மீனாட்சி சுந்தரமூர்த்தி.

இருள் விலகியும், விலகாமலும் இருந்த காலைப் பொழுது அது.ஆற்றங்கரையை ஒட்டியிருந்த குடிசைப் பகுதியில் ஈக்களும், கொசுக்களும் ஆக்கிரமித்திருந்த அடர் கருப்பு நிறத்தில் தேங்கிக் கிடந்த சாக்கடையின் அருகில் சுருண்டு உறக்கத்திலிருந்த கருப்புநாய் காலடியோசை கேட்டு மெதுவாகத் தலைதூக்கியது. யாரென்று தெரியவில்லை, எதற்கும் முன்னெச்சரிக்கையாகக் குரைத்து வைப்போம் என்று மூன்று முறை குரல் கொடுத்தது, அந்தப் பகுதிக்குப் புதியவன் என்றால் அஞ்சி ஓடுவான் என்று நினைத்தது.
ஆனால் வந்தவனோ எந்தச் சலனமும் இல்லாமல் எதிரில் வந்து கொண்டிருந்தான். இப்போது அதற்கு இது மரியாதைக் குறைவாகி விட்டது, அதனால் துள்ளியெழுந்து கிர் என்று மெதுவாகக் குரலைச் செருமிக்கொண்டு ,’ வள், வள்’ என்று ஓங்கிக் குரைத்தது அவ்வளவுதான்
‘ஜாக்தே ரஹோ’ என்று தலைமைக் காவலாளி குரல் தந்தால் வீறு கொண்டு எழும் இரஜபுதனப் படைகள் போல் பத்துப் பன்னிரண்டு நாய்கள் வந்து சேர்ந்து .அந்தப் புதிய மனிதனைச் சுற்றிக் கொண்டு குரைக்கத் துவங்கின.நமக்கு என்னவோ அவை வெறும் ஒலியாகத் தோன்றினாலும் அதில் ,’ யார் நீ,எங்கு வந்தாய், யாரைப் பார்க்க வேண்டும், இதற்கு முன் வந்திருக்கிறாயா?, உனக்கு அவர்கள் எப்படிச் சொந்தம்?’ என்று இப்படிப் பல கேள்விகள் இருந்தன.
வந்தவனுக்கு ஒரு முப்பது வயதுதான் இருக்கும், பரட்டைத் தலை, அழுக்கேறிக் கிடந்த ஜீன்ஸ் பேண்ட், காவி நிற டி.சர்ட், தோளில் ஒருபுறமாகத் தொங்கியிருந்த சிறிய லெதர் பேக். இடுங்கிக் கிடந்த கண்கள். சராசரி உயரம். நாய்களைக் கண்டு அவன் அஞ்சவில்லை. மாறாக அப்படியே நின்றான். இப்போது நாய்களுக்கு குழப்பம்,
என்ன இவன் கல்லுளி மங்கனைப்போல் நிற்கிறானே, ஒரு வேளை பைத்தியமாக இருப்பானோ? நம்மை ஏதாவது செய்து விடுவானோ , இல்லை திருடனோ? நமக்கு பிஸ்கட், ரஸ்க் போடுவானோ, பார்ப்போம் நமக்கும்தான் அதற்கெல்லாம் வழியில்லையே,என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக நினைத்தன. கருப்பு நாய் , இவர்கள் சங்கத்தின் தலைவனாக இருக்குமோ என்னவோ இவன் ,என்னதான் செய்கிறான் பார்ப்போம் என்று குரைப்பதை நிறுத்தியது மற்றவையும் ஒலியைக் குறைத்துக் கொண்டே வந்து நிறுத்தி விட்டன.
இப்போது அவன் நடக்க ஆரம்பித்தான், நாய்கள் சில முன்னால் மெதுவாக குரைத்துக் கொண்டே நகர்ந்தன.சில தம் இருப்பிடங்ளுக்குச் சென்று விட்டன.மூன்று அவன் பின்னால் சென்றன. அருகிலிருந்த குடிசை வாசலில் சாக்கு விரித்துப் படுத்திருந்த ஒரு கிழவர் தூக்கம் கலைந்தததால்,’ ராவானா இதுகளுக்கு இதே வேலையாப் போச்சு’ என்று அலுத்துக்கொண்டே சிரும்பிப் படுத்தார்.ஆமாம் காலையில் அவர் பூக்கடைக்குப் பெருக்கி வாரிச் சுத்தம் செய்யப் போகவேண்டும்
இவன் சலனம் எதுவுமின்றி குடிசைகளைக் கடந்து கொண்டிருந்தான். நடுவில் ஒரு சிறிய மாரியம்மன் கோவில், சுற்றுச் சுவர் எதுவுமின்றி இருந்தது. வெளியில் ஒரு சிறிய பீடத்தில் சூலம் இருந்தது. ஒரு கணம் அங்கு நின்றவன் அதன் வலப்பக்கமாகத் திரும்பி நடந்தான். இப்போது நாய்கள் குரைப்பதை அறவே நிறுத்தி விட்டன. முன்னால், இரண்டு, பின்னால் மூன்று அவனுக்குப் பாதுகாப்புத் தருவது போல் நடந்தன.
ஆற்றங்கரையோரம் இடுகாடு, அதனருகில் ஒரு சிறிய சிமென்ட் தகன மேடை இருந்தது. அற்குச் சற்றுத் தள்ளி மூன்று குடிசைகள் இருந்தன். ஒன்று வெட்டியான் குடியிருப்பது. இன்னொன்று கொய்யாப் பழம் விற்கும் கூன் கிழவிக்கானது. கடைசியாக இருந்த குடிசையின் அருகில் வந்தவன் நின்றான்.வாசலில் சிவப்பு நிற பிளாஸ்டிக் பக்கெட் ஒன்று பாதியளவு தண்ணீரோடு இருந்தது. ‘அம்மா ‘ என்று குரல் கொடுத்தான், பதில் இல்லை, திரைச்சீலை போல் தொங்கிக் கொண்டிருந்தது மெல்லிய சாக்கு. அதை விலக்கி ஓட்டைகளோடு மூடியிருந்த கதவைத் தட்டினான். பதில் இல்லை. அங்கேயே தரையில் உட்கார்ந்தான், இப்போது நாய்களுக்குத் தெளிவாகி விட்டது இவன் யாரென்று, அதனால் அவனுக்கு உதவுவது போல் தோழமையோடு குரைத்தன.
வெட்டியான் களைத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் எழவில்லை, கூன் கிழவி எழுந்து விட்டாள் கதவு திறந்து வெளியில் வந்தாள், குழிவிழுந்த கண்களைச் சுருக்கிக்கொண்டு ,யாரது?’ என்று குரல் தந்தாள்.பக்கத்துக் குடிசை வாசலில் உட்கார்ந்திருந்தவன்
,’ ஆயா நாந்தான் கோபாலு வந்திருக்கேன்’
என்னாது? யாருடாப்பா ?’
கிழவி தூக்கக் கலக்கத்தில் இருந்தாள், அதோடு வலதுகாது வேறு சரியாகக் கேட்காது.
இவன் எழுந்து அருகில் சென்று’ ஆயா எப்பிடி இருக்கே?’ என்றான்,
தெருக்கோடியிலிருந்த விளக்கு கம்பத்தின் மெல்லிய மஞ்சள் ஒளி அவன் முகத்தில் பட்டிருந்தது. ‘
‘இன்னாடா கோவாலு, எப்ப வந்தே?, பத்து வருசமா எங்கடா போனே?என்று தலையை உயர்த்தி அவனைப் பார்த்துக் கேட்டாள் கிழவி.
‘சொல்றேன் ஆயா, அம்மா எப்பிடி இருக்கு?
‘இன்னாத்தைச் சொல்றது’
‘இன்னிக்கோ நாளைக்கோனு நாள எண்ணிக்கினு இருக்கா’
வா, என்று சொல்லி வந்தவள் வெளியில் தான் போட்டுவிட்டுச் சென்றிருந்த தாழ்ப்பாளை நீக்கி கதவைத் திறந்தாள். ஒரு பழைய கயிற்றுக் கட்டிலில் வற்றி, மெலிந்த ஐம்பதே வயதான சாவித்திரி படுத்திருந்தாள்.
எப்படி இருந்தவள் இவள்? மாநிறம்தான் என்றாலும் அத்தனை அழகு தென்கிழக்குச் சீமையின் சிற்றூர் ஒன்றிலிருந்து சினிமாக் கனவுகளோடு சென்னைக்கு வந்தது.இவள் மட்டும் இல்லை, இவளுடைய தோழியும்தான். விவசாயக் குடும்பத்தில் நாற்று நட வைத்திருந்த பணத்தில் ஆயிரம் ரூபாயை இவளும், அவள் விதைநெல் வாங்க வைத்திருந்த ஆயிரம் ரூபாயையும் எடுத்துக்கொண்டு இரயில் ஏறினார்கள். டூரிங் டாக்கீசீல் படம் பார்த்துப் பார்த்து ஆசையை வளர்த்துக் கொண்டவர்கள் இவர்கள். கோடம்பாக்கத்தில் காலடி வைத்தவர்களை பட்டுக் கம்பளம் விரித்தா வரவேற்கும் திரை உலகம்?
இப்படி வீட்டை விட்டு ஓடிவரும் பெண்களை எளிதாக வலை விரித்துப் பிடிக்கும் கழுகுக் கூட்டம் உண்டு. அப்படி ஒருவனிடம் சிக்கினார்கள், அவன் ஸ்டுடியோ ஒன்றில் எடுபிடியாக இருந்தான். இவர்களை வைத்து அவன் பணம் பார்க்க நினைத்தான். சிலவற்றை விட்டுக்கொடுத்தால் பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்றான், அதன்படியும் நடந்தார்கள்,ஒரு படத்தில் குழுநடனமாடினார்கள் அவ்வளவே. நாளடைவில் பாய் விரித்துப் பணம் சம்பாதித்துத் தருவதற்கா வந்தோம் என்று சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்து விலகினார்கள்.’ ஊருக்குப் போய் பெற்றவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது?’
இங்கேயே வேறு வேலை தேடினார்கள். ஒரு பெரிய பூக்கடையில் பூ கட்டும் வேலையும், காலையில் கடைகளின் வாசல்களில் தண்ணீர் தெளித்துக் கோலமிடும் வேலையும் கிடைத்தது. நாட்கள் ஓடின, சினிமாக் கனவில் வாழ்க்கையைத் தொலைத்து நின்றவர்களைத் தெய்வம் ஒரேயடியாகக் கைவிட்டுவில்லை. லாரி டிரைவர் ஒருவன் இவளுடைய தோழியைத் திருமணம் செய்து கொண்டான். துணை நடிகன் சலீம் ஸ்டுடியோக்களில் சாவித்திரியைப் பார்த்தவன் அவளைத் தேடி , பூக்கடைக்கு வந்து பேசி மணந்து கொண்டான். அவனது வருமானம் குடும்பம் நடத்தப் போதுமானதாக இருந்தது, அவனுக்கு நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின. இவர்கள் வசதியும் உயர்ந்தது. அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் குடியேறினார்கள். .சலீம் சாவித்திரியை மனமார நேசித்தான், சாவித்திரியும் தன் வாழ்வை மலரச் செய்த சலீமை உயிராக நினைத்தாள்.
மகனும் பிறந்தான் கோபால் என்று பெயரிட்டு அருமையாக வளர்த்தார்கள். ஏற்றமும் இறக்கமும் எவரையும் கேட்டு வருவதில்லை, சலீமுக்கு படப்படிப்பு ஒன்றில் உயரத்திலிருந்து குதித்தபோது தலையில் பலமாக அடிபட்டது, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவன் மீண்டு வரவில்லை. வீடும், வங்கியில் பத்து இலட்சமும் இருந்தது , பன்னிரண்டு வயது மகனைப் படிக்க வைத்து ஆளாக்க இது போதுமா?
எப்போதோ கற்றுக்கொண்ட தையல் கைகொடுத்தது. அக்கம்பக்கத்துப் பெண்களுக்கு துணி தைத்துக் கொடுத்தாள். கோபால் படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தது அவளுக்குப் பெருமையாக இருந்தது.
மகன் படித்து முடித்து வேலைக்குச் சென்றால் போதும் பட்ட கஷ்டமெல்லாம் தீர்ந்துபோகும் என்று நினைத்தாள் சாவித்திரி. ஆனால் நிலைமை வேறு மாதிரி ஆனது.
கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்த, கோபாலுக்கு ,கூடாநட்பால் படிப்பு கசந்தது, மது மற்றுமான பழக்கங்களுக்கு அடிமையானான்.சாவித்திரியிடம் அவ்வப்போது பணம் கேட்டு அடம் பிடிப்பான்.அவனைத் திருத்துவதற்காக நிறைய செலவு செய்தாள் சாவித்திரி. மறுவாழ்வு மையம் ஒன்றில் சேர்த்தாள் வேண்டாத தெய்வமில்லை, ஒரு வழியாக முழுவதுமாகத் தேறினான். இந்தச் சில ஆண்டுகளில்,வீடும், கையிருப்பும் போனது. இந்த கூன் கிழவி சாவித்திரிக்குப் பழக்கம் என்பதால் பக்கத்துக் குடிசையை வாங்கிக் கொண்டு இங்கே குடியேறினார்கள்.
‘கோபால் போனதெல்லம் போகட்டும், நீ அந்தக் கடைசி பரீட்சையை நல்லாப் படிச்சு எழுதிடு.’
‘சரீமா, இனி உனக்கு கஷ்டமே தரமாட்டேன்’
அதே போல் எழுதித் தேர்ச்சியும் பெற்றான். சில மாதங்களிலேயே பெரிய வணிக வளாகம் ஒன்றில் கணினிப் பிரிவில் வேலை கிடைத்துவிட்டது.
அதைச் சொல்ல ஓடிவருகிறான்.
‘அம்மா அம்மா,!’
‘என்னடா ஆச்சு? எதுக்கு இப்பிடி மூச்சு எறைக்குது?’
‘அம்மா எனக்கு மாசம் முப்பதாயிரம் சம்பளத்துல வேல கெடச்சிருக்கு’
‘நல்லது பா, வா அப்பாவை கும்பிட்டுக்கோ’
‘உனக்கு இப்ப என்ன வேணும் சொல்லு’
‘எனக்கு என்னப்பா வேணும், நீ நல்லா இருந்தா போதும்’
‘சரிமா , நீ ஏதாவது கேளேன், வாங்கிட்டு வரேன்’
ம் ம். யோசித்த சாவித்திரி,
‘ஆப்பிள் பழம் வாங்கிட்டு வா. உங்க அப்பா எனக்கு பிடிக்கும்னு வாங்கிட்டு வருவார்’
‘அம்மா இது தெரியாம போச்சே’
‘இதோ வரேம்மா’ என்று ஓடியவன் இன்றுதான் திரும்புகிறான்.தரையில் உட்கார்ந்து அவள் கால்களைப் பற்றிக்கொண்டவன்,
‘அம்மா என்னப் பாருமா,’ என்னை விட்டுட்டுப் போயிடாதே’
என்று கதறினான், அவனது கண்ணீர் சிலீரென்று அவள் பாதங்களை நனைத்தது.ஒருக்களித்துப் படுத்திருந்தவள் திரும்பினாள்,
கண்களில் பூரிப்பு,
‘அம்மா அன்னக்கி என்னை கடத்தல் கேசுல பிடிச்சுகிட்டாங்க, எத்தனை சொல்லியும் கேக்கலை, பத்து வருசம் தண்டனை தந்துட்டாங்க, இது உனக்குத் தெரிய வேணான்னுதான் சொல்லலை’
மகனின் முகத்தை வருடியவள் தலையைக் கோதிவிட்டாள், உண்மையா கடத்தின ஆளை இப்பதான் புடிச்சாங்க, இன்னும் ரெண்டு மாசம் இருக்கு, ஆனா விடுதலை பண்ணிட்டாங்க’
‘தீனமான குரலில் கூன் கிழவியைப் பார்த்து,
‘நான் சொன்னேனில்ல எம் மகன் இனி தப்பு பண்ணமாட்டான்னு’
என்றாள்.
‘அம்மா என்னோட நன்னடத்தைக்காகவும், தவறுதலா தண்டனை தந்ததாலயும் ஒரு வேலையும் தந்திருக்காங்க’
ஒரு மாதமாகப் படுக்கையிலிருந்த சாவித்திரிஇப்போது எழுந்து உட்கார்ந்தே விட்டாள்.
‘அம்மா நமக்கு அரசாங்கக் குடியிருப்புல வீடும் தந்திருக்காங்க, இன்னக்கே நாம இந்தக் குடிசையைக் காலி பண்றோம்.’
‘ஆயா நீயும் குடிசையக் காலி பண்ணிட்டுஎங்களோட வந்துடு’ என்றவன் பையிலிருந்து ஆப்பிள் பழத்தை எடுத்து அன்னையிடம் தந்தான். மூவரின் விழிகளிலும் ஆனந்தக் கண்ணீர் தளும்பியது.
வாசலில் படுத்திருந்த நாய் ஒன்று ஏதோ புரிந்ததுபோல் வாலை ஆட்டியது.