நாவல்  தினை              அத்தியாயம் பதினான்கு     CE 300 பொது யுகம் 300

This entry is part 12 of 12 in the series 14 மே 2023

  நாவல்  தினை              அத்தியாயம் பதினான்கு     CE 300 

                                                                                              பொது யுகம் 300

வழி மறந்த கடைசிப் பறவை வீடு திரும்பும் பின் அந்திப் பொழுதில் இந்தப் பெண்கள் திரும்பினார்கள். 

 இலுப்பெண்ணெய் தாராளமாக ஊற்றிப் பெரிய பருத்திப் பஞ்சுத் திரிகள் எண்ணெய் நனைத்துக் கொளுத்திய சுடர்கள் தெருவெங்கும் வீட்டு மாடப்புரைகளில் இருந்து ஒளி வீச இன்னும் சிறிது நேரத்தில் இரவு நிலம் போர்த்தும். 

குயிலிக்கு வியப்பாக இருந்தது. ஐம்பதாம் நூற்றாண்டில் இருந்து மூன்றாம் நூற்றாண்டுக்கு வந்து சேர்ந்தாலும், இரவும் பகலும் அந்தியும் இன்னும் எந்த வித்தியாசமும் இல்லாமல் வந்துதான் போகும்.   

எப்போதும் பிரகாசமாக ஒளிரும் துர்க்கையம்மாள் பயணியர் சாலையின் ஐந்து விரிவான வாசல் படிகள் கூடுதல் வெளிச்சத்தை அளிக்க, படிகள் ஒவ்வொன்றிலும் நிலவிளக்கு ஒன்றும் ஐந்து முகக் குத்துவிளக்கும் சுடர் வீசி எரிந்ததே காரணம் என்று புலப்பட்டது.

 சிறு அகல் விளக்குகளை எரிய வைத்துச் செப்புத் தட்டில் வைத்து உள்ளேயிருந்து எடுத்து வந்த கிழவியம்மாள் அவர்களிடம் உரக்கச் சொன்னாள் – குழந்தைகளே, வாருங்கள் விளக்கேற்றி இருள் அகற்றுவோம். குறிஞ்சித் தெய்வம் முருகன் வேலெறிந்து பகைவெல்ல மேதினியில் அவதரித்த புனிதமான கார்த்திகை தினம் இது. 

 சொன்னது மனதுக்கு இதமாக இருந்தது. கடந்து வந்த நாற்பத்தெட்டு நூறாண்டுகளில் எத்தனை விழாக்கள் காலப் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயின. எத்தனை புதியதாக ஏற்பட்டு வளர்ந்து காலம் காலமாகத் தொடர்கின்றன என்று குயிலி ஆச்சரியப்பட வானம்பாடி வீட்டுக்கு உள்ளே நுழைந்தாள். 

தரை முழுக்கச் சின்னஞ்சிறு தீபங்கள் வா, வந்து என்னை எடுத்துக் கொள், இருட்டில் இருந்து வெளிச்சம் ஏகலாம் வா என்று சுடர்முகம் புன்னகைக்க, ஆடி அலைந்தன. வானம்பாடி தீச்சுடர் அமர்ந்துவிடாமல் ஓர் அகலை இரு விரல்கொண்டு தூக்கினாள். பார்த்து பார்த்து என்று பின்னாலேயே வந்தாள் கிழவியம்மாள். 

களிமண் பிசைந்து அகலாக்கிச் சுட்ட தீபம் என்பதால் கொஞ்ச நேரம் ஒளிர்ந்ததுமே இந்த அகல் சூடாகி விடும். அதை உள்ளங்கையில் பூத்தாற்போல் எடுத்து வைத்துக்கொண்டு எடுத்துப் போனால் சுடாது. 

சொல்லியபடி எப்படி அதைச் செய்வது என்று செய்தும் காட்டினாள்.  

சிறிது நேரத்தில் பயணியர் சாலை மற்ற வீடுகள் போல் பிரகாசமாக ஒளிர்ந்தது. குயிலி இருகை உள்ளங்கை எதிரே பார்த்திருக்க அந்தக் கார்த்திகைக் காட்சியை ரகசியமாகப் படம் பிடிக்க முனைந்தாள். 

காலக் கோட்டின் குறுக்கே நிகழும் இந்தக் கார்த்திகைப் பெருவிழாவும், தலைமுறை கடந்த இவர்கள் நாலாயிரத்து எண்ணூறு வருடம் பின்னால் சென்றிருப்பதும் படம் எடுக்க வரமாட்டாமல் குழம்பிப்போய் ஒளி மட்டுமாகத் தெரிந்தது. 

படம் பிடிக்க முடியலே அம்மச்சி என்றாள் அவள் கிழவியம்மாளிடம். ஓவியம் வேணுமா இதோ என்று அவள் வீட்டுக்கு உள்ளே போய் மரப்பட்டையில் வண்ணம் பூசி எழுதிய கார்த்திகைத் திருநாள் ஓவியத்தோடு வந்தாள். 

தெருக்கோடியில் நின்ற வழிப்போக்கன் ஒருத்தன் இரண்டு வருடம் முன் வரையலையோ படம் வரையலையோ என்று வீடு வீடாகக் கேட்டு அந்தந்த நிமிடத்தில் வரைந்து கொடுத்து ஒரு பொற்காசு வாங்கிப் போனான். 

கிழவி, நம் வீட்டில் வந்து பார்த்து வரைந்தது இது என்று மகிழ்ச்சியோடு கூறினாள். இந்த ஓவியத்தில் அம்மாச்சி ஏன் இல்லாமல் போனது என்று குயிலி கேட்டாள். வெளிச்சத்தை ஓவியமாக்கும்போது எனக்கு என்ன வேலை அதுவும் அணையப் போகிற பழந்தீ. 

தீயில் ஏது பழசும் புதுசும் எனக் கேட்டாள் வானம்பாடி.  

உங்களுக்குப் பசி அதிகம் என்றால் சோறும் புளிக் குழம்பும் வட்டிக்கிறேன் குழந்தைகளே. கொஞ்சம் பொறுக்க முடியும் என்றால் கார்த்திகை வினோதம் இன்னும் இருப்பதெல்லாம் கண்டுபின் பசியாறலாம் என்றாள் பிரியத்தோடு. 

சிறுபசி கொல்ல இதைக் கொரித்தால் போதும். மறுபடி உள்ளே போய் பனைஓலைக் கொட்டானில் இரண்டிரண்டு மாவுருண்டைகளோடு வந்தாள். கார்த்திகைப் பொரியுருண்டை மற்றும் தினைமாவும் தேனும் பசுநெய்யும் சேர்த்துப் பிடித்த தினையுருண்டை. கூடவே அரிசியும் உளுந்தும்  பொடியாக்கிக் கலந்து நெய்விட்டுப் பொரித்த முறுக்கு. ஆர்வத்தோடு உண்டனர் இருவரும். 

உணவில் இரண்டாம் நூற்றாண்டு என்ன ஐம்பதாம் நூற்றாண்டு என்ன? சுவை மிகுந்ததும் பசி தீர்ப்பதும் உடலை நலமாக வைத்திருப்பதாகவும் உருவாக்கி உண்ணும் எவ்வுணவும் உண்ணத் தகுந்ததே. 

அவர்கள் பொரியுருண்டைகளை கொறித்தபின் திருப்பித்தந்த வெற்றுக் கொட்டானை உள்ளே போய் மறுபடி நிரம்பித் தந்தாள் முதியவள். தெருக்கோடியில் பூச்சிதறி ஏதோ வளையம் அந்தரத்தில் சுழன்று கொண்டிருந்தது. சிறு பைதல்கள் ஆளுக்கொரு நெருப்பு வளையம் சுழற்றுவது என்ன என முதியவளிடம் கேட்க, அதன் பெயர் மானாம்பு என்று சொன்னாள். 

கார்த்திகைப் பூ. நெருப்புப்பூ அது. குரல் எழுப்பி அந்தப் பையல்களை அழைத்தாள் கிழவி. வேர்க்கடலை உருண்டை தரேன் வந்து இங்கே மானாம்பூ சுழற்றுங்கள் என அழைக்க, இரண்டாம் அழைப்பு தேவைப்படாமல் அவர்கள் வந்து போனார்கள். 

குயிலி ஆர்வத்தோடு அளவளாவிக் கொண்டிருக்க, மெல்ல அவள் பின்னால் நடந்து ஒரு வெடியைத் தரையில் மோதினான் ஒரு பையன். குயிலி விதிர்விதித்துத் துள்ளிக் குதித்து அப்புறம் போனாள். 

தீ வெறும் ஒளியாகப் பயம் தரும், அவள் அறிவாள். இடியின் நகலாக ஒலி குறைத்து ஒலிக்கும் வெடிகள் இருபது, இருபத்தொன்று நூறாண்டு வரை வழக்கத்தில் இருந்ததாக அவற்றைக் கொளுத்தி மகிழும் பழைய புகைப்படங்களைப் பார்த்திருப்பீர்களே. உங்கள் பிரதேசத்தில் கார்த்திகைக் கொண்டாட்டம் இல்லையா? 

கிழவி ஆர்வத்தோடு கேட்க, ஒரு சில பகுதிகளில் உண்டு என்று விட்டுக்கொடுக்காமல் சொன்னாள் குயிலி. உங்கள் பிரதேசத்தில் விரிவாகக் கொண்டாடும் விழா எது என்று பின்னும் விடாமல் கேட்டாள் அவள். 

எந்தக் கொண்டாட்டத்தைச் சொல்ல? தேளரசப் பிரமுகர்கள்  மறைவாக இருந்து மனிதக் கழிவில் திளைத்து விருந்துண்டிருக்கும் நாற்றமடிக்கும் கொண்டாட்டத்தையா? தினம்தோறும் திருவிழா என்று கரப்பர்கள் கசடுண்டு போதையில் கிடந்துருளும் கொண்டாட்டத்தையா? மறைந்து மறைந்து மறைத்து மறைத்து மானுடர் அனுசரிக்கும் தைப்பொங்கலா, கண்ணன், கிறிஸ்து பிறப்பா சிவராத்திரியா? மகாத்மா காந்தி பிறந்த நாளா? 

நாங்கள் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடுவோம் என்று பாதி உண்மையும் பாதி பொய்யாகவும் சொன்னாள் குயிலி.  எண்ணெய்ப் பலகாரம் உண்டு கொண்டாடுவீர்களா, பொங்கிச் சமைத்து உண்பீர்களா என்று அடுத்த கேள்வி. 

ரெண்டும் தான். சரி ராச்சாப்பாட்டுக்கடையைக் கட்டிடலாமா என்றாள். அத்தாழம் கழித்துவிடலாமா? முதுபெண்ணே இதுவும் புரியவில்லை. ராத்திரிச் சாப்பாட்டை முடிச்சுக்கலாமா? இன்னும் திம்மென்றிருக்கே வயிறு. 

சரி வாருங்கள் மெத்தைக்குப் போகலாம் என்றாள் மூதாட்டி. கிழவிகளோடு மெத்தையேறிப் பழக்கமில்லை என்று சிரித்தபடி முன்னால் ஓடினாள் வானம்பாடி. குயிலியும் முதுபெண்ணும் பலமாக நகைத்தபடி பின்னால் வந்தார்கள். 

ஊருக்கு ஆயிரம் கார்த்திகைத் தீபங்கள் ஏற்றிப் பரப்பிய ஒளிவெள்ளத்தின் மொத்தப் பிரகாசமும் வானை நோக்கி நகர, இரவு நேர வானம் சுத்தப் பிரகாச வெளிச்சத்தில் ஒளிர்ந்தது. 

மாடியை ஒட்டி வளர்ந்த மா, வேம்பு, மரங்கள் கை தொட்டுவிடும் தூரத்தில் இருக்க, உள்ளே கூடுகளுக்குள் கடைசித் துளி விழிப்பை உறக்கமாக மாற்றிப் பறவைக் குஞ்சுகள் மலர்ந்திருந்தன, மரமேற முடியாத கடுவன் ஒன்று மாடி மதிலில் இருந்து மேலே சாடப் பார்த்துத் தோற்றது. ஊவென்று ஒலியெழுப்பி வானம்பாடி அதை அப்பால் விரட்டினாள். இது மரமேறினால் பறவைக் குஞ்செல்லாம் ஒன்று மீதியின்றி இதன் வயிற்றில் போய்விடும். அம்மாயி வளர்ப்பவற்றில் இந்தக் கடுவனைத்தான் பிடிக்கவில்லை என்றாள் குயிலி. 

பசுவைத் தவிர நான் வேறே பிராணிகள் எதையும் வளர்க்கவில்லை குழந்தைகளா. ஒரு நாய் இருந்தது, வீட்டைக் காவல் செய்து கொண்டு வீசிய சோற்றை வாலைக் குழைத்துத் தின்று கொண்டு. காரி என்று பெயர் சூட்டிய குக்கல் அது. 

நடுராத்திரி என் முதல் கணவனின் ஆவி என்னோடு ஆவி போகமாகச் சுகித்திருக்க அடைத்த கதவுகளுக்கு ஊடாக சன்னமான நீள அகலம் மட்டும் கொண்ட அழுக்குப் பரப்பாக   மூக்கில் குத்தும் நிணம் நாறி வந்தபோதெல்லாம் காரி ஓவென அழும். அந்த ஞமலி அழுகையூடே தான் படுக்கை விரிப்பு ஈரமாகாமல் அவன் என்னைச் சற்றே பறக்க வைத்துக் கூடுவான். 

அதுவும் ஒரு காலத்தில் இல்லாமல் போனது. 

புகார் நகரில் அவன் ஒரு ரத்தினக் கம்பள வணிகனின் மகளாகப் பிறப்பெடுத்த அப்புறம் இது நின்றது. பின்னொரு நாள் அவன் இப்படி அடுத்த பிறவி எடுத்ததைச் சொல்ல இனிப்புகளும், பழங்களும் பட்டுத்துணியுமாக அந்தப் பெண் சிசுவைக் கண்டுவரப் போனேன். 

குழந்தையின் தகப்பனான ரத்தினக் கம்பளி வர்த்தகன் நான் வந்த காரணம் கேட்டான். சொன்னேன். என்னை முதலில் உள்ளேயே அனுமதிக்க மாட்டேன் என்று கண்டிப்பு காட்டினான். ஒரு முறை ஒரே ஒரு முறை என் கணவனின் அடுத்த பிறவி  இந்தக் குழந்தை என்று இல்லை, கிழவி பெயர்த்தியைக் கண்டு வருவதுபோல் பார்த்துப் போகிறேன் என்று மன்றாடினேன். 

அவன் மனைவி எவ்வளவு செல்வந்தையாக இருந்தாலும் நான் கொண்டுபோன இனிப்பும் பழமும் துணியும் வேண்டுமென விரும்பி என்னை உள்ளே அனுப்பினாள். உள்ளே கண்கொட்டாமல் பார்த்தபடி வாயில் கையை வைத்து எச்சலாக்கியபடி குழந்தை தொட்டிலில் கிடந்தது. அது குழந்தையாகத்தான் இருந்தது. 

அவள் சொல்ல குயிலி மட்டும் சிரித்தாள். 

நான் போய்த் திரும்பி இரண்டாம் நாள் காரி என்ற என் வளர்ப்பு சுவானனும் மரித்துப் போனான். அதன் பிறகு ஆவி போகமும் இல்லை, நாயழுகையும் இல்லை என்றாள் கிழவியம்மாள். 

சரி நீங்கள் ரெண்டு பேரும் இங்கேயே இருங்க. நான் சோறும் சம்பாரமும் புளிக்குழம்பும் எடுத்துக்கொண்டு வருகிறேன் நிலவொளியிலேயே நாம் ராத்திரி உணவு கொள்வோம் என்று கீழே போனாள். வானம்பாடி நட்சத்திரங்களை எண்ணியபடியே குயிலியின் மடியில் தலை வைத்துப் படுத்தாள். கிழவி வந்துவிடுவாள் என்று குயிலி அவளை எழுந்து அமரச் செய்த முயற்சி வீணானது; 

எண்பத்தேழாவது நட்சத்திரத்தை அவள் எண்ணும்போது பாத்திரத்துக்குள் பாத்திரமாக நான்கு அடுக்குகளில் சோறும் கறியும் குழம்புமாகக் கிழவியம்மாள் வந்து சேர்ந்தாள். 

வானம்பாடி தொண்டையைச் செருமிக் கொண்டாள். நான் பிறந்த நிலத்தில் திருமாலையும் கொண்டாடுவோம், அருக தெய்வத்தையும் வழிபடுவோம், புத்தனுக்கும் விகாரை எடுத்துப் பிரார்த்திப்போம். என்ன வழிபட்டாலும் எத்தனை பெருந்தெய்வங்களும் சிறு தெய்வங்களும் இருந்தாலும் யட்சிகளின் சல்லியம் என்றால் தொந்தரவு அதிகமாக இருந்தது.  (மேலும்)

நானும் என் தமக்கையும் அவளது கணவனும் அவர்களின் இரண்டு வயதான ஆண் குழந்தையும் பக்கத்துக் கோவிலில் பூரத் திருநாள் வழிபட்டுத் திரும்ப வந்து கொண்டிருந்தோம். குழந்தை உறங்கி விட்டதால் என் தமக்கை அதைத் தன் தோளில் சுமந்தபடி வந்தாள். தமக்கை கணவனின் பார்வை எல்லாம் என்மேல் சதா இருந்தது. (மேலும்)

திருவிழா கண்டு ஆனை நடை கண்டு கூட்டத்தில் நின்று கை உரச, முலை உரச அவன் என்னோடு கலவி ஆர்வம் காட்டினான். என் தமக்கையோ ஈதொன்றும் அறியாது திருவிழாவில் வாங்கிய தேங்காய் மிட்டாயும் இடியாப்பமும் உண்டபடி குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்தாள். (மேலும்) 

எனக்கு பிறப்பு முதலே ஆவி இருப்பை உணரவும் அவற்றோடு உரையாடவும் முடியும். நாங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே அழகான கொஞ்சம் தடித்த பேரிளம்பெண் ஒருத்தி எங்களோடு சேர்ந்து நடந்தாள். வசீகரமான வியர்வை வாடை அவளிடம் அடித்தது.

(மேலும்)

அவள் என்னைப் பற்றி உணர்ந்து கொண்டு தயக்கத்தோடு என்னைப் பார்த்துச் சிரித்தாள். நீ ஊகித்தது சரிதான் நான் யட்சிதான். கொஞ்சம் விளையாடிப் போகிறேன்.. எனக்கு நர மாமிசமும் குருதியும் வேண்டாம். விளையாட்டு மட்டும் போதும் என்றபடி தமக்கை கணவரைக் கள்ளக்கண் போட்டு பார்த்தாள்.  (மேலும்)

வயிறு சரியில்லை நான் அருகில் தெரியும் குளக்கரையில் வயிறு நேராக்கிக்கொண்டு சுத்தம் செய்து வருகிறேன். நீயும் குழந்தையும் உன் தங்கையும் இந்த  சுமைதாங்கிக்கல் மேடையில் இருங்கள் வந்து விடுவேனென்று வயிற்றைத் தடவியபடி நடந்தான் தமக்கை கணவன்.

(மேலும்)

நான் ஓரக்கண்ணால் நோக்க, அவன் பின்னால் அந்தப் பெண் நடந்ததைக் கண்டேன். அவள் திரும்பி என்னைப் பார்த்துச் சிரிக்க, அவள் அச்சு அசலாக நடை உடை பாவனை குரல் சிரிப்பு என்று முழுக்க முழுக்க என்னைப் போலவே இருந்ததைக் கண்டேன். (மேலும்)

தமக்கை கணவன் வயிறு நேராக்கிக் கொண்டு வருகிறேன் என்று போனவன் வரவே இல்லை. நேரம் அரைமணி ஆனது ஒரு மணி ஆனது. நான் என் தமக்கையை அந்த மேடையில் இருக்கச் சொல்லி விட்டேன்

(மேலும்)

 குளக்கரைக்கு நடந்தேன். அங்கே வரிசையாக சமாதி மண்டபங்கள் இருந்தன. அவற்றில் கடைசிக்கு முந்தைய ஒன்றில் சமாதி மேடையில் என் தமக்கை கணவரைச் சாய்த்து நான் கலவியில் இருந்தேன்.

(மேலும்)

 அதாவது யட்சி. தமக்கை கணவர் என்னைப் பார்த்து உற்சாகமாகி ரெண்டு வானம்பாடியாகி விட்டாயே அதுவும் நல்லது தான் எனக்கு மேலும் கீழும் வந்து பரவு என்று கூவியழைத்தான். (மேலும்)

யட்சி கலகலவென்று சிரிக்க, நான் சுயநிலைக்கு வந்தேன்.. (மேலும்)

“நாலுமுறை அவனோடிருந்தேன். இன்னும் ஒன்று என்று இந்தமாதிரி நடவடிக்கைகளுக்கு என் அனுமதி வாங்கவேண்டும்” என்று விதித்திருப்பது போல் என்னைக் கேட்டாள் அந்த யட்சி. (மேலும்)

நான் தலையைத் திருப்பிக்கொண்டு வெளியே வந்து விட்டேன். அடுத்த பத்தாவது நிமிடம் அந்த யட்சி வருகிறேன் என்று சிலீரென்று அவள் கையால் என் கரத்தைப் பற்றி எடுத்து முத்தமிட்டுப் போனாள். (மேலும்)

தமக்கை கணவருக்கு ஒன்றுமாகவில்லை. நான் தான் அவரோடு கடந்த ஒரு மணி நேரம் இருந்தேன் என்று நினைப்புத்தான் அவருக்கு.  (மேலும்)

அதற்கப்புறம் தமக்கை வீட்டுக்கு நான் போக இன்னும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. 

இதை வானம்பாடி சொல்ல, கிழவி ஆ அற்புதம் என்று பாராட்டினாள். ஒரு ஆந்தை மா மரக் கிளையில் அமர்ந்து  வானம்பாடி சொன்ன கதையைக் கேட்டுக் கொண்டிருந்ததோடு அல்லாமல் உக்கும் குக்கும் என அதற்கான கதாரசனை அனுபவ நுகர்வு காட்டியது. குயிலி அதைக் கைவீசி அகன்று போகச் சொல்ல, ஆமா உலகத்திலேயே இல்லாத காம காதம்பரி. போங்கடி சரித்தான் என்று பறந்தது.  

கிழவியம்மாள் தள்ளாடி வந்ததைப் பார்த்து அவள் தேறல் பருகியிருப்பாள் என்று திடமாகக் குயிலிக்குத் தோன்றியது.  கிழவி படி இறங்கிப் போயிருந்தாள். வானம்பாடி இன்னும் மேல் படியிலேயே இருந்தாள். குயிலி அவளைக் கீழே வரச்சொல்லிக் கூப்பிட்டபடி இறங்க,   பின்னால் இருந்து அணைத்து வானம்பாடி கிசுகிசுத்தது கேட்டது. 

அடி என் குயிலி, நான் யட்சி. வானம்பாடி இல்லை.  துயில்வோம் வா. 

அவள் கண்களும் பற்களும் இருட்டில் வெளுத்துத் தெரிந்தன. யட்சிச் சிரிப்பு எழுந்தது. குயிலி நெருங்கி நடந்தாள்.

(தொடரும்)

Series Navigationபகுப்புமுறைத் திறனாய்வினடிப்படையில் குரு அரவிந்தனின் சிறுகதைகள்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *