This entry is part 5 of 6 in the series 22 மார்ச் 2026

பத்மநாபபுரம் அரவிந்தன்

நானொரு ஏவுகணை

எனக்கென்று மதமில்லை

நாடில்லை மொழியில்லை

சதையுடைந்து தெறிக்கின்ற

உதிரத்தின் மணம் கூட

எனக்கேதும் தெரிவதில்லை

நீ நினைக்கும் இடத்திற்கு

என்னை இயக்கி

பெருவானில்

மிகுவேகமெடுத்து

நீ தகர்க்க நினைத்த உயிர்களோடு

இடத்தினையும்

ஒருமித்து அழித்து

என்னையும் அழிக்கும் நான்

ஏனென்றோ

எதற்காக செய்தேனென்றோ

ஒன்றுமே புரியாமல்

என்னுயிர்

அழிந்து கிடக்கின்றேன்..

என்னை எத்தனை பத்திரமாய்

இத்தனைநாள் காத்து வந்தாய்

நான் வெடித்து சிதறுகையில்

பச்சிளம் குருந்துகளும்

துகள்களாய் சிதறி அழிகையில்

நான் படும் வருத்தம்

உனக்கு சிரிப்பாகும்..

உன் யுத்த சரித்திரத்தில்

என் பெயர் நிலைத்திருக்கும்

நான் கொன்ற உயிர்களின்

உறவின் உதடுகளில்

சாபமாய்  உறைந்திருக்கும்

நானொரு ஏவுகணை

எனக்கென்று மதமில்லை

நாடில்லை மொழியில்லை

சதையுடைந்து தெறிக்கின்ற

உதிரத்தின் மணம் கூட

எனக்கேதும் தெரிவதில்லை

அழிக்கப் பிறந்த உந்தன்

எண்ணத்தின் ஏவுதலில்

பயணித்து உடைக்கிறேன்

உடைகிறேன்..

இனி உலக அழிவின்

பெரும்பங்கே எமக்கென்று

பெருமைகொள்ள முடியவில்லை

நீயே உருவாக்கி உனையே

நீ அழிக்க உன்னால் ஏவப்படும்

நானொரு ஏவுகணை

எனக்கென்று மதமில்லை

நாடில்லை மொழியில்லை

சதையுடைந்து தெறிக்கின்ற

உதிரத்தின் மணம் கூட

எனக்கேதும் தெரிவதில்லை ..

Series Navigationதடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள்: இந்தியாவுக்கு உண்மையிலேயே பலன் தருகிறதா?கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து மா. அரங்கநாதன் எழுதிய “காடன் மலை” சிறுகதை