This entry is part 3 of 9 in the series 2 ஆகஸ்ட் 2026

ச.சிவபிரகாஷ் 

வருடம்:2022

சென்னையில் OMR என்று சொல்லக்கூடிய பழைய மகாபலிபுரம் சாலையில் இயங்கி வரும் பல மென்பொருள் அலுவலக வரிசையில் ஒரு புகழ்ப்பெற்ற அலுவலகம் ஒன்றின் “கேண்டீனில்”  பிரேக் டைமில் திவ்யாவும்,பரத்தும் அமர்ந்து அலுவல் சம்மந்தமாக

பேசிக்கொண்டிருந்தனர்.

இருவரும் ஒரே அலுவலக ஊழியர்களாக இருந்தாலும்,திவ்யா சமீபத்தில் தான் இங்கு வேலைக்கு சேர்ந்திருக்கிறாள்.பூர்வீகம் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம்,காக்கிநாடா பகுதியை சேர்ந்தவர்.இவள் வேலைக்கு விண்ணப்பித்த இடங்கள் ஹைதராபாத் மற்றும் பெங்களூர்.,கிடைத்ததென்னவோசென்னை தான்.

சென்னைக்கும்,இவள்

குடும்பத்துக்கும் 

நெடுங்கால பந்தம் உண்டு.தாத்தா மத்திய அரசு ஊழியராக சென்னையில் பணிபுரிந்தவர்.தாயும் சென்னையில் பிரபல கல்லூரியில் சேர்ந்து படித்து,சில சூழ்நிலையால் பாதியிலே கைவிட்டு திருமணமாகி ஆந்திராவுக்கு புலம்பெயர்ந்துவிட்டார்.

திவ்யாவுக்கு தாய்மொழி தெலுங்கென்றாலும்,தமிழும் ஒரளவு தெரியும்.என்பதாலும்,இதனால் சில வருடங்கள் சென்னையில்

இருந்துவிட்டு பின்னர் மாற்றுதலாகிக்கொள்ளலாம் என்ற

எண்ணத்திலேயே தனி ஆளாக வேலைக்கு வந்திருக்கிறாள்.இங்கே தங்குவதற்காக சில மாதங்களிலேயே இரண்டு மகளிர் விடுதிகள் மாற்றியும். பல அசௌகரியங்களால்,பிடிக்காமல் போகவே.தனி வீடாக பார்த்து இருக்கலாம் என்றால்.,

திருமணமாகாதவர்களுக்கு தனிப்பட்ட வீடுகள் கிடைப்பதில்லை. இச்சூழலில் இவளுக்கு உதவி செய்தது பரத்.

தனது வீட்டின் அருகாமையிலே,

தெரிந்த புரோக்கர் மூலம் தனிவீடு பிடித்து, திவ்யாவை குடியமர்த்தி உதவி இருக்கிறான்.

‘பரத்’பிறந்த சில வருடங்களிலேயே,

கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை விட்டு பிரிந்து வந்து

உடன்பிறந்தவர்கள் மற்றும் அம்மா வீட்டின் அரவணைப்பிலும்,

ஆதரவிலும்,மிகுந்த கஷ்ட்டப்பட்டு பிள்ளைகளை வளர்த்து,படிக்கவும் வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறாள் இவனது தாய் நளினி.இவனின்

 மூத்தசகோதரி யுவஸ்ரீ நர்ஸ் டிரைனிங் முடித்தவள் இருந்தும்,ஒரு மருத்துவமனையில் நர்ஸாக சேராமல் வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டிருக்கும் முதியவர்களையும் ஒப்பந்த அடிப்படையில் பார்த்துக்கொள்ளும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறாள்.

……

“அலுவலக கேண்டீனிலிருந்து”.

திவ்யா,பரத் இருவரும் ஆளுக்கொரு ஜூஸ் வாங்கி அமர்ந்து கையில் ஏந்தியபடி திவ்யா

அலுவலக வேலை விஷயத்தை தவிர்த்து வேறு ஏதாவது பேசலாம் என்ற எண்ணத்திலே இப்போது ஆரம்பிக்கிறாள்.

பரத்…நான் ஒரு விஷயம் கேட்கிறேன் பதில் சொல்லுவியா?

…ம்…கேளு,எதை பத்தி.

எனக்கு வாடகைக்கு வீடு இருந்தால் சொல்லுன்னு சொன்னதும்,உடனே ஏற்பாடு செய்து கொடுத்திருக்க.,

ஏன்…? இதுவே பசங்க யாராவது கேட்டிருந்தால்,செய்து கொடுத்து இருப்பியா?.

ஏன் மாட்டேன்…உதவின்னு யார் வந்து கேட்டிருந்தாலும்,என்னால முடிஞ்சத செய்வேன்.,அப்படி தான் இதுவும்.அதுக்கென்ன இப்போ.

என்றான்.

அப்படின்னா…எனக்காக நீ! செய்யல,ஏதோ எனக்காக தான் அலைந்து மெனகட்டு செய்திருக்கியோன்னு நெனச்சேன் நான்.

பரத் ‘குறுக்கிட்டு’

அது சரி….இரண்டுமாதம் கழித்து, இப்போ இதை கேட்க தான்

பேசலாம்னு சொல்லி என்னை இங்கே கூப்பிட்டியா?என கிண்டலாக சிரித்தபடி கேட்க

இல்ல…

உன் மேலே இருக்கிற அக்கரையில தான் வீடு பார்த்து

கொடுத்திருக்கேன் சொல்லுவேன்னு பார்த்தேன்.என பதிலளித்த திவ்யாவிடம்.

ஒன்னா வேலை செய்யுற பொண்ணா இருக்கீயே,ஏதாவது வீடு இருந்தால் சொல்லுங்கன்னு கேட்டதும் விசாரித்து பார்த்து பிடித்து கொடுத்தேன்.அவ்வளவு தான்…இதுக்கு எனக்கு உன் மேலே தனிப்பட்ட அக்கரைன்னு ஒன்னுமில்லை.-என வெள்ளந்தியாக சொன்ன பதிலை சற்றும் எதிர்ப்பாராத திவ்யாவுக்கு முகம் சிவந்துப்போனது. இதன்பிறகு..

சில நிமிடம் மௌனித்து

கிளம்பலாம் என மேற்கொண்டு எதுவும் பேசாமல் எழுந்து நகர முயல.,பரத்துக்கு ஒன்றும் புரியாமல்,என்னாச்சு திவ்யா,என்ன கோபம்?,கொஞ்சம் நேரம் பேசலாம்னு வந்திட்டு,ஏன்?உடனே கிளம்புறே.என்ற கேள்விக்கும் பதிலேதும் சொல்லாம விருட்டென்று  நகர்ந்தாள்.

எதுவும் புலப்படாமல் வேறு வழியின்றி பின் தொடர்ந்தான்.

நன்கு பேசிக்கொண்டிருப்பவள் அலுவலக உள்ளேயும்,பேசவில்லை.

பணி முடித்து அனைவரும் வீட்டிற்கும் கிளம்பி வாசலில் வந்தும்,இவனிடம் முகம் கொடுத்து கூட பேசாமல்,தவிர்த்து சென்றாள்.

……”அன்று மாலை”

எப்போதும் தனது சக நண்பர்களுடன் தினமும் கூடும் டீக்கடையில் ‘பரத்’ இவ்விஷயத்தை பற்றி பரிமாறிக்கொண்டபோது, அதிலொருவன் …மச்சி…இந்த பொண்ணு உனக்கு ரூட் போடுறாள்னு நினைக்கிறேன் என்றான்.மற்ற நண்பர்களும் இதையே ஆமோதித்தனர்.

பதிலுக்கு ‘பரத்’ ச்சே,ச்சே அப்படியெல்லாம் இருக்காது.அப்படி இருந்திருந்தால் நேரடியாகவே சொல்லியிருக்கலாம் இல்லீயா? – என்றதும்.

மாப்ள…பொதுவாகவே எந்த பொண்ணும் நேரடியாக தன் விருப்பத்தை சொல்ல மாட்டாளுங்க, என்ன தான் தனக்கு புடிச்சிருந்தாலும்,

சில பொண்ணுங்களுக்கு பசங்க வாயால இருந்து முதல்ல வரட்டும்னு தான் எதிர்பார்ப்பாங்க.

அவங்களோட மனசாலான அழுத்தமும் கூட.அது…பொண்ணுங்களுக்கே உரித்தான ஈகோவா,உளவியல் தவறா,என்னன்னு எனக்கு சொல்ல தெரியல என்றான் நண்பனொருவன்.

சரி….நீயே கேட்டிருக்கலாமே?எதுக்கு கேட்குறே,என்ன விஷயம் நேரடியாக சொல்லுன்னு கேட்கவேண்டியது தானே.என்று கேட்ட மற்றொருவனிடம்.

கேட்டேன்,ஆனால் பதிலேதும் சொல்லாமலே போயிட்டா.நானும் போடீன்னு விட்டுட்டேன்.

அப்புறம்..என்ன மயிதுக்கு இப்போ இந்த discussion.அப்படியே விட வேண்டியது தானே என்றான் நண்பன் நக்கலுடன்.

இல்ல…உதவி செய்து கொடுத்தும், நன்றி இல்லாம இப்படி

நடந்துக்கிட்டாளே.நான் உண்மையை தானே சொன்னேன்.அதுக்கு எதுக்கு இவ்வளவு கோபம். என்ற பரத்தை இடைமறித்து

சரி மச்சி…நீ ஏன் வீடு பார்த்து கொடுத்தே? தைரியமா அவ்வளவு தூரத்திலிருந்து வேலைக்கு வந்தவளுக்கு,பெண்கள் விடுதி பார்த்து இருந்தவளுக்கு,அதுவும் நல்லா படித்தவளுக்கு தனியா வீடு பார்த்துக்க தெரியாதா? ஏன் நீ போனே? ஏன்னா…உனக்கும் அந்த பொண்ணு மேலே ஏதோ ஒரு affection வந்திருக்கு.அது இனம்புரியாத காதலாக கூட இருக்கலாம். என்ற நணபனின் கூற்றை அலட்சியப்படுத்த முடியாமலும்,

ஆமோதிக்க முடியாமலும்.சரி விடுங்கடா என பேச்சை திசை திருப்பி சிறிது அரட்டைகளுக்கு பின்னர் டீக்கடையிலிருந்து கலைந்தனர்.

……

“இரவு”

தனது அம்மா மற்றும் சகோதரியுடன் இதை பற்றி எதுவும் கூறாமல் வழக்கம் போல உரையாடி விட்டு,இரவு உணவுக்கு பின்,அவர்கள் இருவரும் படுக்க சென்றுவிட்டனர் இவனுக்கு மட்டும் தூக்கம் வராதிருக்கவே கொஞ்சம் நேரம் டீவி பார்த்துக்கொண்டிருக்கையில். தனது செல்போனில் திவ்யாவிடமிருந்து WhatsApp வழியாக பதிவு ஒன்று வந்திருந்தது.அவசரமாக ஒபன் செய்து பார்த்தான்“sorry”என்று மட்டும் இருந்தது.

உடனே பதில் கொடுக்கலாமா, வேண்டாமா,என்ற யோசனைக்கு பின் reply எதுவும் கொடுக்காமல் call செய்தே பார்க்கலாம் என அழைப்பதற்கு முயல,

அவளிடமிருந்தே நேரடியாக அழைப்பும் வந்தது.மிக அவசரமாக எடுத்து ஹலோ என்றதும்,மறுமுனையில் பதிலேதும் வராமல் அமைதி நிலவ,

ஹலோ…ஹலோ… திவ்யா…என்றான் போன் துண்டிக்கப்பட்டது.மீண்டும் ஒரு WhatsApp பதிவு.நாளை அலுவலகத்து ஒன்றாக செல்லலாமா? என்னை தங்களது வாகனத்தில் அழைத்து செல்கிறீர்களா?என்றிருந்தது.

இவனும் வேறெதுவும் பகிராமல் sure என்று மட்டும் பதிவிட்டு பதிலுக்காக காத்திருந்தான்.thanks…good nite,sweet dreams என குறிப்பிட்டு முத்தமிடும்

எமோஜியை சேர்த்து இம்முறை அனுப்பி இருந்தாள்.இவனுக்கு ஒன்னும் புரியவில்லை,என்ன பொண்ணா இருப்பாள் இவள்.

அவளே கேள்வி கேட்டாள்,பதில் சொன்னதுக்கு,சம்மந்தமே இல்லாம,

கோபித்து சென்றாள்.இப்போ சாரி கேட்கிறதுமில்லாம,முத்தமிடும் எமோஜியை வேற அனுப்பி இருக்கா.புரிஞ்சுக்கவே முடியலையே.என்றவாறே படுக்கைக்கு சென்றான்.

“காலை”

தனது ஹோண்டா யூனிகான் பைக்கில்  அம்மா மற்றும் அக்காவை தவிர்த்து முதல் முறையாக ஒரு பெண்ணை அழைத்து செல்லும் முனைப்பில் வண்டியை நீண்ட நாட்களுக்கு பிறகு சுத்தம் செய்துக்கொண்டிருப்பதை கவனித்த அம்மா

வண்டில  எவ்வளவு தூசு இருக்கு, துடைச்சா என்ன,துடைடான்னாலும்

துடைக்கமாட்ட,இன்னிக்கு விழுந்து,விழுந்து துடைக்கிறியே என்ன விஷயம்? என்றவளிடம் ஒன்னுமில்லை…ரொம்ப அழுக்கா இருக்கு,என்னாலேயே சகிக்க முடியல அதான் மா என்றான்.

துடைச்சது போதும்,வண்டி தேய்ஞ்சிட போகுது.வேலைக்கு லேட்டாக தான் நான் வருவேன் அதனால இன்னிக்கு மட்டும் வண்டி வராதுன்னு நீங்க வந்திடுங்கன்னு டிரைவர் நேத்தே என்கிட்ட சொல்லிட்டார்.அதனால் என் பிக்கப் வண்டி வராது, டியுட்டிக்கு வேற டைம் ஆயிடுச்சு என்னை கொண்டு விட்டுடான்னு கேட்டுக்கொண்ட அக்கா யுவஸ்ரீயிடம் அவசரமாக

ஹாங்…நோ…நோ…எனக்கு இன்னிக்கு முக்கியான மீட்டிங் ஒன்னு இருக்கு.வரமுடியாது என்றதும்

டேய்…கிளம்பி ரெடியா தானே இருக்கேன்,எவ்வளவு நேரம் ஆகபோகுது

நீ போற வழியில அப்படியே விட்டுட்டு போயேண்டா ப்ளீஸ் என்றாள் யுவஸ்ரீ. இதோ பாரு…அன்னிக்கு ஒருநாள் இதே மாதிரி வண்டி வரலேன்னு சொன்னதும் கொண்டு விட்டேனா இல்லீயா. இன்னிக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு,உடனே போகணும்,லேட்டாயிடும்  அதான். இரு…உனக்கு ரேபிடோ புக் பண்ணி தரேன்னு சொல்லி செய்து கொடுத்து விட்டு,இவனும் உடனே கிளம்பி திவ்யாவை கண்டு அலுவலகம் அழைத்து செல்ல அவள் வீட்டிற்கு  சிட்டாய் பறந்து சென்றான்.

…..

சாத்தியிருந்த கதவால்,அழைப்பு மணியை பரத் அழுத்த,யாரென பார்க்கலாமென திறந்தவளுக்கு

இவன் சீக்கிரம் வருவான்,என எதிர்பாராமல் இன்னும் கிளம்பாமலே இருந்து விட்ட திவ்யா.

ஹலோ பரத்…வா,வா,என உள்ளே அழைத்து அமர வைத்தாள்.காபி சாப்பிட்றீயா,அக்கரையுடன் கேட்டாள்.

தேங்க்ஸ்… வேண்டாம்,இப்போ வரும் போது தான் குடிச்சிட்டு வரேன்.அதுசரி என்ன நீ இன்னும் கிளம்பாமயே

இருக்கே.?விசாரித்தான்.

நீ…இவ்வளவு சீக்கிரம் வருவேன்னு எனக்கு எப்படி தெரியும்.

சீக்கிரமா…என கடிகாரத்தை பார்த்தான் ஆமா…9.00 மணி தான் ஆகுது. நீ கூப்பிட்டியே,உன்னையும் அழைச்சிட்டு போகணும்,லேட்டாயிட போகுதுன்னு,டைம் பார்க்காமலும் சாப்பிடாமலும் கிளம்பிட்டேன்.

…சாப்பிடலையா,? Thank god ரொம்ப நல்லதாபோச்சு.

ஏன்…?

நாம இரண்டு பேரும்,எங்காவது நல்ல ஹோட்டல்ல பிரேக்பாஸ்ட் சாப்பிட்டு போகலாம்.கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணு இதோ கிளம்பி வந்திட்றேன்.

என முந்தைய நாள் ஏற்பட்ட மனகசப்பை மறந்து எப்பவும் போல் சகஜமாக பேசிக்கொணடவள்,

உடையை மாற்றியும் வந்து விட்டாள்.

…..

“பைக்கில் செல்கையில்”ஒருபக்கமாக அமர்ந்த

திவ்யா ‘பரத்திடம்’

என் மேலே கோபம் இல்லீயே? கேட்க.

கோபமா..?எதுக்கு நான்

கோபப்படனும்,எதிர்கேள்வி கேட்டவனிடம்.

நான் நேத்திக்கு உன்கிட்ட அப்படி நடந்ததுக்கு.

அதான் சாரி சொல்லிட்டேல்ல அப்புறம் அதை பத்தி திரும்பவும் பேசனுமா?

இல்ல…நான் அந்த மாதிரி நடந்திருக்ககூடாது. சரி,சரி..கூல்,கூல்.நேற்றைய சம்பவம் நேற்றோடு முடிஞ்சிடுச்சு.இப்போ வேறு எதாவது போசுவோம்.என பேச்சை மாற்றி தொடர்ந்தான்.என்ன திடீர்ன்னு  வேலைக்கு என்னுடன் வண்டியில வரேன்னு சொன்னே.?

உன் கூட கொஞ்சம் பர்சனலா பேசனும்,ஆபிஸ்ல முடியாது,எனக்கு அந்த கேண்டீனும் ராசி இல்லை போல.,பேசலாம்ன்னு ஆரம்பிக்கும்போதே மூடுஅவுட்

ஆயிடுச்சு.நைட் போன்ல அதை பத்தி சொல்ல வேண்டாம்னு தான் காலையில் உன்கூட வேலைக்கு ஒண்ணா வண்டியில போகும் போதோ,இல்லைன்னா எங்காவது ஒரு இடத்தில் போய் பேசலாம்னு தோணுச்சி.இன்று நேரம் நல்லா அமைஞ்சது.ரொம்ப நல்லதா போச்சு.என இவள் சொல்ல சொல்ல  பைக்கை நிறுத்தி உடனே என்னவென்று விஷயத்தை கேட்க

வேண்டும் போலிருந்தது இவனுக்கு. என்னவாக இருக்கும்,நண்பர்கள் சொன்னது போல் காதலை வெளிப்படுத்த இருக்கிறாளா, இல்லை, இந்த வீடு சரியில்லை, வேறு வீடு பார்த்துக்கொடுன்னு

சொல்ல போறாளா.நினைத்து முடிப்பதற்குள்

பரத்… என்ன யோசனை? நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே வரேன் நீ எதுவுமே பேசாம வண்டி ஓட்டிக்கிட்டு வர,

ஒன்னுமில்லை… என்ன விஷயமாக இருக்கும்னு யோசித்து

வந்திட்டிருக்கேன்.

சொல்றேன்… சொல்றேன். Free-யா உட்கார்ந்து பேசுவோம்.

…..

“ஹோட்டல்” வந்து விட்டது.கை அலம்பிவிட்டு,ஒரு ஒரமான இருக்கையில் எதிரெதிரே அமர்ந்தனர். வேண்டிய டிபன் ஆர்டர் செய்து விட்டு

பரத்…நீ என்னை பத்தி என்ன நினைக்கிறே?

..ம்…நீ நல்ல பொண்ணுன்னு

அப்புறம்?

நீ நல்லா படித்தவள்,புத்திசாலி

அவ்வளவு தானா?

கோபக்காரி.. என்றதும் திவ்யா பொய்யான முறுக்கலோடு ஆள்காட்டி விரலை நீட்டி ….ஏய்…ஏய்….என்றாள்.

பார்த்தியா,பார்த்தியா கோபப்படுறீயே.

அதுக்கு தான் நான் தயங்கினேன்.

சரி…அப்புறம் வேற என்ன தெரியும்.

நான்…எனக்கு தெரிஞ்சதெல்லாம் சொல்லிட்டேன்.

நான் உன்னை காதலிக்கிறேன்னு தெரியலையா? ….திவ்யா கேட்டதும்

(பரத் ஏற்கனவே யூகித்திருந்தாலும்.

இவள் வாயால் சொன்னதை கேட்டதும் கொஞ்சம் திடுக்கிட தான் செய்தது.)

குரலை உயர்த்தி (what) வாட்….? நிஜமாகவா என்றான்.

எஸ்…உன்னை விரும்புறேன்.

ஐ லவ் யு…உனக்கு என்னை பிடிச்சிருக்கா?

ஆமோதிப்பது போல் தலையசைத்து புன்னகைத்தபடி கேட்டான். என்னை ஏன் பிடிச்சிருக்கு? நான் உனக்கு வீடு பார்த்து உதவி செஞ்சதாலயா?

ச்சே… ச்ச்சே…அதான் காரணமா இல்லைன்னாலும்,என்னவோ உன்னை பார்த்ததும் புடிச்சி போச்சு ஏன்..னு தெரியல. என்றவள்

அப்போ… உனக்கு என்னை ஏன் புடிச்சிருக்கு.? சொல்லு வினவினாள்.

நான் தான் முதல்லேயே சொல்லிட்டேனே நீ! ரொம்ப அழகாக இருக்கேன்னு.

அப்போ… உனது விருப்பத்தை, நீ முதல்ல சொல்லியிருக்கலாமே.

சொல்லியிருக்கலாம்… எல்லாத்துக்கும் நேரம் காலம் வரணுமில்ல,என நையாண்டியாக பரத் சொல்ல, அப்போ… இன்னிக்கு மட்டும் வந்திடுச்சா?

உனக்கு இன்னிக்கு வரும்போது, எனக்கும் அப்படித்தான்.(இருவரும் புன்னகைக்கிறார்கள்)

இருவரது கைவிரல்களும் கோர்கிறது,அங்கேயே காதலர்களாக உறுதிப்படுத்தி கொடுக்கிறது.

கீதா கபே.

…..

இருவருக்கும் நெருக்கம் அதிகரித்து,அலுவலகம் தவிர

மால்கள்,கோயில்,பீச்,தியேட்டர்கள் என காதலர்களாய் ஒன்றாக

சுற்றிக்கொண்டிருந்தனர்.

…..

 ஒருநாள் பரத்திடம் திவ்யா திருமணம் செய்து கொள்வது பற்றி பேச்செடுக்க,

இதோ பாரு திவ்யா…நாம கல்யாணம் பண்ணிக்கலாம், ஆனால் கொஞ்சம் தாமதமாகும், அதுவரை கொஞ்சம் பொறுமையாக இரு.-என்கிறான்.

ஏன்…?என்ன பிரச்சினை,எதுக்கு தாமதிக்கனும்,கேள்வியை முடிப்பதற்குள்ளாக

இதோ பாரு திவ்யா…எனக்கு முன்னாடி கல்யாண வயசுல அக்கா ஒருத்தி இருக்கா.அவளுக்கு நல்ல இடமாக பார்த்து கல்யாணம் பண்ணிக்கொடுத்திட்டு தான். என்னோட கல்யாணத்தை பற்றி யோசிக்கனும்.அதுக்கப்புறம் நம்ம காதலை பத்தி அம்மாக்கிட்ட சொல்லணும் சம்மதம் வாங்கணும் என்றவனிடம்.

அப்போ! … அதுவரைக்கும்?

காதலர்களாக இருக்கவேண்டியது தான்.-என்றான்.

அக்காவுக்கு வரன் பார்த்திட்டிருக்கீங்களா?

இனிமேல் தான் பார்க்கணும்,

எப்போ பார்த்து,எப்போ முடிவு

செஞ்சு,நடக்கிறது.அதுவரைக்கும்

வெயிட் பண்ண முடியுமா?

நான் வேணும்னா வெயிட் பண்ணி தான் ஆகணும். – இது பரத்

உங்க அம்மாவுக்கோ, அக்காவுக்கோ நீ என்னை காதலிக்கிற விஷயத்தை சொல்லியிருக்கியா?

ஹும்… ஹும்… சொல்ல.. ல.

ஏன்…?

அக்கா கல்யாணம் முடியட்டும் சொல்லிக்கலாம்னு இருக்கேன்.

ஆமா… நீ! உங்கள் வீட்டில் சொல்லியிருக்கியா?

இன்னும் சொல்லவில்லை, – என்றவளிடம்

உங்க வீட்டில் நம்ம திருமணத்துக்கு சம்மதிப்பாங்களா? நீ தெலுங்கு பெண்,நான் தமிழ் பையன்.என்னை மாப்பிள்ளையாக ஏத்துப்பாங்களா?

இதோ பாரு பரத்… மொழியை பார்த்தா,நாம காதலிச்சோம்.எங்க வீட்ல நான் ஒரே பெண் என் விருப்பத்துக்கு எப்பவுமே தடை போட மாட்டாங்க

எப்படியும் சம்மதம் வாங்கிடுவேன். நீ

உங்க அம்மாக்கிட்ட இப்பவே சொல்லி வை.முடிந்தால் நம்ம கல்யாணத்தையும் அக்கா கல்யாணத்தையும் ஒண்ணா நடத்திக்கலாம்னு சொல்லி பாரு. சரின்னு சொல்லுவாங்க. வற்புறுத்தியவளிடம், என்ன சொல்வதென்று தெரியாமல், தலையாட்டி விட்டு கிளம்புகிறான்.

….

சில நாட்களுக்கு பின்னர்.திவ்யா தான் காதலிக்கும் விஷயத்தை தனது அம்மாவிடம் தெரிவிக்க,

அவள் பரத்தை பற்றியும்,

குடும்பத்தை பற்றியும்,விசாரித்து திருமணத்துக்கு சம்மதம்  தெரிவிப்பது தொடர்பாக இரண்டொரு நாளில் சென்னை வந்து நேரில் மாப்பிள்ளை வீட்டாரை பார்த்து விட்டு தெரிவிப்பதாக உறுதியளிக்கிறாள்.

….

திவ்யா பரத்திடம்.

பரத் இன்னும் இரண்டு நாட்களில் எங்க அம்மா சென்னைக்கு வருவதாக சொல்லியிருக்கிறார். வந்ததும் நம்ம கல்யாணத்தை பத்தி 

உங்கள் வீட்டுக்கு வந்து உங்க அம்மாவிடம் பேசுவார்கள்.என தகவல் சொல்ல. பரத்தும்

வேறு வழியில்லாமல் அன்று இரவு தனது தாயும், அக்காவும் ஒன்றாக இருக்கும் சூழலில் அனைத்து விஷயங்களையும் சொல்ல.வீட்டில் கல்யாணம் ஆகாத பெண்னண வெச்சுக்கிட்டு,உனக்கு எப்படிடா முடிக்கிறது? அது சரிவராது. நீ விரும்பிய அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிக்க,… வேணாம்னு சொல்லலை. இவளுக்கு முடிச்சிட்டு பார்ப்போம்,சொல்லிடு.என அம்மா சொல்ல.

நானும் இந்த காரணத்தை தான் மா

அவக்கிட்டேயும் சொன்னேன். இருந்தாலும் அவங்க அம்மா நம்ம வீட்டுக்கு வந்து இதை பத்தி பேசுறேன்னு சொல்லியிருக்காங்களாம்.

இப்போ என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலமா என பரத் சொன்னதற்கு.

ஏன்? நீ காதலிக்கும் போது,அந்த அறிவு எங்கே போச்சு. அம்மா குரல் உயர்த்தி பேச. இவனது அக்கா யுவஸ்ரீ குறுக்கிட்டு…

அம்மா கொஞ்சம் பொறுமையா கேளு.எனக்கு கண்டிப்பாக இப்போ கல்யாணம் வேண்டாம். அந்த ஆசையும் சுத்தமா இல்லை, இதுநாள் வரைக்கும் நம்ம வீட்ல கல்யாண பேச்சு வராதனால, இதை சொல்லனும்னு தோணலை, அதனால இப்போ சொல்றேன் எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்… வேண்டாம்,தம்பி ஆசைப்படுவது மாதிரி அந்த பெண்ணையே அவனுக்கு உடனேயே கட்டி வைங்க.

என்றவளிடம். ஏன் நீயும் எவனயாவது லவ் பண்றீயா.?

அம்மா… அந்த மாதிரியெல்லாம் எதுவுமில்லை, நெனப்புமில்ல. என நீண்ட  விவாதங்களுக்கு பிறகு, இவனும் அம்மா சம்மதிக்க.இரண்டு நாட்கள் காத்திருப்புக்கு பின் சொன்னபடி திவ்யா – வின் தாயாரும் சென்னை வந்து பரத் வீட்டினரை சந்தித்து பேசி பிடித்து போகவே  இரண்டு மாதங்களுக்கு பிறகு சென்னையிலேயே ஒரு கோயிலில் திருமணம் முடித்து அன்று மாலை ஏதேனும் ஒரு நல்ல ஹோட்டலில் வரவேற்பு வைத்து க்கொள்ளலாம் என முடிவாகிறது.

“மாதங்களும் கடக்கிறது”.

கோயிலில் கெட்டிமேளம் முழங்க, பரத் – திவ்யா இருவரின் கழுத்திலும் மாலைகள் மாறிக் கொண்டிருந்த அந்த மங்கல தருணத்தில், கோயிலின் பிரகாரத்தில் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

​சுவாமி தரிசனம் செய்வதற்காகக் கோயிலுக்கு வந்திருந்த ரகு என்ற பெரியவர்,கூட்டத்திற்கு நடுவே வீற்றிருந்த மணமக்களைப் பார்த்துக் திகைத்துப்போய் நின்றார்.

​அவரது பார்வையில் விழுந்த முதல் முகம் — நளினி.

​”நளினியா இது? இத்தனை வருஷத்துக்கு அப்புறம்…” ரகு” மனதுக்குள் இடி மின்னியது. ஆம், பல ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்,பெற்ற குழந்தைகளையும் மனைவியையும் தவிக்கவிட்டுப் பிரிந்து சென்ற அதே ரகு தான் அவர்!

​மணமேடையில் கம்பீரமாக நிற்கும் பரத்,தன் சொந்தக் குருதியில் உதித்த மகன் தான் என்பதை உணர்ந்த கணத்தில், அவரது நெஞ்சில் குற்ற உணர்ச்சியும் வியப்பும் ஒருசேர முட்டி மோதியது. “என் பையனா இது? இவ்வளவு பெரிய ஆளா வளர்ந்து,இன்னைக்கு கல்யாணக்கோலத்துல நிக்கிறானா? நான் செஞ்ச துரோகத்துக்கு மத்தியிலயும் நளினி இவனை எவ்வளவோ கஷ்டப்பட்டு ஆளாக்கியிருக்கா…” என்று நினைத்து அவர் கண்கள் கலங்கினார்.

​தன் தவறை உணர்ந்து, மகனையும் மனைவியையும் நோக்கி எட்டடி எடுத்து வைக்க முயன்ற நொடி… மணப்பெண்ணின் பக்கத்தில் நின்றிருந்த திவ்யாவின் தாயாரைப் பார்த்த ரகுவுக்கு இரத்த ஓட்டமே ஒரு கணம் நின்றுவிட்டது போலிருந்தது!

“சுஜாதா …!”

​அவர் மனதிற்குள் உறைந்து போனாள்.

நளினியைத் திருமணம் செய்வதற்கு முன், தன் இளமை பருவத்தில் உயிராகக் காதலித்த பெண் தான் இந்த சுஜாதா!

மணமேடையில் நின்றிருந்த சுஜாதாவைப் பார்த்த கணத்தில், ரகுவின் மனக்கண் முன் 80-களின் நினைவுகள் சுழன்றடித்தன…

​பிளாஷ்பேக்

​அப்போது 1980-களின் பிற்பகுதி.ரகு தன் இளமைப் பருவத்தில், ‘சகலகலா வல்லவன்’ கமல்ஹாசன் போல டிஸ்கோ கட்டிங் முடியும், அழகான மீசையுடன் கட்டுக்கோபான உடலுடன் கன்னிப்பெண்களை கவர்ந்திழுக்கும் அழகுடன் இருப்பான்.சுஜாதா வீட்டின் அருகாமையிலேயே ஒரு சிறிய மெக்கானிக் ஷெட் வைத்து நடத்தி வந்தான்.

​தினமும் காலையில் வண்ண வண்ண சுடிதாரில் கல்லூரிக்குச் செல்லும் சுஜாதாவைப் பார்க்கும் போதெல்லாம் ரகுவின் நெஞ்சுக்குள் காதல் ராகம் இசைக்கும்.அது தீவிரமான ஒருதலைக் காதலாக வளர்ந்து கொண்டிருந்தது. சுஜாதாவோ மிகப்பெரிய பணக்கார வீட்டுப் பெண்.அவளிடம் தன் காதலைச் சொல்ல அவனுக்கு தயக்கம் இருந்தது.

​ஒரு நாள், சுஜாதா கல்லூரிக்குச் செல்லும் வழியில் அவளது ஸ்கூட்டர் திடீரெனப் பழுதாகி நின்றுவிட்டது. வேறு வழியின்றி பக்கத்திலிருந்த ரகுவின் மெக்கானிக் ஷெட்டிற்கு அவள் வர, ரகுவுக்கு அதுவே பெரிய வாய்ப்பாக அமைந்தது. வண்டியைச் சரிசெய்து கொடுத்து, அவளிடம் அன்பாகப் பேசியதில் இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது.

​அடுத்த சில நாட்களிலேயே,தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளைப் பின்தொடர்ந்து சென்ற ரகு,தன் காதலைச் சுஜாதாவிடம் மனம்திறந்து சொன்னான்.ரகுவின் அழகும்,அவனது உண்மையான அன்பும் பிடித்துப்போகவே சுஜாதாவும் சம்மதித்தாள். அதன்பின்,சென்னை கடற்கரை, பூங்காக்கள்,திரையரங்குகள் (அப்போது தான் ஏக் துஜே கே லியே படமும் வந்தது இருவரும் கண்டு ரசித்தனர் முடிவு இந்த மாதிரி இல்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டும் என பேசிக்கொண்டனர்). என இருவரின் காதல் வாழ்க்கையும் இனிதே பயணித்துக்கொண்டிருந்தது.

​ஆனால், இந்தக் காதல் அதிக நாள் நீடிக்கவில்லை. ஒரு நாள் இவர்கள் இருவரும் தனியாகப் பேசிக் கொண்டிருப்பதைச் சுஜாதாவின் தந்தை நேரில் பார்த்துவிட்டார். அந்தஸ்து,பணம் எனப் பெருமை பேசிய அவருக்கு, ஒரு மெக்கானிக் பையன் தன் மகளைக் காதலிப்பது இரத்தக் கொதிப்பை ஏற்படுத்தியது. ரகுவை ஆள் வைத்துத் தீர்த்துக்கட்டவே திட்டம் போட்டார்.

​அடிதடியில் ரகு தப்பித்துவிட்டாலும், நிலைமையின் தீவிரத்தைப் உணர்ந்த சுஜாதாவின் தந்தை, மகளை மிரட்டி,அடித்து,ஏதேதோ சொல்லி மனதை மாற்றி நள்ளிரவோடு நள்ளிரவாகக் குடும்பத்தோடு ஆந்திராவிற்குப் புலம்பெயர்ந்து சென்றார்.

​சுஜாதா தன்னை விட்டுப் பிரிந்துவிட்டாள் என்ற அதிர்ச்சியை ரகுவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அவளைத் தேடி அலைந்து தோற்றுப்போகவே, தன் சோகத்தை மறக்கக் குடிக்க ஆரம்பித்து பின் அடிமையானான்.

​மகனின் இந்த நிலையைப் பார்த்த ரகுவின் குடும்பத்தினர்,அவனை நல்வழிப்படுத்த எண்ணி, சொந்த உறவுப் பெண்ணான நளினியை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

​ஆரம்பத்தில் குடும்ப வாழ்க்கை நன்றாகத் தான் சென்றது. யுவஸ்ரீ பிறந்தாள், அடுத்து பரத்தும் பிறந்தான். ஆனால், ரகுவால் சுஜாதாவின் நினைவுகளிலிருந்தும், குடிப்பழக்கத்திலிருந்தும் முழுமையாக மீண்டு வர முடியவில்லை. மீண்டும் மீண்டும் குடிக்கு அடிமையாகி, வீட்டிற்குள் தகராறு செய்யத் தொடங்கினான். தன் பிள்ளைகளின் எதிர்காலமும், தன் சுயமரியாதையும் பாழாவதை விரும்பாத நளினி, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து ரகுவை பிரிந்து செல்ல முடிவெடுத்தாள்.

இப்போது காலத்தின் விசித்திரமான விதியைப் பார்த்து ரகுவுக்கு தலை சுற்றியது

தான் கைவிட்ட மனைவிக்கு பிறந்த மகன் (பரத்)…தான் காதலித்து கை நழுவிய காதலிக்கு பிறந்த மகள் (திவ்யா)… இருவரும் இப்போது மணமக்களாக மாலை மாற்றி நிற்கிறார்கள்!

தரிசனத்திற்கு வந்த இடத்தில், தன் கடந்த காலத்தின் இரண்டு முக்கிய பக்கங்களும் ஒரே மேடையில் சம்மந்திகளாக நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த ரகுவால் அங்கிருந்து நகரவும் முடியவில்லை, மேடைக்குச் செல்லவும் முடியவில்லை.

​தாலி கட்டும் தருணம் முடிந்ததும், உறவினர்கள் ஆசீர்வதிக்கத் தொடங்கினர். அப்போது, கூட்ட நெரிசலுக்கு நடுவே தயங்கித் தயங்கி மேடையை நோக்கி வந்த ரகுவை பார்த்து,ஆசி வழங்கித் திரும்பிய நளினியின் முகம் மாறியது. அவரது அதிர்ச்சியைப் பார்த்து, பக்கத்திலிருந்த சுஜாதாவும் திரும்பிப் பார்க்க… மூன்று ஜோடிக் கண்கள் ஒன்றையொன்று சந்தித்தன.

நளினி: “நீங்கள்… இங்க என்ன பண்றீங்க?” (ஆத்திரமும் துக்கமும் கலந்த குரலில்)

சுஜாதா: “ரகு..? நீங்களா இது?” (வியப்பின் எல்லையில்)

அங்கிருந்த பரத், திவ்யா, யுவஸ்ரீ உட்பட அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

​”அம்மா… யார் இவரு? உங்களுக்குத் தெரியுமா?” என்று பரத் கேட்க, நளினி கண்களில் கண்ணீருடன், “இவன் தான்டா… உன்னையும் உன் அக்காவையும் அனாதையா விட்டுட்டு போன உன் பெத்த தகப்பன்!” என்றாள்.

​பரத்தின் முகம் கோபத்தால் சிவந்தது. அதே நேரத்தில், சுஜாதா மெல்லிய குரலில், “நளினி… இவரு… இவரு தான் என்னோட கல்லூரி காலத்து பழைய நண்பர்…” என்று சொல்ல வந்தவள், ‘காதலன்’ என்ற உண்மையை அந்த சுபநிகழ்ச்சியில் உடைக்க விரும்பாமல் தவித்தார்.

ரகு கைகூப்பி நின்றார். “நளினி… நான் செஞ்ச தப்புக்கு மன்னிப்பே இல்லை. ஆனா இன்னைக்கு என் மகனோட கல்யாணத்தைப் பார்க்கிற பாக்கியம் எனக்குக் கிடைக்கும்னு நான் நினைக்கவே இல்லை. சுஜாதா… நீயும் இங்கயே இருப்பேன்னு நான் எதிர்பார்க்கல…” என்று தழுதழுத்தார்.

​சுஜாதா தன் பழைய காதலை மறந்து, தன் மகளின் எதிர்காலத்தையும், நளினி பட்ட கஷ்டத்தையும் மட்டுமே யோசித்தார்.

கடந்த காலம் முடிஞ்சு போச்சு ரகு அன்னைக்கு சில சூழ்நிலையால குடும்பம் பாதிக்கப்பட்டது உண்மைதான். ஆனா இன்னைக்கு காலமே நமக்குத் தெரியாம ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கு. உங்க மகனும் என் மகளும் ஒண்ணா சேர்ந்திருக்காங்க. பழசையெல்லாம் பேசி இந்த மங்கல நிகழ்ச்சியைக் கெடுக்க வேண்டாம்.” — சுஜாதா அமைதியாகக் கூறினார்.

நளினியும் தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக, பழைய கசப்புகளை அந்த இடத்திலேயே புதைக்க முடிவு செய்தார். ரகுவை தன் கணவனாக ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், மகனின் திருமணத்தை ஒரு தந்தையாக தூரத்திலிருந்து பார்த்து ஆசீர்வதிக்க அனுமதியளித்தார்.

​பரத்தும் திவ்யாவும், தங்கள் பெற்றோரின் கடந்த கால விசித்திரமான பந்தத்தைப் புரிந்துகொண்டு, விதியின் இந்த விளையாட்டை புன்னகையோடு ஏற்றனர்.

​கடந்த காலத்தின் கசப்புகளை மறந்து, ஒரு புதிய பந்தத்தோடு — பரத், திவ்யா, நளினி, சுஜாதா என அனைவரும் இணைந்து அந்த மாலையில் நடந்த வரவேற்பு விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்!

               ******முற்றும்******

                                     ச.சிவபிரகாஷ்

Series Navigationதீ பரவட்டும் !அம்மாவும் ஆப்பிளும்