காரைக்குடி திருக்குறட் கழகத்தின் 61 ஆம் ஆண்டு விழாவில் தவத்திரு.பொன்னம்பல அடிகளாரின் உரை

61 ஆண்டுகளுக்கு முன் , எனது பெரிய மாமாவு( திரு . வ. சுப்பையா அவர்களுக்கு ) க்கு 20 வயது. இன்றைக்கு நடிகர் நடிகையருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் அந்த வயதில் அவர்கள் திருக்குறட் கழகத்தை (குறள் ) இலக்குவன் போன்ற  நண்பர்களுடன் இணைந்து ஆரம்பித்தார்கள். அந்தக் கழகத்தின் 61 ஆம் ஆண்டு விழாவை எனது மூன்றாவது மாமா லயன் வெங்கடாசலம் அவர்கள் பொருளாளராக இருந்து சிறப்புற , களிப்புற, உவப்புற  நிறைவேற்றினார்கள். அவ்விழாவினைக் காணும் பாக்கியம் எனக்கும் கிட்டியது. அங்கே கிடைத்த சில திருக்குறளின் பொன் துளிகளை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.

நவயுகப் புத்தகாலயம் திரு மெய்யப்பன், திரு முத்துப் பழனியப்பன், திருமதி கற்பகம் இளங்கோ, திரு சுபவீரபாண்டியன், திரு அய்க்கண் ஆகியோர் பங்குபெற்ற இவ்விழாவினை ( மாலை நிகழ்ச்சி ) திருமதி தேவி நாச்சியப்பன் தொகுத்து வழங்கினார்.

திரு பொன்னம்பல அடிகளின் உரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. அதில் இருந்து நான் குறிப்பெடுத்தவற்றை இங்கே பகிர்கிறேன். (திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள  துறவறத்தின் சிறப்பு பற்றியும் உரையாற்றினார். )

கல்வியின் சிறப்பு பற்றி , இறைவனைப் பற்றி, வான்மழை சிறப்பு பற்றி, துறவறத்தின், துறவிகளின், தவத்தின் சிறப்பு பற்றி, தன்னலம் இல்லாத தொண்டுகள் பற்றி, இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றி, இல்வாழ்க்கையின் பயன் பற்றி, வாழ்க்கைத் துணையின் நலன் பற்றி, நன் மக்கட்பேறு பற்றி, கற்காலம் தொட்டு கணினிக் காலம் வரை இளைய தலைமுறைக்குத் திருக்குறள் வழிகாட்டுவது பற்றி சிறப்பாகப் பேசினார்.

”தமிழ் வளர்க்கும் இடம், தமிழை சிந்திக்கும் இடம்  காரைக்குடி. ஆதியில் இலக்கியங்கள் அரண்மனை வாசத்தில் செழிப்புற்றன. அதன் பின் கோயில்களில் பக்தி இலக்கியமாக உருப்பெற்று சிறந்து விளங்கின. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் நாட்டு விடுதலையைக் குறித்து வெள்ளையருக்கு எதிரான ஆயுத எழுத்தாக இலக்கியம் மாறியது.  பாமரருக்கும்  எட்டும்படி இலக்கியம் என்னும் வினாக்குறியை வியப்புக்குறி ஆக்கியது தேச விடுதலைப் பாடல்கள்தான்.

மகாகவி பாரதி, புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன் ஆகியோர் எழுச்சி மிக்க பாடல்களை சுதந்திர வேட்கையுடன் உருவாக்கினார்கள். ஏனெனில் தமிழ் மக்கள் உறங்கி கிடந்தார்கள். அது உடல் சார்ந்த உறக்கமல்ல. உயிர் சார்ந்த உறக்கம். அறியாமையால் வந்த உறக்கம். அந்த அறியாமையின் ஆணிவேரைக்கெல்லி எறிய பாடல்கள் இயற்றினர்.

தமிழ் பற்றி  ‘ இன்பத் தமிழ்க் கல்வி எல்லாரும் கற்றவர் என்ற நிலை எய்திடல் வேண்டும். ‘ என்று பாடினர்.

மாளிகை வாசத்திலிருந்து ஆலய வசத்திலிருந்து நாட்டு விடுதலை மூலமாக கடைக்கோடி மனிதனுக்கும் தமிழ் இலக்கியம் சித்தித்தது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே எந்தத் தனிமனிதனையும் துதி பாடாமல் எந்தச் சமயத்தையும் சாராமல் இயற்றப்பட்டுள்ளது திருக்குறள்.

பாரதி சொன்னதுபோல் “ அன்ன சத்திரம் ஆயிரம் கட்டலிலும் .. … கோடிப் புண்ணியம் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் “

நேருஜி ஒரு முறை பதினைந்து லெட்சம் பணம் கொடுத்து இடம் கொடுத்தால் அந்த ஊருக்கு ஆராய்ச்சிக் கூடம் உண்டு என்று அறிவித்தார். அப்போது காரைக்குடியில் இருந்து கோடி கொடுத்துத் தன் மாளிகையையும் கொடுத்தார் ஒருவர்.  அவர்தான் வள்ளல் அழகப்பர். இங்கே பள்ளி கல்லூரி எல்லாம் தன் சொந்த செலவில் அமைத்து எல்லாருக்கும் கல்வி அளித்தவர் வள்ளல் அழகப்பர். அவர் போத நெறி அல்ல வாழ்வு நெறியைக் கொண்டவர்.

அரசனின் ஆணையில் இருந்து ஆண்டவனின் ஆலயத்திலிருந்து தனிமனிதர்களின் சிந்தனைக்குத் தமிழ் வந்தது. அந்தத் தனிமனிதர்கள்தான் சித்தர்கள்.அவர்கள் இயற்றியதுதான் சித்தர் பாடல்கள்.

/// செக்கைக் சுற்றும் மாடு எம் ஏ படிக்காததால் ஏமாற்றாமல் சுற்றி வருகிறது என்று செக்கு சொந்தக்காரன் படித்தவனிடம் சொல்லும்  ஒரு கதையையும் ஹாஸ்யத்தோடு பகிர்ந்தார் ///

விவேகானந்தர் தனித்த நிலையில் இருந்து மாணவனாக ராமகிருஷ்ணரிடம் கல்வி வேண்டியதைக் குறிப்பிட்டார். வள்ளுவர் “ கற்க.. கற்க.. கற்க.. “ என்று கூறினார். தடையறக் கற்க. கற்றபின் நிற்க அதற்குத் தக என்றும் கூறினார். கற்க இயலாவிட்டால் கேட்டாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்று கூறினார். படித்தவன் படித்ததன் பாதையில் சிந்தித்து செயல்பட மறுத்தால் பேதையிலும் பேதை, அடிமையிலும் அடிமை. பாரதி சொன்னான், ’படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான். ’

//சில மாணவர்களுக்கு வகுப்பில் பராமரிப்பதற்காகப்  புழுக்கள் வழங்கப்பட்டன. எல்லாரும் அதைப் பராமரித்து வந்தபோது வண்ணத்துப் பூச்சிகள் வெளிப்பட்டன. ஒருவன் மட்டும் புழுவைக் கொண்டுவந்தான். அவனிடம் அதுகுறித்துக் கேட்டபோது கூட்டை உடைத்து அவசரமாகப் பார்த்ததால் அது புழுவாகவே இறந்து போனது தெரிந்தது. // புழுவானது தானாகவே கூட்டை உடைத்து வெளியேறினால்தான் பலம் வாய்ந்த கால்களும் சிறகுகளும் கிடைக்கும். இல்லாவிட்டால் புழுவாகவே மரிக்க நேரிடும். இன்றைய பெற்றோர் அதுபோலத் தங்கள் குழந்தைகளைத் தங்கள் தோள்களில் இருந்து இறக்கிவிடுவதில்லை.

நாம் அறிவுடையோர் என்பதற்கான சான்று நாம் பெற்ற பட்டங்கள் அல்ல. சில நூல்களை எழுதுவதும் அல்ல. உலகத்தின் துன்பம் நேற்று இன்று நாளை மட்டும் இல்லை., என்றுமே இருக்கிறது. அங்கே அறிவு என்பது துன்ப நீக்கத்தின் மரூஉ.

பழங்களுக்குள் சிறைப்பட்ட புழு நாவின் இச்சையால் அழிகிறது. பூக்களுக்குள் சிறைப்பட்ட வண்டு நாசியின் இச்சையால் மரிக்கிறது. அசுரமா என்ற ஒரு பறவை உண்டு. அது இசை கேட்டால் நெருப்பின் மேல் பறந்தாலும் அப்படியே நின்றுவிடும். அதனால் மரித்துவிடும். இது செவியின் இச்சை, விட்டில் பூச்சி நெருப்பின் முகத்தில் கண் மயங்கிப் பறந்து வந்து மரித்துவிடும் இது விழியின் இச்சை. ஆண் யானை முன் பெண் யானை பள்ளத்தில் விழுந்து ஆயுள் கைதியாகும். இது உடலின் இச்சை.

இவ்வாறு ஐந்து பொறிகளும் திறக்கின்றன. இதையே திருவள்ளுவர் “

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடு வாழ்வார் “ என்று கூறினார்.

மனிதன் பக்குவப்படுதல் வேறு பதப்படுதல் வேறு. காய் காயாகவே இருப்பது பதப்படுத்துதல். காய் கனியாக மாறுவது பக்குவப்படுதல். மனிதன் பக்குவப் பட வேண்டும் என்பதைத் திருக்குறள் இயம்புகிறது.

குந்தி கண்ணனிடம் கஷ்டம் தரச்சொல்லி வரம் கேட்டாள். ஏனெனில் ’கஷ்டம் வரும்போதெல்லாம்  கண்ணா அநான் உன்னை நினைப்பேன். அழைப்பேன். அப்போதுதான் கடவுள் கண்ணன் நீ என் கூடவே இருப்பாய். என் துன்பம் தீர்ப்பாய் ’என்றாளாம்.

‘தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது. ’

இறைவனுக்கு அடுத்து திருக்குறளில் வான் சிறப்பு சொல்லப்பட்டுள்ளது. ”நீரின்றி அமையாது உலகு”. “ பெய்தும் பொய்த்தும் கெடுக்கும் மழை “. (புயல்களுக்கெல்லாம் பெண் பெயர் வைக்கிறோம். )

‘ கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

யெடுப்பதூஉ மெல்லா மழை ‘

///ராஜஸ்தான் ஜோத்பூரில் மரம் ஒன்று வெட்டப்படப் போகும்போது அங்கே இருந்த ஆதிவாசி போஜ்புரி பெண்கள் கிட்டத்தட்ட 500 பேர், அனைவரும் சென்று வெட்டக்கூடாது என்று மரத்தைக் கட்டிக் கொண்டார்கள். ///

சிப்கோ இயக்கம் இதன் காரணமாகவே போராடி வருகிறது.

மரமில்லாவிட்டால் மழைபொய்க்கும். ஒவ்வொரு கோயிலிலும் ஸ்தல விருட்சம் என்று ஒன்று உண்டு. ஒவ்வொரு கோயிலிலும் மரம் வளர்த்தால் மழை பெய்யும் என்பது காரணமாக இருக்கக் கூடும்.  கோயில்கள் எல்லாம் பசுமை வனங்களாக இருந்தன. ஒரு காலத்தில் பிள்ளையார் பட்டி மருதமரங்கள் சூழ்ந்த ஊர், குன்றக்குடி அரச மரங்கள் சூழ்ந்த ஊர், மதுரை கடம்ப வனம் என்று போற்றப்பட்ட ஊர். இன்று மழை பொய்க்கிறது என்றால் மரங்கள் வெட்டப்படுகின்றன என்று பொருள். பசுமையைப் பாதுகாத்தால் இயற்கை பொய்க்காது, மழை பொய்க்காது.

துறவிகளுக்கு, இல்லறத்தார்க்கு என திருக்குறளில் குறள்கள் உண்டு.

துறந்தான் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

”அறன்  எனப்பட்டதே இல்வாழ்க்கை ” என்று இல்வாழ்க்கை வாழ்பவர்களுக்குக் கூறியுள்ளார்.

துறவி ஆபத்தைத் தனக்கு வைத்து மற்றவர்களுக்கு நன்மை செய்வார். (இதற்கு எடுத்துக்காட்டாய் விவேகானந்தர் வாழ்க்கைநிகழ்வு ஒன்றைக் கூறினார். — எப்போதும் விவேகானந்தரின் தாய் கத்தி கேட்கும்போது விவேகானந்தர் கத்தியின் கைப்பிடியைப் பிடித்து எடுத்து வந்து அம்மாவிடம் கொடுப்பாராம். ஒரு முறை விவேகானந்தர் கத்தியை எடுத்து வரும்போது கூர்முனை தன்பக்கம் இருக்கும்படியும் கைப்பிடியை தாயை நோக்கியும் கொடுக்கும்படி எடுத்து வந்தாராம். அப்போது அவரின் தாய் சொன்னாராம், மகனே உனக்கு துறவியாவதற்கான காலகட்டம் கனிந்துவிட்டது. ஏனெனில் கத்தியின் ஆபத்தான பக்கத்தை உன் பக்கம் வைத்து எடுத்து வந்து கொடுத்தாய்.கஷ்டத்தைத் தனக்கும் நன்மையை மனித குலத்துக்கும் வழங்குபவரே துறவியாக முடியும் என்றாராம். )

தவத்தின் சிறப்பு பற்றிக் கூறுகையில்

இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்

சிலர் பலர் நோலாதவர்.

— என்று கூறுகிறார் வள்ளுவர்.

எது தவம் எது நோன்பு என்று புறநானூறு “ தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்தல் “ என்று கூறுகிறது. அதையே திருக்குறளும் கூறுகிறது.

//பென்னிகுக் என்ற வெளிநாட்டுக்காரர்  தன் சொத்துக்களையும் விற்று முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்ததைக் கூறினார். // ஆயிரக்கணக்கான மக்களின் உழைப்பு வீணாகிவிடக்கூடாதென்றும் விவசாயிகளின் முகத்தில் கண்ணீர்த் தேக்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் தண்ணீர்த் தேக்கம் கட்டியதாகக் கூறினார்.

பிறருக்காக வாழ்தல் பற்றிக் கூறினார் எந்தத் தளத்திலும் இருந்தும் அறன் செய்ய வேண்டும் என்று திருக்குறள் வலியுறுத்துவதாகக் கூறினார்.

பெண்ணைப் பற்றி “ வாழ்க்கைத் துணை நலன்” என்றும்.

“ தற்காத்துத் தகைகொண்டாற் பேணித்தகை சான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண் “  என்று மனைவியின் அருமை பற்றிக் கூறினார்.

பெண்கள் இருக்கும் தேசத்தில் நீதி நியாயம் சரிவரச் செயல்படும் என்பதால் சிலப்பதிகாரத்தில் கண்ணகி தனக்கு மதுரையில் அநீதி இழைக்கப்பட்டபோது கேட்டதாக  “ பெண்டிரும் உண்டு கொல் .. பெண்டிரும் உண்டு கொல் “ — இங்கே பெண்களும் உண்டோ இந்த நாட்டில் ,  என்று வினவியதாகக் கூறினார்.

நன்மக்கட்பேறு பற்றக் கூறுகையில் நல்ல தாய் தந்தை என்ற பட்டத்தைக் குழந்தைகள்தான் தரமுடியும். அறிவார்ந்த மக்கட்பேறு அவசியம்.

“நயத்தக்க நாகரீகம் வேண்டுபவர்” பொதுநலத்துக்குப் போராட வேண்டும். என்று திருக்குறள் கற்காலம் தொட்டு கணினி காலம் வரை எல்லா நிலைகளிலும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டுகிறது என்று கூறினார்.

————————-

குறள் இலக்குவன் எல்லாருக்கும் குறள் புத்தகத்தைப் பரிசாக வழங்கி மகிழ்வார் என்ற செய்தியை அவரது உறவினர்கள் இராமநாதன் , சேதுராமன் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு குறட்கழகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. அவரின் திரு உருவப்படம் திறந்துவைக்கப்பட்டது.

திருக்குறள் செல்வர்/செம்மல் கரூர் மேலை பழனியப்பன் இக்கழகம் நடத்திய போட்டிகளில் முதல் இடம்  பெற்ற திலிபனுக்கு மற்றும்  அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற 16 மாணாக்கருக்குப் பரிசுகள் வழங்கினார். திலிபனுக்கு வழங்கப்பட்ட பரிசை அவரது தாய் பெற்றுக் கொண்டார். ( அவர் போன வருடம் பள்ளி இறுதியாண்டுபடிக்கும்போது பெற்ற பரிசு இது. தற்போது கல்லூரிக்குச் சென்று விட்டதால் கலந்துகொள்ளவில்லை )

வணக்கத்துக்கும் வழிபாட்டுக்கும் உரிய தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்  திருக்குறள் செல்வர் மேலை பழனியப்பன் அவர்களுக்கு  நினைவுப் பரிசு வழங்கினார்.

மெ. லெ. மெ. மெ. நடராஜன் செட்டியார், அமு. கரு. மு. கருப்பன் செட்டியார், வீர. சுப்ரமணியன் செட்டியார் , பள்ளத்தூர் படிக்காசு செட்டியார், வி பி எல் மீனாக்ஷி சுந்தரம் செட்டியார், டாக்டர் ராய சிதம்பரம் ஆகியோரின் சேவை பற்றிச் சிறப்பாக நினைவு கூரப்பட்டது.

author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

8 Comments

 1. Avatar
  ramu says:

  திருக்குறள் ஒரு உலக மகா இலக்கியம் என்பதில் எனக்கு உடன்பாடு அதனால் தான் வாழ்த்து தெரிவித்தேன் சென்ற கடிதத்தில். நான் அழகப்பா கல்லூரியில் 1952-56 இல் படித்தவன் அப்போதே மகர்நோன்பு பொட்டலில் நடந்தது இந்த விழா ஒரு உண்மை என்ன என்றால் ” இதன் நோக்கம் சா கணேசன் நடட்த்திகொண்டிருந்த கம்பன் விழா வுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டது என்பது உண்மை ஏன் ? அந்த காலகட்டத்தில் கம்பனுக்கு எதிர்ப்பு திராவிட கழகம் பிறகு தி மு கவிடம் இருந்தது ரா பி சேது பிள்ளையோடு அண்ணா ” தீபரவட்டும் என்ற விவாதம் நடத்தியவர் எவ்வளவு கம்பனி இழிவு படுத்த வெண்டுமெஒ அவ்வளவு செய்தார்கள் ஏன்? கம்பன் ஒரு ஆரிய தாசன் திருப்பாவை பற்றி சொற்ப்பொழிவு நிகழ்த்திய ஐயம் பெறமால் கோனாருக்கு ( கோனார் நோட்ஸ் புகழ்) ” ஆரிய தாசன்” என்று பெயரிட்டார்கள் சா கணேசனுக்கே பல எதிர்ப்புகள் இப்படியாக தோன்றியது இந்த விழா நோக்கம் எப்படியோ நல்லதை செய்தார்கள்

  1. Avatar
   ஷாலி says:

   //”(திருக்குறட் கழகம்) இதன் நோக்கம் சா கணேசன் நடட்த்திகொண்டிருந்த கம்பன் விழா வுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டது என்பது உண்மை ஏன் ? அந்த காலகட்டத்தில் கம்பனுக்கு எதிர்ப்பு திராவிட கழகம்…..//

   அய்யா ராமு அவர்களே! உண்மையில் திராவிடக் கழக கொள்கைகளுக்கு போட்டியாகவே சா.கணேசன் அவர்கள் கம்பன் கழகத்தை ஆரம்பித்தார் என்றுதான் வரலாறு சொல்கிறது.பின்பு 15 வருடம் கழித்தே திருக்குறட் கழகம் துவக்கப்பட்டது.

   “1937 ஆம் ஆண்டில் முதன்முறையாக, அன்றைய, சென்னை மாகாணத்தில் இராசகோபாலாச்சாரி தலைமையில் இந்திய தேசிய காங்கிரசுஆட்சிப் பொறுப்பேற்றது. 1938 ஆம் ஆண்டில் அவ்வரசாங்கம் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தது. அதனை எதிர்த்து தமிழறிஞர்களும் பெரியார் ஈ.வே.இரா. போன்ற சமூகச் செயற்பாட்டாளர்களும் போராடினர். அப்போராட்டத்தில் வடமொழி – வடபுலம் – வடவர் பண்பாட்டு ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்த்து “திராவிடர்நாடு திராவிடர்க்கே” என்னும் சிந்தனை மேலோங்கியது. அச்சிந்தனையின் ஒரு பகுதியாக, இராமாயணம் வடவர் பண்பாட்டை முன்மொழிகிறது எனக்கூறி, பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தினர் இராமாயணத்தை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்நிலையில் கம்பனது இலக்கிய ஆளுமையை தமிழர்களிடையே பரப்புவதற்காக காரைக்குடி சா. கணேசன் கம்பன் கழகம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.[1] ( சிவம் சுகி., கம்பன் நேற்று – இன்று – நாளை, வானதி பதிப்பகம் சென்னை, ஐ.பதி. நவ 2006, பக். 20-23)

 2. Avatar
  தேனம்மைலெக்ஷ்மணன் says:

  திரு ராமு அவர்களுக்கு

  தங்களின் அரிய தகவல்கள் கொண்ட பின்னூட்டத்துக்கு நன்றி. முகப்பில் இந்த இடுகை எனக்குத் தெரியவில்லை. தாங்கள் பின்னூட்டமிட்டபின்பே வெளியானது தெரிந்தது.

  திருக்குறளின் மேல் கொண்ட ஆர்வமும் ஈர்ப்புமே என்னை அந்த நிகழ்வில் குறிப்பெடுக்கச் செய்தது.

  நன்றி. :)

 3. Avatar
  kathirvel says:

  மனிதன் வாழ்வதற்கு வழிகாட்டிய நூல் திருக்குறள் ,,திருஅருட்பா வாழ்ந்து காட்டிய நூல் ,,ஆனால் இந்த தமிழ் நாட்டில் உள்ள ஆன்மீக பெரியவர்களும் அறிஞர் பெருமக்களும் .வள்ளலாரின் சுத்த சன்மார்க்க உண்மை நெறிகளை கண்டு கொள்ளாதது ஏன்.என்று புரியவில்லை .

 4. Avatar
  kathirvel says:

  தவத்திரு பொன்னம்பல அடிகள் அவர்கள் வள்ளலார் எழுதிய திருஅருட்பாவை படிக்க வில்லையா ? உலகத்திற்கு நல்வழிக் காட்ட இரண்டு நூல் மட்டும் இருந்தால் போதும் .பாரதியார்,பாரதிதாசன் ,தந்தை பெரியார் போன்றவர்கள் ,வள்ளலார் எழுதிய திருஅருட்பாவைப் படித்து தெரிந்து கொண்டு தாங்கள் சொல்லுவது போல் பகுத்தறிவுக் கொளகைகளை மக்கள் மத்தியில் விதைத்து உள்ளார்கள் .எப்படியோ மக்கள் நலமுடன் வாழ்ந்தால் சரி …பகுத்தறிவு ஆன்மீகத்தை உலக மக்களுக்கு உணர்த்தியவர் வள்ளல்பெருமான்.கதைகளையும் ,கற்பனைகளையும் சொல்லி மக்களை ஏமாற்றி வாழ்ந்த ஆன்மீக வாதிகளுக்கு சவக்குழி தோண்டி புதைத்தவர் வள்ளல்பெருமான் ..அவரைப் பற்றி பேசாத ஆன்மீக வாதிகள் ஆன்மீக வாதிகள் அல்ல …போலியானவர்கள் என்பது பொருள் .வள்ளலார் சொல்லாத வாழ்க்கை நெறி உலகத்தில் எங்கும் இல்லை .மனிதன் மனிதனாக வாழ்ந்து மரணத்தை வெல்ல முடியும் என்ற உண்மையை அறிவியல் ரீதியாக விஞ்ஞான ரீதியாக கண்டு பிடித்து வாழ்ந்து காட்டியுள்ளார் .மனிதன் பிறப்பு என்பது உயர்ந்த பிறப்பு அந்த பிறப்பினால் அடைய வேண்டிய ஆன்ம லாபத்தை காலம் உள்ள போதே அனுபவித்து பின் இறை நிலையை எப்படி அடைய முடியும் என்ற உண்மையை தெளிவுப் படுத்தி ..சொன்னால் மட்டும் போதாது வாழ்ந்து காட்டவேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் வள்ளல்பெருமான்.அவருடைய சன்மார்க்க நெறியைப் பின் பற்றாதவன் தமிழன் அல்ல !…நன்றி ஈரோடு கதிர்வேல்.

 5. Avatar
  IIM Ganapathi Raman says:

  இக்கட்டுரையில் தலைப்பு ஏதோ டாகுமென்ட்ரி ரைட்டிங் என நினைக்கும்படி செய்து என்னை விரட்டிவிட்டது. கூகுலில் பாரதியார் கவிதை வரிகளைத்தேடும்போது இது கிடைத்தது. படிக்க வேண்டிய திண்ணைக்கட்டுரை.

  தமிழக ஆன்மிக வாதிகளில் இருவகை: ஒருவர், தன் உரைகள்; பேருரைகளில் தான் சேர்ந்திருக்கும் மதத்தின் கருத்துக்களை ஆழ்ந்த புலமையோடு எடுத்தியம்பினாலும், வடமொழிச்சொற்களை விரவி பேசுபவர். மற்றவர்: தூய தமிழில் மட்டும்- ஆனால், எளிதில் புரியும்படியான – தமிழில் பேசுவார்கள். ஆதினங்கள் இந்த இரண்டாம் வகை.

  நான் இருவகையினர் உரையரங்குகள‌யையும் தேடிச்சென்று கேட்பவன். எனக்கு வடமொழி பிரச்சினையில்லை. அதே சமயம், தூயதமிழ் சுவையும் திகட்டாதது.

  பொன்னம்பல அடிகளாருக்கு முன் குன்றக்குடி அடிகளாரைப் பலமுறை கேட்டு இன்புற்றதுண்டு. பொன்னம்பல் அடிகளாரை ஓரிரு தடவைகள் கேட்டதுண்டு. அவரின் திருக்குறள் பற்றிய உரையின் சாரம் இங்கே கிடைக்கிறது. ஆதினங்களில் மதக்கொள்கைகள் எனக்கு ஒவ்வாத்தது என்றாலும், திருக்குறளின் மீது எனக்கு கடுமையாக காட்டம் இருந்தாலும், தேனம்மை இலட்சுமணன் ஆதினத்தில் பேச்சையும் பிற அறிஞர்களின் பேச்சுக்களையும் சிறிது தொகுத்தளித்ததது நன்று. நன்றிகள்.

  தமிழ் வாழ்க! தமிழ்ப்பணி சிறக்க !!

 6. Avatar
  தேனம்மைலெக்ஷ்மணன் says:

  அரிய தகவல்களுக்கு நன்றி ஷாலி

  வள்ளலார் போற்றுதலுக்குரியவர். இதில் எனக்கேதும் மாற்றுக் கருத்து இல்லை கதிர்வேல் சார். ஆனால் அங்கே நிகழ்ந்தது திருக்குறள் கழகத்தின் 61 ஆம் ஆண்டு நிறைவு. எனவே அதைப் பற்றி மட்டுமே அங்கே உரையாற்றினார்கள் என்பதை உங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டு வர விழைகிறேன்.

  மதிப்பிற்குரிய கணபதி சார் அவர்கட்கு,

  எனக்கும் ஆதீனங்கள் மடாதிபதிகள் என்றால் பெரும் வெறுப்பு உண்டு என்றாலும், அங்கே கொண்டாடப்பட்டவர்கள் கூறிய நற்கருத்துக்களை அவர்கள் வார்த்தையிலேயே பதிவு செய்ய விரும்பினேன். திருக்குறள் மீதும் மிக்க அபிமானம் உண்டு. எனவேதான் தொகுத்தேன். கருத்தளித்தமைக்கும் பாராட்டுக்கும் நன்றி :)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *