This entry is part 2 of 9 in the series 2 ஆகஸ்ட் 2026

சோம. அழகு

திருமண வாழ்வையும் குடும்பக் கட்டமைப்பையும் உடைக்கும் சுத்தியலாகப் பெண்ணியம் கை காட்டப்படுகிறது. ஆனால் உண்மையில் அந்தச் சுத்தியல் patriarchy மற்றும் misogynyயால் ஆனது. பெண்ணுக்கான வெளியும் உரிமைகளும் தேவை இல்லாத ஆணிகளாகப் பார்க்கப்பட்ட(/பார்க்கப்படும்) சூழல்களில் அந்தச் சுத்தியல் சற்றும் பாவம் பார்க்கவில்லை. எனவே இப்போது நிஜமாகவே பெண்ணியம்தான் சுத்தியல் என்றால் இருந்துவிட்டுப் போகட்டும். அடி ஓங்கி விழட்டும்!

ஏன் இவ்வளவு கோபம் திடீரென்று? இப்போதான் நிறைய மாறிவிட்டதே? இல்லவே இல்லை என்று முகத்திலறைந்து அவ்வப்போது சனம் நினைவூட்டிக் கொண்டேதான் இருக்கிறது. இன்றும் கூட இடுங்கிய பார்வையும் குறுகிய மனப்பான்மையும் கொண்ட சல்லிகள் மிகச் சாதாரணமாக நம்மைச் சுற்றியே ஜீவித்துக் கொண்டிருக்கின்றன.

இப்போது மிகவும் நாகரிகமடைந்து விட்டதாகவும் (அதாவது வேட்டியில் இருந்து காற்சட்டைக்கு மாறியிருக்கிறார்களாம்!) முன்னேறி விட்டதாகவும் பீற்றிக் கொள்ளும் இதே சமூகத்தில் இன்னமும் வெகுவாகப் பழைய கறைகள் வெட்கமின்றி தென்படுகின்றனவே? Patriarchy இப்போதும் தன் கோரப் பற்களைக் காட்டிச் சிரித்தபடியும் புருவங்களை நெறித்து முறைத்தபடியும் கழுத்தைச் சுற்றிய பாம்பாக நெளிந்து கொண்டுதானே இருக்கிறது?

 திருநெல்வேலி சைவ வேளாளர்(காலி பெருங்காய டப்பாக்கள்!) திருமணச் சந்தையில் இதை அப்பட்டமாகக் காணலாம். இந்த விளங்காதவர்களைப் போலவே தமிழகத்தில் பல பிரிவுகள் இருப்பார்கள். யார் யார் என தெரிந்தவர்கள் எனக்கும் தெரியப்படுத்தவும். “பாத்தியா! இது எல்லா இடத்துலயும் இருக்குறதுதான்” என்ற நியாயப்படுத்தும் தொனி எல்லாம் வேண்டாம். எல்லா கழிசடைகளையும் நோக்கிக் காறி உமிழ்ந்து அருவருக்கத்தான் கேட்கிறேன்.

சரி இப்போது கொஞ்சம் டப்பாக்களைப் புரட்டிப் போட்டுத் தட்டுவோம், வாருங்கள்! 

‘சில’ (இந்தச் ‘சில’வற்றிலேயே பலரும் இருக்கின்றனர்!)  மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரின் பொருளாதார நிலையையும் சமூகத்தில் அவர்களது அந்தஸ்தையும் நன்கு புலன் விசாரணை செய்து துப்புத் துலக்கிக் கண்டுபிடித்த பின்,

“எப்படியும் நாங்கள் கேட்காமலேயே நிறைய செய்யத்தான் போகிறீர்கள். எனவே அதை வாய்விட்டுக் கேட்டு எங்களது (இல்லாத!) மரியாதையைக் குறைத்துக் கொள்ள மாட்டோம். அதனால் அதில் நாங்கள் பெருந்தன்மையாக உங்கள் விருப்பத்திற்கு விட்டு விடுவதாகக் காண்பித்துக் கொள்வோம். ஆனாலும் மாப்பிள்ளை வீட்டார் என்ற பெருமையை நிலை நாட்ட ஏதாவது ஒன்றைச் சொல்லி வைப்போம்” என்பதைச் சொற்மாற்றம் செய்து,

“பொண்ணுக்கு என்ன செய்வீங்களோ அது உங்க விருப்பம். மற்றபடி கல்யாணத்தை மட்டும் நல்லா பெருசா கோலாகலமா திருவிழாவா…. (போதும்! போதும்! லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது!) நடத்திருங்க” என இன்றும் வாய் விட்டுக் கேட்பது நவீன பிக்ஷாம் தேகி அல்லாமல் வேறென்ன?

            இவ்வாறான நவநாகரிகப் பிச்சையெடுப்பு (என்ன? இச்சொல் கடுமையாக இருக்கிறதோ? கொழுப்பெடுத்துப் போய் கேட்பவர்களுக்கே உறுத்தவில்லை. தவறென்று சுட்டிக் காண்பிக்கும் நான் எதற்கு நெளிய வேண்டும்?)  முடிந்து கல்யாண வேலைகளின் அடுத்தடுத்த கட்டங்களில் “அஞ்சு மூஞ்சி குத்துவெளக்கு ஒண்ணு பெருசா குடுத்து விட்டுருங்க”, “கல்யாணத்துல கச்சேரி இருந்தா நல்லாருக்கும்”, “தாம்பூலப் பையில தங்கத்துல தக்காளி ஒண்ணு போட்டுருங்க”….. – கோரிக்கை என்னும் முலாம் பூசப்பட்ட உத்தரவுகளை ஒவ்வொன்றாகப் படு குள்ளநரித்துடன் சொருகுவார்கள். நல்ல விமரிசையாகச் செய்யும் பெண் வீட்டாரிடம் கூட வாய் விளைந்து எதையாவது கேட்டு வைத்துத் தமது ஈனப் புத்தியை வெளிக்காட்டுவதில் என்ன இன்பமோ?

செலவழிக்கப் போவது என்னவோ பெண் வீட்டுக்காரர்கள்தாம். ஆனால் ஆடம்பரத்தின் அளவை மனசாட்சியோ மானமோ இல்லாமல் மண(ட)மகன் வீட்டினர் தான் தீர்மானிப்பார்கள். மகனைப் பெற்ற மங்குனிகளுக்கு ஏதோ மகனின் கனவை நிறைவேற்றித் தரும் பெருமிதம்(!) வேறு அதில் அடங்கியிருக்கும். அடேய் வெட்கங்கெட்டவங்களா! ஆசைகள்லாம் அவனவன் காசுல நிறைவேத்திக்கணும். அடுத்தவன் வீட்டு நெய்ல மைசூர்பாகு செஞ்சு திங்க ஆசைபடக் கூடாது. தன் வீட்டுக்கு வரும் பெண் இவ்வளவு கொண்டு வந்தாள் என்பதில் என்ன வெட்டிப் பெருமை? ‘அது ஒன்றும் என் உழைப்பு அல்லவே!’ என்ற அந்த உணர்வே இருக்காதா?

‘அப்போ நாங்க எங்க கருத்து, பரிந்துரை எதுவுமே சொல்லக் கூடாதா?’ – கூடாதுடா! கூடாது! பெண் வீட்டுத் திருமணம் தானே? பெண் வீட்டார் என்ன அளவில் எவ்வாறு நடத்த விரும்புகிறார்களோ அதை ஏற்றுக் கொண்டு செல்வதுதான் குறைந்தபட்ச நாகரிகம். பொருளாதார வசதி அவ்வளவாக இல்லாத மணமகள் வீட்டாரிடம், மணமகன் வீட்டார் “நாங்க வேணா கொஞ்சம் செலவைப் பகிர்ந்துக்குறோம்” என்று செலவை இழுத்துவிட்டு எல்லாம் முடிந்த பின் வாயில் பசையைத் தடவிக் கொண்டு மௌன விரதம் இருக்கும் தந்திரம் எல்லாம் காலங்காலமாக தொன்று தொட்டு வரும் பண்பாடு.

            “இவ்வளவு எல்லாம் கேட்கிறோமே? அதற்கு முதலில் நமக்குத் தகுதி இருக்கிறதா? நாம் யாசித்தவற்றையெல்லாம் செய்யும் அளவுக்கு நமக்கு வக்கு இருக்கிறதா?” என்று கூட யோசிப்பதில்லை மகனைப் பெற்ற மாக்கான்கள். அதற்காக வக்கிருந்தால் கேட்கலாம் என்று பொருள் இல்லை. வாய் கூசாமல் கேட்பவர்களில் வக்கிருப்பவர்களுக்கு வேறு மாதிரியான வாரியலடி வைத்திருக்கிறேன்.

            அன்பளிப்பு (வரனிடம் தட்சணை பெறுவதை மாப்பிள்ளை வீட்டார் இப்படி அழைப்பதுதானே வழக்கம்!) பெற்று மகனை மொத்தமாக விற்ற பிறகும் கூட திருமணம் முடிந்த முதல் ஒரு வருடம் முழுக்க மாப்பிள்ளை வீட்டாருக்குப் பெண் வீட்டார் மாதா மாதம் தவணை செலுத்தும் கண்றாவியான கலாச்சாரத்தின் பெயர்தான் ‘சுருள்’. ஆடி மாதச் சுருள், புரட்டாசி மாதச் சுருள், ஐப்பசி, மார்கழி, சித்திரை, பங்குனி,… என ஒவ்வொரு மாதமும் பெண்ணைப் பெற்ற புண்ணியவான்கள் தாம்பாளத்தில் கனமான பணக்கட்டு வைத்துத் தாம்பூலத்தைத் தூக்கி விடுவார்கள். ஒவ்வொரு பண்டிகைக்கும் துணி மணி, மளிகைப் பொருட்கள், ஒரு பெரிய தொகை என்று வழங்கப்படும் பண்டிகைச் சுருள் தனிக்கணக்கு.

பெரும்பாலும் ராச மகனைப் பெற்றவர்களிடம்தான் தவணை செலுத்தப்படும். ஒருவேளை தப்பித்தவறி சுருள் மருமகனிடம் தரப்பட்டால் கூட அவன் மிகவும் பொறுப்பு பருப்பாகத் தன்னை ஈன்றவர்களிடம் ஒப்படைத்துச் சமூகக் கட்டமைப்பில் கீறல் விழாமல் பார்த்துக் கொள்வான். அவர்களும் சுருளைப் பெற்றுக் கொண்டு ‘காந்தி கணக்கு’, ‘கடலில் போட்டது போல’ போன்ற வழக்கு மொழிகளுக்கு வாழும் உதாரணங்களாகத் திகழ்வர். ‘அப்போ சுருள் பணம் புதிய வாழ்க்கையைத் துவங்கிய பிள்ளைகளுக்குக் கிடையாதா?’ என்றெல்லாம் கூறுகெட்டாப்புல இந்த இடத்துல கேட்டு வைக்கக் கூடாது!

பெண் தேடும் படலத்தின் போது சில ராசமாதாக்கள் “பொண்ணுக்கு அம்மா மட்டும்தான் போல. நாளை பின்ன என் பையன்தான் அவங்களையும் சேர்த்துப் பாக்கணும் போல!” என்று கவலைப்பட்டும், ராசபிதாக்கள் “அவங்க கொஞ்சம் சுமாரான backgroundதான். அவங்க வீட்ல இருந்து பையனுக்குப் பெரிய support எல்லாம் இருக்காது போல. Settle ஆக பெருசா அவங்களால உதவ முடியாது” என்று ஆதங்கப்பட்டும் சில வரன்களைத் தட்டிக் கழிப்பவர்களை இப்போதும் பார்க்கிறேன். ஏன்? இவர்கள் எக்கச்சக்கமாக வாரி இறைத்து உதவி புர்ர்ர்ரிந்து தம் மகனது வாழ்வை முன்னேற்றுவதுதானே? ஓ! மன்னிக்கவும்! காலி டப்பாக்களோ? மறந்துவிட்டேன்!

உலகில் பெண்ணைப் பெற்ற சிரித்த முகத்தவர்கள்(!) அனைவரும் “ஆகா! இவரது மகனுக்குப் பெண்ணும் பொன்னும் கொடுத்து அவனது (என்ன ‘அர்’ விகுதி வேண்டிக்கெடக்கு?) வாழ்வின் தரத்தை உயர்த்தும் உன்னத நோக்கில்தான் நான் வாழ்நாள் முழுவதும் அயராது பாடு பட்டு வருகிறேன். எனக்கு வாய்ப்பளித்து எனது பிறவிப்பயனை அடைய உதவி புரிந்த மகானே! கோடான கோடி நன்றி!” என்று தாவாங்கட்டையில் கை வைத்துத் தவமாய்த் தவமிருந்து காத்துக் கிடக்கிறார்கள் என்று சில ராசபெற்றோருக்கு நினைப்பு!

‘25லிருந்து 30க்குள் இருக்கும் ஓர் ஆணிடம் கடனே இல்லாமல் சொந்தமாக மகிழுந்து, வீடு, வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் ஆகியவை இருக்க வேண்டும்’ என்று ஒரு பெண்ணிடம் இருந்து அநியாயமான எதிர்பார்ப்பு வைக்கப்படும் போது மட்டும் “யம்மாடீ! இப்ப உள்ள பொண்ணுங்க என்னவெல்லாம் கேட்கிறார்கள்?” என்று கோபம் பொத்துக் கொண்டு வந்து பொசுக்கென பொங்கும் சமூகத்தால், ஆண்டாண்டு காலமாக மாப்பிள்ளை வீட்டினர் கேட்டதை/கேட்டுக் கொண்டிருப்பதை சாதாரணமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது! அது எப்படி ஒன்று சரி இன்னொன்று தவறாக இருக்க முடியும்? ஒரு பெண் தன் பெற்றோரிடம் கேட்பது கூட தவறு எனினும் அவள் தனது வருங்கால பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கேட்கிறாள் என்றாவது சமாதானம் கூறலாம். அவள் பெற்றோரிடம் அவள் கேட்பதே குற்றம் எனில் மாப்பிள்ளை வீட்டார் அவள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது அடாவடித்தனம் அயோக்கியத்தனம் இல்லையா? ‘பேராசை’ என்பதெல்லாம் மிகவும் தக்கனியூண்டு சொல்லாகத் தெரிகிறது இவர்களது குணத்தை எடுத்துரைக்க.

             “எந்தப் பிள்ளையா இருந்தா என்ன? எல்லாம் ஒண்ணுதான்” என்று நன்றாக ஆரம்பித்து, “ஆம்பிள பிள்ளைனா குடும்ப வாரிசுன்னு இருக்கும்” என்று வாந்தி எடுத்துதான் முடிப்பார்கள். அசுர வளர்ச்சியில் உலகம் எங்கோ போய்க் கொண்டிருக்கும் இன்றும் கூட எப்படி இவ்வளவு அறிவை வைத்துக் கொண்டு உசுரோடு இருக்கிறார்கள் என்பதைத்தான் நம்ப முடியவில்லை. “DNAதான் தாய்-தந்தை இருவரிடமிருந்தும் குழந்தைக்குச் செல்லும். Mitochondrial DNA என்பதைத் தாயால் மட்டுமே குழந்தைக்குக் கடத்த முடியும். நீங்கள் பேசும் பரம்பரைப்(ancestral lineage) பெருமையை உங்கள் மகனால் கடத்த முடியாது. He is a dead end” என்று விளக்கிச் சொன்னால் மட்டும் இந்த கடைந்தெடுத்த பாலாடைக் கட்டிகளுக்குப்(வெண்ணை!) புரிந்து விடவா போகிறது? சும்மா ‘ஆஆஆண் பிள்ளைகள்’ என்று பீற்றிக் கொள்வது! அது மட்டுந்தானே முடியும்? செய்துவிட்டுப் போகட்டும். பாவம்!

இவர்களது ‘நல்ல பெண்’ என்பதற்கான பொருள் நல்ல படித்த, சிவப்பான, அழகான, பண்புள்ள பெண் என்பதையெல்லாம் தாண்டி மிக முக்கியமான அளவுகோல் ஒன்று வைத்திருக்கிறார்கள்.  எவ்வளவுக்கெவ்வளவு சகிப்புத் தன்மை கொண்டிருக்கிறாள் என்பதன் அளவீட்டில்தான் ‘நல்ல’வும் அடங்கியிருக்கிறது. ஆங்! அந்த நிறத்தைப் பற்றியும் கொஞ்சம் பேசித் தோலுரிச்சுடுவோம். ஒரே வீட்டில் இரண்டு மகன்கள் – ஒருவன் சிவப்பு நிறம், இன்னொருவன் மாநிறம் என்று கொள்க! சிவப்பான பையனுக்கு மாநிறப் பெண் வரன் வந்தால் “அவனுக்கு என்ன கொறச்சல்னு இப்பிடி எறங்கி போகணும்?” என்று கொந்தளிக்கும் அதே வாய் மாநிற பையனுக்கு சிவப்பான பெண் வரும் போது “பையன் கொஞ்சம் நிறம் கம்மி. அதனால பொண்ணுக்கு 10 பவுன் கம்மியா போடுங்க போதும்” என்றா சொல்லப் போகிறது? பையன் கருப்பிலிருந்து சிவப்பு வரை எந்த அளவு நிறத்தில் இருந்தாலும் பெண் மட்டும் வெள்ளைப் பாச்சாவாக இருத்தல் வேண்டும். அந்த வெள்ளைப் பாச்சாக்களால் கழித்துக் கட்டப்பட்ட பின் வருடங்கள் உருண்டோடி விட்ட பதைபதைப்பில்தான் பிற நிறத்தையே ஏறெடுத்துப் பார்ப்பார்கள்.

இவர்களது அதிகப் பிரசங்கித்தனங்களுக்கும் அலப்பறைகளுக்கும் “நீங்களெல்லாம் அடுத்த பிறவியில் சங்கிகளாகவோ தற்குறிகளாகவோ பிறப்பீர்கள்” என சாபமிடலாம் என்று பார்த்தால் இப்பிறவியிலேயே அப்படித்தான் இருக்கிறார்கள். இவர்களது ஆகப் பெரும் பிரச்சனை இப்போது என்னவெனில் “பொண்ணே கெடைக்க மாட்டேங்குது. இப்போல்லாம் பொண்ணுங்க….”……. அதாகப்பட்டது இணையரைத் தெரிவு செய்யும் உரிமை, வேண்டாம் என்று நிராகரிக்கும் உரிமை இப்போது பெண்களுக்கும் இருப்பதே பெரிய பிரச்சனை. மகனைப் பெற்றவர்கள் இப்பவே இந்த வரத்து வர்றீங்களே? அப்போல்லாம் என்னா ஆட்டம் போட்டுருப்பீங்க?

உங்கள் புலம்பலின் முடிவில் அண்டமே பரிதாபப்பட்டு ஒரு வரனை அனுப்பினால் மறு நிமிடமே அவர்களிடம் அடிமை சாசனத்தை எதிர்பார்க்கிறீர்கள். ‘இவ்வளவிற்கும் மடமகன் என்ன செய்து கொண்டிருந்தார்?’, ‘இதெல்லாம் தப்பு. இப்படிக் கேட்பதும் எதிர்பார்ப்பு வைப்பதும் ரொம்ப அசிங்கம்’ என்றெல்லாம் தன் வீட்டினரிடம் எடுத்துச் சொல்ல மாட்டாரா போன்ற இயல்பான கேள்விகள் வரும். அவர் தொடக்கத்திலிருந்து கடைசி வரை மிக்சர் கொறித்தவாறே பெற்றோர் வந்து தாலாட்டித் தொட்டிலில் தூங்கப் போடும் வரை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பார்.

ஊரெலாம் கூடி (மூஊஊஊன்று நாள்!)ஒலிக்கக் கூத்தடித்து

(வரதட்சணை என்னும்)பேரினை நீக்கிப் பணம்என்று பேரிட்டு

மூன்றுநாள் வயிறுபுடைக்கத் தின்று தீர்த்திட்டு

நித்திரை கொண்டு நினைப்பொழிந்தார்களே

கருத்து வேறுபாடுகள் அதிகம் உண்டாகும் இக்காலத்தில் ஒரு திருமணம் எவ்வளவு காலம் நிலைத்திருக்கும் என்றே தெரியாத நிலையில் இந்த ஆட்டம் படாடோபம் எல்லாம் தேவைதானா? அமைதியாக வாழ்க்கையை ஆரம்பித்து விட்டு 10 அல்லது 15 வருடங்கள் கழித்து, ‘வெற்றிகரமாக எங்களால் ஒன்றாகக் குப்பை கொட்ட முடிகிறது. It’s getting tolerable’ என்று அறுவையுரை வழங்கியவாறே திருமண நாளை விமரிசையாகக் கொண்டாடித் தொலைவதுதானே?

கன காலமாக நடப்பவை என்பதால் மட்டுமே இந்த அட்டூழியங்களின் வீரியத்தைக் குறைத்து விட்டோ இன்னமும் எல்லாவற்றையும் சாதாரணப்படுத்திக் கொண்டோ இருக்க முடியாததன் விளைவே என் ரௌத்திரத்திற்குக் காரணம்! தற்போதும் வரதட்சணை கொடுமையால் பெண்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் நடந்துகொண்டு தானே இருக்கின்றன? அதுவே இன்றைய சூழலில் இப்பேசுபொருளின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. உடனே “அப்பாடா! அக்கொடூரங்கள் நடக்கும் வீடுகள் குறித்துதான் குமுறியிருக்கிறாள். நாம் இல்லை!” என்றெல்லாம் ஆசுவாசப்படாதீர்கள். கோரிக்கைகள், உத்தரவுகள் என்றில்லை… வேண்டுகோள்கள் என்ற பெயரில் ஆடம்பரத்தை (மிதமாகவேனும்!) இரந்து நிற்கும் எல்லா மணமகன் வீட்டாரையும்தான் கழுவி ஊற்றியிருக்கிறேன். Every single one of you reek of patriarchy! இதைப் பார்த்தாவது திருந்துவார்கள் என்பதற்காகவெல்லாம் எழுதவில்லை. இப்படிப்பட்ட ஜென்மங்களின் மீதுள்ள ஒவ்வாமையை இவ்வாறான குமட்டலாக வெளிப்படுத்தியிருக்கிறேன். அவ்வளவுதான்!

அறம் சார்ந்த மதிப்பீடுகள், தனிமனித ஒழுக்கம், நேர்மை, நற்பண்புகள் என எந்த விழுமியமுமே இல்லாத ஒரு சமூகத்திற்கு நியாயமும் அடிப்படை அறிவும் ஆங்காரமாகவே தெரியும். So what?

இயற்கை எப்போதுமே சூழலியலுக்குப் பொருந்தாத உயிரினங்களைப் பரிணாம வளர்ச்சியின் போது புறக்கணித்து விடும். அதுபோல இந்தக் காலி டப்பா பிறவிகளுக்கும் இவர்களைப் போல் இருக்கும் இன்ன பிற உயிரினங்களுக்கும் பெண் கிடைக்காமலேயே போகட்டும்!

The current male loneliness epidemic is self-inflicted and well deserved!

Not so dear டப்பாக்களே! I don’t care how you were raised. You are adults. It’s high time you unlearn all your nonsense!

நீ பற்ற வைத்த நெருப்பொன்று……

நீ விதைத்த வினையெல்லாம்…..

 தீ பரவட்டும்!

Series Navigationமீளுருவின் அசைப்புகள்.நீ,நான்,சுஜாதா…