தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 7

This entry is part 18 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

குழந்தைக்கு ஜுரம் – 7

னைவி சொல்வதைக் கேட்டார். குழந்தையைப் பார்த்தார்.

மணிபர்ஸைப் பார்த்தார். புத்தகம் போடும் பஞ்சாபகேசனை நினைத்தார். வாத்தியார் நெஞ்சு புகைந்தது. வயிற்றைப் பற்றிக்கொண்டு வந்தது”

முதல் நாலு வரிகள் இவை . விதையை ஆழப் புதைக்கிறார். அது விருட்சமாகத் தலையெடுக்கிறது. 

ஒரு குறிப்பு:  கீழ்வரிகளில் கதை சுருக்கமாகச் சொல்லப்படுகிறது. விமரிசனத்தில் கதைச் சுருக்கத்துக்கு அவ்வளவு வேலை இல்லை என்று நினைப்பவன் நான். ஆனால் இங்கே அதைச் சொல்லக் காரணம் இருக்கிறது. அது பின்னால்.

சரவண வாத்தியார் ஸ்கூலில் வேலை பார்த்தாலும், பள்ளிப் பிள்ளைகளுக்குப் போடுகிற புத்தகங்களை எழுதிப்  புத்தக வியாபாரியான பஞ்சாபகேசனிடம் கொடுக்கிறார். ஒரு புத்தகத்துக்கு அவருக்கான சன்மானம் ஐம்பது ரூபாய். இருபது புத்தகங்கள் செய்து கொடுத்த நிலையில், பஞ்சுவிடமிருந்து பாக்கி நானூறு வரவேண்டியிருக்கிறது. இதைப் பற்றிக் 

கேட்கப் போகையில் பஞ்சு தான் தரவேண்டியது முன்னூறுதான் என்று அடாவடி செய்து வாத்தியாரை அவமானப் படுத்திப் பேசுகிறார். கோபமடைந்த வாத்தியார் பஞ்சு தனக்குத் தர வேண்டிய பணம் எல்லாவற்றையும் ஏற்கனவே பெற்றுக் கொண்டு விட்டதாக ஒரு கடுதாசியில் எழுதித் தருகிறார். பஞ்சு அதை ஒப்புக் கொள்ளாமல், கிழித்து எறிகிறார். வாத்தியார் பஞ்சுவிடம் ‘இனிமேல் இந்த வீட்டுக் குத்துச் செங்கல் ஏறுவேனா?’ என்று சூளுரைத்து விட்டு வந்து விடுகிறார். வரும் போது அச்சுக்கென்று கொடுத்த இன்னும் அச்சாகாத இருபத்தியோராவது புத்தகத்தை வாங்கிக் கொண்டு வர மறந்து விடுகிறார்.

இப்போது குழந்தைக்கு மூணு நாளாகக் கடும் ஜுரம். மூடிய கண் திறக்கவில்லை. நெற்றியில் நெருப்புப் பறக்கிறது. சந்நிதித் தெரு வன்னியர் வீட்டு’ட்யூசன்’ பணம் எட்டு ரூபாய் தீர்ந்து விட்டது. அப்போதுதான் மனைவி நினைவுபடுத்துகிறாள்:

“இன்னும் ஒரு புஸ்தகம் அச்சுப்போட எழுதிக் கொடுத்தீங்களே, அதைத் திருப்பிக் கேக்கறாப் போலாவது அந்தப் பாவியைப் பார்த்துவிட்டு வாங்களேன்.” 

“குத்துச் செங்கல் ஏறமாட்டேன்னு சொல்லி விட்டேன் தெரியுமா?” 

“ஏறாம வாசல்லெ நின்ன வாக்கிலே கேளுங்க.”

“நான் போய்ப் பணம் கேட்க மாட்டேன்.”

“புதுப் புஸ்தகத்தை திருப்பி வாங்கி வராப்புல போங்களேன். அப்ப அவனா பேச்சு எடுக்கமாட்டானா?”

அதுவும் சரிதான் என்று பணமுடை காதோடு சொல்லுகிறது. சமாதானம் இல்லை.

கையில் இருப்பது ஒரு ரூபாயும்  பத்து பைசாவில் இரண்டும். ஒரு ரூபாயை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார், வரும் போது குழந்தைக்குப்  பார்லி, திராட்சை வாங்கி வரலாம் என்று நினைத்துக் கொண்டே. 

பஞ்சுவின் வீட்டை  வாத்தியார் அடையும் போது அங்கே ஒரே களேபரமாக இருக்கிறது. ரத்தம் ரத்தமாக பஞ்சுவின் மனைவி வாயிலெடுக்கிறாள். பிரக்ஞையில்லாமல் கிடக்கிறாள். கண் செருகியிருக்கிறது. திடீரென்று பல்லை நறநறவென்று கடிக்கிறாள். கை விரைக்கிறது.உடம்பைப் போட்டு முறித்துக் கொள்கிறாள். பார்க்கப் பயங்கரமாக இருக்கிறது. பஞ்சுவின் ஆள் மறுபடியும் டாக்டரைப் போய்க் கூப்பிட்டால் அவர் தட்டிக் கழிக்கிறார். 

இந்தச் சூழலில் வாத்தியார் வெளியே ஓடி இரண்டு மூன்று டாக்டர்களைப் பார்த்துக் கெஞ்சுகிறார். யாரும் வரவில்லை. வாத்தியாருக்கு அவர் கூடப் படித்தவன் – பராங்குசம் – டாக்டராக இருப்பது நினைவுக்கு வந்து ஓடுகிறார். அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி ரிக் ஷாவில்  கூட்டிக் கொண்டு வர, டாக்டர் பஞ்சுவின் மனைவியைப்  பார்க்கிறார். அவர் சொன்னபடி பெரிய ஆஸ்பத்திரிக்கு டாக்சியில்  கூட்டிக் கொண்டு போய்ச் சேர்க்கிறார்கள். இனி கவலைப்பட ஒன்றுமில்லை என்று ஆஸ்பத்திரியில் சொன்னதும் வாத்தியார் டாக்டரை அவர் வீட்டில் அதே டாக்சியில் கொண்டு போய் விடுகிறார். பஞ்சு டாக்சிக்காக மூன்று ரூபாய்  கொடுத்திருந்தார். ஆனால் வாடகை மூன்று ரூபாய் ஆறணா ஆகிறது. வாத்தியார் தன் கைப்பணத்தைக் கொடுத்து விட்டு மீதம் பத்தணாவை வாங்கிக் கொள்கிறார். பராங்குசத்திடம் வாத்தியார்  தன் குழந்தையின் ஜுரம் பற்றிச் சொல்ல அவர் மருந்து கொடுக்கிறார். ‘பீஸ்  அப்புறம் வாங்கிக் கொள்கிறேன்’ என்று  டாக்டர் சொல்ல வாத்தியார் வீடு நோக்கி நடக்கிறார்.

தி. ஜா.கதையை இப்படி முடிக்கிறார்.:

“ஹிஹிஹிஹி என்று யாரோ இருளில் சிரித்தார்கள். பாதி பயத்திலும், பிரமையிலும் உற்றுப் பார்த்தார் அவர். ஜட்கா ஸ்டான்ட் குதிரை ! புல் தின்கிற சவடாலில் அது கனைத்தது. சரவணத்திற்கும் அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. வீடு போகிற வரையில் சிரித்துக் கொண்டே போனார். நிலவு எழுந்ததைக் கண்டு பொழுது புலர்ந்த திகைப்பில் நாலைந்து நார்த்தங் குருவிகள் தோப்பில் சிரித்துக் கொண்டிருந்தன.”

கோபமும், இயலாமையும், வருத்தமும் கொண்ட மனிதராகக் கதை முழுதும் வருகிற சரவண வாத்தியார்  கதையின் கடைசியில் மலர்ந்த மனத்துடன் வீட்டுக்குத் திரும்ப என்ன ரசாயனம் நிகழ்ந்தது? தனக்கு வர வேண்டிய பணத்தைச் சுருட்ட நினைப்பவனின் குடும்பத்தில் நிகழும் பரிதாப நிகழ்ச்சியை மனிதாபிமானத்துடன் தீர்த்து வைத்த திருப்தியா? குழந்தையின் மருந்துக்குக்  கூடப்  பணம் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருப்பவருக்கு அவருடன் படித்துப் பின் டாக்டராகி விட்ட  நண்பன் பணம் அப்புறம் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு மருந்து தந்து விட்டான் என்னும் நிம்மதியா?

இந்தக் கதையைப் படிக்கும் போது பல இடங்களில் நம்மை நிறுத்திப் பின் படிக்க வைக்கிறார் தி.ஜா. தி.ஜா. சில இடங்களில் ஆச்சரியம் கூட.

கதை ஆரம்பத்தில் வாத்தியார் குழந்தைக்கு வியாதியைக் கொடுத்த கடவுளைப் பார்த்துப் பொருமுகிறார்: “சுவரில் அசைந்த காலண்டரைப்பார்த்தார். அதில் பரமசிவன் மீசையும் மாடும் இரண்டு பிள்ளையுமாக உட்கார்ந்திருந்தார். வியாதி வெக்கை இல்லாத பிள்ளைகள்.” திரிபுரம் எரித்தவனுக்கே  தூக்கி வாரிப் போடும்படியான வார்த்தைகள். 

“மனிதனுக்குப் பொய் சொல்ல எப்படி மனம் வரும்? திருடலாம். கொல்லலாம். கற்பை இழக்கலாம். அவர்களோடு பழகலாம். பொய் சொல்பவர்களோடு எப்படிப் பழக முடியும்? பொய்  பொய்யா ? பொய் எப்படிச்  சொல்ல முடியும்?” என்று வாத்தியார் நினைக்கிற ஓரிடத்தில். இது அன்று இருந்த சமூக நிலைப்பாடா? அல்லது வாத்தியார் ( ஜானகி

ராமன்?)  வகுத்துக் கொண்ட நியதிகளா? என்று சந்தேகம் எழுகிறது.தி.ஜா. ஏன் இப்படி ஜீரணிக்கக் கஷ்டமான வார்த்தைகளை உதிர்த்தார்? 

ஆச்சரியம் என்றேன். வாத்தியார் பஞ்சு ஏமாற்றியதை பின்னவர் மனைவி மிக மோசமான உடல்நிலையில் இருக்கும் போது ஒரு க்ஷணமும் நினைக்கவில்லை. அதாவது ஜானகிராமன் வாத்தியாரின் மனிதாபிமானம் நிறைந்த செயலை ஓங்கிக் குரல் கொடுத்து ஒரு வரி, ஒரு வார்த்தை பேசவில்லை என்பது ‘சொற்களுக்கிடையே பொதிந்திருக்கும் அர்த்தத்தை வாசகர் கண்டு தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டாற் போலிருக்கிறது.    

இந்தக் கதையை ஜானகிராமன் 1957ல் எழுதியிருக்கிறார். ஐம்பது  வருஷங்களுக்கு அப்புறம்  நான் படித்த இன்னொரு  சிறுகதை இம்மாதிரிப் போகிறது :

ஒரு பெரியவர் தன் வாழ்க்கையை அவரைச் சந்திக்க வந்திருக்கும் எழுத்தாளரிடம் சொல்லுகிறார். ஒரு புத்தக வியாபாரியான செட்டியாரிடம் பெரியவர் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கான புஸ்தகங்கள் எழுதித் தர ஒப்புக் கொள்கிறார். மொத்தம் நூறு புத்தகங்கள். புத்தகத்துக்கு ஐம்பது ரூபாய். ஒரு வருஷத்தில் நூறையும் எழுதிக் கொடுத்து விடுகிறார். மொத்தம் ஐந்தாயிரம் ரூபாய். அவ்வப்போது கொஞ்சம் பணத்தை செட்டியாரிடம்  வாங்கிக் கொண்டு மிச்சத்தை அவரிடமே பெரியவர் வைத்திருக்கிறார். மூவாயிரம் ரூபாய். அதை நினைத்துக் கொண்டு பெண்ணின் கல்யாணத்தை நிச்சயம் செய்து விடுகிறார். செட்டியாரிடம் போய் மங்கல காரியத்துக்கு வேண்டிய  மூவாயிரத்தைக் கேட்கிறார்.  செட்டியார் “என்னய்யா ஒளறுகிறீர்? புக் எளுதறதுக்கு மூவாயிரமா?” என்கிறார். மேலும் அவர் பெரியவரை நன்றி கெட்ட நாயே என்று திட்டுகிறார்.   நிதானத்தை இழந்த பெரியவர் வெறி பிடித்த மாதிரி கத்த ஆரம்பிக்கிறார்: ‘என்னை ஏமாத்தி  சொத்து சேக்கிறே. நீ உருப்படமாட்டாய் ‘ என்கிறார். செட்டியாரின் தம்பி பெரியவரைக் கைநீட்டி அடித்து விடுகிறான். 

கடுங் கோபம் அடைத்த அவர் மறுநாள்  செட்டியாரின் மனைவியைப் போய்ப் பார்க்கிறார். சன்னதம் வந்தது போல அவர் ஆச்சியிடம்   ‘என் வயத்திலே அடிச்ச நீயும் உன் பிள்ளகுட்டிகளும் வாழ்ந்திடுமா…வாழ்ந்தா சரஸ்வதி தேவ்டியான்னு அர்த்தம்’ என்று சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்.அந்த ஆச்சி செட்டியாரிடம் போய் பெரியவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை உடனடியாகக் கொடுக்காத வரை அவள் நடுத் தெருவில்தான் இருப்பேன் என்று படபடைக்கும் வெய்யிலில் சூடாயிருக்கும் தார் ரோடில் போய் உட்கார்ந்து விடுகிறாள். செட்டியார் பதறிப்போய்க் கடன் உடன் வாங்கி பெரியவரிடம் மூவாயிரத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறார். செட்டியாரும் அவர் மனைவியும் பெரியவரின் மகளுக்கு கலியாண சீர் எல்லாம் செய்கிறார்கள். (கதைக்கான சுட்டி இங்கே இருக்கிறது : https://www.jeyamohan.in/11976/ )

மேலே சொன்னப்பட்ட கதைச் சுருக்கம் ஜெயமோகன் எழுதிய “அறம்” என்ற சிறுகதை. கதையின் யின் ஊடாகவும் எங்கோ ஜெயமோகன் குறிப்பிட்டது போலவும் அறம் கதை எம்.வி. வெங்கட்ராமின் வாழ்வில் நிகழ்ந்ததுதான்.தி.ஜா.வும் ‘வெங்கட்ராம் அவரது  இளமைப் பருவத்திலிருந்தே தனது நண்பர்’ என்று  மோகமுள்ளில் எழுதியிருப்பார். இரு கதைகளுக்கும் உள்ள ஒற்றுமைகளைப்  பார்க்கும் போது தி. ஜா. ‘குழந்தைக்கு ஜுரம்’ எழுதியது எம்.வி.வி.யின் அனுபவத்தை வைத்துத்தான் என்று தோன்றுகிறது.ஜெயமோகனின் கதையில் வரும் பெரியவர் ஏமாற்றப்பட்டதன் காரணமாய் violent ஆக நடமாடுகையில் தி.ஜா.வின் கதையில் வரும் சரவணம்  வாத்தியார் அமைதியும், அன்பும் கொண்ட மனிதராகக் காட்சியளிக்கிறார். தி.ஜா. வைப் பற்றி ஒரு முறை சிட்டி எழுதிய கட்டுரையில் வாசகர் வட்டம் உரிமையாளரான லட்சுமி கிருஷ்ணமூர்த்தி “அவர் மனது புஷ்பம் போன்றது” என்று ஜானகிராமனைப் பற்றிக் குறிப்பிட்டதாக எழுதியிருக்கிறார். இந்தப் பேரன்பின் விகாசம் ஜானகிராமனின் சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என்ற அவரது  பரந்து பட்ட படைப்புலகம் முழுவதிலும் காணக் கிடைக்கிறது. அந்த அரிய அன்பான மனதின் வெளிப்பாடுதான் ‘குழந்தையின் ஜுரம்’ வாத்தியாரின் மனமுமாக நம்மைக் கண்டடைகிறது. 

Series Navigationக.நா.சு கவிதைகள்
author

ஸிந்துஜா

Similar Posts

2 Comments

  1. Avatar
    jananesan says:

    குழந்தையின் ஜுரம் கதை வள்ளுவர் சொல்லும் நன்னயத்துக்கு வாழ்வியல் உதாரணமாக உள்ளது. எம்விவியின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு சம்பவத்தை இரு எழுத்தாளர்கள் அவரவர் மனோதர்மத்தின் படி படைத்துள்ளார்கள். சிந்தனை பகிர்வுக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *