தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 10 of 23 in the series 26 ஜூலை 2020

                 

                                                    

                  விரிகடல் கொளுத்தி வேவவிழ

                        வருமிகு பதங்கள் ஆறிருவர்

                  எரிவிரி கரங்கள் ஆறிஎழ

                        எழுகுழை அசைந்த சாகையது.            [141]

[கொளுத்தி=வெப்பமூட்டி; வேவ=வெந்து போக; பதங்கர்=சூரியர்; ஆறிருவர்=பன்னிருவர்; [தாத்துரு; சக்கரன்; ஸ்ரீயமன்; மித்திரன்; வருணன்; அஞ்சுமான்; இரணியன்; பகவான்; திவச்சுவான்; பூடன்; சவித்துரு துவட்டா]  அறி=குளிர்ந்து; குழை=தளிர்; சாகை=கிளை] 

      விரிந்து அகன்று எல்லா இடங்களிலும் பரந்திருக்கும் கடல்களெல்லாம் வற்றும்படி பன்னிரண்டு சூரியர்களும் வெப்பக்கதிர்கள் வீசுவார்கள். அவர்களும் இந்த  ஆலமரக் கிளைகளுக்கு நடுவில் வந்து தங்கினால் வெப்பம் நீங்கிக் குளிர்ச்சி அடைவார்கள். அத்தகைய குளிர்ச்சியான தளிர் இலைகளைக் கொண்டது இந்த ஆலமரம்.

====================================================================================                                     

                   சதுமுகன் முடித்த ஊழி ஒரு

                        சருகிலை உதிர்ந்து தூர்புனலின்

இதுமுதல் இயைந்த பூதம் என

இருநிலம் வழங்கு சோபையது.                  [142]

[சதுமுகன்=பிரமன்; ஊழி=பலகோடி ஆண்டுகள்; தூர்=தூர்ந்த; புனல்=கடல்]

      பிரமதேவனின் ஆயுள்காலம் ஓர் ஊழியாகும். அக்காலத்தின் இறுதியில் இந்த ஆலமரத்திலிருந்து ஒரு சருகு கடலில் உதிரும். அப்படிப் பல சருகுகள் உதிர்ந்து தூர்ந்துபோய் மேடான கடல் பகுதிதான் இந்தபூமி என்று வழங்கப்படுகிறது.

=====================================================================================

                   இறுதியின் எரிந்து பார்உருக

எழுகனல் கரிந்துபோய் அவிய

       உறுதியின் அனந்தசாகை தொறும்

 ஒருதனி குளிர்ந்த நீர்மையது.                 [143]

[சாகை=மரக்கிளை; நீர்மை=தன்மை]

      அந்த ஆலமரத்தின் நீண்ட நெருங்கி இருக்கும் கிளைகள்                      ஊழிக்காலத்தின் முடிவில் பூவுலகமே எரிந்து கருகி உருகிப் போகும்படி பற்றி எரியும் ஊழித்தீயும் அணைந்து குளிரச் செய்யும் தன்மையது ஆகும்.

=====================================================================================

                  படிஅடி எறிந்துகால் பொருது

 பலகுல விலங்கல் மேருவொடு

                  குடிஅடி பறிந்த நாளும் ஒரு

குழை சலனமின்ற நீடுவது                   [144]

[படி=பூமி; எறிந்து=வீசி; கால்=காற்று; விலங்கல்=மலை; பறிந்த=பிடுங்கிப் போட்ட; நாளும்=நாளிலும்; குழை=தளிர்; சலனம்=அசைவு]

      இந்தப் பூமியை அடியோடு பிடுங்கிப் போடுவதைப் போல சூறைக்காற்று, பலமலைகளைச் சாய்த்த போது கூட இந்த ஆலமரம் ஒரு சிறு தளிரும் அசையாது நிலையாக நிற்கும்.  

=====================================================================================

                   மழையென உகங்கள்  ஏழ்எழிலி

                        வரவர விசும்பின் மாறுவது;

                  பழையன பொதும்பில் ஏழும்எழு                                               பரவையும் அடங்கும் கோளினது.               [145]  

[எழிலி=மேகம்; ஏழு மேகங்கள்=சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவருணம்; பொதும்பு=மரக்கிளை; பரவை=கடல்; கோள்=கொள்ளுதல்; ஏழு கடல்கள்=உவர்க்கடல், நந்நீர்க்கடல், பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், தேன்கடல், கருப்பஞ்சாற்றுக் கடல்]

ஊழிக்காலத்தில் ஏழு மேகங்களும் மழையைக் கொட்டித் தீர்க்கும்போதும் இந்தப் பழமையான ஆலமரம் வானளாவ ஓங்கி உயர்ந்து நிற்கும்.மேலும் ஏழு கடல்களையும் தன்னுள்ளே அடங்கச்செய்யும் தன்மை கொண்டது அதுவாகும்.

=====================================================================================

             அரி தனிதுயின்றது ஓர் இலையில்

                  அரன்அவை இருந்த நீழலது

விரிசுடர் நிவந்த சாயைமதி

மிசையிடை விளங்கும் சோபை அது.              [146]

[அரி=திருமால்; அரன்=சிவன்; சபை=உபதேசம் செய்யும் இடம்; நிவந்த எழுந்த; சாயை=நிழல்; மிசை=அதில்; சோபை=ஒளி]

      திருமால் ஊழிக்காலத்தில் துயின்றது இந்த ஆலமரத்தின் இலையில்தான். இந்த மரத்தின் நிழலின் கீழேதான் சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக இருந்தார்.

ஒளிவீசும் நிலவில் கறையாக விளங்கும் நிழலும், அதில் காணப்படும் ஒளியும் இந்த ஆலமரம்தான்.

=====================================================================================

                  இசையன பிலங்கள் ஏழும் அதன்

இடையிடை விழுந்தவேர் விவரம்

மிசையன பதஙகள் ஏழும் அதன்

விடுகவடு தந்த கோடரமே.                [147] 

[இசையன்=இசை போல; கீழுள்ள பிலங்கள் ஏழு= அதல, விதல, சுதல, தராதல, இராசதல,  மகாதல, பாதாளம்;   மிசை=மேல்; பதங்கள்=உலகங்கள்; விடு=தழைத்துள்ள; கவடு=கிளை; கோடரம்=பொந்து; மேலுலகங்கள் ஏழு=பூலோகம், புவர் லோகம், சுவர்க்க லோகம், சனலோகம், மகலோகம், தவ லோகம், சத்திய லோகம்]

      அடுக்கடுக்காக வரிசையாக கீழே அமைந்துள்ள ஏழு உலகங்களும் இந்த ஆலமரத்தின் வேருக்கு விளக்கங்களாகும்.  மேலுள்ள ஏழு உலகம் இந்த ஆலமரத்தின் கிளைகளுக்கு  இடைவெளிப் பொந்துகளே ஆகும்.

=====================================================================================                     

                  உரிய பலஅண்ட கோடிபுகும்

                        உதரமொடு அனந்த கோடியுகம்

                  அரிதனி துயின்றது ஓர் இலையில்

                       அதனது அளவு இயம்புவர் எவரே.    [148]             

[உதரம்=வயிறு; அனந்தம்=அநேகம்; அரி=திருமால்; இயம்புவார்=கூறுவார்]

      இப்பூவுலகமே இறுதி பெறும் ஊழிக்காலத்தில் பலகோடி உலகங்களையும் தம் வயிற்றில் அடக்கி வைத்திருக்கும் திருமால் பலகோடி யுகங்கள் துயின்றது இந்த ஆலமரத்தின் ஓர் இலையில் என்றால் இம்மரத்தின் பரப்பளவை யார்தாம் சொல்லமுடியும்?

=====================================================================================

                   கடநாகத்து ஈர்உரிவை அரன்விரிப்பக் கடல்திவலைப்

                  படநாகப் பெரும்பாயல் அரிவிக்கும் பணையதே.          [149]

[கடநாகம்=மதநீர் பெருக்கும் யானை; ஈர் உரிவை=உரித்த தோல்; அரன்=சிவன்; பாயல்=படுக்கை; அரி=திருமால்; பனை=கிளை]

      ஊழிக்காலத்தில் கடல் பொங்கி எழும்; சூறாவளிக் காற்று வீசும்; தங்க இடமில்லாமல் போகும்; அப்பொழுது இந்த ஆலமரத்துக் கிளைகளில்தான் யானைத்தோலை விரித்துச் சிவபெருமானும், படம் எடுத்தாடும் பாம்பணையைப் படுக்கையாகக் கொண்டு திருமாலும் பள்ளி கொள்வார்கள்.

=====================================================================================

                   கோழியான்  மயில்அதனில் குலமயிலில் ஒருமயிலே!

                  ஆழியான் ஏறுவதும் அதன்உவணத்து உவணமே.        [150]

[கோழியான்=சேவற்கொடியை உடைய முருகன்; ஆழி=சக்கரப்படை; உவணம்=கருடன்]

      சேவற்கொடியை உடைய முருகன் ஏறி வாகனமாகக் கொண்டு வரும் மயில் இந்த ஆலமரத்தில் வசிக்கின்ற மயில்களில் ஒரு மயிலாகும். சக்கராயுதத்தை ஏந்தி உள்ள திருமால் ஏறி வரும் கருடனும் இம்மரத்தில் வசிக்கும் பறவைகளில் ஒன்றேயாகும்.

Series Navigationதுப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE?”மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் ஒன்று
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *