தோள்வலியும் தோளழகும் ( அனுமன்[ பகுதி1]

This entry is part 3 of 13 in the series 10 ஜனவரி 2021

                                                                        

                                                              இராமகாதையின் மொத்தமுள்ள ஏழு காண்டங்களில் 4வது காண்டமாகிய கிஷ்கிந்தா காண்டத்தில் அறி முகமாகும் அனுமன் இல்லாவிட்டால் இராமகாதையின் பின் பகுதியே கிடையாது என்று சொல்லும்படியான புகழுடையவன் அனுமன். யார் இந்த அனுமன்? அனுமனே தன்னை இன்னான் என்று அறிமுகம் செய்துகொள்வதைப் பார்ப்போம்.

                         யான் காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றில்

                               வந்தேன்! நாமமும் அனுமன் என்பேன்

                                     (கிஷ்கிந்தா காண்டம்)   (அனுமப் படலம் 15)

இசை சுமந்து எழுந்த தோள்—புகழைச்சுமந்து உயர்ந்த தோள்

                                                               அனுமனுடைய புகழுக்கு முன்னால் எந்த மலைக் கூட்டமும் தாழ்ந்து விடுமாம். கவிஞன் சொல்கிறான் இராமனிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான் அனுமன்.

             இம்மலை இருந்து வாழும் எறிகதிர்ப் பரிதிச் செல்வன்

             செம்மலுக்கு ஏவல் செய்வேன்; தேவ! நும் வரவு நோக்கி

            விம்மல் உற்று அனையான் ஏவவினவிய வந்தேன்என்றான்

            எம்மலைக் குலமும் தாழ, இசை சுமந்துஎழுந்த தோளான்.

            (கிஷ்கிந்தா காண்டம்) (அனுமப் படலம் 16)

; மேருவும் உவமை ஆகாத புயம்—-மேருமலைக்கும் நிகரில்லாத

                                                              எந்தமலைக்கூட்டமும் அனுமனுடைய புகழுக்கு முன்னால் தாழ்ந்து விடும் என்று சொன்ன கவிஞன் இப்பொழுது குறிப்பாக பொன் வண்ணமுடைய மேருமலையும் என்று குறிப்பாகச் சொல்கிறான். பெரிதாகவும் சிறப்பாகவும் உவமை சொல்வதென்றால் மேருமலையைச் சொல்வார்கள்  இங்கு, அந்த மேருவும் உவமை போதாதென்று சொல்லி விடு கிறான் கவிஞன்.

                                 அனுமனின் பண்பையும் அறிவார்ந்த பேச்சுத் திறனையும் கண்ட இராமன், இவன் ”விரிஞ்சனோ? விடை வல்லானோ? யார்கொல் இச் சொல்லின் செல்வன்” என்று தன் ஆச்சரியத்தை இலக்குவனிடம் வெளிப்படுத்துகிறான். ஒரு பிரமச் சாரி வடிவில் வந்த  அனுமன் தன் சுய உருவை வெளிப் படுத்து கிறான்.

            பொன் உருக் கொண்ட மேரு, புயத்திற்கும் உவமை போதாத்

            தன் உருக் கொண்டு நின்றான்,   தருமத்தின் தனிமை தீர்ப்பான்

                                             (கிட்கிந்தா காண்டம்) (அனுமப் படலம் 31)

நல் நெடும் குன்றமும் —– நல்ல பெரிய மலைகளும் வெட்கமுறும்

நாணும் தோள்                               படியான தோள்

                                                            சுக்கிரீவனோடு நட்புக் கொண்டபின் அவன் அளித்த விருந்தில் இராமன் பங்கேற்கிறான். அங்கு சுக்கிரீவனின் தமையனான வாலியின் வலிமையைப் பற்றிய முழு விபரங்களை யும் அனுமன் தெரிவிக்கிறான். சுக்கிரீவனிடம் பரிவு கொண்ட இராமன் “தலைமையோடு தாரமும் உனக்குத்  தருவென்” என்று வாக்களிக்கிறான்.

                                                        இதனால் மகிழ்ச்சியும் ஆறு தலும் அடைந்த போதிலும் சுக்கிரீவனுக்கு வாலியின் தேக பலத்தையும் வர பலத் தையும் எண்ணிக் கவலை ஏற்படுகிறது. இதை உணர்ந்த அனுமன், “இராமனின் ஒரே அம்பு இந்த மராமரங்கள் ஏழையும் ஊடுருவிச் செல்வதை நீ காண்பாய்” என்று ஊக்க மளிக்கிறான். உடனே,

                 ‘நன்று நன்றுஎனா நல் நெடுங் குன்றமும் நாணும்

              தன் துணைத் தனி மாருதி தோளிணை தழுவி,

              சென்று, செம்மலைக் குறுகி, யான் செப்புவது உளதால்

              ஒன்று உனக்குஎன இராமனும் உரைத்தி அஃது என்றான்

மீண்டும்  அனுமனின் தோளை  நல் நெடும் குன்றமும் வெட்கமடையும்

படியான தோள் என்று சிறப்பித்துக் கூறுகிறான்.

                                     (கிட்கிந்தா காண்டம்)     (நட்புக் கோட் படலம் 79)

                                                                                  வாலிவதம் ஆனபின், மன்னனாகும் சுக்கிரீவனுக்கு அரசியல் சார்ந்த அறிவுரைகள் கூறி கார் காலம் கழிந்தபின் சீதையைத் தேடும் பணியைத்துவக்கலாம் என்று, கிட் கிந்தைக்கு அனுப்பி வைக்கிறான் இராமன்  சொன்னபடி கார் காலம் கழிந்தபின் சுக்கிரீவன் வராததால் சீற்றமடைந்த இராமன், இலக்குவனை அனுப்புகிறான்.

வயிரத் திண் தோள்——-உறுதியும் வலிமையும் கொண்ட தோள்

                               கோபத்தோடு வரும் இலக்குவனைத் தோழிகளுடன் எதிர் கொண்டு, அவனிடம் இனிமையாகப்பேசி, அவன் கோபத்தைத் தனிக்கிறாள் தாரை. இலக்குவன் சீற்றறம் தணிந்ததைக் கண்டு

              வன் துணை வயிரத் திண் தோள்

                         மாருதி மருங்கின் வந்தான்

                             ஏதாவது ஒரு பொருளின் உறுதியயும் வலிமையையும் சிறப்பித்துச் சொல்வதானால் வயிரத்தைப் போல் என்று சொல்வோம் வயிரமுடைய நெஞ்சு என்று சொல் வார்கள் இங்கு மாருதியின் தோள் வயிரத் திண் தோள்!

                        [கிட்கிந்தைப் படலம் 60]  4328

பொன் நெடுங்கிரி எனப் பொலிந்த தோள்கள்—உயர்ந்த மேருமலை

                                      போன்று விளங்கும் தோள்

                                                ,       அங்கதன் தலைமை யில் வானர வீரர்கள் சீதையைத் தேடிச் செல்கிறார்கள். தென் திசையில் பல இடங்களி லும் தேடிய பின் மகேந்திரகிரிக்கு வந்து சேருகிறார்கள். செல்லும் வழியில் ஒரு பிலத்துவாரத்திற்குள் நுழைகிறார்கள். அங்கு ஒரே இருளாக இருந்ததால் ஒருவரை யொருவர் காணமுடியாமல் தவிக் கிறார்கள் தங்களைக் காப்பாற்றும்படி அனுமனிடம்  வேண்ட அனுமன் பேருருக் கொண்டு தன் காதுகளில் உள்ள குண்டலங் களின் ஒளியோடுவேகமாக

                              துன் இருள் தொலைந்திட துரிதத்து ஏகினான்

                        பொன் நெடுங்கிரி எனப் பொலிந்த தோளினான்

                               (கிஷ்கிந்தா காண்டம்)    (பிலம்புக்கு நீங்கு படலம் 31)

வானர வீரர்களை மீட்கிறான். அனுமனின் நிறமும் பொன் நிறம் உருவமும் பெரிது என்பதால் பொன் நெடுங்கிரி என்கிறான்.

                                                              பல்வேறு இடையூறுகளையும் கடந்தபின் வானர வீரர்கள் மகேந்திரகிரி வந்து சேருகிறார்கள். சம்பாதி மூலம் சீதை இலங்கையில் இருப்பதை அறிந்து கொள்கிறார்கள். நூறு யோசனை தூரத்தில் இருக்கும் இலங்கைக்கு யார் எப்படிச் செல்வது என்று திகைக்கிறார்கள். கடைசியில் அனுமனே சென்று மீண்டு வரும் வலிமையும் தகுதியும் உடையவன் என்பதை உணர்ந்த சாம்பவான்

மல் தோள்  —மற்போர் செய்வதற்கு  உரிய தோள்                                                   

             மாருதி ஒப்பார் வேறு இலை என்னா, அயன் மைந்தன்

          சீரியன் மல் தோள் ஆண்மை விரிப்பான்

மற்போரில் சிறந்தவனான அனுமனின் வலிமையை மற்ற வானர வீரர்கள் தெரிந்து கொள்வதற்காகவும் அனுமனுக்கே தன்வலிமை யைப் பறி தன்னம்பிக்கை வருவதற்காகவும் மூத்த அறிஞனான சாம்பவான் அனுமனைப் புகழ்ந்து பேச்சுகிறான்.

               [கிட்கிந்தா காண்டம்] [மயேந்திரப்படலம் 8] 4718

குறையாத தோள் வலி—–குறைவடையாத தோள்வலி

             நல்லவும் ஒன்றோ; தீயவும் நாடி நவை தீரச்

                          சொல்லவும் வல்லீர்; காரியம், நீரே துணிவுற்றீர்

                        வெல்லவும் வல்லீர், மீளவும் வல்லீர்; மிடல் உண்டேல்

                        கொல்லவும் வல்லீர், தோள்வலி என்றும் குறையாதீர்

            (கிஷ்கிந்தா காண்டம்)      (மயேந்திரப் படலம் 11)

எவ்வளவு பிரச்சனைகள் எதிர்ப்பட்டாலும்நன்மை தீமைகளை ஆராய்ந்து உண்மையைக் கண்டு, அனுமன் தோள் வலிமை குறையாமல், அப்பிரச்சனைகளை சமாளிப்பான் என்று பாராட்டு கிறான். அரக்கர்களோடு போர் செய்ய நேரிட்டாலும் அனுமன் அவர்களை கொன்றோ வென்றோ மீளவும் செய்வான்.

உயர் தோள்                     

               மேலும் அனுமனது வீரத்தைப் புகழ்ந்துபேசுகிறான்

          ,

                      ஒல்கல் இல் வீரத்து உயர் தோளீர்!

     பார் உலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன் முன்,

     தேர் முன் நடந்தே, ஆரிய நூலும் தெரிவுற்றீர

அனுமன் தளராத வீரமுள்ள உயர் தோள்களை உடையவன் என்பதோடு அமையாமல் சிறந்த கல்வியறிவும் உடையவன் என்று பாராட்டுகிறான் அனுமன் நவ வியாகரணங்களையும் கதிரவனிடமிருந்து கற்று நவவியாகரண பண்டிதன் என்று பட்டமும் பெற்றவன்.

                    கதிரவன், “என்னால் ஓரிடத்தில் அமர்ந்து

பாடம் கற்றுத்தர முடியாது” என்று சொல்ல அவனுடய தேரின் முன்னே நடந்து சென்றே பாடம் முழுவதையும் படித்தான்! அப்படி

சிறப்பாகக் கல்வி கற்றவன் அனுமன்

                 (கிஷ்கிந்தா காண்டம்) (மயேந்திரப் படலம் 14)

                        என்று அனுமனின் வலிமையை அவனுக்கு உணர்த்தி உற்சாகமூட்டுகிறான் சாம்பவான். இதைக் கேட்ட அனுமன் யானே பிறந்த பயனைப் பெற்றேன் என்று உள்ளம் பூரிக்கிறான். மயேந்திர மலையின் உச்சிக்குச் செல்கிறான்

குவவுத் தோள்

                 கூர் உகிர்க் குவவுத் தோளான்

                    கூம்புஎனக் குமிழி பொங்க

               ஆர்கலி அழுவத்து ஆழும்

                    கலம் எனல் ஆயிற்று அன்றே

               [சுந்தர காண்டம்] [கடல் தாவு படலம் 7] 4738

திரண்ட தோள்களைக் கொண்ட அனுமன் பாய்மரம் போல் விளங்க, அவன் அழுத்தியமலை ஆழும் கப்பல் போலிருந்தது

அனுமனின் பாரம் தாங்காமல் மலையில் பல நிகழ்ச்சிகள் நடந்தேறுகின்றன.

விசயம் வைகும் விலங்கல் தோள்

     குறுமுனிகுடித்த வேலை குப்புறும் கொள்கைத்து ஆதல்

      வெறுவிது; விசயம் வைகும் விலங்கல் தோள் அலங்கல்

                                                         வீர!

      ”சிறிது இது” என்று இகழற்பாலை அல்லை நீ சேறி” என்னா

     உறுவலித் துணைவர் சொன்னார்; ஒருப்பட்டான்;

                                             பொருப்பை ஒப்பான்.

”எப்பொழுதும் வெற்றியே குடிகொண்டிருக்கும் மலைபோன்ற

தோள்களை உடைய வீர அனுமனே! குறுமுனி அகத்தியன் குடித்த

கடல் என் ஆற்றலுக்கு எம்மாத்திரம் என்று அற்பமாக நினைக் காமல் செல்வாய்” என்று உடன் வந்த வானரர்கள் அறிவுரை சொல்ல, அனுமன் அவற்றை உள்வாங்கிக் கொள்கிறான்

         (சுந்தர காண்டம்) (கடல் தாவு படலம் 14)

மானத் தோள்—-பெருமையும் புகழும் வெற்றியும் பெற்ற இரு

                                                     தோள்

    கால்களை அழுந்த ஊன்றுகிறான் அனுமன்

           வால் விசைத்து எடுத்து, வன்தாள்

                  மடக்கி, மார்பு ஒடுக்கி, மானத்

           தோள் விசைத் துணைகள் பொங்கக்

                 கழுத்தினைச் சுருக்கி, தூண்டும்

            கால் விசைத் தடக்கை நீட்டி,

                 கண்புலம் கதுவா வண்ணம்

           மேல்விசைத்து எழுந்தான், உச்சி

               விரிஞ்சன் நாடு உரிஞ்ச—-வீரன்

அனுமன் வால் எடுத்து, கால் மடக்கி, மார்பு ஒடுக்கி, கழுத்தைச் சுருக்கி, கைகளை நீட்டி, உச்சி பிரும்ம லோகத்தை தொடும்படி

விண்ணில் வேகமாக எழும்பினான்

                 [கடல் தாவு படலம் 15]  4756

கொற்றக் குவவுத் தோள்—வெற்றியை உடைய பருத்த தோள்

                     குன்றொடு குணிக்கும் கொற்றக்

                         குவவுத்தோள் குரக்குச் சீயம்

                     சென்றுறு வேகத் திண்கால்

                         [கடல் தாவு படலம் 34] 4775

மலை போன்ற தோள்களையுடைய வானரசிங்கமான அனுமன்  சென்ற வேகத்தில் தேவர்களின் விமானங்கள் ஒன்றோடொன்று மோதி கடலில் விழுந்தன என்று அனுமனின் வேகத்தைக் குறிப்பிடுகிறான்.

=======================================================================

                                அனுமன் (பகுதி 2)

                        தனக்கு வந்த இடையூறுகளையெல்லாம் தன் ஆற்றலாலும் அறிவுத்திறத்தாலும்  இராமநாமத்தாலும் போக்கிய அனுமன் இலங்கையில் பிரவேசிக்க எண்ணுகிறான். ஆனால் இது என்ன சோதனை!

தூண் ஆம் என்னும் தோள்-ன–தூணே நிகர் என்று

                                      சொல்லும்படியான தோள்

     காவல் நனி மூதூர்—போவதின் மேலே வழி நின்றாள்’

     தூண் ஆம் என்னும் தோள் உடையானை—சுடரோனைக்

     காணா வந்த கட்செவி என்னக் கனல் கண்ணாள்

          (சுந்தர காண்டம்)  (ஊர் தேடு படலம் 75)

தூண் போன்ற தோள்களையுடைய அனுமனை இலங்கை நக

ருக்குள் நுழைய விடாமல் தீப்பொறி பறக்கும் கண்களோடு லங்கிணி என்பவள், சூரியனை விழுங்க வந்த பாம்பு போல் வழி மறித்து நிற்கிறாள் வேறு வழியில்லாமல் அவளுடன் பொருது கிறான் அனுமன். அவளை வீழ்த்தி விட்டுச் செல்லும் பொழுது அவள், “அறம் வெல்லும் பாவம் தோற்கும், நீ நினைத்த எல்லாம் நல்லபடி முடியும்” என்று அனுமனை வாழ்த்து கிறாள்      

                                  திரண்ட தோள்களைக் கொண்ட அனுமன், வீதி வழியாகச் சென்றால் ஏதேனும் சிக்கல் ஏற்படலாம் என்று  எண்ணித் தன் மேனியைச்  சுருக்கிக் கொண்டு மாளிகை ஓரமாகச் செல்கிறான்.

திரள் தோள்———திரண்ட  தோள்                          

                          இலங்கையிலுள்ள பல மாளிகைகளிலும் பிராட்டியைத்தேடுகிறான் அனுமன். ஒருஅரண்மனையில் மண் டோதரியைக் கண்ட அனுமன் முதலில் அவளைச் சீதையோ என சந்தேகிக்கிறான். பின் தெளிந்து அங்கிருந்து

               குன்று குன்றிய தகை உற ஓங்கிய

                         கொற்ற மாளிகை தன்னில் 

               சென்று புக்கனன் இராவணன் எடுப்பரும்

                    கிரியெனத் திரள் தோளான்

          (சுந்தர காண்டம்)  (ஊர் தேடு படலம் 203)

இராவணன் சிவன் உறையும் கயிலாயமலையயே எடுக்க முயற் சித்தவன், ஆனால் அனுமனுடைய தோளை, இராவணன் எடுக்க முடியாத மலை போன்ற திரண்ட தோள் என்று வருணிக்கிறான் கம்பன். மண்டோதரியின் மாளிகையை நீங்கிய அனுமன், வேறொரு அரண்மனையில் துயிலும் இராவணனைக் கண்டு அளவற்ற சீற்றம் கொள்கிறான்.

                                      “வஞ்சகமாகச் சீதையக் கவர்ந்து சென்ற இவனுடைய பத்துத் தலைகளையும் இராமனின் அடியவ னாகிய நான் என் கால்களின் வலிமையால் இடித்துப் பொடி யாக்கி என் வலிமையைக் காட்டா விட்டால் என் தோள்களின் பயன் தான் என்ன? புகழ் தான் என்ன? நான் எப்படி நல்ல அடிய வனாக இருக்க முடியும்?” என்று தனக்குத்தானே வினவுகிறான்

தோள் ஆற்றல்

    தோள் ஆற்றல் என்னாகும்? மேல்நிற்கும் சொல் என்னாம்?

    வாள் ஆற்று கண்ணாளை வஞ்சித்தான் மணிமுடி என்

    தாள் ஆற்றலால் இடித்துத் தலை பத்தும் தகர்த்து இன்றென்

    ஆள் ஆற்றல் காட்டேனேல் அடியேனாய் முடியேனே!

            [ஊர் தேடு படலம் 219] 5053

அடுத்த நிமிடமே, இது நேமியான் பணி அன்று என்ற உணர்வு வர, தன் சீற்றத்தை அடக்கிக் கொண்டு அங்கிருந்து அகல்கிறான்

பிராட்டியைக் காணாததால் கலங்கியவன் அங்கிருந்து செல்லும் போது ஒரு சோலையைக் காண்கிறான். அங்கு புலிக் கூட்டங் களுக்கிடையே இருக்கும் மானைப் போல் பிராட்டியைக் காண் கிறான். தக்க சமயத்தில் பிராட்டியைக் காப்பாற்றி தன்னை இராமதூதன் என்றுஅறிமுகம் செய்து கொள்கிறான்.

பாழிய பணைத்தோள்—-பருத்த மூங்கிலைப் போன்ற  தோள்               

                               இராமன் சொல்லியனுப்பிய அடை யாளங்களைச் சொல்லி கணையாழியையும் காட்டுகிறான். இதனால் மனம் தேறிய பிராட்டி மனமகிழ்ந்து

     ’பாழிய பணைத்தோள் வீர! துணை இலேன் பரிவு தீர்த்த

     வாழிய வள்ளலே! யான் மறு இலா மனத்தேன் என்னின்

     ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம், உலகம் ஏழும்        

     ஏழும் வீவுற்ற ஞான்றும், இன்று என இருத்தி’ என்றாள்

        (சுந்தர காண்டம்)  (உருக்காட்டுப் படலம் 72)

”ஈரேழு பதினாலு உலகங்களும்அழியும் ஊழிக்காலத்திலும் நீ,

அழியாமல் இன்று இருப்பது போலவே பருத்த மூங்கிலைப் போன்ற தோள் வலிமையோடு விளங்குவாய் என்றாள். பின், இராம இலக்குவர்கள் எங்கே யிருக்கிறார்கள்? என்னுடைய நிலைமைய யார் சொன்னார்கள்” என்று வினாத்தொடுக்கிறாள்

                          பிராட்டியின் அனைத்துக் கேள்விகளுக்கும்

 தூண் திரள் தடந்தோளனும் உற்றது சொல்லலுற்றான்

உயர் தோள்—-உயர்ந்த தோள்கள்              

இந்த உருவத்தோடு அனுமன் எப்படிக் கடலைக் கடந்து வர முடிந்தது என்று திகைப்பும் வியப்பும் அடைகிறாள். இதை அனுமனிடமே கேட்கிறாள். இதைக்கேட்டதும்

                                        தொழுத கையினன்

          விட்டு உயர் தோளினன்; விசும்பின் மேக்கு உயர்

          எட்ட அரு நெடு முகடு எய்தி, நீளுமேல்

          முட்டும் என்று, உருவொடு வளைந்த மூர்த்தியான்

          (சுந்தர காண்டம்)     (உருக்காட்டுப் படலம் 99)

பிராட்டியைத் தொழுது, உயர்ந்த தோள்களோடு, ஆகாயத்துக்கும் மேலே உயர்ந்தால் முகடுஇடிக்குமே என்று எண்ணி குனிந்த தலையோடு தன் உருவத்தைக் காட்டினான்

துன்றிய புயம் ——–நெருங்கிய புயம்                            

                                       பிராட்டி இருக்கும் நிலையைக் கண்ட அனுமன், அவளை அந்த நிலையில் விட்டு விட்டுச் செல்ல மனமில்லாமல் பிராட்டியிடம் ஒரு விண்ணப்பம் வைக்கிறான்.

      பொன் திணி பொலங்கொடி! என் மென் மயிர் பொருந்தித்

     துன்றிய புயத்து இனிது இருக்க; துயர் விட்டாய்

     இன் துயில் விளைக்க; ஓர் இமைப்பின், இறை வைகும்

     குன்றிடை, உனைக் கொடு குதிப்பென்; இடை கொள்ளேன்

             (சுந்தர காண்டம்)  (சூடாமணிப் படலம் 3)

                       ”தாயே!  எனது தோள்களில் நீ நிம்மதியாக இருக்க நான் ஒரு நொடியில் உன்னை இராமனிடம் கொண்டு சேர்ப்பேன் “என்கிறான்ஆனால் பிராட்டி இதற்கு சம்மதிக்க வில்லை. பல காரணங்களைச் சொல்கிறாள்.

               எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்

               சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்

               வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று வீசினேன்

          (சுந்தர காண்டம்) (சூடாமணிப் படலம் 18)

                                 ஐயன் ஒருவனையன்றி இவ்வுருத் தீண்டுதல் கூடுமோ? என்றும் கேள்வி யெழுப்புகிறள். “இன்னும் ஒரு திங்கள் மட்டுமே இருப்பேன் அதற்குள் என்னை மீட்கும் படி ஐயனிடம் சொல்.” என்றவள் தன்னிடமிருந்த சூடாமணியைக் கொடுத்து இராமனுக்கும் தனக்கும் மட்டுமே தெரிந்த சில சம்ப வங் களையும் அடையாளமாகச் சொல்லி அனுப்புகிறாள்

=======================================================================

                                அனுமன் (பகுதி 3)    

                           சூடாமணி பெற்ற அனுமன், தான் வந்து சென்றதற்கு அடையாளமாக ஏதேனும் செய்து இராவணனை நேருக்கு நேர் சந்திக்கவும் விரும்பினான். எனவே அசோக வனத்தை அழிக்கத் தொடங்கினான்

குன்றம் இரு தோள்

                    சூரிய சந்திரர்கள் வலம் வரும் மேருமலை போன்ற இரு தோள்களையுடைய தனது பெரிய உருவத்தை எடுத்துக் கொண்டான் அன்றொரு நாள் பூமிப்பிராட்டியைத் தன் பற்களிடையே கொண்ட வராக மூர்த்தியைப்போல் விளங்கினான்

மரங்கள் அடர்ந்த அசோகவனத்தை அழிக்கலானான்

                                   இரவி சந்திரன் இயங்கும்

          குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான்

         அன்று உலகு எயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான்

         துன்று கடிகாவினை, அடிக்கொடு துகைத்தான்

          [சுந்தர காண்டம்]  [பொழில் இறுத்த படலம் 8] 5436

குன்று எனக் குவவுத் திண்தோள்—-மேருமலையை ஒத்த இரு

                                                      தோள்கள்                                                         மலை போன்ற திரண்ட தோள்களையும் பரந்த மார்பையும் உடைய அனுமன் சீற்றத்தோடு அவ்வனத்திலிருந்த மரங்களை அசைக்க அவற்றிலிருந்த பறவைகள் சுவர்க்கம் சென்றன என் கிறான் கவிஞன். சீற்றத்தோடு அசைத்தபோது சுவர்க்கம் கிடைக்குமானால் அனுமன் அருளோடு அம்மரங்களை அசைத் தால் அப்பறவைகளுக்கு மிகப் பெரும் பதவி கிடைக்கும் என்ப தில் சந்தேகமேயில்லை

        தோட்டொடும் துதைந்த தெய்வ மரம்தொறும்

தொடுத்த புள் தம்

         கூட்டொடும் துறக்கம் புக்க, குன்று எனக்

                                             குவவுத் திண் தோள்

        சேட்டு அகன் பரிதி மார்பன் சீறீயும் தீண்டல் தன்னால்

       மீட்டு அவன் கருணை செய்தால், பெறும் பதம்

                                            விளம்பலாமோ?

               [பொழில் இறுத்த படலம் 43] 5471

வனம் அழிந்ததைக் கண்ட காவல் வீரர்கள், இராவணனிடம்

     கிரி படு குவவுத் திண் தோள் குரங்கு இடை கிழித்து வீச,

     எரி படு துகிலின், நொய்தின் இற்றது கடி கா’ என்றார்

     (சுந்தர காண்டம்)    (பொழில் இறுத்த படலம் 56)

நெருப்புப் பற்றிய ஆடைபோல அசோகவனம் அழிந்தது என்று அறிவிக்கிறார்கள்                        

                          கேவலம் ஒரு குரங்கு அசோக வனத்தை அழித்தது என்பதை நம்பமுடியாத இராவணன் அந்தக் குரங்கைக் கொல்லாமல் உயிருடன் பிடிக்க ஆணையிடுகிறான். பஞ்ச சேனா பதிகள் புறப்படுகிறார்கள் ஒரு குரங்கைப் பிடிக்க!சேனாபதிகளில் இருவர் மாள, மூவரும் அடங்காத சினத்துடன் அனுமன் மேல் அம்புகளைத் தொடுக்கிறார்கள்.    அவ்வளவு தான்

திரண்டு உயர் தோள் ——-பருத்து உயர்ந்த திரண்ட தோள். 

                               திரண்டு உயர்ந்த தோள்களையுடைய அனுமன் இரண்டு தேர்களைத் தன் இருகைகளாலும் எடுக்கிறான்  என்ன நடக்கப் போகிறதோ என்று தேவர்களும் அஞ்சுகிறார்கள்.

         திரண்டு உயர் தோள் இணை அஞ்சனை சிங்கம்

         அரண் தரு விண் உறைவார்களும் அஞ்ச,

         முரண் தரு தேர் அவை இரண்டை

          இரண்டு கையின் கொடு எழுந்தான்

     (சுந்தர காண்டம்)    (பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம் 58)

                      இதன்பின் இராவணன் மகனான அக்ககுமாரன் போர் செய்ய வருகிறான்.  ஒரு குரங்கால் இப்படிப் போர் செய்ய முடியுமா என்று அதிசயிக்கிறான். வருபவன். யாராக இருந்தாலும் ஒருகை பார்த்து விடுவது என்று தன் சுந்தரத் தோளை வாழ்த்தி விட்டு இராமனைத் தொழுகிறான். இருவரும் சளைக்காமல் போர் செய்கிறார்கள்.அனுமன் அக்ககுமாரன் தேர்மேல் ஏறுகிறான்.

பொன் தோள்—பொன் போன்ற தோள்

                         தேர்மேல் ஏறி சாரதியை அழிக்கிறான் குதிரைகள் இறக்கின்றன. இதைக் கண்ட அக்க குமாரன் சில அம்புகளை அனுமன் மார்பில் ஏவுகிறான். சில அம்புகள் பொன் போன்ற அனுமன் தோள்களில் மறைந்து போகின்றன. அனுமன் நேராக அக்ககுமாரனுடைய வில்லைப் பறிக்கிறான். உடனே

இவர்பொன் தோள்—-உயர்ந்த அழகிய பொன் தோள்

                                              இவர் பொன் தோளின்

                   சுரிகையால் அவன் உருவிக் குத்தலும்

                  அதனை, சொல் கொடு வரு தூதன்

               பொருகையால் இடை பிதிர்வித்தான்,முறி

                    பொறி ஓடும்படி பறியாவே

           [சுந்தர காண்டம்] [அக்ககுமாரன் வதைப்படலம் 34]

அனுமனின் உயர்ந்த, அழகிய அனுமனின் தோளில் தன் உடை வாளால் குத்துகிறான் அக்ககுமாரன். அந்த உடைவாளைத் தன் கையால் பொடிப்பொடியாக உதிரும்படி செய்கிறான் அனுமன்

தன் வாலால் அக்ககுமாரனைப் பற்றி ஓங்கி அறைய, அவன் குண்டலங்களிலிருந்த இரத்தினங்கள் சிந்தின.பின் தன் வயிரம் பாய்ந்தகையால் குத்த அக்ககுமாரன் வீழ்கிறான். எக்காலத்தும்

தன் புகழ் தேயாத அனுமன் அக்ககுமாரனைத் தரையில் தேய்த்தே அழித்து விடுகிறான் .

குன்றம் எனும் புயம்——மலை போன்ற தோள்

                               அக்ககுமாரன் கொல்லப்பட்டதை அறிந்த இந்திரஜித், என்று சீற்றத்தோடு போர் செய்ய வருகிறான்.

அவன் வருகையை அறிந்த அனுமன் நல்லது நல்லது என்று வர வேற்கிறான்

           குன்றம் எனும் புய வானர வீரன் (அனுமன்)

          நன்று இது! நன்று இது! என்ன நயந்தான்

          (சுந்தர காண்டம்)     (பாசப் படலம் 34)

இருவரும் சளைக்காமல் போர் செய்கிறார்கள்! உன் வாழ்நாளுக்கு

எல்லை இன்று என்று சொன்ன இநதிரசித்திடம் உங்கள் வாள் களூக்கு முடிவு [எல்லை] வந்து விட்டது. ஆனால் என்தோள் ஆற் றலுக்கு எல்லை இல்லை என்று என்று பதிலடி கொடுக்கிறான்

எல்லை இல்லாத தோள்கள்—-ஆற்றலுக்கு முடிவில்லாத தோள்

             வாளுக்கு எல்லையும் வந்தன; வகை கொண்டு வந்தேன்

            தோளுக்கு எல்லை ஒன்று இல்லை

             [ சுந்தர காண்டம்] [ பாசப்படலம் 64]  5780

                          தேரை இழந்த இந்திரஜித் வானில் மறைந்து பிரம்மாஸ்திரத்தை ஏவுகிறான். அந்த அஸ்திரம் அனுமன் உடலைச் சுற்றி கட்டி விடுகிறது. கட்டுப் பட்ட அனுமனை இலங்கைத் தெருக் களின் வழியாக இழுத்துச் செல்கிறார்கள்.

வரைப் புயம்—–மலை போன்ற தோள்                     

                 அனுமன் கட்டுப்பட்ட செய்தியை திரிசடை மூலம் கேள்விபட்ட சீதை துடி துடிக்கிறாள். இராமனின் கணையாழி காட்டி எனக்கு உயிர் தந்தாய். ஊழிக்காலம் முடிந்தாலும் என் றென்றும் நீ சிரஞ்சீவியாய் இருப்பாய் என்று வாழ்த்தினேன்.அது

பொய்யாகாது. ஆனால் நீயோ உன் மலை போன்ற தோள்களின் வலிமையைக் காட்டி ஒரு பழியைத் தேடிக் கொண்டு விட்டாயே

     ஆழி காட்டி என் ஆர் உயிர் காட்டினாய்க்கு,

     ”;ஊழி காட்டுவென்” என்று உரைத்தேன் உன் வரைப் புயப்

     பாழி காட்டி அரும்பழி காட்டினாய்

               (சுந்தர காண்டம்)     (பிணி வீட்டு படலம் 34)

என்று வருந்துகிறாள்

திருந்து தோள்———சிறந்து விளங்கும் தோள்

                     பிரும்மாஸ்திரத்தால் கட்டிய அனுமனை இராவணன் சபையில் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். இராவணனை நேருக்கு நேர் சந்தித்த அனுமன், பாம்பைக் கண்ட கருடனைப்போல் சீற்றம் அடைகிறான்  என் தோளைப் பிணித்தி ருக்கும் இந்த பிரம்மாஸ்திரத்தை அறுத்து இராவணன் மேல் பாய்ந்தால் என்ன என்று ஆத்திரமடைகிறான்

     கருந்திண் நாகத்தை நோக்கிய கலுழனின் கனன்றான்

    ”திருந்து தோளிடை வீக்கிய பாசத்தைச் சிந்தி,

                        பாய்வென்” என்று உடன்றான்

          (சுந்தர காண்டம்)     (பிணி வீட்டு படலம் 55)

                  அதற்குள், யார் நீ? எதற்காக இங்கு வந்தாய்? உன்னை அனுப்பியவர் யார்?” என்ற கேள்விகள் இரா வணனிடமிருந்து வர ” வில்லி தூதன், அன்னவற்கு அடிமை செய் யும் அனுமன் நான் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொள் கிறான். அனுமன் வாலியிடம் இராவணன் தோற்ற நிகழ்ச்சியை நினைவூட்டியதும், இரவணன் அடங்காத சீற்றம் கொண்டு அனும னைக் கொல்ல முயற்சிக்கிறான். வீடணன் தடுக்கிறான்

                            பின் இராவணன் கட்டளைப்படி அனுமன் வாலில் தீ வைக்க, அத்தீயாலேயே இலங்கையை அழிக்கிறான் அனுமன். இராமனிடம் பிராட்டியைக் கண்டு வந்த செய்தியைத் தெரிவிக்கிறான். வானரர்கள் உதவியோடு அணைகட்டி இலங்கை வருகிறார்கள் இராம இலக்குவர்கள்.

பொன்செய் தோள், ==பொன்னால் அமைந்த தோள்.

செய்தோள் வலி ——தோள்கள் புரிந்த ஆற்றல்

                           சரணாகதி அளித்த இராமனிடம், அனுமன் இலங்கையில் செய்த சாகசங்களையெல்லாம் விரிவாக எடுத்து ரைக்கிறான் வீடணன். இதைக்கேட்ட இராமன்,”பொன்னால் செய் தது போன்ற தோள்களை உடையவனே! உன் வீரச் செயல்கள் இலங்கை எங்கும் நிறைந்துள்ளன. நாங்களும் சிலவற்றைச் செய்தோம். ஆனால் அவையெல்லாம் உன் செயல்களுக்கு முன் நிற்க முடியுமா?” என்று அனுமனைப் பாராட்டு கிறான்

    நின் செய்தோள் வலி நிரம்பிய இலங்கையை நேர்ந்தோம்

   பின் செய்தோம் சில;அவை இனிப் பீடு ஒன்று பெருமோ?

  பொன் செய்தோளினாய்!  போர்ப்பெரும் படையொடும் புக்கோம்;

  என் செய்தோம் என்று பெரும் புகழ் எய்துவான் இருந்தோம்?

      [யுத்தகாண்டம்] இலங்கை கேள்விப்படலம் 71]  6586

                    அனுமன் (பகுதி4)

சுருதியே அனைய தோள்—-வேதங்களை ஒத்த தோள்

                       இராம இராவண யுத்தம் ஆரம்பமாகிறது. முதல் நாள் போரில் இராவணனை எதிர்த்த சுக்கிரீவன் தளர்ச்சி யடைவதை அறிந்த அனுமன், சுக்கிரீவன் உதவிக்கு வருகிறான்

இராவணா! என்னோடு பல்வகை போர் புரிவாயோ என்று சவால் விடுகிறான் உடனே இராவணன் வருவதானால், வா,வா, என்ற ழைக்க, மலை ஒன்று வாங்கி, வேதங்களை ஒத்த தோள்களால் வீசினான்.

          வருதியேல் வா, வா, என்பான் மேல்

                               மலை ஒன்று வாங்கி

          சுருதியே அனைய தோளால் வீசினான், காலின்

                                                       தோன்றல்           (யுத்த காண்டம்) (முதற் போர் புரி படலம் 133)

                           அனுமன் வீசிய மலையை இராவணன்

ஆயிரம் துண்டுகளாக்கி விடுகிறான். இதைக் கண்ட அனுமன்,

 வீங்கு தோள்———-பருத்த தோள்.      

           மீட்டு ஒரு சிகரம் வாங்கி, வீங்கு தோள் விசையின்

                                   வீசி ஓட்டினான்

          (யுத்த காண்டம்)      (முதற் போர் புரி படலம் 135)

  பணை ஆர் புயம்—பருத்து நிறைந்த தோள்

                     வெகுநேரமாக இருவரும் போர் செய்கிறார்கள் அனுமன், நீ மிக்க வீரத்துடன் போர்செய்கிறாய். ஆனால் உன் வாளாண்மையையும், தாளாண்மையையும், தனி ஆண்மையை யும் தோளாண்மையையும் புகழையும் ஒரு குத்தால் அழிப்பேன் என்று சவால் விடுகிறான்.இதன் பின் இருவரும் குத்திக் கொள் கிறார்கள். அனுமனின் வலிமையை உணர்ந்த இராவணன்

பணை ஆர் புயம்—-பருத்து நிறைந்த தோள்

                 பணை ஆர் புயம் உடையானிடம்

                        சில இம்மொழி பகர்வான்   

       (யுத்த காண்டம்)    (முதற் போர் புரி படலம் 179)

                            சிறிதும் மனம் தளராத நானே மெலிவு என்பதை உன்னால் உணர்ந்தேன். உன்னை ஒப்பார்கள் பிறர் உளரோ? இன்றும் உளை; என்றும் உளை; இலை ஓர் பகை என்று அனுமனை வாயாரப் புகழ்கிறான். ஒப்பந்தப்படி அனுமனைக் குத்துகிறான் இராவணன். அவன் கயிலை மலையைத் தூக்கிய போது, அது சற்றே தள்ளாடியதைப் போல, அனுமனும் கொஞ்சம்

தளர்ச்சியடைகிறான்

தடந்தோள்                   

                        முதல்நாள் போரில் தோற்ற இராவணன் கும்பகருணனைப் போர்க்களத்திற்கு அனுப்புகிறான். இலக்குவ னோடு போர் செய்யும் கும்பகருணன் தேரில் இருந்து போர் செய்ய இலக்குவன் தரையில் நின்று போர் செய்வதைக் கண்ட அனுமன் வேண்டிக் கொண்டபடி இலக்குவன் அனுமன் தோளில் ஏறினான் ன்அனுமன் தோள் கும்பனுடய ஆறு தேர்களை விடவும் அகலமானது என்கிறான் கவிஞன்

   ஆறு தேரினும் அகன்றது; அவ் அனுமன் தன் தடந்தோள்

     (யுத்த காண்டம்)     (கும்பகருணன் வதைப் படலம் 231)

பொன்மலையும் வெள்ளிமலையும்

                                   தனக்கு நிகர் தானே என்று விளங்கிய அனுமன் தோள்மேல் இலக்குவன் வீற்றிருந்த காட்சி

        பொன்னின் மால்வரை வெள்ளி மால் வரை

                  மிசைப் பொலிந்தது என்னுமாறு

       (யுத்த காண்டம்)    (கும்பகருணன் வதைப் படலம் 232)

தோன்றுகிறது. இலக்குவன் பொன்மலை போலவும் அனுமன் வெள்ளிமலை போலவும் காட்சியளிக்கிறார்கள்.

படர் தோள்                        

                   போரில் ஒருகட்டத்தில் கும்பகருணன் தேரையும் வில்லையும் இழந்து தரையில் நிற்பதைக் கண்டு இலக்குவனும்

அனுமனுடைய பரந்த தோளிலிருந்து இறங்கினான்

             இவன் பதாதி என்று அனுமன் தன் படர் தோள்

       ஒழியப் பார்மிசை இழிந்து சென்று இளவலும் உற்றான்

     (யுத்த காண்டம்) (கும்பகருணன் வதைப் படலம் 246)

================================================================================

                            அனுமன் ( பகுதி 4)

உயர்தோள்——உயர்ந்த தோள்

                               கும்பகருணன் வீழ்ந்தபின் இராவணன் மகனான அதிகாயனும் இலக்குவனால் போரில் வீரமரணம் அடைகிறான். இலக்குவனைப் பழி தீர்க்க இந்திரஜித் வருகிறான். வந்தவன்

                          அனுமனின் மார்பிலும் தோளிலும் ஆயிரம் அம்புகளைச் செலுத்துகிறான்

                              மாருதிதன் வாசம் நாறு

          அலங்கல் மார்பும் உயர்தோளும் ஊடுருவ,

                    ஆயிரம் சரம் அழுத்தினான்  

                  (யுத்த காண்டம்)     (நாகபாசப் படலம் 81)

வயிரத் தோள்.——மிக உறுதியான தோள்

                                         இதற்குள் இலக்குவன் வர இந்திரஜித்தும் இலக்குவனும் வெகு உக்கிரமாகப் போர் செய் கிறார்கள். சூரியன் மறையும் நேரம் இந்திரஜித் வானில் மறைந்து நாகபாசத்தை ஏவுகிறான். மாயப்போர் செய்யும் இந்திர சித்தை பிடிப்பேன் என்று எழுந்த அனுமனை நாகபாசம் சுற்றிப் பிணிக் கிறது, முன்பு ஒரு நாள் இராவணன் தோள்களை வாலியின் வால் எப்படி சுற்றிப் பிடித்ததோ அப்படிப் பிணித்ததாம்.

                         இந்திரசித்தின் நாகபாசம் அனுமனைப் பிணித்ததற்கு, அவனுடைய தந்தையான இராவணனே வாலியின் வாலால் பிணிக்கப் பட்டதை உவமையாக்குகிறான் கவிஞன்

      ஏற்புடைப் பாசம், மேல்நாள் இராவணன் புயத்தை வாலி,

      வால் பிணித்ததென்ன சுற்றிப் பிணித்தது வயிரத்தோளை.

          [யுத்தகாண்டம்)             (நாகபாசப் படலம் 192)

                              இலக்குவன், அனுமனோடு அனைத்து வானர வீரர்களும் மயங்கி வீழ்ந்ததைக் கண்ட அரக்கர்கள், குரக்குத்தானை இறந்துபட்டது என்று மகிழ்ச்சியோடு இராவண னிடம் செய்தி சொல்கிறார்கள்.

                                  ஆனால் கருடனின் வரவால் வானர வீரர்கள் அனைவரும் மீண்டெழுகிறார்கள். ஆத்திரமடைந்த இந்திரஜித் மீண்டும் வருகிறான். அவன் வருகையைக் கண்ட வானரவீரர்கள் அஞ்சி ஓடுகிறார்கள்.

 மணி அணி வயிரத்தோள்—-மணிகள் அணிந்த திண்ணிய தோள்.       

      மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிரத் தோள் மேல்

     வீரனும், வாலி சேய்தன் விறல் கெழு சிகரத்தோள் மேல்

          ஆரியற்கு இளையகோவும் ஏறினர்

               (யுத்த காண்டம்)   (பிரமாத்திரப் படலம் 18)

                     மாலைகளும் மணிகளும் அணிந்த அனுமனின் தோள்மேல் இராமனும் அங்கதனுடைய மலைச் சிகரத்தை ஒத்த  தோள்மேல் இலக்குவனும் ஏறி போர் செய்வதைக் கண்ட வானர வீரர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். தேவர்கள் வாழ்த்தி பூமழை சொரிகிறார்கள்.ன

மீன் தொடா நின்ற திண் தோள்—–விண்மீன்களைத் தொட்டு

                     விடும்படியான உயர்ந்த திண்ணிய தோள்

                               ஒரு கட்டத்தில் அகம்பன் என்ற அரக்கன்,. ”இக்குரங்குகளை நான் சென்று தடுக்காவிட்டால் இவ் வுலகம் என்னாகும்? அரக்கர் என்ற பெயர்கூட இல்லாதபடி இக்

குரங்குக் கூட்டம் அழித்துவிடும்” என்று அனுமனை நெருங்கு கிறான் விண்மீன்களைத் தொடும் அளாவு உயர்ந்த தோள்களை யுடைய அனுமனும் விரைவாக வர நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்.     

         மீன் தொடாநின்ற திண் தோள் அனுமனும்

                              விரைவின் வந்தான்

               (யுத்த காண்டம்)     (பிரமாத்திரப் படலம் 125)இட்

                         அகம்பன் நால்வகைப் படையோடும் நெருங்கி வருவதைக் கண்டு தண்டாயுதத்தைச் சுழற்றுகிறான்

வயிரம் பாய்ந்த தோள்களையுடைய அனுமன்       

            சூரொடும் தொடர்ந்த தண்டைச் சுழற்றினான்

                               வயிரத் தோளான்

          (யுத்த காண்டம்)      (பிரமாத்திரப் படலம் 126)

போர்க்குன்றம் அனைய தோள்.

                                   போரில் அனைத்து ஆயுதங்களை யும் இழந்து நிராயுதபாணியாக நிற்கும் அகம்பனை ஆயுதத்தால் தாக்குதல் தகாது என்று இடக்கையால் மார்பில் குத்த அகம்பன் இறந்து வீழ்கிறான்.அரக்கர் கூட்டம் தறிகெட்டு ஓடியது. ஒரே குழப்பம்! அதனால் சங்கடமடைகிறான அனுமன்.

            போர்க்குன்றம் அனைய தோளான்

                         ஓர் பொருமல் உற்றான்.

               (யுத்த காண்டம்)  (பிரமாத்திரப் படலம் 140)

                       இலக்குவன் இருக்குமிடம் செல்லும் அனுமன் அங்குள்ள போர்க் காட்சிகளைக் காண்கிறான். இலக்குவன் விளைத்த போரால் இரத்த ஆறு ஓடுவதையும், ஆனையும் தேரும் குதிரைகளும் மிதப்பதையும், அரக்கர்கள் குலைந்து ஓடுவதையும் கண்டு பெரு முழக்கம் செய்கிறான்.

கனகக் குன்றின் திரண்ட தோள்—–மேருமலையை ஒத்த திரண்ட

                                                              தோள்

                              நாகபாசப் படை பலனற்றுப் போன தால் சீற்றம் கொண்ட இந்திரஜித், பிரமாஸ்திரப் படையை ஏவத் தீர்மானிக்கிறான். வீடணனும் இராமனும் இல்லாத நேரம் பிர மாஸ்திரத்தை ஏவி விடுகிறான். இதனால் அனைவரும் கீழே விழுந்து மூர்ச்சையாகிறார்கள். உணவு தயாரிக்கச் சென்ற வீடண னும் படைக்கலங்களுக்குப் பூசை செய்யச் சென்ற இராமனும்

வீழ்ந்து கிடக்கும் இலக்குவனையும் வானர வீரர்களையும் கண்டு திடுக்கிட்டு வருந்துகிறர்கள்.

 கனகக் குன்றின் திரண்ட தோள்—–மேருமலையை ஒத்த திரண்ட

                                                              தோள்

                                 இராமன் பலவாறு புலம்புகிறான். வீடணன் அனுமனைத் தேடுகிறான்அவனோ, வாயை மடித்து இரு

கைகளையும் முறுக்கிக் கொண்டு கண்களில் தீப்பொறி பறக்க யானைகளின் பிணக்குவியலின் மேல் கிடக்கிறான்.

           வாய் மடித்து, இரண்டு கையும் முறுக்கி

                    தன் வயிரச் செங்கண்

          தீ உக, கனகக் குன்றின் திரண்ட தோள்

                    மழையைத் தீண்ட

          ஆயிரகோடி யானைப் பெரும் பிணத்து அமளிமேல்

          [யுத்த காண்டம்]     [மருத்துமலைப் படலம் 10]

கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டு அவனைப் பரிசோதிக்கிறான்

கொன் இயல் வயிரத் தோள்—வலிமை பொருந்திய வயிரம்
                                          போன்ற தோள்

                             அனுமன் உயிரோடு இருப்பதை அறிந்த வீடணன் அனுமனுடைய உடலில் தைத்திருந்த அம்பு களை எடுத்த பின் குளிர்ந்த நீரை அனுமன் முகத்தில் தெளித்து அவன் மயக்கத்தைப் போக்குகிறான்.. பின் இருவரும் சாம்பவா னைக் கண்டு பிடிக்கிறார்கள். இலக்குவன் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு புலம்பித்தவிக்கும் இராமனுடைய துயரத்தை உணர்ந்து

                    ” இமைப்பின் முன்னம்

    கொன் இயல் வயிரத் தோளாய்! மருந்து போய்க் கொணர்தி”

               [யுத்தகாண்டம்]     [மருத்துமலைப் படலம் 22]

ஒரு நொடியில் சென்று மருந்து கொணர்வாய் என்கிறான் சாம்பவான்

மொய்ம்மலைந்த திண்தோள்—-வலிமை பொருந்திய திண்மை

                                                   யான தோள்

                  மொய்ம்மலைந்த திண் தோளாய்!

இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மிருத சஞ்சீவினி, கிழிந்துபோன உடலைச் சேர வைக்கும் சந்தான கரணீ சிதைந்துபோன உருவை மீட்டெடுக்கும் சாவர்ண்ய கரணீ போன்ற மூலிகைகளைக் கொண்டு வர வேண்டும் என்கிறான் சாம்பவான்

        மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்,

               உடல் வேறு வகிர்களாகக்

        கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும்,

               படைக்கலங்கள் கிளைப்பது ஒன்றும்,

     மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம்

               மருந்தும் உள; நீ வீர

     ஆண்டு ஏகிக், கொணர்தி’ என அடையாளத்தொடும்

               உரைத்தான், அறிவின் மிக்கான்

                   [யுத்த காண்டம்] மருத்துமலைப் படலம் 27]

பொன் தோள்——-பொன் போன்ற தோள்

                         இதைக் கேட்ட அனுமனின் பொன்மயமான தோள்களிரண்டும் பூரித்தன. “இப்பொழுது நான் செய்ய வேண்டிய பணி இதுவே. இறந்து கிடப்பவர்கள் அனைவரும் எழுவார்கள். எம் தலைவனாகிய இராமபிரானுக்கு ஏதும் இடையூறு வராமல் அவனைத் தேற்றுங்கள்” என்று அவர்களிடமிருந்து சென்றவன், ஆகாயத்தையே விழுங்கி விடுவானோ என்று எண்ணும் படி வேதம் போன்ற அனுமன் வளர்ந்தான்

       ஈங்கு இதுவே பணி ஆகில் இறந்தோரும்

               பிறந்தாரே; எங்கோற்கு யாதும்

       தீங்கு இடையூறு எய்தாமல், தெருட்டுதிர், போய்

               எனச்சொல்லி, அவரைத் தீர்ந்தான்

        ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன்;பொன்

                    தோள் இரண்டும் திசையோடு ஒக்க

      வீங்கின; ஆகாயத்தை விழுங்கினனே

               என வளர்ந்தான் –வேதம் போல்வான்

         [யுத்த காண்டம்]  [மருத்து மலைப் படலம் 30]

தோளோடு தோள் அகலம்—இரு தோள்களுக்கு நடுவில் உள்ள

                                               இடைவெளி

                                ஆகாயத்தை எட்டும் அளவு வளர்ந்த அனுமனின் உருவத்தை நம்மால் நிமிர்ந்து பார்க்க முடியுமா?

கவிஞன் என்ன சொல்கிறான்? ஒரு தோளிலிருந்து மற்றொரு தோளூக்குச் செல்ல ஆயிரம் யோசனை தூரம்! ஒருஅடியை ஊன்றி மறு அடியைப் பெயர்த்துவைக்க இலங்கையில் இட மில்லையாம். கையை இஷ்டம்போல் வீச முடியாத நிலை.

             தோள் அகலம் ஆயிரம் யோசனை

                    அளவு சொல்ல ஒண்ணா;

          தாளோடு தாள் பெயர்க்க, இடம் இலது—வீச

                    ஆயின இலங்கை; தடக்கை வீச

           நீளோடு திசை போதா;

என்று கவிஞன் வியந்து போகிறான்

                     [யுத்த காண்டம்]  [மருத்துமலைப் படலம் 31]

விசையத் தோள்—வெற்றி பொருந்திய தோள்                                     

                            வெற்றி பொருந்திய தோள்களையுடைய அனுமன் பேருருக் கொண்டு தன் வாலினை விசைத்துக் கொண் டும் வாயை விரித்துக் கொண்டும் கால்களை அழுத்தமாக நிலத் தில் ஊன்றிக்கொண்டும் விசைத்து எழுகிறான்

                            அவ்விலங்கை, துளங்கிச் சூழ்ந்த

     வேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக்கலம்போல்

               சுரித்து உலைய விசையத் தோளான்

                [யுத்த காண்டம்] [மருத்துமலைப் படலம் 31]   

                        அனுமன் பேருருக் கொண்டதால் இலங்கை கடலில் அழுந்தப் பெற்ற கப்பலைப்போல் சரிகிறதாம்!   

வயிரத் தோள்——— உறுதியான தோள்                                   

                               மருத்து மலையைக் கண்ட அனுமன், மருந்து தேடிக்காலம் தாழ்த்தினால் காரியம் கெட்டுவிடும் என்று வயிரம் பாய்ந்த தோள்களால் அம்மலையை மண்ணிலிருந்து பெயர்த்து எடுக்கிறான்

               மண்ணின் நின்றும்  தோட்டனன்,அனுமன்,

                       மற்று அக்குன்றினை வயிரத் தோளால்

               [யுத்த காண்டம்] [மருத்துமலைப் படலம் 62]

அலங்கல் அம்தடந்தோள்——-

                               பிரமாஸ்திரம், மருத்துமலையால் பயனற்றுப் போனதைக் கண்ட இராவணன் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று மந்திராலோசனை செய்கிறான். இராவணனின் பாட்டனான மாலியவான் அவனுக்குச் சில அறிவுரைகள் சொல் கிறான்.

அலங்கல் அம்தடந்தோள்—–மாலையணிந்த அழகிய பெரிய

                                                             தோள்

                               இலங்கையிலிருந்து ஒரு நொடியில் பாய்ந்து சென்று மேருவைக் கடந்து மலையோடு மருந்து கொண்டு வந்த, மாலையணிநத தோள்களையுடைய அனுமனே காரணப் பொருளான கடவுளாதல் வேண்டும் என்று அனுமனைப் பாராட்டுகிறான்.

     இலங்கையின் நின்று, மேரு பிற்பட, இமைப்பில் பாய்ந்து

     வலம் கிளர் மருந்து, நின்ற மலையொடும், கொணர

                                                       வல்லான்

             அலங்கல் அம்தடந்தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும்

              [யுத்த காண்டம்]   [மாயா சீதைப் படலம் 6]

                        நிகும்பலை யாகம் செய்து இலக்குவனை வீழ்த்தி விடலாம் என்று முயன்ற இந்திரஜித்தை, வீடணன் உதவி,  ஆலோசனையுடன் இலக்குவன் வீழ்த்தி, தலையைத் துண்டித்து இராமனின் பாதங்களில் சமர்ப்பிக்கிறான்.

தோள் எனும் தேர்—-தேருக்கு நிகரான தோள்

                                எதிர்த்து வந்த மூல பலப் படைகளை இராமன் அழித்து விடவே இராவணன் மீண்டும் போர் செய்ய வருகிறான். வானரப் படைகள் அஞ்சிஓட,இலக்குவன்

     திரியும் மாருதி தோள் எனும் தேர்மிசைச் சென்றான்;

     எரியும்  வெஞ் சினத்து இராவணன் எதிர் புகுந்து ஏற்றான்

                      [யுத்த கண்டம்] [வேல் ஏற்ற படலம் 18]    ,

                          இலக்குவனுக்குத் தேர் இல்லாத குறையை மாருதி, தனது தோள் எனும் தேரைக் கொடுத்துப் போக்குகிறான் இதனால் கோபமுற்ற இராவணன் எதிர்த்து வருகிறான் இலக்குவ னுடன் போர் செய்யச் செய்ய அவனை வெல்வது கடினம் என் பதை உணர்கிறான். அதனால் மோக அஸ்திரத்தை ஏவுகிறான் வீடணன் சொன்னபடி நாராயண அஸ்திரத்தால் இலக்குவன் அதைத் தடுக்கிறான் இதனால் வீடணன் மேல் அடங்காத சீற்றம் கொண்ட இராவணன் மயன் தந்த வேலை வீடணன் மேல் எறிகிறான்.

                  அந்த வேல் வீடணனை அழித்துவிடும் என்பதை உணர்ந்த இலக்குவன் அவ்வேலைத் தன் மார்பில் ஏற்று மயங்கி விழுகிறான்.னுமன் மருத்து மலை கொண்டு வந்து இலக்குவனை எழுப்புகிறான் இந்திரன் தேர் அனுப்பிய தேரில் இராமன் ஏற தேவர்கள் மலர்தூவி இராமனோடு அனுமன் தோள்களையும் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறார்கள்!

                              இராவண வதம் முடித்து சீதையை மீட்டபின் புஷ்பக விமானத்தில் அயோத்தி வருகிறார்கள்.வழியில்

பரத்துவாசன் ஆசிரமத்தில் இளைப்பாறிய இராமன் அளித்த மோதிரத்தோடு தக்க சமயம் சென்று, தீப்புகுவதிலிருந்து பரதனை மீட்கிறான். மகுடாபிஷேகத்திற்கு வேண்டிய புனித நீரை அனைத்து நதிகளிருந்தும்கொணர்கிறான் ஒரு நல்ல நாளில்

        அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த,

        பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி பற்ற

              [யுத்த காண்டம்] [திருமுடி சூட்டு படலம் 38]

 வசிட்டன் முடிசூட்டுகிறான்.

போர் உதவிய திண்தோள்———போர் செய்யத் தகுந்த தோள்

                         முடிசூட்டு விழா இனிது நிறைவேறிய பின்

 இராமன் அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வழங்குகிறான். அனுமனுக்கு என்ன பரிசு கொடுக்கப் போகிறான் என்று அனை வரும் ஆவலோடு எதிர் பார்க்கிறார்கள்.

     மாருதி தன்னை ஐயன் மகிழ்ந்து இனிது அருளின் நோக்கி

                                                 அன்று செய்த

     பேருதவிக்கு, யான் செய் செயல் பிறிது இல்லை,  

                                                      பைம்பூண்

     போர் உதவிய திண் தோளாய்! பொருந்துறப் புல்லுக

          [யுத்த காண்டம்] [விடை கொடுத்த படலம் 20]

என்கிறான்.

                    அனுமனே! நீ இன்றுவரை  எங்களூக்குச் செய் திருக்கும் உதவிகளுக்குப் பதிலாக நான் திரும்பச் செய்யும் செயல் எதுவும் நிகராகாது, அதனால் திண்மையான உன் திண்ணிய தோள்களால் பொருந்துறப் புல்லுக என்று தன்னயே கொடுக்கிறான்.  இராமனே அழைத்ததால், அனுமனைத் தன்னை விட உயர்ந்தவனாக ஆக்கி விடுகிறான்! அனுமன் பெற்ற பேறு தான் என்னே! இராமாவதாரம் முடிந்த பின்னும் சிரஞ்சீவியான அனுமன், இன்றும் இராமநாமம் ஒலிக்கும் இடங்களிலெல்லாம் விளங்குவதாக நம்புகிறார்கள்

=====================================================================

Series Navigationஇன்னொரு புகைப்படம்மொழி பெயர்ப்பு கவிதைகள் ஜிசினா மெல்ப் [ Gcina Mhlophe ]
author

எஸ். ஜயலக்ஷ்மி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *