This entry is part 6 of 9 in the series 2 ஆகஸ்ட் 2026

பாலமுருகன்.லோ

“அண்ணே… கந்தசாமியண்ணே… உள்ளே வரலாமா?”

“யாரு? அப்படியே ஹால்ல உக்காருங்க. இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடறேன்.”

“சரியண்ணே… பொறுமையா வாங்கண்ணே…” என்றான் குழந்தைவேல்.

ஹாலிலிருந்த சோபாவில் அமர்ந்த பிறகு குழந்தைவேல் வீட்டைச் சுற்றிப் பார்த்தான். அந்த வீட்டின் ஹாலுக்குள் வந்தாலே யாவரும் அண்ணாந்து பார்க்க வேண்டியதாக இருந்தது.

காலைச் சூரிய ஒளி வீட்டின் நடுக்கூடத்தில் விழும்படி அந்த வீடு அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. நான்கு புறங்களிலும் தேக்கு மரத் தூண்கள் கம்பீரமாக நின்றன. ஹாலிலிருந்து பார்த்தால், வாசலுக்கு மேலிருந்த சுவரில் கம்பீரமாக வீற்றிருந்த கந்தசாமியண்ணனின் உருவப்படம் கண்களை ஈர்த்தது.

அடர்த்தியான மீசை, பெரிய கண்கள், நெற்றியில் அகலமாகப் பூசப்பட்ட விபூதிப் பட்டை, அதன் நடுவில் குங்குமப் பொட்டு, வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை அணிந்தபடி புகைப்படம் காட்சியளித்தது.

பார்ப்பதற்குச் சாந்தச் சொரூபமாகத் தெரிந்தாலும், கந்தசாமியின் நினைவே குழந்தைவேலின் மனதில் அச்சத்தை எழுப்பியது.

“வாப்பா குழந்தை, என்ன விஷயமா வந்த?” என்றார் கந்தசாமி.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, கந்தசாமியின் வேலையாள் மாடசாமி வேகமாக வீட்டுக்குள் ஓடி வந்தான்.

“ஏண்டா மாடசாமி, ஏன் இவ்வளவு வேகமா ஓடிவர? அப்படி என்ன நடந்து போச்சு?” என்றார் கந்தசாமி.

“எஜமான், நம்ம காளி இருக்கானுல்ல…”

“ஆமாம், இருக்கான். அவனுக்கு என்னடா? இப்ப நீ விஷயத்துக்கு வரப்போறியா இல்லையா?”

“எஜமான், நீங்க அவனிடத்துல போயி வட்டி வாங்கிட்டு வரச் சொன்னீங்கள்ல…”

“ஆமாம், சொன்னேன். என்ன, போனியா? எங்க வட்டி? அவன் ரெண்டு மாசமா ‘இதோ தரேன், அதோ தரேன்’ன்னு சொல்லிக்கிட்டே இருக்கான். என்கிட்டேயே விளையாடுறான் போல.”

“சொல்லுடா மாடா, என்ன அவனுக்கு?”

“அவன் வீட்டை விட்டே ஓடிட்டானாம். நம்ம இந்த மாசத்துக்கு வருவோம்னு தெரிஞ்சு. அவனோட சம்சாரம் கண்ணைக் கசக்கிக்கிட்டு, மூக்கைச் சிந்திக்கிட்டு வீட்டு வாசல்ல நின்னுட்டு இருந்தா.”

“ஏண்டா மாடா, அவளிடத்தில கேட்டிருக்க வேண்டியதுதானே, காளி எங்க போயிருக்கான்னு?”

“எஜமான், நானும் கேட்டேனுங்க. அவளுக்குத் தெரியாதுன்னுட்டா.”

“காளி என்னை வக்கத்தவன்னு நெனச்சுக்கிட்டான்னு போல. இரு… நான் யார்னு காட்டுறேன்!”

என்று கத்திவிட்டு, குழந்தைவேலை நோக்கிப் பார்வையைத் திருப்பினார் கந்தசாமி.

குழந்தைவேல் மிரண்டு போய் கந்தசாமியையே பார்த்தபடி இருந்தான். ஆவேசம் தாளாமல் மேலும் கந்தசாமி கத்த ஆரம்பித்தார்.

“ஏண்டா மாடா, என்ன மாதிரி ஆளுங்களுக்கு எவ்வளவு பேருக்கு வப்பாட்டி இருக்காளுக. எனக்கும் இருக்கே. இப்ப அதுல காளி சம்சாரமும் ஒண்ணா ஆகப்போறா.”

“எஜமான், என்ன சொல்லுறீங்க?”

“ஏண்டா, நான் சொன்னா அதை செஞ்சு காட்டிடுவேன்னுல்ல!” என்று முழக்கமிட்டபடி சிரித்தார் கந்தசாமி.

“அவனுக்கெல்லாம் இப்படித்தான்டா பாடம் புகட்டணும். பணத்தையும் வாங்கிட்டு, வட்டியையும் திருப்பித் தராம, பொட்டப்புள்ளங்களையும் குழந்தைகளையும் நிர்கதியா விட்டுட்டு ஓடுறவனெல்லாம் ஆம்பளையாடா? அதனாலத்தான் நானே அவளுக்கு அடைக்கலம் தரப்போறேன்.”

குழந்தைவேல், “சரியண்ணே… அப்ப நான் கிளம்புறேன்,” என்றான்.

“என்ன குழந்தைவேலு, வீடு வரைக்கும் வந்து எதுவும் சொல்லாம, கொள்ளாம போறியே? என்ன விஷயம்?”

“அதுவாண்ணே… ஒண்ணும் முக்கியமான விஷயம் ஏதுமில்ல. அப்புறம் வந்து பார்க்கிறேனே. இப்ப நேரம் சரியில்ல.”

“ஏம்ப்பா, சொல்ல வேண்டியதை சொல்லாம, ‘அப்புறம் வந்து சொல்லுறேன்’ன்னு சொல்றே? நீ அப்புறம் வந்தாலும், இன்னைக்கு மாதிரி நிலைமை இருக்கும்னு என்ன நிச்சயம்?”

“அண்ணே, அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. சரி, நீங்க இவ்வளவு தூரம் கேட்கறதால சொல்லுறேன்.

“என் மவ பெரிய பொண்ணாயிட்டா. இப்ப இருக்கிற நிலைமையில சொந்தத்தையெல்லாம் கூப்பிட்டு விமரிசையா சடங்கு செய்ய முடியாது. ஆனா வீட்டுக்காரி, எப்படியாவது மவ சடங்கை விமரிசியா செய்யணும்’ன்னு நினைக்கிறா.

“அதான் உங்ககிட்ட கொஞ்சம் பணம் வாங்கிட்டு போகலாம்னு நினைச்சு வந்தேன்.”

“சரி குழந்தைவேலு, எவ்வளவு எதிர்பார்க்கிற?”

“அண்ணே, பதினைஞ்சாயிரம்… இல்ல, இருபதாயிரம் இருந்தா நல்லா விசேஷத்தை முடிச்சிடலாம்ண்ணே.”

“இதோ பார் குழந்தைவேலு, இப்பெல்லாம் பணத்தை வாங்கிட்டு கம்பி நீட்டிடறாங்க. அதனால தண்டல்தான் வசதியா இருக்கும். நீயும் இருபதாயிரம் கேட்கிற.

“சரி, வாங்கிக்கோ. ஆனா வெளில எல்லாம் ரெண்டு வட்டி, அஞ்சு வட்டின்னு தர்றாங்க. என்கிட்ட பத்து வட்டி.

“கொடுக்கும்போதே ரெண்டாயிரத்தைப் பிடிச்சுக்கிட்டு, மீதி பதினெட்டாயிரம்தான் கொடுப்பேன்.

“அடுத்த பத்து நாளும் தினமும் ரெண்டாயிரம் உன்னால தர முடியுமா? சரி, உன்னோட ஹோட்டல் கடை வியாபாரமெல்லாம் எப்படி போகுது? சொன்ன மாதிரி தினம் ரெண்டாயிரம், பத்து நாள்ல கொடுத்துடுவியா?”

“அண்ணே, அதெல்லாம் கவலைப்படாதீங்க. கண்டிப்பா தினமும் கொடுத்திடுவேன். ஹோட்டல் கடைதானே நல்லாப் போகுது. இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டா தினம் ரெண்டாயிரத்தை உங்களுக்குக் கொடுத்திடுவேன்,” என்றான் குழந்தைவேல்.

“சரி கணக்கு, இவன் கேட்கிற பணத்தை கொடுத்துடு. வட்டிய எடுத்துட்டு கொடுத்துடு. அப்புறம் மறக்காம ப்ரோ நோட்டுல கையெழுத்தும் வாங்கிக்கோ,” என்றார் கந்தசாமி.

“சரிங்க ஐயா,” என்றார் கணக்கு.

பணத்தைப் பெற்றுக்கொண்டவன் தன் மகள் விசேஷத்தைச் சிறப்பாக முடித்த பின், வழக்கம் போல் ஹோட்டல் லாபத்தை வட்டிக்குக் கொடுத்துவிட்டான்.

இரண்டாவது இரவு, தன் மனைவி வட்சலாவிடம், “ஏண்டி வட்சலா, இன்னைக்கு என்னடி ரவைக்கு?” என்றான்.

அதற்கு அவளிடமிருந்து, “அதான் நீ கெளத்தி ராலுன்னு வாங்கிக் கொடுத்தப்பாரு! வெறும் கஞ்சிதான் வச்சிருக்கேன். இந்த இரண்டு நாளா வீட்டுக்குன்னு என்ன கொடுத்திருக்கே?” என்ற பதில் வந்தது.

குழந்தைவேலுவின் முகம் சுருங்கியது. அவனது மனவோட்டத்தில், ‘அடியே, நீ தானே கடன் வாங்கி விசேஷத்தை நடத்தணுமுன்னு சொன்ன. அதுக்குன்னு இப்படியா தினம் கிடைக்கிற பணத்தை மொத்தமா அவன்கிட்ட கொடுத்துட்டு வர்றது சரியா? பணத்தப் பார்த்தப்ப மட்டும் இருந்த சந்தோஷம், இப்ப பணம் இல்லையேன்னதும் ஏன் மூஞ்சி அஷ்டகோணலா போகுது?’ என்று எண்ணிக்கொண்டான்.

மறுநாள் காலை, விடிந்து விடியாமலே வட்சலாவின் வீட்டுக் கதவைத் தட்டினாள் கோமதி.

“ஏண்டி வட்சலா… கொஞ்சம் கதவைத் திறயேன். முக்கியமான விஷயம் ஒண்ணு சொல்லணும்.”

“யாரது? இதோ வரேன்…” என்று பதில் சொல்லிக்கொண்டே வீட்டுக்குள்ளிருந்து வந்து கதவைத் திறந்தாள்.

“வாக்கா, கோமதிக்கா! என்ன விசேஷம்? விடிந்து விடியாமலேயே வந்திருக்கியே. என்னன்னு சொல்லேன்?”

“ஏண்டி, வட்சலா, உனக்கு விஷயமே தெரியாதா?”

“எதைப் பத்திப் பேசறக்கா நீ?”

“அதான்டி… நம்ம காளி பொண்டாட்டி இருக்காளே, வசந்தி.”

“ஆமாம்… அவளுக்கென்ன இப்போ? அவளை கந்தசாமி ஆட்கள் வந்து தூக்கிட்டுப் போயிட்டாங்களா?”

“ஏன் வந்து, தூக்கிட்டுப் போனாங்களாம்? அவ என்ன தப்பு பண்ணுனா?”

“அடியே, உனக்கு விஷயமே தெரியாதா? அதான் அவ புருஷன் காளி இருக்கானுல்ல… அவன் ஏதோ கந்தசாமியிடமிருந்து கடன் பணம் வாங்கியிருந்தானாம். அதை அடைக்காம வீட்டை விட்டே ஓடிட்டானாம்.”

“அப்படியா சேதி… கந்தசாமியோட அக்கிரமம் வர வர தாங்க முடியல. அவனால பாதிக்கப்பட்ட பெண்களோட எண்ணிக்கையும் கூடிக்கிட்டே போகுது.”

இதை வீட்டினுள் இருந்த குழந்தைவேல் கேட்டுப் பதறிப்போனான்.

‘கந்தசாமி சொன்னதையே செஞ்சுட்டானே…’

அவன் மனசுக்குள் ஒரு பயம் ஒட்டிக்கொண்டது.

“இன்னும் எட்டு நாள் இருக்குது. அந்த ஆளுக்கு தினம் இரண்டாயிரம் தரணுமே. வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி தினமும் கொடுத்தாலும் வீட்டுல நல்ல பேரு இல்ல. இறைவா, ஏன் இப்படி ஒரு இக்கட்டான நிலையில் என்னைக் கொண்டுவந்து விட்ட?” என்று குழந்தைவேல் தனக்குள்ளேயே எண்ண ஆரம்பித்தான்.

வசந்தியைத் தூக்கிவந்தவர்கள், கந்தசாமியின் ஆட்கள் ஒரு பாதுகாப்பான இடத்தில் அடைத்து வைத்திருந்தனர்.

சாயங்காலம் கந்தசாமியின் வருகை இருந்தது. காவலுக்கு இருந்த நபர்களெல்லாம் வெளியே வந்துவிட, கந்தசாமி மட்டும் அந்த அறைக்குள் சென்றார். அரை மணி நேரம் ஆன பிறகு, “ஓ…” என்ற ஒப்பாரிச் சத்தம் கேட்டவுடன், வேலை ஆட்கள் சிரித்துக்கொண்டு தங்களது தலையை ஆட்டினர்.

மீசையை முறுக்கிக்கொண்டு வெளியே வந்த கந்தசாமி, “அவளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கடா. நான் அப்புறம் வந்து பார்க்கிறேன்,” என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

ஊரு முழுக்க இந்தச் செய்தி தீயாய் பரவியது. பலர் பேச ஆரம்பித்தனர். “ஏன்தான் இந்த கந்தசாமி இப்படிப் பண்ணுறாரோ? காசு, பணம் இருந்தா எதை வேண்டுமானாலும் செய்யலாமா? வரமுற வேண்டாமா…” என்று பேசிக்கொண்டனர்.

குழந்தைவேலு நினைத்தான். கடையில வர்ற பணத்தை முழுசா கொடுத்தா வட்சலா கத்துறா. கொடுக்கலேன்னா அவன் நம்மள விடமாட்டான். “இன்னைக்கு எப்படியாவது கொஞ்சமாவது கொடுத்துட்டு வட்சலாவை சமாளிச்சுக்கலாம்,” என்று நினைச்சுக்கிட்டே கடைக்குப் போனான்.

ஆனால், அன்றே கந்தசாமியின் ஆட்கள் வட்டிப் பணம் வாங்க வந்தனர். குழந்தைவேலால் பணத்தைக் கொடுக்க முடியவில்லை.

“அண்ணே… ஒரு நாள் தவணை கொடுங்கண்ணே,” என்று கெஞ்சிக் கேட்டான்.

வந்தவர்களில் ஒருவர் ஓடிப்போய் கந்தசாமியிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு வந்தார்.

“ஒரு நாள் தவணை வேண்டுமானால் கொடுக்கலாம். ஆனா நாளைக்கு நாலாயிரம் ரூபாய் தரணும். அதை அவன்கிட்ட சொல்லிடு,” என்று கந்தசாமி கூறியதாக அந்த வேலையாள் குழந்தைவேலிடம் சொன்னான்.

குழந்தைவேலும், “அப்பாடா… இன்னைக்கு ஒரு பொழுது எப்படியோ கடத்தியாச்சு. நாளைய சங்கதியை நாளைக்குப் பார்த்துக்கலாம்,” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கடையை அடைத்துவிட்டு வீடு திரும்பினான்.

அடுத்த நாள் காலை விடிந்தவுடனே குழந்தைவேலுக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது. நேத்து இரண்டாயிரம் ரூபாயைக்கூட கொடுக்க முடியல. இன்னைக்கு எப்படி நாலாயிரம் ரூபாய் கொடுக்கப்போறோம்? என்ற யோசனையுடனே கடைக்கு வந்தான்.

பண நெருக்கடியால் ஏதேதோ எண்ணங்கள் அவனது மனதில் ஓட ஆரம்பித்தன. இன்னைக்கும் நம்மால கொடுக்க முடியலேன்னா, காளிக்கு வந்த கதிதான் நமக்கும் வருமா? என்று நினைத்தவுடன் உடம்பே சிலிர்த்தது. அது மட்டும் நடக்கக் கூடாது.

இந்த ஆள் இந்த ஊர்ல இருக்கிற பெண்களோட வாழ்க்கையையே நாசம் பண்ணிக்கிட்டு இருக்கான். பெரிய மனுஷன்னு ஒரு போர்வை போத்திக்கிட்டு, பண பலத்தால எல்லாரையும் விலைக்கு வாங்கி தன் கைப்பிடிக்குள்ள வைத்திருக்கான். இவனை இப்படியே விட்டுடக் கூடாது, என்று ஒரு மனசு சொல்லியது.

ஆனால் இன்னொரு மனசு, உன்னால அவனை ஒண்ணும் பண்ண முடியாது. அவன் எவ்வளவு பெரிய ஆளுன்னு உனக்கே தெரியுமே, என்று பயத்தை விதைத்தது.

அப்போதுதான் சின்ன வயசுல தன் அம்மா சொன்னது அவன் நினைவுக்கு வந்தது.

“கூடுமானவரைக்கும் யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது. ஆனா அநீதியைக் கண்டா ஒதுங்கி ஓடக்கூடாது. அதை எதிர்த்து நிக்கணும். பயந்து ஒழியக்கூடாது. ‘பாம்பைக் கண்டா படையும் நடுங்கும்’ன்னு சொல்வாங்க. ஆனா அந்தப் பாம்பே நம்மைக் கொத்த வருதுன்னா, அதைக் கொல்லவும் தயங்கக்கூடாது,” என்று அவள் சொன்ன வார்த்தைகள் அவன் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்தன.

ஒரு கணம் வட்சலாவின் முகம் அவன் கண்முன் வந்து மறைந்தது. நான் இல்லாம போனா, மவள வச்சுக்கிட்டு இவ எப்படிப் போராடுவாளோ? ஹோட்டலை அவ ஒருத்தி எப்படிச் சமாளிப்பா? என்ற எண்ணமும் அவன் மனதைக் கடந்து போனது.

குழந்தைவேலின் மனசுக்குள் கொதித்துக்கொண்டிருந்த ஆத்திரத்தை இனி அவனால் அடக்க முடியவில்லை. இடுப்பில் ஒரு பட்டாக்கத்தியை சொருகிக்கொண்டு, ஓட்டமும் நடையுமாக கந்தசாமியின் தோட்டத்தை அடைந்தான்.

“அண்ணே… அண்ணே… கந்தசாமியண்ணே…” என்று குரல் கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தான்.

“வாப்பா குழந்தை… என்ன இந்தப் பக்கம்? நீ இந்தப் பக்கமெல்லாம் வர மாட்டியே! என்ன, பணத்தைக் கொடுக்க வந்தியா?” என்று கேட்டார் கந்தசாமி.

“அண்ணே… அது வந்து…”

“என்னப்பா, சொல்ல வந்ததைச் சொல்லு. நேரம் ஆகுதுல.”

“அண்ணே… நான் சொன்ன மாதிரி என்னால பணத்தைக் கொடுக்க முடியல. எனக்கு இன்னும் கொஞ்சம் தவணை வேணும்.”

“ஏண்டா… எவ்வளவு தவணை கொடுக்கிறது? வட்டிக்கு வாங்குறப்பவே யோசிக்க வேண்டாமா, நம்மால திருப்பிக் கொடுக்க முடியுமா இல்லையான்னு?”

“சரி… வேணும்ன்னா, இப்படி பண்ணு. உன் கடையை என் பேருக்கு மாத்திக்கொடுத்துடு. அதுவும் முடியலேன்னா… உன் பொண்டாட்டியை என்னோட அனுப்பி வச்சிடு…” என்று கந்தசாமி அலட்சியமாகச் சொன்னார்.

அந்தச் சொல் குழந்தைவேலின் நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது. கந்தசாமியை நேராகப் பார்த்து, “உன்னோட வசனத்தையே உன்னிடத்திலேயே சொல்லுறேன்,” என்று கத்தினான்.

“ஊர்ல எவனுக்காவது தில்லு இருந்தா என்கிட்ட மோதி பாருங்கடான்னு அடிக்கடி சொல்லுவியே… இதோ வந்துட்டேன்டா. தனியா வந்திருக்கேன்டா. இப்ப உன்னால என்ன பண்ண முடியுதுன்னு பாரு.

“ஊர்ல இருக்கிற ஏழைகளோட வயித்துல அடிச்சு, பெண்களோட வாழ்க்கையைச் சீரழிச்ச உன்னை மாதிரி ஆளு உயிரோட இருக்கிற வரைக்கும் இந்த ஊருக்கு விமோசனமே கிடையாதுடா!” என்று ஆத்திரத்தில் கத்தினான்.

“இனி உன்னால ஊர்ல யாருக்கும் தீங்கு வரக் கூடாது. காலச் சுத்தின பாம்பை சும்மா விடக் கூடாது என்பார்கள். அதான் நானும் இந்த முடிவுக்கு வந்துட்டேன்,” என்று சொல்லிக்கொண்டே இடுப்பிலிருந்த பட்டாக்கத்தியை உருவிய குழந்தைவேல், ஒரு கணத்தில் முன்னேறி கந்தசாமியின் நெஞ்சில் குத்தினான்.

அடுத்த நொடியே கந்தசாமி தடுமாறி கீழே சரிந்தார். “பூச்சி, பொட்டுக்குக்கூட தீங்கு நினைக்காத என்னை, இந்தப் பாவத்தைச் செய்ய வச்சுட்டியே…” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டபடியே குழந்தைவேல் காவல் நிலையத்தை நோக்கி நடந்தான். — பாலமுருகன்.லோ

Series Navigationகனடாவில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் டோனால்ட் ட்ரம்பின் காலங்களில் ஆடம் ஸ்மித்தின் மகத்துவம்