திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு

author
0 minutes, 2 seconds Read
This entry is part 7 of 12 in the series 14 மே 2023

22.04.2023 அன்று கடலூரில் நடைபெற்ற திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி அவர்கள் எழுதிய அயல்வெளிப் பயணங்கள் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் இப்புத்தகம் திறனாய்வு செய்யப்பட்டது.

அரங்க.அருள்ஒளி

மனிதனின் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம். இது உலகின் அதிமுக்கியமான கண்டுபிடிப்புகளை தந்த ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு. ஆனால், புத்தகங்கள் ஒரு வாசகனுக்கு உள்ளே கண்டெடுக்கக் கூடியவைகள் ஏராளம். தனிமனிதன் வாழ்க்கையை, சமூகத்தின் வாழ்வியலை மாற்றி புரட்சியை மறுமலர்ச்சியை உருவாக்கி வரலாற்றை வடிவமைக்கும் நுட்பங்களை நூல்கள் தான் செய்கின்றன. கார்ல் மார்க்ஸ், லியோ டால்ஸ்டாய், ரூசோ, ரஸ்கின் போன்றவர்களின் நூல்களை அந்த வரிசையில் வைக்கலாம். 

இருப்பதற்காக வருகிறோம் இல்லாமலேயே போகிறோம் என்பதை உடைக்கும் வகையில் தங்களின் படைப்புகளால், காலத்தை பின்னுக்கு இழுத்து சில காலம் கட்டிப் போட்டு தங்களின் இருத்தலை நிரூபிக்கிறார்கள் படைப்பாளிகள்.

வாழ்வின் நோக்கம் மரணத்திற்கு பின்பும் இங்கு வாழ்வதே. அது அழகிய படைப்புகளால், அரிய செயல்களால் எளிதாகிறது சில மனிதர்களுக்கு.

பிரபஞ்சத்தின் பெரும் பயணத்தின்ஊடே இந்த துளி வாழ்க்கை நீர்வழிப்படும் புனை போன்றது என கணியன் பூங்குன்றன் சொல்லுவான், பிறப்பிலிருந்து மரபு மற்றும் சூழலால் பின்னப்பட்டு ஆடி முடிகிறது இந்த வாழ்க்கை. கால வெள்ளம் கரைத்தும் கரையானாய் அரித்தும் போகிற இந்த வாழ்க்கையில் படைப்பாளிகள் நின்று ஆடுகிற ஆட்ட நாயகர்களாக நிரூபணம் செய்கிறார்கள். அந்த வகையில் திருமதி.மீனாட்சி சுந்தர மூர்த்தி அவர்கள் சிறந்த கவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளினி, நிகழ்ச்சி தயாரிப்பாளர், மனிதாபிமானி, சமய சொற்பொழிவாளர், வண்ணச் சோலையின் தலைவர் என பன்முகத் தன்மை கொண்டவர். இப்பொழுது சிறந்த பயணக் கட்டுரையாளர் , எழுத்தாளர் என்கிற புகழையும் சேர்த்திருக்கின்றார். 

இந்நூலில் இவர் கற்பனை பூக்களை விற்பனைக்கு கொண்டு வரவில்லை. கண்டவற்றை கண்டவாரே நம் கருத்தில் நிறுத்துகிறார். தண்ணீர் தேசம் வெனிஸ் பற்றியும், தான் சாய்ந்ததாலேயே உலக அதிசயமாக நிமிர்ந்து நிற்கும் பைசா கோபுரத்தின் பேரழகை சொல்லுகிறார். ஆங்காங்கே நம் மனதை அள்ளுகிறார். அஹிம்சைக்கு எதிர் திசையில் ஆகாயத்தில் பறந்து அமெரிக்காவை அலற வைத்த இரட்டை கோபுர தாக்குதல் நிகழ்விடத்திலிருந்து அவர் அள்ளித் தரும் புள்ளி விவரங்கள் ஏராளம். சுதந்திர தேவி அந்தத் தீவில் நின்ற கதையை சுவைபடக் கூறும் அழகில் நிமிர்கிறது அவரின் எழுத்து நடை. பூங்காவில் அவரது கணவரை தொலைத்து மீட்ட திக் திக் நிமிடங்களை சொல்லி நம்மை வியர்க்கச் செய்யும்   இடங்கள் அருமை. 

ஐந்து பெரும் தலைப்புகளில் இப்புத்தகம் அமைந்துள்ளது. இந்த புவி ஐம்பூதங்களால் கட்டமைந்துள்ளதை நிறுவுகிறது. பனியை,  மழைத் தூறலை, ஆர்ப்பரிக்கும் அலைகடலை ,  உயர்ந்த மலைச் சிகரங்களை மட்டுமின்றி மனிதர்களின் வாழ்வியல் ஒழுங்குமுறை பலதரப்பட்ட இனங்களில் வாழ்வியல் மதிப்பீடுகள் போன்ற தரம்வாய்ந்த பதிவுகளை படிக்கும்போது சிந்தனைகள் சிறகுகட்டிக் கொள்கிறது. அந்த வகையில் தன் பயண அனுபவங்களை தொகுத்து பயன்படும் நூலாக படைத்துள்ளார். தேனீயின் பயணம் போல நமக்கு தகவல்களை சேகரித்துத் தந்துள்ளார்.

பார்க்குமிடத்தின் வரலாறு , பாரம்பரியம் , உணர்வுபூர்வமான மதிப்பீடுகள் உள்ளிட்ட கணக்கீடுகளை வழங்கும் அழகே தனி. இவர் தன் நடையில் பூக்களோடு புன்னகைத்ததைவிட வேர்களையே அதிகம் விசாரித்திருக்கிறார்.

அவர் பறந்து போனதையும், படகில் மிதந்து போனதையும் நம் மனதில் தவழ்ந்து போகச் செய்துள்ளார். மூன்று நூல்களை முடித்துள்ளார். ஆம், அகப்பாட்டு பாடி முடித்து புறப்பாட்டுப் பாட புறப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பே இந்த நூல்.

தென்றலிலே மிதந்துவரும் தேன்மல்லி வாசம் போல வருணனைகளின்ஊடே, சங்கத் தமிழ் குறிப்புகளை ஆங்காங்கே சலசலக்கச் செய்கிறார். 

மதுரையை ஆண்டவள் தன் பிள்ளைத் தமிழால் நம்மை ஆண்டிருக்கிறார்.

வார்த்தைகளில் மட்டும் வான வேடிக்கை காட்டாமல் பார்த்தவைகளை நம் நெஞ்சில் பதியம் போட்டுச் செல்லும் அழகில் இதயம் தொட்டு இமயம் தொடுகிறார்.

பயணங்களால் இந்த மனித சமூகம் கற்றதும், பெற்றதும் அதிகம் ஆதிமனிதனின் முதல் நகர்விலிருந்து அதி நவீன வேகமாய் +வேற்று கிரகத்தில் நமது பயணம்வரை நமக்கான தேடலும் விடைகளும் தொடர்கின்றன.

செகுவேராவின் சிந்தனைகளை பயணக்கட்டுரைகள் அவரின் புரட்சிகர சிந்தனைகள் நம்முன்னே விதைக்கின்றன. மார்க்கோபோலோ, யுவான்சுவாங், பாகியான் போன்றவர்களின் குறிப்புகள் உலக வரலாற்றை நமக்கு வழங்கிடச் செல்கின்றன.

தமிழில் உ.வே.சா அவர்களின் தேடல் விலை மதிப்பற்ற இலக்கியச் செல்வங்களை நமக்கு அளித்தது.

தமிழில் பயணக் கட்டுரை எழுதிய மணியன், லேனா தமிழ்வாணன் போன்றவர்களை விட மீனாட்சி சுந்தரமூர்த்தி தனக்கென தனி நடையால் பாராட்டுப் பெறுகிறார்.

“ஹாலோவின் டே” என்ற பேய்கள் திருவிழாவில் ஆரம்பமாகும் இந்த நூலின் பக்கங்கள் பல தேடலுக்குப் பின் அவருக்குப் பிடித்த பெருமாள் சன்னதியில் நின்று பேசுவதாக முடிவடைவது வாழ்க்கையின் சரணாகதித் தத்துவத்தை உணர்த்துவதாக அமைகிறது.

சென்னை, நிவேதா பதிப்பகம் தயாரித்து விஷ்வா பிரிண்டர்ஸ் அச்சாக்கம் செய்த இப்புத்தகம் 144 பக்கங்களைக் கொண்டது. அட்டைப் படங்களில் அழகியல் மிளிர்வது அருமை. ரூ.150/- விலையில் கிடைக்கும் இப்புத்தகம் விலை மதிப்பற்ற பயண அனுபவத்தை நமக்குத் தரும் என்பது திண்ணம். 

Series Navigation‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்நிழலின் இரசிகை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *