This entry is part 4 of 6 in the series 22 மார்ச் 2026

தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள்: இந்தியாவுக்கு உண்மையிலேயே பலன் தருகிறதா?

யுவராஜ் சம்பத்

கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியா உலக வர்த்தக அமைப்புடன் தீவிரமாக இணைந்து செல்ல முயன்றுள்ளது. அந்த முயற்சியின் முக்கிய அங்கமாகப் பல நாடுகளுடனும் பிராந்திய கூட்டமைப்புகளுடனும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் (Free Trade Agreements – FTA) கையெழுத்திடப்பட்டுள்ளன. இன்றுவரை இந்தியா சுமார் 18-க்கும் மேற்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களின் அடிப்படை நோக்கம் தெளிவானது  சுங்கவரித் தடைகளைக் குறைத்து, நாடுகளுக்கிடையே வர்த்தகத்தை அதிகரித்து, இந்தியாவின் ஏற்றுமதியை உலகச் சந்தைகளில் உயர்த்துவது. ஆனால், இன்று ஓர் அடிப்படை கேள்வி எழுகிறது: இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கு உண்மையிலேயே எதிர்பார்த்த பலனை அளித்துள்ளனவா?

எதிர்பார்ப்பு மற்றும் நிஜ நிலை:

தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களின் தத்துவம் எளிமையானது. சுங்கவரி குறைந்தால், வர்த்தகம் அதிகரிக்கும்; போட்டி உயரும்; உற்பத்தித் திறன் மேம்படும்; ஏற்றுமதி வளர்ச்சி அடையும். ஆனால் தரவுகள் வேறு கதையைச் சொல்கின்றன. பல ஒப்பந்த நாடுகளுடன் இந்தியா வியாபாரச் சமநிலையை இழந்துள்ளது. இந்தியா அதிகமாக இறக்குமதி செய்கிறது; ஆனால் அதே அளவில் ஏற்றுமதி செய்ய முடியவில்லை.

2025–26 நிதியாண்டின் ஆரம்பத் தரவுகளின்படி, இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 38 பில்லியன் டாலராக இருந்தபோதிலும், இறக்குமதி 70 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இந்தப் பெரிய வித்தியாசத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று  மூலப்பொருட்கள் மற்றும் எரிசக்திக்கான வெளிநாட்டுச் சார்பு. குறிப்பாகக் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மறைமுகத் தடைகள்: Non-Tariff Barriers.

சுங்கவரி குறைக்கப்பட்டாலும், வர்த்தகத் தடைகள் மறைந்து போகவில்லை; அவை வடிவம் மாறியுள்ளன. இது ஒரு சூழ்ச்சியாகவே கருதப்படுகிறது .இப்போது உலக வர்த்தகத்தில் முக்கியமான சவால்  ‘Non-Tariff Barriers’ அல்லது வரியில்லாத தடைகள். இவை பல வடிவங்களில் தோன்றுகின்றன:

  • கடுமையான தரச் சான்றிதழ்கள்.
  • சுற்றுச்சூழல் விதிமுறைகள் .
  • தொழிலாளர் நலத் தரநிலைகள்.
  • டிஜிட்டல் கண்டறியும் தன்மை (Traceability).
  • கார்பன் உமிழ்வு கண்காணிப்பு.

இதனால், இந்தியாவில் ஏற்கனவே சோதிக்கப்பட்ட பொருட்களுக்குக்கூட வெளிநாட்டுச் சந்தைகளில் மீண்டும் சோதனை செய்ய வேண்டிய நிலை உருவாகிறது. இது செலவையும் நேரத்தையும் அதிகரிக்கிறது. சில நேரங்களில் இந்த பொருட்கள் இறக்குமதி தரம் இல்லை என்று சொல்லி, அந்த நடுகல் திருப்பி அனுப்பி விடுகின்றன .

சுற்றுச்சூழல் விதிமுறைகள் : புதிய வர்த்தக அரசியல்.

சமீப காலங்களில் சுற்றுச்சூழல் அடிப்படையிலான வர்த்தகக் கட்டுப்பாடுகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிமுறைகள், அதிக கார்பன் உமிழ்வு கொண்ட தயாரிப்புகளுக்கும், காடு அழிப்பு தொடர்பான உற்பத்திகளுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. இதன் தாக்கம் இரும்பு, சிமெண்ட், ஜவுளி, வேளாண்மை உள்ளிட்ட பல துறைகளில் உணரப்படுகிறது.

ஜவுளி மற்றும் ஆடைத் துறை: கடும் போட்டி

இந்த மாற்றங்கள் மிகவும் தெளிவாகத் தெரியும் துறை  ஜவுளி மற்றும் ஆடைத் துறை. இந்தியா பாரம்பரியமாக வலுவான நாடாக இருந்தாலும், வியட்நாம், கம்போடியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் குறைந்த உற்பத்திச் செலவு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் வேகமான உற்பத்தி ஆகியவற்றின் மூலம் உலகச் சந்தையில் தங்கள் இடத்தைப் வலுப்படுத்தியுள்ளன.

சில வர்த்தக ஒப்பந்தங்கள் இந்தியச் சந்தைக்கு மலிவான இறக்குமதிகளை அதிகரித்துள்ளன. ஆனால் அதனால் எதிர்பார்த்த அளவு இந்தியாவின் ஏற்றுமதி வளரவில்லை. இதற்குக் காரணங்களில் ஒன்று  இந்தியாவின் உற்பத்தி அமைப்பு. பெரும் தொழில் நிறுவனங்களை அமைப்பதில் உள்ள சிரமங்கள் .தொழிலாளர் கிடைப்பதில் உள்ள சிரமம் . மற்றும் உற்பத்தி திறன் குறைவு.  பருத்தி அடிப்படையிலான உயர்ந்த விலை தயாரிப்புகள் சில சந்தைகளில் போட்டியைச் சிரமமாக்குகின்றன.

டிஜிட்டல் கண்காணிப்பு: Product Passport காலம்

இன்றைய உலக வர்த்தகம் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது  முழுமையான கண்டறியும் தன்மை (Traceability). ஒரு தயாரிப்பு எந்த நிலத்தில் விளைந்த பருத்தியிலிருந்து உருவானது என்பது முதல், அதன் உற்பத்திச் செயல்முறை வரை அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும். இது “Product Passport” என அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த அமைப்பு இந்தியாவில், குறிப்பாகத் திருப்பூர் போன்ற தொழில் தொகுப்புகளில் (Clusters), இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இந்த “Product Passport ஒரு பொருளுக்கு /உருப்படிக்கு ஐந்து ரூபாய் செலவு ஆகிறது.

சான்றிதழ்கள்: சிறு நிறுவனங்களுக்குப் பெரும் சுமை

இன்றைய ஏற்றுமதி உலகில் பல்வேறு சர்வதேசச் சான்றிதழ்கள் அவசியமாகியுள்ளன:

  • REACH
  • OEKO-TEX
  • ESG Reporting
  • BSCI / WRAP / SEDEX

இந்தச் சான்றிதழ்களைப் பெறுவதற்கும் பராமரிப்பதற்கும் அதிகச் செலவு தேவைப்படுகிறது. பெரிய நிறுவனங்களுக்கு இது சாத்தியமானாலும், சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

திருப்பூரில் இந்தச் சேவைகள் இருக்கிறதா? ஆம்,  இயங்கி வருகிறது. திருப்பூரில் இரண்டு வகை அமைப்புகள் செயல்படுகின்றன:

1. சோதனை மற்றும் சான்றிதழ் ஆதரவு ஆய்வகங்கள் (Labs):

  • Sitra Textile Testing and Service Center.
  • Texqual Testing Services.
  • Textiles Committee.
  • இவர்கள் வேதியியல் சோதனை (Chemical testing), துணி இணக்கத்தன்மை (Fabric compliance) மற்றும் ஏற்றுமதித் தரச் சோதனை (Export standards check) போன்ற சேவைகளைச் செய்கிறார்கள்.

2. சான்றிதழ் முகமைகள் (Certification Agencies): சான்றிதழ் வழங்குபவர்கள் பெரும்பாலும் சர்வதேச அமைப்புகளாக உள்ளனர்:

  • OEKO-TEX (ஐரோப்பாவைச் சார்ந்தது)
  • GOTS (Global Organic Textile Standard)
  • BSCI / SEDEX (சமூகத் தணிக்கைத் தளங்கள்)
  • இவர்கள் திருப்பூரில் நேரடியாக அலுவலகம் இல்லாமலேயே அங்கீகரிக்கப்பட்ட தணிக்கையாளர்கள் (Auditors) அல்லது ஆலோசகர்கள் மூலம் செயல்படுகிறார்கள்.

சேவைக்கட்டணம் (யதார்த்தமான சந்தை நிலவரம்):

சான்றிதழ் வகை மற்றும் தோராயக் கட்டணம் (ஆண்டுக்கு/தணிக்கைக்கு)

OEKO-TEX           ₹1.5 லட்சம் / ₹4 லட்சம் (சோதனைக் கட்டணம் தனி)

GOTS      ₹2 லட்சம் / ₹6 லட்சம் (நிறுவனத்தின் அளவைப் பொறுத்து)

SEDEX / SMETA Audit        ₹1 லட்சம் / ₹3 லட்சம் (ஆண்டுக்கு 1-2 முறை)

BSCI Audit             ₹1.5 லட்சம் / ₹3.5 லட்சம்

WRAP    ₹2 லட்சம் / ₹5 லட்சம்

ESG / Carbon Systems         ₹5 லட்சம் / ₹25 லட்சம் வரை

மறைமுகச் செலவுகள் (Hidden Costs): சான்றிதழ் கட்டணம் மட்டுமே செலவல்ல. முறையான இணக்கத்திற்கு (Compliance) பின்வரும் செலவுகளும் உண்டு:

  • கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய (ETP) மேம்பாடு
  • மீண்டும் மீண்டும் செய்யப்படும் ஆய்வகச் சோதனைகள்
  • ஆவணப் பராமரிப்புப் பணியாளர்கள்
  • செயல்முறை மாற்றங்கள் மற்றும் தணிக்கைச் சரிசெய்தல் செலவுகள்
  • இதனால் ஒரு சிறிய நிறுவனத்திற்கு மொத்த இணக்கச் செலவு ₹10 லட்சம் முதல் ₹50 லட்சம் வரை உயரக்கூடும்.

திருப்பூர்: ஒரு திருப்புமுனை

இந்தியாவின் முக்கிய ஜவுளி ஏற்றுமதி மையமான திருப்பூர், கடந்த 30 ஆண்டுகளில் பல சவால்களைச் சமாளித்துள்ளது. ஆனால் தற்போதைய மாற்றம் முற்றிலும் வேறுபட்டது. இது வெறும் சந்தை மாற்றம் அல்ல; ஒரு கட்டமைப்பு மாற்றம் (System change).

இன்றைய சவால் சுங்கவரி அல்ல; மாறாக விதிமுறை இணக்கம், ESG தரநிலைகள், டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு ஆகியவையே. இவை அனைத்தும் இணைந்து தொழில்துறைக்குப் புதிய அழுத்தத்தை உருவாக்குகின்றன.

முதலீடு மற்றும் அரசின் பங்கு

இந்த மாற்றங்களைச் சமாளிக்கத் தொழில்துறையில் பெரிய முதலீடுகள் அவசியம்: டிஜிட்டல் கண்காணிப்பு, பசுமை ஆற்றல், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் தானியங்கித் தொழில்நுட்பம். இங்கு அரசு முக்கியப் பங்கு வகிக்க வேண்டும்:

  • பொது வசதி மையங்கள் (Common Facility Centres)
  • சான்றிதழ் பெறுவதற்கான உதவி மற்றும் ஆய்வக வசதிகள்
  • செலவுப் பகிர்வுத் திட்டங்கள் இவை இல்லையெனில், சிறு நிறுவனங்கள் நலிவடைந்து, பெரிய நிறுவனங்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் அபாயம் உள்ளது.

முடிவுரை

திருப்பூர் வீழ்ச்சியடையும் என்று யாரும் நம்பவில்லை; ஆனால் அது ஒரு மாற்றத்தின் முனையில் நிற்கிறது. சுமார் 10 லட்சம் மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தத் துறையை நம்பி வாழ்கின்றனர். தொழில்துறை இன்று கேட்பது வெறும் பாதுகாப்பு அல்ல  இந்த மாற்றத்திற்கான ஆதரவு. இந்தக் குரல் கொள்கை வகுப்பாளர்களை எட்டும்போதுதான், இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி எதிர்காலத்திலும் வலுவாகத் தொடரும்

யுவராஜ் சம்பத்…17.03.2026

Series Navigationமழை புராணம் : 24  : வெறுப்பின் குடைஒரு ஏவுகணையின் புலம்பல்