டீன் கபூர்
••••
மாலை நேரம் என்றால் எங்கள் ஊரில் முதலில் நினைவுக்கு வருவது மாமரங்கள்தான். மாமரங்களுக்குக் கீழே விளையாடிய குழந்தைகளும். அவற்றில் ஒரு விளையாட்டு மட்டும் இன்னும் என் நினைவிலிருந்து வெளியேறவில்லை.
“சுடுசுடு மாம்பழம்….”
அது உண்மையில் மாம்பழம் அல்ல. ஒரு சிறிய கல். சில நேரங்களில் புளியங்கொட்டை. சில நேரங்களில் உடைந்த ஓட்டுத் துண்டு. எது கையில் கிடைத்தாலும் அது மாம்பழமாகிவிடும்.
நாங்கள் வட்டமாக உட்கார்ந்துகொள்வோம்.
ஒருவன் அல்லது ஒருத்தி நடுவில் கண்களை மூடிக்கொண்டு உட்கார வேண்டும். மற்றவர்கள் கைகளைப் பின்னால் மறைத்து அந்தக் கல்லை ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கடத்த வேண்டும். அப்போது எல்லோரும் சேர்ந்து பாடுவோம்.
“சுடுசுடு மாம்பழம்…”
கல் யாருடைய கையில் இருக்கிறது என்று நடுவில் இருப்பவன் அல்லது இருப்பவள் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்துவிட்டால் அவன் வெற்றி.
தவறிவிட்டால் மீண்டும் அதே விளையாட்டு.
எங்களிடம் வெற்றிக்கு பரிசு இல்லை.
தோல்விக்கு தண்டனையும் இல்லை.
ஆனால் யாருடைய கையிலாவது அந்தக் கல் நீண்ட நேரம் இருந்துவிட்டால் மட்டும் எல்லோரும் சிரிப்பார்கள். அப்போது அந்தக் கல் உண்மையிலேயே சூடாகிவிடும். அதனால்தான் நாங்கள் அதை சுடுசுடு மாம்பழம் என்று அழைத்தோமோ என்னவோ.
அந்த விளையாட்டில் எனக்கு மிகவும் நெருக்கமானவன் ரஹ்மான். அவன் எப்போதும் கல்லை வேகமாகக் கடத்துவான். அவன் கையில் கல் இருக்கிறதா என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. சில சமயம் கல்லை அவன் கையில் வைத்துக்கொண்டு ஒன்றுமில்லாதது போலப் பாடுவான்.
“சுடுசுடு மாம்பழம்…”
அவன் குரல் மட்டும் இன்னும் எனக்குள் இருக்கிறது. ஒருநாள் மாலை நாங்கள் வழக்கம்போல விளையாடிக் கொண்டிருந்தோம். அன்று ரஹ்மான் நடுவில். அவன் கண்களை மூடியிருந்தான்.
நாங்கள் வட்டமாக உட்கார்ந்திருந்தோம்.
கல் என் கையில் வந்தது. அது வழக்கம்போல் இல்லை. சூடாக இருந்தது.
முதலில் வெயிலில் கிடந்ததாலோ என்று நினைத்தேன். அடுத்தவனிடம் கொடுக்க முயன்றேன். அவன் கையை நீட்டவில்லை.
எல்லோரும் பாடிக்கொண்டிருந்தார்கள்.
“சுடுசுடு மாம்பழம்…”
கல் என் உள்ளங்கையில் இன்னும் சூடானது. அதை ரஹ்மானிடம் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவன் நடுவில் கண்களை மூடிக்கொண்டிருந்தான். நான் கல்லை மண்ணில் வைத்தேன். அந்தக் கணத்தில் மாமரத்திலிருந்து ஒரு மாம்பழம் கீழே விழுந்தது. அதன் சத்தம் மட்டும் கேட்டது.
நாங்கள் எல்லோரும் அமைதியாகிவிட்டோம். ரஹ்மான் கண்களைத் திறந்தான். “யாரிடம் இருக்கு?” என்று கேட்டான். யாரும் பதில் சொல்லவில்லை. அவன் எழுந்து நின்றான். மரத்தடியில் கிடந்த மாம்பழத்தை எடுத்தான். அதை என் கையில் கொடுத்தான். அது சூடாக இருந்தது. “இது கல் இல்லையே?”
என்று நான் கேட்டேன். ரஹ்மான் சிரித்தான். “விளையாட்டில் எது வேண்டுமானாலும் மாம்பழம்தான்.”
அன்று மாலை நாங்கள் விளையாட்டை முடிக்கவில்லை. யாரும் வெற்றி பெறவில்லை. ரஹ்மான் மட்டும் வீட்டுக்குச் செல்லும்போது திரும்பிப் பார்த்தான். “நாளைக்கும் விளையாடுவோமா?” என்று கேட்டான். நான் தலையசைத்தேன்.
அடுத்த நாள் ரஹ்மான் வரவில்லை.
மறுநாளும் வரவில்லை. அதற்குப் பிறகும் வரவில்லை. அவன் எங்கே போனான் என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.
குழந்தைகளுக்கு ஒரு நண்பன் காணாமல் போவது பெரிய செய்தியாகத் தோன்றும்.
ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அந்தச் செய்தியும் விளையாட்டில் கலந்துவிடும்.
மாமரம் மட்டும் அங்கேயே இருந்தது.
நாங்களும் வளர்ந்தோம். பாடசாலை, வேலை, திருமணம், குழந்தைகள் கிடைத்தவர்களுக்கு குழந்தைகள், பின்னர் ஓய்வு. ஓய்வு என நினைத்த மாத்திரத்தில் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்ற நிலை. காலம் எங்கள் கைகளிலிருந்த பலவற்றை எடுத்துக்கொண்டது. ரஹ்மானையும்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாமரம் இல்லை. அதன் இடத்தில் ஒரு கான்கிரீட் சுவர் இருந்தது. மரத்தின் நிழல் இருந்த இடத்தில் மோட்டார் சைக்கிள்கள் நின்றிருந்தன. நாங்கள் விளையாடிய மண் இருந்த இடத்தில் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. நான் நீண்ட நேரம் அங்கே நின்றேன். எதுவும் நினைவுக்கு வரவில்லை. பின்னர் திடீரென்று ஒரு குரல்.
மிகத் தொலைவில் இருந்து வருவது போல.
“சுடுசுடு மாம்பழம்…”
நான் திரும்பிப் பார்த்தேன். யாரும் இல்லை. தெருவின் மறுபுறம் சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஒரு சிறிய கல் இருந்தது. அவர்கள் வட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். நான் அருகில் சென்றேன். ஒரு சிறுவன் என்னைப் பார்த்து சிரித்தான். “மாமா, விளையாடுவீங்களா?” என்று கேட்டான்.
நான் சிரித்தேன். “எனக்கு இந்த விளையாட்டுத் தெரியும்.” “அப்படியா?”
“நாங்களும் இதை விளையாடியிருக்கிறோம்.” அவன் கல்லை என் கையில் வைத்தான். அந்தக் கல் சூடாக இருந்தது. என் விரல்கள் நடுங்கின. “எங்கே கிடைத்தது?” என்று கேட்டேன். “மாமரத்தடியில்.” “இங்கே மாமரம் இல்லையே.” சிறுவன் என்னைப் பார்த்தான். “யார் சொன்னது?”
அவன் அந்தக் கேள்வியை கேட்ட விதம் என்னை அமைதியாக்கியது.
அன்று இரவு வீட்டுக்குச் சென்றபோதும் அந்தக் கல்லின் வெப்பம் என் உள்ளங்கையில் இருந்தது. மேசையின் மேல் வைத்தேன். சிறிது நேரம் கழித்துப் பார்த்தேன். அங்கே கல் இல்லை. ஒரு மாம்பழக் கொட்டை இருந்தது. அதன் மீது மண்ணின் வாசனை. நான் அதைத் தொட்டேன். மீண்டும் வெப்பம்.
அன்றிரவு எனக்கு தூக்கம் வரவில்லை.
பழைய நாட்குறிப்புகளைத் தேடினேன்.
ரஹ்மானைப் பற்றி ஏதாவது எழுதியிருக்கிறேனா என்று பார்த்தேன்.
ஒரு பழைய அப்பியாசக் கொப்பி கிடைத்தது. அதன் முதல் பக்கத்தில் என் சிறுவயது எழுத்து.
“சுடுசுடு மாம்பழம்.”
அதற்குக் கீழே தேதி இல்லை. அடுத்த பக்கத்தில் ஒரு வரி மட்டும். “ரஹ்மான் இன்று நடுவில்.” அதற்குப் பிறகு வெற்றுப் பக்கங்கள். நான் பக்கங்களைத் திருப்பிக்கொண்டிருந்தேன். கடைசிப் பக்கத்தில் வேறு ஒரு எழுத்து இருந்தது.
அது என் எழுத்தைப் போலவும் இல்லை.
ரஹ்மானுடைய எழுத்தைப் போலவும் இல்லை. அதில் எழுதப்பட்டிருந்தது.
“கதை எழுதப்படுவதில்லை. விளையாடப்படுகிறது.”
நான் நீண்ட நேரம் அந்த வரியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்குக் கீழே இன்னொரு வரி. “கல் யாரிடம் இருக்கிறது என்பதைவிட அதை யார் அடுத்தவரிடம் கொடுக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.”
நான் கொப்பியை மூடிவிட்டேன்.
அடுத்த நாள் காலையில் வீட்டின் பின்புறம் ஒரு சிறிய முளை தெரிந்தது. நான் மண்ணைத் தோண்டிப் பார்த்தேன். அங்கே ஒரு மாம்பழக் கொட்டை. அது நேற்று என் மேசையில் இருந்ததா என்று நினைத்தேன்.
நினைவுக்கு வரவில்லை. அந்த முளையை அப்படியே விட்டுவிட்டேன். சில நாட்களில் அது செடியாகியது. சில மாதங்களில் மரமாகியது. அது எப்படி இவ்வளவு வேகமாக வளர்ந்தது என்று யாரிடமும் சொல்லவில்லை. மரம் வளர்ந்து கொண்டிருந்தபோது அதன் கீழே குழந்தைகள் வந்து விளையாடத் தொடங்கினர்.
அவர்கள் எந்த விளையாட்டையும் புதிதாகக் கண்டுபிடிக்கவில்லை.
அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது.
அவர்கள் வட்டமாக உட்கார்ந்தார்கள்.
ஒருவன் நடுவில் கண்களை மூடிக்கொண்டான். கல் கைமாறத் தொடங்கியது.
“சுடுசுடு மாம்பழம்…”
என்ற குரல் மாலை முழுவதும் பரவியது.
நான் தூரத்தில் நின்றுகொண்டிருந்தேன்.
ஒரு குழந்தை திடீரென்று என்னைப் பார்த்தது. அவன் கையில் இருந்த கல்லை மறைத்துக்கொண்டான். பின்னர் சிரித்தான். அந்தச் சிரிப்பில் ரஹ்மானின் முகம் இருந்தது. நான் அருகில் சென்றேன்.
“உன் பெயர் என்ன?” என்று கேட்டேன்.
அவன் சொன்ன பெயரை நான் சரியாகக் கேட்கவில்லை. அல்லது கேட்க க்ஷ விரும்பவில்லை. அவன் மீண்டும் விளையாட்டில் சேர்ந்துவிட்டான்.
அந்த இரவு பழைய குறிப்புப் புத்தகத்தைத் திறந்தேன். முன்பு இருந்த வரிகளுக்கு கீழே புதிய வரிகள் தோன்றியிருந்தன.
“இப்போது இதைப் படிப்பவர் அடுத்தவர்.”
நான் பேனாவை எடுத்தேன். எதையும் எழுதவில்லை. சிறிது நேரம் கழித்து குறிப்புப் புத்தகத்தை குழந்தைகள் விளையாடிய மாமரத்தின் கீழே வைத்துவிட்டேன். மறுநாள் காலை அது அங்கே இல்லை. அதற்குப் பதிலாக ஒரு மாம்பழம் இருந்தது. மாம்பழத்தை எடுத்தேன். அது மீண்டும் சூடாக இருந்தது. நான் அதை வெட்டவில்லை. சாப்பிடவும் இல்லை. அதன் கொட்டையை மட்டும் எடுத்தேன். வீட்டின் முன் மண்ணில் ஒரு சிறிய குழி தோண்டினேன்.
கொட்டையை அதற்குள் போட்டேன்.
மண்ணால் மூடினேன். பின்னர் என் கைகளைத் துடைத்துக்கொண்டு எழுந்தேன். தொலைவில் குழந்தைகள் மீண்டும் விளையாடத் தொடங்கியிருந்தார்கள்.
“சுடுசுடு மாம்பழம்…”
அந்தக் குரல் மெதுவாக வந்து என்னைத் தொட்டது. நான் திரும்பிப் பார்க்கவில்லை.
ஏனெனில் இப்போது யாருடைய கையில் அந்த மாம்பழம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது.
மண்ணுக்குள் மட்டும் ஒரு சிறிய கொட்டை
மெதுவாக வெப்பமடைந்து கொண்டிருந்தது. அதன் மேலே இன்னும் எழுதப்படாத ஒரு கதை முளைக்கத் தொடங்கியது.
••••
டீன் கபூர்