This entry is part 1 of 8 in the series 7 டிசம்பர் 2025

           –ரவி அல்லது.

    கதிருக்கு திறந்து கிடந்த காம்பவுண்ட் கதவின் வழியாக உள்ளே போக வாடையொன்று அழைத்தது. கதவை மூடாமல் வாட்ச் மேன் எங்கேப் போயிருப்பார் என்று சிந்தித்தபடி இருக்க, உள்ளே போகிற வழியிலையே ஆட்டுக்கறித் துண்டு ஒன்று எலும்புடன் இருந்தது. அதைக் கவ்விக்கொண்டு வெளியேப் போகலாமென நினைத்தால் அங்கு இருந்த ஸ்கூட்டியில் வாங்கி வந்த கறியை எடுக்காமல் மறந்து வீட்டிற்குள் போயிருந்தார் வீட்டுக்காரர்.

‘இவர்கள் தங்கள் பொருட்களை கவனமாக வைத்துக்கொள்ளாமல் பிறகு  காக்கா எடுத்துருச்சு. குருவி எடுத்துருச்சுன்னு கத்த வேண்டியது.’ என்று கதிர் நினைத்துக் கொண்டது.

“பையா… கேட்டக் குளோஸ் பண்ணு.” என்று உள்ளே இருந்து குரல் வரும்போது கதிர் காம்பவுண்டை விட்டு வெளியே வந்திருந்தது.

கதிர் இருந்த தெருவில் அது குட்டியாக இருந்தபோது ஒரு பாப்பாதான் அந்தப் பெயரை வைத்தது.

“அப்பா… இந்த நாய்க்குட்டி அழகா இருக்குப்பா. நாம் வளர்க்கலாப்பா.” என்றது.

“சரிம்மா. அம்மா என்ன சொல்வாங்கன்னு தெரியலையே.”

“ஏதாவது சொல்லி நீங்கள் சமாளிங்கப்பா.இதுக்கு கதிர்ன்னு பேர் வைக்கலாம்பா.”

அந்த வீட்டிற்குள் அழைத்துப் போக அவர் மனைவியிடம் அவரால் அனுமதி வாங்க முடியவில்லை. அதன் பிறகு கொஞ்ச நாளில் அவர்கள் அந்த வீட்டைக் காழி செய்து கொண்டுப் போய்விட்டார்கள்.

கதிர் தான் கொண்டு வந்த கறியைத் தின்றுவிட்டு எழும்பைக் கடித்துக் கொண்டு இருந்தது.

‘இப்பொழுதெல்லாம் தெருவில் நடக்கின்ற குழந்தைகளை நாய்கள் கடிப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. குழந்தைகளின் உணவுகளில் பல விதமான சுவைகளில் உணவுப் பண்டங்கள் வந்த வண்ணம் உள்ளது. இதன் வாடைகள் பலப் பண்படாத நாய்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது என்பதை இங்கு எவரும் கண்டுபிடிக்கவில்லை. குழந்தைகளின் உணவில் உள்ள கொடுமைகளை இந்த உலகம் அறிய அவைகளை வெட்ட வெளியில் வைத்தால் தெரிந்துவிடும். குடிக்கும் பானமாக இருந்தால் அதன் கொடூர நாற்றம் தாங்க முடியாது’ என்ற சிந்தனையில் அந்த எழும்பை தூக்கிக்கொண்டு இருந்தது.

தெருவில் இருந்த பல நாய்களைப் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதிலிருந்து தப்பித்தான் கதிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

பிடித்த நாய்களை கொன்றுவிடுவார்கள் என்றும் எங்கோ ஒரு இடத்தில் அடைத்து உணவு கொடுக்கிறார்கள் என்றும் செய்திகள் பரவியது. அங்கிருந்து எந்த நாயும் இதுவரை தப்பி வரவில்லை. அதனால் எல்லா செய்திகளும் ஊகங்களாவே இருந்தது. கதிருக்கு அவர்களிடம் மாட்டி பிறகு தப்பித்து வந்து எல்லோருக்கும் உண்மையான செய்தியை சொல்ல வேண்டும் என்று தோன்றியது. காரணம் இந்த நகரத்தில் கதிருக்கு எல்லாத் தெருக்களிலும் நண்பர்கள் இருந்தார்கள்.

அந்த நண்பர்களைப் பழக்கிக்கொடுத்தது வேட்டையன்தான். அவர்களில் வேட்டையன் தனியான ஆள். அவன் திடீர் திடீரெனக் காணாமல் போய்விடுவான். அவன் எங்கு சென்றான் என்று பெரும்பாலும் யாரிடமும் காரணம் சொல்வதில்லை.

அவன்தான் ஒரு முறை சொல்லிக்கொண்டு இருந்தான்.

“நம்மை வைத்து இங்கேப் பெரிய அரசியல் நடக்குது.இரண்டு வெளிநாட்டு மதங்களின் ஐடியாலஜிக்கல் சம்பந்தமான கோல்ட் வார் அது. நூற்றாண்டுகள் கடந்தும் தொடர்கிறது. அதைச் சொன்னால் உங்களுக்குப் புரியாது.”

யாருக்கும் என்ன என்று அவனிடம் கேட்கப் பயமாக இருக்கும். அவனே தொடர்ந்தான்,

“நம் முன்னோர்கள் மனிதர்களைக் காப்பதற்கு காட்டை விட்டு நாட்டிற்குள் வந்தார்கள். நாம் அவர்கள் செய்த பணியைச் சிறப்பாக செய்யவேண்டும். மனிதர்கள் தடம் மாறி வெகு தூரம் சென்றுவிட்டார்கள். அவர்களுக்குள்ளையே சண்டைகள் செய்வதில் மும்முரமாக இருக்கிறார்கள். அவர்கள் உயிருடன் இருப்பதற்கு நாம் எந்தளவிற்கு உதவியாக இருக்கிறோம் என்பதை மறந்துவிட்டார்கள். அந்த நன்றி இருந்தால் அவர்கள் நம்மை தெரு நாய் என்று ஏளனமாக பார்க்க மாட்டார்கள்.நாம் காவலுக்காக வெளியே இருந்தவர்களை அவர்களின் வீட்டிற்குள் அழைத்தது முதல் தவறு. பூனையை விரட்ட நம்மை உள்ளே கொண்டு சென்றது வரலாற்றுப் பிழை.இந்த தந்திர யுத்தம் பற்றியச் சிந்தனை நமக்குத் தேவையற்றது.அதை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.மதங்கள் ஆதியை மறந்து அரசியல் கூடாரமானது மன்னிக்க முடியாத குற்றம்.”

அவன் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அது இந்த உலகத்தை வேறுமாதிரிப் பார்க்க வைக்கும். அறம் சார்ந்து வாழ்வதை அவனிடம்தான் அது கற்றுக்கொண்டது. அவனிடம் பழகியதால்தான் ஆட்டுக்கறிப் பையை எடுக்காமல் வந்தது. அதை எடுக்க வேண்டும் என்று அதற்குத் தோன்றவே இல்லை.

ஆட்டு எழும்பைத் தின்றதால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தாகம் எடுத்தது. தண்ணீர் குடித்துவிட்டு திரும்பினால் அந்தக் கறி தின்ன பங்களா நாய் எதிரில் நின்றது.

“நீ உன் முதலாளியின் விசுவாசத்தைக் காட்ட இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய். நான் கீழேக் கிடந்ததைத்தான் எடுத்தேன். அதை நீயும் பார்த்துக் கொண்டு இருந்தாய். நான் பையில் இருந்ததை எடுக்கவில்லை.”

அது கதிரைப் பார்த்துக்கொண்டு நின்றது.

“உனக்குத்தான் பெயர் வச்சிருப்பாங்களே. உன் பெயர் என்ன.”

அந்த நாய் இதற்கும் பதில் சொல்லாததால் கதிர் தாக்குதலுக்கு தயாரானது. இதுபோன்ற நாய்களைத் தாக்க வேட்டையன் நன்கு பயிற்சி அளித்திருந்தான். கதிரின் கண்கள் நிலை குத்தி காது மடல்கள் விடைத்ததும் அந்த நாய் பயந்து சட்டென்று,

“என் பெயர் டோலா. நான் உன்னுடன் நண்பனாக வந்திருக்கிறேன்.”

“ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் எல்லோரும்தான் சிறைக்குள் அடைபட்டு கிடப்பீங்களே. நீ எப்படி அதை விட்டு வெளியே வந்தே.”

“முதல்ல அதை சிறைன்னு சொல்லாதே. அது என் வீடு. அதுக்குள்ள நான் தான் ராஜா.”

கதிர் சிரித்தது. அதில் நக்கல் அதிகமாக இருந்தது.

“அடிமைகள் தங்களை அடிமைகள் என்றே உணருவதில்லை. அடிமைகளின் முதலாளிகள் இதில் கவனமாக செயல்பட்டு மூளையை மழுங்கடித்துவிடுவார்கள்.”

“நீ பேசுவது எனக்கு கோபத்தை வரவழைக்கிறது.”

“உனக்கு என்ன உதவி வேண்டும்.”

இதுபோன்ற மூளை மழுங்கிப்போனவர்களிடம் விவாதிப்பது தவறென வேட்டையன் சொல்லி இருக்கிறான்.

“என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது தான் இந்த ஊரைப் பார்க்க முடிகிறது. எனக்கு இந்த ஊரை சுற்றிப் பார்க்க வேண்டும். ஊர் எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும். அதற்குத்தான் உன் உதவியை நாடி வந்திருக்கிறேன்.”

“இது எவ்வளவு பெரிய விபரீத முடிவு. முதல்ல உன்னை நான் இந்த மனுசங்ககிட்டேயிருந்து காப்பத்தனும். அப்புறம் உங்க முதலாளி ஆட்களிடமிருந்து உன்னைக் காப்பாத்தனும்.’

“இதற்குப் பிறகு என்னால் வரமுடியுமா என்று எனக்குத் தெரியாது.”

‘சுதந்திரக் காற்றை சுவாதித்ததை அனுபவிக்கத் தெரியாதவனிடம் எதுபற்றியும் பேசுவதும் வீண்’ என்று நினைத்த கதிர் தன்னிடம் தஞ்சமடைந்தவனுக்கு உதவ முன் வந்தது.

கதிர் பின்னால் டோலா ஓடியது. மக்கள் நடமாட்டம் இல்லாத நெருக்களாக பார்த்து கதிர் அழைத்துக்கொண்டு போனது . பல இடங்களில் சிலர் வேடிக்கை பார்த்ததுபோது ‘இந்த நாயிக்கு வந்த ஆசையைப் பாத்தியா’ என்றும் பேசிக்கொண்டார்கள். அவர்கள் கதிர் ஆண் என்பதை பார்க்கத் தவறிவிட்டார்கள்.

அவதூர் பேசுகிறவர்கள். இட்டுக்கட்டி பேசுகிறவர்கள் எப்பொழுதும் எதையும் ஆழ்ந்து பார்ப்பதில்லை. அதையே இங்கு பலரும் செய்தார்கள்.

மாலையாகிவிட்டதால் வெளிச்சம் குறைவாக இருந்தது. தெருவின் பாதையில் இருந்த வீட்டில் கூண்டில் கோழிகள் அடைந்து கொண்டு இருந்தது. ஒரு காட்டுப் பூனை மெதுவாக கூண்டை நோக்கி ஊர்ந்து கொண்டிருந்தது. கோழிகள் கத்துவதைக் கேட்டு அந்த வீட்டுப் பெண் வெளியே கூண்டை நோக்கி வரும்போது கதிர் பாய்ந்து காட்டுப்பூனையைக் கடித்து அதைத் தொரத்த ஆரம்பித்தது. டோலாவும் வேறு வழி இல்லாமல் பின்னால் ஓடியது. கதிர் அதை விரட்டியபடி சென்று அதைப் பிடிக்க முடியாததால் திரும்பி வந்தால் அங்கு வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் வெளியே நின்றார்கள்.

