ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 2 இந்திய தேசீயத் திரைப்பட ஆவணக் காப்பகமும் நல்ல திரைப்படக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் பங்கும்

author
0 minutes, 36 seconds Read
This entry is part 12 of 21 in the series 23 நவம்பர் 2014

வித்யா ரமணி

ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 2
இந்திய தேசீயத் திரைப்பட ஆவணக் காப்பகமும்
நல்ல திரைப்படக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் பங்கும்
வித்யா ரமணி

[ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும் பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக் குறித்தும் பல கூட்டங்கள் நடந்துள்ளன. சமயம் வாய்க்கிற போது கூடுவதும், படித்ததை ரசித்ததை அனுபவித்ததைப் பகிர்ந்து கொள்வதும் வட்டத்தின் எளிய செயல் திட்டம் ஆகும்.கூட்டங்களில் நிகழ்த்தப்பட்ட சில முக்கியமான உரைகள் இந்த வரிசையில் இடம் பெறுகின்றன.]

இந்தியத் திரைப்படங்கள் தழைத்தோங்கி வளர்கிறது. அது மக்களிடையே மிகுந்த ஆதரவைப் பெற்றிருக்கிறது. ஆண்டு தோறும் சுமார் ஆயிரம் படங்கள் எடுக்கப்படுகின்றன. இவற்றில் பல உலகெங்கும் விநியோகிக்கப்படுகின்றன, மதிக்கவும்படுகின்றன. இந்தப் படங்களைப் பாதுகாப்ப தும், அழிவிலிருந்து காப்பாற்றுவதும், பரவச் செய்வதும், சவால்களும், பிரச்சனைகளும் உள்ள மாபெரும் பணி. இங்கே தான் இந்திய் தேசீயத் திரைப்பட ஆவணக் காப்பகத்தின் – Nation Film Archive in India (NFAI) – இன் சேவை வருகிறது. இந்தியத் திரைப்படங்கள் பலவற்றையும் அதன் மூலமாக இந்தியக் கலாச்சாரத்தையும் அது பாதுகாத்து வருகிறது. வருங்கால சந்ததியினருக்காக இந்திய சினிமாப் பாரம்பரியத்தை காப்பாற்றுவதையும், திரைப்படக் கலாச்சாரத்தை நாடெங்கிலும் பரவச் செய்யும் மையமாகவும் NFAI விளங்கி வருகிறது,

அதன் முக்கியமான மூன்று குறிக்கோள்கள் வருமாறு :

1. இந்திய சினிமாப் பாரம்பரியத்தை வருங்காலத்திற்கு எடுத்துச் செல்லத்தக்க படங்களை தேடிப் பெற்று அவற்றைப் பாதுகாப்பது.

2. ஆவணங்களின் தரவுகளைத் (data) தரப்படுத்தி, திரைப்படம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது.

3. திரைப்படக் கலாச்சாரத்தைப் பரவச் செய்யும் மையமாக விளங்குவது.

கலை ஒரு தேசத்தின் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது. கலாச்சாரத்தின் வேர்கள் அதன் வரலாற்றில்
இருக்கிறது. ஆகவே இந்தியத் திரைப்படங்களின் வரலாற்றை சுருக்கமாக பின்னோக்கிப் பார்ப்பது பயன் தரும் என்று நம்புகிறேன்.

உலகில் திரைப்படத் தொழில் பெரிதாக வளர்ந்திருக்கும் நாடுகளுள் ஒன்று இந்தியா என்பது பலருக்கும் தெரியும். இந்தியத் திரைப்படங்கள் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே தயாரிக்கப்படலாயின. 1896 இல் லுமியரின் படங்களிலிருந்து ஆறு காட்சிகள் மும்பையின் வாட்சன் ஹோட்டலில் திரையிடப்பட்டன. 10 நிமிடங்கள் நீண்ட இந்த மெளனப் படக்காட்சிகள் தான் இந்தியாவின் முதல் திரையிடல் எனலாம். சில ஆண்டுகளுக்குள் நடமாடும் திரையரங்கு கள், நிரந்தர திரையரங்குகள், ‘டெண்ட்’ தியேட்டர்கள் தோன்றின. அவை நூற்றுக்கணக்கான ஐரோப்பிய, அமெரிக்கப் படங்களைத் திரையிட்டன. என்றாலும் அப்போதைய அரசியல், வரலாற் றுப் பொருளாதாரக் காரணங்களால் சுயேச்சையான திரைப்படத்தொழில் வளர முடியவில்லை. திரைப்படங்களின் கவர்ச்சியும், வளர்ந்து வந்த தேசீய எழுச்சியும் , சுயமான இந்தியத் திரைப் படங்கள் வளர வழிவகுத்தன. 1910 – 1913 காலகட்டத்திலான சுதேசி இயக்கத்தின் ஒரு பாகமாக, காலனீய ஆட்சிக்கு எதிரான சிந்தனை கொண்ட டி.ஜி. பால்கே, இந்தியாவின் மெளனப் படங் களின் சகாப்தத்தைத் தொடங்கி வைத்தார். மற்றவை வரலாறு. 1930 இல் டாக்கி கண்டுபிடிக்கப் பட்டது. இந்திய சினிமா தன் சொந்தக் காலில் நிற்கத் துவங்கியது. அது முதல் இந்தியர்களின் பொது வாழ்வின் ஒரு அங்கமாகவே விளங்கி வருகிறது.
ஆனால் நமது திரைப்படப் பாரம்பரியத்தின் அங்கமான இந்தக் கால கட்டத்தின் மதிப்புமிக்க படங்கள் பல காலத்தால் அழிந்து போய் விட்டன என்பது கசப்பான உண்மை. பழைய படங்களில் ஒரு சிலவே NFAIஆல் பொக்கிஷம் போல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதற்கு திரைப்பட வரலாற்றாசிரியர்கள் சொல்லும் காரணங்கள் :

முதலாவது இந்தப் படங்கள் காலனீய ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியில் தயாரிக்கப்பட்டன. சுயாட்சி இல்லாததால் அவற்றைப் பாதுகாப்பதற்கான கட்டுமானத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.

இதோடு ரசயானமும் இந்தியப் படங்களுக்கு எதிராக இருந்தது. நைட்ரேட் அதன் கூறுகளாய்ப் பரந்த போது ஃபிலிம்கள் பாதிக்கப்பட்டன. தட்ப வெட்ப நிலையின் மாற்றங்கள் உண்டாக்கிய சிதைவும் சேர்ந்து கொண்டது. மேலும் வியாபரத்தையே நோக்கமாகக் கொண்ட படத் தயாரிப் பாளர் களும், லாபரட்டரிகளும் படங்களைப் பாதுகாப்பதில் எந்த அக்கறையும் காட்டவில்லை.

இந்தியா விடுதலை பெற்றதும் முக்கியமான படங்களைப் பாதுகாப்பதற்கு ஒரு திரைப்பட நூலகம் அமைக்கப்பட்டது. ஆனால் படங்களைப் பாதுகாப்பதில் தேவைப்படும் பல்வேறு சிறப்பான தொழில்நுட்பம் அவசியம் என்று உணர்ந்த போது முறையான ஆவணக் காப்பகத்திற்கான திட்டம் வகுக்கப்பட்டது.

NFAI 1964 இல், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் ஒரு துறையாக நிறுவப்பட்டது. பூனேயில் உள்ள Film and Television Institute of India வளாகத்திற்குள் சில ஷெட்டுகளில்தான் NFAI தொடங்கப்பட்டது. இன்று அது உலகின் சிறந்த ஆவணக் காப்பகங்களுள் ஒன்றாக உருவாகியிருக்கிறது. 1969 – இல் சர்வதேச திரைப்பட ஆவணக் காப்பகங்களின் கூட்டமைப் பின் (International Federation of Film Archives – FIFA) உறுப்பினராகியது. NFAI – க்கு கொல்கத்தா, பெங்களூர் மற்றும் திருவனந்தபுரத்தில் பிராந்திய அலுவலகங்கள் உள்ளன.

NFAIஇன் புதிய வளாகத்தில் சர்வதேசத் திரைப்படப் பாதுகாப்பு விதிகளுக்குட்பட்டு, படங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் திரைப்படங்களைக் குறித்த நூல்களும், சஞ்சிகைகளும் கொண்ட ஒரு நூலகமும் இருக்கிறது. திரைப்படச் சுவரொட்டிகள், நிழற்படங்கள் போன்றவை யும் பாதுகாக்கப்படுகின்றன. பொது மக்களின் திரையிடலுக்கான ஒரு திரையரங்கும் வளாகத்திற்குள் இருக்கிறது.

தினசரி செய்தித்தாள்களிலிருந்தும், சஞ்சிகைகளிலிருந்தும் செய்திக் குறிப்புகள் சேகரிக்கப்படு கின்றன. திரைப்பட இதழ்கள் மொத்தமாகப் பாதுகாக்கப்படுகின்றன. புதிய பழைய திரைப்படங்களைக் குறித்த செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், சென்சாரைக் குறித்த செய்திகள், திரைப்பட விழாக்கள் மற்றும் விருதுகள், திரைத் துறையின் பொருளாதாரச் செய்திகள் போன்றவையும் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. திரைப்பட ஆர்வலர்களும், திரைப்பட மாணவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல பல நூல்களைக் கொண்ட நூலகமொன்றும் இயங்கி வருகிறது.

இந்தியத் திரைப்பட வரலாற்றின் முதல் 50 ஆண்டுகளில் பல குறிப்பிடத்தக்க படங்களை அது கண்டடைந்தது. NFAI இன் நிறுவனர்களின் அயராத பணியே இதற்குக் காரணம். இந்த இடத்தில் NFAI இன் முதல் காப்பாளரும், பிற்பாடு அதன் இயக்குநருமான திரு. பி. கே. நாயரின் பெயரை நான் குறிப்பிட விரும்புகிறேன். அவர் திரைப்பட வரலாற்றாசிரியரும் ஆவார். அவருக்கு எதிர்காலத் திட்டங்கள் இருந்தன. நல்ல படங்களைக் கண்டடைவதிலும், பாதுகாப்பதிலும் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்தார். அவர் ஓய்வு பெற்று பத்தாண்டுகள் ஆன போதும், தனது சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் இருந்தபடி திரைப்படங்களைப் பாதுகாப்பதிலும், நல்ல திரைப்படக் கலாச்சாரத்தை பரப்புவதிலும் உற்சாகமாக ஈடுபட்டு வருகிறார். NFAI தொடங்கப்பட்ட போது திரைத் தொழிலின் ஜாம்பவான்களான JBH வாடியா, B N சிர்கார் போன்றவர்கள் தாமாகவே முன் வந்து தங்கள் படங்களை ஆவணக் காப்பகத்திற்கு வழங்கினார்கள்.

NFAI இன் பொக்கிஷங்களுள் பின் வரும் படங்களும் அடக்கம் :

டி. ஜி. பால்கேயின் ராஜா “ஹரிச்சந்திரா”(1913),இந்தியாவின் முதல் மெளனப் படம்; “காலியர் மார்தான்”; ஹிமன்சு ராய் மற்றும் ப்ரான்ஸ் ஓஸ்டன் இயக்கிய மெளனப் படங்கள், எடுத்துக் காட்டு: “ஆசிய ஜோதி”(1926)- இது கெளதம புத்தரைக் குறித்த படம்; மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட “பகடை”(1929); பி.வி ராவ் இயக்கிய “மார்த்தாண்ட வர்மா”, தென்னிந்தியப் படங்களுள் இது மட்டுமே கிடைத்திருக்கிறது – அதுவும் முழுமையாக அல்ல. 1930 -களிலும், 1940 – களிலும் தயாரிக்கப்பட்ட பெரிய நிறுவனங்கள் மற்றும் ஸ்டுடியோக்களின் படங்கள் NFAI இன் பாதுகாப்பில் இருக்கிறது.

வி. சாந்தாராமின் Prabhat Film Company , ஹிமன்சு ராயின் Bombay Talkies ,ஜே.பி.ஹெச் வாடியாவின் Wadia Movietone, பி.என். சிர்காரின் New Theatres, எஸ்.எஸ். வாசனின் ஜெமினி மற்றும் விஜய வாஹினி

ஜெமினியின் படங்களில் ஒளவையார், தியாக பூமி, சந்திரலேகா போன்றவை குறிப்பிடத்தக்கன. 1940 களில் ஸ்டுடியோ முறை தகர்ந்தது. அப்போது சொந்த bannerகளில் படம் எடுத்தவர்கள் மஹபூப் கான், ராஜ் கபூர், குரு தத், எல். வி.பிரசாத், நாகி ரெட்டி போன்றவர்கள். முன்னோடிப் படங்கள் மற்றும் ஜனரஞ்சகப் படங்கள் மத்தியில், 40- களிலும், 50- களிலும் தயாரிக்கப்பட்ட பல தரமான படங்களும் காப்பகத்தில் இருக்கின்றன. இந்தக்
கலைப்படங்களின் போக்கிற்கு வழிகோலியவர்கள் பலர். அவற்றுள் சிலர் : சத்யஜித் ரே, மிருணாள் சென்,ரித்விக் கட்டாக், அடூர் கோபாலகிருஷ்ணன், மணி கெளல், ஜி. அரவிந்தன், ஷ்யாம் பெனகல், பி.வி. கராந், கிரீஷ் காஸரவள்ளி.

இனி, NFAI எப்படிப்பட்ட படங்களை பெறுகிறது என்று பார்க்கலாம். இந்தியாவில் படத் தயாரிப்பாளர்கள்
தங்களது படங்களை NFAI க்குத் தர வேண்டும் என்று சட்டமில்லை. மேலும் ஆவணக் காப்பகத்திற்கு நிதிப் பற்றாக்குறையும் உள்ளது. ஆகவே, படங்களைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டியிருக்கிறது.

1955 க்கு முற்பட்ட கிடைக்கக் கூடிய எல்லாப் படங்களையும் வாங்குவதற்கு NFAI முயன்று வந்திருக்கிறது. இவற்றுள் பல படச்சுருள்கள் நைட்ரேட் சிதைவின் அபாயத்திற்கு உட்பட்டவை. அவை ஏற்கனவே அழிந்து போயிருக்கும், அல்லது அழிவின் விளிம்பில் இருக்கும். அவற்றைக் கண்டெடுத்து பாதுகாப்பதில் NFAI முனைப்பு காட்டி வந்திருக்கிறது.

1955 க்கு பிற்பட்ட படங்களில், NFAI வாங்கிச் சேகரிக்கும் படங்கள் என்னென்ன?
1. தேசீய மற்றும் மாநில விருது பெற்ற படங்கள்
2. வணிக ரீதியில் வெற்றி பெற்ற படங்கள்
3. சர்வதேச திரைப்பட விழாக்களிலும், இந்தியத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்ட படங்கள்
4. NFDC நிதியுதவி செய்த, மற்றும் தயாரித்த படங்கள்
5. அறியப்பட்ட இலக்கிய படைப்புகளிலிருந்து உருவாக்கப்பட்ட படங்கள், எடுத்துக்காட்டாக பி.என். சிர்கார் தொடங்கி சஞ்சய் பான்சாலி வரை பலரும் எடுத்த ‘தேவதாஸ்’ படங்கள்
6. பலவகையான கணக்கூறுகளைக் கொண்ட படங்கள். புராணம், சரித்திரம் மற்றும் சமூகப் படங்கள், சண்டைப் படங்கள், சூழ்நிலைப் படங்கள்
7. அரசு நிறுவனங்களும், தனியார்களும் தயாரித்த செய்திப் படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் குறும்படங்கள்,
8. தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு classic படங்கள்
9. பல்வேறு தேசீயக் கலாச்சாரத்தையும், பாவனைகளையும் வெளிப்படுத்தும் படங்கள்.

இவற்றைத் தவிர , இந்திய சினிமாச் சட்டத்தின்படி, சென்சார் செய்யப்பட்ட படங்களின் ஒரு பிரதியை சென்ஸார் போர்டு காப்பகத்திற்கு ஒப்படைக்கிறது.

தணிக்கைக் குழு படச்சுருளோடு அதன் திரைக் கதையின் பிரதியையும் ஒப்படைக்கிறது. இப்படிச் சேர்ந்தவை சுமார் 20,000. ஆனால் இவற்றுள் பல படங்களைக் காணவில்லை!

காப்பகம் எப்படிப்பட்ட படங்களை வாங்குகிறது, அவற்றை எப்படிச் சேகரிக்கிறது என்று பார்த்தோம். இனி ஒரு திரைப்படக் கலாச்சாரத்தை பரவச் செய்வதில் காப்பகத்தின் பங்கு என்ன என்று பார்க்கலாம். காப்பகம் ஒரு பொருட்காட்சி சாலை இல்லை; பொக்கிஷத்தைப் பாதுகாக்கும் ராட்சசனின் குகையும் இல்லை. அது ஒரு கலாச்சார மையம்.

காப்பகம் தொடர்ந்து படங்களைத் திரையிட்டு வருகிறது. குறிப்பிட்ட திரை ஆளுமைகளின் படங்கள், குறிப்பிட்ட வகைக்குள் அடங்கும் படங்கள் அல்லது ஒரு காலகட்டத்தின் படங்கள் – இவை காப்பகத்தின் அரங்கில் திரையிடப்படுகிறது. இவற்றை பொதுமக்களும் பார்க்கலாம். அவர்கள் உறுப்பினர்களாகச் சேர வேண்டும்.

அதன் சேகரத்திலிருந்து படங்களின் நகல்கள் ஆராய்ச்சியாளர்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும், பிலிம் சொஸைட்டிகளுக்கும் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு வழங்கப்படுகிறது.

பிலிம் சொஸைட்டிகள், கலாச்சார அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களோடு இணைந்தும் அது பல இடங்களில் திரையிட்டு வருகிறது.

காப்பகம் சினிமாவைக் குறித்த சீரிய சிந்தனைகளை வளர்த்தெடுப்பதற்காக ஆண்டு தோறும் திரைப்பட ரசனை வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த வகுப்புகள் 5 வாரங்கள் நடைபெறும். பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கு பெறுகிறார்கள் – ஆசிரியர்கள், தொழிநுட்ப வல்லுநர்கள், திரைப்படக் கல்வி மாணவர்கள், சமயங்களில் திரைப்படப் பிரமுகர்கள். ஆகச் சிறந்த இந்திய மற்றும் உலகத் திரைப்படங்களின் வாயில்கள் அவர்களுக்குத் திறக்கப்படுகின்றன. சுமார் 100 படங்கள் திரையிடப்படும், இவற்றில் பாரம்பரியப் படங்களும், சரித்திரம் உண்டாக்கிய படங்களும் அடங்கும். வகுப்புகளின் முடிவில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இந்த வகுப்புகளில் திரைப்படத்துறை வல்லுநர்களும், வரலாற்றாசிரியர்களும், பங்கேற்பவர் களிடத்தில் ஒரு படத்தை எப்படி அணுக வேண்டும் என்று தொடங்கி திரைப்பட வரலாறு, சினிமா மொழி, சினிமாக் கோட்பாடு, ஒரு படத்தை ஆய்வு செய்யும் முறை, சினிமாவும் பிற கலைகளும் போன்ற பல பொருள்களில் வகுப்புகள் எடுப்பார்கள். வகுப்புகள், மாணவர்களும் பங்கேற்கும் கலந்துரையாடல்களைக் கொண்டிருக்கும். பல திரைப்படங்களை உருவாக்கியவர்களும் இந்த வகுப்புகளில் பங்கேற்று, மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள்.

இந்தியப் படங்களைத் தவிர, வரலாறு படைத்த உலகப் படங்களும் இந்த வகுப்புகளில் இடம் பெறும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை :

Sergei Eisenstein இன் Battleship Potemkin (1925) – ரஷ்யப் படம். திரைப்படங்களின் இலக்கணப் புத்தகமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு திரைப்பட மாணவனும் பார்க்க வேண்டியது.

Jean Renoir இன் Rules of the Game (1939) – பிரெஞ்சுப் படம். இரண்டாம் உலகப் போருக்கு பிற்பாடு மதிப்பீடுகள் சரிந்து போன பிரெஞ்சு மேட்டுக்குடியினரை அங்கத்தோடு விமர்சிக்கிறது. Renoir இன் படங்கள் கத்தியைப் போன்று கூர்மையானவை. யாழிசையைப் போல் நேர்த்தியானவை. Renoir இந்தியாவைக் குறித்து ‘The River’ என்று படமெடுத்திருக்கிறார்.

Orson Welles இன் Citizen kane (1941) -அமெரிக்கப் படம். சினிமா ஊடகத்தின் எல்லா சாத்தியங்களையும் இயக்குனர் பயன்படுத்தி இருக்கிறார். கவனத்தை குவியச் செய்யும் ஒளிப்பதிவு, கூர்மையான எடிட்டிங், புத்திசாலித்தனமான பின்னணி இசை எல்லாம் சேர்ந்து இந்தத் தலைமுறை MTV ரசிகர்களையும் ஈர்க்க வல்ல படமிது.

Vittorio De Silaவின் Bicycle Thieves (1948) – இத்தாலியப் படம். திரைப்பட ரசனைக்காக உலகெங்கிலும் நடைபெறும் எல்லா வகுப்புகளிலும் இந்தப் படம் இடம் பெறும். நியோ – ரியலிச இயக்கத்திலிருந்து கிளர்ந்தெழுந்த படம். படத்தின் துவக்கத்தில் ஒரு மனிதன் வேலையில்லாத தொழிலாளர்களிடமிருந்து வெளிப்படுகிறான். அவன் மூலமாக உழைக்கும் வர்க்கத்தின் துயரக் கதை சொல்லப்படுகிறது. படத்தின் முடிவில் அவன் மக்கள் மத்தியில் மீண்டும் கலந்து விடுகிறான்.

நியோ ரியலிச இயக்கம், வழக்கமான படமெடுக்கும் முறைகளை மறுக்கிறது. ஆடம்பரமான செட்டுகளையும் ஜோடனைகளையும், அலங்காரங்களையும் ஒதுக்கித் தள்ளி விட்டு , தனது கதைகளை உழைக்கும் வர்க்கத்திலிருந்து எடுத்துக் கொள்கிறது. தொழில் முறையில் அல்லாத சாதாரண மனிதர்களை நடிக்க வைக்கிறது. பெரும்பகுதிப் படங்கள் கைகளில் சுமந்து செல்லும் காமிராவினாலேயே படம் பிடிக்கப்படுகிறது.
ஸ்வீடிஷ் இயக்குனர் Ingmar Bergman இன் Wild Strawberries, ஜப்பானிய இயக்குனர் Akira Kurosawa இன் Roshaman இன்னும் இந்தியத் திரைப்பட மேதைகள் சத்யஜித் ரே, மிருணாள் சென், ரித்விக் கட்டாக், அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்களின் படங்களும் இந்த வரிசையில் இடம் பெறும்.

திரைப்பட ரசனை வகுப்பில் வெகுஜனப் படங்களும் திரையிடப்படும். பார்வையாளர்கள் அதை முழுமையாக ஏற்காமலும், முழுமையாக ஒதுக்கி விடாமலும் அதன் கூறுகளை அலசுவதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள். பலதரப்பட்ட படங்களையும் பார்ப்பது நல்ல படத்தின் கூறுகளைப் புரிந்து கொள்ள உதவும்.

NFAI திரைக் கலாச்சாரத்தைப் பரப்புவதில் ஆற்றி வரும் பணி, சினிமா ஆர்வலர்களால் மட்டுமல்ல, கல்வி நிலையங்களாலும், பொது மக்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது. சினிமாவில் மூழ்கியிருக்கும் நமது சமூகத்திற்கு NFAI, படங்களைப் பகுத்தாய்ந்து ரசிப்பதற்கு சொல்லித் தருகிறது.

பல்கலைக்கழ மானியக் குழு(UGC) திரைப்பட ரசனையை ஒரு பாடமாக அங்கீகரித்திருக்கிறது. பல பல்கலைக்கழகங்களில் திரைப்பட ரசனை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இவற்றைத் தவிர, NFAI திரைப்பட ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குகிறது. திரைப்படத்தின் ஏதேனும் ஒரு கூறைத் தெரிவித்து அதைக் குறித்து வல்லுநர்களைக் கொண்டு நூல்கள் எழுதச் செய்வதும், இந்தியத் திரைப்படத்தின் முன்னோடிகளைக் குறித்து செவி வழிச் செய்திகளைச் சேகரித்து அவற்றைப் பதிவு செய்வதும் NFAI இன் பிற பணிகள். காப்பகம் திரைப்படங்களைப் பாதுகாப்பதிலும், திரைக் கலாச்சாரத்தை பரப்புவதிலும் சீரிய பணியாற்றி வருகிறது. இந்தச் சிறப்புமிக்க நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். நான் பூனாவில் வாழ்ந்த போது முதலில் காப்பக நூலகத்தில் உதவியாளராகவும், பின்னர் முது நூலகராகவும் பணியாற்றினேன்- 1989 இல். அதற்குப் பிற்பாடு காப்பகம் பல வளர்ச்சிகளைக் கண்டிருக்கிறது. திரைப்படக் கல்வியிலும், திரைக் கலாச்சாரப் பரவலிலும் கணிசமான பங்காற்றி வருகிறது.

நீங்கள் எப்போதேனும் பூனாவிற்கு சென்றால், NFAI க்கும் போய் வாருங்கள்.

jvramani@yahoo.com

(செப்டம்பர் 1, 2007 அன்று நடந்த ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் ‘திரைப்பட ரசனை’க் கூட்டத்தில் பேசியது)

[தொகுப்பு: மு இராமனாதன், தொடர்புக்கு:mu.ramanathan@gmail.com]

Series Navigationஅழிவின் விளிம்பில் மண்பாண்டத்தொழில்பூமிக்கு போர்வையென
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *