மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருது – விழா இக்ஸ்சா மையம் – 25/2/2017 – 530 மணிக்கு

author
2
0 minutes, 21 seconds Read
This entry is part 17 of 18 in the series 12 பெப்ருவரி 2017
N_Kalyan_Raman_cropped
Date: 25/2/2017
Time: 5.30 PM
Venue: ICSA Centre, Opposite Connemara Library,
Egmore, Chennai – 8.

அமெரிக்கத் தமிழ் இலக்கிய அமைப்பான விளக்கு நிறுவனத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான புதுமைப்பித்தன் விருதிற்கு எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான என். கல்யாண ராமன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

 

செய்மதிதொடர்பாடல் பொறியாளராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகிய ISROவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி விட்டுத் தற்சமயம் சென்னையில் வசிக்கும் என். கல்யாண ராமன், “இலக்கியம், நாம் வாழும் உலகத்தை முழுமையாகக் கண்டறிய வகை செய்யும் ஒரு கருவூலம். இதை மேட்டிமைத் தனத்தாலும் உள்ளொளி போன்ற மாயாவாதத்தாலும் குறுக்கி விடக்கூடாது” என்று கருதும் மொழிபெயர்ப்பாளர். கல்யாணராமன் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்த ஒன்பது புத்தகங்கள் இதுவரை வெளியாகி இருக்கின்றன. தவிர, பல தொகுப்புகளுக்குக்காகச் சிறுகதைகளையும் கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார்.  பல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இவர் தற்காலத் தமிழ் இலக்கியப் படைப்பாளர்கள் குறித்து எழுதிய ஆழமான கட்டுரைகளும் நுணுக்கமான விமர்சனங்களும் வெளிவந்துள்ளன.

 

இளமைக் காலத்தில் சிவசங்கரா என்ற பெயரில் கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். திலீப்குமாரின் கதையை மொழிபெயர்க்கும் முயற்சியில் 1990ல் இவரது மொழிபெயர்ப்பாக்கப் பணி துவங்கியது. அவர் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்த கவிதைகளும் கதைகளும் பல தொகுப்புகளில் பரந்து உள்ளன. அசோகமித்திரன் படைப்புகளின் மொழியாக்கமாக The Colours of Evil (1998) என்ற சிறுகதைத் தொகுப்பையும், Sand and Other Stories (2002) என்ற குறுநாவல் தொகுப்பையும் முதலாக வெளியிட்டிருக்கிறார்; அடுத்து அசோகமித்திரனின் ஒற்றன்  நாவல், Mole! (2004) என்ற தலைப்பிலும், மானசரோவர் நாவல் Manasarovar (2010) என்ற தலைப்பிலும், அவரது குறுநாவல் பாவம் டல்பதடோ The Ghosts of Meenambakkam (2016) என்ற தலைப்பிலும் கல்யாண் ராமனால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருக்கின்றன.

 

சி.சு. செல்லப்பாவின் வாடி வாசல் Vaadivasal/Arena (2013) ஆக வெளிவந்திருக்கிறது. வாசந்தியின் யுகசந்தி நாவல் At the Cusp of Ages(2008) என்ற தலைப்புடன் அவர் மொழியாக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. தேவிபாரதியின் ‘வீடென்ப’ சிறுகதைத் தொகுப்பு Farewell, Mahatma(2015) என்ற தலைப்பில் அவரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. அசோகமித்திரனின் தேர்ந்தெடுத்த இருபது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இவரது மொழியாக்கத்தில் Still Bleeding From The Wound என்ற தலைப்பில் பெங்குயின் நிறுவனத்தாரால் நவீன இந்தியச் செவ்வியல் படைப்புகள் வரிசையில் 2016ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் கல்யாணராமன், பெருமாள்முருகனின் ‘நீர் விளையாட்டு’, ‘இசை நாற்காலி’, ‘கோம்பைச்சுவர்’ என்ற மூன்று சிறுகதைகளை ஆங்கிலத்தில் The Well, Musical Chairs, The Man Who Could Not Sleep என்ற தலைப்புகளில் ஜக்கர்நாட் நிறுவனத்தின் வலைப்பதிவுப் புத்தகங்களுக்காக மொழிபெயர்த்திருக்கிறார்.

 

கல்யாண்ராமன் மொழிபெயர்த்திருக்கும் தமிழின் முக்கியமான கவிஞர் என்.டி. ராஜ்குமாரின் பல கவிதைகள் தலித் இலக்கியத் தொகுப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன. சுகிர்தராணியின் கவிதைகளையும் தொகுப்புகளுக்காக மொழிபெயர்த்திருக்கிறார். குட்டிரேவதி, மாலதிமைத்ரி, சல்மா இவர்களின் கவிதைகளின் மொழியாக்கங்கள் Poetry International-ன் வலைப்பதிவிலும் அருந்ததி சுப்ரமணியன் பதிப்பாசிரியராக இருந்து ஸ்பாரோ நிறுவனம் வெளியிட்ட Hot is the Moon புத்தகத்திலும் வெளிவந்துள்ளன. தி லிட்டில் மேகசின்’  ’India in Verse’ (2011) தொகுப்புக்காகக் கவி முன்னோடிகள் ஞானக்கூத்தன், ஆத்மாநாம், சுந்தரராமசாமி உள்ளிட்டவர்களின் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.

 

மொழிபெயர்ப்பாக்கத்தை நவீனத்துவ தமிழ் இலக்கியப் படைப்பிலக்கியத்தின் ஒரு முக்கியமான வகைமையாக்கும் வழியில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக உழைத்திருக்கும் கல்யாண்ராமனின் தன்னிகரற்றப் பங்களிப்பைப் போற்றி 2015ம்ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருது நடுவர் குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மகிழ்வும் மன நிறைவும் பெருமையும் கொள்கின்றன. எழுத்தாளர்கள்அம்பை, தமிழச்சி தங்கபாண்டியன், பெருந்தேவி ஆகிய மூவரும் நடுவர்களாகப் பணியாற்றினார்கள்.

 

பொன். வாசுதேவன்

ஒருங்கிணைப்பாளர் – விளக்கு விருது

pon.vasudevan@gmail.com

99945 41010

Series Navigationதிருவல்லவாழ் சென்ற (மடலூறும் நாயகி)’அம்பரய’ – நூல் அறிமுகம். போராட்டங்கள் நிறைந்த தேடலின் கதை
author

Similar Posts

2 Comments

 1. Avatar
  இராய செல்லப்பா (செல்லப்பா யக்யஸ்வாமி) says:

  தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பதில் தன்னிகரற்றவர் திரு கல்யாணராமன். அவரால் மொழிபெயர்க்கப்பட்ட அசோகமித்திரன் நாவலான ‘மானசரோவரம்’ மொழிபெயர்ப்பின் மகுடம் என்றால் மிகையாகாது. விளக்கு விருது மூலம் அவருக்கு மேலும் வெளிச்சம் கிடைக்கட்டும். உயரியதொரு படைப்பாளியை இந்த விருதுக்குத் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவிற்கும், ஒருங்கினைப்பலரான அகநாழிகை பொன் வாசுதேவனுக்கும் பாராட்டுக்கள்! – இராய செல்லப்பா (தற்போது) நியூஜெர்சி.

 2. Avatar
  BSV says:

  //மொழிபெயர்ப்பாக்கத்தை நவீனத்துவ தமிழ் இலக்கியப் படைப்பிலக்கியத்தின் ஒரு முக்கியமான வகைமையாக்கும் //

  மொழிபெயர்ப்பு படைப்பிலக்கியமே ஆகாது.

  எடுத்துக்காட்டாக, யுக சந்தி என்ற நாவல் ஒரு படைப்பிலக்கியம். படைப்பாளியின் பெயர் வாசந்தி. அந்நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடும்போது மொழியாக்கம் படைப்பிலக்கியம் ஆகவே ஆகாது. “At the cup of ages” is a mere translation by Mr Kalyanaraman.

  Translators are respected and awarded. But they always remain in the shadow of glory i.e. they can never aspire to the place of the creative writer. I read Albert Camus’ The Outsider. It is one of the greatest creations. In English. Because the novel was written by Camus in his mother-tongue French. Till now I don’t remember the name of the translator in English.

  How comes Mr Kalayanaraman becomes a great creative writer. கொஞசம் விளக்குங்கள். தெரிந்து கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *