This entry is part 7 of 9 in the series 2 ஆகஸ்ட் 2026
ஆர் சீனிவாசன்
சில குரல்கள் நூற்றாண்டுகளுக்கு முன் அமைதியானாலும் இன்றும் ஓயாத எதிரொலிகளாக ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. கூச்சல் குழப்பங்களுக்கு மேலே அந்த எதிரொலிகள் எச்சரிக்கையாக, அசரீரியாக, தர்க்கக் குரலாகக் கூர்மையாகக் கேட்க விரும்புவோரின் சிந்தையில் ஒலிக்கும். ஆடம் ஸ்மித் எழுதி 1776-ஆம் ஆண்டு வெளிவந்த 'நாடுகளின் பெருஞ்செல்வம்' (அதிகாரப்பூர்வமாக: An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations, சுருக்கமாக Wealth of Nations) அத்தகைய ஒரு குரல். நாடுகளுக்கிடையே மட்டுமின்றி ஒரே நாட்டிற்குள் நடக்கும் வர்த்தகத்தை வழிநடத்த உதவும் கொள்கைகளை சுமார் இருபது வருட புறநிலை பார்வையுடன் அவதானித்ததின் தொகுப்பே 'நாடுகளின் பெருஞ்செல்வம்'. தற்போது உலகமெங்கும் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் பொருளாதார விதிமுறைகளின் மூலம் இப்படைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே உருவானது எனச் சொல்வதில் தவறில்லை.
ஸ்மித்தின் உருவாக்க அவசியத்தைப் புரிந்துகொள்ள பதினெட்டாம் நூற்றாண்டிற்கு முன் வந்த சில நூற்றாண்டுகளின் நிகழ்வுகளையும், சிந்தனை முன்னடைவுகளையும் கவனிக்க வேண்டும். ஐசக் நியூட்டன் 1687-இல் புவியீர்ப்பு விதியைப் வெளியிட்டதின் பின்விளைவாக, இயற்கை நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள அறிவியல் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ளும் இயக்கம் உருவானது; இது 1764-களில் ஜேம்ஸ் வாட்டின் நீராவி இயந்திரத்தின் கண்டுபிடிப்பிற்கு காரணமாகி, இங்கிலாந்தில் தொழிற்புரட்சி வெடித்து, இங்கிலாந்தை பெருஞ்செல்வம் படைத்த நாடாக மாற்ற வழிவகுத்தது. புதிதாகக் கிடைத்த செல்வத்தை மேலும் பெருக்க இயற்கை தர்க்கங்கள் அடங்கியுள்ளனவா என ஆராய அதிக காலம் ஆகவில்லை. ஸ்மித் அந்தத் தேடலில் முன்னிலை வகுத்தார். 'நாடுகளின் பெருஞ்செல்வம்' ஐந்து புத்தகங்களாக சுமார் எழுநூறு பக்கங்களில் விரிந்துள்ள பெரும் காவியம். அதன் சுருக்கத்தைப் படிக்க முயலும்போதே வாதச் சூழலில் சிக்கிவிடுவது சுலபம். அதிக நேரம் இல்லாதவர்கள் மைகேல் சுக்ரூ (Michael Sugrue) வின் அருமையான ஸ்மித் அறிமுகச் சொற்பொழிவை யூடியூபில் காணலாம்.
தற்போதைய அமெரிக்க வர்த்தக அணுகுமுறைகளை ஸ்மித்தின் முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகினால் அவற்றினுள் அடங்கியுள்ள முரண்களைக் காண முடியும். ஸ்மித்தின் முதல் புத்தகத்தில் கூறப்படும் முதல் விதி, உழைப்புப் பிரிவினை (Division of Labour). ஸ்மித்தின் காலத்தின் மெர்கன்டிலிசம் (Mercantilism), செல்வத்தைத் தன்வசப்படுத்த வேலை வித்தைகளை ஒரு ஆசான் இன்னொருவருக்குக் கற்பிக்கப் பல தடைகளை விதித்தது. உதாரணமாக, அக்கால ஆங்கிலேய ஊசி உற்பத்திச் சாலையில் ஒருவரே உலோகத்தை உருக்குவதிலிருந்து அதனை இழுத்து, வெட்டி, கூர்மை செய்து பிறகு விற்பனையும் செய்கிறார். மாறாக, ஸ்மித்தின் சிந்தனையின்படி உற்பத்திச் சாலையில் இந்த வேலையை வரிசைப்படுத்தி, பணிக்கு ஒருவரை அமர்த்துவதன் மூலமாக உற்பத்தி பெருகும் என்றார் ஸ்மித். தற்போது இந்த வரிசை உற்பத்தி கோட்பாடு சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இதன் மூலம் ஸ்மித்தின் அவதானிப்பில் வெளிப்படுகிறது. பொதுவாக அமெரிக்காவில் தீவிர உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளுக்கு, உதாரணமாக ஆடை உற்பத்தி அல்லது தோட்ட வேலை போன்றவற்றிற்கு, ஹிஸ்பானியர்கள் அல்லது ஆசியர்கள் அதிகம் வேலையில் அமர்த்தப்பட்டனர். ட்ரம்பின் வெள்ளை தேசியக் கொள்கையினால் பெரும்பாலும் இப்படிப்பட்டவர்களுக்கு நுழைவனுமதி மறுக்கப்பட்டு, அதன் விளைவாக ஒருவரே இயந்திர உதவியாலோ அல்லது உள்நாட்டு ஊழியத்தை (அதிக செலவில்) உபயோகித்தோ செய்ய வேண்டிய நிலையில், உற்பத்திச் செலவு கூடியதால், பணவீக்கம் முதல் முறையாக நான்கு விழுக்காட்டைத் தொட்டு இப்போது தணிந்துள்ளது.
ஸ்மித்தின் முதல் விதிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், வேலைப் பிரிவினையால் பாட்டாளிகள் சர்கஸின் ஒரு வித்தை குதிரை போல மாறிவிடுவார்கள் என்றனர். உதாரணமாக, ஊசி கம்பியை இழுக்கத் தெரிந்தவன் அந்தப் பணியின் முன்னே உலோகத்தை உருக்கவோ அல்லது அதற்குப் பின் வரும் கூர்மை செய்யும் பணியையோ செய்யத் தெரியாதவனாகிவிடுவான் என்றனர். உழைப்புப் பிரிவினையின் எதிர்ப்பு வேறு புறமிருந்தும் வந்தது. ஒருவேளை ஊசி சந்தை தேய்ந்து ஆலைகள் மூட வேண்டிய கட்டாயம் வந்தால், இத்தகைய வேலையாட்களுக்கு வேறு தொழில் தெரியாமல் நிற்கும் அபாயம் உள்ளது என்றனர். 'ஓர் வேலை வித்தகர்கள்' என கௌரவமாகச் சொல்லிக்கொள்பவர்கள் உண்மையில் 'தொழிற்முறை முட்டாள்கள்' என்பதை ஒப்புக்கொள்ளும் ஸ்மித், உற்பத்தி பெருக்கத்தினால் உண்டாகும் புதிய சந்தையினால் பல ஊசி ஆலைகள் உருவாகி வேலை பெருகவும் வாய்ப்புகள் உள்ளன என்கிறார். ஸ்மித்தின் முதல் விதி இப்போதுள்ள பொருளாதாரத்தில் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும்.
ஸ்மித் முன்வைத்த உழைப்புப் பிரிவினையினால் பெண்கள் முதல்முறையாக ஆலைகளில் பணியாற்றும் வாய்ப்பு ஏற்பட்டது. ஒருகாலத்தில் கடும் உழைப்பின் தேவை இருந்த வேளைகளில் ஆண்கள் மட்டுமே இருந்த நிலையில், தொழிற்புரட்சியின் மூலமாக, இயந்திரங்களின் உதவியினால் உடல் உழைப்பு சுலபமடைய, பெண்கள் ஆலைகளில் வேலை பெற முடிந்தது. இதனால் குடும்ப நிதி நிலைமை பெருகி, நாட்டின் பொருளாதாரம் விரிவடைந்தது. வேலைப் பிரிவினையின் பின்னடைவுகளைவிட அதன் பயன்கள் அதிகம் என்பதை உணர்ந்தார் ஸ்மித்.
ஸ்மித்தின் இரண்டாம் முக்கிய அவதானிப்பு, அரசின் தலையீட்டைக் குறித்தது. சுதந்திர சந்தையில் அரசு தலையீடு மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்பதே ஸ்மித்தின் வாதம். தேவை - இருப்பு ஊடாட்டத்தின் எதிர்வினையாக ஏற்படும் விலை ஏற்றத்தாழ்வுகளுக்கு அரசு நடுத்தர நிலையை வகுக்க வேண்டும் என்கிறார். முக்கியமாக இறக்குமதி வரிகளை உயர்த்தி, உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளக் கூடாது என்கிறார் ஸ்மித். உதாரணமாக, ஸ்காட்ச் விஸ்கி ஸ்பெயின் நாட்டிலிருந்து மலிவாகவும் அதே நேரத்தில் தரத்தில் உயர்ந்திருப்பதாலும், இங்கிலாந்து அந்த மதுவிற்கு அதிக இறக்குமதி வரி விதிப்பது தவறு என்கிறார். இந்த வாதங்கள், தற்போதைய இணைந்த சந்தைகள், சுதந்திர சந்தைப் பொருளாதாரம் போன்ற கோட்பாடுகளுக்கு அடித்தளமாகும். ஸ்மித், 'சுயநலம் கொண்ட நபர்கள்' (Self-interested individuals) தங்கள் லாபத்தையும் பொருளுடைமையையும் பெருக்க மேற்கொள்ளும் முயற்சிகளாலேயே நாட்டின் பொருளாதாரம் முன்னேறும் என்ற அவதானிப்பை முன்வைக்கிறார்.
ஸ்மித்தின் மேற்கண்ட இரண்டாம் அவதானிப்பு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. முதலாளித்துவ சந்தையில் எலான் மஸ்க் போன்ற டிரில்லியனர்கள் (ஸ்மித்தின் Self-interested individuals) உருவாக தலையீடில்லா சந்தை துணைபோகும் எனவும், அத்தகைய 'சுயநலம் கொண்ட' நபர்கள் கையில் சிக்கி சந்தை ஏகாதிபத்தியத்திற்கு உள்ளாகும் என்றும் கூறப்பட்டது. இது ஓரளவுக்கு உண்மையும் கூட. அரசின் தலையீட்டு வரம்புகளை அல்லது கொள்கைகளை பொருளாதார முன்னேற்றத்திற்காக சரியாக அமைப்பது எப்படி என்பது இப்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது. சீனா போன்ற நாடுகள் அமெரிக்க டாலருக்கு எதிராக தங்கள் செலாவணியை செயற்கையாக நிர்ணயிக்கின்றன, இத்தாலிய நிறுவனங்கள் தங்கள் உரிமைதாரர் பங்கு விகித விவரங்களை வெளியிடத் தேவையில்லை. உள்நாட்டு நிறுவனங்களை அயல்நாட்டுப் போட்டியிலிருந்து பாதுகாப்பது பொருளாதார முன்னேற்றத்திற்குத் தடை என்கிறார் ஸ்மித். மன்மோகன் சிங் - நரசிம்ம ராவ் தாராளமயமாக்கலுக்கு முன் இந்தியப் பொருளாதாரம் பெரும்பாலும் தீவிரக் கட்டுப்பாட்டுச் சந்தையாகவே இருந்ததை எல்லோரும் அறிவர். சுதந்திரச் சந்தையின் எதிர்ப்பாளர்கள், எலான் மஸ்க் ஆரம்ப காலங்களில் சந்தித்த தோல்விகளையும், அவர் நிறுவனங்கள் கொடுக்கும் உன்னத படைப்புகளையும் மறந்து அவரது சந்தை மதிப்பை மட்டுமே பார்க்கின்றனர் என்பதே குறை. அது ஒருபுறம் இருக்க, சந்தை சாதுர்யத்தால் தன் சொந்த மதிப்பை பல மடங்கு உயர்த்தி கொண்டவர் டிரம்ப் ஒருவரே. கடந்த சில மாதங்களாக டிரம்ப் விதித்திருக்கும் எதிர் வரிகள், உலகச் சந்தையில் ஏற்படுத்தியிருக்கும் அலைகள் ஓய இன்னும் நேரம் பிடிக்கும்.
‘நாடுகளின் பெருஞ்செல்வம்’ நூலில் ஸ்மித் கூறும் கோட்பாடுகளுக்கு அவர் எந்தவித புள்ளிவிவர அல்லது கருதுகோள் ரீதியான நிரூபணங்களையும் முன்வைக்கவில்லை. அவை முழுமையாக நேர் அவதானிப்புகளாகவே அமைகின்றன. நவீன பொருளாதார நிபுணர்கள், ஸ்மித்தின் அவதானிப்புகளை ஏற்றுக்கொள்ளும் அதே சமயம், சில முக்கியமான எதிர்வாதங்களையும் முன்வைக்கின்றனர். முதலாவதாக, சமூகங்களுக்கிடையே மனித வளம் சமமாக இருப்பதில்லை. ஐரோப்பாவில் மையம் கொண்ட மறுமலர்ச்சி இந்தியக் கரைக்கு பதினெட்டாம் - பத்தொன்பதாம் நூற்றாண்டு வங்காளத்திற்கு வந்தடைந்தபோது, இந்தியா முழுதும் ஆங்கிலேய மன்னராட்சியின் பிடியில் இருந்தது. அதிலும் வங்காள மறுமலர்ச்சி, அடிப்படையில் ஒரு சமூக அரசியல் இயக்கமாகவே இருந்ததேயன்றி ஓர் அறிவியல் வேட்கையாக அமையவில்லை. முக்கியமாக இந்நூல் வெளிவந்த அதே காலத்தில் பிளாசி போரில் சிராஜ் உத்-தௌலாவை வென்று வங்காளத்தைக் கைப்பற்றினார் ராபர்ட் கிளைவ் துரை; மேலும் இந்நூல் வெளிவந்த அதே ஆண்டு அமெரிக்க உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்கள் வென்று அமெரிக்கா சுதந்திரம் அடைந்தது. அமெரிக்கா, இந்தியா இரண்டும் அக்காலத்தில் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தும், அமெரிக்காவைப் பார்த்த அதே கண்ணோட்டத்தில் இந்தியாவை ஸ்மித் பார்க்கவில்லை (இந்தியா மற்றும் மொராக்கோவை 'Barbarous Nations' என்றே குறிப்பிடுகிறார்).
கடைசியாக ஸ்மித் சொல்லும் 'Self-interested Individuals' என்பதை நடைமுறைப்படுத்தினால், உருவாகும் மனிதன் சமூகத்தில் விசித்திர மனிதனாகவே பார்க்கப்படுவான். உண்மையில் அத்தகைய மனிதன் ஒவ்வொரு நிமிடமும் எந்த வித மனித உணர்ச்சிகளின் கட்டுக்குள்ளும் சிக்காமல், பொருளுடைமையைப் பேருக்கும் ஒரே நோக்கத்துடன் செயல்படும் தானியங்கியாக மாறிவிடுவான். பொருளாதார நிபுணர்கள் அத்தகைய மனிதனுக்கு 'ஹோமோ எகனாமிகஸ்' (Homo Economicus) என்ற பெயரை கொடுத்துள்ளனர். ஒரு சாமானிய மனிதன் பணத்தை எப்படிச் செலவிடுவான் என்பதை ஒப்பிட இது ஒரு முக்கியமான கருதுகோள். ஹோமோ எகனாமிகஸ் என்பது ஜெர்மன் தத்துவவாதி ஷோபனாவ்ரேர் முன்மொழிந்து, அவருக்குப் பின் நீட்சேயால் 'உபெர்மென்ஸ்' (Ubermensch) என குறிப்பிடப்பட்ட ஓர் கருதுகோளுக்குச் சமம். நீட்சே உபெர்மென்ஸ்சை ஆசை, பந்தம் போன்றவற்றைத் துறந்த ஓர் மனிதராகப் படைத்தார். நடப்பில் ஹோமோ எகனாமிகஸ் மற்றும் உபெர்மென்ஸ் இருவரும் காணக் கிடைப்பதில்லை. ஸ்மித் பணத்தைப் பற்றிப் பேசும்போது ஒரு முக்கியமான அவதானிப்பைக் சொல்கிறார். ஓர் மனிதன் பணத்தைத் தேட விரும்புவதில்லை, மாறாக அந்தப் பணத்தின் மூலம் அடையக்கூடிய பொருட்களையோ அல்லது மனநிலையையோ நோக்கமாகக் கொண்டுள்ளான் என்கிறார். இது ஒரு முக்கியமான அவதானிப்பு. பொருட்களின் பரிமாற்ற (Barter Method) முறையைச் செலாவணி முறை வென்றதற்கு இதே காரணம். பசித்த கொல்லனிடம், தாகத்தால் தவிக்கும் குயவனுக்குக் கொடுத்து வாங்க எதுவுமில்லை என்பது இந்த வாதத்தின் நடைமுறை விளக்கம்.
மேலும், ஸ்மித் தொழிற்சாலை உரிமையாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு, ஊழியர்களின் நலனைப் புறக்கணித்து, லாபத்தை மட்டும் மையக் குறிக்கோளாக வைத்து வணிகத்தை நடத்துவர் என நினைத்தார்.
There are a few workers who own all the stock needed for their own production activities, but this is uncommon. Usually, workers are employees of other people, who own productive assets. How the product is shared, then, is a matter of contract between workers and employers: but the employers usually have the upper hand. Since there are fewer of them, they can combine more easily to rig the labour market and keep down wages. They have greater resources with which to sit out a trade dispute. And while the law forbids combinations of workers, the collusion of employers is everywhere.
இது ஒரு பலவீனமான அவதானிப்பு. உரிமையாளர்கள் ஒரே விதமாக யோசிக்க வேண்டியதில்லை. மேலும் இங்கிலாந்து அக்காலத்திலேயே நாடாளுமன்ற ஜனநாயகமாக இருந்த நிலையில், எண்ணிக்கையில் குறைவான உரிமையாளர்களின் தேவைகளுக்கு மட்டுமே அரசு செவிசாய்க்கும் என நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஸ்மித்தின் கோட்பாடுகளில் இன்னொரு குறைபாடு அதன் எளிமைத்தனம். நவீன சந்தைகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கும் விஷயங்களான போர், பேரிடர், உள்கட்டமைப்பு, சந்தை மற்றும் உற்பத்தி ஆலைகளுக்கு இடையே இருக்கும் தூரம், வானிலை, வாடிக்கையாளர்களின் மனநிலை (எல்லோரும் ஹோமோ எகனாமிகஸ் ஆகமாட்டார்கள்), முக்கிய நிகழ்வுகள் போன்றவற்றின் தாக்கங்களை ஸ்மித் ஆராயவில்லை. பாடநூல் கோட்பாடுகளுக்கும் நடைமுறைக்கும் என்றுமே இடைவெளிகள் உண்டு.
ஸ்மித்தின் அவதானிப்புகள் வெறும் பொருளாதாரத்தைப் பற்றியது மட்டுமல்லாமல் நீதி, பொதுப்பணி, வரிவிதித்தல், கல்வி போன்ற அனைத்துத் துறைகளைப் பற்றியதுமாகும்.
ஸ்மித் முழுக்க முழுக்க முதலாளித்துவ பொருளாதாரத்தின் ஆதரவாளர் என்ற தவறான முடிவுக்கு வருவது எளிது. அதற்கு நேர் மாறாக, ஸ்மித் பாட்டாளிகளின் மீது மிகுந்த அக்கறை காட்டியுள்ளார்.
Bengal is also a fertile country, but poverty is so rife that hundreds of thousands of people die of hunger each year. Clearly, the national product that is needed to maintain the labouring poor is in fact shrinking (for which we can blame the oppression of the East India Company).
அத்துடன் நிற்காமல் தற்போதைய டிரம்ப் அரசின் கொள்கைகளுக்கு விமர்சனமாக,
There might be a case for retaliatory import tariffs or prohibitions as a way of forcing other countries to drop their trade restrictions against us. It is up to those insidious and crafty animals, the politicians, to negotiate and decide if such a policy is likely to work. But if there is no chance of it working, why add further injury to ourselves by imposing tariffs?
‘நாடுகளின் பெருஞ்செல்வம்’ நூலுக்குப் பல பொருளுரைகள் எழுதப்பட்டுள்ளன. சில சிந்தனைகளின் நடைமுறைப்படுத்தல், படைப்பாளியின் எண்ணங்களுக்கு ஏற்ப அமையாது. ஸ்மித்தின் கோட்பாடுகள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவும், அதனைப் பெருக்கவும் வழிமுறைகளைத் தரும் அதே சமயம், இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இயங்கிவரும் பல பொருளாதார முறைகளை எதிர்பார்க்கவில்லை. தற்போது நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களைப் போல இயங்கிவரும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் மதிப்பு எதற்காக சில ஆயிரம் கோடிகள் இருக்க வேண்டும் என்பதை ஸ்மித்தின் பொருளாதாரக் கோட்பாடுகளால் எண்பி காட்ட முடியாது.
‘நாடுகளின் பெருஞ்செல்வம்’, உலக வரலாற்றில் ஓர் பெரிய நில அதிர்ச்சி. முக்கியமாக இந்நூலின் நேரடித் தாக்கம் சுமார் நூறு வருடங்கள் பின் எழுதப்பட்ட ‘தாஸ் காப்பிடல்’ (1867)-ன் வடிவமைப்பிற்கு முக்கிய பங்காற்றியது. ஸ்மித் மற்றும் மார்க்ஸ் சமூகத்தைப் இருவேறு கோணங்களிலிருந்து பார்த்தனர். ஸ்மித் பொருளாதாரம் மூலம் பாட்டாளிகளின் வாழ்வாதாரம் உயரும் என்றார்; மார்க்ஸ் நேர் மாறாக சமூகப் புரட்சியின் மூலமே பாட்டாளிகளின் நிலை உயரும் என்றார். ஒன்று தர்க்கச் சித்தாந்தம், இன்னொன்று லட்சியவாதப் போராட்டம். உழைக்க கரங்கள் மட்டுமே உபயோகிப்பதால் உண்ணும் உணவின் அனைத்துப் போஷாக்கும் கரங்களுக்கு மட்டுமே போவதில்லை; இருந்தும் கரங்கள் இல்லையேல் மனிதன் மரமாகிவிடுவான். ஸ்மித், மார்க்ஸ் இருவரும் ஒரே இலக்கையே அடைய விரும்பினார்கள், முறைகள் மட்டுமே மாறின.