This entry is part 2 of 8 in the series 7 டிசம்பர் 2025

  1. பாவம் அவர்கள்,,,,,,

மூன்றாமவருக்குத் தெரியாத இருவர்

அல்லது முன்னூறு பேருக்கு மேற்பட்டவர்கள்

அறியாத இருபதுபேர்

அல்லது மூவாயிரம் பேருக்குக் குறைவாகவே அறிந்திருக்கும் இருநூனூறுபேர்

மில்லியன்களாகத் தம்மை பாவித்துக்கொண்டு

எல்லாவற்றையும் பற்றிக் கருத்துரைத்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

இலக்கியம்

அரசியல்,

நடனம்,

ஓவியம்,

ராப் இசை,

கர்நாடக இசை

ஊர், உறவு, நாடு,

பிரபஞ்சம், தாராளமயம்

புரட்சி, பட்சி, காட்சி,

விரகம், நரகம், மீட்சி

ஆட்சி சாட்சி

அருமை சிறுமை பெருமை கருமை

என்று அவர்கள் பேசிக்கொண்டேயிருப்பதைக் கண்ட

சிறு பறவையொன்று தாங்கமுடியாமல்

அவர்கள் மீது எச்சமிட்டது

அவர்கள் பறவை எச்சத்தைப் பற்றி

அகல்விரிவாகப் பேச ஆரம்பித்தார்கள்.

*

  • கவியும் கவிதையும்

சிரித்துச் சிரித்து மாளவில்லை யவருக்கு

’முன்னாடி’ யென்றொருவர் எழுதியதைப்

பரிகசித்து மூன்று பக்கங்கள் எழுதியவர்

’பின்னாடி’ யென்றொருவர் எழுதியதைப்

பத்து பக்கங்கள் பகடி செய்தபின்

’அன்றொருநாள்’ என்று முன்னாடி யொருவர்

எழுதியதையும்

’இன்றொரு நாள்’ என்றொருவர் பின்னாடி

யெழுதியதையும்

எண்ணியெண்ணிச் சிரித்துக்கொண்டேயிருக்கிறார்.

ஓடி யோடி தேடித்தேடி யிளைக்கும் மனதை

ரோடுரோடாய் ஆடியாடி என்றவர்

கலாய்ப்பதைக் கேட்டு

இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்று

கேட்க நினைத்தும் நினைக்காமலும்

இன்னுமின்னுமென சிரித்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்களுமவர்களுமெவர்களும்.

கண்ணாடிவீட்டுக்குள்ளிருந்து கல்லெறிந்துகொண்டிருக்

கிறவரைக் கவலையோடு பார்த்துக்கொண்டிருக்கின்றன

சொற்களும்

கவிதையும்.

 

*

  • ஆசைபேராசைநிராசை

ஆசை யாரை விட்டது?

ஆசைக்கு அளவில்லை.

ஆசையே அலைபோலே நாமெல்லாம்

அதன்மேலே……

அத்தனையும் அவர் அறிந்ததே.

ஆனாலும் –

ஆயிரம் கட்டுரைகளை எழுதிய

அபூர்வ சிந்தாமணியான அவர்

இன்னொருவர் எழுதிக்கொண்டிருந்த

இருபது கதைகளையும்

அதற்கு அவருக்குக் கிடைக்கும்

அமோக வரவேற்பையும் பார்த்து

தானும் எழுதத் தொடங்கினார்.

அதுவும் அவரைவிடப் பெரியாளாகப்

புலப்படவேண்டும் என்ற

ஆறா வெறியோடு

அவரைக் கீழிறக்கவேண்டுமென்ற

குறிப்பான இலக்கோடு.

பானை வனைபவரைப்பார்த்து ஏன் இப்படி

போட்டியிடத் தோன்றவில்லையெனக்

கேட்டபோது

பல்லைக் கடித்துக்கொண்டு

பொறுக்கியெடுத்த

கெட்டவார்த்தைகளைக்

கொட்டித்தீர்த்தார்.

தனது கதைகளை யாரும் கண்டுகொள்ளவே

யில்லையென்பதைப் பார்த்து

ஆத்திரத்தின் உச்சாணிக்கொம்பில்

ஏறிநின்றவரை

வேடிக்கைபார்த்தவாறே

கடந்துசெல்கிறது

இன்று

  • சரிநிகர்சமானமாய்

பீடங்கள் வேண்டியிருக்கிறது பப்பலருக்கு.

பீடங்களில்தான் எத்தனையெத்தனை வகைகள்!

வெளிப்படையான பீடங்கள் தகதகத்தொளிரும்

தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும்

அதில் ஆரோகணித்திருப்பவரின் அகங்காரமும்

அடங்காப்பிடாரித்தனமும்

அராஜக அட்டூழியங்களும்

அப்பட்டமாய்க் காணக்கிடைக்கும்.

அதைக்கண்டு பிரமித்துப்பார்ப்பதும்

பயப்படுவதும்

ஒதுங்கிப்போவதும்

எளிது.

புல்நுனிப்பீடங்களும் உண்டு

காற்றின் கனிவோடு நம்மைக் கைப்பிடித்து அழைத்துச்செல்லுமவை

வெகு கவனமாய் நம்மை

விருப்பத்தோடு மண்டியிடவைக்கும்.

நம் விடுதலைக்காகக் குரல்கொடுப்பதாய் அவை

நம்மை நம்பச்செய்து

நடக்கமுடியும் தனியாக என்பதையே மறக்கச்செய்து

நீளும் அவர் கையைப் பெருவரமாகப் பற்றிக்கொள்ளச் செய்யும்.

அந்தக் கை இழுத்த இழுப்புக்கெல்லாம் போகச்செய்யும்.

”நீ பரிதாபத்திற்குரியவள் நீ பலியாடாக்கப்பட்டவள்

(நாம் பரிதாபத்திற்குரியவர்கள் நாம் பலிகடாவாக்கப் பட்டவர்கள் )

என்று சொல்லிச்சொல்லியே

நான் கருணைமிக்கவன், நான் உனக்கு சாபவிமோசனம் தருபவன்

(நாங்கள் கருணைமிக்கவர்கள், நாங்கள் உங்களுக்கு சாபவிமோசனம் தருபவர்கள்)

என்று தன் மேலாண்மையை உறுதியாய்

நிறுவிக்கொள்ளும்.

அதுவேயாகுமாம் திட்டவட்டமாய்

சக கவிஞரைப் பாலின அடைமொழிக்குள்ளிட்டுக்

கட்டுடைத்தலும்.

Series Navigationநிகழ்வின் புரியாமைகள்பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் ‘தி காங்க்வெஸ்ட் ஆஃப் ஹாப்பிநெஸ்’ நூலின் அத்தியாயம் – 5 தொடர்ச்சி