படியில் பயணம் நொடியில் மரணம்

author
0 minutes, 1 second Read
This entry is part 6 of 9 in the series 2 அக்டோபர் 2022

 

முனைவர் என். பத்ரி

             சமீப காலங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பொது இடங்களில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவதும், வகுப்பறையில் மது அருந்துதல்,புகை பிடித்தல்,ஆசிரியர்களை கேலி செய்தல் போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடுவதும்   காணொளிகளாக  சமூக வலைதலங்களில் வேகமாக  பரவி நம்மை மிகவும் வேதனைப்படுத்துகின்றன.

         பேருந்து புறப்பட்ட உடன் ஓடி வந்து ஏறுவது, ஆபத்தை உணராமல் ஒரு காலை தரையில் தேய்த்தபடி பேருந்து  படிக்கட்டில் பயணிப்பது, ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டு செல்வது, படிக்கட்டில் மொத்தமாக நின்று கொண்டு பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது, தாளம் போட்டுக் கொண்டு செல்வது, கேலி, கிண்டல் செய்வது போன்ற வெறுக்கத்தக்க செயல்களில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர். எதிர் காலத்தலைவர்களின் இவ்வகையான செயல்பாடுகள் ஆரோக்கியமான சமுதாயத்திற்கு நல்ல அடிப்படையாக அமையாது. இதுதொடர்பாக பலமுறை எச்சரித்தும் யாரும் திருந்தியபாடில்லை. இதனால் பல வழித்தடங்களில் திடீரென ஓட்டுநர்கள் பேருந்தை நிறுத்தி விடுகின்றனர்.பேருந்தின் உள்ளே ஏறினால் மட்டுமே பேருந்து இயக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர். அவ்வாறான சமயங்களில் ஓட்டுநருக்கும், மாணவர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு விடுகிறது. இதுபோன்ற சமயங்களில் சக பயணிகளும் அறிவுரைகளை வழங்குகின்றனர். இதனால் அன்றாடம் அலுவலகங்களுக்கும், பிற வேலையாக பயணிப்பவர்களுக்கும் கால தாமதம் ஏற்பட்டு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருவதும் வாடிக்கையாகிவிட்டது.  

                            சமீபத்தில் சென்னையில் மாநகர போக்குவரத்து காவலர்கள்  மாநகரம் முழுவதும் பல்வேறு பேருந்து நிறுத்தங்களிலும்  சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்களை பிடித்து கடுமையாக எச்சரித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர், பள்ளி அல்லது கல்லூரி முதல்வர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்தனர். சிலரிடம் கடிதம் எழுதியும் வாங்கிக் கொண்டனர்.அடுத்த முறை படிக்கட்டு பயணம் செய்து சிக்கினால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவலர்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

                        சென்னை மட்டுமன்றி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருச்சி போன்ற தமிழக நகரங்களிலும் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் செய்யும் அராஜகம்  பொதுமக்களின் வெறுப்பை பெற்றுள்ளது. திருச்சியில்        படியில் நின்று பயணம் செய்ததை கண்டித்த ஓட்டுனர் மீது பள்ளி மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். பொதுமக்களையும் தாக்கிய அவர்களை காவல்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

                காஞ்சிபுரம் மாவட்டம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து  புரிசைக்கு செல்லும்  அரசு பேருந்தில் முன்படியில் நான்கு பள்ளி மாணவர்கள் தொங்கியபடி பயணித்துள்ளனர்.மாணவர்கள்  ஆபத்தான முறையில் பயணம் செய்வதை கண்ட ஓட்டுநர் அவர்களை மேலே ஏறி வரும்படி கூறியுள்ளார். அதில் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் பேருந்தை ஓட்டுனர் நிறுத்தி அந்த மாணவர்கள் படியில் பயணித்தால், பேருந்தை விட்டு இறக்கி விடுவேன் என கூறியுள்ளார். அதனால் கொந்தளித்த பள்ளி மாணவர்கள் ஓட்டுநரின் கன்னத்தில் அறைந்தும் மேலும் கற்களை கொண்டு ஓட்டுநரை தாக்கியதாகவும் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது.இதனையடுத்து பேருந்தில் பயணித்த பயணிகள் மற்றும் அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் ஒன்று கூடி அந்த மாணவர்களை கண்டித்துள்ளனர். பொதுமக்கள் ஒன்று கூடியதை கண்டு அஞ்சிய மாணவர்கள் நான்கு பேரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.அப்போது அதில் ஒரு மாணவனை 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பிடித்துள்ளார். அந்த நபரையும் மாணவன் தலையில் பலமாக தாக்கி விட்டு தப்ப முயன்றுள்ளார்.அந்த நபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி உள்ளது. அதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்களே அந்த மாணவனை பிடித்து சிவகாஞ்சி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.இந்நிகழ்வுகள் சில உதாரணங்களே.

         சென்னை மாநகர காவல் துறையும் மாணவர்கள் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் நேரடியாகவே அறிவுரைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டது. சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் எடுக்கும் தொடர் நடவடிக்கைகளால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

           தமிழக அரசு மாணவர்கள் பேருந்து படிகட்டில் தொங்கியவாறு பயணம் செய்வதை  பள்ளி ஆசிரியர்கள் தடுக்க வேண்டும் என்றும் இதே போல பேருந்து ஓட்டுநர்களும்  மாணவர்களை படிக்கட்டில்  பயணம் செய்ய அனுமதிக்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. இருந்த போதும் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்களின் பேச்சை கேட்காமல்  தொடர்ந்து பேருந்தில் தொங்கியவாறு பயணம் செய்து வருகின்றனர். 

               தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பேருந்தின் படியில் பயணிக்கும் இடங்களை  அடையாளம் கண்டு காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை   எடுக்க வேண்டும். புதிய பேருந்துகள் வாங்கும் போது தானியங்கி கதவுடன் வாங்கினால் படிக்கட்டு பயணத்தை  தவிர்க்க முடியும். கிராமபுறங்களிளும் இவ்வகை பேருந்துகளை இயக்க நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். பேருந்துகள்  அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இது ஒரே பேருந்தில், அதிக பயணிகள் கூடுவதை தவிர்க்கும்.

                  வகுப்பறை ஒழுக்கம் மாணவர்களை பொதுவெளிகளிலும் பண்புடன் நடக்க வைக்கும்.குடும்பங்களிலும் பெற்றோர்கள் இது சார்ந்து தொடர்ந்து அறிவுறுத்தி வரவேண்டும். கரோணா தீநுண்மிக்காலத்தில் கற்றலில் இழப்புகளை சந்தித்த மாணவர்கள் ஒழுக்க சீர்கேட்டையும் பெற்றுள்ளது துரதிஷ்டவசமானது.எல்லாம் சரியாக சில வருடங்கள் ஆகலாம் என்பதே நிதர்சன உண்மை.மனித உயிர் விலை மதிப்பற்றது. “படியில் பயணம் நொடியில் மரணம்” என்று நாம்எச்சரித்து ஊதுகிற சங்கை தொடர்ந்து ஊதிக்கொண்டே இருப்போம். எல்லா இரவுகளும் விடிந்துதானே ஆகவேண்டும்.இளைய தலைமுறை திருந்தும் என தொடர்ந்து நம்புவோம்.நம்பிக்கைத்தானே வாழ்க்கை.

தொடர்புக்கு 63/2,அருளலீஸ்வரன் கோயில் தெரு,மதுராந்தகம்-603306

9443718043  nbadhri@gmail.com

 

Series Navigationபிரபஞ்ச மூலத் தோற்றம், விரிவை விஞ்ஞானிகள் விளக்கும் பெருவெடிப்புக் கோட்பாடு ஒரு புனைவு யூகிப்பே.சத்தியத்தின் நிறம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *