This entry is part 6 of 9 in the series 8 மார்ச் 2026

       –இரா.ஜெயானந்தன்

வெக்காளி அம்மன் கோயில் தெருவில், “நூறுகுடம்”,வீடு என்றால் என் வகுப்பு நண்பர்களுக்கு தெரியும். என்றும் வகுப்புக்கு தாமதமாக வருபவன் நூறுகுடம். வீட்டுப்பாடம் முடிக்காமல் இரண்டு பிரம்படி வாங்குபவன் நூறுகுடம்.

கண்ணில் நீர் வராமல் தாங்கிக்கொள்பவன் நூறுகுடம்சுந்தரம். . எங்கள் வகுப்பில் சிலரின் பட்டப்பெயர்களை சொன்னால்தான் தெரியும்.

நூறுகுடம் சுந்தரம் படிப்பில் ஆர்வம் காட்டுவான். பரீட்சைகளில் நல்ல மார்க் எடுப்பான். ஆனால் அவன் முகத்தில் எப்போதும் ஒரு சோகம் ஓடும். விளையாடும் நேரங்களில் தனியே உட்கார்ந்து எதையோ யோசித்து கொண்டிருப்பான். என்னிடம் கொஞ்சம் நெருக்கம் அதிகம். ஆனாலும், மனதில் ஏதோ ஒன்று நெல்லிக்காய் போல் உருளுவதை சொல்ல மாட்டான். 

நானும் அவனை தொந்தரவு செய்வதில்லை.

நெட்டை, கோணப்பல், வெல்லம் நாராயணன், புளியம்பழம் கோலப்பன், நாமம் நரசிம்மன், கோலிகுண்டு நாகப்பன், கபடி கந்தசாமி, கட்டுகுடுமி,தேன்மிட்டாய்…இப்படி பலப்பல நண்பர்கள். 

சினிமா பாட்டு புத்தகம் வாங்கும் கஜாவை பார்த்தால் எல்லோருக்கும

 பயம். நெட்டையாக கர்லா கட்டை உடம்பு. ஒவ்வொரு குத்தும் இடிமாதிரி விழும். அவன் காப்பி அடிக்க, பக்கத்தல உள்ளவன் கண்டுக்க மாட்டான். வரும்போகும் பெண்களை கண் கொட்டாமல் பார்ப்பான். 

 பக்கத்து வகுப்பு ரெட்டை ஜடை வனஜா பேரழகி. எங்க வகுப்பு 

சுமாரான மூஞ்சி சியாமளா. கடலை பர்பிக்கடை தேவிகாவை எல்லோருக்கும் பிடிக்கும். அடிக்கடி ஓசி கடலை மிட்டாய் கிடைக்கும். 

குயில் ராதிகா. நன்றாக பாடுவாள். 

பிரேயரில் அவள் குரல் தனியாக தெரியும். எல்லோரும் அவளையே பார்ப்போம். அவள் குரலையா அல்லது அவளையா என யாருக்கும் தெரியாது. மனம் அலைபோல் அலைவது அந்த வயதின் மனப்போராட்டங்கள்தான். 

நாங்கள் எல்லாம் ஒன்றாகத்தான் சேர்ந்து படித்தோம். கொஞ்சம் இளமை குறும்புகளும் உண்டு. இனம் தெரியாத பரவசம் உதட்டின் மேல் அரும்பும். உடலில் மின்சாரமாக  காதல் அலை பாயும் நேரங்களும் உண்டு. சமூக கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் அமுக்கின. 

ஆனால் பதினாறு வயது தனித்துவமானதான். உடலுக்குள் ராசாயண சுரங்கம் சுரந்துக்கொண்டே இருக்கும். 

மறக்க முடியாத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. . தீடீரென ஒருநாள், பள்ளி தலைமை ஆசிரியர் அறைக்கு முன்னால் போலீஸ் ஜீப் நின்றது. 

பனிரெண்டாம் வகுப்பு 

 ‘சி’ பிரிவு, வாலிபால் பாபுவை 

போலீஸ் ஏற்றிச்சென்றது. 

அடுத்த நாளிலிருந்து அதே வகுப்பு வத்சலாவை காணவில்லை.

ஏதேதோ காதல் கட்டுக்கதைகளை பேசிக்கொண்டு திரிந்தோம். ஒருநாள் வத்சலாவின் பெற்றோர்கள், அவளது டிசியை வாங்கி சென்றுவிட்டனர். இரண்டே மாதங்களில், வலங்கைமானில் வாழ்க்கை நடத்த போய்விட்டாள் வத்சலா. 

 காலங்கள் உருண்டோடி விட்டன. 

கல்லூரி படிப்பு முடித்து, வேலைக்கு குட்டிக்கரணம் போட்டுக்கொண்டிருந்தோம்.எங்களில் சிலர் ,சென்னைக்கு பேங்க் பரீட்சை டிரயினிங் சென்டருக்கு சென்று படித்தனர். நாங்கள் திருச்சி மலைக்கோட்டைக்கும், ஸ்ரீரங்கத்துக்கான இடைவெளிகளில் அலைந்துக்கொண்டிருந்தோம். 

வாழ்க்கையில் மிகவும் சோர்வான பகுதி இதுதான். நாளை என்ன செய்ய போகின்றோம் என தெரியாமல் நாள்களை கடத்துவது, பெருந்துயரமாக நகர்ந்தது. நூறுகுடம் சுந்தரத்தின் தொடர்பும் அறுந்த போயின. 

அன்று வங்கியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. எங்கள் கம்பெனிக்காக வங்கி சில தனி சலுகைகள் கொடுத்திருந்தார்கள். 

டிராப்ட் எடுப்பதற்கும், பெரிய தொகை பணம் கட்டுவதற்கும்,எடுப்பதற்கும் துரிதசேவை எங்கள் கம்பெனிக்கு 

 உண்டு. எங்கள் கம்பெனியின் வளர்ச்சியில், வங்கிகளின் பங்கும் ஒத்துழைத்தது. ஐந்துஸ்டார் கம்பெனிகளில் எங்கள் கம்பெனி பெயரும் லிஸ்டில் வரும். 

அன்று அவசரமாக ஒரு பெரிய தொகை தேவை. கவுண்டரில் புது காசாளர். முகம் தெரியாத காரணத்தால்  மேனஜரை பார்க்க சொன்னார்கள். டெஸ்பாட்ச் கிருஷ்ணமூர்த்தியை பார்த்தேன். 

புது மானேஜர் வந்திருக்கார் என சொன்னார் கிருஷ்ண மூர்த்தி.

மானேஜர் ரூம் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தேன். 

ஆச்சர்யம், ஆனந்தம். 

புது மானேஜர் நாற்காலியில் எங்கள் நூறுகுடம் சுந்தரம் அமர்ந்திருந்தா(ன்)ர்.

என்னை பார்த்ததும், 

நூறுகுடம் சுந்தரமும் அசந்துவிட்டான்.

“வாடா சரபோஜி “, என்று

 நூறுகுடம்  பழைய தோழமையுடன் அழைத்தான்.   சில நிமிடங்கள் பள்ளி பருவத்து வயலின் வாசித்துவிட்டு, விஷயத்திற்கு வந்தேன். வங்கயில்

 கூட்டம் அலைமோதியது.மானேஜரை பார்க்க பலர் வெளியே காத்திருந்தனர். 

சுந்தரத்தின் முகத்தில் அந்த பழைய சோகம் தென்படவில்லை.

அந்த வாரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை சிவகங்கை பூங்காவில்,நாங்கள் சந்திப்பதாக முடிவு செய்தோம். 

பூங்காவில் கூட்டம் அதிகமாக இல்லை. பிள்ளைகளுக்கு பரீட்சை நேரம். மினி ரயிலும் ஓடவில்லை. 

சென்னை வானொலி நிலைய வித்வான்களின் வீணை இசைத்துக்கொண்டிருந்தது. எங்கோ சில காதல் ஜோடிகள், மறைவான பகுதிகளில் கதைத்துக்கொண்டிருந்தனர்.சுந்தரத்தின் கண்கள் அந்த காதல் ஜோடிகளை பார்க்க தவறவில்லை. 

ஏதோ ஒரு ஏக்கம் அவன் கண்களில் தேங்கி நின்றன.சட்டென முகத்தை திருப்பி என்னை பார்த்தான். நான் வானத்தை பார்த்தேன். சுந்தரம் மனதை யாரோ பிசைந்தார்கள். 

புதாற்றில்  நீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. செடிகளுக்கு தண்ணீர் பாய்த்துக்கொண்டிருந்தார் தோட்டக்காரர். 

புல்வெளிக்கு, சுழல் நீர் சுற்றிச்சுற்றி அடித்தது. வண்ணவிளக்கின் வெளிச்சம் ரம்மியமாக விழுந்தது. 

வயதானவர்கள் ஆங்காங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். சிலர் தூங்கிக்கொண்டும் இருந்தனர். 

நான்தான் பேச்சை ஆரம்பித்தேன். 

ம்..அப்பறம்..சொல்லு சுந்தரம். 

என்னடா உனக்கு கல்யாணம் என அவனும் ஆரம்பித்தான்.

ஆச்சு…மனைவியும் இரண்டு குழந்தைகள்…என்றேன். 

மூத்தவன் ஐந்தாம் வகுப்பு, மகள் மூன்றாம் வகுப்பில் படிக்கின்றனர்.

லேட்டாகத்தான் கல்யாணம். வேலையை தேடவே வருடங்கள் சென்றது, வயதையும் தின்றது என்றேன். 

சுந்தரம் கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தான். மீண்டும் அவனது முகத்தில் பழைய சோகம் படர்ந்ததை பார்த்தேன். 

நான் கல்யாணம் செய்து கொள்ளவில்லை, சரபோஜி என்றான் சுந்தரம். 

ஏன்?

“என்னுடைய குடும்ப சூழ்நிலை. 

என்னுடைய தந்தை எனக்கு பத்து வயதிருக்கும் போது, பொன்மலை ரயில்விபத்தில்  மரணமடைந்தார். அப்போது நாங்கள் கரந்தையில் குடியிருந்தோம். நான்தான் மூத்தவன். எனக்கு கீழே, இரண்டு தங்கைகள். குடும்பத்தின் முழு பாரத்தையும் அம்மா சுமந்தாள்.  வீட்டுவேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை. 

அம்மாவின் தம்பி, அதாவது என்னுடைய திருச்சி மாமா வீட்டில்தான் நான் வளர்ந்தேன். தூரத்து உறவில் அத்தை. அவர்களுக்கே மூன்று குழந்தைகள். கூடவே நானும் சேர்ந்ததில், அத்தைக்கு விருப்பமில்லை. வேண்டா வெறுப்பாக அங்கு ஒரு வேண்டாத செடியாக வளர்ந்துக்கொண்டிருந்தேன். அத்தைக்கு இதயநோய் என மாமா மறைமுகமாக என்னிடம் சொன்னார்  

ஆனாலும் அத்தை சுறுசுறுப்பாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தார். 

பேசிக்கொண்டிருக்கும் போதே, பெரிய கோயிலில்,  மாலை பூஜைக்காக, காண்டா மணியடித்தது. பறவைகள் கூட்டம்கூட்டமாக, பூங்காவின் தூங்குமூஞ்சி மரங்களில், அதனதன் கூடுகளில் வந்து சேர்ந்தன. கூடுகளில்,குஞ்சிகளின் கும்மாள கூச்சல் ரம்மியமாக இருந்தது. காலையின் கூச்சல் வேறுமாதிரி இருக்கும். தாய் பறவை இரைக்காக விட்டு செல்லும் நேரம், குஞ்சுகளுக்கு பயத்தை நிரப்பும். 

சுந்தரம் அண்ணாந்து கூடுகளை பார்த்தான். அவன் கண்களின் ஓரத்தில் நீர்   கோர்த்துக்கொண்டிருந்தது. உள்ளங்கையால் துடைத்துவிட்டு, பெருமூச்சு வாங்கினான். 

மீண்டும் தொடர்ந்தான். 

“காலையிலும், மாலையிலும் அத்தையின் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தரவேண்டும். காய்கறி வாங்கி வரவேண்டும். சில நேரங்களில்,வீட்டுப்பாத்திரங்கள் கழுவிப்போட வேண்டும். 

இதைவிட பெரிய வேலை, காலையில் ஐம்பதுக்குடம்,மாலையில் ஐம்பதுக்குடம் கிணற்று நீரை இரைத்து, தொட்டியில் நிரப்ப வேண்டும். தினமும் நான் கிணற்று முற்றத்தில், நான் செய்யும் வேலைகளை நம்ம ஸ்கூல் பக்கத்து வகுப்பு ரகுராமன் பார்த்துக்கொண்டிருப்பான். அவன்தான் முதன்முதலில் “நூறுகுடம் ” என என்னை அழைத்தான். அதுவே பள்ளியில் என் பட்டப்பெயர் ஆனது. இந்த வீட்டு வேலைகளை எல்லாம் முடித்த பிறகுதான், நானே படிக்க வேண்டும். இதுதான் என் அத்தையின் கட்டளை. 

அதனால்தான் என்னுடைய விட்டுப் பாடங்களை முடிக்க முடியாமல் திணறினேன் என்று சுந்தரம் சொல்லி முடிக்கும் போது என் கண்களில் குளம்கட்டி நின்றது சோகம். அவனை இறுகத்தழுவினேன். தோளை தட்டிக்கொடுத்தேன். இத்தனை சோகத்தையும் தாங்கிக் தாங்கிக்கொண்டு படித்து முன்னேறி 

அவன் வெளியே வர எத்தனை இடர்பாடுகளை சந்திருப்பான் என எண்ணினேன்.

“ம்..சரி. ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை சுந்தரம்”.

“நான் படித்துமுடித்து வெளியே வந்து, பேங்க் நுழைவுதேர்வு எழுதினேன். வேலையும் கிடைத்தது. எனக்கு அடுத்ததாக பிறந்த இரண்டு தங்கைகளின் படிப்பு, கல்யாணம் இப்படியாக காலம் சென்றது. தீடீரென அத்தையும் காலமாகி விட்டார்கள். மாமாவும் எங்க வீட்டுக்கே வந்துவிட்டார் மூன்று குழந்தைகளுடன். பிறகு அவர்களின் படிப்பு, திருமணம் என்றாகி, காலம் கற்பூரமாக கரைந்துபோனது”,  என்றான் சுந்தரம். 

 அவனின் பின் தலையில் நரை வெளியே தெரிந்தது. நானோ” டை”,  அடித்துக்கொண்டு காலத்தை ஏமாற்றுகின்றேன். 

பார்க் வாட்சமேன்  ,  நேரமாகிவிட்டது என சொல்லிக்கொண்டே வந்தார். மரங்களில் பறவைகளின் குலாவுகள் அடங்கி, நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தன. வாசனை தடவிய உடல்கள், பூங்காவை விட்டு மெல்ல நழுவின.கடந்து சென்ற பெண் உடல் வாசத்தை, சுந்தரம் முகர்ந்துக்கொண்டு பெருமூச்சு விட்டதை கவனித்தேன். இப்படிப்பட்ட பெருமூச்சுகளின்தான், சுந்தரத்தின் தனிமை கழிந்தது. 

நாங்கள் ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு மேலவீதி, பிரகாஷ் பவனில் நுழைந்தோம். 

அவனை ஒருமுறைகூட “நூறுகுடம்” என அழைக்க மனம் வரவில்லை. 

Series Navigationமழை புராணம் – 22தி. ஜானகிராமன் – ஜெயகாந்தன்