This entry is part 7 of 8 in the series 7 டிசம்பர் 2025

   வளவ. துரையன்

“என்னா தொரை? நேத்திக்கு விழாவெல்லாம் பிரமாதமா நடந்திச்சா?” என்று கேட்டுக் கொண்டே சுற்றுச் சுவரின் இரும்புக் கதவைத் திறந்து கொண்டு வந்தார் பரசுராமன்.

“வா பரசு; நடந்துச்சு, நடந்துச்சு நீ இல்லாததுதான் கொறை” என்று கூறிய துரையரசன் வீட்டின் உள் பக்கம் திரும்பி, “சுகுணா யார் வந்திருக்காங்கன்னு பாரு” என்றார்.

துரையரசனின் மனைவி சுகுணா வீட்டினுள்ளிருந்து வந்தார். வந்தவுடன் அவர், “என்னாண்ணே! நேத்திக்கு ஒங்களக் காணோம்?” என்று கேட்டார்.

“நான்தான் மொதல்லியே சொல்லிட்டேம்மா. தஞ்சாவூர்ல என் தம்பி பொண்ணுக்குக் கல்யாணம்; அவசியம் நான் போயாகணும்; நான்தான் முன்னாடி இருந்து நடத்தணும்னு”

பரசுராமன் நாற்காலியில் உட்கார, சுகுணா, “இருங்க; போயிக் காப்பி எடுத்துக்கிட்டு வரேன்” என்று கூறி உள்ளே சென்றார். காலை எட்டு மணி இருக்கும். வீதியில் இருசக்கர வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. மாணவர்கள் மிதிவண்டியில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தனர். காய்கறி விற்கும் தள்ளுவண்டி ஒன்று மெதுவாகப் போனது. வழக்கம்போல மாடுகள் ஒன்றிரண்டு சாலையின் நடுவே நின்றுகொண்டு வழிமறைப்பது போல இருந்தன.

“என்னா நான் கேட்டதுக்குச் சரியா நீ பதில் சொல்லல?” என்றார் பரசுராமன்.

“என்னா கேட்ட நீ?”

“அதாம்பா விழா எப்படி நடந்ததுன்னு?”

“நடந்துச்சு, நடந்துச்சுன்னு சொன்னேன்ல”

“இல்லப்பா, என்னவோ மாதிரி சொல்றயே?

“ஆமாம் பரசு. எனக்கு மனநிறைவில்ல”

”இவரு எப்பவுமே இப்படித்தாங்க. நல்லா நடந்ததை நெனைக்கணும்ல; திருப்தியில்லன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு” என்று கூறிக்கொண்டே வந்த சுகுணா, “இந்தாங்கண்ண காப்பி” என்று சொல்லிப் பரசுராமனின் கையில் தந்தார். அதை வாங்கியப் பரசுராமன் காப்பியை ஆற்றத் தொடங்கினார்.  ஆற்றிக் கொண்டே, ?நீ சொல்லும்மா; விழா எப்படி இருந்தது? “ என்று கேட்டார்.

”விழா பிரமாதமா நடந்துச்சண்ண; எல்லாரும் வந்திருந்தாங்க; நல்ல கூட்டம். அதுவும் ஒரே பள்ளிக்கூடத்துல முப்பத்தைஞ்சு வருஷமா வேல பாக்கறாரு இல்ல. அதால எல்லா அதிகாரிங்களும் வந்திருந்தாங்க. பக்கத்து ஊருலேந்து எல்லாம் வாத்தியாருங்க வந்திருந்தாங்க. சங்கத்துக்காரங்கள்ளாம் கூட வந்திருந்தாங்க”

“ஆமாம்மா: இவன்தான் ஆசிரியர் கூட்டணியில் ரொம்ப ஈடுபாடு உள்ளவனாச்ச; எல்லாப் போராட்டத்துலயும் முன்னாடி நிற்பான். கேப்பர்குவாரி, வேலூர் ஜெயிலுக்கெல்லாம் போனவனாச்ச; அவங்கள்ளாம் வராம இருப்பாங்களா?” என்றார் பரசுராமன் சிரித்துக் கொண்டே.

துரையும் பதிலுக்குச் சிரித்தார். “அப்பறம் என்னா மனநிறைவில்லன்னு கேளுங்கண்ணே” என்று கூறிய சுகுணா காப்பிக் குவளைகளை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

கவலைகளின் ரேகைகள் ஓடிக்கொண்டிருந்தன. பழைய டி.வி, பழைய ஃரிட்ஜ், பழைய ஏ,சி, ஒங்களுக்கு வேண்டாத சாமானெல்லாம் வாங்கறோம் என்று அறிவித்துக் கொண்டே ஒரு வாகனம் மெதுவாகச் சென்றது. கேட்ட அவர் மனம் துணுக்குற்றது. நிமிர்ந்தார். மதிலின் மீது வேகமாகத் துரத்திக் கொண்டு சென்ற அணில்களையும், தன் துணையைக் கூவி அழைக்கும் மைனாவையும் பார்க்கத்தொடங்கினார்.

“என்னா தொரை? பேசாம இருக்கீங்க; அப்படி ஒங்களுக்கு என்னாதான் மனசிலக் கொறை. அவங்கதான் விழா நல்லா நடந்ததுன்னு சொல்றாங்க” என்று பரசுராமன் கேட்டார்.

“ஒண்ணுமில்லப்பா; அதை உடு”

“இல்ல ஏதோ இருக்கு. எங்கிட்ட  சொல்லலாம்னா சொல்லு”

துரையரசன் தொடங்கினார், “ஒங்கிட்ட சொல்லறதுல ஒண்ணும் தப்பில்ல; இந்தப் பள்ளிக்கூடத்துல இத்தனி வருஷம் வேல செஞ்சிருக்கோம். இங்க என்கிட்டப் படிச்ச புள்ளங்க எல்லாரும் இப்பப் பெரிய வேலைக்குப் போயி நல்லா சம்பாதிக்கறாங்க. ஆனா அது இந்த ஊரு மனுசங்களுக்குத் தெரியலயே”? அவங்கள்ள யாராவது ஒருத்தரு வந்து என்னைப் பத்தி ரெண்டு வார்த்தைப் பேசக் கூடாதான்னுதான் எனக்கு மனசில ஓரத்துல இரு கொறை” என்று கூறி முடித்தார்.

”சரி, அவங்களுக்கு விழா நடக்கிறது தெரியுமா? யாராவது அவங்களக் கூப்பிட்டாங்களா?”

“என்னாப்பா நீ? ஊரு பூரா விழாவைப் பத்திப் பேனரு வச்சிருக்காங்க; இதெல்லாம் கூப்பிட்டு வர்றதில்லப்பா; அவங்களாத் தானா வரணும்” என்றார் துரையரசன். 

“நீ சொல்றதும் சரிதான். சரி; நடந்தது நடந்து போச்சு. அதையே நெனச்சிக்கிட்டுக் கொழப்பிக்காத. நான் போயிட்டு அப்பறமா வரேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார் பரசுராமன்.

நாள்கள் சில கடந்தன. அன்றைக்கு செப்டம்பர் ஐந்தாம் தேதி. துரையரசன் காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு முழுக்கைசட்டை போட்டுக்கொண்டு காலை ஏழு மணிக்கெல்லாம் வீட்டு வாசல் போர்டிகோவில் வந்து உட்கார்ந்துவிட்டார். அடிக்கடி யாரையோ எதிர்பார்ப்பவர் போல எழுந்து தருக் கோடியையும் பார்த்தார். உள்ளே இருந்து சுகுணா காப்பி கொண்டுவந்தார்.

கொடுத்துக் கொண்டே, “என்னாங்க, காலையிலேயே குளிச்சிட்டு ஒக்காந்திருக்கீங்க? யாராவது வராங்களா? எங்கியாவது போகப் போறீங்களா? என்று கேட்டார்.

கையில் வாங்கிய அவர் காப்பியை ஆற்றிக் கொண்டே, “என்னிக்கு என்னா தேதி?  தெரியும்ல” கேட்டார்.

சுகுணாவும் பதிலுக்கு “ஆமாங்க. செப்டம்பர் மாதம் அஞ்சாம் தேதி. அதுக்கு என்னா இப்ப?” என்றார்.

“அதுக்கு என்னாவா? போன வருஷம் ஞாபகம் இருக்குல்ல. காலையில நம்பப் பள்ளிக் கூடத்துலப் பேசிட்டு, அப்பறம் ரெண்டு பள்ளிக்கூடங்களுக்குப் போயிப்பேசினேன். மதியத்துக்கு மேல ஒரு கல்லூரியில”

“ஆமாங்க, அதெல்லாம் நீங்க வேலையில இருக்கச்சதான”

“சரி, நான் இப்ப வேலையில இல்ல, அதுக்காக எனக்குப் பேசறது மறந்து போயிடுமா? இல்ல ஆசிரியர் தெனந்தான் என்னை வேணாம்னு சொல்லிடுமா?”

”சொல்றதா இருந்தா நேத்திக்கே சொல்லியிருக்க மாட்டங்களா?”

“மறந்திருப்பாங்க; எங்கப் போயிடப் போறன்? இங்கதான இருக்கேன்னு காலையிலச் சொல்லிக்கலாம்னு  நெனச்சிருப்பாங்க; இப்பக் கூட வந்திடலாம்”

”சரி நீங்கக் காத்துக்கிட்டு ஒக்காந்திருங்க” என்று சிரித்துக் கொண்டே உள்ளே சென்றுவிட்டார் சுகுணா.

துரையரசன் காத்திருந்தார். காத்திருந்தார். காலம் நகர்ந்தது. சிற்றுண்டி முடித்து மீண்டும் வந்து உட்கார்ந்தார். அவர் எழுந்து எழுந்து பார்த்ததுதான் மிச்சம். யாரும் வரவில்லை. நேரம் செல்லச் செல்ல அவர் முகம் வெயில் ஏறும்போது வாடும் இளம் தளிராக வதங்கத் தொடங்கியது. மணி பதினொன்று ஆகிவிட்டது. “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்” என்று அவர் கைப்பேசி ஒலித்தது. அவர் முகத்தில் மகிழ்ச்சி துளிர்விட கைபேசியை இயக்கினார். ஏதோ புதிய எண்.

”வணக்கம், யாருங்க?” என்றார்.

“ஐயா, நான் கதிரவன் பேசறேன்” என்று பதில் வந்தது. அவருக்குப் புரியவில்லை, எந்தக் கதிரவன்? அவருக்கு அண்மைக் காலத்தில் கதிரவன் என்று யாரையும் தெரியாது. எனவே பேசாமல் யோசிக்க, மீண்டும் ”ஐயா” என்று குரல் கேட்டது.

”சரி, சொல்லுப்பா; எந்தக் கதிரவன்”

”அதான்யா, நீங்கதானப் பேருவச்சிங்க; கணக்குக் கதிரவன்”

அவ்வளவுதான், சட்டென்று துரையரசனுக்கு விளங்கிவிட்டது, “ஓ, நீயாப்பா, நல்லா இருக்கியா? இப்ப எங்க இருக்க? என்னா வேலை செய்யற?” என்றெல்லாம் கேட்கத் தொடங்கிவிட்டார்.

”ஐயா, அடையாளம் தெரிஞ்சுட்டுதா? இப்ப நம்ம ஊர்லேந்துதான் பேசறேன்யா; ரெண்டு நாள் முன்னதான் வந்தேன். பள்ளிக்கூடம் போனப்பறம்தான் நீங்க இல்லன்றதும் விழா நடந்ததும் தெரிஞ்சுது”

”என்னுடைய கைப்பேசி எண் யார் தந்தது?”

“தலைமை ஆசிரியர் கொடுத்தாருங்கய்யா:  கடலூர்ல நீங்க இருக்கற முகவரியும் தந்தாருய்யா. இன்னும் ஒரு மணிநேரத்துல அங்க இருப்பேன்யா? எங்கியும் போயிடாதீங்க” என்று அவன் கூறக் கூற அவர் முகம் மலர்ந்தது.

ஆசிரியர் பற்றாக்குறையால் அந்த நடுநிலைப் பள்ளியிலவர் கணக்கும் கற்பித்தார். எட்டாம் வகுப்பில் படித்த இந்தக் கதிரவன் கணக்குப் பயிற்சிகளில் மாதிரிக்கு ஒரு கணக்கைச் செய்து தந்தால் போதும். அவனே விரைவாக மீதிக் கணக்குகளைச் செய்து விடுவான். எப்பொழுதும் கணக்கில் நூற்றுக்கு நூறுதான். அதனால்தான் அவனுக்கு அவர் கணக்குக் கதிரவன் என்று பட்டம் சூட்டினார்.

உள்ளே சென்று, “சுகுணா எங்கிட்டப் படிச்சவன் கணக்குக் கதிரவன் வரானாம். இப்பப் பேசினான். ஒனக்கு ஞாபகம் இருக்குல்ல?

“ஆமாங்க. நீங்க சொல்லிக்கிட்டே இருப்பீங்க; அவன் கணக்குலப் புலின்னு”

துரையரசன் உற்சாகமாகப் பதில் சொன்னார். “அந்தப் புலிதான் இப்ப இங்க வரப் போவுதாம்.”

”அப்படியா?” ஆச்சரியமாகக் கேட்டார் சுகுணா.

“ஆமாமாம். பாத்துக்கிட்டே இரு” என்றார் துரையரசன்/

சிறிது நேரம் சென்றது. ஏதாவது இருசக்கரவாகனச் சத்தம் கேட்டால் அவர் வாசலுக்கு ஓடிப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எதிர்பார்த்த வாகனமும் வந்தது. அதிலிருந்து முப்பது வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன் இறங்கினான். ஹெல்மெட்டைக் கழற்றி ஒரு கையில் வைத்துக் கொண்டான். மறு கையில் கனமான ஒரு கட்டைப் பை இருந்தது. பார்த்த உடனேயே அவருக்கு அவனை அடையாளம் தெரிந்துவிட்டது. சத்தம் கேட்டு சுகுணாவும் வாசலுக்கு வந்தார்.

“வா, வா கதிரவா” என்று அன்பு பொங்க அழைத்தார். அவனும் சிரித்துக் கொண்டே “வணக்கம் ஐயா, வணக்கம்மா” என்று கூறிக் கொண்டே  வந்தான் கதிரவன்.

“வா, வா, உள்ள வா” என்று அவனை உள்ளே கூடத்துக்கு அழைத்துச் சென்றார். “அம்மா. ஒரு பெரிய தட்டு குடுங்கம்மா” என்றூ கேட்டான் கதிரவன். சுகுணா  கொண்டு வந்த பையிலிருந்து ஒரு சீப்பு ரஸ்தாளி வாழைப்பழம், நான்கு ஆப்பிள்கள், இரண்டு மாதுளம்பழங்கள், மூன்று ஆரஞ்சுப் பழங்கள்  எடுத்துத் தட்டில் வைத்தான்.

”ஐயா, அம்மா, இப்படி வாங்க” என்று அவர்கள் இருவரையும் நிற்க வைத்துத் தட்டை அவர்கள் முன்வைத்துக் காலடியில் விழுந்து கும்பிட்டான் கதிரவன்.

“என்னப்பா இதெல்லாம்” என்றார் துரையரசன். “நாங்க  ரெண்டு பேர்தாம் இருக்கோம். எதுக்கு இவ்ளோ பழங்கள்” என்றார் சுகுணா.

“இருக்கட்டும்மா; ஒங்களுக்கு நான் இன்னும் நெறைய செய்யணும்” என்று சிரித்தான் அவன். “சரி இப்படி உட்காரு. ஒன்னைப் பத்தி சொல்லு; இப்ப நீ எங்க இருக்க?” என்றார் துரையரசன்.

”ஐயா நான் இப்பக் கோவையில இருக்கன், அங்க ஒரு வங்கியில   வேலை செய்யறேன்”

”அப்படியா” என்று ஆச்சரியத்தோடு. கேட்டார் துரையரசன்.              

”ஆமாங்கய்யா. ஒங்களுக்கு ஞாபகம் இருக்கா? முன்ன இங்க எங்கத் தெருவுல ஒரு கலவரம் நடந்துச்சே?”

”ஆமாம்பா ஒங்களுக்குள்ளே ஒறவுக்காரங்க சண்டை”

”ஆமாம்யா; அதுக்கப்பறம் இந்த ஊரே வேண்டாம்னு எங்க அப்பா நெலத்தையும் குத்தகைக்கு உட்டுட்டு வீட்டை வாடகைக்கு உட்டுட்டு எங்கம்மா ஊரானக்  கோயம்புத்தூருக்கு வந்துட்டாரு, போன ஒடனேயே என்னை ஒரு தொழிற்சாலையில வேலைக்கு சேரச் சொன்னாரு, நான்தான் ஒங்க பேரச் சொல்லி என்னை நல்லாப் படிக்கணும்னு சொல்லியிருக்காரு. நீங்க படிக்க வைங்கன்னு பிடிவாதம் பிடிச்சேன்; அங்கதான் என்னைப் படிக்க வச்சாரு. பட்டம் முடிச்சு வங்கித் தேர்வு எழுதி வேலையில் சேந்துட்டேன்” என்று கூறி முடித்தான் அவன்.

”அதுக்கப்பறம் இங்க வர்றதே இல்லியா” என்று கேட்டார் சுகுணா.

 “இல்லம்மா அப்பாருக்கு ஒறவே வெறுத்துப் போச்சு. தவிரக் குத்தகை, வாடகை எல்லாம் வங்கியிலக் கட்டிடறாங்க”

“சரி, எப்படி திடீர்னு எங்க ஞாபகம் வந்திச்சு?” எனக் கேட்டார் துரையரசன்.

“ஒங்கள எங்க மறந்தேங்க? நான் இப்ப இருக்கற நெலைக்கு நீங்கதான்யா காரணம்? போகணும் போகணும்னு சொல்லும்போதெல்லாம் அப்பா வேண்டம்னு தடுத்துக்கிடே இருப்பாரு. இப்ப ஒறவு கொஞம் சீராயிருக்கு, போயிட்டு வாடான்னாரு.

“அதுவும் இன்னிக்கு ஆசிரியர் தினமில்லையா? எப்படியும் போயிடணும்னு நான் வந்துட்டேன். இன்னமும் ஊர்ல யாரையும் பாக்கல. இருஇருன்னாங்க; மொதல்ல ஒங்க ரெண்டு பேரையும் பாத்துட்டுதான்னு வந்துட்டேங்கய்யா”

துரையரசன் கண்களில் நீர் திரண்டு விட்டது. மறைத்துக் கொண்டார்.

கதிரவனுக்கு பிஸ்கட்டுகளும் காப்பியும் வற்புறுத்திக் கொடுத்தார்கள் துரையரசனும் சுகுணாவும்.

அவன் சென்ற பிறகு, “ஏங்க இப்ப மனநிறைவுதான,” என்றார் சுகுணா. துரையரசன் சிரித்தார்.

Series Navigationநினைப்பும் பிழைப்பும் பச்சா பாசி – அத்தியாயம் மூன்று