Posted in

அம்மாவின் செல்லம்

This entry is part 3 of 12 in the series 14 மே 2023

அம்மாவின் செல்லம்

ஆர். வத்ஸலா

அம்மாவுக்கு என்னைத் தான் மிகவும் பிடிக்கும்

எனக்கு  சீட்டித் துணியில் பாவடை

தானே தைத்து போடுவாள்

தீபாவளிக்கு

– அழகாக தைக்க வராவிட்டாலும் –

அது குட்டை பாவடையாகியும்

ஒரு வருடம் போடுவேன்

பள்ளித்தோழிகள் அதனை பார்த்து சிரித்தால்

கோபம் வரும் எனக்கு

அண்ணனுக்கு உண்டு 

ரெடிமேட் கடையில் 

நீள கால் சராயும் சட்டையும் 

தீபாவளிக்கும் பொங்கலுக்கும் 

அவனுக்கு உண்டு வாரம் ஒரு முறை

இரண்டு  சாக்லெட்

எனக்கு ஒன்று

என் பற்கள் சொத்தையாகிவிடக் கூடாது

என்கிற அக்கறையால்

அம்மாவுக்கு என்னை மிகவும் பிடிக்கும்

பெண்ணென்பதால்

என் கல்வி பத்தாவதுடன் நின்றது

சேமிப்பெல்லாம் அண்ணாவின் உயர் கல்விக்குத்

தேவைப் பட்டதால்

அதிக சீர் கேட்காத 

சாதாரண பணியிலிருக்கும்

மருமகனை தேர்ந்தெடுக்கும் கட்டாயம்

பாவம் அம்மாவுக்கு

வயதான பிறகு

உயர்கல்வி பெற்ற

என் அண்ணனிடமும்

அழகான அண்ணியுடனும்

ஒரு சில மாதங்கள்  மட்டுமே

தங்கியவள்

”அவுங்க ஊரு எனக்கு ஒத்துக்கலெ”

எனக் கூறி

என்னுடன்தான் இருந்தாள்

கடைசி வரை

அம்மாவுக்கு என்னை மிகவும் பிடிக்கும்

இறக்கும் போது அம்மா 

கூப்பிட்டும் வராத அண்ணன் பெயரைச்

சொன்னது  

அவன் அருகில் இல்லாததனால் தான்

அம்மாவுக்கு என்னைத் தான் மிகவும் பிடிக்கும்

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 294 ஆம் இதழ்அடையாளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *