணம் இல்லை. இப்படிப்பட்ட ஆளுமை கொண்ட ஒரு சமூகத்திடம், அங்கொன்றும் இங்கொன்றுமாய் குரல்கொடுக்கும் ஒரு சிலரின் வீர வசனங்களை கொண்டு ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்துவிட முடியும் எங்களால்!. எதுவும் செய்யா கையாளாகாத் தனத்தை வீரத்திற்கு எதிர்ப்பதமாகத்தான் கொள்ள வேண்டும்.

நமது ஊடகங்கள் நமக்கு மறைத்ததை, நமது அரசுகள் நம்மை ஏமாற்றியதை நமக்கு அறிமுகம் செய்கிறார் அகரமுதல்வன்.   ஒன்றிரண்டு அங்கே இங்கே என சில தகவல்கள் மட்டுமே இத்தனை ஆண்டுகளுக்குப் பின் நமக்குத் தெரிகிறது. ஆனால் அங்கிருந்தே, காட்சிகளோடு அந்த வலிகளை நம்மிடம் முதன்முறையாக கொண்டு வந்து சேர்க்கிறார் இவர். மீண்டும் மீண்டும் படித்து அத்துயர்களை அழுது கழுவி விடாமல் நெஞ்சில் தேக்கி வைப்போம். நாளைய வித்துக்கான உரமாய் அவை இருக்கட்டும்.

உன் போல் கவிதை வராவிடினும் அதே உள்ளுறை வெப்பத்துடன் ஆயிரமாயிரம் அகரமுதல்வன்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவ்வெப்பக் காற்றில் உன் கவிப்பொறி பற்ற வைக்கும் பெரு நெருப்பை.

 

seeraalan@ymail.com

Series Navigationசுத்த ஜாதகங்கள்அழியாச் சித்திரங்கள்
author

Similar Posts

Comments

  1. Avatar
    சௌமா says:

    சீராளன்,நீயா எழுதினாய் ! உன் வலக்கை பற்றி அக்கினி தேவனே தமிழன் என்று சொல்லிக் கொண்டு தப்பிலிகளாய்த் திரியும் தரங்கெட்ட மனிதர்கள் நெஞ்சினில் போட்ட சூடு!
    அகரமுதல்வனின் கவிதைக்கு ஆற்றாதழும் ஒரு உண்மைத் தமிழனின் உணர்வுபூர்வமான மொழிபெயர்ப்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *