This entry is part 5 of 9 in the series 12 ஜூலை 2026


ஆர். சீனிவாசன்

‘தர்ட்டி ஃபார்ட்டி, சூர்யா முழுகுவா முகா சார்’ என்றார் தரகர் அந்த நிலத்துண்டைக் காட்டி. சில மாதங்களாக பெங்களூரில் நிலத்துண்டைத் தேடி அலையும் எனக்கு இத்தகைய சொற்கள் பழகிப்போயிருந்தன.

‘அக்ரீமெண்ட் ஹோல்டர், பிளாட் மேலே லோன் ஏதாவது?’ என்றேன்.

‘ஏனு இல்லா சார், டைரக்ட் ஓனர் மீட்டிங் கொடுக்கறேன்’ என்றார். சில மணித்துளிகள் கழித்து,

‘பிளாக்கு வைட்டு?’ என்றேன்.

‘கைடன்ஸ் வால்யூ மாத்ரா வைட் கொடுங்க சார், மிச்சம் பிளாக்கு. இலைன்னாகூட உங்கோ இஷ்டப்படி பேசலாம்’ என்றார் தரகர். பரந்த பெங்களூரில் என் பெயர் சொல்ல ஒரு சிறு மூலை வேண்டுமென பல வருடங்களாக யோசித்து தற்போதுதான் தீவிர தேடலில் இறங்கியிருக்கிறேன். பெங்களூரின் மத்தியில் உள்ள பழமையான பகுதிகளான மல்லேஸ்வரம், ராஜாஜிநகர், விஜயநகர போன்றவற்றில் என் பட்ஜெட்டிற்கு ஊசி நாட்டக்கூட இடம் கிடைக்காது என்பதை அறிந்து ஊருக்கு ஒதுக்காகத் தேடிக்கொண்டிருக்கிறேன். விரலுக்கு ஏத்த வீக்கம் தான்.

‘அந்த பக்கம் டூ கிலோமீட்டர்ஸ் போனா ஹெசருகட்டா மெயின் ரோடு மெட்ரோ கிடைக்கும், கடைங்கோ, ஹாஸ்பிட்டல் எல்லா இருக்கு. இதை பாருங்க டொண்ட்டி ஃபீட் ரோடு, காவேரி, BWSSB கனெக்ஷன் எல்லா இருக்கு’ என்றார் தரகர் கன்னடம் கலந்த தமிழில். எனக்கு கன்னடம் பேச வரும் என்பதை பல முறை சொல்லியும் விடாமல், என்னை கவருவதற்காக இதைப்போல மொழி வன்முறையில் இறங்கிவிட்டார். அதைவிட எனக்குத் தூரத்தை யூகிக்க முடியாது என நினைத்திருப்பார் போல. ஹெசருகட்டா முக்கிய சாலையிலிருந்து சுமார் அரை மணிநேரம் எண்பது கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த பிறகே இந்த இடத்தை அடைய முடிந்தது.

‘ஏ காதாவா?’ என்றேன்.

‘இல்லா சார், பி ஆகி, ஈ ஆகிதே’ என்றார். பெங்களூரில் சொத்துவரி பிரிவுகள் ஏ, பி என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டு, ஏ பிரிவில் இருக்கும் நிலத்துண்டுகளுக்கு அதிக மவுசு இருந்து வருகிறது. பெங்களூரு மென்பொருள் நகரம் என காட்டிக்கொள்வதற்கு காகித சொத்துரிமை சான்றுதழ்களை எலக்ட்ரானிக் முறையில் மாற்றிவிட்டார்கள்.

‘ராஜ கால்வே இங்க எங்கையாவது ஓடுதா?’ என்றேன்.

‘இல்லா சார். க்ளீன் டாகுமெண்ட்’ என்றார் தரகர்.

சில மணித்துளிகள் அந்த நிலத்துண்டை பார்த்துக்கொண்டே இருந்தேன். முட்செடிகள், புதர்கள் நிறைந்த, ஆயிரத்தி இருநூறு சதுர அடி.

‘நிமகே இஷ்ட இல்லேன்னா, இணூன்னு ஏ காதா சைட்டு பக்கத்துலேயே இருக்கு. தோர்சலா?’ என்றார்.

‘சரி, பன்னி நோடோனா’ என்றேன் கன்னடத்தில். அத்துடன் அவர் தமிழ் பாசாங்கு நின்றுவிடும் என்ற என் எதிர்பார்ப்பை நிராசை படுத்தும் விதமாய் காரில் சிறிது தூரம் சென்றவுடன்,

‘இன்னும் கொஞ்ச தூரம் போனா ஒரு ஆலத மரா கிடைக்கும், அதுல லெஃப்ட்டு’ என்றார்.

இந்த நிலத்துண்டை பார்க்க வரும்போதே அந்த மரத்தைக் கடந்துதான் வந்தேன். கடந்த ஆறு மாதங்களாக இத்தகைய மரங்களை நிறைய பார்த்துவிட்டேன். ஒரு காலத்தில் கிராமங்களாக இருந்தபோது பொதுக்கூட்டத்திற்காக இருந்தவை இந்த மரங்கள். நகரம் வளர வளர, விளைநிலங்களை விற்றுவிட்டு நகரத்திற்குள் பெரிய வீடுகளில் புகுந்துவிட்டனர் விவசாயிகள். ஒவ்வொரு முறை நான் நிலம் தேடிச் செல்லும்போதெல்லாம் இத்தகைய பெரிய விரிந்த மரங்களைப் பார்ப்பதுண்டு. மின் கம்பியில் கிளைகள் உரசுவதால் ஏற்படும் மின் தடங்களைத் தவிர்க்க, சாலையோர மரங்களை வேரோடு பிடுங்கி எறியத் தயங்காத நகரசபை யாரோ செய்த புண்ணியத்தால் ஆலமரங்களை மட்டும் விட்டுவிட்டது.

சென்னையைப்போல பெங்களூரிலும் பகுதி பெயர்களிலிருந்து அப்பகுதியின் வரலாறு ஓர் அளவிற்குப் புரியவரும். ராஜாஜிநகர், யஸ்வந்த்புரா, ரபீந்திரநாத் தாகூர் நகர் போன்ற பெருந்தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதிகளை தாண்டி, திகளறுபாளையா, பட்டரஹள்ளி போன்ற பெயர்களில் அரசன் ஆண்ட காலங்களில் அங்கு வாழ்ந்த சமூகத்தினரை கண்டுகொள்ள முடியும். பனஷங்கரி, எலஹங்கா (எல்லம்மா தேவி) போன்ற பெயர்கள் அப்பகுதியில் குடிகொண்டுள்ள முக்கிய தெய்வங்களை குறிக்கும். இன்னும் ஆராய்ந்தால் ராஜன்குண்டே (அரசனின் குளம்), நாகரபாவி (பாம்புகள் நிறைந்த கிணறு) போன்ற பெயர்களில் உள்ளடங்கிய அர்த்தங்கள் புரியவரும். ஆனால் எனக்கு பிடித்தமான ஓர் அம்சம், பைலாகெரே (பைலா கெரே – விளாம்பழ ஏரி), ஹொன்னேனஹள்ளி (புங்கைமரம் – ஹொன்னேமரா) போன்ற பெயர்கள் அங்கு நிறைந்திருந்த மரங்களின் பெயராலேயே அழைக்கப்படும் வழக்கமே. ஆனால் இப்போது அந்த மரங்கள் அந்தப் பகுதியில் காணப்படுவதில்லை.

நகரின் ஜெட் வேக வளர்ச்சியில் மரங்களோடு சேர்ந்து பல நினைவிடங்கள் காணாமல்போய்விட்டன. ஒருகாலத்தில் மைசூரு மஹாராஜா பெங்களூரில் எழுபத்திற்கும் மேலாக ஏரிகளை அமைத்து அதனை இணைக்க ராஜ கால்வாய் கட்டியதாகச் சொல்லி பழைய வரைபடத்தைக் காட்டி, சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பி அதன் மூலம் பணம் பார்ப்பதில் காட்டும் ஆர்வத்தை, எஞ்சி இருக்கும் ஏரிகளைத் தூர்வாரி அதன் விளிம்பில் (அல்லது நடுவில்) கட்டப்பட்டிருக்கும் மனைகளை அகற்ற பெங்களூரு நகரசபை அதிக நாட்டம் காட்டுவதில்லை.

‘சார் ஸ்டாப், இதே சைட்டு’ என்றார் தரகர் வலதுபுறம் கைகாட்டி.

ஆலமரத்தின் வலதுபுறம் முப்பதிற்கு நாற்பதடி என்ற விகிதத்தில் நடுகற்கள் நாட்டப்பட்ட பல நிலத்துண்டுகள் இருந்தன. காரிலிருந்து இறங்கி அந்தப் பகுதியைச் சுற்றிப் பார்த்தேன்.

‘காவேரி கனெக்ஷன் இன்னா மூணு மாசத்துல வரத்தே. எல்லா சைட்டும் ஈஸ்ட் ஃபேசிங், நார்த் ஃபேசிங். சவுத் ஃபேசிங் நீங்க ஃப்ரிஃபர் பண்ண மாட்டீங்க இல்ல?’ என்றார். கன்னடிகர்கள் பொதுவாகத் தெற்குமுக மனைகளை விரும்ப மாட்டார்கள் என அறிந்தவருக்கு, தமிழர்களுக்குத் தெற்குத் திசையின் மேல் அத்தகைய வெறுப்பு எதுவும் கிடையாது என்பதை அவருக்குச் சொல்லி புரியவைப்பது முட்டாள்தனம் போல தோன்றியது.

‘ஓகே. சரியாத்தான் இருக்கு, ஆனா பக்கத்துல வீடு எதுவும் இல்லையே சார்’ என்றேன்.

‘சார் நீங்கோ பாருங்கோ, இன்னும் அஞ்சு வருசத்துல உங்க இன்வெஸ்ட்மென்ட் டபுள் ஆயிடும்’ என்றார் தரகர். நான் முதலீட்டிற்காக அல்லாமல் வீடு கட்டி வாழ நிலம் தேடுகிறேன் என்று ஏற்கனவே சொன்னதை மறந்துவிட்டார் போலத் தோன்றியது. சுற்றையும் ஒரு முறை பார்த்தேன். அந்தப் பிரிவினையைத் தாண்டி ஓரிரு இடங்களில் வீடுகள் வரத் தொடங்கியிருந்தன. மீண்டும் என் பார்வை அந்த ஆலமரத்தை நோக்கியது. அந்த நிலம் முழுவதும் நிலத்துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு நடுகல் நட்டும், அந்த ஆலமரத்தின் பக்கவாட்டில் மட்டும் ஒரு சிறிய துண்டு அளக்கப்படாமல் இருந்தது. அந்த ஒரு சிறு துண்டை மட்டும் பார்த்துக்கொண்டே இருந்தேன். திடீரென பக்கத்தில் நின்று கொண்டிருந்த தரகரின் கைபேசி அடித்தது. அவர் அதை எடுத்து இன்னொருவருடன் கன்னடத்தில் பேசத் தொடங்கினார்.

“ஆமாப்பா, இங்கதான் இருக்கோம், சீக்கிரம் வா.. பார்ட்டி என்னோடுதான் இருக்காரு’ என்றார்.

அந்த ஆலமரத்தைப் பார்க்க ஏனோ மனம் தவித்தது. விரிந்து ஓங்கிய மரம். விழுதுகள் விடத் தொடங்கியிருந்தது. சுற்றிலும் கான்க்ரீட் மேடை அமைக்கப்பட்டிருந்தது. மெதுவாக மரத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே சுற்றிவரத் தொடங்கினேன். அரை வட்டம் முடிந்தபோது அந்த மேடையின் பின்புறம் ஒரு பெரியவர் உட்கார்ந்திருப்பதை கண்டு திடுக்கிட்டேன். காக்கி நிற அரை நிஜார், வெள்ளை சட்டையின் வலப்புறத் தோளில் சிறு துண்டு. எண்பதை தாண்டிய வயது. கரு முகத்தில் வெளீரெனத் தலைமுடி. இவரைப்போன்ற மனிதர்களைப் பல முறை இதற்கு முன்னும் பார்த்திருக்கிறேன். டிராக்டர் வண்டியில் விவசாயப் போராட்டத்தில் பாலஸ் மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் இந்த பெரியவரைப் போல நிறைய பேர் வருவார்கள். விவசாயப் போராட்டம் என்ற பெயரில் முக்கியச் சாலைகளை வழிமறிக்கும்போதெல்லாம் வெகுநேரம் வாகன நெரிசல் ஏற்படும். அப்போது வாய்க்கு வந்தபடி இவர்களைத் திட்டி இருக்கிறேன்.

என்னுடன் வந்த தரகர் பேசுவதை நிறுத்திவிட்டு என் அருகே வந்தார். பெரியவரைப் பார்த்ததும் திடுக்கிட்டு நின்றார். சில மணித்துளிகள் மூவரும் பேசாமல் நின்றோம்.

மிகுந்த தயக்கத்துடன் ‘சார் நமஸ்காரா’ என்றார் தரகர் அந்தப் பெரியவரைப் பார்த்து. அப்போதுதான் எனக்குப் புரிந்தது, தரகருக்கு அந்தப் பெரியவரை ஏற்கனவே தெரியும் என்று. பெரியவர் மெதுவாகத் திரும்பித் தலையை மட்டும் அசைத்தார்.

‘ஈ ஜமீனு அவருதே’ என்றார் என்னிடம் மெலிந்த குரலில். அதை கேட்டதும் நானும் அவருக்கு,

‘நமஸ்காரா சார்’ என்றேன் தயக்கத்துடன்.

பெரியவர் மெதுவாக மேடையிலிருந்து இறங்கி எங்களை நோக்கி வந்தார். எங்களை கடந்து அந்தப் பிரிவினையை நோக்கி ஓர் இரண்டு அடி எடுத்துவிட்டு எதுவும் பேசாமல் நின்றார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, என்னிடம் கன்னடத்தில்,

‘நீங்க நிலத்தைப் பாருங்க. ஒரு காலத்துல நாங்க இங்கே ராகி, நிலக்கடலை எல்லாம் விளச்சோம். ஆனா கடந்த பத்து வருஷமா எதுவும் விளைக்கல. பசங்க எல்லாரும் பங்கு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களே லோக்கல் அரசியவாதியோட சேர்ந்து இந்த நிலத்தை விவசாயத்திலிருந்து வீட்டு நிலமா மாத்திட்டாங்க. ‘சரி செய்யுங்கடா’ ன்னுட்டேன். இங்க இந்த ஆருக்கு நாலு நிலத்தை பாத்தீங்களா, அத மட்டும் எனக்கு விட்டுட்டு மிச்சத்த எடுத்துக்கொங்கடான்னுட்டேன். என்ன புதைக்க அது போதும்” என்று மிக மெலிதாகச் சிரித்தார். என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகச் சோகமான சிரிப்பு அதுதான்.

Series Navigationதுணைபறத்தலின் நிச்சலனம்