விடியலை நோக்கி…….

This entry is part 2 of 29 in the series 5 ஜனவரி 2014

ஒடுக்கப்பட்ட இனத்திற்கே உண்டான மூர்க்கம், இடுங்கித் துளைக்கும் அவள் கண்களில் வழிந்தது. கரேல் என்று அண்டங்காக்கையின் கருப்பில் அவள் தேகம். சாராசரிக்கும் குள்ளமான, வினயம் பிடித்தவள் என்று பிறர் சாடும் ஒல்லி குச்சி உடம்புக்காரி. சுருண்டு அடர்ந்த கார்கூந்தல், தேங்காய் எண்ணெயின் வாசமே இல்லாமல் பரட்டையாகி யிருந்தது. அவள் முகத்தில் பசியின் அடையாளம் சோர்வாய்ப் படர்ந்திருந்தது.வறண்டிருந்த பூமியின் சுடு மண்ணுக்குள் பாதங்கள் புதைய வெம்மையின் தகிக்கும் தணல் பாதங்களைத் தாக்கியபோதும், பழக்கமோ அல்லது உரம் ஏறிய மனதின் திட்பமோ என்று உணர முடியா வேகத்தோடு பாதங்களை மாற்றி அவள் இலக்கை நோக்கி நடைபயின்றாள். அவள் தலையின் சீமாட்டு துணிக்கு மேலாக விறகு சுமை. வலது கரம் சுமையை பற்றியிருக்க இடதுகரம் வீசி, இடை இருபுறமும் அசைய நடன மாதின் இடையசைவு நளினத்தை ஒத்தாற் போன்றிருந்தது.

விடு விடு வென்ற நடை வெகுவிரைவில் அவள் குடிசை என்னும் இலக்கை அடையச் செய்தது. சாணம் தெளித்த வாசலின் பச்சை தசையில் தொப்பென்று விழுந்தது சுமை.

சுமை விழுந்த சப்தத்தில் குடிசைக்குள் இருந்து அரையும் குறையுமாய் எழுந்து ஓடினாள் அந்த பெண்.

நின்றிருந்தளின் மீது ஒரு இடி வேறு, பனை ஓலைக் குடிசையின் தாழ்ந்த வாயிலில் குனிந்து உள் நுழைந்தவள் வேட்டி விலகியது தெரியாமல் கிடந்தவனைக் கடந்து, தூளியிலிருந்த குழந்தையை எடுத்து மடியில் கிடத்திக்கொண்டாள்.

ஜாக்கெட்டின் கொக்கியை கழட்டி ஒரு முளைக்காம்பை குழந்தை வாயினுள் திணித்தாள்.

குழந்தை முகத்தை மார்பில் தேய்த்து பின் காம்பைப் பற்றிக் கொண்டது. இருந்திருந்து பார்த்தாலும் குழந்தையின் வயது மூன்று மாதமே. நாவரண்டதோ, வயிறு காய்ந்ததோ, அழுத்தமாய் சப்பியது தாயின் வலி உணராமல்.

தள்ளாடிய படி எழுந்தான் அவன், அவளின் தோளைப் பற்றி தரையில் கிடத்த எத்தனித்தவனின் கைகளை எத்தி தள்ளி விட்டாள்.

“த போ தூர“

“ஏ வா” என்றவன் நிதானம் இன்றி தரையில் விழுந்தான்.

குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே வரவும் முனியம்மா கிழவி வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

“எங்கடி உம் ஆம்படையான்”

“தூங்குறாங்க ஆயா.”

“அடி பொசக்கட்டவளே, குத்துக் கல்லாட்டம் நீ இருக்கவே, எதுத்து வூட்டுக்காரிக்கிட்ட போறான் ன்னா எதுன்னு கேக்காம இப்படி தூங்கறான்னு வெள்ளந்தியாய் நிக்கிறியே…”

“அதுல்லாம் ஒண்ணுல்ல ஆயா, எதையோ தூக்கும் போது சுளுக்கிடுச்சாங் அந்த அக்காளுக்கு நான் தான் ஒலக்க வச்சு உருட்ன” என்றவளை கிழவி முகவாயில் கை வைத்தபடி பார்த்தாள்.

ன்னா பொம்மனாட்டி இவ, முழுசா பூசணக்காய சோத்துல மறைக்குறா….என்று புலம்பியபடித் தள்ளாடி நடந்தாள்.

கலைந்து விரிந்திருந்த கூந்தலை அள்ளி முடிந்தாள் அவள்.

கோபமாய் வந்தது, யார் மேல் தெரியவில்லை. பச்சிளங் குழந்தையாய் விட்டு விட்டு நோயில் இறந்து போன முகமறியா ஆத்தாளை நினைத்துக் கொண்டாள்.

“நீ இருந்திருந்தா இப்படி நடக்குமா, இந்த குடிக்காரங்கிட்ட மாட்டிட்டு முழிக்க வேண்டியதா இருக்கே யம்மா“

இரண்டு சொட்டுக் கண்ணீர் வந்தது. அதுவும் இமைகளின் விளிம்பில் நின்று கண்களுக்குள்ளாகவே கரைந்தும் போனது.

குடிக்காரனுக்குண்டான தோரணையி்ல் “ஹேய்” என்று குரல் எழுப்பினான்.

குழவிக் கல்லை தூக்கி தலையை நசுக்கி விடவேண்டும் போல் ஆத்திரம்…அவன் பண்ணிய செயலைத் தான் செய்திருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று ஒரு கணம் எண்ணி யவள்…தே….பையன் என்று வாய்குள்ளாக முனகிக் கொண்டாள்.

கணவன் என்ற ஈர்ப்பு சுத்தமாய் அவளை விட்டு அகன்றிருந்தது. அவளின் முகம் பாறாங்கல்லின் இறுக்கத்தோடு விகாரித்து விகசித்தது.

சுரீர் என்ற வெயிலையும் பொருட்படுத்தாமல், சாணம் மெழுகிய பச்சைத் தரையில் சம்மணம் இட்டு அவர்ந்தவள், முந்தியால் குழந்தையை மூடிக் கொண்டாள்.

குழந்தையைப் பெத்து மூணு மாசமாகல அதுக்குள்ள ஆத்தமாட்டாம அடுத்தவன் பொண்டாட்டிக்கிட்ட போய்ட்டு வர்ரவன் ஆம்பிளையா…தெனவெடுத்த கம்மணாட்டி, மனம் கொதித்தது.

ஏதோ யோசித்தவளாய் எழுந்தாள். ஒரு அழுக்கு மஞ்சள் பையில் இரண்டு சேலைகளை எடுத்து திணித்துக் கொண்டாள். மஞ்சள் கைப்பையின் கைபிடியை இடுப்பில் சொருகிக்கொள்ள அது துருத்திக் கொண்டு ஒரு பக்கம் நின்றது.

குழந்தை மறு இடுப்பில்….கொஞ்சம் தூரம் நடந்தவள் திரும்ப வந்து குடிசையின் வாயிற் கதவில் கட்டப்பட்டிருந்த நாய் குட்டியை எடுத்து மறு கையில் வைத்துக் கொண்டாள்.

“நீ இங்க இருந்த சோறு போடாம ஒண்ணையும் கொன்னுடுவான், என் உழப்புல தின்னுட்டு என்ன உதைக்குறதுக்கு இன்னாத்துக்கு ஊட்டுக்காரன், படுத்துக்குறது பெரிசா…படுத்தத கழுவுறதுக்கு ஒரு சோப்பு துண்டாவது வாங்கித் தரவேணாம். வக்கத்த விதி அத்த நாயி…ன்னா ஒண்ணு சொறி நாயிக்கு பயிந்துகினு வெளிய போன கண்ட வெறி நாயிங்க நாக்க போட்டுகிட்டு அலையும்.

அவள் நடை சீராய் இருந்தது. அவள் மனதின் தெளிவு முகத்தின் அங்கமாகியது. குழந்தை அழுதது ! கூடவே அவளும் அழுதாள்.

புது வாழ்வின் விடியலை நோக்கிச் செல்லும் அவளை தடுத்து நிறுத்த யாரிமில்லை !

Series Navigationஅதிர வைக்கும் காணொளிவிறலி விடு தூது நூல்கள் புலப்படுத்தும் உண்மைகள்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-16 சஞ்சயன் தூதுஅகரம் கலை- இலக்கிய- ஊடக நிலையம் நடத்தும் பாடலாசிரியருக்கான பயிற்சிப் பட்டறை கொழும்பில்.அருளிச் செயல்களில் மாயமானும் பறவையரசனும்ஜாக்கி சான் 23. படங்களுக்கு மேல் படங்கள்ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1மிகைக்கேடயச் சுரப்பி நோய் -Hyperthyroidismவால்ட் விட்மன் வசனக் கவிதை – 56 ஆதாமின் பிள்ளைகள் – 3முன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும்அதிகாரத்தின் துர்வாசனை.திண்ணையின் எழுத்துருக்கள்வசுந்தரா..திண்ணையின் இலக்கியத் தடம் -16பரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்இவரைப் பார்த்தா இரக்கப்பட்டேன்?ஒன்றுகூடல்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 40தாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. !கேட்ட மற்ற கேள்விகள்
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *