—கோ. மன்றவாணன்
கவிதை நேசர்களுக்கு 2016 ஜூலை 27 ஒரு கறுப்பு நாள். கவிதை மேடையில் புதுப்புது நர்த்தனங்களை அரங்கேற்றிய ஞானக்கூத்தனின் மறைவுநாள் அன்றுதான்.
1938 அக்டோபர் 7 அன்று அவர் பிறந்தார் என்பதிலோ- வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருஇந்தளூரில் பிறந்தார், வளர்ந்தார் என்பதிலோ எந்தப் பெருமையும் அவருக்கு இல்லை. எல்லாரும் ஏதோ ஒரு தேதியில் ஏதோ ஓர் ஊரில் பிறக்கத்தான் செய்கிறார்கள். அதனால் எல்லாம் அவர்களுக்குப் பெருமை இல்லை. ஒரு மருந்துக்கடையில் செயலாற்றி- பின்பு பள்ளியில் ஆசிரியராகக் கடமையாற்றி- அதன்பின் 35 ஆண்டுகாலம் பொதுப்பணித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதிலும் அவருக்கு எந்தப் புகழும் இல்லை. எத்தனையோ பேர் எங்காவது ஏதாவது பணிசெய்து ஓய்வு பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் எல்லாம் அவர்களுக்குப் புகழ் இல்லை. தொடக்கத்தில் இளங்குயில், இளங்கம்பன் என்றெல்லாம் புனைபெயர் வைத்துப்பார்த்திருக்கிறார். திருமந்திரத்தைப் படித்த போது அரங்கநாதன் என்ற இயற்பெயரை ஞானக்கூத்தன் என்று மாற்றிக்கொண்டார். இப்படிப் பெயர் மாற்றிக்கொண்டதாலும் அவருக்கு ஒன்றும் தனிச்சிறப்பு வந்துவிடவில்லை.
பின் எதனால் ஞானக்கூத்தனுக்குப் பெருமை? நவீன கவிதை உலகம் ஏன் ஞானக்கூத்தனைத் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது?
தன்னுடைய 14 அகவையிலேயே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். யாப்பிலக்கணம் முறையாகக் கற்று மரபுக் கவிதைகளை மற்றவர்களைப் போலவே எழுதினார். சலித்துப்போன உவமைகளாலும் புளித்துப்போன சொற்களாலும், உளுத்துப்போன பாடுபொருள்களாலும், இலக்கணத் தடைகளாலும் மரபுக் கவிதைக்கு நரையும் திரையும் ஏற்பட்டுக் கழியூன்றி இருந்த வயோதிக நிலைக்கு நவீன காயகல்பம் கண்டுபிடித்து கவிதைக்கு மார்க்கண்டேயத் தன்மையைத் தந்தார்.
யாப்பு வட்டத்துக்குள் மட்டுமே செக்குமாடு மாதிரியே சுற்றிச்சுற்றி வந்து சோர்ந்துபோய் இருந்த கவிதைக்கு விசாலமான புதிய பாதையைப் போட்டுத் தந்தவர் ஞானக்கூத்தன்.
“அன்று வேறு கிழமை”, “சூரியனுக்குப் பின்பக்கம்”, “கடற்கரையில் சில மரங்கள்”, “ஞானக்கூத்தன் கவிதைகள்”, “என் உளம் நிற்றி நீ” ஆகிய அரிய கவிதை நூல்களை வெளியிட்டு உள்ளார். உலகக் தரம்வாய்ந்தவையாக அவருடைய கவிதைகள் உள்ளன.
ஞானக்கூத்தனின் கவிதைகள் மிகவும் எளிமையானவை. குழந்தைப் பாடல்கள் போல சந்தங்களும் கொண்டவை. மரபுப்பா வடிவங்களான எண்சீர் விருத்தம், அறுசீர் விருத்தம், வெண்பா ஆகியவற்றிலும் கவிதைகள் எழுதினார். அந்த இலக்கணத்துக்குள்ளும் இலக்கணம் இல்லாமல் கவிதையை உலவ விட்டார். உயிரும் உடலும்போல் எதுகையும் மோனையும் கவிதைக்கு முக்கியமாக இருந்த காலம் அது. மரபு வடிவக் கவிதைகளில் எதுகையும் இல்லாமல் மோனையும் இல்லாமல் நவீனமாக கவிதையை நடக்க விட்டவர் ஞானக்கூத்தன் ஒருவரே! அட… எதுகை, மோனை இல்லாமலே கவிதை கால்மேல் போட்டுக் கம்பீரமாக அமர்ந்து கவியாட்சி செய்ய முடியும் என்பதை மெய்ப்பித்துக் காட்டினார்.
ஞானக்கூத்தன் சிறுகதைகள் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனால் அவருடைய ஒவ்வொரு கவிதையிலும் ஒரு சிறுகதை பளிச்சிடும். அவருடைய கவிதைகள் ஒவ்வொன்றும் நம் வாழ்வின் அனுபவங்களோடு கைகோத்து நடைபயிலும் என்பதை அவரை வாசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்து மகிழ்வார்கள்.
இருண்மை, படிமம், பின்நவீனத்துவம், முன்நவீனத்தும், அமைப்பியல் போன்ற வார்த்தைகளால் அச்சுறுத்தி, நவீன கவிதையை யாரும் தொட்டுவிடக் கூடாத இடத்தில் வைத்திருப்பதைப் பெருமையாக நினைக்கிறார்கள் சிலர். நவீன கவிதைகளின் முன்னோடிகளில் முக்கியமானவரான ஞானக்கூத்தன் தன்கவிதைகள் மூலம், சாதாரண வாசகனின் சுண்டுவிரலைப் பிடித்து, உலக இலக்கிய உன்னதத் திருக்கோயிலின் கருவறைக்கே அழைத்துச்செல்கிறார்.
அவர் கவிதை எழுத வந்த காலத்தில் திராவிட இயக்கக் கருத்துகள், பொதுவுடைமைக் கருத்துகள், புகழ்பாடல்கள், தீபாவளி பொங்கல் மலருக்கான கவிதைகளாகச் சலித்துப்போன பாடுபொருள்கள் மட்டுமே இருந்தன. புதுப்புதுப் பாடுபொருள்களில் கவிதையைக் கொலுவிருக்கச் செய்தவர் இவர்தான். வாழ்வின் அன்றாட நிகழ்வுகள் அனைத்திலும் கவிதை இருப்பதை உணர்த்தியவர். பண்டிட்ஜீக்களிடம் இருந்து மீட்டுப் பாமரர்க்கும் கவிதையைக் கொண்டுவந்து சேர்த்தவர்.
வெகுசாதாரணமாகவே கவிதையைத் தொடங்குவார். கதைசொல்லி போல் அடுத்தடுத்த விவரணைகளைச் சொல்லுவார். கடைசி வரியில் யாரும் எதிர்பார்க்காத இடத்தில் கவிதையை முடிப்பார். அந்த முடிப்பில் கவிதை புன்னகைக்கும். அந்த இறுதி வரியைப் படித்தபின், முன்னிருந்த ஒவ்வொரு சாதாரண வரிக்குள்ளும் கவிதை மின்னல் அடிப்பதை இவருடைய கவிதையில் மட்டுமே காண முடியும். உரைநடைக்குள்ளே எப்படி இவரால் அழகியல் கவிதையைத் தரமுடிகிறது. எங்கிருந்து இந்த மாயக்கலையைக் கற்றார்? அவரே ஒருமுறை சொன்னார். “எனக்கான கவிதையை நானே கண்டுபிடித்துக்கொண்டேன்”.
கடைசியாக வந்த “என் உளம் நிற்றி நீ” என்ற கவிதைத் தொகுப்பைப் பள்ளி மாணவரிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். விறுவிறுஎன்று படித்துமுடித்துவிட்டு அவனும் கவிஞனாகிவிடும் அதிசயத்தை அப்போது காண்பீர்கள். கவிதை என்பது கம்ப சூத்திரம் அல்ல. கவிதை என்பது நம் கைக்குள் அகப்பட்ட வானம்போல் என உணர்வீர்கள், அவருடைய கவிதை நூல்களைப் படிக்கும்போது!
புதுக்கவிதை இயக்கத்தை நடத்திய சி.சு. செல்லப்பா, சி. மணி, க.நா.சு. பிச்சமூர்த்தி, பிரமிள், பசுவய்யா போன்றவர்களில் ஞானக்கூத்தனுக்குத் தனிஇடம் உண்டு.
“கசடதபற” என்ற பெயரில் இலக்கிய ஏட்டைத் தொடங்கி நடத்தியவர்களில் ஞானக்கூத்தன் முதன்மையானவர். அந்த அழகிய அர்த்தம் பொதிந்த பெயரைச் சூட்டியவரே ஞானக்கூத்தன்தான். ழ, கவனம் ஆகிய இலக்கிய ஏடுகளின் ஆசிரியர் குழுவிலும் இருந்துள்ளார். சி.சு.செல்லப்பா நடத்திய எழுத்து இதழுக்கு ஐந்து கவிதைகளை ஞானக்கூத்தன் அனுப்பினார். ஆனால் அவற்றை சி.சு.செல்லப்பா வெளியிடவே இல்லை. பின்னர் அந்தக் கவிதைகள் “நடை” என்ற சிற்றிதழில் வெளிவந்து பெரும்பாராட்டுகளைப் பெற்றன.
1952 ஆம் ஆண்டுதான் ஞானக்கூத்தன் வாழ்க்கையில் ஒரு முக்கியமான ஆண்டு. அந்த ஆண்டில் ஒருநாள் ஞானக்கூத்தன் வாழ்ந்த ஊரில் ஒரு பொதுக்கூட்டத்தில் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் பேசினார். அவரின் பேச்சைக் கேட்ட ஞானக்கூத்தனுக்குப் புதுவெளிச்சம் ஏற்பட்டது. “தமிழ்நாட்டில் தமிழ்பேசும் அனைவருமே தமிழர்கள்தாம்” என்று அவர் பேசியது ஞானக்கூத்தனுக்கு ஏற்புடையதாக இருந்திருக்கிறது.
ஞானக்கூத்தன் காலத்தில்தான் திராவிட இயக்கம் பெருவளர்ச்சி பெற்றிருந்தது. மேடைப் பேச்சு மிகக் கவர்ச்சியாக இருந்த காலம். ஏனோ ஞானக்கூத்தனுக்குத் திராவிட இயக்கத்தின் மீது தீராத கோபம். அதற்குக் காரணங்கள் என்னவாக இருக்கும் என்று அனுமானிக்கலாம். திராவிட இயக்கச் செயல்பாடுகளைக் கீழ்க்கண்டவாறு அவர் புரிந்திருக்கலாம்.
பார்ப்பன எதிர்ப்பு என்னும் இனவெறுப்பை விதைத்தது.
இந்தி எதிர்ப்பு எனும்பெயரில் பிறமொழிகள் மீது பகைமை கொண்டது
காலம் காலமாக வந்த இந்து மரபை எதிர்த்தது.
கடவுள் மறுப்பை வலியுறுத்தியது
கன்னடமும் மராத்தியும் கலந்த மாத்வ பிராமணர் குலத்தைச் சார்ந்து அந்த மதச்சம்பிராத சடங்கு சூழ்நிலைகளில் வளர்ந்த ஞானக்கூத்தனுக்கு மேற்கண்ட காரணங்களால் திராவிட இயக்கத்தின் மீது சற்று வெறுப்பு ஏற்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். இதுவும் இயல்புதான். கடவுள் மறுப்பு என்பதை மட்டுமே வைத்துப் பெரியாரை விரும்பாத திராவிட இயக்கத்தவர்களும் உண்டு. திராவிட இயக்கத்தின் அன்றைய செயல்பாடுகளுக்கு நியாயமான வரலாறு, சமூகம் சார்ந்த காரணங்கள் உண்டு என்பதையும் ஒதுக்கிவிட முடியாது. பார்ப்பன எதிர்ப்பை இனமேலாதிக்க எதிர்ப்பு என்றும்- இந்தி எதிர்ப்பு என்பதைத் தமிழ்மொழிக் காப்பு என்றும்- இந்துத்துவத்தை எதிர்ப்பது என்பதை சாதிமத எதிர்ப்பு என்றும்- கடவுள் மறுப்பு என்பதைப் பகுத்தறிவுக் கண்ணோட்டம் என்றும் திராவிட இயக்கத்தவர்கள் சொல்லக்கூடும்.
எனவேதான் ம.பொ.சி. சொன்ன ”தமிழ்நாட்டில் தமிழ்பேசும் அனைவரும் தமிழர்கள்தாம்” என்ற விளக்கம் அவரை ஈர்த்தது. தன்னைத் தமிழர் என்று சொல்ல வேண்டும் என்று ஏங்கிய பிராமணராக அவர் இருந்திருக்கிறார். பார்ப்பன எதிர்ப்பை விட்டு, பிராமணரை அரவணைத்துத் திராவிட இயக்கம் இயங்கி இருந்திருக்க வேண்டும் என்று இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள் சொல்வதையும் புறந்தள்ளிவிட முடியாது.
இத்தகைய அரசியல் சூழலில் அவர் எதிர்க்குரல் எழுப்பியது இயல்பானதுதான். அதற்காக ஞானக்கூத்தனுக்குத் தமிழ்ப்பற்று இல்லை என்று சொல்லிவிட முடியாது. ம.பொ.சி. அவர்களின் தலைமையின் கீழ் தமிழக எல்லைப் போராட்டத்தில் அவர் பங்கேற்று இருக்கிறார். புலவர் கீரன் தலைமையில் சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர்வைக்க வேண்டுமென்று போராடி இருக்கிறார். தமிழ்நாடு எனப்பெயர் சூட்டக்கோரி அன்றைய முதல்வர் காமராசர் அவர்களுக்குச் சீட்டுக்கவி எழுதி இருக்கிறார். தமிழ்த்தேசியத்தை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். இடஒதுக்கீட்டை ஆதரித்திருக்கிறார்.
“தமிழ்தான் எனக்கும் மூச்சு
அதைப் பிறர்மீது விடமாட்டேன்”
என்பது அவருடைய நிலைப்பாடு. அந்த வரி, மிகவும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஞானக்கூத்தன் என்று சொன்னாலே அந்தவரிதான் எல்லாருடைய நினைவிலும் எழும்பும். என்மொழியை யார்மீதும் திணிக்க மாட்டேன் என்பதுதான் அதன்பொருள். அந்த வகையில்தான் இந்தித் திணிப்பை அவர் பார்த்திருக்க வேண்டும் என்ற எதிர்விமர்சனத்தை அலட்சியப்படுத்த முடியாது. பிறமொழி ஆதிக்கம், திணிப்பு ஆகியவற்றை அவர் நேரடியாக எதிர்க்கவில்லை என்பது அவர்மீதான எதிர்தரப்பினரின் குற்றச்சாட்டு.
பிறகொரு முறை இப்படிச் சொன்னார் :
எல்லா மொழிகளும் நன்று
கோவிக்காதீர் நண்பரே
தமிழும் அவற்றில் ஒன்று
இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுண்டு. எல்லா மொழிகளையும் நேசிக்க வேண்டும். எந்த மொழியையும் இழித்தோ பழித்தோ அவமானப்படுத்தவோ கூடாது என்பதுதான். என்தாயைப் போற்றிப் புகழும் நான், பிற அன்னையரையும் அவ்வாறே மதிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம்.
“யாமறிந்த மொழிகளிலிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாரதியார் சொன்னார். அப்படிச் சொல்லும்போது, அடுத்த மொழிகளை அவர், அவருக்கே தெரியாமல் தாழ்த்துவதுபோல் உள்ளது. அதையே மாற்றி, “யாமறிந்த இனிதான மொழிகளில் தமிழும் ஒன்று” என்று ஞானக்கூத்தன் கூறுகிறார். இதில் எல்லா மொழிகளையும் மதிக்கும் பண்பு வெளிப்படுகிறது. ஆக இந்த இரண்டு கூற்றுகளில் பாரதியை விடவும் ஞானக்கூத்தன் மேம்பட்டுத் தெரிகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகப் பேச்சாளர்களின் ராகம்பாடும் மேடைப்பேச்சைப் பகடி செய்து “காலவழுவமைதி” என்ற கவிதையை எழுதி நக்கலடித்தார். பின்னர் வந்த தங்கப்பதக்கம் என்ற திரைப்படத்தில் வரும் சோவின் வைகை வளவன் என்ற கதைப்பாத்திரத்துக்குக் காலவழுமைதி என்ற கவிதைதான் தூண்டுதலாக இருந்திருக்கும் என்று கருத இடம் உண்டு. அதேபோல் காங்கிரஸ்காரர்களின் மேடைப்பேச்சையும் கிண்டலடித்து அவர்கள் காந்தியை அலட்சியப்படுத்தும் விதத்தையும் “மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்” என்ற கவிதையில் நையாண்டி செய்திருப்பார்.
சங்க இலக்கியங்களில் ஆழங்கால் கண்டவர் ஞானக்கூத்தன். அதனால் அவரின் கவிதைகளில் சங்க இலக்கிய வரிகள். வார்த்தைகள், காட்சிகள் எல்லாம் புதுப்பொலிவோடு கையாளப்படும். மோசிக்கீரனாரைப் பற்றி ஒரு கவிதையை எழுதி இருப்பார். “அரசாங்க கட்டிடத்தில் தூக்கம் போட்ட முதல்மனிதன் நீதான்” என்று. இதைப் படிக்கும் போது எந்த அரசாங்க ஊழியனும் ரசிக்காமல் இருக்க முடியாது.
“கடைசீப் பெட்டி” என்றொரு கவிதை மிகவும் அழகானது… நுட்பமானது… உளஎழில் காட்டுவது ஆகும். அந்தக் கவிதையில் வரும்
சென்ட்ரல் ஸ்டேஷன் ரயில் நிலையத்தில்
சிந்திய எனது கண்ணீர் உன்னை மறைக்கிறது
இரயிலின் கடைசிப் பெட்டியின் பின்புறம்போல்
சோகம் தருவது உலகில் வேறேது?
இந்த வரிகளைப் படிக்கும் போது நமக்குள் எழும் உணர்வலைகள் ஓய்வதில்லை. அவருடைய ஒவ்வொரு கவிதையையும் முழுமையாகத்தான் படிக்க வேண்டும். அங்கொரு வரி இங்கொரு வரி என்று எடுத்தாள முடியாமல் அனைத்து வரிகளும் கவிதையின் அவசிய வரிகளாக இருக்கும். நேரம் மற்றும் இடநெருக்கடியால் அவற்றை முழுமையாகச் சொல்ல முடியவில்லை.
அவருடைய 90 விழுக்காட்டுக் கவிதைகளில் கேலி, கிண்டல், பகடி, பரிகாசம், எள்ளல், ஏளனம், ஏகடியம், நக்கல், நையாண்டி இருக்கும். கவிதையில் நகைச்சுவை கொண்டுவந்து வெற்றிக்கொடி நாட்டியதில் அன்றும் இன்றும் ஏன் நாளையும் ஞானக்கூத்தன்தான் முன்நிற்பார்.
ஆனாலும் சீற்றம் தெறிக்கும் கவிதைகளும் எழுதி இருக்கிறார். அதற்கு எடுத்துக்காட்டுதான் கீழ்வெண்மணி என்ற கவிதை.
“மல்லாந்த மண்ணின் கர்ப்ப
வயிறெனத் தெரிந்த கீற்றுக்
குடிசைகள் சாம்பற் காடாய்ப்
போயின….”
எனத் தொடங்கி….
“இரவிலே பொசுக்கப்பட்ட
அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரிகம் ஒன்று நீங்க”
என்று முடித்திருப்பார். ஆம் கீழ்வெண்மணி நிகழ்வில் நாகரிகத்தின் அஸ்தி கூடக் கிடைக்காத அளவுக்கு நாகரிகத்தை அதன் சுவடு தெரியாத அளவுக்கு அழித்துவிட்டார்கள் என்று சொல்லி இருப்பார். ஞானக்கூத்தனின் முக்கியமான கவிதைகளில் இதுவொன்று.
ஞானக்கூத்தன் கவிதைகளில் சிக்கலான மொழிநடை இருந்ததே இல்லை. எந்தச் சொல்லிலும் அவர் சுமையை ஏற்றி வைத்ததில்லை. அதனால் அவருடைய கவிதைகளைப் பிறமொழிகளில் மொழிபெயர்ப்பது எளிது. அவருடைய கவிதைகளை அயல்மொழிகளில் மொழிமாற்றம் செய்தால், உலகக் கவிதை வரிசையில் ஞானக்கூத்தனுக்கு ஒரு சிம்மாசனம் கிடைக்கும். மொழிபெயர்ப்பு ஆற்றல் உள்ளவர்கள், அதற்கு முயல வேண்டும் என்பது நம் ஆசை.
ஞானக்கூத்தன் பிறர்மீது விமர்சனங்கள் வைத்தார். விமர்சனம் என்ற பெயரில் எதிர்தரப்பினர் மீது விஷஅம்பு ஏவுபவர் அல்லர் அவர். மாமன் அடிச்சானோ மல்லிகைப்பூ செண்டாலே என்பதுபோல்தான் அவருடைய அடி, செல்ல அடிகளாக இருக்கும். அதனால்தான் அந்த விமர்சனங்கள் யாவும் சம்பந்தப்பட்டவர்களையும் ரசிக்க வைத்தன. அதேபோல் ஞானக்கூத்தனை நோக்கியும் விமர்சனங்கள் வந்தன. அந்த விமர்சனங்களை அவர் எவ்வாறு எதிர்கொண்டார் என்பதில் அவருடைய உன்னத பண்பாடு தெரிகிறது. அதை வெளிப்படுத்தும் அவருடைய கவிதை இதோ…
கவிதை எழுத
மேஜைமேல் தாள்களை வைத்துப்
பேனாவை ஓட்டினேன்
ஒருகல் விழுந்தது
எழுதத் தொடர்ந்தேன்
ஒருகல் விழுந்தது
விடாமல் எழுதினேன்
விடாமல் கற்கள் விழுந்தன. பின்பு
கற்களை எண்ணினேன். எல்லாம்
வாசம் குறையா மல்லிகை ஆயின தோழா
ஆக எதிரிகளையும் அவர் தோழர்களாகத்தான் கருதினார். தன்மீது விழுந்த விமர்சனங்களை, வாசம் குறையா மல்லிகை மலர்களாகவே மதித்தார்.
தமிழ்க்கவிதை வரலாற்றை எழுத வேண்டுமானால் ஞானக்கூத்தனைத் தவிர்க்கவே முடியாது. அவரை எதிர்த்தாவது எழுத வேண்டும். அவரைப் போற்றியாவது எழுத வேண்டும். ஞானக்கூத்தனைத் தாண்டி யாராலும் கவிதை வரலாற்றை எழுதிவிட முடியாது.
என்றும் கவிதை வெளியில் தனித்த பெருமையோடு சுற்றும் ஞானக்கோள்தான் ஞானக்கூத்தன்.
(31-07-2016 அன்று வளவ. துரையன் அவர்கள் நடத்திவரும் இலக்கியச் சோலையில் பேசிய ஞானக்கூத்தன் பற்றிய உரையஞ்சலி)
- ரோஸெட்டா தளவுளவி புகட்டிய புதிய வால்மீன் உருவாக்கக் கோட்பாடு
- கடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன் -3
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !
- அப்பா, பிள்ளைக்கு….
- பண்பும் பயனும் கொண்ட பண்டைத் திருமணங்கள்
- சூடு சொரணை இருக்கா?
- காப்பியக் காட்சிகள் – 14. சிந்தாமணியில் கலைகள்
- கவி நுகர் பொழுது ஈழவாணி (ஈழவாணியின்,’ மூக்குத்திப்பூ’, கவிதை நூலினை முன்வைத்து)
- கவி நுகர் பொழுது சீராளன் ஜெயந்தன் (சீராளன் ஜெயந்தனின், “மின் புறா கவிதைகள் “, நூலினை முன்வைத்து)
- திருப்பூரில் 21/8/16 ஞாயிறு ஒரு நாள் குறும்பட விழா ” கனவு “ சார்பில்..
- தொடுவானம் 130. பொது மருத்துவம்
- அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2016
- திடீர் போராட்டம் ஏன் – திமுக தலைவர் ஒருவரோடு உரையாடல்
- கவிதைவெளியில் தனியாகச் சுற்றும் ஞானக்கோள்
- ஜெயந்தன் நினைவு படைப்பிலக்கியப் பரிசுப் போட்டி-2016 _ கடைசி நாள் – 31 ஆகஸ்ட் 2016
- காத்திருத்தல்
- ஞானக்கூத்தன் கவிதைகள் – சத்தியத்தைத் தேடும் பயணம்