‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

0 minutes, 3 seconds Read
This entry is part 9 of 9 in the series 31 மே 2020

  1. தொடர் ஓட்டமும் சுழல் கோப்பையும்

()

மூக்குக்கண்ணாடி அணிந்தவர்களை ‘நாலு கண்ணா’ என்றும் ‘புட்டிக்கண்ணாடி’ என்றும்
உரக்க அழைப்பவர்கள் எப்படி
உற்ற நண்பர்களாக முடியும்?

உடல் ஊனமுற்றவர்களை ஊனத்தை அடைமொழியாக்கிச் சுட்டுபவர்களை
மனிதர்களாகக் கொள்ளத் தகுமா?

அடுத்தவர்களுக்கு அடைமொழியிட்டு அழைப்பத னாலேயே
தன்னை அப்பழுக்கற்ற வராக்கிக்கொள்ள முடியு மென்ற அரிச்சுவடியை
அவர்கள் எங்கிருந்து கற்றார்கள் தெரியவில்லை.

அப்பட்டப் பொய்யை அடுத்தடுத்துச் சொல்வ தாலேயே
அதை மெய்யாக்கிவிட முடியுமென்றும் படித்திருக் கிறார்கள். எந்தப் புத்தகத்தில் தெரியவில்லை.

நம்மிடமுள்ள நூல்கள்தான் எவ்வளவு! எவ்வளவு!
எவ்வளவுக்கெவ்வளவு படிக்கிறோமோ
அறிவு விரிவடையும் அவ்வளவுக்கவ்வளவு.

பல்கிப் பெருகி பெருத்து வீங்கிப்புடைத்துவிட்டால் பின் வெடித்து உடைந்து சிதற வாய்ப்பிருக்கிறது எதற்கும்.

ஏட்டுச் சுரைக்காய் கவைக்குதவாது….

ஒருவேளை வாழ்க்கைப்பாடமாகக் கற்றிருக்கலாம்.

கற்றது கையளவு; கல்லாதது கடலளவு…..

’உனக்கு மூடிக்கொண்ட பூனைக்கண்கள்’ என்பாரிடம்
உண்மையிலேயே மூடியிருக்கும் பூனையின் கண்களுக்குள் கூடுவிட்டுக்கூடுபாயக் கிடைத்தலொரு கொடுப்பினையென்றால்
‘நட்டுக்கழண்ட பெண்(மணி)’ என்ற இன்னொரு அடைமொழியை அவர்கள் தரவேண்டியிருக்கும் –

அதாவது, கொஞ்சம் கண்ணியமானவராயிருப்பின்.
(இல்லாவிட்டால் இருக்கவேயிருக்கிறது
அருவருக்கத்தக்க அடைமொழிகள் ஆயிரம்.
சொல்லியா தரவேண்டும்!)

போகிற போக்கில் அள்ளி வீசிக்கொண்டேயிருந்தால் பின் கையிருப்பிலுள்ள அடைமொழிகளை யெல் லாம் இழந்து
அவர்களுடைய அடையாளம் என்று எதுவுமில்லா மலாகிவிடுமே என்பதை நினைத்துப் பாவமாயிருக் கிறது

போரும் சமாதானமும் அவர்கள் வரையில்
வீரமும் கோழைத்தனமும்…..

()

என்னை பசுமை ஃபாஸிஸ்ட் (அப்படியென்றால் என்ன?!) என்று அழைத்தவரை
பேசாமல் ’ப்ளாக்’ செய்து கடந்துசெல்கிறேன்.

அவரை ‘வறண்ட ஃபாஸிஸ்ட்’ என்று யாரேனும் அழைக்கக்கூடும்…

வானவில் ஃபாஸிஸ்ட் என்ற அடைமொழி
யாருக்கேனும் வழங்கப்பட்டிருக்கிறதா, தெரிய வில்லை.

வழங்க எண்ணிக்கொண்டிருப்பவர்கள் புதைசேறு ஃபாஸிஸ்ட் என்ற பதக்கப்பெயர் பெற்றிருக்கக் கூடும்.

ஆய்த எழுத்து தமிழுக்கே உரித்தானதுதானே
அதை ஏன் நாம் அரிதாகவே பயன்படுத்துகிறோம்?
அவசியம் எண்ணிப்பார்க்கவேண்டும்.

பார்க்கிறவர்களையெல்லாம் ஃபாஸிஸ்டுகளாக பாவிக்கும் இயல்புடையார்தான் இருக்கும் ஃபாஸிஸ்டுகளிலேயே உச்சபட்ச ஃபாஸிஸ்ட் என்று எதிர்வினையாற்றாதலால் நான் அச்சங் கொண்டுவிட்டேன் என்று அர்த்தமா என்ன?

ஒருவேளை அந்த வார்த்தையின் வீரியத்தை அழித்துவிட்டதாகவும் அதை என் மீது பிரயோகித்தது சரியில்லை என்றும்
அவர்களுக்குத் தோன்றக்கூடும் நாளில்
அவர்களும் நானும் உயிரோடிருப்பின் _
அவர்கள் அதை என்னிடம் தெரிவிக்கவேண்டி யதில்லை;
தெரிவிப்பார்கள் என்ற எந்த எதிர்பார்ப்பும்
என்னிடமில்லை எள்ளளவும்..

அதனியல்பில் எச்சமிட்ட காகமிருந்த மரத்தின் நேர்கீழே
அக்கணம் என் தலையிருந்தது. அவ்வளவே.

  •  
  • அனுபவம்

‘முப்பது வருட மொழிபெயர்ப்பு அனுபவம் எனக்கிருப் பதாகவும்
அது என் மொழிபெயர்ப்பில் மிளிர்கிறது என்றும்
குறுந்திறனாய்வொன்றில் குறிப்பிடப்பட்டிருக் கிறது….

முப்பது தானா? நாற்பதுகூட இருக்கலாம்.
ஆனால், அதுவொரு அளவுகோலா,
தெரியவில்லை.

சித்திரம் கைப்பழக்கமாக இருக்கலாம்;
இல்லாதுபோகலாம்.

படைப்பாளியாகா படைப்பாளியைப் போலவே
மொழிபெயர்ப்பாளராக மாட்டா மொழிபெயர்ப் பாளர்களும் உண்டு.

இகழ்வதைைப் போலவே புகழ்வதிலும்
அரசியல் இருப்பதை அறிந்திருக்கிறேன்.

இகழ்ச்சியும் புகழ்ச்சியும் சிலர் இயல்பாகக் கைக் கொள்ளும் உத்தியாவதுண்டு _
தம்மை விமர்சனாதிபதிகளாக சத்தமில்லாமல் பீடமேற்றிக்கொண்டுவிட.

முப்பது வருட மொழிபெயர்ப்பு அனுபவமுடையவர்
என்று மூன்று முறை அடித்துச்சொல்லியே
நேற்றிலிருந்து மொழிபெயர்க்கத் தொடங்கியவரை
முதுபெரும் மொழிபெயர்ப்பாளராக்கிவிடுவதும்
இங்கே நடக்கவில்லையா என்ன?

இத்தனை வருட இலக்கியவெளிப் பயணத்தில்
இன்னும் நிறையப் பார்த்தாயிற்று.

புகழுரைகளையும் இகழுரைகளையும்
பொருட்படுத்தாத அகம் ஆத்ம சுகம்.

குறும்பாக என்னைப் பார்த்துச் சிரித்தவாறு
கேட்கிறது நான்:

‘மொழிக்கடலின் ஒரு துளியாக இருக்கும் என்னால்
மொழியை எப்படி பெயர்க்க இயலும்?’.

கேள்வியை வழிமொழிகிறேன்.

இரண்டும் இரண்டு பாறைகளென்றாலாவது
பெயர்க்க முடியலாம் -காற்றாக காலமாக கண்ணாமூச்சிவிளையாடும்போது…?

சிறுமியின் நோட்டுப்புத்தகத்திற்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் மயிலிறகாய்
இரு மொழிகளும் மாயம் செய்தபடி
நீவிவிட்டுக்கொண்டிருக்கின்றன என்னை.

அவை படிக்கத் தரும் வரிகள் அருள்பாலிக்கின்றன.

இருப்பைத் தாண்டி வாழ்கிறேன்.

இவ்வளவே.

Series Navigationவெகுண்ட உள்ளங்கள் – 1
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *