‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

0 minutes, 2 seconds Read
This entry is part 6 of 12 in the series 14 மே 2023

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)

  1. ஆடுகளம்

அடுத்தடுத்துத் தொடர்ச்சியாய் வெற்றிகளைக் குவித்தும்

ஆட்டவீர்ர் முகத்தில் அதற்கான குதூகலமில்லை.

காரணங்கேட்டவரிடம் கூறினார்:

கோமாளிகளும் குயுக்திமூளைக்காரர்களும்

குரோதம் நிறை வஞ்சக நெஞ்சங்கொண்டோரும்

சிறுமதியாளர்களும்

செத்த உயிர் தாங்கியோரும்

சாக்கடையை சந்தனமணங்கமழ்வதாக சாதிப்போரும்

சக உயிரைப் பகடையாக்கும் சூதாடிகளும்

அபத்தப்பேச்சே அறிவுசாலித்தனமாய்க்கொள்வோரும்

அடிவாரத்தில் நின்றுகொண்டு மலைமுகடைப் பகடி செய்வோரும்

பட்டுப்பூச்சிக்கு மனிதனைப்போல் பாடவருமா என்று 

முட்டாள்தனமாய் மார்தட்டிக்கொள்வோரும்

கட்டாயம் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுவேன்

என்று துண்டுபோட்டுத் தாண்டுகிறவர்களும்

உன்னதங்களை அடையாளங்கண்டு அங்கீகரிக்க மாட்டேன் 

என்ற எழுதாச் சட்டத்தின்படியே செயல்படுகிறவர்களும்

எல்லோரையும் மட்டம்தட்டுவதையே காவியத் துணிச்சலாகக் 

கட்டங்கட்டிக் காட்டுவோரும்

வெட்கங்கெட்டிருப்பதையே விவேகமாய்க் காட்டிக்கொள்வோரும்

நட்டுகழண்டதாய் நாலும் நவின்றுகொண்டிருப்போரும்

புட்டுபுட்டு வைப்பதாய் துட்டுவாங்கித் திட்டுவோரும்

காகித சிங்கம் புலி கரடி பாம்பாய்

சர்க்கஸ் முதலாளியாய் மிருகங்களாய் 

சுற்றிக்கொண்டிருக்கும் சோப்ளாங்கிப் போட்டியாளர்களோடு

பொருதவேண்டியிருப்பது

வெற்றியின் குதூகலத்தைவிட

தோல்வியின் கையறுநிலையையே

அதிகம் உணரச்செய்கிறது…..

*

  1. ஊர்வலம்

இவர் ஆக்ராவில் இன்னும் பிரம்மாண்டமான தொரு தாஜ்மகாலைத் தன் படைப்புகளின் மூலம்

கட்டியெழுப்பும் திட்டத்தை அடுத்தடுத்த பதிவுகளில் தவணைகளில் வெளியிட்டுக்கொண்டிருந்தார்.

அவர் அண்டார்ட்டிகாவில் தன் எழுத்துக்கள் மூலம் வெய்யில் வரவழைக்க முடியுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பதாக

அத்தனை தீவிர முகபாவத்துடன் புகைப்படமொன்றைப் பதிவேற்றியிருந்தார்.

இருவரைச் சுற்றிலும் நிறைய நிறைய பேர்

தட்டத் தயாராய் கைகளை ஆயத்தநிலையில் வைத்துக் கொண்டிருந்தார்கள்.

தட்டாத கைகள் இருந்தென்ன புண்ணியம் என்று சன்னமாய்ப் 

பின்னணியிசை ஒலித்துக்கொண்டிருந்தது.

யாருமற்ற சிற்றூரின் சிறுவீட்டின் அத்துவானக்காட்டில்

இருந்த இடம் இருந்தபடி இடதுகையால் 

அருகே சிறுகோப்பையிலிருந்த வேர்க்கடலையை அவ்வப்போது வாயில் போட்டுக் கொறித்தபடி எழுதிக்கொண்டிருப்பவரின்

எழுத்துக்கள் இனிவரும் நாளொன்றில் 

ஆக்ராவையும் அண்டார்ட்டிகாவையும் இவரிருக்கு மிங்கே கொண்டுவந்து சேர்க்கும் என்பதொரு 

சிதம்பர ரகசியமாக….

Series Navigationவாய்ச்சொல் வீரர்களும் ”வாழ்க வாழ்க” வாயர்களும்திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *