‘ வான்புகழ் வள்ளுவர் ‘ ஆவணப்படத்தின் முதல் திரையிடல் இந்த மாதம் 4ஆம் தேதியன்று நியு ஜெர்சியில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை( FetNa) நடத்திய விழாவில் சிறப்பாக நடைபெற்றது. முக்கிய விருந்தினராகப் பங்கேற்ற தமிழக அரசின் கல்வி அமைச்சர் திரு.ராஜ் மோகன் அதை வெளியிட்டுத் தலைமை உரையாற்றினார்.
எக்காலத்தவர்க்கும் ஏற்புடையதான கருத்துகளை கவித்துவ நடையில் வெளிப்படுத்தும் அறிவுப் பெட்டகமான திருக்குறளின் மாண்பினை இன்றைய இளைய தலைமுறைக்கு உணர்த்தும் வகையில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரிவான உள்ளடக்கம் கொண்ட இந்த ஆவணப் படத்தில் எல்லிஸ் பிரபு அச்சடித்த வள்ளுவர் தங்க நாணயங்கள், வீரமாமுனிவர் திருக்குறளை லத்தின் மொழியில் மொழிபெயர்த்த கையெழுத்துப் படிகள், குறள்கள் பொறிக்கப்பட்ட பழம் ஓலைச் சுவடிகள், உலகெங்கிலும் நிறுவப்பட்டுள்ள வள்ளுவர் சிலைகள் மற்றும் கிராபிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. காமத்துப்பால் குறும்பட வடிவில் கதையம்சத்துடன் தரப்பட்டுள்ளது.
முனைவர்.ஆர்.பிரபாகரன் இப்படத்தின் வர்ணனையை எழுதி தயாரித்துள்ளார். இவர் சங்க இலக்கியம் திருக்குறள் ஆகியன பற்றி பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். டாக்டர் விஜய் ஜானகிராமன் தலைமையில் இயங்கும் தமிழ் இருக்கைக் குழுமம் இதைத் தமிழ் தவிர ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் வெளியிட்டுள்ளது. முனைவர் ஏ.ஜே.சுந்தர் படத்தயாரிப்பின் உறுதுணையாளர். எழுத்தாளரும் தேசிய விருது பெற்ற இயக்குநருமான அம்ஷன் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு சரவண பாலன்.
ராகுல், ராஜீவ் ஆனந்த், ஹன்சிகா,சுபா ஆகியோர் நடித்துள்ளனர். சென்ற ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி இதன் ஆங்கில வடிவம் வர்ஜினியாவில் வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தினரால் வெளியிடப்பட்டது.
‘வான்புகழ் வள்ளுவர் ‘ ஆவணப்படத்தை யூட்யூபில் கண்டு இன்புறலாம்.




- அழாதவன்
- திருஷ்டாங்கப் பொருந்தல்.
- கனவு இருந்தது.
- சுத்த உடல்
- குதிரைச் சம்மட்டி
- இணையத்தில் இணைந்த இதயங்கள்
- ‘ வான்புகழ் வள்ளுவர் ‘ ஆவணப்படத்தின் முதல் திரையிடல்