
ஆர் சீனிவாசன்
அகண்ட கடற்பரப்பில் சுழலும் அலைகள், துள்ளும் மீன்கள். நுங்கூறமற்ற, மாலுமியற்ற பாய்மரத்தின் சிகப்பு நிறக் கித்தான், நிலப்பரப்பின் திசைக்கு புயல் காற்றைத் திருப்புகிறது. பாய்மரக் கம்பத்தின் கூர்முனையில் கொத்து கொத்தாகக் காத்திரமான மனிதச் சடலங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக, வயிறு கிழிந்து பாய்மரக் கித்தான் மேல் உடலிலிருந்து குருதியையும் வாடையையும் பரப்புகின்றன. அவை கடல் தேவனுக்கு அளிக்கப்பட்ட காணிக்கை. ஆகூழ் படையலாக, எச்சரிக்கையாக, கடல் ஆன்மாக்களின் தயவைக்கோரும் விண்ணப்பங்கள். வண்ண மீன்களின் துள்ளலுக்கு நடுவே காற்றின் தயவின்றி ஆமை முதுகில் பயணிக்கிறது பாய்மரம். ஆழியில் அதனை மூழ்கடித்து மீண்டும் முதுகில் தாங்கி பாய்மரத்துடன் விளையாடுகிறது ஆமை. பாய்மரத்தின் நடுத்தண்டின் முன் புறம் யாழி ஒன்று வண்ண மீன்களை உமிழ்கிறது. பச்சை விழி கடற்பறவைகள், நீண்ட அலகு கோரப் பற்களால் சடலங்களை பதம் பார்க்கின்றன. கித்தானின் நிறம் சிகப்பானாலும் ஓர் அடையாளக் கூறு மட்டும் மேலோங்கித் தென்படுகிறது. அது ஒரு தேசத்தின் கொடி. பாய்மரம் நீலக் கடலில் தத்தளிக்கிறது. கடலின் ஆழத்திலிருந்து கதறும் குரல்கள் ரீங்காரமாக, அலையோசையுடன் ஒத்திசைத்து ‘தேசம் போ!’ என்கின்றன.
நீல நீருக்குள் மூச்சை அடக்கி கண்விழித்து முங்கிப் பார்க்கிறேன். கருவெறுமையில் ஜொலிக்கும் மர்ம முகங்கள். வினோத மீன்களின் செவுள்கள் ஈயத்தை உருக்கி நேர்த்தியாகச் செதுக்கப்பட்டு உடலுடன் இணைக்கப்பட்டவை. மீன்களின் வண்ணம் நொடிப்பொழுதில் மாறிக்கொண்டே போகிறது. ஆழத்தில் ஒரு மர்ம ஒளி கண்கட்டு வித்தை போலச் சிந்தை மறக்கச் செய்கிறது. மூச்சை இன்னும் அடக்க முடியாமல் நீருக்கு வெளியே முகத்தைத் தூக்கி சுவாசம் எடுத்த அதே கணம், பாய்மரம் திடீரென எச்சரிக்கையின்றி தரை தட்டி என்னை கடற்கரையில் வீசியது.
முகிலற்ற வெறிச்சோடிய வானம், கடும் வெயில். கடல் மணல், வியர்வையோடு கலந்து மேலுடம்பையும் கச்சையையும் பழுப்பு நிறமாக மாற்றியிருந்தது. மெதுவாக மணற்பரப்பில் கை ஊன முயன்றேன், ஆயிரம் ஊசிகள் தசையில் தைப்பது போன்ற கூர்மையான வலி. உள்ளங்கை, சிகப்பு ரணக் கோலம். மங்கிய பார்வைத்திறனுடன் முன்னே வீற்றிருந்த பரப்பைப் பசிமயக்கத்துடன் அண்ணார்ந்து பார்த்தேன். பார்வைக்கு எட்டியவரை மணல் பரப்பு. தூரத்தில் அது என்ன கானல் நீரா? மணல் திட்டிற்குப் பின்னல் நகரும் குவிமாடம். மீண்டும் மணலில் விழுந்தேன். வானம் மெதுவாக நிறம் மாறி கருவேடம் பூண்டது.
சிந்தையில் படிமங்களின் ஊர்வலம். விந்தை வடிவ நாடிக்கருவி சுமந்த நந்தி, கார்வை ராகம் இசைத்து ஊர்வலத்தின் தலைப்பகுதியாகச் செல்கிறது. பெரிய அம்மை தீண்டி முகம் முழுவதும் சீர் குலைந்த நர்தகிகள் கார்வை ராகத்திற்கு ஏற்ப வளைந்து நெளிந்து ஆடி வருகிறார்கள். அவர்களுக்குப் பின் அசுரர்கள், கௌதம முனியால் சபிக்கப்பட்டு உடம்பு முழுவதும் யோனியாய் மாறியிருந்த இந்திரனைப் பல்லக்கில் சுமந்து வருகிறார்கள். தேவேந்திரன் ஓயாமல் புரண்டு புரண்டு அழுகிறான். சில சமயம் தன்னை கல்லின் மேல் உரசிக்கொள்கிறான். உரசும்போது யோனி ரணமாகிறது. ஆயிரம் போர்வைகள் போர்த்தினாலும் அந்த அவல நிலையை மூடி மறைக்க முடியவில்லை. சினம்கொண்டு வஜ்ராயுதத்தை எடுத்து சாட்டை போல அடிக்க, மின்னல் எட்டு திக்கும் பாய்ந்து காடுகள், மலைகள் அனைத்தையும் சாம்பலாகியும் ஒரு புதர் மட்டும் கருகாமல் பச்சையாக எரிகிறது. இந்திரன் அதை நோக்கி வணங்கி தெய்வ சங்கதிக்குத் தயாராகிறான். வயிற்றில் முடிச்சு போட்டது போல் வலித்து படிமம் கலைகிறது.
சிந்தைக்குள் மெல்லிய கூச்சல் சப்தம். யாரோ ஒருவன் என் கையைப்பிடித்துத் தோளில் சுமந்து, கைகள் இரண்டிலும் கயிறு போன்று எதையோ திணிக்கிறான். அந்த கயிற்றைப் பிடித்தவுடன் உடல் வலி மெதுவாக நீங்கியது. விழி மேல் படிந்திருந்த தூசியைத் தட்டி கண்விழித்துப் பார்க்கையில் அந்த வடிவம் மீண்டும் தெரிந்தது. மணல் திட்டிற்குப் பின் நகர்ந்துகொண்டிருந்த அதே குவிமாடம். அந்த குவிமாடம் பிரம்மாண்டமான தேரின் கலசம். என்னை போன்ற பலர் அந்தத் தேரை கயிற்றால் இழுத்துக்கொண்டிருந்தோம். எங்களுக்குள் இருந்த ஒரே ஒற்றுமை எங்கள் இளமை. இழுப்போரின் வரிசையின் தலைப்பகுதியில் இருந்தேன் நான். பாலைப் பரப்பின் மேல் நடக்கையில் விந்தையாகக் கால் சுடவில்லை, மெய் வலிக்கவில்லை. சற்று முன் சோர்ந்து விழுந்திருந்த நினைவு இருந்தும், கயிற்றைப் பிடித்துத் தேரை இழுக்கையில் எங்கிருந்தோ உத்வேகம் பிறந்தது. ‘இது என் தேர்’ என்றது சிந்தை.
பாலை நிலம் மெதுவாக மாறி புல்வெளியானது. நடக்கையில் சிரமம் தெரியவில்லை. முகத்தில் மெல்லிய தென்றல், பூ வாசனை. அப்போதுதான் அவளைக் கண்டேன். என்னையும் அவள் நோக்கினாள், என்னுடன் சேர்ந்துகொண்டாள். அவள் கயிற்றைப் பிடிக்கவில்லை எனினும் என் புஜத்தை தாங்கி, வியர்வையைத் துடைத்தாள். மீண்டும் ஒரு முறை பின்னோக்கித் தேரைப் பார்த்தேன். ரம்யமான கோலம். கோபுரம் சிலைகளால் மின்னியது. இதிகாசத்திலிருந்து வெவ்வேறு படலங்கள், கதைகள். அப்போதுதான் கவனித்தேன், தேரின் கலசத்தில் பாய்மரக் கித்தானில் பொருந்தி இருந்த அதே தேசக் கொடி. எங்கோ மெல்லிதாகச் சாட்டை ஒலி. அதைப்பொருட்படுத்தாமல் கயிற்றை இழுத்துக்கொண்டே போனேன்.
நிலப்பரப்பின் மேல் ஏற்கனவே பதிந்திருந்த கால்தடங்கள் திசை காட்டின. சில சமயம் எந்தத் திசையில் தடம் செல்கிறது, தேரினுள் வீற்றிருக்கும் தெய்வம் எது, நாம் ஏன் இந்தத் தேரை இழுக்க வேண்டும் என்ற கேள்விகள் நிச்சயமாக எழுந்தன. ஆனால் அவை அப்போது முக்கியமாகத் தெரியவில்லை. தேர் இழுக்கும் இன்பம், துணையோடு பாரத்தைச் சுமக்கையில் கிடைத்த உத்வேகம், மணற்பரப்பில் பசியோடு விழுந்திருப்பதை விட மேல் என்பதை உணர்ந்தேன். மீண்டும் ஒரு முறை தேரைத் திரும்பிப் பார்த்தேன். இவ்வளவு நேரம் அதனை இழுத்தும் அது அதிகம் நகர்ந்ததாகத் தெரியவில்லை. அப்போதுதான் கவனித்தேன், நான் வரிசையின் முன் நிலையைத் தவறவிட்டுவிட்டேன். என்னைத் தாண்டி தலை இஸ்தானத்தில் வேறு சிலர் சேர்ந்திருந்தார்கள். இந்த மாற்றம் என்னை அறியாமல், கண்டும் காணாமல் நடந்திருந்தது. சில காலம் அப்படியே தொடர்ந்தது. அக்காலங்களில் நிலையை, அமைதியை உணர்ந்தேன். ஆனால் அது அதிக நேரம் நீடிக்கவில்லை.
அதுவரை எங்கோ மறைந்திருந்த உடல்வலி மெதுவாக மீண்டும் தலை எடுத்தது. கால்கள் தடத்தின் மேல் சரியாகப் பதிக்க முடியாமல் சில சமயம் சறுக்கின. நிலப்பரப்பு மெதுவாக மாறத் தொடங்கியது. புல்வெளி, கற்கள் நிறைந்த சமவெளியாக மாறி முட்செடிகளின் கம்பளமானது. அந்தப் பரப்பில் கால்தடம் பதிக்கச் சிந்தை தயங்கியது. சிந்தைக்கும் உடலுக்கும் பல முறை வாக்குவாதம். முன்னே கயிற்றைச் சுமப்பவர்கள் என்னை நோக்கிச் சினமுறுங்கினர். அப்போதுதான் மீண்டும் தேரைப் பார்த்தேன். தேர் இப்போது சற்று மங்கிய கோலம் பூண்டிருந்தது. வண்ணமையமாகத் காட்சியளித்த அதே தேர் இப்போது மங்கி, சிற்பங்களின் நடுவே விரிசல் இருப்பதை கவனித்தேன். சிந்தையில் படிந்திருந்த ரம்யமான நினைவுக்கும் நான் எதிர்கொள்ளும் காட்சிக்கும் வித்தியாசங்கள் பல. தேர் உண்மையில் தேர்தானா என்றுகூடக் கேள்வி எழுந்தது. அந்தச் சந்தேகம் என்னை உலுக்கியது. என்னுடன் இத்தனைகாலம் துணைக்கு நின்ற அவளும் மாறி இருந்தாள். ஆசைவசப்பட்ட முகம், மோகம் கொண்ட உடல் மாறி, அடையாளம் தவறியிருந்தாள். அவள் விழியில் என்னையும் பார்த்தேன். நானும் மாறியிருந்தேன். ஓயாத சாட்டை ஒலி, தேர் முன்னைப்போல ஒய்யாரமாய் நகரவில்லை, மிகுந்த சிரமத்துடன் நகர்ந்துகொண்டிருந்தது. ஒரு முறை என் சுத்தம் இருப்பவர்களைப் பார்த்தேன். அவர்கள் அனைவரும் மாறிவிட்டார்கள். சிலர் காணாமல் போயிருந்தார்கள், ஆனாலும் அனைவரும் உழைப்பை நிறுத்தவில்லை.
வருசையின் நடுவில் நின்ற எனக்கு, நான் இழுத்துத்தான் தேர் நகரும் எனத் தோன்றவில்லை. தற்போது தேரின்மேல் பொருந்தியிருந்த சிற்பங்கள் மாறியிருந்தன. சில இடங்களில் விரிசல்கள் பெரிய துளைகளாக மாறி, சிற்பங்கள் சீர்குலைந்து காணப்பட்டன. என் அருகில் நிற்பவர் திடீரென எதையோ கத்தினார். அவர் சொன்ன வார்த்தை ஒலி வேகத்தில் சுழன்று காற்றைக் கிழித்தது. வார்த்தையின் உச்சரிப்பு சுருங்கி, அர்த்தமற்று, ‘பட்’ என ஒலித்தது. சாட்டைச் சப்தம்! எங்களைப்போல நடுவில் நிற்பவர்களின் காதுகளில் ஒலிக்கும் அந்தச் சாட்டைச் சப்தம், எங்களோடு அல்லது எங்கள் பின்னால் நிற்பவர்களின் சாடல்கள் என அப்போதுதான் உணர்ந்தேன். அதைக்கண்டு சினம் கொண்டு திரும்பக் கத்தினேன். என் குரலும் சாட்டைச் சத்தத்தைப் போலக் காற்றைப் பிளந்து ஒலித்தது. என்னுள் பல மாற்றங்கள். உடலில் சோர்வு, கண்களில் மூடுபனி போன்ற பிரமை. மெதுவாகப் பின் தள்ளப்படுவதை உணர்ந்தேன்.
மேக மூட்டம், கண்விழிக்காத தொடர்மழை. எங்கு செல்கிறோம் என்று கூடத் தெரியவில்லை. என் கைகளைப் பற்றிக்கொண்டிருந்தவள் திடீரெனக் காணாமல் போனாள். அடைமழையில் அடித்துச் செல்லப்பட்டாள். அவளைத் தேடிப் பயனில்லை, நானே தடம் புரண்டேன். கண்கள் மங்கி கயிற்றை மேலும் இழுக்க முடியாமல் தரையில் சாய்ந்தேன். சிந்தையில் மீண்டும் படிமங்களின் ஓட்டம். கடல், யாழ், கரைந்து போகும் மனிதர்கள், நுங்கூரத்தின் அடியில் சிக்கி மூச்சுவிட முடியாமல் தவிக்கிறேன். தேரின் உச்சம் குவிமாட வடிவிலிருந்து மாறி கூர்முனையாகி, அந்த கூர்முனைப் பாலை நிலத்தில் குத்தித் தலைகீழாகச் சுழல்கிறது. தேரின் வெளிப்பரப்பில் இரு தலை வாசுகி அரவம் சுற்றிக்கொண்டிருக்கிறது. ஒரு தலையை மகுடம் ஊதி மயக்க முயல்கிறார்கள் சிலர், அதன் இன்னொரு தலைக்கு நிலைக்கண்ணாடி காட்டி ஆங்காரம் ஏத்துகிறார்கள் சிலர். ஆத்திரம் கொண்ட தலை இன்னொன்றைத் துரத்துகிறது; தேரின் கூர்முனை நிலத்தை ஏர் போல் உழுது, பாதாளத்திலிருந்து தீக்குழம்பு வெளிவருகிறது.
நெருப்பின் ஜவாலையில் புலன்கள் செயலிழந்தும் சிந்தை விழித்துக்கொண்டது. தேரின் அசல் வடிவம் புலப்பட்டது. நான் பயணிப்பது தேரே அல்ல, அது மனிதர்களால் ஆன பிரமிடு. படிமங்களாக வெளிப்புறத்தில் தோன்றுவது, நிஜத்தில் மனிதர்கள் தங்கள் மேனிமேல் பூசிக்கொண்ட கோலங்களின் காட்சி மயக்கம். அந்த கோலங்கள் இணைந்து படிமங்களாக, சிற்பங்களாக வெளிப்புறத்தில் காட்சி அளிக்கின்றன. நானும் விசித்திரமான பின்பியல் வண்ணச் சித்திரமானேன். ஒரு முழுமையின் ஆயிரக்கணக்கான சில்களில் ஒரு துகள் நான். அந்தச் சித்திரம் என் அடையாளம். அதுகூட மெதுவாக அழிந்துகொண்டிருந்தது. அந்த அடையாளம் என்மேல் நானே வரைந்தது அல்ல, பிறரால் என்மேல் வரையப்பட்டது. அந்தச் சித்திரத்தை அழித்து வேறு வண்ணங்களை என்மேல் நானே தீட்டிக்கொண்டேன், ஆனால் மாயமாக மீண்டும் அதே வண்ணத் திட்டு என்மேல் படிந்தது. பிரமிடின் மூன்று சுவர்களில் ஒன்றில் பிரம்மாண்டமான சதுரங்கப் பலகை, இன்னொன்றில் பரமபத ஆட்டப் பலகை, மூன்றாவதில் சுருள் புழை. தேரின் உள்ளிருக்கையில் அனைவரும் ஏதோ ஒரு ஆட்டத்தின் அங்கத்தினர் ஆனார்கள். நான் சதுரங்க ஆட்டத்தில் சிப்பாய் ஆனேன்.
சிந்தை விழித்து மீண்டும் பார்த்தேன், மனிதர்கள் தேரை மூன்று பக்கங்களிலிருந்தும் இழுத்துக்கொண்டிருந்தார்கள். தேர் மெதுவாக நகர்வதற்கு இதுவே காரணம். எந்தப் பக்கத்தில் அதிக வலு இருக்கிறதோ, அந்தப் பக்கம் தேர் நகர்ந்தது. காடுகளையும் பசுஞ்சோலைகளையும் தரைமட்டமாக்கிச் சென்றது. இழுக்கும் சிலரை மிதித்து, சிலரைத் தன்னுள் இழுத்து, உள்ளிருக்கும் சிலரை உமிழ்ந்து பிறகு மிதித்துச் சாகடிக்கிறது. தூரத்தில் நிலப்பரப்பில் பல தேர்கள். இங்கிருந்து பார்த்தால் ரம்யமாக, பொலிவுடன் வலம் வருகின்றன. அங்கே தூரத்தில் ஓர்த் தேர் மெதுவாகச் சீர்குலைந்து சாய்கிறது. சிகரக் குவிமாடம் குலைந்து அடிவாரம் நசுங்கிச் சுக்குநூறாகத் தறிகிறது. அந்தத் தேரின் மனிதர்கள் எறும்புகள் போலத் திசை தெரியாமல் ஓடுகிறார்கள். கடும் வெயிலிலும், புயலிலும் அண்ணல் பட்டு மடிகிறார்கள். சிலர் பாய்மரக் கப்பல் ஏறி கடலில் பயணித்து இன்னொரு தேரின் கயிற்றை இழுக்க முயல்கிறார்கள். அந்த முயற்சியில் தோல்வியடைந்து பாய்மரக் கம்பத்தின் கூர்முனையில் சடலங்களாகிறார்கள்.
என் தோளின்மேல் இன்னொருவர், அவர் தோலின் மேல் இன்னொருவர் என அப்படியே பல அடுக்குகளாக, உச்சத்தில் அந்த மனிதர். அவர் கையில் அரவச் சாட்டை. அந்த அரவத்தின் வாலைப் பிடித்துப் பரமபத ஆட்டப் பலகையின் மேல் சீரற்ற முறையில் சில கட்டங்களை நோக்கி அடிக்கிறார். அந்தக்கட்டத்தில் இருப்பவர்கள் மாண்டு விழுகிறார்கள். ஏணியின் மேல் வீசுகிறார்; ஏணி சரிந்து அதில் பரமபதம் ஏற முயற்சிக்கும் பலர் மாயமாகிறார்கள்.சதுரங்க ஆட்டத்தின் காய்களை நோக்கி வீசுகிறார், அந்தக்காய்கள் மாண்டு விழுகின்றன. சுருள் புழையின் பாதையில் திடீரெனச் சுவர்களை எழுப்பி, அந்தப் பாதையில் பயணிக்கும் சிலரைச் சிறைபிடிக்கிறார்.
அந்த அரவச் சாட்டையினால் தேரை ஓட்ட முயற்சிக்கிறார். சில சமயம் அவர் விரும்பிய திசைக்குத் தேர் நகர்கிறது, சில சமயம் வேறு திசைக்குச் செல்கிறது. மேலிருந்து திடீரென அரவச் சாட்டையின் ஒலி கேட்டது மட்டுமின்றி, அரவத்தின் கூர் பற்கள் என் முதுகில் பட்டு, சதை முழுவதும் நீலமாகிறது. ‘முன்னேறு!’ என்கிறார்.
‘எனக்கு நானே தலைவன். என் விதி என் கையில். யார் கட்டளைக்கும் அடிபணியேன். இந்தத் தேரை இழுத்துள்ளேன். என் இளமையை இந்தத் தேருக்காகக் கொடுத்துள்ளேன். உழைப்பவருக்கே உலகம் சொந்தம்!’ என்றேன். அரவம் மெதுவாக வாய் பிளந்தது. அதன் கூர்பற்களின் முனையில் விஷம் சொட்டுகிறது. மெதுவாக என்னைப்பார்த்துப் புன்னகைத்தார் அந்த மனிதர், ‘உன் விதி என் கையில். நிழல் தரும் என்னால் அதைப் பறிக்கவும் முடியும். மூன்றில் ஓர் ஆட்டத்தில் நீ பங்கேற்றுத் தீர வேண்டும். அந்த ஆட்டத்தை நிர்ணயிப்பவனும் நானே. உன் சித்தம் என்று எதுவும் கிடையாது. நீ என்ன நினைத்தாய்? மீதமிருக்கும் வாழ்நாட்களை நான் தரும் நிழலில் சயனிக்கையில், உன்னைத் தேரோடு மற்றவர்கள் இழுப்பார்கள் என்றா?’
உழைப்பு அசலில் யாருக்குச் சொந்தம்? கூலி வாங்கிய கையேடு முடிந்துவிடுமா செய்வினை? மனிதர்களின் கூட்டு ஏன் பிரமிடு வடிவம் எடுக்க வேண்டும்? சமவெளியில் விண்ணின் நீலத் திரையின் கீழ் சுதந்திரமாக வாழ முடியாதா? மெதுவாக எதார்த்தம் சிந்தைக்கு விளங்கியது. இரண்டு மனிதர்கள் சந்திக்கும்போதே யார் பெரியவன் என்ற கேள்வி எழுந்து, ஒருவன் மீது இன்னொருவன் ஏறி நிற்க நினைக்கும்போது மனித மந்தையின் கூட்டிற்குப் பிரமிடு வடிவம் இயல்பு தானே. மாயையில் அதுவரை இருந்துவிட்டேன். முதல் முறையாகக் கண் விழித்து வாழ்வின் நிஜ ஆகிருதியை, அரவ வடிவில் பார்த்தேன். ஆட்டத்தைவிட, சொப்பன வாழ்வைவிட, நிழலில் அர்த்தமற்ற இருப்பைவிட, நிரந்தர நித்திரையே மேல். என் இழப்பால் தேர் சீர்குலையாது; என் இருப்பு அதற்கு வேண்டாவரம், வெறும் புள்ளிவிவரம்.