2026 – எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது – விருது பெறும் எழுத்தாளர்
2026 முதல் அறிவிக்கப்பட்ட – எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருதின் முதல் விருதைத் தமிழ் இலக்கியத்துக்கான தன்னுடைய இதுவரையான பங்களிப்புகளுக்காகப் பெறுகிறார் – கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், சிறுகதையாசிரியர் எனப் பன்முகங்கள் கொண்ட க. மோகனரங்கன்.
க. மோகனரங்கன், 1980-களுக்குப் பின் எழுத வந்த எழுத்தாளர்களில் வசீகரமான கவிதை மொழியும், நுட்பமான விமர்சனப் பார்வையும் கொண்ட எழுத்துக்குச் சொந்தக்காரர். தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்க் கவிதைகளின் எந்தத் தொகுப்பும் இவர் கவிதைகள் இல்லாமல் முழுமை பெறாது. சங்கக் கவிதைகளின் அகப்பாடல்களின் படிமத்தையும் ஆழத்தையும் நன்றாகப் புரிந்து கொண்ட நவீனத் தொடர்ச்சி என்கிற பாராட்டு இவரின் பல கவிதைகளுக்குப் பொருந்தும். பிற எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்து இவர் எழுதியவை, அந்த எழுத்தாளரையும் படைப்பையும் எவரும் அறிந்து கொள்ள உதவும் சிறந்த திறவுகோல்கள். அத்தகைய விமர்சனங்கள் நுண்ணுணர்வு கொண்ட ரசனையின் அடிப்படையிலானவை மட்டுமல்ல, தமிழ் இலக்கியத்தின் பல்வேறு போக்குகளை உள்வாங்கியும் எழுதப்பட்டவை. இவர் தேர்ந்தெடுத்துச் செய்யும் மொழிபெயர்ப்புகளில் மூல ஆசிரியரின் எழுத்தின் நுட்பத்தையும் கலைத்திறனையும் கெடுக்காமல் தமிழில் கொடுப்பதில் முனைப்புக் காட்டுகிறார். தமிழில் எழுதவரும் எவரும் எழுத்தில் மட்டுமில்லாமல் தனிமனித ஆளுமையிலும் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்கவர். சர்ச்சைகள், சத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் கவனம் ஈர்க்கும் என அறிந்திருந்தபோதும், அமைதியாக, எழுதினால் போதும் எனச் செயலாற்றுகிறவர்.
1967-ல் பிறந்த க. மோகனரங்கன் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். ஈரோட்டில் மனைவி, மகனோடு வசிக்கிறார். இதுவரை 6 கவிதைத் தொகுப்புகள், 2 கட்டுரைத் தொகுப்புகள், 1 சிறுகதைத் தொகுப்பு, 1 மொழிபெயர்ப்பு கதைகள் தொகுப்பு, 8 மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. கவிதைகளுக்காக, கோவை தேவமகள் அறக்கட்டளை விருது, ஆத்மாநாம் விருது, விஜயா வாசகர்வட்டம் வழங்கும் ஜெயகாந்தன் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
க. மோகனரங்கனுக்கு எழுத்தாளர் பி.ச. குப்புசாமி பெயரால் தொடங்கப்பட்டுள்ள இலக்கிய விருதின் முதல் விருதை வழங்குவதில் பெருமையுறுகிறோம்.
ஏப்ரல் 26, 2026 ஞாயிறன்று திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தேநீர் பதிப்பகம் நடத்தும் இலக்கிய மெரினா விருது விழாவில், ஓர் அமர்வாக, எழுத்தாளர் க. மோகனரங்கனுக்கு எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது ரூபாய் ஐம்பதாயிரமும் பாராட்டுப் பட்டயமும் வழங்கப்பட்டு அவர் கௌரவிக்கப்படுவார். அவர் படைப்புகளைக் குறித்த ஓர் உரையும் நிகழும். விருது விழா அழைப்பிதழை விரைவில் பகிர்கிறோம்.
க. மோகனரங்கனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
– அமைப்பாளர்
– எழுத்தாளர் பி.ச.குப்புசாமி இலக்கிய விருது – பி.கே. சிவகுமார் குடும்ப அறக்கட்டளை
நன்றி: இந்த விருது குறித்த செய்தியைப் பகிரும் சமூக, அச்சு, காணொளி ஊடக அன்பர்களுக்கு நன்றிகள்!
- 2026 – எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது – விருது பெறும் எழுத்தாளர்
- செம்போத்து
- மழை புராணம் : 24 : வெறுப்பின் குடை
- தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள்: இந்தியாவுக்கு உண்மையிலேயே பலன் தருகிறதா?
- ஒரு ஏவுகணையின் புலம்பல்
- கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து மா. அரங்கநாதன் எழுதிய “காடன் மலை” சிறுகதை