தனிநாயகம் அடிகளாரை ஏமாற்றிய தமிழ் மாநாடு

This entry is part 18 of 24 in the series 8 பெப்ருவரி 2015

 

(முனைவர் ரெ.கார்த்திகேசு, முன்னாள் பேராசிரியர்,

மலேசிய அறிவியல் பல்கலைக் கழகம்.)

 

 

ஒன்பதாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு நானும் போயிருந்தேன். நம்ம நாட்டில் அதுவும் நான் வாழும் ஊரில் நடக்கிறது. எப்படிப் போகாமல் இருப்பது? அது மட்டும் அல்ல. முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நான் ஒரு ஊழியனாக இருந்து பணிபுரிந்துள்ளேன். தவத்திரு தனிநாயகம் அடிகளார் தலைவராக இருந்த மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வுத்துறையில் நான் ஒரு மாணவனாக இருந்தேன். என்னை அழைத்து மாநாட்டு அலுவலகத்தில் உட்கார வைத்து மாநாட்டுக் கட்டுரைகளின் சுருக்கங்களைத் தமிழில் எழுதச்சொன்னார். அப்படி நான் எழுதியவை மாநாடு தொடங்குவதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாக நாளிதழ்களில் நாள்தோறும் வந்தன. மாநாட்டை ஒட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நானும் நண்பர் வெ.நா.இராமச்சந்திரனும் (அவரும் அப்போது மாணவர்) அறிவிப்பாளர்களாக இருந்தோம். அதன் பின்னும் சில மாநாடுகளில் கலந்து கொண்டு கட்டுரைகள் படைத்துள்ளேன்.

 

அந்தத் தொடர்பையெல்லாம் விட்டுவிட்டு இருக்கமுடியாதல்லவா? ஆனால் மாநாட்டின் விவரம் பற்றிக் கேட்கும்போதெல்லாம் ஏற்பாட்டாளர்கள் பதில் சொல்வதாக இல்லை. அவர்கள் பதிலில் கொஞ்சம் அலட்சியமும் உதாசீனமும் கலந்திருந்தது. கட்டுரை எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்த என் நண்பர்கள் யாருக்கும் ‘ஆமாம்’, ‘இல்லை’ என ஒரு பதிலும் இல்லை. இந்த நிலையில் கெஞ்சி மன்றாடிக் கொண்டிருக்க வேண்டாம் எனக் கட்டுரை எழுதும் எண்ணத்தைக் கைவிட்டேன். மாநாட்டில் ஒரு பங்கேற்பாளராக இணையத் தளம் மூலம் பதிவு செய்துகொண்டேன். பணம் செலுத்த முயன்றபோது அது இயலவில்லை. எப்படிப் பணம் செலுத்துவது எனக் கேட்டு நான் எழுதிய மின்னஞ்சலுக்கு ஒரு பதிலும் இல்லை. பொதுவாக ஏற்பாட்டாளர்கள் கட்டுரையாளர்கள், பேராளர்கள் யாருடனும் தொடர்பு வைத்துக்கொள்வதை விரும்பவில்லை என்றே தோன்றியது. அதன்பின் மாநாட்டில் நான் சந்தித்த பேராளர்கள் அனைவரும் இந்தக் குறையையே கூறினார்கள்.

 

மாநாட்டின் ஏற்பாடுகளில் விளைந்த குறைபாடுகள் பற்றிப் பலவித விமர்சனங்கள் வந்துள்ளன. பேராளர்களில் ஒருவரான என் நண்பர் புத்ரா பல்கலைகழகப் பேராசிரியர் நா. கண்ணன் தமது முகநூலில் இப்படி எழுதினார்:

 

“கடைசி நாளன்று சொன்னார்கள், அரசு பத்து லட்சம் ரிங்கெட்டுகள் செலவினத்திற்கு கொடுத்திருக்கிறது என்று. தோட்டப்புறத்திலிருந்து வந்த ஒரு பெண் கேட்டாள், ‘அப்படியெனில் நான் ஏன் 260 ரிங்கெட்டு கட்ட வேண்டுமென்று?’ நியாயமான கேள்வி!

பாவம்! ஆசை, ஆசையாய் நடத்த வேண்டுமென்று ஆசைப்பட்ட சாமிவேலுவிற்கு இறுதியில் எஞ்சியது ஏமாற்றமே! அமைப்பாளர்கள் போட்ட மாலையை அவர் ஏற்க மறுத்துவிட்டார். கோளாறுகளைச் சொல்லத் தயங்கவில்லை. நான் பார்த்த போது தானே பார்த்து பரிசுப்பொருள் வாங்கப்போவதாகச் சொன்னார்.

வந்திருந்தோரை வரவேற்க ஆளில்லையாம். விமான நிலையத்திலிருந்து யாரோ அழைத்து வந்து, கருத்தரங்கு இருக்குமிடம் தெரியாமல் அலைந்து, இறக்கிவிட்டு, மாணவர் விடுதியில் போட்டு, 40 பேருக்கு ஒரு கழிப்பறை என்று அமைத்து, பின் அங்கிருந்து கருத்தரங்கிற்கு நடந்தே வரும்படியான சூழலைத் தந்தோரை இந்தியப் பேராளர்கள் எப்படி மன்னிப்பர்? வந்து சேர்ந்தால் அவர்கள் பெயர் பட்டியலில் இருப்பதில்லை, இருந்தால் எங்கு அமர்வு என்ற சேதியில்லை. கடைசி வரை அறை, அறையாகச் சென்றுதான் என்ன நடக்கிறது என்று காண வேண்டிய சூழல். அதிலும் ஏகப்பட்ட மாற்றங்கள். உதவிக்கு வரத் துடிக்கும் பலருக்கு வாய்ப்பே அளிக்கப்படவில்லை. 1977லிருந்து கருத்தரங்களுக்குப் போய் வரும் என்னைப் போன்ற பலரை அவர்கள் சட்டை செய்யவே இல்லை. உள்ளூர் அமைப்புகளுக்கு அழைப்பில்லை. வெளிநாட்டுப் பேராளர்கள் ஒருவரில்லை? ஏனிந்த அவல நிலை?

இவ்வமைப்பை உருவாக்கிய தனிநாயகம் அடிகளுக்கு நினைவஞ்சலி இல்லை. 800 கட்டுரைகள், எத்தேர்வுமின்றி. வேடிக்கையாய் மருத்துவத்துறை சார்ந்த கட்டுரைகளுக்கெல்லாம் அனுமதி! 1500 பேரை கடைசிவரை கண்ணைக்கட்டி வித்தை காட்டியதுதான் மிச்சம்! இக்கருத்தரங்கு. தொடங்கிய நேரமுதல், இறுதிவரை நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.”

நான் பார்த்துக் கேட்ட அளவில் கண்ணனின் கருத்துக்கள் சரியானவையே.

 

எனக்குப் பெரிய குறையாகத் தோன்றுவது இந்த மாநாட்டில் தமிழரல்லாத / இந்தியரல்லாத பிறநாட்டுத் தமிழ் அறிஞர்கள் எவரும் பங்கு பெறாதது. தவத்திரு தனிநாயக அடிகளார் கூட்டிய முதல் மாநாட்டின் மிகப் பெரும் பெருமை அதில் ரஷ்ய, பிரெஞ்சு, ஸ்காட்லாந்து அறிஞர்கள் பங்கு பற்றித் தமிழில் பேசி உணர்ச்சியூட்டியதுதான். அறிஞர் பிலியோசா, அறிஞர் ஆஷர் போன்றோர் முன்னிருந்து வழிநடத்தினார்கள். இன்றும் அமெரிக்காவிலும் கானடாவிலும் ரஷ்யாவிலும் போலந்திலும் சீனாவிலும், ஜப்பானிலும் தமிழாராய்ச்சி செய்யும் தமிழரல்லாத பல அறிஞர்கள் இருக்கிறார்கள். கடைசியாக நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் பர்போலா போன்ற அறிஞர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். சீனாவிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் தமிழ்மொழி பேசும் சீனர்களும் ஜப்பானியர்களும் வந்து பேசி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள். அவர்கள் போன்றோர் எங்கே? இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களை மட்டும் வைத்து நடத்தப்படும் மாநாடு “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்” பேசும் மாநாடு அல்லவா?

 

அதே போன்று துறைகள் தோறும் பார்த்தாலும் தமிழின் தொன்மையை நிலைநிறுத்தும் அகழ்வாய்வுத் துறையிலிருந்து கட்டுரைகள் அதிகம் இல்லை. கட்டுரைச் சுருக்கங்களைக் கண்ணோட்டமிட்டபோது ஒரே ஒரு கட்டுரை மட்டுமே கண்ணில் பட்டது: ‘தமிழ் நாட்டில் நீருக்கடியில் அகழாய்வு: மஹாபலிபுரத்திலும் பிற கடற்கரைத் தளங்களிலும் அகழ்தல்’ என்னும் கட்டுரை . ஆக்கியவர் அலோக் திருப்பதி. ஆனால் இந்தக் கட்டுரை மாநாட்டில் வாசிக்கப்பட்டதா என அறியேன். இது போன்றே பல இடங்களில் அகழாய்வுகள் நிகழ்கின்றன. பூம்புகாரிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் தொன்மைத்தமிழர் தொடர்பான அகழ்வுகள் பல உள்ளன. நம் மலேசியாவிலேயே பூஜாங் பள்ளத்தாக்கு பற்றிய கட்டுரை ஏதும் இல்லை. ஏனோ?

 

இவ்வாறான உண்மையான ஆய்வாளர்களை ஈர்க்குமாறு மாநாட்டின் முன்னேற்பாடுகள் அமையவில்லை. எந்த அறிஞர் என்ன விண்ணப்பம் செய்தாலும் பதில் ஒன்றும் சொல்லாத ஏற்பாட்டாளர்களை தமிழர்கள் பொறுத்துக் கொள்வார்கள்; அயல் நாட்டு அறிஞர்கள் ஏன் மதிக்க வேண்டும்?

 

அது நிற்க, மாநாட்டின் பெரிய குறைபாடு அதன் கட்டுரைகளின் தேர்வில்தான். அநேகமாக வந்த கட்டுரைகள் அனைத்தையும் ஒரு பரிசீலனையும் இன்றி ஏற்றுக்கொண்டது போலவே தோன்றியது. கட்டுரைகளின் சுருக்கங்களை வைத்துப் பர்க்கும்போது ஒரு 30 விழுக்காடு கட்டுரைகள் பள்ளிக்கூட வியாசங்கள் அளவில்தான் இருக்கின்றன. இந்த மாநாட்டில் புத்திலக்கியம் பற்றிய கட்டுரைகளும் கல்வித்துறையில் கற்றல்-கற்பித்தல் பற்றிய கட்டுரைகளும் அதிகம் உள்ளன. இவை வரவேற்கப்பட்டாலும் இவற்றின் எண்ணிக்கையும் ஆதிக்கமும் தமிழின் தொன்மையை நிறுவும் கட்டுரைகளையும் சங்க இலக்கிய ஆய்வுகளையும் தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றையும் மொழி ஒப்பீட்டாய்வுகளையும் இன்றியமையாத அகழாய்வுக் கட்டுரைகளையும் பின்னுக்குத் தள்ளுவது தமிழுக்கு நல்லதல்ல.

 

மொத்ததில் பார்க்கப் போனால் தவத்திரு தனிநாயக அடிகளாரின் அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றுவதில் இம்மாநாடு பெரும் பின்னடைவையே கண்டிருக்கிறது. பெருமிதத்துடன் பிரகடனம் செய்யப்படும் ‘உலகமய காலகட்டத்தில் தமிழாய்வுக்கு வளம் சேர்த்தல்’ என்னும் கருபொருளுக்கும் மாநாடு நியாயம் செய்யவில்லை.

Series Navigationவேறு ஆகமம்மருத்துவக் கட்டுரை – இடுப்பு வலி
author

ரெ.கார்த்திகேசு

Similar Posts

Comments

  1. Avatar
    sariya Aivumaiyam says:

    திராவிடரையும் திராவிடத்தியும் உயர்த்துவதே நோக்கமாகிவிடது! தமிழில் எழுதினால்போதும்; ஆனால் தமிழரின் தொன்மையையும் மரபையும் வரலாற்றையும் வெளிப்படுத்த எவருக்கும் அனுமதியில்லை! கடலாய்வுகள் மட்டுமல்ல கல்வெட்டு, நாணயம் குறித்த ஆய்வுகளுக்கோ சிந்துவெளியில் தமிழர் குறித்த ஆய்வுகளுக்கோ அங்கே இடமளிக்கக்கூடாது என்பதே எழுதாத சட்டமாக்கப்பட்டுவிட்டது! இனி இதுதான் தொடரும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *