தியத்தலாவ எச்.எப் ரிஸ்னாவின் “இன்னும் உன் குரல் கேட்கிறது”

author
0 minutes, 2 seconds Read
This entry is part 25 of 40 in the series 26 மே 2013
 
மொழிவரதன்
 
புரவலர் புத்தகப் பூங்காவின் 30 ஆவது வெளியீடாக வந்துள்ள தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் “இன்னும் உன் குரல் கேட்கிறது” கவிதைத் தொகுதி என் கரம் கிட்டியது.
 
அழகான முகப்பு அட்டைப் படம் நூலுக்கு அழகு சேர்த்துள்ளது. வானத்தில் உலாவும் ஒரு தேவதையின் தோற்றமும், பறக்கும் அவளது மெல்லிய ஆடை, சிறகுகள் எல்லாம் வண்ணத்தால் மிளிர்கின்றன. ஊதா நிறத்திலான பின்னணி நிறமும், அதன் கீழே இளம் பச்சை நிறமும் கண்ணுக்கு இதமாக உள்ளன எனலாம். பின் அட்டை நூலாசிரியரான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் படத்துடன் அவரைப் பற்றிய குறிப்புக்களையும் தாங்கி வந்துள்ளது. இவைகளை கணனியில் வடிவமைத்து மெருகூட்டிய வெலிகம ரிம்ஸா முஹம்மத் பாராட்டுக்குரியவர்.
 
புரவலர் புத்தகப் பூங்காவின் பொதுச் செயலாளர் எஸ்.ஐ. நாகூர்கனியின் ஆசிச் செய்தியுடனும், கவிஞர் ஏ. இக்பால் அவர்களின் அணிந்துரையுடனும் நூல் வெளிவந்துள்ளது. என் இதயத்திலிருந்து என்ற தலைப்பில் நூலாசிரியர் எச்.எப். ரிஸ்னா தனது உள்ளக் கருத்துக்களை கூறிச் செல்கிறார். ஓர் ஆரம்பக் கவிஞருக்குரிய அடக்கம் அதில் இழையோடுகிறது. 
 
“இன்னும் உன் குரல் கேட்கிறது” கவிதைத் தொகுதி 56 கவிதைகளைத் தாங்கியுள்ளது. பெருமளவில் எல்லாமே ஒரு பக்கத்தில் அமைந்த கவிதைகள்தான். நீண்ட கவிதைகள் காணப்படவில்லை. கவிதைத் தலைப்புக்கள் பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளமையும், கவிதை உள்ளடக்கங்கள் யாவும் ஒரே அளவிலான எழுத்துக்களால் அச்சிடப்பட்டுள்ளமையும் நூலுக்கு ஒரு நேர்த்தியைத் தந்துள்ளது. ஓரிரு படங்கள் ஆங்காங்கே காணப்பட்டாலும், பெருமளவில் சித்திரங்கள் காணப்படவில்லை.
 
நூலை வாங்க வேண்டும், எடுத்து வாசிக்க வேண்டும் எனும் ஆவலை நூலின் அமைப்பு தூண்டுகிறது எனில் தவறில்லை. ஓர் இளம் பெண்ணுக்கு அல்லது தாய்க்கு முதல் பிரசவம் போல் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவுக்கு இந்தக் கவிதைத் தொகுதி தலைப் பிரசவம். எனவே ஒரு பதற்றமும், வலியும் நிச்சயம் அந்த பிரசவத்திலிருந்தே ஆதல் வேண்டும். ஆனால் எச்.எப். ரிஸ்னாவுக்கு இது நிறைவான பிரசவமே தவிர குறைப் பிரசவம் அன்று. எவ்வாறெனினும் அவரது வயது, அனுபவம், தேடல், பயிற்சி போன்ற இன்னோரன்ன விடயங்கள் அவரது கவிதைகளின் கருக்களுக்கு பின்புலமாகியுள்ளன என்று துணிந்து கூறலாம். குறித்த அவரது வயதில் அவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதும் அவரது கற்பனை ஓட்டமும், கவிதைப் பார்வை என்பனவும் வெளிப்படுகின்றன.
 
காதல், தோல்வி, விரக்தி, சோகம், ஏமாற்றம் தவிர்த்த பதினான்கு கவிதைகள் வேறுபட்டு இந்தத் தொகுதியில் வெளிப்பட்டுள்ளன. அவை நீ வாழ்வது மேல் (பக்கம் 13), உம்மாவுக்கு (பக்கம் 17), தீன் வழியைக் காட்டி நில் (பக்கம் 26), திருந்திய உள்ளம் (பக்கம் 28), ஒரு வீணை அழுகிறது (பக்கம் 30), மலையக மாதுவின் மனக்குமுறல் (பக்கம் 53), சாத்தான்கள் சாட்சி சொல்கின்றன (பக்கம் 57), மனித நேயம் (பக்கம் 58), பூமி திணணும் பூதம் பற்றி (பக்கம் 59), கடல் கொண்டு போகட்டும் (பக்கம் 60), உணர்வுப் பிரிக்கை (பக்கம் 61); போன்ற கவிதைகளும் இவரது கவிதைத் தொகுதியில் காணப்படுகின்ற வித்தியாசமான கருக்களைக் கொண்ட கவிதைகளாக மிகவும் சிறப்பாக மலர்ந்துள்ளன. இவை தவிர ஏனைய பெரும்பாலான கவிதைகள் கிட்டத்தட்ட ஒரே வகையான மனக்குமுறல்களின் வெளிப்பாடாகவே மலர்ந்துள்ளன. எனினும் அவை வௌ;வேறு கோணங்களிலிருந்து புறப்பட்டுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது. 
 
ஊம்மாவுக்கு என்ற கவிதை சின்ன வயது செல்லங்களையும், அனுபவங்களையும் கூறுகிறது. ஒரு வீணை அழுகிறது கவிதையில் நம்பிக்கை தரும் நல் வரிகள் வந்துள்ளன. 
 
“ஒருவேளை
நான் மீளாத்துயிலில் 
ஆழ்ந்துவிட்டால்…
காவலனைத் தேடிக்கொள்
கட்டாயம்
………….
வெள்ளாடை தரித்து நீ
வெறுமனே இருந்திடாதே
வாழும்வரை வசந்தமாய்
வாழுவதை மறந்திடாதே…”
 
பழைமையை சாடும் போக்கு மேற்குறித்த கவிதையிலே தென்படுகின்றது. எலும்புக் கூடுகளும் இரத்தம் நிறம்பிய குவளைகளும் கவிதை படிமங்கள் நிறைந்த கவிதையாக உள்ளது எனலாம். இதே போன்றே உணர்வுப் பிரிக்கை கவிதை பல விடயங்களை கூறிச் செல்லுகின்றது. ஒரு பெண்ணின் உணர்வுகளை அது வெளிப்படுத்துகிறது. அது போல பூமி திண்ணும் பூதம்பற்றி… எனும் கவிதையும் ஆகும். 
 
எழுதும் ஆற்றல், கவிபுனையும் வல்லமை, கற்பனை, குறியீட்டுத் தன்மை, படிமம் போன்றன இவரது கவிதைகளில் பொதிந்துள்ளன. இளம் படைப்பாளிகளின் இவ்வரவை வரவேற்கும் கவிதை உலகம் அவரிடமிருந்து இன்னும் நிறையவே எதிர்பார்க்கிறது. நம்பிக்கை வரட்சியை விரட்டி புதிய இளம் சந்ததியினருக்கு காதலுக்கு அப்பாலும் பரந்து விரிந்து பல்துறைகளாக கிடக்கின்றது என்ற தத்துவார்த்த சிந்தனையைத் தொட்டெழுதிட வாழ்த்துக்கூறி நிற்கின்றது. இறுதியாக புரவலர் புத்தகப் பூங்கா நிறுவனர் புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் அவர்களுக்கு தரமான இந்தக் கவிதைத் தொகுதியை வெளியிட்டுக் கொடுத்ததற்காக நன்றி கூறுகிறேன். அவரது பணி தொடர வேண்டுகின்றேன்!!!
 
நூலின் பெயர் – இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதைகள்)
நூலாசிரியர் – தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
தொலைபேசி – 0775009222
வெளியீடு – புரவலர் புத்தகப் பூங்கா
விலை – 180/=
7 (1)
Series Navigationதிருக்குறள் முற்றோதல் நிறைவு விழா அழைப்பிதழ்டெஸ்ட் ட்யூப் காதல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *