பா.சத்தியமோகன்
***********************************************************************
எத்தனை எத்தனை கோடி உயரத்திலிருந்து
வானிலிருந்து அத்தனை விரைவாய்
மழைக்கட்டி கீழே விழுவது
ஒரு கருப்புத் தார்ச்சாலையில் வீணே மோதி
சில்லௌ சில்லாக உடையத்தானா
எனும் துக்கத்தில் பெருங்குரலாய்க் கேட்டது
தார்ச்சாலையெங்கும் சிலீர் சிலீர் உடைப்புகளின் ஒலிகள்
கேரம் போர்டில் ஸ்டிரைக்கர் மோதித் தெறிக்கும் காயின்கள் போல
முன்னே ஒரு டயர் வண்டியின் மாடுகளின்
கன்னத்தில் ஆயிரம் ஆலங்கட்டிகளிலொன்று மோதி
மூக்கணாங்கயிறுடன் ஆடுகின்றது
வண்டி இடுக்கும் வெள்ளை மாட்டின் தலை
வண்டிப் பயணம் நிற்கவில்லை
உணர்ச்சியற்றவை சாலையின் சரளை கற்கள்
சில தவளைகள் யாரோ கல்லெறிவதாய் உணர்ந்து
தாவிடும் அதேகணத்தில்
குறுக்கே சிலுப்பி ஓடுகின்றது சிலீரென
நனைந்து நனைந்து ஊறிப்போன நாய் உடம்பு ஒன்று.
அரைக்கால் சட்டைச் சிறுவன் ஒருவன்
பனிக்கட்டிகளை எடுத்து வாயில் இடுவான் ருசித்து
அப்பா திட்டும் முன்னர்
தோட்டத்துப் பப்பாளிக்கிளை ஒன்று முறிந்து
ஆலங்கட்டி மழை பெருமை பேசி மழையிடம் பால் பருகும்
பால் வடியும் பப்பாளி மரம் தனது பாலை இழக்கும் மரத்தோடு
எவ்வளவு நேசித்து இவர்களிடம் வந்தோம்
எப்படி இந்த மனிதர்கள் அலைகிறார்கள் வெறுப்பின் குடையுடன்
மழை முற்றும் அவசியமில்லை போன்ற நடையுடன்
கிடைத்தது என்று வியந்து மின்னியது வானம்
தார்ச்சாலை தார்ச்சாலை என்று கதறியபடியே
பெய்து கொண்டிருக்கிறது ஆலங்கட்டி மழை
வயிறு பிளந்த கிணறு ஒன்று சடாரென நிரம்பிற்று
ஒரே ஒரு பெரிய ஆலம் கட்டிக்கு.
- 2026 – எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது – விருது பெறும் எழுத்தாளர்
- செம்போத்து
- மழை புராணம் : 24 : வெறுப்பின் குடை
- தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள்: இந்தியாவுக்கு உண்மையிலேயே பலன் தருகிறதா?
- ஒரு ஏவுகணையின் புலம்பல்
- கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து மா. அரங்கநாதன் எழுதிய “காடன் மலை” சிறுகதை