அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர்
சாப்பு திலக்கு சபு சீனி லீரே மோசே நேனா மிலைக்கே
உன் நொடிநேரப் பார்வையிலேயே
எனது பிம்பத்தைத் திருடிக்கொண்டாய் எனது அடையாளத்தைத் திருடிக்கொண்டாய்
உன் நொடிநேரப் பார்வையிலேயே
நான் காதல் மதுவைக் குடிக்க வைத்து எனை போதைக்குள் தள்ளிவிட்டாய்
உன் நொடிநேரப் பார்வையிலேயே
என் வெளிர் மணிக்கட்டு தழுவிய காப்புக்கள் இறுக வைத்தாய்
– கஜல் கவிஞன் அமீர் குஸ்ரு
திருமதி ஆயிசா பேகம், தக்கார் மாகாணம், ஆப்கானிஸ்தான்
அந்தப் பண்ணை வீட்டில், குல்பாரியையும், அந்தப் பச்சா பாசிப் பையனையும், நான் அந்தக் கோலத்தில், அதுவும் அவ்வளவு நெருக்கமான உடல் இணைப்பில், நான் பார்ப்பேன் என, நான் ஒரு போதும் நினைக்கவில்லை.
குல்பாரி மீது இவ்வளவு ஆசை வைத்து இருக்கும் அந்த பச்சாபாசிப் பையன், உண்மையில் ஒரு ஆணா அல்லது பெண்ணா? எனக்கு அவனை நினைத்து ஆச்சரியம் ஆக இருந்தது. இந்த பச்சாபாசிப் பையனைக் குறித்து நான் குல்பாரியிடம் கேட்கும்போது எல்லாம் அவனைப் புகழ்ந்து தள்ளுவாள் குல்பாரி.
அந்த பச்சாபாசிப் பையன் பெயர் நபீலாம். நன்றாக கஜல் பாடுவனாம். அதுவும், பெரும்பாலான கஜல் கவிதைகளுக்கு, அவனே இசை அமைத்துப் பாடும் அளவிற்கு திறமை உள்ளவனாம்.
நான் கஜல் கவிதைகள் பற்றி கேள்விப்படாதவள் அல்ல. ஆனால், அதில் உள்ள விஷயங்கள் குறித்து, நான் இதுவரை அவ்வளவு ஆர்வம் காட்டியவள் இல்லை. ‘ஏதோ காதல் கலந்த கஜல் பாடல்கள். சில இறைவன் மீதான காதல் கஜல் பாடல்கள்.’ அவ்வளவுதான் கஜல் பாடல்கள் மீதான எனது அறிவும் அக்கறையும்.
மாமாதான், விடாமல் கஜல் பாடல்கள் கேட்பவர். அது குறித்து அதிகம் பேசுபவர். உண்மையில், மாமாவை, ஒரு கஜல் பைத்தியம் என்றே சொல்லிவிடலாம். அப்படி ஒரு கஜல் ரசிகர் அவர்.
ஆனால், முதல் முறையாக, மாமா இல்லாத போது, இன்று, இந்த கஜல் பாடல், எங்கள் வீட்டு கிராமபோனில் ஓடிக்கொண்டு இருக்கிறது. மாமா இது போன்ற பாடல்களை, கிராமபோனில் போட்டு ரசிக்கும்போதெல்லாம், நான் உள்ளறைக்குப் போய்விடுவது வழக்கம். ஆனால், ஏனோ, இவை போன்ற காதல் கஜல் பாடல்களை, எனக்கு இன்று, கேட்கவேண்டும் என்று தோன்றியது.
நான் எப்போதும் வீட்டில், ஆன்மீகப் பாடல்கள் கேட்பதே வழக்கம். இந்த ஐம்பது வயதில் மட்டும் அல்ல. எனது சின்ன வயதில் இருந்தே, எனக்கு ஆன்மீகப் பாடல்கள் கேட்பதில்தான் மிகுந்த விருப்பம்.
எனது கணவர் ரபீக் மாமாதான், இந்த மாதிரிப் பாடல்களை மட்டுமே, கேட்டுக் கேட்டு மகிழ்வார். அவர் வீட்டுக்கு வந்தாலே, அமீர் குஸ்ரு போன்றோர் எழுதிய கஜல் கவிதைப் பாடல்களையே, எப்போதும், எங்கள் வீட்டு கிராமபோன் பாடிப் பாடி தேயும்.
கிராமபோனோடு சேர்ந்து மாமாவும் பாடுவார். சில நேரம் ஆடுவார். சில நேரம் என்னிடம் வம்பிழுக்க முயற்சி செய்வார். ஆனால், அது போன்ற நேரங்களில், நான் அவரது சுதந்திரத்திற்கு எப்போதும் கட்டுப்பாடு விதித்தது இல்லை. அவரது சந்தோசமான முகத்தைப் பார்ப்பதில் நானும் ஆனந்தம் அடைந்து கொள்வேன். கொஞ்ச நேரம் கழித்து, நானே உள்ளறைக்குள்ளோ அல்லது சமையல்கட்டுக்குள்ளோ புகுந்து கொள்வேன். அவரது கஜல் பாடல்களை மறந்து போவேன்.
மும்பை போன்ற ஒரு பெருநகரம், ஆப்கானிஸ்தான் நாட்டுக்குள் இருந்தால், மாமா இந்நேரம் ஒரு பெரிய கதாநாயகன் ஆகி இருப்பார். அவ்வளவு அழகு. அவ்வளவு ஆண்மை.
ஆனால் இந்தப் பச்சா பாசிப் பையனிடம், எந்த விதப் பெண்மையும் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாய், வேலைக்காரி குல்பாரியின் உடம்புக்குத்தான், அந்த பச்சாபாசி அலைகிறான்.
இதெல்லாம் எனது கணவர் ரபீக் மாமாவுக்குத் தெரியுமா? எனக்கு சந்தேகம் ஆக இருந்தது.
வேலைக்காரி குல்பாரி சொன்னபடியே, அந்த பச்சா பாசி நன்றாக கஜல் பாடல்கள் பாடட்டும். அவன் பாடுவதிலேயே எனது ரபீக் மாமா மயங்கியும் கிடக்கட்டும். ஆனால் இந்த பச்சாபாசியிடம் அப்படி என்ன பெண்மை இருக்கிறது? ஒரு வேலை ரபீக் மாமா ஒரு ஆண்-ஆண் காதல் பித்தரோ?
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படி என்ன இந்த கஜல் கவிதைகளில் ஆண்-ஆண் காதல் ரசம் இருக்கப் போகிறது?
இதோ இப்போது இந்த கிராமபோன் இசைக்கும் அமீர் குஸ்ருவின் இந்த கஜல் பாடலில், எங்கே இருக்கிறது ஆண்-ஆண் காதல் ரசம்? எனக்கு குழப்பமாக இருந்தது.
உண்மை என்ன தெரியுமா? ரபீக் மாமாவின் இந்த பச்சா பாசி விசயம், எனக்கு பல வருடங்களாகத் தெரியும். ஆனால், அதில் எனக்கு பாதி சந்தோசம் இருந்தது என்பதும் உண்மைதான்.
கல்யாணம் ஆகி, முதல் வருடத்திலேயே, நான் கர்ப்பமானேன். குழந்தை எப்படிப் பிறக்குமோ என்ற கவலை, குழந்தை பிறந்தபின், அவனை எப்படி கவனிப்போம் என்ற கவலை..
இப்படி குழந்தையின் மீதுதான் எனது எல்லா கவனமும் என்று என்னால் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. மாமா மீதும் எனது கவனம் அதிகமாக இருந்தது என்பதும் என்னவோ உண்மைதான்.
ஆனால்.. ஆனால் அவர் மீதான எனது கவனத்தை படுக்கையறை வரை கொண்டு செல்வதில் எனக்கு நிறையவே சிரமம் இருந்தது. குழந்தை பிறந்த பிறகு, உடல் ரீதியான எனது ஆசைகள், நிறையவே குறைந்து போய் இருந்தன. இது மட்டும்தான் எங்கள் வாழ்வில் ஒரு குறை.
இந்த படுக்கையறை விஷயங்கள் தவிர. மற்ற எல்லா இல்லறம் சார்ந்த விசயங்களிலும், நாங்கள் சந்தோசமாகவே இருந்தோம். இப்போதும் இருக்கிறோம்.
ரபீக் மாமா, எனது சமையலுக்கு அடிமை. எப்போதும் என் சமையலின் சுவையை பாராட்டிக்கொண்டே இருப்பார். எனது வீட்டை நேர்த்தியாக வைத்து இருக்கும் அந்த எனது திறமைக்கு’ அவர் அடிமை. ஏன், அந்த, எனது உடம்பிற்கும் அவர் அடிமைதான். இன்று வரை, உடலுறவில் அவர் சமர்த்தர்தான்.
ஆனால், எனக்குத்தான் அந்த உடலுறவுகளில் பெரிய ஆர்வம் இல்லை. படுக்கையறையில் மரக்கட்டை போல் படுத்து, அவரே என் உடம்போடு பசியாறிக்கொள்ள வேண்டும் என்று விட்டு விடுவேன். எங்கே, எனது உடலுறவு மீதான ஆசையின்மையைப் புரிந்துகொள்வாரோ என்ற ஐயத்தில், சில நேரங்களில் நான் கொஞ்சம் அதிகமாக நடிப்பேன்.
ஆனால் மாமா புத்திசாலி. இது போன்ற காமக்கலைகளில் நிறைய ஆர்வம் உள்ளவர். எனக்கு அதிக ஆர்வம் இல்லை என்பதை முழுமையாக உணர்ந்து கொண்டவர்தான் மாமா. இருப்பினும், என்னிடம் ஏதும் குறையாகப் பேச மாட்டார் மாமா.
ஆனால், எனக்குத்தான், அது போன்ற இக்கட்டான வேளைகளில், எப்போதும் கொஞ்சம் குற்ற உணர்ச்சி வந்து போகும்.
ஆனாலும் கூட, நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிகம் அன்பு காட்டிக்கொள்ளத் தவறவில்லை. ஒருவர் உணர்வுகளை, இன்னொருவர் மதிக்கத் தவறவில்லை. உண்மையில், அந்த அன்பும், மதிப்புமே, எங்கள் இல்லறவாழ்வின் வெற்றி.
கொஞ்ச நாள் கழித்துதான், இந்த பச்சாபாசி விஷயம் எனக்குத் தெரிய வந்தது. உண்மையில் எனக்கு உள்ளூர ஒரு சந்தோசம்.
மாமா, இன்னொரு பெண்ணை வைத்துக் கொள்ள ஆசைப்படவில்லை. அந்த வகையில் எனக்கு ஒரு நிம்மதி. அப்படி, அவர் இன்னொரு பெண்ணை நாடாமல் இருந்தததற்குக் காரணம், எனது அன்பு மீது, அவர் வைத்து இருக்கும் மரியாதை என்றே, நான் எப்போதும் நினைத்துக்கொண்டேன்.
எனவே, இந்த பச்சா பாசி குறித்து, நான் அதிகம் அலட்டிக் கொண்டது இல்லை. போகிற வரை இப்படியே போகட்டும் என்று விட்டு விட்டேன்.
ஆனால், இன்று நான் கண்ட காட்சி. ஐயகோ.. அந்த பச்சா பாசி, என் வீட்டு வேலைக்காரியை அல்லவா விரும்புகிறான். அப்படியென்றால், இந்த பச்சா பாசி எப்படிப்பட்டவன்?
இவன் ஆணா பெண்ணா? எனக்குக் குழப்பம் ஆக இருந்தது. இது எங்கே போய் முடியும்?. எனக்கு பயமாகவும் இருந்தது.
எனது வாழ்க்கையில், எப்போது குழப்பங்கள் வருகின்ற போதும், சிக்கல்கள் வரும்போதும், நான் எனது தாயிடம் அதிகம் பேசுபவள் இல்லை. மாறாய், எல்லாமே எனது அப்பாவிடம்தான். சந்தோசம் என்றாலும் அப்பாவிடம்தான். துக்கம் என்றாலும் அப்பாவிடம்தான்.
அப்பா பெரும் பணக்காரர் மட்டுமல்ல. சிறந்த கல்விமானும் கூட. காபூல் நகரில், ஓர் தனியார் பள்ளிக்கூடம் வைத்து நடத்துகிற அளவுக்கு வசதியானவர். ஆங்கிலம், உருது, பாரசீகம், ஆப்கன் மொழி, ஹிந்தி போன்ற அத்தனை மொழிகளிலுமே, அப்பா வித்தகர்தான்.
உயர்நிலைப் பள்ளி வரை, எங்கள் அப்பா நடத்திய சொந்தப் பள்ளிக் கூடத்திலேயே படித்து முடித்தேன். ஆனால், அப்போது நடந்த போர்ச் சூழ்நிலைகளைப் பார்த்துவிட்டு, நான் கல்லூரி சென்று படிக்க, அம்மா ஒத்துக்கொள்ளவேயில்லை.
அதனால் என்ன. அப்பா எனக்கு வீட்டிலேயே கல்லூரிப் பாடங்கள் சொல்லிக் கொடுத்தார். எனக்காக வீட்டிலேயே ஒரு நூலகம் ஏற்படுத்திக் கொடுத்து, அதில், உலகின் பல புத்தகங்களை, தேடித்தேடி பிடித்து அடுக்கி வைத்து, என்னைப் படிக்கச் சொல்வார்.
அந்த புத்தகங்களில் எனக்கு ஏற்படும் சந்தேகங்களை, அப்பாவிடமே கேட்டுக் கேட்டுத் தெரிந்துகொள்வேன். அப்பாவும், தயங்காது, விலாவாரியாக எனக்கு எல்லாவற்றையும் விளக்குவார். எனது வாழ்க்கையின், ஒவ்வொரு விசயத்திலும் எனது தந்தை உண்டு.
ரபீக் மாமா, எனது அப்பாவின் வழி சொந்தம். மாமாவின் குடும்பம், எங்களைவிட மிகவும் பணக்காரக் குடும்பம். தவிர, மாமா நன்கு படித்தவர். எனவே, அப்பா, வேறு எதையும் யோசிக்காது, ரபீக் மாமாவிற்கு, என்னைக் கல்யாணம் செய்து வைத்தார்.
இங்கே இந்த கிராமத்துக்கு வாழ்க்கைப் பட்டு வந்தபிறகு, அப்பாவிற்கு அதிகம் கடிதம் எழுதப் பழகிக்கொண்டேன். இந்த கிராமத்தில், எங்கள் குடும்பத்தில் நடக்கும் அத்தனை விசயங்களையும், கடிதம் மூலமாக பகிர்ந்து கொள்ளுதல் என்பது எனது வழக்கம்.
அப்பாவும் எனது கடிதத்திற்கு மறக்காமல் பதில் கடிதம் எழுதுவார். அவரது கடிதம், ஒரு பக்கத்தில் முடிந்துவிடும் கடிதம் ஆக இருக்காது. மாறாய், ஒரு ஆசிரியர், ஒரு மாணவிக்கு பாடம் நடத்துவது போல, நீண்ட கடிதம் ஆக இருக்கும்.
அவரது அந்த நீண்ட கடிதம், எனக்கு எப்போதும் போரடித்தது இல்லை. மாறாய், எனது அன்றாட குடும்ப முடிவுகள் பலவற்றிற்கு, அவரது அந்த நீண்ட கடிதத்தில், அவர் சொல்லியிருக்கும் அறிவுரைகளே, ஒரு உந்துதல் ஆக இருந்து இருக்கும்.
ஆனால், எத்தனையோ விசயங்களை, நான் அப்பாவிடம் பகிர்ந்துகொண்ட போதும், இந்த பச்சா பாசி விஷயத்தை அப்பாவிடம் நான் இதுவரை சொன்னது இல்லை.
ஆனால், இன்றோ எனது குழப்பங்கள் என் நிம்மதியை இழக்க வைத்துவிட்டன. இப்போது எனது குழப்பம் தீர ஒரே வழி, இது குறித்து அப்பாவிடம், கடிதம் வழியே பேசுவதுதான்.
நான், கிராமபோனை நிறுத்தினேன். உள்ளறைக்குப் போய், அப்பாவிற்கு கடிதம் எழுத ஆரம்பித்தேன்.
“அன்புள்ள பாபாவிற்கு…
உங்கள் செல்ல மகள் ஆயிசா எழுதிக்கொள்வது. அல்லாவின் கருணையாலும், உங்களின் ஆசியாலும், நான், எனது கணவர் ரபீக் மாமா, குழந்தை அனைவரும் நலமாக இருக்கிறோம்.
அப்பா.. ஏதோ ஒரு மனக்குழப்பத்தோடோயே நான் எழுத ஆரம்பித்து இருக்கும் இந்தக் கடிதத்தில், உங்களையும், நீங்கள் எனக்குக் கொடுத்த கல்வியையும், இங்கே கொஞ்சம் நினைவு கூற ஆசைப்படுகிறேன் அப்பா.
ஆப்கானிஸ்தானின் காபூல் நகர வரலாறு, உங்களையும், நீங்கள் காபூல் நகருக்குச் செய்த கல்வித் தொண்டுகளையும், என்றென்றும் நினைவில் வைத்துக் கொள்ளும் அப்பா.
அப்பா, காபூல் நகரத்தில்தான் எத்தனை எத்தனை கலவரங்கள்.. எத்தனை எத்தனை கலாச்சார அழிவுகள். ஒரு புறம் சோவியத்யூனியனும், இன்னொருபுறம் அமெரிக்க ஏகாதிபத்தியமும், கூடவே நமது நாட்டு முகாஜிதீனகளும். அப்பப்பா…ஒருபுறம் பதவிவெறி. இன்னொரு புறம் மதவாதம், நம் காபூல் எல்லாவற்றையும்தான் தாங்கவேண்டி இருந்தது.
ஒரு புறம் பணக்கார மாளிகைகள், இன்னொரு புறம் ஏழைகளின் குடிசைகள், மதத்துக்கும் வறுமைக்கும் இடையில் எப்போதும் போராடிக்கொண்டு இருக்கும் காபூல் தலைநகரில், இப்போதும் கம்பீரமாக எழுந்து நிற்கும் நமது பள்ளிக்கூடம்…. அப்பா.. இந்தக் கல்விப் போராட்டம் உங்களால் மட்டுமே முடியும் அப்பா. உங்களால் மட்டுமே முடியும்.
வானத்தில் சர் சர் என்று, எப்போதும் பறக்கும் போர் விமானங்கள். இடிந்து கிடக்கும் சாலைகளில், எப்போதும் ஊரும் போர் டாங்கிகள். வீட்டுக்கு அருகே, அடிக்கடி கேட்கும் துப்பாக்கிச்சூடுகள், அதன்பிறகு ஆங்காங்கே செத்து மடியும் அவலக்குரல்கள்… ஆனால், இவைகளுக்கு இடையே, நீங்கள் நடத்திய மரத்தடிப் பள்ளிகள். மறக்க முடியாத நினைவுகள் அப்பா.
உயர் பெண்கல்வி கூடாது என்று சில மதவாதம் பிடித்தவர்கள் பிடிவாதம் பிடித்தபோதும், நீங்கள் மனம் தளராது, இல்லம் தோறும் சென்று ரகசியமாக நடத்திய, பெண்கள் உயர்கல்வித்தொண்டு, மறக்கக் கூடியதா அப்பா?
அப்பா, அப்படி நீங்கள் நடத்திய உயர்கல்வித் தொண்டால், நான் மட்டுமே பயன் பெறவில்லை அப்பா. எத்தனை எத்தனை ஆப்கானியப் பெண்கள், உங்களால் உயர்கல்வி கற்றார்கள் அப்பா? எத்தனை எத்தனை ஆப்கானியப் பெண்கள் கடல்கடந்து போய் மருத்துவர்களாகவும் பொறியாளர்கள் ஆகவும் இன்று பணி செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்பா.. அப்படி உயர்கல்வி கற்ற நாங்கள் அத்தனை ஆப்கானியப் பெண்களுமே உங்கள் கல்வித் தொண்டிற்கு நன்றிக்கடன் பட்டவர்கள்தான் அப்பா.
அப்பா.. எனக்கு நீங்கள் சொல்லிக் கொடுத்த கல்வியில், ஒரு தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாய், இந்த உலகத்தைப் புரிந்து கொண்டு வாழக் கற்றுக் கொடுத்தீர்கள். என் சுயநலத்தை மறந்து, பொதுநலத்தோடு வாழச் சொல்லிக் கொடுத்தீர்கள்.
நீங்கள் சொல்லிகொடுத்த கல்வியை வைத்தே, நான் குல்பாரி போன்ற அத்தனை இளம்பெண்களுக்கும் என்னால் இயன்ற கல்வியை போதிக்கிறேன் அப்பா.
ஆனால், நமது ஆப்கானிஸ்தான் சமூகத்தின் அத்தனை சமூக கட்டமைப்புகளையும் எனக்குச் சொல்லிக் கொடுத்த நீங்கள், இந்த பச்சா பாசி பற்றி மட்டும் எதுவும் சொல்லிக் கொடுக்காதது ஏனோ அப்பா?
இந்த பச்சா பாசியை, கலாச்சாரம் நிறைந்த இந்த ஆப்கானிஸ்தானுக்குள் யார் கொண்டு வந்தார்கள்? இது உண்மையில் இந்த சமூகத்துக்கு தேவையா அப்பா?
அப்பா… இந்த பச்சாபாசி விசயத்துக்கு, அந்தப் பையன் மட்டுமே காரணமா அப்பா? நானும் ரபீக் மாமாவும் உலகம் குறித்து இவ்வளவு படித்து இருக்கிறோம், இருந்தும், எங்கள் சுயநலத்திற்காக, நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ பச்சாபாசியை அனுமதிக்கும், நாங்கள் இருவரும் குற்றவாளிகள் இல்லையா அப்பா?
ஒரு புறம் செக்ஸ் மீதான எனது ஆர்வக் குறைவு. இன்னொரு புறம் ரபீக் மாமாவின் செக்ஸ் மீதான அதீத ஆர்வம்.. அதே நேரத்தில் ரபீக் மாமா, என் மீதும் எனது குடும்பத்தின் மீதும் காட்டும் அதீத அன்பு..
மற்றோர்புறமோ, பச்சாபாசி என்ற இந்த சிறுவர்களுடன் நடத்தப்படும் காமவிளையாட்டுக்கு,, மறைமுகமாகத் துணைபோகும், நானும் ஒரு குற்றவாளியோ என்ற தவிப்பு, வேறோர் புறம், அந்த பச்சா பாசிப் பையன், நம் வீட்டு வேலைக்காரி குல்பாரி மீது காட்டும் ஆசை.
எனக்குத்தான் இப்போது என்ன செய்வதெனத் தெரியவில்லை அப்பா. என்னால் எந்த வித முடிவுகளும் எடுக்க முடியவில்லை, இயலாமையால், எனக்குள் எப்போதும், ஒரு ஆழ்ந்த தவிப்பு ஏற்படுகிறது அப்பா.
அப்பா.. எனக்கு எப்போதெல்லாம் குழப்பங்கள் வருகிறதோ, அப்போதெல்லாம் உங்களின் மேலான ஆலோசனையைக் கேட்பது எனது வழக்கம்.
இப்போதும் எனது இந்தக் கடிதத்திற்கு உங்கள் பதிலை எதிர்நோக்கிக் காத்திருக்கும்
உங்கள் அன்புமகள்
ஆயிசா
கடிதத்தை நான் இன்னும் ஒரு முறை படித்தேன். பின், அந்தக் கடித்ததை, வீட்டு வேலைக்காரன் நாசரிடம் கொடுத்து, அவனை காபூலுக்கு அனுப்பி வைத்தேன்.
காபூலை விட்டு தொலைதூரத்தில் இருக்கும் இந்த கிராமத்தில், எனக்கு இருக்கும் ஒரு பெரிய ஆறுதலே, இந்தக் கடிதப்போக்குவரத்துதான்.
ஆப்கானிஸ்தானில் ஆங்காங்கே தபால் நிலையங்கள் பல இருந்த போதும், நான் இருக்கும் இது போன்ற தொலைதூர கிராமங்கள் பலவற்றிற்கு, இன்னும் அவை வந்து சேரவில்லை.
எனவே, எப்போதும் நான் வீட்டு வேலைக்கரானிடம்தான் எனது கடிதத்தைக் கொடுத்துவிடுகிறேன். அவனும் எனது பெற்றோர்கள் வீடு சென்று, கடிதத்தைக் கொடுத்து, அங்கேயே தங்கி, எனது பெற்றோர் கொடுக்கும் தின்பண்டம் உட்பட பல பொருட்களோடு, அப்பாவின் பதில் கடிதத்தையும், இங்கே கொண்டு வருவான்.
அப்பாவிடம் இருந்து, பதில் வர, அடுத்த வாரம் ஆகலாம். ஆனாலும், நான் எனது மனதில் இருந்த பாரத்தை, எனது அப்பாவிடம் இறக்கிவைத்த நிம்மதியோடு, அந்தப் பகல் வேளையிலும் தூங்கப் போனேன்.
தொடரும்
அழகர்சாமி சக்திவேல்
சிங்கப்பூர்