This entry is part 3 of 7 in the series 11 அக்டோபர் 2026

                    

                                                   —வளவ. துரையன்

                  பண்டைத்தமிழர் பருவகாலங்களை ஆறு பெரும்பொழுதுகளாகப் பிரித்து வைத்திருந்தனர். பெரும்பொழுதுகள் ஒவ்வொன்றும் இரண்டு மாதங்கள் கொண்டதாகப் பிரிக்கப்பட்டிருந்தன. கார்காலம் என்பது ஆவணி, புரட்டாசி மாதங்களைக் கொண்ட மழைக்காலமாகும். கூதிர்காலம் என்பது குளிர்காற்று வீசக் கூடிய ஐப்பசி, கார்த்திகை என்னும் மாதங்களைக் கொண்டிருந்தது. விடியற்காலையில் பனி விழும் முன்பனிக்காலம் என்பது மார்கழி மற்றும் தை மாதங்களை உள்ளடக்கியதாகும். காலை வேளையிலும் சற்று பனி இருக்கும் மாசி, பங்குனி மாதங்கள் பின்பனிக்காலமாகும். இளவேனில்  காலம் என்பது சித்திரை, வைகாசி கொண்ட மிதமான வெயில் காலமாகும். ஆனி, ஆடி மாதங்களைக் கொண்ட கடுமையான வெயில் காலத்தை முதுவேனில் காலம் என்றனர்.

                  கார்காலம் பற்றிப் பல இலக்கியங்கள் பேசுகின்றன. ஐவகைத் திணைகளில்  முல்லை நிலத்திற்கு உரியதாகக் கார்காலம் வரையறுக்கப்பட்டுள்ளது. தலைவன் தலைவியைப் பொருள் தேடும் பொருட்டோ அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணம் பற்றியோ பிரிந்து செல்வான். அவன் கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் செல்வான். தலைவி காத்திருப்பாள். கார்காலம் வந்தும் அவன் வராத போது தலைவி வேதனைப்படுவாள். அவன் நினைவாகவே ஆற்றியிருப்பாள். பக்கத்தில் இருக்கும் தோழி தலைவிக்கு ஆறுதல் மொழிகள் கூறித் தேற்றுவாள்.

             கார்காலத்தில் வந்துவிடுவேன் என்று சொல்லிப் பிரிந்து சென்றான் ஒரு தலைவன். கார் வந்தது. அவன் தேர் வரவில்லை. அவனும் ஊர் வரவில்லை. தலைவி வருந்துகிறாள்.

             ”திருமால் தம் மார்பில் அணிந்துள்ள பூமாலை போல வானில் வானவில் தோன்றுகிறது. அந்த வில் தோன்றினால் மழைபொழியும் என்பது குறியீடாகும். அந்தத் திருமாலோ எப்பொழுதும் முழங்கிக்கொண்டிருக்கும் கடலின் வண்ணம் உடையவன் ஆவான். இந்த வானமோ கருவுற்றிருந்து கருமை நிறமாகி ஆலங்கட்டிகள் போல் ஆலித்துளிகளுடன் மழை பொழிகிறதே!  இக்காலத்தில் வந்துவிடுவேன் என்ற அவர் இன்னும் வரவில்லையே! இன்னும் அவர் வரவில்லையே!”

            என்று தோழி தலைவியை ஆற்றுப்படுத்துவதாகக் கூறும் பாடல் இதுவாகும். இதைத் தலைவியின் கூற்றாகவும் சொல்வர்.

            ”பொருகடல் வண்ணன் புனைமார்பில் தார்போல்

             திருவில் விலங்கு ஊன்றி, தீம்பெயல் தாழ,

            ’வருதும்’ என மொழிந்தார் வாரார்கொல் வானம்

            கரு இருந்து ஆலிக்கும் போழ்து?”

கடல், மழை, ஆலித்துளிகள், வானவில் என மழை தொடர்பானவை வருமாறு இப்பாடல் இருப்பது சிறப்பானதாகும்.

இப்பாடல் கார்நாற்பது என்னும் நூலின் முதல் பாடலாகும். கார்நாற்பது அகப்பொருள் பற்றிய நூலாகும். மொத்தம் நாற்பது பாடல்கள் கொண்ட இதனை எழுதியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார் ஆவார். இவர் மதுரையில் வாழ்ந்தவர். கூத்தனார் என்பது இவர் இயற்பெயராகும். கண்ணன் என்பது இவர் தந்தையார் பெயராகும். ஒவ்வொரு பாடலிலும் கார்காலம் பற்றிக் கூறப்படுவதாலும் நாற்பது செய்யுள்களைக் கொண்டதாலும் இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றதாகும்.

Series Navigationடாக்டர் நோயல் நடேசனின் நாலுகால் சுவடுகள் – நூல்  அறிமுகம்தட்டம்மை தவிர்க்க  தடுப்பூசி முக்கியம்!