கேள்வியின் நாயகனே!

This entry is part 7 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

செல்வராஜ் ஜெகதீசன்

ச்சரியமாக இருந்தது, பத்து மணி ஆகியும், சுந்தரத்திடமிருந்து ஒரு கேள்வியும் வரவில்லை.

இடது பக்கம், மும்முரமாக கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சுந்தரத்தைப் பார்த்தான் ராஜன்.

இன்றைக்கு வேலை கொஞ்சம் அதிகம் போலிருக்கிறது, அல்லது கேள்வி கேட்க எந்த விஷயமும் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் சுந்தரத்திற்கு விஷயம் என்று ஏதும் தேவையில்லை. வானத்தின் கீழுள்ள எது பற்றியும் கேள்வி வரும்.

பெரும்பாலும் ஒரு மோன நிலையில் வேலையில் மூழ்கி இருப்பவர், திடீரென்று ஏதாவது ஒரு கேள்வி கேட்பார்.

ராஜனுக்கு பதில் தெரிந்த கேள்வியாகவே இருக்கும். ஆனால் பதில் சொல்லாமல் கொஞ்ச நேரம் யோசித்தபடி சுந்தரத்தையே பார்த்தபடி இருப்பான், மறுபடி அதே கேள்வியை சுந்தரம் கேட்கும் வரை.  

கடந்த ஒரு வருடத்தில் பழகிப்போன ஒன்று இது. உடனே பதில் சொன்னால், சுந்தரத்திற்கு திருப்திகரமாய் இருக்காது. உடனே அதையொட்டி இன்னொரு கேள்வி வரும்.

அப்படியே பதில் சொன்னாலும் அது திருப்தியான ஒன்றா என்பதில் அவருக்கு சந்தேகம் வந்துவிடும். கொஞ்ச நேரத்தில் தொலைபேசியில் யாரையோ அழைத்து அதே கேள்வியை கேட்பார்.

போன வாரம் சுந்தரம் கேட்ட கேள்வியும் அதையொட்டி நடந்தவையும் ராஜன் நினைவில் வந்து போயின.  

அன்றைக்கு ராஜனுக்கு நிறைய வேலைகள் இருந்ததால், வேலையில் மூழ்கியிருந்தான்.

“ராஜன்…இந்த அபுதாபி இந்தியன் ஸ்கூல் எங்கிருக்கு?” என்ற சுந்தரத்தின் கேள்விக்கு “ஏன் கேக்குறீங்க?” என்றான் ராஜன்.

“ஒரு விவரத்துக்கு தேவைப்படுது…சொல்லுங்களேன்”

ராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை. அதென்ன “ஒரு விவரத்துக்கு?”

ஆனால் சுந்தரம் எப்போதும் இப்படித்தான். எதற்காக என்று கேட்டால் எப்போதும் இது போன்ற பொதுவான பதிலே வரும்.

சுந்தரத்தின் பிள்ளைகள் படிப்பது இதே அபுதாபியில் வேறொரு பள்ளியில். ராஜனின் பிள்ளைகள் படிப்பது அபுதாபி இந்தியன் ஸ்கூலில்.

என்ன தொடர்பில் இந்த விவரம் தேவைப்படுகிறதென்று ராஜனால் கணிக்க முடியவில்லை.

அவர்கள் அலுவலகம் இருக்கும் இடத்தில் இருந்து, எந்த சாலையில் போய் எங்கு திரும்ப வேண்டும், டிராபிக் இல்லாவிட்டால் எவ்வளவு நேரமாகும் என்று எல்லா விவரங்களையும் தெளிவாக சொல்லிவிட்டு, கணிணிப்பக்கம் திரும்பி வேலையை பார்க்க ஆரம்பித்தான் ராஜன்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் “இங்க வாங்க…இந்த ரோடுதானே சொல்றீங்க?” என்று அழைத்த சுந்தரத்தின் கணினியில், கூகிள் மேப்பில் திறக்கப்பட்டிருந்த வரைபடத்தைப் பார்த்தான் ராஜன்.

அவர்கள் அலுவலகத்தில் இருந்து அபுதாபி இந்தியன் ஸ்கூல் வரையான வரைபடம். எல்லா சாலைகளும் வளைவுகளோடு தெளிவாக காட்டப்பட்டிருந்தன.

ராஜன் மறுபடியும் தான் சொன்னவற்றை அந்த வரைபடத்தில் சுட்டிக்காட்டி விளக்கினான். சுந்தரத்தின் முகத்தைப் பார்த்தபோது புரிந்தது போல் இருந்தது.

இல்லையென்று அடுத்த பத்து நிமிடத்திலேயே தெரிய வந்தது.

அலுவலகத்தை ஒட்டியிருந்த டீ கடைக்குப் போய்விட்டு, ராஜன் தன் இருக்கைக்கு திரும்பியபோது, சுந்தரம் யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

இருக்கையில் ராஜன் உட்காரவும், சுந்தரம் பேச்சில் ‘அபுதாபி இந்தியன் ஸ்கூல்’ என்று அடிபடுவது கேட்டதில், திரும்பி சுந்தரத்தின் கணினியைப் பார்த்தான். அதே வரைபடம்.

ராஜன் சொன்ன எல்லாவற்றையும் தொலைபேசியில் யாரிடமோ மீண்டும் ஒருமுறை கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டிருந்தார்.  

ராஜன் எதுவும் காதில் விழாததுபோல் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

இதுதான் சுந்தரம். எதையும் ஒன்றுக்கு இரண்டு முறையல்ல, பலமுறை சரி பார்ப்பது.

ராஜனிடமும் ஜாக்கிரதை உணர்வு உண்டு. ஆனால் சுந்தரத்திடம் இருப்பது அதீத ஜாக்கிரதை உணர்வு.  

இன்று, எந்தக் கேள்வியும் இல்லாமல் ஆழ்ந்த முனைப்போடு வேலை செய்யும் சுந்தரத்தைப் பார்க்க, ராஜனுக்கு கொஞ்சம் சந்தோசமாகக் கூட இருந்தது.

எல்லாம் அடுத்த அரைமணி நேரம்தான்.

“ஊருக்கு டிக்கட் ரேட் என்ன… இவ்ளோ சொல்றானுங்க?” என்ற சுந்தரத்தின் பக்கம் திரும்பினான் ராஜன். அன்றைக்கான விஷயம் இதுதான் போலிருக்கிறது.

“எவ்ளோ சொல்றானுங்க?”

“1200 திராம்ஸ்.?”

 இது அவ்வளவு ஒன்றும் அதிகமில்லை. ஹாலிடே சீசனில் 2500, 3000 திராம்ஸ் வரையெல்லாம் போகும்.

“என்ன எதுவும் சொல்ல மாட்ரீங்க…இது ஓகேவா?”  

“ஓகேதாங்க…ஜூலை ஆகஸ்ட்ல மூணாயிரம் வரைக்கும் போகுமே…”

“ஓ’ என்ற சுந்தரத்தின் குரலில் கொஞ்சமல்ல நிறையவே வருத்தம் இருந்தது.

“ஊருக்குப் போறீங்களா…என்ன இந்த மார்ச் மாசத்துல? ஸ்கூல் லீவு ஜூலைதானே?”

“ஒரு வாரம்தான் போறேன். கொஞ்சம் வேலை இருக்கு…” என்று எழுந்து கிச்சன் பக்கம் போய் ஒரு காப்பி எடுத்துக் கொண்டு வந்தார்.

அடுத்த நாளில் இருந்து நடந்தவைதான் ரொம்ப சுவராஸ்யமானவை.

தினமும் காலை, மதியம், மாலை என்று அந்த ஏர்லைன்ஸ் தளத்தில் ஊருக்கு டிக்கட் விலை எவ்வளவு என்று பார்த்துக்கொண்டே இருந்தார்.

ஒருநாள் காலை 1000 திர்ஹாம்ஸ் என்று காட்டியது.

அவ்வளவுதான். உடனே அந்த ஏர்லைன்ஸ் கால் சென்டரை அழைத்து ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

ராஜன் காதில் விழுந்ததில் புரிந்தது இதுதான்.

சுந்தரம் பயணிக்க இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன.

“இப்போதைய டிக்கட்டைக் கான்ஸல் செய்து விட்டு, புதிய டிக்கட் எடுத்தால் ஏதாவது சார்ஜ் உண்டா? புது டிக்கட் 1000 தான். மீதம் 200 திர்ஹாம் திரும்ப எப்படி என் க்ரெடிட் கார்டுக்கு வரும்?”

அவரது வழக்கம் போல, பலமுறை திரும்பத் திரும்ப கேட்டு உறுதி செய்தபின் டிக்கட்டை மாற்றி புக் செய்தார்.

ஒரு பெரிய திருப்தியோடு ராஜனிடம் டிக்கட்டை மாற்றி புக் செய்தது, அதில் இருநூறு சேமித்தது என்று எல்லாவற்றையும் விளக்கினார்.

ராஜன் “பெரிய ஆளுங்க நீங்க” என்று சுந்தரத்தின் விவேகமான செயலைப் பாராட்டியதுடன் அந்த ஞாயிறு இனிதே கழிந்தது.

மறுநாள் வாராந்திர ப்ராகிரஸ் மீட்டிங்கில் கலந்து கொண்டுவிட்டு பதினோரு மணிபோல் வந்த ராஜன், சுந்தரம் உரத்த குரலில் யாருடனோ தொலைபேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தபடி தன் இருக்கையில் அமர்ந்தான்.

லேசாகத் தலைவலிப்பது போல் இருந்தது. பக்கத்தில் ஒலித்துக்கொண்டிருந்த சுந்தரத்தின் சப்தத்தில் தலைவலி இன்னும் அதிகமாகும்போல் இருந்தது.

எழுந்து கிச்சன் போய் எவ்வளவு தாமதமாக காபி தயாரிக்க முடியுமோ அவ்வளவு தாமதத்துடன் தயாரித்து அங்கேயே நின்றபடி குடித்துவிட்டு, இருக்கைக்கு ராஜன் திரும்பியபோது சுந்தரம் தொலைபேசி முடித்திருந்தார்.    

சுந்தரத்தின் முகத்தில் தெரிந்த படபடப்பில் ஏதோ சரியில்லை என்று தெரிந்தது.

அவராகவே சொல்வார் என்று வேலையைப் பார்க்க ஆரம்பித்தான் ராஜன்.

சொல்லாவிட்டால்கூட நன்றாக இருக்குமென்று கூடவே தோன்றியது.

கொஞ்ச நேரத்தில் “இப்படிப் பன்றானுங்க” என்ற சுந்தரத்தின் குரலில் “என்னங்க?” என்று அவர் பக்கம் திரும்பினான் ராஜன்.

“இங்க பாருங்க” என்று அவர் அழைத்துக் காட்டிய கணினித்திரையில், அந்த ஏர்லைன்ஸ்-ல் இருந்து வந்திருந்த மின்னஞ்சலில் இப்படிக் குறிப்பிட்டிருந்தது:

 “உங்கள் பயணத் தேதி மாற்றம் செய்யப்பட்ட வகையில் (பழைய டிக்கட் கான்செல் சார்ஜ் எல்லாம் சேர்த்து) கூடுதலாக இருநூறு திர்ஹாம்ஸ் உங்கள் க்ரெடிட் கார்டில் சார்ஜ் செய்யப்பட்டுள்ளது…”

கடந்த நாட்களில் சுந்தரம் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் சேமிக்க முற்பட்ட அதே இருநூறு திர்ஹாம்ஸ்.

இருநூறு சேமிக்க முற்பட்டு கூடுதல் இருநூறு கைவிட்டுப்போவதென்பது ஒரு ஆகப்பெரிய சோகம்தான்.

ராஜனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

வழக்கம்போல ஒரு பெரிய யோசிப்போடு சுந்தரத்தைப் பார்த்தபடி தன் இருக்கையில் அமர்ந்தான் ராஜன்.

O

Series Navigationதத்தித் தாவுது மனமேகவிதை
author

செல்வராஜ் ஜெகதீசன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *