ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறுகிய காலத்திற்கு சமத்துவம் பேணுபவர்கள் மறவாமல் அதைக் காணொளிக்காட்சிகளாக்கிப் பகிரத் தவறுவதேயில்லை.
உறைந்தும் ஊர்ந்தும் அந்தக் காட்சிகள் அவரை சமத்துவசாலியாகவும்
சாட்சாத் சமூகப்பிரக்ஞையாளர்களாகவும்
காலத்திற்குமாகக் காட்டிக்கொண்டேயிருக்க
அண்ணாந்து பார்க்கவைக்கும் அவர்களுடைய மாடமாளிகைகளும்
கூடகோபுரங்களும்
அதிகரித்துக்கொண்டேபோகின்றன.
அதனாலென்ன ? ஒருதரப்பு அன்னாடங்காய்ச்சிகளை
இன்னொரு தரப்பு அன்னாடங்காய்ச்சிகளுக்கெதிராகத் திருப்பிவிட்டால் பின்
பரபரப்பாய்த் தங்களுக்குள் அடித்துக்கொள்வார்களேயல்லாது
பதுக்கியிருக்கும் கருப்புப்பணத்தின் பக்கம் கவனம் திரும்பாது.
அடிப்பதற்கு
ஆக்ரோஷமாக முழங்குவதற்கு
அசிங்கசிங்கமாகத் திட்டுவதற்கு
அப்பிராணிகள் சிலபலரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்
அவர்கள்
ஆயிரங்காலத்திற்கு முன்னான புராண நாயகநாயகியராயிருந்தால்
இன்னும் நல்லது.
அவர்கள் பேசாத வார்த்தைகளையெல்லாம் பொருள்பெயர்த்துச்சொல்ல வசதியாயிருக்கும்.
அவர்களைக் கடித்துக்குதறி காலால் எட்டியுதைத்து
காறித்துப்பித்துப்பி நம்மை நலிந்தவர் நாயகர்களாகக் காட்டிக்கொள்வது சுலபம்.
வாயற்றவர்களின் வாயாக நம்மை நிலைநாட்டிக்கொண்டுவிட்டால் பின்
வக்கிரமாக விஷமத்தனமாக வண்டைவண்டையாக
என்னவேண்டுமானாலும் பேசலாம்.
அலையலையாய் அழைப்பு வரும்
நிலையாய் பேர் புகழ் காசு புழங்கும்
உலைபொங்கமுடியாமல் அழுதுகொண்டிருப்போருக்கான
உங்கள் முழக்கத்திற்குக் காத்திருக்கும்
உள்நாட்டு வெளிநாட்டு அரங்குகள்.
சிரங்கும் சொறியும் சேத்துப்புண்ணும் சீதபேதியும்
நிரந்தரமாகிவிட்ட மக்கட்பிரிவினருக்காகப் பேசிப்பேசியே
விருந்துகளில் குறைந்தபட்சம்அறுபது உணவுவகைகளை
இருபது உணவுமேடைகளில் ருசித்துச் சாப்பிடலாம்.
கைகழுவப் போகும் வழுவழு வாஷ்பேஸினின் மேற்புறம்
பிரம்மாண்ட ஓவியத்தில் யாருடைய கண்களேனும் நெருப்பைக் கக்கிக்கொண்டிருக்கட்டும்.
அல்லது, குறைந்தபட்சம் கருத்தைக் கவரும் முத்திரை வாசகம் ஒன்று
தீப்பொறிகள் பறக்கத் தரப்பட்டிருக்கட்டும்.
காகிதத்தீ கருக்கிவிடாது எதையும் என்ற அரிச்சுவடியை
அறிந்துவைத்திருந்தால் போதும்.
ஆம், அதுவே போதும்.
*
- 80,000 புத்தகங்கள் கொண்ட தியாகு வாடகை நூலகம்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 294 ஆம் இதழ்
- அம்மாவின் செல்லம்
- அடையாளம்
- வாய்ச்சொல் வீரர்களும் ”வாழ்க வாழ்க” வாயர்களும்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு
- நிழலின் இரசிகை
- காற்றுவெளி வைகாசி இதழ்
- இடைவெளி
- பகுப்புமுறைத் திறனாய்வினடிப்படையில் குரு அரவிந்தனின் சிறுகதைகள்
- நாவல் தினை அத்தியாயம் பதினான்கு CE 300 பொது யுகம் 300