முதலில் வந்தப் பெண் உச்சுக்கொட்டிக் கதிரை அழைத்தது. கதிர் அவர்கள் வீட்டில் இருந்தால் நன்றாக இருக்குமென்று எல்லோருமே நினைத்தார்கள். அவர்களின் கவனம் டோலாவின் மேல் திரும்பினால் அதைப் பிடிக்க முயலலாமென நினைத்த கதிர் அது போன வழியே ஓட ஆரம்பித்தது.

“நான் முன்னாடியே சொன்னேன். அது சாப்பிட ஏதாவது போடு நாம இங்கேயே இருக்கப் பழக்கிடலாம்ன்னு. நீ வேடிக்கைப் பார்த்துக்கிட்டே நிக்கிறே.”

“அதோட ஏதோவொரு பங்களா நாயும் வந்துச்சுப்பா.”

“ஆமாம். நானும் பார்த்தேம்பா.”

“என்னடி பிள்ளைங்க ஏதோ உளருது.”

“எனக்கு என்னங்கத் தெரியும்.”

“நீ எதையுமே தெரிஞ்சுக்காதே. “

கதிரின் பொருட்டால் அங்கு தருணம் பார்த்து காத்திருந்த சண்டை வெடிக்கக் ஆரம்பித்துவிட்டது.

டோலாவுக்கு புதிதாக ஓடியதால் கலைப்பாக இருந்தது. அந்தக் கலைப்பிலும் தன் வாழ்க்கையின் மேல் ஒரு சுவாரசியம் வந்தது. இதுபோல தன் வாழ்நாளில் அது ஒரு பொழுதும் அனுபவித்ததில்லை.

“சாப்பிடுவோமா.” என்றது கதிர்.

“மட்டனா, சிக்கனா,”

வேறொரு சமயமாக இருந்தால் கதிர் குரவலையைக் கடித்திருக்கும். டோலாவைப் பார்க்க பாவமாக இருந்ததால் அது மௌனமாக இருந்துவிட்டது.

அவைகள் சென்றத் தெருவில் திருமணம் நடைபெறுவதால் அங்கு இலைகளை வெளியேப் போட்டுக்கொண்டு இருந்தார்கள். இப்பொழுதெல்லாம் பேரலில் தனியாக இலைகளைப் போட்டுப் பிறகு வண்டியில் எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். இங்கு வெளியேப் போடுவதால் அது டோலாவுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடோவெனக் கதிர் நினைத்துக் கொண்டது.

டோலாவுக்கு சாப்பிடுவது சிரமமாக இருந்தது.அதன் சுவை நன்றாக இருந்ததாலும் அது ஓடியது பசியை அதிகமாக்கியதாலும் அது சாப்பிட ஆரம்பித்தது.

சாப்பிட்டு முடித்ததும் கதிர் இரவு தூங்குவதற்கான இடத்தை யோசிக்க ஆரம்பித்தது. பக்கத்தில் இருக்கும் யாருமற்ற மடம்தான் சரியாக இருக்குமென்று அங்கு அழைத்துப் போனது. மடத்தின் சந்தில் முன்னங்கால்களால்  மண்ணைச் சீய்த்து படுக்கத் தயாரானது. டோலா அதுபோல இதுவரை பழகாததால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தது.

கதிர் எழுந்து மடத்தின் திண்ணையை எட்டிப் பார்த்தது.யாரும் அங்கு இல்லாததால் டோலாவை அங்கேப் படுக்க வைத்தது. அன்றைய மாலை செய்தித்தாளை விரித்து யாரோப் படுத்திருந்ததில் டோலாவின் முதலாளி படத்துடன் ‘டோலாவைக் காணவில்லை’ என்று விளம்பரம் செய்திருந்தார்.

“உண்மையிலையே நீ மதிப்புடைய ஆள்தான் போல.”

“நான் குட்டியாக இருக்கும்போது லட்சங்களில் கொடுத்து வாங்கினார்கள்.”

“ஆமாம். நீங்கள் எல்லோரும் வியாபாரத்திற்காக உருவாக்கப்படுகிறீர்கள். உங்களிடம் பயிற்றுவிக்கப்பட்ட உணர்வுகளைத் தவிர வேறு எதுவும் இருக்காது.”

இப்படிக் கதிர் சொன்னதும் டோலாவிற்கு கோபம் வந்துவிட்டது.

“நீங்கள் தெருவில் கிடப்பதைவிட இது மேலானது.” என்று சொல்லும்போதே கதிர் கோபப்பட்டால் தப்பாகிவிடுமென பயந்து பேச்சை நிறுத்தி வேறொருக் கேள்வி கேட்டது.

“நாம வந்துக்கிட்டிருக்கும்போது திடீரென்று அந்தக் காட்டுப்பூனை மேலப் பாய்ஞ்சியே. இது நமக்குத் தேவையா.”

” சரியாகத்தான் கேட்டே. உங்களுக்கு எல்லாம் நாங்கள் தெரு நாய்கள். ஆனால் நாங்கள் மனிதனின் பாதுகாவலர்கள். அவர்கள் எங்களுக்கு உணவு அளிக்கலாம். உணவு அளிக்காமல் போகலாம். அது எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.”

“…..”

“உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் பங்களா நாய்கள், வீட்டு நாய்கள்,தெரு நாய்கள் என்று நாய்களாவேத்தான் பார்க்கும் போக்கு இருக்கிறது. இங்கே மனிதர்களைப் போல பல மாதிரி நாய் வகைகள் இருக்கிறது. அதில் நான் சொல்லக்கூடிய நாய் வகைகளும் உலகம் முழுவதும் இருக்கிறது. அதுதான் நோவாக் கப்பலில் ஏறிய நாயின் தொடரில் வந்தவர்கள்.”

வெளியே மழை லேசாகத் தூற ஆரம்பித்தது. தூறல் அதிகமாக இருந்ததால் மடத்தின் திண்ணைக்குள் குதித்து ஏறிய இரண்டு நாய்கள் டோலாவைப் பார்த்து மழையில் நனைந்தபடி தூரமாக நின்ற லாரிக்கு ஓடி அதன் கீழேப் படுத்துக்கொண்டது. கதிர் அங்கு இருக்கலாமென சொல்லுவதற்குள் அவைகள் ஓடிவிட்டது. அதுவும் ஒரு வகையில் நல்லதுதான். இரண்டு பேருக்கு மத்தியில் மூன்றாவதாக ஒருவர் இருந்தால் இருவருக்குள்ளும் பேச்சுவதில் இணக்கமான நெருக்கம் இல்லாமல் போய்விடும்.

“நோவாக் கப்பலா. அது என்னது.”

“வேட்டையனை நான்கைந்து மாதமாகக் காணவில்லை. அவன் வந்ததும் உனக்கு அறிமுகப் படுத்துகிறேன். அவன்தான் எனக்குப் பல விசயங்களைப் போதித்தான். நீங்கள் உங்கள் வீட்டு முதலாளிக்கு விசுவாசமாக காவல் காப்பீர்கள். நாங்கள் எல்லா மனிதர்களுக்கும் காவல் காப்போம். எங்களுக்கு மனிதர்களிடையே எந்த வித்தியாசமும் இல்லை. ஒரே ஒரு வித்தியாசம்தான் அதைக் கடைசியில் சொல்கிறேன்.”

வெளியே மழை வேகமாகப் செய்து கொண்டிருந்தது. அந்த வழியாக டோலாவின் வீட்டுக் கார் சென்றது. அதன் உள்ளே இருந்தவர்கள் வெளியேத் தேடிய படி சென்றார்கள். டோலாவுக்கு ஓடிப்போகலாமா என்று தோன்றியது . அது கதிரை அவமதிப்பதாக இருக்குமென்று தரையோடு தரையாக அப்படியே உடம்பைக் கால்களைப் பரப்பி படுத்துக் கொண்டது. இந்த திடீர் செயல் கதிருக்கு வினோதமாக இருந்தாலும் அது தான் சொன்னக்கதைக்குள் பயணித்ததால் அது இதனைப் பொருட்படுத்தவில்லை.

“நோவாக் கப்பல் என்பது பூமியில் வெள்ளப்பிரளயம் ஏற்பட்டபோது கடவுளின் ஏற்பாட்டால் கட்டப்பட்டது. இந்த சம்பவம் எல்லா மத நூல்களிலும் இருக்கிறது. உலகின் பல பாகங்களில் நாட்டுப்புறப் பாடல்களில் வெள்ளப் பிரளயம் வந்து உலகம் அழிந்ததாக விதவிதமாக கதைகளும் இருக்கிறது. குர்ஆனில் அந்த காலப்பகுதியில் தோன்றிய நபியை நூஹ்(அலை) என்கிறது. நூஹ் அவர்கள் தனக்கு அறிவிக்கப்பட்ட முறைப்படி அந்தக் கப்பலை நிர்மாணித்தார்கள். அவர் உலகில் உள்ள உயிரினங்களுக்கு அழைப்பு வைத்தார்கள். அவைகள் ஒவ்வொன்றாக வந்து அந்தக் கப்பலில் ஏறியது. பிறகு மழை தொடர்ந்து பெய்து இந்த பூமியே நீராக அந்தக் கப்பல் மட்டும் மிதக்க ஆரம்பித்தது. அது உலகம் முழுவதும் சுற்றியது. அதில் தப்பித்தவைகளே இப்பொழுது பல்கிப் பெருகி பூமி எங்கும் இருக்கும் மனித,ஏனைய பறவைகள் மற்றும் விலங்குகள். உன்னிடம் கேட்கின்றேன் டோலா. அன்று நூஹ் நபி அவர்கள் எல்லாப் பறவைகள் மற்றும்  விலங்கினங்களுக்கு அந்த செய்தியைச் சொன்னார்களே. அவர்களும் மனிதர் தானே. இப்பொழுது உன் முதலாளி சொல்வது உனக்கு ஏன் புரியமாட்டேங்குது.”

டோலா கதையின் சுவாரசியத்தில் மூழ்கி இருக்க. கதிரின் கேள்வி மேலும் வியப்பில் ஆழ்த்தியது.

மழையினால் மடத்தின் கூரையில் தண்ணீர் ஒழுக ஆரம்பித்தது. இந்தத் திண்ணையைத்தவிர ஏனைய இடங்களில் தண்ணீராக இருந்தது. பல்லிகள் இரண்டு ஒன்றன்பின் ஒன்றாக ஓடியது. எட்டுக்கால்ப் பூச்சியின் நூலாம்படையில் சிக்கியப் புளு அந்தரத்தில் தரையைத் தொடுமாறு ஆடிக்கொண்டு இருந்தது. அதை மேலிருந்து எட்டுக்கால்ப் பூச்சி இழுப்பதால் ஆடியபடியே தொங்கும் உயரம் குறைந்து கொண்டே வந்தது.

“எனக்குத் தெரியவில்லை.நீயேச் சொல்லு.”

“அன்றையக் காலத்தில் மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும் உணர்வு ரீதியான தொடர்பு இருந்தது. அப்போது ஒரு இணக்கமான மகிழ்வுத்தன்மை இருந்தது. அது யாவையும் இயைந்து போகும் சூழலில் வைத்திருந்தது. மனிதனிடம் அந்த உணர்வு வந்துவிடவே வேட்டையன் போன்றவர்கள் பாடுபடுகிறார்கள். அவனைப் போன்றவர்கள் வழி வழியாக உழைக்கிறார்கள். நம்மில் பல பேர் அதற்காக பயிற்சி அளிக்கப்படிருக்கிறார்கள் .வேட்டையன் மனிதன் நினைப்பதை மிகத்துல்லியமாக அறியக்கூடியவன்.எனக்கேப் பல முறை நாய் தானா என்று சந்தேகம் வரும். ‘நீ நாய் உருவத்தில் இருக்கும் மனிதனா.’என்று  ஒரு முறைக் கேட்டேன். ‘நம்மை மனிதன் போல பேச வைக்க பல முயற்சிகள் நடக்கிறது. அதைவிட பெரிய முட்டாள்தனம் வேறொன்றுமில்லை’ என்றான்.”

மழை நின்று தூறலாக பெய்து கொண்டு இருந்தது. லாரிக்கு கீழேப் படுத்த நாய்கள் இரண்டும் வேறு எங்கோ ஓடியது. முன்னால் ஓடுவது பெண் நாயாக இருக்கவேண்டும். ஆலமரத்தைக் கடந்ததும் இன்னொரு நாயும் அவைகளைப் பின் தொடர்ந்தது. எட்டுக்கால் பூச்சி கூரையின் மேற்பகுதிக்கு அந்தப் புழுவை இழுத்துவிட்டது. இப்பொழுது கீழிருந்துப் பார்த்தால் எந்த இடத்தில் அது தன் வலையில் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை.

மடத்திற்கு முன்பிருந்த தெருவிளக்கு வெளிச்சத்தில் டோலா கதிரவனையேப் பார்துக்கொண்டிருந்தது.

“நமக்கும் மனிதருக்குமான உணர்வுத் தொடர்பு நடக்கலாம் நடக்காமலும் போகலாம் என்பான் வேட்டையன். தன்னையறிந்த பல மேம்பட்ட மனிதர்ளை அவன் சந்தித்து இருக்கிறான். அவர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லையாம். ‘அதுவொரு வீண் வேலை’ என்று ஒதுக்கிவிட்டார்களாம். ‘தம் பயணத்தில் அதுவொரு அற்பம்.’என்று சொன்னார்களாம். அதனால் ‘இதனை வழி வழியாக சொல்லப்பட்டதால் இதைப் பயிற்சி கொடுக்கிறோம்.மற்றபடி இது எனக்குப் பெரிய விசயமில்லை’ என்பான்.அவன் அடிக்கடி சொல்வதே. ‘நாம் வாழ்வதன் நோக்கமே மனிதர்களைக் காப்பதுதான்’ என்று அதுபற்றியே யோசிப்பான்.”

“என் போன்றவர்கள் காவல் காப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. நீங்கள் எல்லோரும் இந்த மனித குலத்தையேக் காக்க வந்தவர்கள் மாதிரி பேசுவது நகைப்பாக இல்லையா.”

“உன்னைப் போன்றவர்களுக்கும்  இந்த மனிதர்களுக்கும் தெரியாத விசயம் ஒன்றைச் சொல்கிறேன் கேட்டுக் கொள். நூஹ் நபி காலத்தின் உணர்வுகளை மனிதனுக்கு மீட்டுக் கொடுப்பது நம் முக்கியமான வேலை இல்லை என்று வேட்டையன் அடிக்கடி சொல்லுவான். அது ஒரு முயற்சி என்பான். ‘நம் முக்கியமான வேலையே மனிதர்களைக் காப்பது மேலும் தீங்குகள் நிகழாத வண்ணம் அவைகளைத் தள்ளிப்போட முயற்சிப்பது. அதற்காக நாம் இறந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படக் கூடாது’ என்பான்.”  முக்கியச் செய்திகளை வேட்டையன் மீண்டும் சொல்வதுபோல கதிரும் சொல்லியது.

திடீரென படுத்திருந்த கதிர் வெளியே நிறுத்திக் கிடந்த காரின் உள்ளே நுழைய முயன்ற பாம்பை விரட்டியது. அது பக்கத்திலிருந்த பைக்கின் மீது ஏறியது. அங்கிருந்து அதை விரட்டி விட்டு மறுபடியும் மடத்திற்குள் வந்தபோது இதைப் பார்த்த அந்த வழியாக சென்ற இருவர்,

“இது மாதிரி நமக்கு பாதுகாப்பாக இருக்கிற நாய்களைத் தான் புடிச்சிக்கிட்டுப் போறாங்க.”

“ஒன்று மட்டும் மறுக்க முடியாத உண்மை.”

“என்னடா அது.”

“ஒரு செயலை சரி என்று ஒரு கூட்டமும். அதையே தவறு என்று ஒரு கூட்டமும் ஆதாரங்களுடன் விவாதிப்பது அதற்காக போராடுவது என்ற ஒரு மோசமானக் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இதற்கு ஒரே தீர்வு.”

மழை லேசாகத் தூற அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு வேகமாக ஓட ஆரம்பித்தார்கள்.

டோலாவுக்கு தம்மால் பொதுநலமாக வாழ முடியாததை நினைத்து வருத்தம் கொண்டது.ஒரு வேலை தான் சபிக்கப்பட்ட பிறவியோ எனத் துணுக்குற்றது.

கதிர் உடம்பை உதறிவிட்டு முன்பு படுத்த இடத்தில் முன்காலை நீட்டி அமர்ந்து,

“நாம என்ன பேசிக்கொண்டிருந்தோம்.” என்றது.

டோலாவுக்கு முன்பு பேசியதில் உடன்பாடு என்றாலும் கதிரிடம் கேள்விகள் கேட்டு அதைப் பேச வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது.

“மனிதர்களைக் காப்பது என்று சொன்னே. அதை எனக்குப் புரிகிற மாதிரி சொல்.”

“ஜப்பானில் நிகழ்ந்த அணு குண்டு வெடிப்பைத் தள்ளிப்போட பல வகைகளில் நம் ஆட்கள் முயன்றிருக்கிறார்கள். இறுதிக்கட்டத்தில் அதிகாரத்திற்குரியவரிடம் நெருங்க முடியவில்லையே என்ற குறையாகத்தான் அந்த வரலாறு நம்மிடையே உலவுகிறது . அதைவிடு இங்கு ஒரு பிரதமர் குண்டு வெடித்து இறந்தார் இல்லையா அதற்கு முன்பான முயற்சிகளை நம் ஆட்களால்தான் தள்ளிப் போட வைக்கப்பட்டது.”

அப்போது ஆட்டோவில் உடல்நிலை சரி இல்லாமல் யாரோ ஒருவரை அவசரமாக அழைத்துக்கொண்டு சென்றார்கள். வண்டியில் இருந்தப் பெண் அழுவது வெளியேக் கேட்டது. அவர் இறந்து போய்விடுவார் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறது என்று டோலாவிடம் சொல்லலாமென கதிர் நினைத்தது. அவனிடம் பேசும் முக்கியமானப் பேச்சு தடைபடுமென நினைத்து உனக்கு அதன் அறிகுறி தென்படுகிறதா என்று கடைசியில் அவனிடம் கேட்கலாம் என்று விட்டுவிட்டது. இருவரும் வெளியேப் பார்த்துவிட்டு பிறகு ஒருவரைப் பார்த்துக் கொண்டார்கள். டோலாவுக்கு உடம்பெல்லாம் அரிப்பது போன்று இருந்தது. இதுபோன்ற தரையில் இதுவரை அது படுக்காததும் அதற்கு காரணமாக இருக்கலாம்.

“நீ சொல்வது எனக்குச் சுத்தமாக புரியவில்லை.உன் பேச்செல்லாம் நீங்கள் எல்லோரும் மூலைச் சலவை செய்யப்பட்டவர்கள் போலத்தான்  இருக்கிறது .”

“நீ சொல்வதுதான் இங்கே மிகப் பெரிய நகைச்சுவை. உனக்குப் புரிகிற மாதிரி சொல்வதென்றால் சாலையில் ஒருவர் வண்டியில் செல்லும்போது அவருக்கு அந்தப் பயணத்தில் மரணம் இருக்கிறது இல்லை அந்தப் பயணத்தால் யாருக்கோ மரணம் இருக்கிறது . இல்லை அவரால் ஏதோ பாதகமொன்று யாருக்கோ நிகழப்போகின்றது என்றால் அங்கே இருக்கின்ற நம் ஆட்களுக்கு உள்ளுக்குள் ஒரு உணர்வு வந்து அந்த வண்டியின் குறுக்கே சென்றுவிடுவார்கள். அப்போது விபத்து நிகழ்ந்துவிடும். அந்த செயல் அப்போது நடைபெறாமல் போய்விடும். சுஜாதா என்று ஒரு எழுத்தாளர் இருந்தாராம். அவர் சொல்வாராம் ‘மெரினாவில் பறக்கும் பட்டாம்பூச்சியின் சிறகசைப்பிற்கும் இந்தோனேஷியாவில் நிகழும் சுனாமிக்கும் தொடர்பு இருக்கிறது ‘ என்று ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை இப்படியாக விளக்குவாராம்.”

“நீங்கள் இப்படி வாழ்கிறீர்கள்.சாலை விபத்தில் ஒரு நாய் இறந்து கிடந்தால். அதை எல்லோரும் வேடிக்கைப் பார்த்துதானேக் கடந்து போகிறார்கள்.”

“அவர்கள் கடந்து போயிப் பைரவர் கோயிலுக்குதான் பாலாபிஷேகம் செய்வார்கள். அவர்களைப் போல் மடையர்களை இதுவரை நான் எங்கும் கண்டதில்லை. தன் உணர்வை மறந்து வெளியில் கண்டுபிடித்தவைகளில் வியந்து கிடக்கிறார்கள். சுய உணர்வின் பலம் அறியாதவர்கள். அவர்கள் நன்றி கெட்டவர்களாக இருப்பதால் நாமும் அப்படி இருக்க முடியாது. வேப்ப விதையை எங்கு போட்டாலும் வேப்பங்கண்ணாகத்தான் முளைக்கும். அதை வெட்டிச் சிதைத்தாலும் அது அதேத் தன்மையில் தான் துளிர்க்கும்.”

தம்மில் ஒருவர் இப்படி பேசுவது டோலாவுக்கு பெருமையாக இருந்தது.

“இனிமேல் நீ நடக்கின்ற விபத்துக்களைக் வேறு முக்கிய நிகழ்வுகளைக் கவனித்துப் பார்.உனக்குப் புரியும்.”

கதிர் உடனேப் பேசுவதை நிறுத்தி ‘டோலாதான் முதலாளி வீட்டிற்கு போய்விடுமே’ என்று நினைத்து மௌனமானது.

அடுத்தக் கேள்வி கேட்க நினைத்து அதுவும் கதிரின் மன நிலைக்கு வந்ததால் மௌனமானது.

“நீ தூங்கு காலையில் உங்கள் வீட்டில் விட்டு விடுகிறேன். இந்த மக்களிடம் உன்னைப் பாதுகாத்து உங்கள் முதலாளி வீட்டில் விட வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.” கதிர் சொன்னதோடு மட்டுமல்லாமல் டோலா தூங்குகிறவரை விழித்துக்கொண்டு இருந்தது எப்பொழுது தூங்கியதெனத் தெரியவில்லை.

வாடை ஒன்று வர திடீரென்று கடுங்கோபத்துடன் எழுந்த கதிர் பாயத்தயாரானது. அங்கு டோலாவும் பக்கத்து தெரு இராணுவ வீரர் வீட்டு தெருவில் இருக்கும் சிகப்பியும் காதலில் இருந்தது. கதிரின் கோவத்தைப் பார்த்து. சிகப்பியைத் கதிர் தாக்கத் தொடங்கிவிடுமென டோலா பதறிக் கத்தியது.

“மன்னித்துவிடு தோழா. நான் தான் என் விருப்பத்தைச் சொன்னேன்.”

“அறிவு இருக்காடா உனக்கு. வெளியில் சாப்பிட்ட உணவு உனக்கு ஒத்துப்போகுமான்னு நான் கவலையிலே இருக்கேன்.ஏன்டா நீ வேற .”

“…..”

“அவன் என் விருந்தாளி என்று தெரிந்தும் உனக்கு என்ன தைரியம் இருந்தா இங்க வருவே.” என்று சிகப்பியைப் பார்த்து கத்தியது.

கொஞ்ச நேரத்தில் இருவரும் பிரிந்து சிகப்பி தூரமாக நின்ற லாரியின் ஸ்டெப்பினி டயரின் மேல் ஏறிப் படுத்துக் கொண்டது.

“என் மேலக் கோவமா தோழர்.”

“உன்னை நினைத்துதான் எனக்கு கவலை. சிகப்பியின் வாழ்க்கை ரொம்ப மோசமானது. மனிதர்களில் உடல் வியாபாரம் செய்யும் பெண்களைப் போன்றது அவளின் வாழ்க்கை. அவள் தெருவில் இருக்கும் சொறியன்தான் அவளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். வேட்டையன் ஆட்களைத் தவிர வேறு யாருக்கும் அவன் பயப்படமாட்டான். அவனாலும் அவன் கூட்டாளிகளாலும்தான் அவள் வாழ்க்கையே நாசமாகப் போனது.”

“அங்கிருந்து அவள் வேறு ஊருக்கு போக வேண்டியதுதானே.”

” வேட்டையன் பலமுறை வற்புறுத்தினான்.’தன் பிள்ளை ஒன்று அந்த தெருவின் வீட்டில் செல்லமாக வளருவதால் தன் வாழ்நாளை அங்கேயேக் கழித்து விடுகிறேன்’ என்று சிகப்பி மறுத்துவிட்டாள்.”

டோலாப் பேச்சை மாற்ற

“வேட்டையனை நான் எப்பொழுது பார்க்க முடியும்.”

“அப்போ ஏற்கனவே நீ பார்த்திருக்கியா.”

டோலா பதில் சொல்ல தடுமாறியது.

“இல்லை. நீ பேசியதால் பார்க்க ஆசையாக உள்ளது.”

“அவன் வருவது அவனுக்குத்தான் தெரியும்.அவன் வந்ததும் இவைகளெல்லாத்தையும் சொல்லிக் காண்பிக்கனும். சிகப்பியைப்பற்றி சொல்லலாமா வேண்டாமான்னு தோணுது. அவன் பெரியக்கோவக்காரன். இந்த ஊரில் அவன் கோவத்தை அடக்கக்கூடியவன் நான் மட்டும்தான்.”

அங்கே நிறுத்தி இருந்த லாரி கிளம்பியது. சிகப்பி தலையைக் குனிந்து பார்த்தது. டோலாவுக்கு கண்ணில் நீர் வழிந்தது. இவைகள் எதையும் கதிர் கவனிக்கவில்லை.

“வேட்டையன் அடிக்கடி அப்படி எங்குதான் போவான்.”

“இதை உன்னிடம் சொல்லலாமா வேண்டாமா என்று எனக்குத் தெரியவில்லை. அவன் அந்தரங்க விசயங்கள் எனக்கு மட்டும் தான் தெரியும். பயணத் திட்டம் மட்டும் யாருக்கும் தெரியாது.”

“நீ விரும்பினால் சொல்லலாம்.”

“வேட்டையன் வந்ததும் எப்படியாவது அவனை உங்கள் வீட்டிற்குள் அழைத்து வந்து விடுகிறேன். அவனிடம் எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொள்.”

“நான் வீட்டிற்கு போனதும் அவர்கள் என்னை என்ன செய்வார்கள் என்று எனக்குத் தெரியாது.வேறு ஊருக்கு அழைத்துச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.”

நீண்ட யோசனைகளுக்குப் பிறகு கதிர் சொன்னது.

“வேட்டையன் அரசாங்கத்தில் இருக்கும் மோப்ப நாய்களோடு பழக்கம் வைத்து இருக்கிற ஆள். அவைகளிடம் அவனுக்கான செய்திகள் இருக்கும். அதைப் பெற்று அவன் சரியான முறையில் சரியான நபரிடம் கொடுத்து யாருக்கும் பங்கம் வராமல் உயிரைக் காப்பான் அல்லது நிகழ்வுகளை தள்ளிப்போட வைத்துவிடுவான்.அதுபோல இவனது செய்திகளையும் சொல்லி அனுப்புவான்.”

“எனக்குப் பயமாக இருக்கிறது.”

“நீ பயப்படத் தேவையில்லை. இது இங்கே யாருக்குமேத் தெரியாது. மனிதர்களின் உணர்வுக்கு எல்லையில்லை. இந்த உலகத்தின் எந்த ஒரு இடத்திற்கும் அவர்களின் எண்ணங்களைப் பயணிக்க வைக்ககும் ஆற்றல் இருக்கிறது. அதைத் தொலைத்துவிட்டு தான் அவன் பைத்தியமாக அலைகிறான். நமக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட எல்லை இருக்கிறது. அதனால்தான் வேட்டையனைப் போன்றவர்கள் பயணிக்க வேண்டியதாக இருக்கிறது.”

பக்கத்தில் உள்ளப் பள்ளி வாசலில் அதி காலைத் தொழுகைக்கானப் பாங்கு ஒலிக்க கதிர் டோலாவை அழைத்துக்கொண்டு அதன் வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

தெருவில் ஆட்களின் நடமாட்டம் இல்லை. பால் ஊற்றுகிறவர்கள் சைக்கிளிலும் பைக்கிலும் ஒரு சிலத் தெருக்களில் பால் ஊற்றிக் கொண்டு இருந்தார்கள்.

டோலாவின் வீடு பூட்டி இருந்தது. காம்பவுண்ட் சுற்றுச் சுவர்கள் உயரமாக இருந்ததால் அவைகளைத் தாண்டி அது உள்ளேப் போக முடியாது என்று கதிர் நினைத்தது.

“நான் கதவு திறந்ததும் உள்ளேப் போகிறேன். நீ கிளம்பு.”

“உன் வீட்டு மனிதர்கள் விழிப்பதற்குள் வெளியில் செல்லக் கூடியவர்கள் உன்னைக் கடத்தி விடுவார்கள். நல்லவர்கள் என்று மனிதர்களை அறியும் வரை  எந்த மனிதனையும் நம்பாதே.”

கதிர் அந்த சுற்றுச் சுவரை ஒரு வலம் வந்துவிட்டு டோலாவிடம் சொன்னது.

“உன்னால் எவ்வளவு உயரம் தாண்ட முடியும்.”

“மூன்று அடி”

“அதுபோதும்.”

பக்கத்து வீட்டு சுவருக்கு அருகில் நிறுத்தி இருந்த காரில் ஏறி அந்த சுவரின் மேல் தென்ன மட்டை விழுந்து மடங்கி இருக்கும் கம்பியின் வழியாக குதித்து உள்ளேப் போகச் சொன்னபடி டோலா வீட்டிற்குள் போய்விட. கதிரிடம்  நிதானமாக சொல்லாமல் வந்த வருத்தம் இருந்தது.

டோலா கவலையில் குதித்த இடத்தில் அமர்ந்து இருந்தது. சிகப்பியுடன் இருந்த பொழுதுகள் காட்சிகளாக வந்துபோனது. இந்த ஊரில் இருந்தால் கதிரின் உதவிகளோடு அவைகளைப் பார்க்கலாம். தன் வாழ்நாளில் இது மறக்க முடியாத காதலென நினைத்தது. தான் சுயநலமாக தன் முதலாளி தன் வீடு என இருந்தவைகள் மறந்து எல்லாவற்றின் மீதும் இரக்கம் வந்தது. தனக்குள் பொறுப்புணர்வு மேலோங்கி இருந்தது. எந்த திட்டமிடலும் இல்லாமல் கதிர் சொன்னதைக் கேட்டு உடனே வீட்டிற்குள் வந்திருக்கக் கூடாதென மீண்டும் மீண்டும் வருந்தியது.

பின்னாலிருந்து வந்தக் கதிர் மகிழ்ச்சியில் டோலாவை முட்டித் தள்ளியதில் நிலை தடுமாறி திரும்பியபோது கதிர் நின்றது அதற்கு சந்தோசமாக இருந்தது. இதுபோல டோலாவிடம் யாரும் விளையாண்டதில்லை. நல்லவேளை வீட்டில் உள்ளவர்கள் எவரும் இதுவரை எழுந்திரிக்கவில்லை. அவைகள் ஒன்றை ஒன்று கடித்து விளையாடியது.

“வெளியே உங்களைப் போல இருப்பவர்களை பிடிக்கிறார்கள் என்று இங்கு பேசிக்கொண்டார்கள்.நீ பத்திரமாக இரு. வேட்டையனை நான் அவசியம் பார்க்கனும். சிகப்பியை எங்கு இருக்கிறது என்று விசாரித்து வை அதன் குட்டிகளை நான் பார்க்க வேண்டும்.”

எல்லாவற்றிற்கும் கதிர் தலையாட்டியது.கடைசியில் சொன்னதற்காக கண்ணடித்தது.

“எப்படி நீ உள்ள வந்த.”

“இதுதான் உன் வீடு. இங்கதான் நீ சுத்திக்கிட்ட இருக்கப் போறே. நீயே கண்டுபிடி.என்னால் வரமுடியும். அதன் வழியாக உன்னால் வர முடியாது. அதுதான் உனக்குக் குறிப்பு.”

“உங்கள மாதிரி ஆட்கள் ஏன்டா இப்படி இருக்கீங்க. அதைவிடு என்னைப் புதிதாக மாற்றியதற்கு நன்றி.”

டோலா சிரித்தது.

கதிரின் கழுத்தை வாயால் கவ்வியது. அதில் அத்தனை பிரியம் இருந்தது. டோலாவின் கண்ணீர் கதிரின் கழுத்தை நனைத்தது.

வீட்டில் உள்ளவர்கள் கதவைத் திறக்க கதிர் டோலாவின் மூக்கை நக்கிவிட்டு பத்தடி உயர சுவரை அங்கிருந்த தண்ணீர் கொட்டும் சிலையின் தலையில் தாவிக் கால்களை வைத்து பட்டெனத் தாண்டியது. இதை வீட்டில் உள்ளவர்கள் யாரும் கவனிக்கவில்லை.டோலா வியப்பாக பார்த்துக் கொண்டு இருந்தது.

திடீரெனச் சாலையின் குறுக்கே கதிர் ஓட, வலது புறம் வேகமாக வந்தப் பைக் தடுமாறி மின்கம்பத்தில் மோதி  வந்தவரின் தலை உடைந்து இரத்தம் வழிந்தது. இடது புறம் வளைவிலிருந்து வந்த ஆட்டோவின் டிரைவர் வண்டியை நிறுத்தி அடிபட்ட பையனைத் தூக்க அவனின் கால் ஊன முடியாமல் கத்தினான்.

“என்னாச்சு தம்பி”

“திடீர்ன்னு ஒரு சனியன் புடுச்ச நாய் குறுக்கே வந்திருச்சு.”

கதிர் தூரமாக நின்று இதைக் கேட்டது.

அந்தப் பைக் வளைவில் திரும்பி இருந்தால் ஆட்டோவில் மோதி அந்த ட்ரைவர் இறந்திருப்பார். இந்தப் பையன் படுத்த படுக்கையாக கோமாவில் கிடந்திருப்பான். கல்யாண வயதில் உள்ளே உட்கார்ந்திருந்த இளம் பெண்ணின் கண்களில் கண்ணாடி சில்லுகள் குத்தி அது வாழ் நாளெல்லாம் குருடாக இருந்திருக்கும் என்று சொன்னால் இங்கு யார்தான் நம்பப் போகிறார்கள்.

அந்தப் பையன் வேண்டுமானால் தன் வாழ்நாளில் ஒரு காலை லேசாக இழுத்து நடக்கும் பொழுது ‘அன்று மட்டும் பைக் விபத்துக்குள்ளாகாமல் இருந்திருந்தால். கட்சித் தலைவரை வெட்டிக் கொன்ற வழக்கில், தான் வாழ் நாளெல்லாம் சிறையில் இருந்திருப்பேன்’ என்று நினைத்திருக்கலாம்.

அப்பொழுதும் அவன் கதிருக்கு நன்றி சொல்லப்போவதில்லை.

***

ரவி அல்லது.

ravialladhu@gmail.com

Series Navigation‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்