ஜமீல்

இப்தார் முடிந்ததும் கையில் இருந்த தண்ணீர்க் கிளாசை மனைவியிடம் கொடுத்துவிட்டு அவசரமாக எழுந்தேன். பள்ளிவாசலுக்குப் போய்விட்டு வருகிறேன் என்று வழக்கமாகச் சொல்லும் அதே வார்த்தையை சொல்லிவிட்டுக் கிளம்பினாலும் அன்றைய நாள் என் நடையில் வேகம் அதிகமாக இருந்தது. வீட்டின் அருகிலிருந்த ரஹ்மத் பள்ளிவாசலில் மக்ரிப் தொழுகை முடிந்ததும் வழக்கம்போல் மற்றவர்களோடு நின்றுகொண்டு கதையளக்காமல் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கிப் பறந்தேன். வசந்தம் தொலைக்காட்சியில் அன்றிரவு பாராளுமன்ற வரவு செலவுத் திட்டம் பற்றிய முக்கிய செய்தி வரப்போகிறது. அரச ஊழியர்களின் சம்பளம் இந்த முறை கூடும் என்று ஊரெல்லாம் ஆளுக்கொரு கதையாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இருபதாயிரம் கூடும் என்று ஒருவர் சொல்ல, அதெல்லாம் சும்மா கதை, ஐயாயிரத்துக்கு மேல் போகாது என்று இன்னொருவர் தர்க்கித்தார். மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதைவிட தொலைக்காட்சியில் நேரடியாகக் கேட்பதே மனதுக்குத் திருப்தியாக இருக்கும் என்பதால் விரைந்தேன்.
வீட்டுக்குள் நுழைந்து தொலைக்காட்சியைத் திறந்தபோது நேரம் ஏழரையை எட்டவில்லை. விளம்பரங்கள் திரையை ஆக்கிரமித்திருந்த அந்த வேளையில் தெருவிலிருந்து உரத்த கூச்சலும் ஏச்சுப்பேச்சும் கேட்டன. ஏய் நில்லுடா ஓடாதடா என்ற சத்தம் கேட்டுத் தொலைக்காட்சியை அப்படியே விட்டுவிட்டு வெளியே ஓடினேன். தெருவிளக்கின் மங்கலான வெளிச்சத்தில் இறமுளான் மாமா நின்றுகொண்டிருந்தார். ஒரு கையில் சாறனைத் தூக்கிப் பிடித்தபடி இன்னொரு கையில் கல்லை வைத்திருந்தார். அவரது வாய் மட்டும் அந்தக் கல்லை விடவும் கனமான தூசனங்களை உமிழ்ந்துகொண்டிருந்தது.
என்ன மாமா நடந்தது என்று நான் கேட்டதும் அவர் சற்று அமைதியானார். ஆனால் வாயிலிருந்து பொங்கிவந்த கோப வார்த்தைகள் உடனே நிற்கவில்லை. இந்தக் கறாங் குட்டிகளையெல்லாம் எவனுக்குத்தான் பெற்றார்களோ என்று புலம்பியவரிடம், மாமா முதலில் சாந்தமாக இருங்கள், என்ன நடந்தது என்று சொல்லுங்கள் என்றேன். அவர் எதையும் தெளிவாகச் சொல்லாமல் மீண்டும் சில தூசன வார்த்தைகளை முணுமுணுத்தார். நான் அவரை மெதுவாக வீட்டுக்குள் அழைத்துச் சென்றேன். நோன்பு திறந்த மிச்ச சம்சா, கஞ்சி, பழச்சாறு என அனைத்தையும் அவர்முன் வைத்தேன். சாப்பிடுங்கள் மாமா, அப்படியே செய்தியும் பார்க்கலாம் என்று உபசரித்தேன். அவர் தலையசைத்தபடி, இல்லை மருமகன், நான் பள்ளிக்கு நேர காலத்தோடு போக வேண்டும் என்றார்.என்ன தொழவா என்று கேட்டேன்.
இல்லை மருமகன், ஜமாத் காரர்கள் வந்து தங்கும் பக்கமாக நமக்கும் நிரந்தரமாகத் தங்கத் தலைவர் ஒரு இடம் தந்திருக்கிறார், இப்போது போனால் தான் உள்ளே போகலாம், இல்லாவிட்டால் அதிகாரி கதவைப் பூட்டிச் சாவியை எடுத்துக்கொண்டு மாயமாகிவிடுவான் என்றார்.
இப்பவா என்று நான் கேட்க, ஆமாம் மருமகன் என்று சொல்லி எழுந்து நின்றவர் என் மனைவியை நோக்கி, மருமகளே, நாளைக்கு வருகிறேன், நீங்கள் வழக்கமாகத் தருகிற அந்த அகலமான கைலேஞ்சி ஒன்றை எடுத்து வையுங்கள் என்று சொல்லிவிட்டு வெளியேறினார். வாசலைத் தாண்டியதும் மீண்டும் திரும்பிப் பார்த்து, மருமகன், கொஞ்சம் வெளியே எட்டிப் பாருங்கள், இந்தக் களிசட வளப்புணிகள் இருட்டுக்குள்ளே ஒளிந்து நிற்பார்கள் என்றார். நான் வெளியே வந்து சுற்றுமுற்றும் பார்த்தேன். தெரு அமைதியாகவே இருந்தது. ஒரு நாய் மட்டும் தொலைவில் நின்று எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தது.
மாமாவைச் சந்தி வரை கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பும்போது அவர் நடந்து செல்லும் கூன்விழுந்த முதுகைப் பார்த்து எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. இறமுளான் மாமாவுக்கு ஏன் இவ்வளவு பயமும் ஆத்திரமும் வருகிறது? அந்தக் கேள்விக்குச் சரியான பதில் தேடி என் நினைவுகள் பல வருடங்கள் பின்நோக்கிச் சென்றன. எங்கள் ஊரில் இறமுளான் மாமா ஒரு காலத்தில் முற்றிலும் வேறொரு மனிதராக இருந்தார். வகுப்பில் கெட்டிக்கார மாணவன். படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டு, இணைப்பாடவிதான செயற்பாடுகள் என எதிலும் அவரே முன்னணியில் இருப்பார். கூச்ச சுபாவமும் இளகிய மனமும் கொண்டவராகவே அவர் வாழ்ந்தார். பள்ளிக்கூடம், பள்ளிவாசல் இரண்டுக்கும் நடுவில்தான் அவரது இளமைக்காலம் கழிந்தது.
அப்போது யாருக்குத் தெரியும், ஒரு நாள் வானூர்திச் சத்தம் ஒரு மனிதனின் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப்போடும் என்று? நாட்டுக்குள் போர் தீவிரமடைந்த தொண்ணூறாம் ஆண்டுக் காலம் அது. எங்கு பார்த்தாலும் பயம், பீதி, மரண ஓலங்கள், குண்டுவெடிப்புகள். போராலும் அதன் இழப்பு வலிகளாலும் பத்திரிகை, தொலைக்காட்சிச் செய்திகள் நிறைந்திருந்தன. அகதி முகாம்கள், படை முகாம்கள், போராளிகளின் முகாம்கள் தொண்டர் முகாங்ஙள் என நிறைய முகாம்கள் மழைக்கு முளைத்த காளான்களைப் போல் முளைத்தன. ஒரு பாக்கு வெட்டியில் ஒரு பாக்கு இருப்பதுபோல் எங்களது ஊரின் இரண்டு எல்லைகளிலும் கோயில் மணி ஒலிக்கும் ஊர்கள் இருந்தன.
வானத்தில் உலங்கு வானூர்தி சத்தம் கேட்டாலே ஊரே ஒரு கணத்தில் உறைந்துபோகும். இயக்கத்துக்காரர்கள் ஓடிவந்து வீடுகளுக்குள் புகுந்துகொள்வார்கள். சில நேரங்களில் தஞ்சம் கேட்பார்கள். பின்னால் இராணுவத்தின் நடமாட்டம் இருக்கும். மேலே வானூர்தி, கீழே பதறும் மக்கள். யார் யாரைத் தேடுகிறார்கள் என்றே புரியாத குழப்பமான காலம். ஒரு நாள் அப்படி வானூர்திச் சத்தம் கேட்டபோது தன்னைத் தேடித்தான் இராணுவம் வருகிறது என்று பயந்து இறமுளான் மாமா நிலத்தில் உருண்டு புரண்டு தப்பி ஓடினார். எப்படியோ இராணுவத்தின் ரவையிலிருந்து தப்பிவிட்டேன் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாராம்.
ஆனால் அந்த ஓட்டம் அவரது உடலைவிடவும் மனதில் ஓயாமல் தொடர்ந்துகொண்டே இருந்தது. பல வருடங்கள் கழிந்தும் தொலைவில் ஒரு வானூர்தி சத்தம் கேட்டால் போதும், அவர் ஓடத் தொடங்கிவிடுவார். திரைப்படத்தில் வானூர்தி வந்தாலும் ஓடுவார். திடீரென்று வானத்தைப் பார்ப்பார், பின்னர் கீழே குனிந்து நிலத்தில் உருண்டு புரள்வார். போர் அவருக்குள் உருவாக்கிய பயம் அவரது உலகத்தை அப்படியே முடக்கிவிட்டது. போர் முடிந்துவிட்டபோதிலும் அவருக்குள் இருந்த போர் ஒருபோதும் முடியவே இல்லை. இப்போது அவர் பழைய பண்டம் பாத்திரங்களைச் சைக்கிளில் கட்டிக்கொண்டு வீடு வீடாகச் செல்கிறார். பழைய இரும்பு இருக்கிறதா, பாத்திரம் இருக்கிறதா என்று கேட்டு வாங்கி, லாடக் கடைகளில் விற்று கிடைக்கும் சொற்ப லாபத்தில் வாழ்க்கையை ஓட்டுகிறார்.
அவர் ஒருபோதும் கையேந்தித் தின்ன மாட்டார். திருடித் தின்னவும் மாட்டார். ஓடாவி வேலை நன்றாகத் தெரியும் என்பதால் உடைந்த நாற்காலி, கட்டில், கதவு எனச் சின்னச் சின்ன வேலைகளை நேர்த்தியாகச் செய்து கொடுப்பார். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் அவரிடம் பேரம் பேச முடியாது. வேலை தொடங்குவதற்கு முன்பே கூலியைத் தெளிவாகச் சொல்லிவிடுவார். இதற்கு இவ்வளவுதான், ஒரு சதம் கூடக் குறையாது என்பார். என்னுடைய கட்டணத்தில் ஐந்து சதம் கூட குறைக்க முடியாது. அந்தக் கண்டிப்பை ஊர் மக்கள் சில நேரம் கிண்டலாக்கினாலும் அதுவே அவருடைய சுயமரியாதையாக இருந்தது. போர் அவரிடமிருந்து எதிர்காலத்தையும் பல கனவுகளையும் பறித்துக்கொண்டது, ஆனால் கையேந்தாத சுயமரியாதை வாழ்க்கையை மட்டும் அவரால் விட்டுக்கொடுக்க முடியவில்லை.
அன்றிரவு நான் சோபாவில் அமர்ந்தபோது செய்தி முடிந்துவிட்டது. பெருநாள் ஆடைகள் வாங்க வந்தவர்களுக்குப் புதிதாகத் தருவிக்கப்பட்ட உடைகளை என் மனைவி விரித்துக்காட்டிக் கொண்டிருந்தாள். என் மனம் தொலைக்காட்சியில் இல்லாமல் இறமுளான் மாமாவைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தது. அவரைத் தேவையில்லாமல் வம்புக்கு இழுத்த அந்தப் பாடசாலை மாணவர்கள் மீது எனக்குக் கோபம் வந்தது. எல்லோரும் எல்டிடிஈ என்று சொல்லி வம்புக்கு இழுக்கிறார்களே என்று மனதுக்குள் ஆத்திரப்பட்டேன். ஆனால் அடுத்த நொதெளிவுடியே எனக்குள் ஒரு பிறந்தது. அந்தச் சிறுவர்களுக்கு எல்டிடிஈ என்றால் வெறும் ஒரு சொல், ஒரு கேலி, ஒரு பட்டப்பெயர். ஆனால் இறமுளான் மாமாவுக்கு அது ஒரு கொடூரமான காலம், ஒரு ஓட்டம், ஒரு பயம், ஒரு வானூர்தி, ஒரு குண்டுச் சத்தம், அவரது சிதைந்துபோன வாழ்க்கை.
இஷா தொழுகைக்கான பாங்குச் சத்தம் கேட்டதும் நான் உடனே எழுந்து மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலுக்குச் சென்றேன். வாசலில் நுழைந்தபோது ஒரு விசித்திரமான காட்சி தென்பட்டது. பள்ளிவாசல் முற்றம் இரண்டு பட்டறையாகப் பிரிந்து கிடந்தது. ஒரு பக்கம் பெரியவர்கள், மறுபக்கம் சில சிறுவர்கள், நடுவில் இறமுளான் மாமா நின்றுகொண்டிருந்தார். அவரது சைக்கிள் அருகில் சாய்ந்துகிடந்தது. சைக்கிளின் சக்கரத்திலிருந்த காற்றை யாரோ குறும்புக்காரச் சிறுவர்கள் பிடுங்கிவிட்டிருந்தார்கள். மாமா குனிந்து சக்கரத்தைப் பார்த்தார். பின்னர் தலையை உயர்த்தி ஏண்டா என்று உரக்கக் கத்தினார். அதற்கடுத்து அவரது வாயிலிருந்து தூசன வார்த்தைகள் அருவியாகக் கொட்டின.
பள்ளிவாசல் என்பதையும் தொழுகை நேரம் என்பதையும் மறந்துபோன மனிதராக அவர் கத்திக்கொண்டிருந்தார். சும்மா ஆடிய பேய்க்கு கையில் வேப்பிலை கிடைத்ததுபோல அந்தப் பையன்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கேலியாகச் சிரித்துக்கொண்டிருக்க, மாமா ஆத்திரத்துடன் கத்திக்கொண்டிருந்தார். நான் மட்டும் அமைதியாக அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தச் சிறுவர்களின் சிரிப்புக்குப் பின்னால் இருந்த அறியாமையையும், மாமாவின் கத்தலுக்குப் பின்னால் உறைந்துகிடந்த பல வருட வலிமிக்க வரலாற்றையும் ஒரே நேரத்தில் உணர்ந்தேன். சிறுவர்களுக்கு அது ஒரு விளையாட்டு, அவருக்கு அது வாழ்க்கை. அவர்களுக்கு அது ஒரு பட்டப்பெயர், அவருக்கு அது உயிரோடு புதைக்க முடியாத கடந்தகாலம்.
போர் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. தெருக்களில் இனி குண்டுச் சத்தங்கள் இல்லை. ஆனால் சில போர்கள் நாட்டின் வரைபடத்தில் முடிந்துவிடும், சில போர்கள் மனிதர்களின் உடலுக்குள்ளும் மனதுக்குள்ளும் முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டே இருக்கும். இறமுளான் மாமா சைக்கிளின் காற்றில்லாத சக்கரத்தைத் தடவிக்கொண்டிருந்தார். பள்ளிவாசலின் மங்கலான வெளிச்சத்தில் அவரது கூன்விழுந்த நிழல் தரையில் நீண்டுகிடந்தது. சிறுவர்கள் ஓடி மறைந்ததும் அந்த இடம் திடீரென அமைதியானது. ஆனால், அந்த அமைதிக்குள் ஏனோ அவருக்குள் பழைய போர்க்காலத்தின் எதிரொலிகள் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருப்பது போல் இருந்தது. அவர் சைக்கிள் கைப்பிடியை இறுகப் பற்றியபடி மெதுவாக நிமிர்ந்து என்னைப்பார்த்தார். இருவரும் எதுவும் பேசவில்லை. காற்றில்லாத அந்தச் சக்கரத்தைத் தள்ளிக்கொண்டு அவர் இருட்டுக்குள் நடக்கத் தொடங்கினார், போர் முடிந்த நாட்டில் போர் முடியாத ஒரு மனிதனாக.