பயணம் – 3

author
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 12 in the series 15 மே 2022

 

ஜனநேசன் 

3

            பாண்டியன் அன்றைய அஸ்ஸாம் மாநிலமாக இருந்த ஷில்லாங்கில் இந்திய ராணுவத்தில் துணைக் கேப்டனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு 22 வயது.  ஆறடி உயரத்தில் கறுப்பாக கட்டான தேகம்.  களையான முகம்.  ஞாயிற்றுக்கிழமை அன்று பகலில் நான்கு மணி நேரம் முகாமிலிருந்து வெளியே சென்று வர அனுமதி உண்டு.  அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை முகாமுக்கு வெளியே சகவீரர்களுடன் நகரின் நடுவில் அமைந்திருந்த பூங்காவிற்கு வந்தனர்.

            கனத்து வளர்ந்து விரிந்து நிழல்பரப்பிய மரங்களின் கீழ் குடும்பம் குடும்பமாக மக்கள் அமர்ந்திருந்தனர்.  வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவுப் பண்டங்களைத் தின்றபடி பேசிக் கொண்டிருந்தனர்.  தாயும், தந்தையும், பெண்குழந்தைகள், வளர்ந்த பெண்கள், தளர்ந்த பெண்கள், குதூகலித்த குமரிப்பெண்கள் என்று பெண்கள்தாம் அதிகம் தென்பட்டனர்.  ஆண்கள் ஒருவர் இருவர் மட்டுமே, தந்தையாகவோ, துணைவனாகவோ, மகனாகவோ, அந்த குழுவின் வட்டத்தை ஒட்டி தாமரை இலைத்தண்ணீர் போல் தனித்து தெரிந்தனர்.  தாம் சார்ந்த குடும்பப் பெண்களின் உணர்வுகளைச் சார்ந்து எதிரொளிப்பதாகவே இருந்தனர்.  அவர்கள் முகத்தில் தனித்த, மாறுபட்ட உணர்வுகளைக் காண இயலவில்லை.  இந்தச் சூழல் பாண்டியனுக்கு மாறுபட்டதாக தெரிந்தது.  சக வீரர்களிடம் கேட்டார். 

            “இந்த மாநிலத்தில் பெண்கள் தாம் அதிகம்.  இங்கு தாய்வழிச் சமூக வழக்கங்கள் நடைமுறையில் உள்ளன.  ஒரு குடும்பத்தின் நல்லது கெட்டதுகளை குடும்பத்தலைவியான தாயோ, மனைவியோதான் முடிவெடுப்பார்கள்.  கணவனோ, மகனோ குடும்பத்தலைவி சொல்வதற்கேற்பவே நடந்து கொள்வர்.  சொத்துரிமையும் பெண்களுக்கு மட்டும் தான்.  பெண் மீதான சொத்தின் பலன்களை அனுபவித்துக் கொள்ள முடியும்.  ஒரு ஆண் அச்சொத்தை தனது பெயரில் வாங்கவோ, விற்கவோ முடியாது”.  “எங்கள் தென் இந்தியாவில் குமரி மாவட்டத்திலிருக்கும் கேரள மாநிலத்தில் சில பகுதிகளிலும் தாய்வழிச்சமுகம் நடைமுறையில் இருந்ததாக வாசித்துள்ளேன்”.

            நண்பர்கள் பேசிக்கொண்டே பூங்காவைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  ஒரு மரத்திலிருந்து ஒரு குரங்கு விறுவிறுவென்று இறங்கியது.  கண் இமைக்கும் நேரத்தில் ஒரு குடும்ப குழுவின் மத்தியில் வைத்திருந்த ஒரு பையை எடுத்துக்கொண்டு வேகுவேகுவென்று மரத்தில் ஏறியது.  அந்தக் குடும்பத்திலிருந்த பெண்கள் அலறினர்.  ஒரு பெண், குரங்கின் பின்னாலே ஓடினாள்.  இதைப் பார்த்த பாண்டியன் ஒடிந்த ஒரு மரக்கம்பை எடுத்து அந்தக் குரங்கின் மீது எறிந்தார்.  கம்பு குரங்கின் முதுகுமீதுபட அதிர்ச்சியில் கிறீச்சிட்ட குரங்கு பையை கீழே போட்டு விட்டு, அதுவும் மரத்திலிருந்து குட்டியும் விழுந்து விடாமல் கிளையினைக் கெட்டியாக பிடித்துத் தொங்கியது!

     குரங்கின் முன் வயிற்றில் தொற்றியிருந்த குட்டியும் தாயோடு தொங்கியபடி அலறியது.  இதைப் பார்த்த பெண் வாயினை பொத்தி தன் வருத்தத்தினை வெளிப்படுத்துவது போல் மேலே பார்த்தபடி நின்றாள்.  குரங்கு போட்ட உணவுப்பண்டங்கள் இருந்த பை பூங்காவின் மத்தியிலிருந்த குளத்தில் விழுந்தது.  பாண்டியன் சற்றும் தயங்காமல் மின்னல் வேகத்தில் குளத்தில் குதித்து அந்தப் பையை எடுத்து நீர் சொட்டச் சொட்ட அந்தப்பையை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.

            “குட்டியுடன் இருந்த தாய்குரங்கை இப்படி அடித்து விட்டீர்களே, பாவம்”! என்பது போல் ஏதோ சொன்னாள்.  மொழி புரியவில்லை.  தொனியும் முகபாவமும் புரிந்தது.  ஏதோ வீரதீரச் செயலைச் செய்து விட்ட பரவசத்தில் அந்த பெண் முகத்தில் மகிழ்ச்சியை எதிர்பார்த்த பாண்டியனுக்கு ஏமாற்றமும், வெட்கமும் வந்தது.  குளத்தில் குதித்து சில்லிட்ட நீர்த்துளிகளையும் விட அவரிடம் பொங்கிய வியர்வைத் துளிகளே அதிகம்.  பேசாமல் நண்பர்களை நோக்கி நடந்தார் பாண்டியன்.  யாரோ கைதட்டி கூப்பிடுவதை உணர்ந்து திரும்பினார்.

     அந்தக் கூட்டத்திலிருந்த இன்னொரு இளம்வயது பெண் அவரருகே வந்து “நன்றி மேஜர்சார் எங்களது உணவை திரும்பக் கிடைக்கச் செய்து விட்டீர்கள்.  வாருங்க சேர்ந்து சாப்பிடலாம்” என்று சொன்னாள். ஒரு சிறுவன் அவரது கையை பற்றி குலுக்கி தனது பாராட்டைத் தெரிவித்தான்.  அந்த மென்மையான தொடுவுணர்வு இதயத்தை வருடுவது போல் இருந்தது.  முந்தைய ஏமாற்றத்திலிருந்து மீளாத பாண்டியன் “பரவாயில்லை, எங்களுக்கு நேரம் ஆச்சு வர்றோம்” என்று ராணுவ மிடுக்கு காட்டி நடந்தார்.

           

 

     இந்த நிகழ்வு அவர் தனியாக இருக்கும் பொழுதெல்லாம் நினைவிலாடிக்கொண்டே இருந்தது.  அடுத்த ஞாயிற்றுக்கிழமை உடனே வராதா? ஏக்கம் வந்தது.  நண்பர்கள் அறையில் இருக்கும் போதெல்லாம் சொல்லி கேலி செய்தார்கள்.  அவர்கள் கேலி செய்ய, செய்ய இறுகிய இதயம் நெகிழ்ந்து உருகத் தொடங்கியது.  மொழி, இனம் தெரியாத தேசம்.  இன்னதென்று உணரவியலாத உணர்வுகள்.  பகலெல்லாம் பணியாற்றிய உடற்களைப்பும் உறக்கமும் படுக்கையில் கிடத்தினாலும் குரங்கையும் குட்டியையும் பரிதாப்பட்ட அந்த பெண்ணின் உருவம் இமைத்திரைகளை வியாபித்தது.  கண்களை இறுக்கி மூடினால் நினைவுத்திரையில் விஸ்வரூபமெடுத்து நின்றது.  கருத்த இலைகளுக்கு இடையே மலர்ந்த ரோஜா போல அவள் முகம் நினைவில் ஆடியது.

      இந்த அவஸ்தைகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளத் தோன்றும்.  வாய் தவறி சொல்லிவிட்டால் கேலித் தோட்டக்களால் அவரை துளைத்து விடுவார்களே என்ற அச்சம்.  ஆசையும் அச்சமுமாய் அவரை லெப்ட் ரைட் போட வைத்தது.  ஆனாலும் அவரது முகத்தில் திடீர் ஜொலிப்பும், திடீரென்று கவியும் சோகமும் நண்பர்களிடம் தனிமைப்படுத்தியதும் கண்டு அவர்கள் அவரை கேள்விகளால் துளைத்தார்கள்.  ‘சொல்லி மாட்டிக் கொள்ளக் கூடாது’ என்ற எல்லைக் கோட்டைக் கடக்காமல் மரமாய் நின்றார்.  நினைவில் தென்றல்தான் விடுவதாயில்லை.

            ஞாயிறு வந்தது.  உணவு உண்டவுடன் முகாமை விட்டு தனியே மெல்ல நழுவினார் பாண்டியன்.  அதே பூங்கா.  அதே மரத்தை நோக்கிச் சென்றார்.  அந்தக் குடும்ப உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.  காற்று ஒரே திசையில் வீசுவதில்லை.  அந்தப் பூங்காவின் வாசல் புறமும், உட்புறங்கள் எல்லாம் அந்தப் பெண்ணின் விழிச்சிறகுகள் பறப்பதும் தன் குடும்பத்தாரை கவனித்துக் கொள்வதுமாய் பட படத்தன.  பாண்டியன் வருவதைப் பார்த்து விட்டாள்.  பதற்றம் காட்டாமல் மெல்ல எழுந்து ஒரு பூச்செடி அருகே சென்றாள்.  அது குடும்பத்தின் பார்வையில் படாத இடமாக இருந்தது. பாண்டியன் அப்பூச்செடியருகே சென்றார்.

            அந்தப் பெண் அவரைப் பார்த்து வணக்கம் சென்னாள்.  இரண்டாகப் பிளந்த இருந்த தங்கத் தாமரை மொட்டு மீண்டும் ஒன்றாக இணைந்தது போலிருந்தது.  பின் நாணி தலைகுனிந்து கொண்டாள்.  ரோஜாப்பூ மேலும் சிவந்தது.  அவர் மெல்லிய குரலெழுப்பி வணக்கம் சொன்னார்.  “மன்னிக்கவும், அன்று குரங்கிடமிருந்து எங்களது உணவை காப்பித்தியதற்கு நன்றி சொல்லாமல், கோபித்துக் கொண்டேன்” “இல்லை, நான் தான் மன்னிப்பு கோர வேண்டும்.  உங்கள் குடும்ப உணவு பறிபோனது பற்றி கவலைப்படாமல், அந்த தாய் குரங்கு அடிபட்டுப் போனதே.  குரங்கும் குட்டியும் கீழே விழ இருந்ததே என்று குரங்கின் மீது நீங்கள் காட்டிய இரக்க உணர்வு இராணுவ வீரனான என்னை உருக்கிவிட்டது.  உங்கள் கருணை உணர்வுக்கு தலை வணங்குகிறேன்”.  அருகே இருந்தும் அவரவர் எல்லையில் நின்று கொண்டிருந்தனர்.  அவள் தலை நிமிர்ந்து ஏறிட்டாள்.  இவர் குனிய இருவரும் ஒரு சேர பார்த்துக் கொண்டனர்.  பாண்டியன் மவுனத்தை உடைத்தார்.

            “அன்று ஒரு சிறுவனுடன் வந்தாரே.  அவர் யார்.  அவர் நன்றாகப் பேசினாரே”.

            “அவள் எனது தங்கை, அவன் எனது தம்பி” என்று ஏறிட்டுப் பார்த்து பதில் சொன்னது.  குளத்தின் மேற்பரப்பில் சுவாசிக்கும் மீனின் சுவாசக்காற்றாக நீர்க்குமிழியிட்டு காற்று வழியே கரை ஏறுவது போலிருந்தது.  அவள் நான்கரை அடி உயரம்.  இவர் ஆறடி உயரம். அவள் ஏறிட்டுப் பார்த்தும் இவர் தாழ்ந்து நோக்கியும் பேசுவது வேடிக்கையாகவும், சிரமமாகவும் இருந்தது.  உடனே இவர் பக்கத்தில் இருந்த கல் பலகை இருக்கையில் உட்கார்ந்தார்.  நின்றிருந்த அவள் செவ்விதழ் விரித்து சிரித்தார்.  வெள்ளை மாதுளை முத்துக்கள் ஒளிர்ந்தன.  வெட்க மூட்டம் களையத் தொடங்கியது.  இருவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.  பாண்டியன் என்ற இவரது பெயரை  அவள் ‘பாண்டுங்’ என்றாள்.  ‘ஹாஷிமா’ என்ற அவளது பெயரை ஷீமா என்றழைத்து சிரித்துக்கொண்டனர்.  இந்நேரத்தில் தம்பி தேடி வந்து விட்டான்.  இருவரும் பிரிந்தனர்.  இப்படி அடுத்தடுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் சந்திப்புகள் தொடர்ந்தன.

            ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிக்கும் போது ‘ஹாஷிமா’ வின் அம்மாவும் அப்பாவும் வந்து விட்டனர்.  அவாகளைப் பார்த்ததும் பயமும் கூச்சமும் தாக்க அனிச்சையாக ராணுவபாணியில் சல்யூட் அடித்து நின்றார்.  அவர்கள் மூவரும் சிரித்து விட்டனர்.  அம்மா அவரைப் பற்றி விசாரித்தார்.  தந்தை இவருடைய முகபாவத்தையும், உடல்மொழியையும் கவனித்தபடி இருந்தார்.  அவர்களும் ஐந்தடிக்குள்ளே இருந்தனர்.  இவரை ஏறிட்டுப் பார்த்துதான் பேச முடிந்தது.

            “…நீங்க மதராஸிக்காரர்.  நாங்கள் மேகாலய ஹாஸி மதத்தைச் சேர்ந்த பழங்குடி இனத்தவர்கள்.  நாங்கள் அந்நிய மக்களுடன் திருமண உறவு வைத்துக் கொள்ள மாட்டோம்.  அதனால் இவளை நீங்கள் மணக்க முடியாது. அப்படி எண்ணம் இருந்தால் மறந்து விடுங்கள்!” என்று சொல்லி ஏறெடுத்துப் பார்த்தே பேசியதால் வலித்த பிடறியைத் தடவி விட்டபடி நடந்தார்.  இவர் ஓடிப்போய் வழிமறித்து குனிந்த படி பேசினார்.  “உங்கள் கருத்தும் பழக்கமும் உங்களைப் பொறுத்தவரை சரிதான்.  நான் உங்ள் மகளை விரும்புகிறேன்.  நீங்கள் அனுமதித்தால் மணந்து கொள்வேன்.  இல்லாவிட்டால் பிரம்மச்சாரியாகவே உங்கள் மகளின் நினைவோடு வாழ்ந்து சாவேன்.  எங்கள் வீட்டைப் பொருத்த அளவில் எனது தாயும் தந்தையும் எனது விருப்பத்தினை ஏற்றுக் கொள்வார்கள்.  அவர்களைச் சமாதானப் படுத்தி விட முடியும்.  நீங்கள் தான் மனது வைக்க வேண்டும்” என்று இவர் சொல்லும் போது கண்ணீர்த் துளிகள் அவர்கள் மீது தெறித்தது.  அம்மாவும் அப்பாவும் நிமிர்ந்து பார்த்தனர்.  வானத்திலோ, மரத்திலோ இருந்து நீர்த்துளிகள் விழவில்லை.  இவரது கண்களிலிருந்து தான் நீர் பொங்கி இருப்பதைக் கண்டனர்.

            “நாங்கள் எங்கள் இனத்தைச் சேர்ந்த பெரியவர்களிடம் பேசிப் பார்க்கிறோம்.  உங்களைப் பற்றிய விவரங்களை ஒரு தாளில் எழுதிக் கொடுங்கள்” என்றார் அம்மா.  உடனே இவர் எந்திரம் போல் தனது பாக்கெட்டிலிருந்து டைரியின் ஒரு தாளைக் கிழித்து தனது பெயர், பதவி, ஊர் முதலான விவரங்களை எழுதிக் கொடுத்தார்.

            அந்த வாரம் முழுவதும் திரிசங்கு சொர்க்கமாக நகர்ந்தது ஹாஸியின் அம்மாவின் வெளிப்படையான பேச்சும் ஒரு பக்கம் மகிழ்ச்சி.  மறுபக்கம் அவர்கள் இனப்பெரியவர்கள் பழங்குடியினத்தவர்கள் அவர்களிடமிருந்து சாதகமாக பதில் வருவது சாத்தியமில்லை. முகாமில் ராணுவக் கட்டுப்பாட்டின் படி இரவில் படுக்காமலிருக்க முடியவுமில்லை, படுத்தால் தூக்கமும் வருவதில்லை. நாள்கள் நத்தையாக நகர்ந்து ஞாயிற்றுக்கிழமை வந்தது.  அஸ்ஸாமிய வீரர் தருண் உடன் ஹாஸி வீட்டைத் தேடிப் போனார்கள்.  வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை பூங்காவில் உலாவி, உரையாடி உண்டு மகிழ்ந்து வீடு திரும்புபவர்கள் அன்று வீட்டிலேயே அடைந்து கிடந்தார்கள்.  முகங்களில் குழப்ப மேகங்கள், வெயிலும் தெரியாமல் மழையும் பெய்யாமல் மப்பு மந்தார புழுக்கமாய் இருக்குமே அந்த அவஸ்தை அவர்களது மனதுகளில்.

            இவர்களிருவரையும் பார்த்ததில் மெல்ல தலையசைத்து வரவேற்றாலும் அவர்கள் முகங்களில் ஒரு மின்னல் பளிச்சிட்டு மறைந்தது போல தெரிந்தது.  இவர்களை அமரச் சொன்னார்கள்.  ‘டீ கொடுக்கலாமா, கூடாதா, டீ கொடுப்பதும், கொடுக்கமலிருப்பதும் சூட்ச்சுமமாய் வீட்டார் எண்ணத்தை வெளிப்படுத்துவதாகாதா….’ அப்பாவுடன் உள்ளறைக்குள் போய் வந்த அம்மா முகத்தை சலனமில்லாமல் வைத்துக் கொண்டு இருவருக்கும் தண்ணீர் கொடுத்தார்.  ஹாஸி வீட்டிற்குள் இருந்தபடி முன்னறையில் அமர்ந்திருந்தவர்களை ஊடுருவிப் பார்த்தாள்.  பாண்டியனின் கண்களும் வீட்டுக்குள் ஊடுருவிப் பார்த்தன.  பனிமூட்டத்தை ஊடுருவிப் பார்க்கிற கண்கள் சோகமூட்டத்திலிருந்து கசியும் ஹாஸியின் கண்களைக் கண்டு கொண்டது.  நிலைமையை உணர்ந்து கொண்;டது.  மெல்ல நிதானமாய் மனப்புழுக்கத்தை பெருமூச்சாய் விட்டார்.

            இவர்கள் தண்ணீரை குடித்தவுடன், “எங்க பெரியவங்க ஒத்துக்கலை!” என்று சொன்னபடி அம்மா உள்வீட்டிற்குள் நுழைந்தாள்.  தருணும், பாண்டியனும் வருகிறோம்’ என்று சொல்லி தயங்கித் தயங்கி வெளியேறினர்.

            அடுத்த மூன்று நாள்கள் ஹாஸி கடுமையான காய்ச்சலில் நினைவிழந்து புலம்பிக் கொண்டிருந்தாள்.  அவளை ஷில்லாங் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்கள்.  பாண்டியனுக்கும் கடுமையான காய்ச்சல் என்று ராணுவ மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்த்திருந்தார்கள்.  புறநோயாளிகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் ஹாஸி சேர்க்கப்பட்டாள்.  பாண்டியனுக்கு துணையாக நிறுத்தப்பட்டிருந்த தருண் ஹாஸியின் அம்மா மருத்துவமனை முற்றத்தில் போவதும் வருவதுமாய் இருப்பதைப் பார்த்து விட்டார். உடனே அம்மாவிடம் சென்று விசாரித்ததில் பாண்டியன், ஹாஸி இருவருக்கும் காய்ச்சல் வந்த காரணம் புரிந்து விட்டது.  ராணுவத்தினர் அனுமதியோடு ஹாஸியின் அம்மா பாண்டியனைப் பார்த்து நலம் விசாரித்தார்.  துவண்டு கீரைத் தண்டுப்போல் முனங்கிக் கொண்டு படுத்திருந்த பாண்டியன் ஹாஸியின் அம்மாவைப் பார்த்ததும் துள்ளி மூங்கில் கம்பு போல் எழுந்து நின்றவர் தள்ளாடி விழப்போனார். தருண் அவரை அமர்த்தி படுக்க வைத்தார்.  பாண்டியன் சொன்னபடி, தருண் ஹாஸியின் அம்மாவுடன் சென்று ஹாஸியை பார்த்து நலம் விசாரித்து வந்தார்.  இந்த நல விசாரிப்புகள் காய்ச்சலை விரட்டி விட்டது.  இரண்டு நாளில் அவரவர் இருப்பிடம் சென்றனர்.

            ஞாயிறன்று பாண்டியனும், தருணும் ஹாஸி வீட்டிற்குச் சென்றனர்.  அடுத்த வாரத்தில் ராணுவத்தினரின் அனுமதியுடன் பாண்டியன் ஹாஸி திருமணம் நடந்தது.  புதுத் தம்பதியினர் ராணுவமுகாமில் உள்ள குடியிருப்பில் தங்க  வைக்கப்பட்டனர்.  ஹாஸியின் அம்மா அழுதார்.  “என் மகள் ஒரு ராணுவ வீரரை கல்யாணம் பண்ணிக் கொண்டதில் மகிழ்ச்சி.  நாட்டுக்காக உழைக்கும் ஒருவருக்கு வாழ்க்கைப் படுவது எங்களது ஆசாரப்படி முக்கியமான கடமை தான்.  ஆனாலும் பாண்டியன் அந்நியர், மதராஸி எங்கள் பெண்ணுக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்” என்று புலம்பினார்.  அந்நியரை மணந்து கொண்டதால் ஹாஸியும் அந்நியப்படுத்தப்பட்டார்.  ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் பூங்காவில், சோலைவனத்தில் குடும்பத்தாரை கணவன் மனைவியராய்ச் சென்று பேசி வந்தனர்.

            ஹாஸியைக் கல்யாணம் பண்ணியதிலிருந்து இரண்டு வருடங்களாக ஆண்டு விடுப்பில் கூட அவர் மதுரைக்குப் போகவில்லை.  மணியார்டர், கடிதம் போக்குவரத்தோடு தொப்புள்கொடி உறவு தொடர்ந்தது.  இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.  குழந்தை அப்பாவைப் போல் கறுப்பு நிறம், அம்மாவைப் போல முகமுமாய் இருந்தான்.  அம்மாவின் குலதெய்வமான சேவலின் பெயரில் சேவல்கொடி என்றும் அப்பாவில் தேசப்பற்று தொட்டு ஜெயக்கொடி என்றும் அழைக்கப்பட்டான். ராணுவத்தில் பணியில் சேர்ந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன.  ஓய்வு பெறலாமா பணி நீட்டிப்பு பெற்று இங்கேயே தொடரலாமா என்று யோசனை எழுந்த நேரம் மதுரையில் அப்பாவுக்கு உடல்நிலை மோசம் என்று தந்தி வந்தது.  விடுப்பு பெற்றுக் கொண்டு அப்பாவை பார்க்க குடும்பத்தோடு சென்றார்.  “சீனாக்காரியை கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்துவிட்டான்” என்ற செய்தி மதுரை மந்தை எல்லாம் பரவியது.  மகனையும், பேரனையும் பார்த்த மகிழ்ச்சியில் அப்பா உயிரை விட்டார்.  “கருவாயன் தங்கச்சிலை மாதிரி ஒரு பெண்ணைக் கட்டி வந்திருக்கான்” என்று ஹாஸியின் கையை, முகத்தைத் தொட்டு முத்தம் கொடுக்காத பெண்களே அந்த தெருவில் இல்லை.

            “ஏலேய், சீனாக்காரியைக் கட்டிகிட்டு வந்துட்டேன்னு உங்க நல்லப்பன் பெரியப்பன் மாருக, எங்க அண்ணன், தம்பிகளோடு சேர்ந்து உன்னை பத்திவி;ட்டுட்டு இருக்கிற வீடு நிலத்தை பிடுங்க பார்க்கறாங்க.  நீ அவளை வச்சுக்குவியோ, விரட்டி விடுவியோ தெரியாது.  நீ எழுதிக் குடுத்திட்டு நீ அம்மா ஊர்லதான் இருந்து பிழைக்கணும். என் மனங்குளிர இந்த மண்ணுல என்னைத் தூக்கிப் போடனும்.  நாம் பெத்த ராஜா அங்கிட்டு இங்கிட்டு போயிறாதே. எனக்கு நல்ல கெதி கிடைக்காம எங்கட்டை வேகாது” என்று அம்மா காலைக்கட்டிக் கொண்டு அழுதாள்.

            மகனை வடநாட்டுக்கு அழைத்துச் சென்று விடக்கூடாதென்று ;ஹாஸியின் கைகளை பிடித்து அழுது கெஞ்சினாள்.  தாயின் புலம்பலைத் தாங்கிக் கொள்ள முடியாத ஹாஸியும் மதுரையில் இருக்க சம்மதித்தாள்.  பாண்டியனும் ஓய்வு பெற்று குடும்பத்தோடு மதுரையில் தங்கினார்.  பொதுப்பணித்துறையில் இளநிலை அலுவலர் வேலை கிடைத்தது.  ஒரு மகள் பிறந்தாள்.  பெண் அப்பாவின் வளர்த்தியும் அம்மாவின் நிறமுமாய் அந்த தெருவுக்கே செல்லப்பிள்ளை ஆனாள்.

            அதற்குப்பின் அம்மாவுக்கு தமிழ்நாடே நிலையானது.  ஷில்லாங் போகவில்லை.  அப்பா இறந்த போது கூட அவர்களுக்கு தகவல் சொல்லப்படவில்லை.  தாமதமாக கடிதம் எழுதப்பட்டது.  அவர்களும் தமது வருத்தத்தையும் உடனே வர இயலா சூழலையும் தெரிவித்துக் கொண்டனர்.  அதற்குப் பின் ஐந்து வருஷம் கழித்து இப்போது தான் ஷில்லாங்கிலிருந்து மாமா கடிதம் எழுதி பாட்டி இறந்த விவரத்தை சொல்கிறார்.

***********

Series Navigation ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌தீப்பொறி !வடகிழக்கு இந்தியப் பயணம் : 9 
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *