பரகாலநாயகியின் பரிதவிப்பு

This entry is part 6 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

         

                               பலதிவ்யதேசங்களுக்கும் சென்றுவந்த திருமங்கையாழ்வார், திருநறையூருக்கும் செல்கிறார். இத்தலத் தில் தான் அவர் திருஇலச்சினை பெற்றார். இத்தலத்து நம்பியிடம் மிகவும் ஈடுபாடுகொண்டு 100 பாசுரங்கள் பாடியுள்ளார். மேலும் இத் தலத்து நம்பியை நாயகி பாவத்தில் அனுபவிக்க ஆர்வம் கொண்டு பெரிய திருமடலை இயற்றியுள்ளார். திருநரையூர் சென்ற பொழுது பரகாலநாயகியாகி இந்த நம்பியிடம் காதல் கொண்டதை விவரிக்கிறார்.

நம்பியின் அழகு.

                         முருகன் என்றாலே அழகு என்று சொல்வது போல் நம்பி என்றாலும் நற்குணங்களும் வீரமும் அழகும் பொருந் தியவன் என்று கொள்ளலாம். திருநரையூர் சென்ற ஆழ்வார் பர கால நாயகியாக பொன்மயமான கோயிலின் கதவைக் கடந்து செல்கிறாள். அழகின் அலைகளில் சிக்குண்டு தவிக்கிறாள். நம்பி யின் திருமார்பும் திருவாயும் கமலம் போன்ற திருமுகமும் திரு வடிகளும் திருக்கைகளும் அவளை மோகமடையச் செய்கின்றன.

தோள்வளைகளும் குண்டலங்களும் ஆரமும் அவளை நிலை குலையச் செய்கின்றன. இந்த நம்பியைக்காணக் கண் ஆயிரம் வேண்டும் என்று அதிசயிக்கிறாள்           

                                                   இரும்பொழில்சூழ்

               நன்னு மறையோர் திருநறையூர் மாமலைமேல்

               பொன்னியலு மாடக் கவாடம் கடந்துபுக்கு

              என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் –நோக்குதலும்

              மன்னன் திருமார்பும் வாயும் அடியிணையும்

              பன்னு கரதலமும் கண்களும்—பங்கயத்தின்

              பொன்னியல் காடோர் மணிவரைமேல் பூத்ததுபோல்

              மின்னி ஒளிபடைப்ப வீழ்நாணும் தோள்வளையும்

              மன்னிய ஆரமும் குண்டலமும் நீண்முடியும்

              துன்னு வெயில் விரித்த சூடாமணியிமைப்ப

மின்னல்கொடி

                                   அழகே உருவெடுத்த அழகனின் அருகில் மின்னல் கொடி ஒன்று பளீரிடுவதைக் கவனிக்கிறாள்.

             மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர்

             இன்னிள வஞ்சிக்கொடி நின்றதுதான்

             அன்னமாய், மானாய், அணிமயிலாய் ஆங்கிடையே

             மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய்

             முன்னாய தொண்டையாய்க் கெண்டைக்குல

                                                         மிரண்டாய்

             அன்னதிருவம் நின்றதைக் கண்டவள் அது

பரகாலநாயகியின் நிலை

                                 பிராட்டியின் திருவுருவம் என்பதை  உணரவில்லை. மேலும் பரகால நாயகியின் நெஞ்சும் அறிவும் நம்பியின் பின் சென்றதால் அவள் கைவளையும் மேகலையும் நழுவியது! அதன்பின் அவளுக்குக் கடலின் ஒலியும் கசந்தது. சந்திரனின் குளிர்ச்சி பொருந்திய கதிர்கள் கதிரவனின் கதிர்கள் போல் வெப்பமாகத் தாக்கின. தென்றலோ நெருப்பை அள்ளித் தெளிப்பதுபோல் உணர்ந்தாள் அன்றில் பறவைகளின் கூவல் நாராசமாயிருந்தது. நான் என்ன செய்வேன் என்று ஏங்குகிறாள்.

        கன்னவில் தோள் காமன் கருப்புச்சிலை வளைய

        கொன்னவிலும் பூங்கனைகள் கோத்துப் பொதவணைந்து

        தன்னுடைய தோள் கழியவாங்கித் —தமியேன் மேல்

        என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்

        பின்னிதனைக் காப்பீர்தாம் இல்லையோ?

என்று முறையிடுகிறாள். மற்றவர்களுக்கு இனிமையாகயிருக்கும்

எருதின் கழுத்தில் கட்டியிருக்கும் மணியின் ஓசையும் இவளை வாட்டிவதைக்கிறது. இதிலிருந்து மீள வழியிருந்தால் தயவு செய்து வழிகாட்டுங்கள் என்று இறைஞ்சுகிறாள். தன்னை இந் நிலைக்கு ஆளாக்கியவனைப் பற்றியும் சொல்கிறாள்

யாரவன்?

                                                   இதுவிளைத்த

             மன்னன் நறுந்துழாய்வாழ்மார்பன்—-காயாவின்

             சின்ன நறும்பூந் திகழ்வண்ணன்—-வண்ணம்போல்

             அன்னகடலை மலைநிட்  டணைகட்டி          

             மன்னன் இராவணனை மாமண்டு வெஞ்சமத்துப்

             பொன்முடிகள் பத்தும் புரளச் சரம்துரந்து

             தென்னுலகம் ஏற்றுவித்த சேவகன்

பெருமானே இதைச் செய்தவன் என்று சொன்னவள் அப் பெரு மான் இராமாவதாரத்தில் கடலைத்தூர்த்து அணைகட்டி இலங்கை வேந்தன் இராவணனைத் தென்னுலகம் சேர்த்ததையும் சீதா பிராட்டியைக் காப்பாற்றியதையும் (தன்னையும் இத்துன்பத்தி லிருந்து காபாற்றுவான் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறாள்)

 விவரிக்கிறாள். மேலும் இரணியனிடமிருந்து பக்தனான பிரக லாதனைக் காத்ததை

                           வானமும் வானவர்தம் பொன்னுலகும்

       தன்னுடைய தோல்வலியால் கைக்கொண்ட தானவனைப்

       பின்னேர் அரியுருவ மாகி எரிவிழித்துக்

       கொல்நவிலும் வெஞ்சமத்துக் கொல்லாதே—வல்லாளன்

       மன்னு மணிக்குஞ்சி பற்றி வரவீர்த்துத்

       தன்னுடைய தாள்மேல் கிடாத்தி—அவனுடைய

       பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து

என்பதால் தெரிவிக்கிறாள். இரணியாக்ஷனிடமிருந்து பூமிப் பிராட்டியை மீட்டதை

        மன்னிவ் அகலிடத்தை மாமுது நீர்தான் விழுங்க

        பின்னுமோர் ஏனமாய்ப்புக்கு வளைமருப்பில்

        கொன்னவிலும் கூர்நுதிமேல் வைத்தெடுத்த

வைபவத்தைப் பேசுகிறாள். இங்கும் ஒருபெண்ணான பூமிப் பிராட்டியின் துன்பம் துடைத்தவன் தன் துன்பத்தையும் துடைக்க மாட்டானா என்று ஏங்குகிறாள்.

கடல்கடைந்தது.

                         தேவேந்திரன் இழந்த செல்வத்தை மீட்க, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக்கடைந்தால் அமுதமும் செல்வமும் கிடைக்கும் என்பதால் பாற்கடலைக் கடையத் தீர்மானிக்கிறார்கள். மந்தரமலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கடைகயிறாகவும் கொண்டு கடலைக் கடைய,

மந்தர மலை கடலில் அமிழ்ந்து போவதைக்கண்ட பெருமான் கூர்மவடிவு கொண்டு மலை அமிழ்ந்து போகாமல் தன் முதுகில் தாங்குகிறார். அதுமட்டுமில்லாமல் பாற்கடலில் கிடைத்த அமுதை தேவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கிறார்.

மூவடிமண் கேட்டவன்

                                         இப்பெருமான், பிராட்டியும்

அறியாமல் வாமனவடிவில் மகாபலியின் யாகசாலை செல் கிறான். “வேண்டியதைக் கேள்” என்ற மகாபலியிடம், “என் னுடைய காலால் மூவடிமண் தா’ என்று யாசிக்கிறான். தடுத்த சுக்கிராச்சாரியாரின் கண்ணைத் தன் தருப்பையால் குத்தியபின் மாவலி நீர்வார்க்கத் திரிவிக்கிரமனாக ஓங்கி ஓரடியால் விண் ணையும் இரண்டாம் அடியால் மண்ணையும் அளந்த்பின்னர். மூன்றாம் அடிக்காகத் தன் தலையைத் தாழ்த்திப் பணிந்த மகா பலியை பாதாள லோகத்தில் தள்ளிவிடுகிறான்.

           தன்னுருவம் யாரும் அறியாமல் தான் அங்கோர்

           மன்னும் குறளுருவில் மாணியாய் மாவலிதன்

           பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து

                                     போர்வேந்தன்

            மன்னை மனங்கொள வஞ்சித்து, நெஞ்சுருக்கி

            ”என்னுடைய பாதத்தால் யானளப்ப, மூவடி மண்

            மன்னா! தருகென்று வாய்திறப்ப மற்றவனும்

            என்னால் தரப்பட்டதென்ற”லுமே அத்துணைக்கண்

            மின்னார் மணிமுடிபோய் விண்தடவ—மேலெடுத்த

            பொன்னார் கனைகழற்கால் ஏழுலகும் போய்க்

                                           கடந்தங்கு

            ஒன்னா அசுரர் துளங்கச்செல நீட்டி

            மன்னிஇவ்வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத்

            தன்னுலகம் ஆக்குவித்த தாளான்

என்று வாமனனாக வந்து உலகளந்த தாளனைத் திரு விண்ண கரம், திருக்குடந்தை, திருவரங்கம், திருக்குறுங்குடி,, திருவேங்

கடம், மாலிருஞ்சோலை, கோவலூர், அழுந்தூர் போன்ற பல திருத்தலங்களில் வீற்றிருக்கும் பெருமானைக் கண்டு அவ னையே நினைந்துருகும் என் நிலையை நேரில் சொல்வேன்.

அனை நேரில் பார்த்து என் நிலையைக் கேட்டபின் அவன் தன் அருளும் ஆகமும் தருவான். அப்படித்தரவில்லை என்றால்

அவனை நான் அந்தணர்கள் வாழும் இடங்களிலும், மன்னர் சபைகளிலும் பெண்கள் கூடுமிடங்களிலும் சென்று என்னை, அவன் மையல் செய்ததையும் இப்பொழுது என்னை அலட்சியம் செய்வதையும் அதனால் நான் படும் பாட்டையும் அறிவிப்பேன்.

கண்ணன் செய்த காரியங்கள்

                               மேலும் முன்பு, இவன் கண்ணனாய் அவதரித்தபோது என்னவெல்லாம் செய்தான் என்பதையும் சொல் வேன் என்று அவற்றைப் பட்டியலிடுகிறாள். ஆயர்பாடியில் இவன் என்னென்ன செய்தான் தெரியுமா? ஆயர்பாடி வீடுகளில் படலைத் திறந்து திருட்டுத்தனமாக வீட்டில் சென்று அப்பெண்கள் வைத் திருந்த வெண்ணெய், தயிர், பால் இவற்றையெல்லாம் வாரி உண் டான். அப்பெண்கள் இவனைக் கையும் களவுமாகப்பிடித்து கயிற் றால் கட்டினார்கள்.இன்றும் வயிற்றில் தழும்புடன் தாமோதர னாக விளங்குகிறான்! இதுமட்டுமா?

                                   ஆயர்கள் கோவர்த்தன மலைக்குப் பூசை செய்து படையலிட்டபோது வண்டிவண்டியாகக் கொண்டு வந்து மலைமலையாகச் சோற்றைக் குவித்து அதன் மேல் நெய் யையும் தயிரையும் அருவிபோல் சொரிந்தார்கள். அவையனைத் தையும்  இவன் தான் ஒருவனாகவே உண்டான்! கௌரவர்கள் சபையில் பாண்டவதூதனாகச் சென்று துரியோதனன் ஏளனமாகப் பேசியதையும் கேட்டுக்கொண்டான். இதோடு குடமாடிக் கூத்தாடி யதையும் வெளிப்படுத்துவேன்.

            மின்னிடை ஆய்ச்சியர் தம் சேரிக்களவின் கண்

            துன்னு படல்திறந்து புக்கு தயிர் வெண்ணெய்

            தன் வயிரார விழுங்க, கொழுங்கயற்கண்

            மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான்கயிற்றால்

            பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றியும்

            அன்னதோர் பூதமாய் ஆயர்விழவின் கண்

            துன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை

            முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும்

            மன்னர் பெருஞ்சவையுள் வாழ்வேந்தர் தூதனாய்

            தன்னை இகழ்ந்துரைப்பத் தான் முனநாள் சென்றதுவும்

            கொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடியதை யும் எல்லோர் முன்பும் சொல்வேன்

                                       இலங்கைவேந்தன் இராவணன்

தங்கை சூர்ப்பணகை தன்னைவிரும்பிவந்து தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்த அவளைக்கோபித்து மூக்கரிந்த தையும் விசுவாமித்திரர் யாகம் காக்கச் சென்றபோது எதிர்த்து வந்த தாடகையை வீழ்த்தியதையும் உலகோர் அறிய உரைத்து மடலூர்வேன் என்று தன் முடிவைச் சொல்கிறாள்.

மடலூர்தல்

                        இலக்கியத்தில் மடல் என்பது அகப்பொருள் துறையில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. தன்னை விரும்பிய தலைவியை அடையமுடியாத நிலையில் மடல் ஊர்ந்தாவது

தலைவியை அடைவேன் என்று தலைமகன் சொல்வதாக இத் துறை அமையும். தலைமகன் மடலூர நிச்சயம் செய்தபின் பனை மடல்களால் குதிரைவடிவம் செய்து அதன்மேலேறி பித்தன்

போல் ஊரின் நடுவே செல்வான். இப்படி தன் காதலை வெளிப் படுத்தும் அவன் நிலைகண்ட ஊரார் இரக்கம் மேலிட்டு அவ னுக்கு உதவுவார்கள். பெண்ணைப் பெற்றவர்களும் தங்கள் மக ளைத்தர முன்வருவார்கள். இனி என்னதடை? இருதரப்பும் இணைந்த பின் திருமணம்தானே! இதையே மடலூர்தல் என்று குறிப்பிடுகிறார்கள்.

                            ஆனால் பென்கள் மடலேற உரியவர்கள்

அல்லர் என்ற தொல்காப்பியம்

            ”எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல்

             பொற்புடை நெறிமை இன்மையான்

என்று பெண்களுக்குத் தடை விதிக்கிறது.

இரு நாயகிகள்                  

                                     ஆனால் மரபை மீறி திருமால் (இறைவன்) மீது காதல் கொண்ட தலைவி பரகாலநாயகி மடலேறவும் துணிந்ததாகத் தன் இரு மடல்களிலும்(சிறிய திரு மடல், பெரிய திருமடல்) பாடியிருக்கிறார் திருமங்கையாழ்வார். நம்மாழ்வாரும் பராங்குசநாயகியாகி மடலூர்வேன் என்று திட மாகப் பேசுகிறார். என்றாலும் பரகாலநாயகியோ, பராங்குச நாயகியோ மடலூரவில்லை. மடலூரவும் துணிவேன் என்று தங்கள் உறுதியை வெளிப்படுத்துகிறார்கள்.

                                      தலைவனிடம் (இறைவனிடம்)

 இத்தலைவிகள் மையல் கொண்டதையும் தங்களுடைய

 உறுதியை வெளிப்படுத்தவும் மடல் வடிவை இரு ஆழ்வார்

 களுமே ஒரு கருவியாகக்(TooL) கையாண்டதாகத் தெரிகிறது

=======================================================================

Series Navigationமூட்டம்தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
author

எஸ். ஜயலக்ஷ்மி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *