நீங்காத நினைவுகள் -4

This entry is part 37 of 40 in the series 26 மே 2013

மே மாதம் 27 ஆம் நாள் நம் நாட்டுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த மறக்க முடியாத நாளாகும். மிகவும் துயரமான நாள். 1964 ஆம் ஆண்டின் மே மாதத்து 27 ஆம் நாளன்று தான் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு அவர்கள் காலமானார். இந்தியா விடுதலை அடைந்த நாளில் இருந்து அவர் மரித்த நாள் வரை தொடர்ந்து இந்தியாவின் பிரதமராக இருந்தவர். அவரை விட்டால் இந்தியப் பிரதமர் ஆவதற்குரிய தகுதி படைத்தவர் வேறு எவரும் இலர் என்னும் கருத்தை தமது ஆளுமையால் இந்தியர்களின் உள்ளங்களில் விதைத்தவர் ஜவாஹர்லால் நேரு என்பதில் ஐயமே இல்லை.

1972 என்று ஞாபகம்…..நான் குறுக்கெழுத்தாளராய் பணி புரிந்து கொண்டிருந்த அஞ்சல்துறைத் தலைவரின் செயலாளர் இரண்டு வாரங்களுக்கு விடுப்பில் சென்றதால் அவரின் இடத்தில் தற்காலிகமாக வேலை செய்ய எங்கள் அலுவலக மேலாளர் என்னை அனுப்பினார் . நான் அங்கே சேர்ந்த மறுநாள் என் அலுவலருக்கு ஏராளமான வாழ்த்துத் தந்திகளும், அஞ்சலில் வாழ்த்து மடல்களும் வந்தன.அவருடைய செயலர் என்னும் முறையில் அவற்றைத் திறந்து அவரது பார்வைக்கு அனுப்பி வைத்தேன். அன்று நவம்பர் 14 ஆம் நாள். அமரர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாள்.(குழந்தைகள் தினமும் கூட என்பது
நமக்குத் தெரியும் ) எங்கள் தலைமை அலுவலகர்கும் அதே நாள் பிறந்த நாள் என்பது தெரிந்தும் முந்திய நாள் தான் அவரிடம் பணிக்குச் சேர்ந்தேன் என்பதால் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லக் கூச்சமாக இருந்தது. பேசாமல் இருந்து விட்டேன்.

அன்று பிற்பகலில் வாய் மொழிக் கடிதம் ஒன்றைச் சுருக்கெழுத்தில் எடுத்துக் கொள்வதற்காக அவர் தொலைபேசியின் முரலை (buzzer) அழுத்தி என்னை அழைத்தார். போனேன்.

என்னை உட்காரச் சொன்னபின் கடிதத்தை வாய்மொழிந்து விட்டு, “இன்று என் பிறந்தநாள்…என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.அதன் பின் அவருக்கு வாழ்த்துச் சொல்லாமல் இருப்பது அசட்டுத் தனம் என்று பட்டதால், ” தெரியும் சார் ” என்று கூறினேன். அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

” நன்றிகள்…!” இன்றைய நாள் பற்றிய விசேஷம் உங்களுக்குத் தெரியும் தானே?” என்று பின்னர் என்னை அவர் வினவ, ” தெரியும், பண்டிட் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளும் கூட” என்றேன்.

அவர் புன்சிரிப்புடன், ” ஜவாஹர்லால் நேருவின் பிறந்தநாள்… என்னுடைய பிறந்தநாளும் கூட என்பதில் என் குடும்பத்தாருக்கு ரொம்பவே பெருமை, மகிழ்ச்சி. இந்தியா முழுவதுமே அந்த நாளைக் கொண்டாடுகிறது அல்லவா? அதனால் தான்.” என்றார்.

பிறகு, ” உங்கள் பிறந்தநாளை நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார்.

நான் சற்றேத் தயங்கினேன்.

“அது ரகசியம் என்றால் சொல்ல வேண்டாம்” என்றார்.

“பிறந்த ஆண்டை வேண்டுமானால் சிலர் ரகசியமாக வைத்துக் கொள்வார்கள் . மாதத்தையும் நாளையும் சொல்லுவதில் என்ன ரகசியம் இருக்க முடியும்?…. இருப்பினும்…”

“இருப்பினும்?”

“ஐம் சாரி சர்..இட் ஹாப்பென்ஸ் டு பீ ஜவாஹர்லால் நேரு’ஸ்…டெத் டே..என் பிறந்த நாளும் ஜவாஹர்லால் நேருவின் இறந்த நாளும் ஒன்றே…”

எதையும் முகத்தில் காட்டாமல் தமது நாற்காலியில் நெட்டுக்குத்தாக உட்காரும் வழக்கம் உள்ள அவர் – முன்னாள் இராணுவ அதிகாரி – மேஜர் தயானந்தன் என்பது அவரது பெயர்.- திடுக்கிட்டுபோய் விரிந்த விழிகளுடன் நாற்காலியின் முதுகில் சாய்ந்தார்.

“வாட்..!?” மே 27..? – என்னது? மே மாதம் 27 ஆம் தேதியா!”.

“ஆம்….என்றேன்..”.

jothigirija@live .com

Series Navigationவளைக்காப்புசெம்பி நாட்டுக்கதைகள்……
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *