திருப்புல்லாணி என்னும் பாண்டியநாட்டு திவ்யதேசம் ராமநாத புரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ளது. முன்னோர்களுக்கு இங்கு நீர்க்கடன் செய்வ தால் அவர்கள் நற்கதி யடைகிறார்கள் என்ற நம்பிக்கை பரவ லாக உள்ளது..
திருப்புல்லாணிப் பெருமான் மேல் மையல் கொள்கிறாள் பரகாலநாயகி (பரகாலன் என்றழைக்கப் படும் திருமங்கை ஆழ்வார்) பெருமான் தன்னிடம் சொன்னபடி தானே வந்து சேர்வான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நாயகி ஒரு கட்டத்தில் காத்திருந்தது போதும், வெறுமனே உருகித் தவித் துக் கொண்டிருப்பதை விட நாமே போய் புல்லாணியில் அவ னைக் கண்டு தொழுவோம் என்று தீர்மானித்துத் தன் தோழியை யும் தன் நெஞ்சையும் விளிக்கிறாள்.
‘’உருகி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்தென்?
தொழுதும் எழு
முருகு வண்டுண் மலர்க்கைதையின் நீழலின்
முன்னோர்நாள்
பெருகு காதன்மை என்னுள்ளம் எய்தப் பிரிந்தானே
[பெரியதிருமொழி] (9ம்பத்து,3ம்திருமொழி2) 1769
அவன் இடம் (ஊர்) எது தெரியுமா?
”பொருது முந்நீர்க்கரைக்கே மணியுந்து புல்லாணியே”
1769
என்கிறாள்.
நெஞ்சே! என்ன செய்தாலும், முயன்றாலும் அப்பெருமானை மறக்க முடியவில்லையே! என் செய்வேன்? பொழில் சூழ்ந்த புல்லாணியை இடமாகக் கொண்டவன், ‘’பேதை நின்னைப் பிரியேன் இனி” என்று சொல்லிப்போனான்அவனுடைய இடமான புல்லாணியையாவது வணங்குவோம்”
”ஏது செய்தால் மறக்கேன்?.மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றானிடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே
[பெரியதிருமொழி] (9ம்பத்து,3ம்திருமொழி,3) 1770
என்கிறாள்.
சாட்சி என்ன?
பரகால நாயகியே! நீ இவ்வளவு தவிக்கிறாயே! புல்லாணித் தலைவன் உன்னுடன் வந்து கலந்தான் என்பதற்கு ஏதாவது சாட்சி இருக்கிறதா? என்று தோழி கேட்க, “துளசி மாலையில் தேனுண்ட வண்டே சாட்சியாகும். இங்கு நான் அவனை நினைந்து நினைந்து உண்ணாமல் மெலிந்து கிடக்கி றேன். ஆனால் அவ்வண்டோ தேனை உண்டு சுகமாயிருக்கிறது! என் வருத்தம் அதற்குப் புரியாது. அதனால் சாட்சியும் சொல்லாது. .என்கிறாள் பரகாலநாயகி
“நான் பிரிய மாட்டேன் என்று சொன்ன புல்லாணித் தலைவன் சொன்னபடி செய்யவில்லை. அப்படி யிருக்க என்ன உரிமையோடு நாம் அவனிடம் போக முடியும்?” என்று கேட்ட தோழியிடம், அவன் இருக்கும் ஊர் போய்த் தொழு வோம் எழுந்திரு என்று தோழியை அழைக்கிறாள்.
“கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்குமுன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய்! தொழுதும் எழு போய் அவன்
மன்னுமூர்
பொங்குமுன் நீர்க்கரைக்கே மணியுந்து புல்லாணியே
[9ம்பத்து,3ம்திருமொழி,4] 1771
பெருமானின் உருவெளித்தோற்றம்
பெருமானையே அல்லும் பகலும் அனவரதமும் நினைத்து ஏங்கிக் கொண்டிருந்த தலைவிக்குப் பெருமானின் உரு வெளிப்பாடு தோன்றுகிறது. இதைக் கண்ட பரகாலநாயகி தோழியிடம் தான் கண்ட காட்சியை
“பொன்னிவர் மேனி, மரகதத்தின் பொங்கிளர் சோதி,
அகலத்தின் ஆரம்
மின்; இவர் வாயில் வேதமோதும் வேதியர்,
வானவராவர் தோழீ!
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி,
ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னை என்னோக்கும் என்றஞ்சுகிறேன்
இன்னும் கேள்; அவர் திருத்தோள்களிலே மணம் மிகுந்த துழாய் மாலை, திருக்கைகளில் சங்கு சக்கரம்!. இவர் நம் மனையிலே புகுந்து நின்றார். மிக்க இளம் பருவமுடையவர் என்றாலும் பெரு மதிப்பாய் விளங்குகிறார்! அவருடைய திருவாய் மட்டுமல்லாமல்
அவரே அழகிய பவளத்திரள் போல் காட்சியளிக்கிறார்!
வம்பவிழும் துழாய்மாலை தோள்மேல்;
கையன ஆழிய
நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார்; நாகரிகர்
பெரிதும் இளையவர்
செம்பவளம் இவர் வாயின் வண்ணம் தேவரது
உருவம் சொல்லில்
அம்பவளத்திரளேயும் ஒப்பார்! இவர் யார்?
வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல்?
ஏந்திழையார் மனத்தை
தஞ்சுடையாளர் கொல்? யானறியேன், தாமரைக்
கண்கள் இருந்தவாறு
கஞ்சனையஞ்ச முன் கால்விசைத்த காளையராவர்
கண்டார் வணங்கும்
அஞ்சன மாமலையேயும் ஒப்பார்!
தோழியிடம் தான் கண்ட தலைவனின் உருவெளித்தோற்றம் பற்றி விரிவாகச் சொன்ன தலைவி, புல்லாணித் தலைவன் தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை. அதனால்
இனி நெஞ்சே! நினைந்து இங்கிருந்தென்?
இரவும் நாளும் இனிக் கண் துயிலாதிருந்து
என்பயன்? தொழுதும் எழு
கள்ளவிழும் மலர்க்காவியும் தூமடல் கைதையும்
புள்ளும் அள்ளற் பழனங்களும் சூழ்ந்த புல்லாணி
[9ம்பத்து,3ம்திருமொழி,6] 1773
செல்வோம்
தோழீ! நாம் நீராடி பெருமானின் திவ்ய நாமங்களை ஓதித் திருவடித் தாமரைகளைத் தொழுவது நமக்கே நன்மை பயக்கும். அப்பெருமான் எது தந்தாலும் தராவிட்டாலும் அவன் வாழும் புல்லாணி தொழுவோம் வா
ஓதி நாமங்குளித்து உச்சி தன்னால் ஒளிமலர்
பாதம் நாளும் பணிவோம், நமக்கே நலமாதலின்
ஆது தாரான் எனினும் தரும் அன்றியும் அன்பராய்
போதும் மாதே! தொழுதும் அவன் மன்னும்
புல்லாணியே [9ம்பத்து,3ம்திருமொழி,9] 1776
என்று தோழிக்கு அறிவுரை சொல்கிறாள்.
தொழுவோம் வா என்று அறிவுரை சொன்ன பரகால நாயகியால் சொன்னபடி எழுந்து செல்ல முடியவில்லை அவ்வளவு தளர்ச்சி! அதனால் கண்ணில் தென்பட்ட பறவைகளை யெல்லாம் தூதனுப்பினால் என்ன என்று நினைக்கிறாள். முன்பு துன்பமடைந்தவர்களுக்கெல்லாம் உதவிய பெருமான் தனக்கும் உதவமாட்டானா என்று நம்பிக்கை வைக்கிறாள் அந்த நம்பிக்கையில்
முன்னம் குறள் உருவாய் மூவடி மண் கொண்டான்
மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்
பொன்னங்கழிக்கானல் புள்ளினங்காள்! புல்லாணி
அன்னமாய் நூல் பயந்தார்க்கு ஆங்கு இதைச் செப்புமினே
[9ம்பத்து,4ம்திருமொழி,2] 1779
தன்னையே நம்பித்தொழுத பிரகலாதனுக்கு நரசிங்கமாய் அவதாரம் செய்து இரணியனின் மார்பைக் கிழித்து அருள் செய்த சம்பவம் நினைவுக்கு வர கண்களிலிருந்து நீர் பெருகுகிறது. அரையில் ஆடையும் நெகிழ்கிறது!
பரிய இரணியனது ஆகம் அணியுகிரால்
அரி உருவாய்க் கீண்டான் அருள் தந்தவா! நமக்கு
பொருதிரைகள் போந்துலவு புல்லாணி கை
தொழுதேன்
அரிமலர்க்கண் நீர்ததும்ப அந்துகிலும் நில்லாவே.
[9ம்பத்து,3ம்திருமொழி,4] 1781
இவள் படும் பாட்டைக் கண்ட உறவினர்கள், “அவன் அப்படித் தான், பெண்ணை வருத்துவானே தவிர உனக்கு ஓடி வந்து உதவ மாட்டான் என்று அவளைப் பழிக்கிறார்கள் அவளோ, சீதா பிராட்டிக்காக இலங்கையை அழித்ததைச் சொல்லி வாதாடுகிறாள்.
வில்லால் இலங்கை மலங்கச் சரம் துரந்த
வல்லாளன் பின் போன நெஞ்சம் வருமளவு
எல்லாரும் என் தன்னை ஏசிலும் பேசிடினும்
புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டிருந்தேன்
[9ம்பத்து,3ம்திருமொழி,5] 1782
என்கிறாள். இதுமட்டுமா? என் எழில் நிறமும். சங்கும் (வளை)
இழந்தேன் என்கிறாள். இந்த நேரம் சந்திரன் உதயமாக அவள் தவிப்பு அதிகமாகிறது. புல்லாணி தொழுதென்? தேம்பல் இளம் பிறையும் என் தனக்கு ஓர் வெந்தழலே!என்று தன் நிலையைத் தெரிவிக்கிறாள். புல்லாணி தொழுது கண்ட பயன் என்ன?
ஓதமும் நானும் உறங்காதிருந்தோம்! [1786]
அவனும் நானும் உறங்காமல் இருந்து அனுபவிப்பதற்கு பதிலாக நானும் கடலும் அல்லவா உறங்காதிருக்கிறோம்? இதுதான் கண்ட பலன் என்று சலிப்புடன் பேசுகிறாள்
.
தன் தவிப்புக்குச் சரியான தீர்வு கிடைக்காததால் பரகாலநாயகி தன் நெஞ்சை திருக்குறுங்குடி நோக்கித் திருப்புகிறாள். நெஞ்சு தான் சென்றதே தவிர உடல் செல்லவில்லையே! எனவே தோழியிடம் தன்னை திருக்குறுங்கு
டிக்குக் கொண்டு சேர்க்கும் படிவேண்டுகிறாள்.
இவளும் ஓர் பெண்கொடி என்றிரங்கார் என் நலன்
ஐந்தும் முன் கொண்டுபோன
குவளை மலர் நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே
என்னை உய்த்திடுமின் [,9ம்பத்து,5ம்திருமொழி1] 1788
ஓரிரவும் உறங்கேன்; உறங்கும் பேதையார்
பேதமையால் இருந்து பேசுகபெய்வளையார்
[9ம்பத்து,5ம்திருமொழி,2] 1789
நாண், மடம், அச்சம்,நமக்கிங்கில்லை
மாமணி வண்ணரை நாம் மறவோம்
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்
[9ம்பத்து,5ம்திருமொழி,6] 1793
என்று தெளிவாகச் சொல்கிறாள் பரகால நாயகி
கொஞ்சம் தெளிவு பெற்ற பரகாலநாயகி ஒருவாறாகத் தன்னைத் தேற்றிக் கொண்டு திருக்குறுங்குடிக்கே சென்று விடுகிறாள்.
அக்கும் புலியின் அதளும் உடையார்
அவரொடும்
பக்கம் நிற்க,நின்ற பண்பர் ஊர்
[9ம்பத்து,6ம்திருமொழி,1] 1798
என்று அந்த ஊரைப் புகழ்கிறாள்.மேலும் கூர்வாய் நாரை பேடையோடாடும் குறுங்குடி என்றும் குறிப்பால் உணர்த்துகிறாள்
”வாழக் கண்டோம் வந்து காண்மின்” என்று எல்லோரையும் மகிழ்ச்சியோடு அழைக்கிறாள்!
===================================================================
.
- திருப்புல்லாணியும் திருக்குறுங்குடியும்
- ஏழை
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 17 – யாதும் ஊரே
- கவிதையும் ரசனையும் – 3
- மாலையின் கதை
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 232 ஆம் இதழ்
- சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 7
- 2019ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கலாப்ரியா, பேரா. க.பஞ்சாங்கம்
- கூகை
- ஒற்றைப் பனைமரம்
- இயற்கையுடன் வாழ்வு
- நுரை
- ரௌடி ராமையா
- படித்தோம் சொல்கின்றோம் :மெல்பன் – ஜேகே எழுதிய சமாதானத்தின் கதை