தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் ஒருநாள் காலை நேரத்தில் கிறிஸ்து கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் நண்பர் கிருஷ்ணசாமி தொலைபேசியில் அழைத்தார். கணையாழியின் வழியாக எல்லோருக்கும் நன்றாக அறிமுகமான என்.எஸ்.ஜெகன்னாதன் என்கிற என்.எஸ்.ஜெ. தில்லியிலிருந்து குடிபெயர்ந்து பெங்களூருக்கு வந்துள்ளார் என்கிற தகவலைச் சொல்லி “சாயங்கலாமா வரீங்களா? அவரப் போயி பாக்கலாமா?” என்று கேட்டார். அக்கணம் ”என்னைக் கேட்டால்” என்று அவர் கணையாழியில் தொடர்ந்து பல காலம் எழுதிவந்த பத்தியின் தலைப்புதான் உடடியாக நினைவுக்கு வந்தது. இலக்கியம், சமூகம், அரசியல், சமயம், பாராளுமன்ற நடவடிக்கைகள் என பல்வேறு செய்திகளையொட்டி ஒரு கேள்வியை முன்வைத்து, விவாதங்களை அடுக்கிக் கோர்த்தபடி எழுதப்பட்ட கட்டுரைகள் அப்பத்தியில் தொடர்ந்து வெளிவந்தன. ”என்னைக் கேட்டால்” என்.எஸ்.ஜெகன்னாதன் என்று அடைமொழியோடுதான் அவரைப்பற்றி எப்போதும் எங்கள் உரையாடலில் பேசிக்கொள்வோம். அவரைப் பார்ப்பதில் எனக்கும் ஆர்வமிருந்தது. நண்பரின் திட்டத்தை உடனே ஏற்றுக்கொண்டேன்.
ஜெயநகர் நான்காவது பிரிவு பேருந்துநிலையத்தை ஒட்டி ஒரு நீண்ட நிழற்சாலை இருக்கிறது. மாலை ஐந்துமணிவாக்கில் அச்சாலையின் தொடக்கப்புள்ளியில் காத்திருந்தேன். சொன்ன நேரத்துக்குச் சரியாக கிருஷ்ணசாமி வந்துவிட்டார். அருகில்தான் உஷா அபார்ட்மெண்ட்ஸ் இருந்தது. விசாரித்துத் தெரிந்துகொண்டு சென்றோம். நான்காவது தளத்தில் அவருடைய வீடு இருந்தது. அழைப்புமணியை அழுத்திவிட்டு கதவுக்கு வெளியே காத்திருந்தோம். உள்ளிருந்தபடியே “எஸ். கமிங்” என்ற குரல் கேட்டது. பிசிறில்லாத அழுத்தமான குரல். சில நொடிகளில் அவரே கதவைத் திறந்து வரவேற்றார். வேட்டி கட்டியிருந்தார். பனியனாகவும் இல்லாமல் ஜிப்பாவாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு வடிவில் தைக்கப்பட்ட ஒரு வெள்ளைச் சட்டை அணிந்திருந்தார். சோடாபுட்டி கண்ணாடி. இரண்டு வாக்கியம் தமிழில், இரண்டு வாக்கியம் ஆங்கிலத்தில் என கலந்துகலந்து பேசினார். அவரால் அப்படித்தான் பேச முடிந்தது. அதுவே அவருடைய இயற்கையான பேச்சுமுறை என்பதைப் போகப்போகப் புரிந்துகொண்டேன். நரையோடிய தலை. மெலிந்த உடல். பேசும்போது தொண்டை நரம்புக்கொடி அசைவது தெரிந்தது. அடர்த்தியான புருவத்தில் கொஞ்சம்கூட நரைத்திருக்கவில்லை. இருபதாண்டுகளுக்கு முன்னால் அதை ஆச்சரியத்தோடு பார்த்ததை நினைத்து இப்போது சிரித்துக்கொள்கிறேன். அதே கோலத்தை காலம் இப்போது எனக்குக் கொடுத்திருக்கிறது.
வெகுநேரம் கிருஷ்ணசாமியும் ஜெகன்னாதனும் மாறிமாறிப் பேசிக்கொண்டிருந்தார்கள். நெருக்கடி நிலை தொடர்பான உரையாடலின்போதுதான் நான் இடைபுகுந்தேன். நான் சொன்னவற்றை அவர் காதுகொடுத்து பொறுமையாகக் கேட்டார். என்னுடைய ஐயங்களுக்கு அவர் நிதானமாகவே பதில் சொன்னார். எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் ஆங்கில நாளேடுகளில் ஒன்றான ஃபைனான்ஸ் எக்ஸ்பிரஸ்க்கு அவர் பல ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். அந்தப் பத்திரிகை அனுபவம் எந்த உரையாடலையும் மையத்தை விட்டு விலகிவிடாதபடி வளர்த்துச் செல்ல அவருக்கு மிகவும் உதவியாக இருப்பதைக் கண்டேன். அவர் நெஞ்சில் ஏராளமான தகவல்கள் நிறைந்திருந்தன. ஒரு நடமாடும் நூலகம்போல அரசியல் சமூகத் தகவல்களை சரிபார்க்கவேண்டிய அவசியமில்லாமலேயே நினைவிலிருந்து சொல்லும் ஆற்றல் அவருக்கு இருந்தது. அன்றைய உரையாடல் பெரிதும் நெருக்கடி காலச் சூழலைப்பற்றியதாகவே அமைந்துவிட்டது. அந்த அரசியல் பின்னணியைப் பற்றிய தகவல்களை எங்களுக்குப் புரியும்படி ஒவ்வொன்றாகச் சொல்லி விளக்கினார். எழுந்திருக்க மனமில்லாமல்தான் ஏழரைமணிக்கெல்லாம் உரையாடலை முடித்துக்கொண்டு கிளம்பினோம். விடை கொடுக்கும்போது ”இங்க நானும் ஒய்ஃபும் மட்டும்தான் இருக்கிறோம். அழகா கூட்டம் போடலாம். நண்பர்களயும் கூட்டிட்டு வாங்க. மாசத்துக்கு ஒரு தரம் உக்காந்து பேசலாம்” என்று இரண்டுமூன்று தரம் சொன்னார்.
சில வாரங்கள் கழிந்த பிறகு, அவரிடம் தொலைபேசியில் தகவல் சொல்லிவிட்டு, ஒரு ஞாயிறு காலையில் செல்ல மீண்டும் நாங்கள் திட்டமிட்டோம். வீட்டின் அடையாளம் ஏற்கனவே தெரியும் என்பதால், பொது இடத்தில் காத்திருக்காமல் நான் தனியாகவே அவருடைய அடுக்ககத்துக்குச் சென்றுவிட்டேன். முதல்முறை காட்டிய உற்சாகத்தைப்போலவே அன்றும் உற்சாகமாகவே வரவேற்றுப் பேசினார். கணையாழியில் அவர் எழுதிய கட்டுரைகளைப்பற்றி நான் என் நினைவிலிருந்து பேசினேன். அது அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நெருக்கடி கால விவகாரங்களைப்பற்றி எனக்கு சில ஐயங்கள் இருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக நான் கேட்கத் தொடங்கினேன். நான் இலக்கியத்தைத் தவிர்த்து, சமூக அரசியல்சார்ந்து கேள்விகளைக் கேட்டதும் அவர் உற்சாகமாகப் பதில் சொல்லத் தொடங்கினார். இந்திரா அரசில் நீக்கமற நிறைந்துவிட்ட ஊழல்களைப்பற்றியும், சிறுகச்சிறுக அவருக்குள் ஊறிப் பெருக்கெடுத்தோடிய அதிகார வேட்கையைப்பற்றியும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அவர் பல தருணங்களில் வேண்டத்தகாத சக்திகளோடெல்லாம் செய்துகொண்ட சமரசங்களைப்பற்றியும் நாட்டில் அவருக்கெதிராக தன்னிச்சையாகப் பரவிய எதிர்ப்பலையைப்பற்றியும் அவற்றை ஒருமுகப்படுத்தி, ஒரு சக்தியாக மாற்றி வளர்த்தெடுக்க முயற்சி செய்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்னும் காந்தியவாதியைப்பற்றியும் ஒரு பெரிய புராணக்கதையைப்போல சொல்லிக்கொண்டே போனார். அவை ஒவ்வொன்றும் ஒரு சாகசக்கதை போன்றது.
உயர்ந்த சம்பளத்தை ஈட்டக்கூடிய நல்ல கல்வித்தகுதியும் வேலைவாய்ப்பும் அவருக்கிருந்தன. ஆனால் இதழியிலில் அவருக்கிருந்த ஆர்வம் காரணமாகவே தில்லிக்குச் சென்றார். மாற்று அரசியல்மீது இருந்த ஈடுபாட்டின் காரணமாக ஜெயப்பிரகாஷ் நாராயணன் மேற்கொண்ட தொடர் பயணங்களில் அவரும் இணைந்துகொண்டார். அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள், அவர் ஆற்றிய உரைகள், மக்களிடையே உயர்ந்துவந்த செல்வாக்கு எல்லாவற்றைப்பற்றியும் நேரடி சாட்சியாக நின்று கட்டுரைகள் எழுதினார். அவருக்கிருந்த ஆங்கிலப்புலமையும் அரசியல் தெளிவும் சமூகப்பார்வையும் அவருடைய கட்டுரை மொழியைக் கூர்மைப்படுத்தின. பத்திரிகையின் ஆசிரியர் பதவி அவரைத் தேடி வந்தது என்றே சொல்லவேண்டும்.
அவர் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள் அனைத்தையும் ஏன் தொகுக்கக்கூடாது என்று ஒருமுறை கேட்டேன். “அவையென்ன அப்படி முக்கியமான சாசனங்களா? விட்டுத் தள்ளுங்கள்” என்று சிரித்தபடியே உரையாடலை வேறு திசைக்கு மாற்றிவிட்டார். அவற்றுக்கு ஒரு கால மதிப்பும் சமூக மதிப்பும் இருப்பதாகவும் அவை அவசியம் தொகுக்கப்பட வேண்டும் என்றும் பல முறை எடுத்துச் சொன்னேன். அதை அவர் ஒரு முக்கியமான விஷயமாகவே கருதவில்லை. எனக்கு அவற்றை ஒருமுறை படித்துப் பார்க்கும் விருப்பமிருந்தது. அக்கட்டுரைகளின் பிரதிகளாவது இருக்குமா என்று கேட்டேன். அதற்கு ஒரு சிரிப்பு மட்டுமே அவருடைய பதிலாக இருந்தது. எந்தக் கட்டுரையையும் பிரதியெடுத்து வைத்துக்கொள்ளவில்லை என்றும் இருந்த ஒரு சில பிரதிகள்கூட இடமாற்றத்தின்போது தொலைந்துபோய்விட்டன் என்றும் சொன்னார். “ஒன்னும் நஷ்டமில்ல, ஒன்னும் நஷ்டமில்ல” என்றுதான் மீண்டும் மீண்டும் சொன்னபடி இருந்தார். தம் அரசியல் கட்டுரைகள் அனைத்தும் ஒரு தருணத்துக்கு தாம் ஆற்றிய எதிர்வினைகள்தானே தவிர அவை பாதுகாக்கப்படவேண்டியவை அல்ல என்று என்னை அமைதிப்படுத்திவிட்டார். நான் அவருடைய வாதத்தை மென்மையாக மறுத்தபடியே இருந்தேன். பாரதியார் இதழ்களுக்காக எழுதிய பல கட்டுரைகள் அன்றைய தேவைக்காகவும் சூழல் எதிர்வினையாகவும் எழுதப்பட்டவையே என்றாலும் இன்று புதிதாகப் படிக்கும் வாசகர்கள் பார்வையில் அவையனைத்தும் அவருடைய ஆளுமையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகின்றன என்றும் சொன்னேன். அவர் என் பேச்சைக் கேட்டு புன்னகைத்தாரே தவிர, விடை சொல்லவில்லை.
அவருக்கு வங்கமொழி நன்றாகத் தெரிந்திருந்தது. நேஷனல் புக் டிரஸ்டில் எழுத்தாளர் ஆதவன் பணிபுரிந்தபோது, விடியுமா என்னும் நாவலை மொழிபெயர்க்கும் பணியை அவரிடம் ஒப்படைத்துள்ளார். தன்னால் அப்படி ஒரு இலக்கியப்படைப்பை தமிழில் மொழிபெயர்க்கமுடியுமா என்கிற சந்தேகத்தால் உள்ளூர அப்பணியை ஏற்றுக்கொள்வதில் அவருக்கு நிறைய தயக்கம் இருந்தது. அது அரசியல் கலந்த நாவல் என்பதால் அதை அவரால் உற்சாகத்தோடு செய்துமுடிக்கமுடியும் என தான் நம்புவதாகப் பலமுறை ஆதவன் எடுத்துச் சொன்னபிறகுதான் அந்த மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொண்டார். அது நூலாக வெளிவந்து அவருக்கு நல்ல மொழிபெயர்ப்பாளர் என்கிற பெயரைத் தேடித் தந்தது. ஆதவனின் அகால மறைவுக்குப் பிறகு ஜெகன்னாதனுக்கும் நேஷனல் புக் டிரஸ்டுக்கும் இடையிலிருந்த தொடர்பு இல்லாமல் போய்விட்டது. வெகுகாலத்துக்குப் பிறகு மீண்டும் தொடர்பு உருவான சமயத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட மகாஸ்வேதா தேவியின் சிறுகதைகளை ஒரு தொகுதியாக மொழிபெயர்த்தார். வயதின் அலுப்பு காரணமாக, அத்துறையில் அவருக்கு பெரிய அளவில் ஆர்வம் எழவில்லை. முடியும்போதெல்லாம் அவர் தொடர்ந்து பல சிறுகதைகளை மொழிபெயர்ப்பதில் அவர் ஈடுபடவேண்டும் என்று சந்திக்கும்போதெல்லாம் அவரை நான் வலியுறுத்தினேன். எனக்காக அவர் ஒருசில கதைகளை மொழிபெயர்க்கவும் செய்தார். அவை அப்போது தலித் இதழில் வெளிவந்தன. என்ன காரணத்தாலோ, அவர் அந்த முயற்சியையும் தொடரவில்லை. ஓர் எல்லைக்குப் பிறகு என்னாலும் வலியுறுத்தமுடியவில்லை.
சந்திக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் புதிதாக வந்துள்ள புத்தகங்கள் மற்றும் மாறிவரும் இலக்கியச் சூழல்பற்றித்தான் எங்கள் உரையாடல் அமையும். விருட்சம், காலச்சுவடு, உயிர்மை இதழ்களை தொடர்ந்து படித்துவந்தார். விருட்சம் இதழாசிரியர் பெங்களூர் வந்திருந்தபோது அவருடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தேன். கலந்துரையாடலின் பதிவுக்குப் பிறகும் மாலை மங்கும்வரை பேசிக்கொண்டிருந்தோம்.
கணையாழி இதழ் களஞ்சியம் தொகுப்புகளாக வெளிவரத் தொடங்கின. அது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. அவற்றைத் தொடர்ந்து கணையாழியில் அவர் எழுதிய கட்டுரைகளைமட்டும் தொகுக்கும் வேலை தொடங்கியது. அவரே சென்னை சென்று சில நாட்கள் தங்கியிருந்து அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துவிட்டு வந்தார். அந்த ஆண்டின் இறுதியில் அத்தொகுப்பு வெளிவந்தது. தமிழில் அவர் எழுதியவை மட்டுமே, இப்படி நூலுருவம் பெற்றிருக்கிறதே தவிர, அவருடைய ஆங்கில ஆக்கங்கள் நூலுருவம் பெறவே இல்லை. ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கும் மேலாக விருப்பத்தோடு ஈடுபட்ட ஒரு துறையின் சுவடுகூட இல்லாமல் இருப்பதை அவர் ஏன் அமைதியாக ஏற்றுக்கொண்டார் என்பதை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.
கன்னட நாடகங்களைப் பார்க்கவேண்டும் என்பதில் அவருக்கு அதிக அளவில் ஆர்வம் இருந்தது. ஆனால் பெங்களூரில் போக்குவரத்து என்பது எப்போதும் ஒரு பெரிய பிரச்சனை. அதற்காக அவர் யாரையாவது சார்ந்திருக்கவேண்டி இருந்தது. அதில் அவருக்கு அதில் விருப்பமில்லை. தில்லி, கல்கத்தா என தொடர்ந்து பல பயணங்களை மேற்கொண்டிருந்தவர், சட்டென்று எல்லாப் பயணங்களையும் நிறுத்திவிட்டார். தன் விருப்பங்களிலிருந்து அவர் மெல்லமெல்ல விடுபட்டு பற்றற்ற மனநிலையில் அவர் நிற்பதைப் பார்க்க எனக்கு வருத்தமாக இருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்னால் குளியலறையில் வழுக்கி விழுந்து ஒரு முறை எலும்பு முரிந்து படுத்த படுக்கையாகிவிட்டார். அது அவருடைய நடமாட்டத்தை முற்றிலும் இல்லாமலாக்கிவிட்டது. ஒன்றிரண்டு மாதங்களில் அவர் எழுந்து நடமாடும் அளவுக்கு குணமாகிவிட்டார். ஆனால் அவர் தன் வழக்கமான காலை நடையைத் தொடரவில்லை. அடுக்ககத்தைவிட்டு வெளியே வருவதே அபூர்வமாகிவிட்டது. காலை, மாலை இருவேளைகளிலும் மாடித்தளத்திலேயே வானத்தைப் பார்த்தபடி ஒருமணிநேரம் நடந்துவிடுவதாக நகைச்சுவையோடு சொன்னார்.
கடந்த ஆண்டில் ஒருமுறை எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். நேரமிருந்தால் ஒரு முறை வந்துபோகும்படி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வார இறுதியில் அவரைச் சென்று சந்தித்தேன். மிகவும் மெலிந்திருந்தார். ஒடுங்கிய அவர் முகத்தில் காணப்பட்ட மரு வழக்கத்தைவிட அன்று மிகவும் பெரிதாகத் தோற்றம் தருவது[போல இருந்தது. அந்தக் கரகரப்பான குரல்மட்டும்தான் அவருடைய அடையாளமாக எஞ்சியது. என்னை அமரவைத்துவிட்டு, உள்ளே சென்று, சில நூல்களைக் கொண்டுவந்தார். எல்லாமே என்னுடையவை. ஏற்கனவே பல தருணங்களில் அவரிடம் படிப்பதற்குத் தந்தவை. “குடுக்கணும்னு நெனச்சிட்டே இருந்தேன். மறந்தே போயிடுச்சி” என்று சொன்னார். நான் அதிர்ச்சியோடு அவர் முகத்தைப் பார்த்தேன். அதற்குள் ”இன்னும் ஏதாவது இருக்குதா, இவ்ளோதானா?” என்று கேட்டார். ”அவசரமெதுவும் இல்லயே சார், நீங்க படிச்சிட்டு பொறுமையா தந்தா போதுமே” என்று சொன்னேன். அவர் உதடுகளில் வழக்கமான புன்னகை நெளிந்தது. சோடா புட்டிக் கண்ணாடிகளுக்குள் கண்கள் சுருங்கின. “படிச்சாச்சி. எடுத்துட்டு போங்க. காலா காலத்துல திருப்பித் தரலைன்னா மறந்துடுமில்லயா?” என்றார். நான் அப்புத்தகங்களை எடுத்து என் பைக்குள் வைத்தேன். புதிதாக ஓர் உரையாடலைத் தொடங்கும் விதமாக ”இந்த வருஷத்துல ரெண்டு மூணு நல்ல நாவல்கள் தமிழ்ல வந்திருக்குது சார்” என்று சொன்னேன். வழக்கத்துக்கு மாறாக அவர் பதில் இல்லாமல் சிரித்தபடி என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அரசியல்சார்ந்த விஷயம் ஒருவேளை அவருக்கு ஆர்வமூட்டலாம் என்னும் எண்ணத்தில் தொலைதொடர்புத்துறை அலைக்கற்றை ஊழலைப்பற்றிப் பேசத் தொடங்கினேன். “நீங்க ஏன் சார் அதப்பற்றி எதுவுமே எழுதலை?” என்று கேட்டேன். அவர் வெறுமனே தலையசைத்துக்கொண்டாரே தவிர பதில் பேசவில்லை. எனக்குள் ஏதோ சரிவதுபோல இருந்தது. ஏதோ ஒன்று சரியில்லை எனத் தோன்றியது. அவர் தனக்குள் எல்லாக் கதவுகளையும் மூடிக்கொண்டதுபோல இருந்தது. “சரி, பிறகு பார்க்கலாம். ஓய்வா இருக்கும்போது பேசுங்க” என்று சொல்லிவிட்டு என் முகத்தையே பார்த்தார். அதற்குமேல் உரையாடலைத் தொடர்வதற்கு எனக்கு எந்த வழியும் தெரியவில்லை. அடுத்த ஒரு மாதத்தில் என் பணியிடம் மாறியது. என் மாற்றலைக் குறித்து அவரிடம் தொலைபேசியில் தெரிவித்தேன். குடும்பத்தையும் அழைத்துச் செல்லப் போகிறேனா அல்லது தனியாகச் செல்லப் போகிறேனா என்பதைமட்டும் கேட்டுத் தெரிந்துகொண்டார். பிறகு, வாழ்த்துகளோடு வைத்துவிட்டார்.
அதுதான் எங்கள் கடைசி உரையாடல் என்பதை இப்போது நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. இடையில் நான் ஊரில் இருக்க நேர்ந்த ஒருசில சந்தர்ப்பங்களில் அவரைச் சந்திக்க முயற்சி செய்திருக்கலாம். என்ன காரணத்தாலோ, நேரமின்மை காரணமாக அதை என்னால் திட்டமிட முடியாமலேயே போய்விட்டது. கடந்த மூன்று வாரங்களாகவே அவர் முகமும் குரலும் அடிக்கடி மனத்தில் எழுந்தவண்ணம் இருந்தன. இந்த முறை கண்டிப்பாக எப்படியும் பார்த்துவிடவேண்டும் என்று முடிவுசெய்திருந்தேன்.
கடந்த வார இறுதியில் நிறைய வேலைகள். ஊருக்குச் செல்ல பயணச்சீட்டுகள் பதிவுசெய்திருந்தபோதிலும், செல்ல இயலாதபடி இருந்தது சூழல். இணையத்தின் பக்கமும் செல்ல இயலவில்லை. திங்கள் அன்று காலையில் அலுவலகம் வந்தபிறகுதான் மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தேன். ஐந்தாறு நாட்களாக படிக்காத அஞ்சல்கள் குவியலாக இருந்தன, 24.12.2011 தேதியிட்டு வந்த ஒரு மடல் ஆச்சரியத்தைக் கொடுத்தது. என்.எஸ்.ஜெகன்னாதன் பெயரில் அம்மடல் வந்திருந்தது. நான் அவரை நினைத்துக்கொண்டிருந்த தருணத்தில் அவரிடமிருந்தே மடல் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. பரபரப்பும் அவசரமுமாக அதைத் திறந்தேன். அது அவர் எழுதிய மடல் அல்ல. அவர் மகன் எழுதிய மடல். அன்று காலை ஜெகன்னாதன் இயற்கையெய்தினார் என்னும் செய்தி சுருக்கமாக அம்மடலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அக்கணம் அவர் முகம், சிரிப்பு, குரல், உடை, பேச்சு எல்லாமே நெஞ்சுக்குள் மாறிமாறித் தோன்றியபடி இருந்தன. எனக்கு இருபதாண்டு கால நண்பர் அவர். அரை நிமிட நேரம் அவர் உடல்முன்னால் நின்று இறுதி அஞ்சலி கூட செலுத்த இயலாமல் போய்விட்டது என்பது எவ்வளவு பெரிய துரதிருஷ்டம். சில நிமிடங்கள் அமைதியாக தனிமையில் அவரைப்பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்தேன். அவரைப்பற்றிய நினைவுகளையெல்லாம் ஒருசேரத் தொகுத்துப் பார்த்தேன். “என்னைக் கேட்டால்” என்று தொடங்கி, கேட்காத இந்த உலகத்தோடு தொடர்ந்து உரையாடிய பெரிய ஆளுமை அவர். அவரைச் சரியாக செவிமடுத்து பேசியிருக்கவேண்டிய நம் உலகம் போதிய அக்கறையோடு பொருட்படுத்தவில்லையோ என்று தோன்றுகிறது. அவர் தன் வாழ்நாளில் சந்தித்த மிகப்பெரிய ஆளுமை என்பது ஜெயப்பிரகாஷ் நாராயணன்தான். எழுபதுகளின் நடுப்பகுதியில் நம் தேசத்தில் ஏற்பட்ட எழுச்சிக்கும் அரசியல் மாற்றத்துக்கும் ஒருவித உந்துசக்தியாகச் செயல்பட்டவர் அவர். என்.எஸ்.ஜெகன்னாதன் என்னும் இதழியல்ஆளுமையும் அவரோடு சேர்ந்து அடையாளப்படுத்தப்படவேண்டிய ஒன்று. துரதிருஷ்டவசமாக, இந்தியச்சூழலில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மீது விழுந்த வெளிச்சம், விழுந்த வேகத்திலேயே மங்கிவிட்டது. மீட்டெடுக்கப்பட முடியாமல் தொலைந்துபோன அவ்வெளிச்சத்தை, ஒருவித கையறு நிலையிலும் குற்ற உணர்விலும் மனம் தத்தளிக்க மெளனமாகப் பார்த்தவர்களில் ஒருவராக என்.எஸ்.ஜெகன்னாதனும் இருந்தார். அந்த வடுவின் தடத்தை வருடியபடியே வாழ்க்கையை வாழ்ந்துமுடித்துவிட்டார் அவர்.
ஒவ்வொரு புத்தாண்டின்போதும் அவர் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துகளைச் சொல்வார். அப்படி ஒரு பழக்கம். புதிதாக வர உள்ள என் நூல்கள் பற்றியும் அக்கறையோடு கேட்பார். “நேரமிருக்கும்போது கொண்டுவந்து கொடுங்க” என்பார். படித்துவிட்டு அதைப்பற்றி சொல்லவும் செய்வார். அதை ஒருவகையில் மூத்தோர் ஆசியாக நான் கருதிக்கொள்வேன். இதோ இன்னும் இரண்டு நாட்களில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. ஆனால், கரகரப்பான குரலில் இந்த முறை வாழ்த்துச் சொல்லவோ, படித்ததைப்பற்றி கருத்துச் சொல்லவோ அவர் இல்லை என்பதை ஆழ்ந்த துக்கத்தோடு உணர்கிறேன்.
- செல்லச்சாமியின் வாழ்வில் ஒரு தினமும் , பெருமாள் முருகனும்
- இருட்டறை
- தமிழ்ஹிந்து நடத்தும் உடையும் இந்தியா? புத்தக வெளியீட்டு விழா ஜனவரி-3, 2012 (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணிக்கு சென்னையில்
- ‘‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’’
- ஓர் பிறப்பும் இறப்பும் ….
- கல்வி குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம்
- இருத்தலுக்கான கனவுகள்…
- நினைவுகளின் சுவட்டில் – (81)
- புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்…
- வாழ்ந்து முடிந்த வரலாறு – என்.எஸ்.ஜெகன்னாதன் – சில நினைவுக்குறிப்புகள்
- ரௌத்திரம் பழகு!
- என்றும் மாறாத தமிழ் வெகுஜனப் பத்திரிகைச் சூழல்
- மனசா? உண்மையா?நம்பிக்கை. விளையாட்டுப் பிள்ளை
- தி கைட் ரன்னர்
- 2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்
- “யாத்தே யாத்தே” களின் யாப்பிலக்கணம்
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 7
- ஒரு நூற்றாண்டுக் கழிவுகள்
- நிழல் வலி
- இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுசக்தியிலிருந்து மின்சார உற்பத்தி
- பட்டி டு சிட்டி – நூல் மதிப்புரை
- புத்தாண்டு முத்தம்
- சொல்லாதே யாரும் கேட்டால்
- தென்றலின் போர்க்கொடி…
- Delusional குரு – திரைப்பார்வை
- துளசிச்செடி நிழலில் கண்டெடுத்த குழந்தை
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 4
- தனாவின் ஒரு தினம்
- வம்சி சிறுகதைப் போட்டி முடிவுகள்
- பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை
- கவிப்பொழுதின் அந்திமக்காலம்…
- சங்கத்தில் பாடாத கவிதை
- நீயும் நானும் தனிமையில் !
- கம்பன் மணிமண்டபத்தில் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் கம்பர் போற்றிய கவிஞர் என்ற தலைப்பில் உரை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (On Joy and Sarrow) (கவிதை – 52 பாகம் -1)
- சிந்தனைச் சிற்பி
- ஜென் ஒரு புரிதல் – 25
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 52
- முன்னணியின் பின்னணிகள் – 20 சாமர்செட் மாம்
- பஞ்சதந்திரம் தொடர் 24 சந்நியாசி பாம்பை மணந்த பெண்
- அணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 3