சொற்றுணை வாழ்க்கை – பசுவய்யா கவிதைகள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 15 of 21 in the series 31 மே 2015

விக்ரமாதித்யன் நம்பி

என்ன இது?
என்ன இது என்று எப்போதும் கேட்கிறேன்
உண்மையில் கேட்க நினைப்பது
என்னிடம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்றுதான்
ஏன் இவ்வாறு நடந்து கொண்டீர் என்று
இனி எவ்வாறு நடந்து கொள்வீர் என்று.

என்ன இது என்ன இது என்று எப்போதும் கேட்கிறேன்
உங்களெதிரே வேறு எப்படிக் கேட்பது.

நட்பே சுற்றமே உறவே சூழலே என்னை விட்டுவிடு
என்னை மறந்துவிடு
உங்கள் அன்புகளை என்னால் தாங்க முடியவில்லை
இப்போதும் மனிதன் உயர்ந்தவன் என்றும்
சமூகமே அவனை அழிக்கிறது என்றும் சொல்லி வருகிறேன்
என் அனுபவம் பொய்க்கட்டும்
கனவு நிறைவேறட்டும்
மனிதர்கள் மீண்டும் குழந்தைகளாகும் கனவு. [பக் : 82; 107 கவிதைகள் தொகுப்பு]

நேர்கூற்று; பதினைந்தே வரிகள்; முதலடியின் தொடக்கமே “என்ன இது”; இரண்டாவது பத்தியின் ஆரம்பமும் இது—அழுத்தம் தருவதாக; எனில், வேதனைதான்; முகத்துக்கு நேரே கேட்க முடியாதவற்றை இப்படி வெளிப்படுத்துகிறார் கவிஞர்; அதுவும் சொல்லப்படுகிறது’ கவிதையில்; இந்தவிதமான மனநிலையின் குரலாகத்தான் எல்லாமும்.
நுண்ணுணர்வுள்ள ஒவ்வொரும் எதிர்கொள்ளும் அனுபவம்தான் சுருக்கமும் தெளிவுமான எளிய கவிதையாக; போதாதா.
கதவைச் சுரண்டாதே தயவுசெய்து

நான் இங்கு இருக்கிறேன்
இங்கு
இச்சிறிய அறையில், சிறிய சன்னல் சிறிது வெளிச்சம்.
தயவுசெய்து உன் ஆள்காட்டி விரலின் நகத்தால்
சாத்தியிருக்கும் என் கதவைச் சுரண்டாதே
எனக்கு உன் ஓசைகள் தெரியும்
உன்னைத் தெரியும்
உன்னிடம் எவ்வளவு என்பது தெரியும்.

என்ன உறக்கம் இன்னும் என்பாய்
தொழில்வரியைக் கட்ட கடைசி நாள் கேட்பாய்
பங்குகள் சரிவது பற்று விசனமுடன் பேசுவாய்
தொலைபேசி எண் என்ன என்பாய்.

கையாலாகாதவன் என என்னைச் சொல்லாமற் சொல்லி
குற்ற உணர்ச்சியை ஒரு பெரும்பாரம் சுமத்தி விட்டுப்போவாய்.

ஒரே ஒரு கவிதை
போதும் இந்த ஜென்மம் பொருள்பட என்பது என் நம்பிக்கை
அதை எழுதிவிடக் காத்திருக்கிறேன்
உன் ஆள்காட்டி விரல் நகத்தால் என் கதவைச் சுரண்டாதே
தயவுசெய்து. [பக்: 88]

கவிஞன் குரல்; கவிதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உள்ளம்—உலகில் வாழ்க்கையை விடவும்; எனில், கவிதை செய்வதற்கு வரும் இடையூறுகள்; இல்கீகத்தையும் ஒரேயடியாக ஒதுக்கிவிட முடியாது போல; அதற்குள் இருக்கையில்தானே பொறுப்புகளும் கடமைகளும்; அவை குறித்த நினைவூட்டல்களும்.

இனி உன் கஷ்டத்தைப் புரிந்துகொள்ள முயல்வேன்

என்ன வருத்தம் உனக்கு என்று எனக்குத் தெரியவில்லை
யாருக்கும் தெரியாமல் இந்த ரயிலடியில்
கண்களைத் துடைத்துக் கொள்கிறாய்
உன் உதடுகள் மிகக் கஷ்டமாகத் துடிக்கின்றன
தலைசீவக் கூட உனக்கு நாட்டமில்லாமல் போய்விட்டது
உடை மாற்றவும்
பொட்டு இட்டுக் கொள்வதற்குங் கூட
என்ன ஆயிற்று?
நான் கவனிப்பதைக் கவனித்து மிரளாதே.

நான் உன் கஷ்டங்களின் மறுபக்கம்
கண்ணீரின் நீர்மை.

புத்தி மோசத்தால்
ஏதேதோ பேசி
ஏதேதோ படித்து
ஏதேதோ எழுதி முடித்து விட்டேன்
கரகோஷம் கேட்டு விரியும் சிறகுகளைக்
கோதிக்கொண்டிருந்து விட்டேன்
என்னை மன்னித்துவிடு.

இனி உனக்காக
உன்னைப் புரிந்துகொள்ள
எழுதுகிறேன். [பக் ; 89]

நேர் கவிதை; எதுவுமே விளக்கம் வேண்டியிராதது; எனில், பொருளம்சம், சொல்லும் விதம், வடிவச்சிறப்பு எல்லாம் கவனத்துக்குரியவை; இவற்றாலேயே பாடுபொருள் சிறந்த கவிதையாகிறது. பசுவய்யாவின் பிற்காலக் கவிதைகள்—1985க்குப் பிறகுள்ளவை—அனைத்துமே சொல்முறையில் சுருதி சுத்தமானவை; லயம் பிசகாதவை; சுருக்கமானவை; தெளிவானவை; மொழித்திறம் கொண்டவை; சொல்லாட்சி கூடியவை; அருமையான விவரிப்புகளாலானவை; அவருடைய கவிதைகளின் தனித்துவம் இந்தப் பண்புகள்தாம்; இளங்கவிஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவையும் கூட.
இந்தக் கவிதையின் சிறப்பியல்பு, அவதானம்; இதிலிருந்துதான் கவிதையின் உதயமே; பிறரின் கஷ்டத்தைக் கண்டு வருந்துவது மனிதத்தன்மை; காட்சியில் நெகிழ்ந்த உள்ளம்; தொடர்ச்சியாக யோசனைகள்; புத்தி ஜீவியாக இருந்து, புகழில் மயங்கி, காலம் கழித்து விட்டதற்காய் வேதனையாக ஒப்புதல் வாக்குமூலம்; இறுதியாக, கவி முடிபு; முக்கியமான கவிதை—கவி ஆளுமை காட்டுவது கொண்டு.

பூர்த்தி செய்யாத இடம்

அவ்வப்போது படிவங்களுடன் உன் மேஜைமுன் வருகிறேன்
ஒரு கணக்குத் திறக்க என்று சொல்லிக் கொண்டு
உன் எதிரே ஒரு நாற்காலி இருக்கிறதே அது யாருக்கு?
நீ சொன்னால் மட்டுமே அதில் அமரலாம் என எண்ணியதில்
இன்றுவரை அதில் அமரவே இல்லை
ஏன் இந்தச் சிறு சந்தேகங்கள் என்றும்
ஏன் புரிந்து கொள்ளவில்லை என்றும் கேட்கிறாய்.

எனக்குத் திக்கு என்றும்
பதற்றம் என்றும்
கை நடுக்கம் என்றும்
நீ நினைத்திருக்கக் கூடும்.

எப்படி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை
தனியாக இருக்கும்போது ஒரு சந்தர்ப்பத்திலேனும்
என்முகம் உன் நினைவில் வந்திருக்கிறதா?
உன்னிடம் நான் காட்டாத என் மனத்தின் ஒரு படிவத்தில்
ஒரே ஒரு இடம் மட்டும் இன்னும் பூர்த்தி செய்யவில்லை
அதில் உன்பெயரை எழுதிக் கொள்ளட்டுமா? [பக் : 8]

நுண்ணுணர்வில் தோன்றிய கவிதை; “உன் எதிரே ஒரு நாற்காலி இருக்கிறதே அது யாருக்கு” என்பதுதான் தோற்றுவாயே—கவிதைக்கு; அதிகார வர்க்கத்தின் இயல்பு அது; அவ்வளவு சுலபத்தில் அமர வைத்து விடாது; வங்கிகள், காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்களுக்குச் செல்பவர்களுக்கு அனுபவமாகியிருக்கும்; கவிஞன் உணர்ந்து கேள்வி கேட்கிறான்; “நீ சொன்னால் மட்டுய்மே அதில் அமரலாம் என எண்ணியதில் / இன்றுவரை அதில் அமரவே இல்லை”; நுட்பமான மனசுள்ள யாருமே இப்படித்தான்; நமக்கும் பிறருக்குமான தொடர்புகளில் நேரும் சிடுக்குகளைப் பேச வேண்டும்; நவீன கவிதையின் தலையாய பணிகளில் ஒன்று இது; இதைச் சரியாகச் செய்திருப்பதனாலேயே இது கவிதையாகிறது; மன செய்யும் மாயங்கள்; காண்பவனே கவிஞன்.

முதல் பத்தியின் விஷய கனம், இரண்டாவது பத்தியின் தன்னிலை விளக்கம், மூன்றாவது பத்தியின் பூடகம் எல்லாம் கூடி ஒரு நல்ல கவிதை; பொதுவாகவே நேர்கவிதையைப் பற்றிப் பேசப் பெரிதாக ஒன்றும் இருக்காது; விசேஷமாக ஏதாவது இருந்தால்தான் உண்டு; கவிஞன் பிறர் பற்றிக் கவனத்தில் / கருத்தில் கொள்ளக் கடமைப்பட்டவன்; அவர்களின் வாழ்நிலை / மனநிலை அவதானித்து எழுத வேண்டியவன்; சாதகமானதோ பாதகமானதோ ஆவணப்படுத்த வேண்டியதுதான்; அப்பொழுதுதான் நவீன கவிதை பன்முகம் கொண்ட்தாக / வண்ணங்கள் நிறைந்ததாக விளங்கும்; அப்படியான கவிதை இது.

என் நினைவுச் சின்னம்

நான் விடை பெற்றுக் கொண்டுவிட்ட செய்தி
உன்னை வந்து எட்டியதும்
நண்ப
பதறாதே
ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் எதுவும் அதில் இல்லை
இரங்கற்கூட்டம் போட ஆட்பிடிக்க அலையாதே
நம் கலாசாரத் தூண்களின்
தடித்தனங்களை எண்ணி
மனச் சோர்வில் ஆழ்ந்து தூங்காதே

நண்ப
சிறிது யோசித்துப் பார்
உலகெங்கும் கணந்தோறும்
இழப்பின் துக்கங்களில்
ஒரு கோடிக் கண்கள் கலங்குகின்றன
ஒரு கோடி நெஞங்கல் குமுறி வெடிக்கின்றன

நண்ப
நீ அறிவாயா
உன் அடிச்சுவடு ஒவ்வொன்றிலும்
அழிகின்றன ஒரு கோடி உயிர்கள்.
இருப்பினும்
நண்ப
ஒன்று மட்டும் செய்
என்னை அறியாத உன் நண்பனிடம்
ஓடோடிச் சென்று
கவிதையை எழுப்ப முயன்று கொண்டிருந்தவன்
மறைந்துவிட்டான் என்று மட்டும் சொல்.
இவ்வார்த்தைகளை நீ கூறும்போத
உன் கண்ணிர்
ஒரு சொட்டு
இந்த மண்ணில் உதிரும் என்றால்
போதும் எனக்கு. [பக் : 101-102]

உயில் எழுதி வைத்த்து மாதிரியான கவிதை; இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முந்தையது; ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல் எதுவும் அதில் இல்லை”—தரிசனம் போல; காலத்தின் முன் அவ்வளவுதான் என்பதாக; அதனால் பதற்றம் வேண்டியதில்லயென்று சமாதானமாக. இரண்டாவது பத்தி, தமிழ்ச் சூழலில் நிகழ்ந்து கொண்டிருப்பதை அறிந்த உள்ளத்தின் வெளிப்பாடு [மெலிதான கண்டனமில்லாமல் தீராதுதானே]; அடுத்தடுத்து பிரபஞ்ச உண்மை / விசாரம்; இறுதியில், விழைவு—சுதாவாக; கவிதையே தன்மையாகத்தானே.
சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகையில் மார்ச் 1959-இல் தொடங்கிய பசுவய்யாவின் கவிதை வாழ்வு நீண்ட காலம் நீடித்திருக்கிறது; அவருடைய ஆரம்ப காலக் கவிதைகள் வெகுவாகப் பேசப்பட்டவை; கேலியும் கிண்டலும் நிரம்பியவை; அதிர்வு உண்டு பண்ணுபவை; புதுக் கவிதையின் வளர்ச்சியில் கணிசமாகப் பங்கு பெற்றவை; புதிதாக எழுத வந்தவர்களுக்கு ஆதர்ஸமாக இருந்தவை; எண்பதுகளின் நடுவேயிருந்து பசுவய்யா இன்னும் எளிமையாக எழுதுவதென எண்ணிச் செயல்பட முற்படுகிறார்; அதே வேளை, சிறுகதை / நாவலில் கவனம் செலுத்தி எழுதுகிறார்’ கட்டுரை மற்றும் கூட்டங்களில் பங்கேற்பு என்றெல்லாம் இருக்கிறார்.
நீண்ட நெடிய ஆயுளிலேயே ஒரு கவிஞனுக்கு நாற்பது கவிதைகள் தேறுமெனில் யதேஷ்டம்; மற்ற மற்ற எழுத்து வடிவங்களில் / பணிகளில் ஈடுபடுகையில் எத்தனை என்பது யாரே கணிக்க இயலும்; கவிதைகளில்ச்ச்ச் தணியாத தாகம் கொண்டிருந்தவர் பசுவய்யா; எல்லோருடையதும் போலவே அவர் கவிதைகளும் காலத்தின் கைகளில்தான்

[ 107 கவிதைகள்—பசுவய்யா—ஜனவரி 1996—காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் [பி] லிமிடெட், 669 கே.பி.சாலை, நாகர் கோயில், 629 001]
==================================================================================

Series Navigationநிலவுடன் ஒரு செல்பிசூரிய ஆற்றல்.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *