This entry is part 6 of 8 in the series 7 டிசம்பர் 2025

                                      – எஸ்ஸார்சி

 அவனை   தந்தையும் தாயும்    ஒரு பெண் பார்க்கத்தான்  அழைத்துக் கொண்டு  புறப்பட்டார்கள்.   இது மணப்பெண் கிடைப்பதே அரிதான காலம். பெண் குழந்தைகள் ஜனிப்பதுவே  அபூர்வம் என்றாகி விட்டது. பிள்ளை வீட்டார் போன் போட்டால் பெண் வீட்டார் எடுப்பதே அரிது. அப்படியே எடுத்தாலும் பேசும் பேச்சின் தோரணை   வித்யாசமாகவே  இருக்கும். பிள்ளை வீட்டார் எப்போதும்  அடக்கியே வாசிக்கவேண்டும். இல்லாவிட்டால் பெண் சார்பாய்ப் பேசுகிறவர்கள் போனை பட்டென்று  வைத்துவிடுவார்கள்.மாப்பிள்ளை வீட்டாற்கு ‘ எங்கள் வீட்டிற்குத் தாங்கள் பெண் பார்க்க வரலாம்’ என்று  ஒரு செய்தி வந்துவிட்டால் போதும். அதைவிட மகிழ்ச்சியான  தருணம்  வேறு என்ன இருக்கமுடியும். ஆகத்தான்  அப்பா அம்மா அவன்  என்று மூவரும்  பெண் பார்க்கப் புறப்பட்டார்கள்.

 ஒரு நல்ல காரியத்திற்கு மூன்று பேர் போகக்கூடாது. மூன்று பேர் போகின்ற அந்த  காரியம் முட்டை என்பார்களே,  ஆகத்தான்  அவன் தாயும் தந்தையும் காரிலிருந்து இறங்கி பெண் வீட்டிற்குள்ளாக  முன்பாகவே சென்று விடுவது சிறிது தாமதித்து  அவன் அங்கு வந்து சேர்ந்துகொள்வது  என்று முடிவு செய்தார்கள்.  இப்படி ஒரு  திட்டத்தோடுதான் புறப்பட்டார்கள்.

‘ ஒரு காரியம்ன்னா  ஏம்பா மூன்று பேர் போகக்கூடாது. அதில் என்ன பிரச்சனை வந்து விடப்போகிறது’ பையன் அப்பாவைக் கேட்டான்.

‘அத இப்ப  நீ அவசியம் தெரிஞ்சிகிணமா’

‘சொல்லுலாம்னா சொல்லுங்க’

‘  ராமாயணக் கதையில அயோத்தி  அரண்மனையிலேந்து   ஸ்ரீராமர் வனவாசம் போனப்ப   அவர் மனைவி  சீதை   தம்பி  லட்சுமணர்னு ரெண்டு பேரையும் சேத்துகிட்டு  மொத்தம் மூணு  போரா  போயி எப்பிடி  எப்பிடி எல்லாம் அவஸ்தை பட்டாங்க பாத்தியா’

‘போதும்  உங்க விளக்கம் அத சொல்லறதுக்கு  இதுவா நேரம்,  எத எப்ப சொல்றதுன்னு ஒரு யோஜனை வேணும் வயசானா மட்டும் பத்தாது’ அவன் அம்மா குறுக்கிட்டாள்.

அவன் காரிலேயே அமர்ந்திருந்தான். பெரியவர்கள் இருவரும் இறங்கி முன் சென்று கொண்டிருந்தார்கள். சற்று தூரத்தில்தான் இருந்தது பெண் வீடு.பெண் வீட்டு வாசலில் நன்றாக மாக்கோலம் போட்டு வைத்திருந்தார்கள். நான்கு கோபுர  கோலத்திற்கு காவி பார்டர் அழகாகக் கொடுத்திருந்தார்கள். கோலத்தை பார்த்ததும் மனதிற்கு ஓர் நிறைவு .

‘ தெருக் கோலத்த பாத்தாலே வீட்டு உள்ள  எதுவும் என்ன லடசணத்துல போயிகிட்டு இருக்குதுன்னு  புரிஞ்சிகிடலாம்’

‘வாய வச்சிகிட்டு சும்மா வரமாட்டிங்களா’

‘தப்பா என்ன சொன்னேன்’

‘போறும் அச்சு பிச்சுன்னு ’ என்றாள் அவன் தாய்.

பெரியவர்கள் இருவரும் வருவதைப்பார்த்த பெண் வீட்டார் ஆர்த்தி தட்டோடு அவர்களை வரவேற்றார்கள். பன்னீர் சொம்பு கொண்டு தலையில் விசிறினார்கள். சந்தனம் புஷ்பம்  பாரிஸ் சாக்லைட்  தட்டு எனக் காண்பிக்கப்பட்டது.

‘தம்பி பின்னாடி வர்ரான்’ அவனின் தாயார் புன்னகையோடு சொன்னாள். அவன் தாயும் தந்தையும்  கூடத்திலுள்ள சோஃபாவில் அமர்ந்துகொண்டனர்.  அவன் அவர்கள் பின்னாலேயே  அங்கு வந்து சேர்ந்து கொண்டான். அவனுக்கும் ஆரத்தி  எடுப்பது பன்னீர் தெளிப்பது  சந்தனம் புஷ்பம்  கொடுத்து வரவேற்பது எனத்தொடர்ந்தது. அவனும் வந்து அவர்களோடு  சோஃபாவில் அமர்ந்து கொண்டான். அவன் தானே பிரதானம்.

பெண் பிள்ளை வீட்டில் பெண்ணின் தாய் தந்தை பெண்ணின் தங்கை என மூவர் இவர்களோடு அந்த மணப்பெண்ணும் இருந்தாள். ஆக நால்வர்.

‘எல்லாரும் வரணும். ரொம்ப சந்தோஷம். எங்க பொண்ணு  உங்க பையன் ப்ரொஃபைல பாத்துட்டு   திருப்தியா அவுங்கள வரச்சொல்லுன்னு சொல்லிட்டா. இதுவரைக்கும் அவ இப்பிடி சொன்னதே இல்லயே. கல்யாண சப்ஜெக்ட ஆரம்பிச்சா ஒதறி ஒதறி மட்டும்தான் பேசுவா. ஒரு ஆச்சரியம்.  இந்த குரு பெயர்ச்சி அவளுக்கு  சுபத்தை குடுக்கும்னு ஜோஸ்யர் சொல்லியிருக்கார்.’ பெண்ணின் தந்தை விஷயத்தை ஆரம்பித்து வைத்தார். பெண்ணின் அம்மா  மந்த்ராலயம்  ராகவேந்திர ஸ்வாமி படத்திற்கு முன்பாக குத்து விளக்கை ஏற்றிவைத்தார்.விளக்கில் இரண்டு திரிகள்  எரிந்துகொண்டிருந்தன. ஊது வத்தி புகைந்து  சன்னமான சந்தன  மணத்தை ஹால் வரைக்கும்  கொண்டு சேர்த்தது. பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் அவரவர்கள் பூர்வீகம் பற்றி பிரஸ்தாபித்து முடித்தனர்.  ஆனாலும்  இப்போது இரண்டு குடும்பமும் சென்னையில்தான்  செட்டில் ஆகியிருக்கின்றன..

‘ பொண்ண அழச்சிண்டு வரலாம். நல்ல நேரம் முடியறதுக்குள்ளாற அவா  ரெண்டுபேரும் ஒத்தர ஒத்தர் பாத்துகட்டும். அது ரொம்ப முக்கியமாச்சே’ என்றார் பையனின் தந்தை.

‘கொழந்த ரெடியாயிண்டு இருக்கா வந்துடுவா’ என்றாள் பெண்ணின் தாயார்.

ரோஸ்  கலரில்  நீட்டு நீட்டு  வாழைக்காய் பஜ்ஜியும்,  ரவா சொஜ்ஜியும் சிறு சிறு பிளாஸ்டிக் தட்டுக்களில்  கொண்டு வந்தார்கள்.. அவைகளை சோஃபாவிற்கு முன்னாலிருந்த  டீபாயில்    வைத்தார்கள்.

‘கை அலம்பிகுங்கோ  ஸ்வீட் சாப்டுங்கோ மொதல்ல.  எல்லார்க்கும் காபிய மாத்திரம் எடுத்துண்டு  பொண் கொழந்த வருவா. அவளே உங்க  எல்லாருக்கும் காபியை குடுப்பா.  அப்ப நீங்க எல்லாரும் பொண்ண பாத்த மாதிரி இருக்கும்  பொண்ணும் உங்க எல்லாரையும் பாத்த மாதிரி  இருக்கும்’ என்றார் பெண்ணின் அம்மா.

‘மாதிரி மாதிரின்னு ஏன் சொல்றேள்’ என்றாள் அவனின் தாய்.

அவர்கள் மூவரும் வாஷ் பேசினில்  கையை நனைத்துக்கொண்டு, டிபன் சாப்பிட ஆரம்பித்தார்கள். நனைத்துக்கொண்டு என்பதுதான்  சரி. பெண்ணின் தாயார் வாழைக்காய் பஜ்ஜியும் ரவா சொஜ்ஜியும் இரண்டு முறை பரிமாறினார்.  தேங்காய் சட்னியும்  சின்ன வெங்காய சாம்பாரும் ஏக அமர்க்களமாய் அமைந்து  விட்டன.

பையனின் தந்தை தனது ஸ்வீட்டை எடுத்து தனது பையன் தட்டிலேயே வைத்தார். அவனின் தாயார்  அவரின் தட்டிலிருந்த  ஸ்வீட்டை  ருசித்துச் சாப்பிட்டார்.’ எனக்கு  சுகர் பிரச்சன இல்லை.  ஆனா ஸ்வீட்ட நா தொடல்லே. எங்காத்துக்காரிக்கி உடம்பெல்லாம் சுகர். ஆனாலும்  அவ ஸ்வீட்ட விடாம சாப்டறா. என்ன பண்றது’ என்றார் பையனின் தந்தை.

‘சுகர் இருக்கத்தான் இருக்கும்.   வயத்துல பத்து மாசம்  சொமந்து பெத்த புள்ளக்கி கல்யாணம் வர்ரதே என்ன பண்ணுவே. சுவீட்ட ஒதுக்க முடியறதா’  இது அவனின் தாய்.

பளிச்சென்று ஒரு பட்டுப்புடவை. சின்ன அளவு  ஜரிகை போட்டது கட்டிக்கொண்டு ஒரு வட்ட வடிவ  எவர் சில்வர் தாம்பாளத்தில் பால் டிகாக்‌ஷன் சுகர் என மூன்றையும் தனித்தனியே வைத்து  சில டம்ப்ளர்கள் டபராக்கள்  உடன் வைத்து எடுத்து வந்த பெண் அதனை  டீப்பாயில் வைத்தாள்.  விளக்கேற்றி வைக்கப்பட்டுள்ள ஸ்வாமி படத்திற்கு முன்னால்  பெண்கள் செய்யும் பஞ்சாங்க நமஸ்காரம் செய்து எழுந்தாள்.

‘யாருக்கு எப்பிடி காபி  தரணும் சொல்லுங்கோ அப்பிடியே  கலந்து தரேன்’ என்றாள் அந்தப்பெண். ஷோபனா பாபுவின்  கணீர் செய்தி வாசிப்புக்குரல்.

‘நாங்க  டிகாக்க்ஷனை கலந்து எடுத்துக்கறம். நா எங்காத்துக்காரருக்கு காபிய  குடுத்திடறேன். நீ மாப்பிள்ளக்கி எப்பிடி வேணும்னு கேளு. அப்பிடியே  கலந்து குடு போறும்’ என்றாள் அவனின் தாய்.

‘நீ எப்பிடி  காபி குடிக்கறயோ அப்பிடியே எனக்கு  குடு’  பெண்னிடம் சொன்னான் மாப்பிள்ளை.

அவள்  தான் குடிப்பது போலவே சாதாரணமாய் காபியைக்கலந்து ஆற்றினாள். மாப் பிள்ளையின் கையில் டபராவும் டம்ப்ளருமாகக் கொடுத்தாள்  அந்தப்பெண்.

அவன் அவள் முகம் பார்த்து காபி நிறைந்த  டபரா டம்ப்ளரை வாங்கிக்கொண்டான்.

‘ ஃபிஃப்ட்டி ஃபிஃப்டி’

‘ஓகே’ அவள்.

இருவரும் காபியைப் பகிர்ந்து கோண்டார்கள்.

 ’இந்த காலத்துலே நன்னா படிச்ச பசங்க கை நெறய சம்பளம் வர்ரது  அதுங்க தினுசே வேற’ என்றாள் பையனின் தாய்.

‘கொழந்தக்கி பாட்டும் வரும் நன்னா பாடுவா. காலேஜுல அவதான் மியூசிக்   காம்படிஷன்ல மெடல் வழக்கமா வாங்கறவ’ என்றாள் பெண்ணின் தாய்.

‘கொழந்த சின்னதா ஒரு பாட்டு பாடேன்’ என்றார் அவனின் தந்தை.

அந்தப்பெண்  நாற்காலியில் உட்கார்ந்து கொண் டாள்.’ வெள்ளைத்தாமரை பூவிலிருப்பாள் வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்’ என்னும் சுப்ரமணிய பாரதியின் பாடலை எடுப்பாய்ப் பாடினாள்.  அந்தக்கூடமே அந்தப்பெண்ணின் இனிய குரலால் கம்பீரம் கூட்டிக்கொண்டது.  பாரதியார் பாடலின் ராகம்  ஆனந்த பைரவி அவள்  சாரீரத்தால் அது  மெருகேறிற்று.

‘சபாஷ், ஃபஸ்ட் கிரேடு தரணும்’ என்றார் அப்பா.

‘நீ எதானு பொண்ணுண்ட தனியா பேசணுமாடா’ என்றாள் அவனுடய தாய். அவன் பதில் எதுவும் சொல்லாமல் இருந்தான்.

‘ கொழந்த நீ எதானு என் புள்ளண்ட பேசணுமா’ பென்ணைப்பார்த்துக் கேட்டார் அவன் அப்பா. அந்தப்பெண் ணும் அமைதியாகவே இருந்தாள்.

‘எதித்தாப்புல இருக்குற ரூம்ல எடம்  நன்னா இருக்கு.  சவுகரியமா சேர் போட்டு வச்சிருக்கம். ரெண்டு பேரும் போங்கோ  சித்த பேசிட்டு  சாவுகாசமா வாங்கோ’ என்றார்  பெண்ணின் தந்தை.

‘இப்ப எல்லாம் காலம் மாறிண்டு இருக்கு அந்தக்காலமா என்ன ’ என்றார் பெண்ணின் தாய்.

பெண்ணும் பிள்ளையும் எழுந்தனர். இருவரும் அந்த அறைக்கு உள்ளாகச் சென்றனர். அந்தப்பெண்ணே அறைக்கதவைத் தாழிட்டாள். அவன் பயந்துதான்  போனான்.

‘ என்ன மொதல்ல நீங்க மன்னிக்கணும்.  உங்கள பொண்ணு பாக்க  வாங்கோன்னு  நா சொன்னதுக்கு முக்கியமான  காரணம் இருக்கு. என் தரப்ப மொதல்ல  உங்களண்ட  சொல்லிடறேன். நா இந்த  வீதியிலயே  ஒத்தரை  ரொம்ப நாளா  லவ் பண்றேன். அவருக்கு நல்ல கம்பெனியில  ஒரு நல்ல உத்யோகம் இன்னிக்கி வரைக்கும்  கெடக்கில. நீங்க உங்க கம்பெனில ஹெச் ஆர் டிபார்ட்மெண்ட்ல  நல்ல  பொசிஷன்ல  இருக்கிங்க. இதோ நா  லவ் பண்ற  அந்தப் பயனோட   பயோ டேட்டா.  இந்தக் கவர யாருக்கும் தெரியாம  உங்க பேண்ட் பாக்கெட்ல வச்சிகோங்க. நீங்கதான் அவருக்கு ஒரு நல்ல உத்யோகம் வாங்கி தரணும். நா   அதுக்கப்பறம்தான்  அவர  கல்யாணம் பண்ணிக்க முடியும்.இது விஷயம்  யாருக்கும் தெரியாம உங்க மனசோட மட்டும்  வச்சிக்கணும். எங்க அம்மா அப்பாவுக்கும்  இன்னும் இது எல்லாம் நா சொல்லல. மொத்தத்தையும் என் மனசுல  போட்டு மூடி வச்சிருக்கேன்  வெளியில  எப்படி சொல்லறதுன்னு  புழுங்கறேன். உங்கள என்  கூட பொறந்த அண்ணாவா நெனச்சிகறேன். எனக்கு ஒரு நல்ல வழிய  இந்த அண்ணாதான் காமிக்கணும்’ அவனைப்பார்த்துக் கெஞ்சினாள், கதறினாள் அந்தப்பெண்.

அவன் வாய் திறந்து பேசவேயில்லை. அவள் கொடுத்த அந்த  பயோ டேட்டா கவரை வாங்கித் தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டான்.

‘ நல்லா மொகத்த அழுத்தி  துடச்சிகிங்க. அப்பறமா வெளில போகலாம்’ என்று மட்டும் சொன்னாள் அவள். தன்னைச் சரி செய்து கொண்டாள். தாழ்ப்பாளைத் திறந்தாள். இருவரும் அறையை விட்டு வெளியே வந்தார்கள்.

‘என்ன பேசியாச்சா. பழம்தானே’ என்றாள் அவனின் தாய்.

‘’பழமேதான்’ அவன் தாயுக்குப்  பதில் சொன்னான்.

அறைக்குள்  தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு   இருவரும் பேசியது மாத்திரம் அவன் தந்தைக்கு  நெருடலாய் இருந்தது. அந்தப்பெண் சமையலறைக்குள் சென்று  நின்றுகொண்டாள்.

பெண்ணின் தாயும் தந்தையும் ஏதுமறியாத அப்பாவிகளாய்ப்  பேசினார்கள்.

‘ரெண்டு பேருக்கும் ஒத்தர ஒத்தர் புடுச்சிருக்கு இனி  நாமதான்  பாக்கி எல்லாத்தையும்  ஏற்பாடு  பண்ணவேண்டிருக்கு’. 

‘’கரெக்டா சொன்னேள்’  என்றாள் பெண்ணின் தாய்.

‘ஒரு நல்ல நாள் பார்க்கணும்.  கல்யாண மண்டபத்துக்கு அட்வான்ஸ் தந்துடணும்’  பெண்ணின் தந்தை மகிழ்ச்சியோடு சொன்னார்.

‘அப்பா நாம பொறப்படலாம்’

‘ அந்த பொண் கொழந்தய கூப்பிடு. நாம சொல்லிண்டு பொறப்படலாம்’ அவனின் அப்பா அம்மாவிடம் சொன்னார்.

அடுப்பங்கரையில் நுழைந்துகொண்ட  பெண் ஹாலுக்கு வந்து நின்றாள்.

‘நாங்க பொறப்படறம். நீ  எங்களோட அங்க வந்து இருக்கப்போறபொண்ணு. உங்கிட்ட சொல்லிண்டு பொறப்படறம்’ என்றார் அவனின் அப்பா.

‘சரிங்க மாமா சரிங்க அத்தை’ என்றாள் பவ்யமாய்  அவள். எத்தனை அடக்கம்.

‘ நீ சொல்லிக்கோடா அவளண்ட ஏன் நிக்கற’ என்றாள் தாய்.

‘எல்லாம் ஆச்சும்மா.  நீங்க ரெண்டுபேரும் கெளம்புங்கோ. வாசல்ல ஓலோ கார் வந்து நிக்கறான். நா எப்பவோ கார் புக் பண்ணியாச்சு’

‘அவ்வளவு என்ன அவசரம்’

‘உங்க எல்லாருக்கும் நாங்க போயிட்டு வரோம்’ அவன் பெண் வீட்டாரிடம் சொன்னான். அந்தப்பெண் மட்டும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அதைக்கவனித்த பையனின் தாய்,

‘  பொண்ணுக்குத்தான்  ரொம்ப அவசரம் போல’    என்று சொல்லி  சிரித்துக்கொண்டார்.

அவன் கால் செருப்பை மாட்டிக்கொண்டு காரில் ஏறி அமர்ந்து கொண்டான். அவன் தாயும் தந்தையும் காரில் பின் பக்க சீட்டில் அமர்ந்து கொண்டார்கள். வண்டி புறப்பட்டது. பெண் வீட்டார் அனைவரும் கை அசைத்து அவர்களை வழி அனுப்பி வைத்தார்கள். அந்தப்பெண்ணும்தான்.

‘ஒரே ஒரு கேள்விடா. அந்தப்பொண்ணு ரூம்ல போய் உன்னோட பேசறதுக்கு முன்னாடி படார்னு கதவ சாத்தி தாழ்ப்பா போட்டாளே அது ஏண்டா’ ஆரம்பித்தார் அவனின் தந்தை.

‘சித்த சும்மா இருக்கேளா நீங்க’

‘இல்லம்மா அப்பா சரியாத்தான் கேக்கறார். அதுல விஷயம் இருக்கு.  லேசு பட்ட பொண்ணு இல்ல அவ.  அவ என்னண்ட சொல்றா.  ‘ நா  இந்த தெருவுலயே ஒத்தர லவ் பண்றேன்.. அவருக்கு நல்ல வேல இல்லாம இருக்கு   நீங்க உங்க   கம்பெனில ஹெச் ஆர் டிபார்ட்மெண்டில் நல்ல பொசிஷன்ல இருக்கறீங்க.  நீங்க ஒரு ஒத்தாசை பண்ணணும். அவருக்கு  உங்க கம்பெனில ஒரு நல்ல வேல போட்டு தரணும்.  அதுக்கு அப்பறமா அவர  நா  கல்யாணம் பண்ணிப்பேன் அண்ணான்னு’  . என்னண்ட கெஞ்சி கேட்டுண்டா இத யாருண்டயும் சொல்லிடாதிங்கோன்னு’

‘படு பாவி கழுத்த அறுத்துட்டாளேடா அவ’   என்றாள் அவனின் தாய்.

‘ ரூம் கதவ அவ சாத்தின லட்சணத்த பாத்தே நா கண்டு புடிச்சிட்டேன் ஏதோ பலான  விஷயம் இருக்குன்னு’

‘ அந்த பையனோட பயோ டேட்டா என்னண்ட குடுத்து இருக்கா. நா  என் பேண்ட் பாக்கெட்ட்ல வச்சிண்டு இருக்கேன்’

‘கிழிச்சி தூர எறிடா அத’

‘இல்லம்மா  என்னயே  அண்ணாவ நெனச்சிண்டு இந்த பயோ டேட்டாவ குடுத்து இருக்கா. அவளே சொன்னதுதான்.. நா ஹெச் ஆர் ல இருக்கேன். அவன கட்டாயம்  இண்டர்வியூக்கு வான்னு  கூப்பிடுவேன். ஒரு  நல்ல வேல போட்டு தரத்தான் போறேன்’

‘தப்புடா இது தப்பு’  என்றாள் அவனின் அம்மா.

‘தப்புதான் ஆனா நா அந்த பையன  நா பாக்கணும்.  அவன் நல்லவனா இருந்தா  என் கம்பெனிலஒரு வேல போட்டும் தருவேன். அந்த பொண்ணு  உண்மையை என்ன  நம்பி சொல்லியிருக்கா.  அவ மறச்சி இருந்தா எனக்கு எப்பிடி தெரியும். தான் லவ் பண்ற பையனுக்கு ஒரு வேல நல்லதா வாங்கித்தரணும். அத என் மூலமா சாதிக்கலாம்னு பாக்கறா. அவ நல்ல பொண்ணு இல்லாம என்னம்மா’

‘நீ  ஒரு பிஸ்துடா  உனக்கு எப்ப கன்னிகழியறதுன்னு தெரியலயே .. ஒரு அப்பனா இருந்து பாக்கணும் இந்த கஷ்டத்தை.. அப்பத்தான் அந்த வலி என்னன்னு தெரியும்’  சொன்ன அப்பாவைப் பார்த்தான்.அவன் தன் தாயைப்பார்த்தான். அம்மாவின் கண்கள் ஈரமாகியிருந்தன. அம்மா அதனைத்துடைத்துச் சரி செய்து கொண்டாள்.

‘ஒரு நல்ல வேலயே இல்ல. அவன் ஒரு பொண்ண லவ் பண்ணிண்டு இருக்கான். நீயும்  இருக்க அசடு’

அவன் தந்தை அவனைப்பார்த்து முணு முணுத்தார்.

அது எங்கே அவன் காதில் விழுந்தது. அவர்கள் மூவரும் பெண் பார்க்கும் படலம் முடித்து  தம் இல்லம் நோக்கி பேருந்தில் விரைந்தனர்.

————————————————————-

Series Navigationமழை புராணம் -10மன நிறைவு