கா•ப்காவின் பிராஹா -3

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

மே 9 -2014

பொதுவாகவே புதிய மனிதர்களின் சந்திப்புகளும் சரி, புதிய இடங்களின் தரிசனங்களும் சரி, அல்பெர் கமுய் கூறுவதைப்போல எதிர்பார்ப்பிற்கும் கிடைக்கும் அனுபவத்திற்குமான இடைநிலையாகவோ அல்லது பிராய்டு வகைபடுத்துகிற திருப்தி-அதிருப்தி இரண்டுக்குமான நனவிலி மனநிலையாகவோ இருப்பதால் இதுபோன்ற பயணங்களில் ஓர் ஆர்வத்துடனேயே கலந்துகொள்கிறோம். தவிர நண்பர்கள் அல்லது நமது மக்களுடன் செய்கிற குறுங்கால பயண அனுபவங்கள் பிராய்டுகூறுகிற அதிருப்தி விழுக்காடுகளைக் குறைக்க உதவுகின்றன என்பது சொந்த அனுபவம். தங்கியிருந்த ஓட்டலில் காலை உணவுக்கு மட்டும் ஏற்பாடு செய்திருந்தார்கள். பாரீஸிலிருந்த வந்திருந்த அனேகர் தங்கள் கையோடு கொண்டுவந்திருந்த உணவுகள் இரண்டாம் நாள் வரை பலரும் சாப்பிட உதவியது, குறிப்பாக வெரெயால் தமிழ்ச்சங்கத் தலைவரின் குடும்பம். ஆக முதல் நாள் இரவு அன்பழகன் என்பவரின் உபசரிப்பில் சப்பாத்தி, தமிழ்ச் சங்கத் தலைவர் இலங்கைவேந்தன் அன்பிற்காக மிளகாய்ப்பொடியுடன் இரண்டு இட்டலி எனப் பிராகுவிலும் பாரதப் பண்பாட்டை வாய்மொழிந்துவிட்டுப் படுக்க இரவு பதினொன்றாகியிருந்தது.

ஒன்பதாம் தேதியன்று எழுந்திருக்கும்போது வழக்கத்திற்கு மாறாக 7 மணி. காலைக் கடன்களை முடித்துக்கொண்டு ஓட்டலின் உணவுவிடுதிக்கு வந்தபோது 8.30 ஆகியிருந்தது. எதிர்பார்த்ததுபோலவே ஐரோப்பிய உணவுவகைகள். பெரும் எண்ணிக்கையில் இந்தியர்களைக் கண்டது அங்கிருந்த மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கலாம். பரிசாரகர்கள் அவ்வப்போது குறைகிற உணவு வகைகளை நிரப்புவதோடு; தட்டுகள், முள் கரண்டிகள், கத்திகள், கண்ணாடி தம்ளர்கள், கோப்பைகள் எனவைக்கிறபோதெல்லாம் எழுந்த ஓசைகள், உணவுண்ட மனிதர்களின் மெலிதான உரையாடலைத் துண்டித்து நேரத்தை நினைவூட்டுவதாக இருந்தது. பொதுவாக இதுபோன்ற ஓட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் காண்கிற பலமுறை ஒத்திகைபார்த்து பழகிய முகமனும், உபசரிப்பும் இல்லை. நேர்க்கோட்டில்மிருந்து விலகாத ஒழுங்கு மட்டுமே காண முடிந்தது. இன்றைக்குப் பார்க்கவேண்டியவை பட்டியலில் Prague Castle என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிற பிராகா கோட்டை இருந்தது, அடுத்ததாக செக் நாட்டைச்சேர்ந்த தமிழ் அறிஞர் வாச்செக் யாரோஸ்லா•ப் (Vacek Jaroslav). இந்தியர் வழக்கப்படி தாமதமாகப் புறபட்டோம். சந்தோஷத்தை மட்டும் கணக்கிற்கொள்ளவேண்டும் என்பதால் பயண ஏற்பாட்டாளர்களின் திட்டமிடலில் நிகழ்ந்த சிறு பிழைகளில் கவனம் செலுத்தவில்லை. ஓட்டல் அருகே முன்னூறு நானூறு மீட்டர் தொலைவிலிருந்த Zborov – Strašnické நிறுத்தத்தில் குழப்பங்களுக்கிடையில் எண் 5 டிராம்வே எடுத்து பின்னர் வேறொரு இடத்தில் மற்றொரு டிராம்வே எடுத்து பயணிக்கவேண்டியிருந்தது. ஐம்பது இந்தியர்கள் (தமிழர்கள்) கிழக்கு ஐரோப்பிய நாடொன்றில் இப்படி ஒட்டுமொத்தமாகக் காண்பது செக் நாட்டவர்க்கு அரிதானக் காட்சி. அரசுப் போக்குவரத்து சாதனங்களில் கலகலப்பான (?) பயண அனுபவங்களை இதற்கு முன்பாக அவர்கள் சந்தித்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

பிராகா கோட்டை – Prague Castle (Prazsky hrad)

பிராகா நகரத்தின் இதயத்துடிப்பு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையைப் பொருத்தது. சுற்றுலா பயணிகள் இல்லையெனில் பிராகு நகரமே வெறிச்சோடிக்கிடக்கும் என்ற எண்னம் அடிக்கடி வருகிறது. அதிலும் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகள் ஒரு நகரத்தின் இயக்க அடையாளத்தை முற்று முதலாக இழந்திருந்தன. குறிப்பாக வால்ட்டவா நதியை டிராம்வேயின் ‘தடக்’குகளைப் பதினோரு மணி கிழக்கு ஐரோப்பிய குளிர்வெயிலில் அரைவிழிமூடி கடந்ததும் எதிர்கொள்கிற சொப்பன நகரமும் உறக்கம் கலையாத மனிதர்களும் வித்தியாசமான அனுபவம். இத்தனைக்கும் நாங்கள் சென்றிருந்தது ஒரு சனிக்கிழமை. Prazsky hrad என்றே ஒரு நிறுத்தம் இருந்தது. இறங்கியதும் இடப்புறமிருக்கும் தோட்டத்தைக் கடந்து ஒரு அரைகி.மீட்டர் தீரம் படியேறவேண்டும். கோட்டையென்றாலே குன்றின் மீதோ மலை மீதோ கட்டுவதுதான் பாதுகாப்பு என உலகமெங்கும் கடபிடிக்கப்பட்ட நியதிக்கு செக் முடியாட்சியும் தப்பவில்லை என்பதன் அடையாளமாக இக்கோட்டையும், அதன் தேவைக்கான பிறவும் இங்கும் ஒரு மலையை சுவீகரித்துக்கொண்டிருந்தன. கோட்டைக்குள் நுழைவதற்கு முன்பு இடப்புறமிருக்கும் முற்றத்தில் – பிற சுற்றுலாவாசிகள் போகட்டுமென பொறுமையுடன் காத்திருந்து – பிராகு நகரத்தின் தென் கிழக்குப் பகுதியைக் காமிராவில் கிளிக்கிடுவதற்கு முன்பாக, தவறாமல் கண்களில் பதிவுசெய்துகொள்ளவேண்டும். நுழைவாயிலில் காவலர்கள் இருவர் ஆடாமல் அசையாமல் பக்கத்திற்கு ஒருவரென நிற்கிறார்கள். கோட்டையின் நுழைவாயில் இடது புறம் இருக்கிற ராயல் கார்டனை வரும்போது பார்க்கலாம் என நினைத்து பாரக்காதது, தனிக்கதை. நுழைவாசலில் நுழைந்ததும் ஒரு பெரிய திறந்தவெளி. அங்கே ஒரு நீரூற்று கோத்திக் காலத்து சிலையுடன் இருக்கிறது.
Prague 091

Prague 115

Prague 126

Prague 087

பழைய அரண்மணை: இடதுபுறம் திரும்பியதும் பார்வையிடுவதற்கான அனுமதிச்சீட்டை வாங்கிவர ஏற்பாட்டாளர்கள் சென்றதால் காத்திருக்கவேண்டியிருந்தது. காத்திருந்ததும் தவறில்லை Joze Plenik சிற்ப கலைஞர் முதல் உலகப்போர் நினைவு ஸ்தூபத்தை காண நேரம் கிடைத்தது. அனுமதிசீட்டு வந்து சேர்ந்ததும், உள்ளே சென்றோம். இப்பகுதி 12ம் நூற்றாண்டிலிருந்து உபயோகத்திலிருக்கிறது தொடக்கக் காலத்தில் அரசகுமாரர்களுக்கும் பதினாறு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மன்னர்களின் உபயோகத்திந் கீழும் இருந்திருக்கிறது. இங்குள்ள விலாடிஸ்லாவ் மண்டபத்தில் கோத்திக் காலத்து உட்கூரை பார்க்கவேண்டிய ஒன்று. பூமிக்கடியில் குடைந்துள்ள பகுதியில் கோட்டையின் ஆயிரம் ஆண்டுவரலாற்றை ஆவணங்கள், பொருட்கள் துணைகொண்டு காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இவற்றுள் வைரங்கள் விலை உயர்ந்த கற்கள் பதித்தப் பொருட்களும் அடக்கம். புனித கீ தேவாலயத்தின் வலது புறம் செக் நாட்டு ராணுவம் மற்றும் காவல்துறையின் சீருடைகளில் ஏற்பட்ட மாற்றங்களை தொடக்கங்காலத்திலிருந்து வைத்திருக்கிறார்கள் இதுவும் சரி தேவாலயத்தில் எதிரிலிருந்த புனித ஜார்ஜ் பசிலிக்கா என்கிற சிறுதேவாலயமும் சரி பெரிதாக ஈர்க்கவில்லை. Zlata Ulicka என அழைக்கப்படுகிற கோல்டன் லேனில் சிறு சிறு குடில்கள் இருக்கின்றன. இதுபோன்றதொன்றை ஸ்பெயினிலுள்ள பார்சலோனா நகரிலும் பார்த்திருக்கிறேன். பதினாறாம் நூற்றாண்டிலிருந்து 20 ம் நூறாண்டுவரை பல் வேறு கலைஞர்கள், கைவினைனர்களின் இல்லங்கள் எப்படி யிருந்தன என்பதைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு பொற்கொல்லரின் இல்லம், மதுச்சாலை, இறுதியாக சினிமா வரலாற்றறிஞரின் குடில் என இங்கே பார்க்க முடிகிறது. பார்த்துமுடித்து இடப்புறமுள்ள குறுகிய வழியில் குனிந்து வெளியேறினால் ஒரு திறந்த வெளியில் முடிகிறது. அங்கே இடதுபக்கமாகச் சென்றால் டலிபோர்க்கா (Daliporka) வருகிறது. மிகவும் குறுகலான படிகளில் கீழே இறங்கிசெல்லவேண்டும். படிகளில் குறுகிய அமைப்பே பார்க்கவிருக்கும் பயங்கரத்தைக் குறித்த எச்சரிக்கையாகக் கருதலாம். டலிபோர் என்கிற வீரன், விவசாயிகள் அரசுக்கு எதிராகத் திரண்டபோது அவர்களுக்கு ஆதரவாக இருந்தவனாம். நீங்கள் நினைப்பதுபோலவே அவனைக் கைது செய்து நிலவறையில் அடைத்து சித்திரவதை செய்து தூக்கிலிட்டார்கள் எனசொல்கிறார்கள். அவன் அடைபட்டிருந்தபோது வாசித்த வயலின் இசை கோட்டையெங்கும் ஒலித்ததாம். அதன் அடிப்படையில் ஒரு ஒப்பேரா என்ற இசை நாடகத்தையும் அரங்கேற்றியிருக்கிறார்கள். ஆகக் கீழே எல்லாவிதமான வதை ஆயுதங்களையும் காணமுடிகிறது. இறுதியாக லோக்கோ விச் என்ற இடம் இது தனிநபர் ஒருவரின் விசேடமாக சேர்த்துவைத்த பொருட்களின் கண்காட்சிக்கூடம். செக் நாட்டின் பிரசித்திபெற்ற ஓவியக்கலைஞர்களின் ஓவியங்கள், பீத்தோவன், மொஸார் போன்ற இசைக்கலைஞர்கள் கைபட எழுதிய இசைக் குறிப்புகள் இங்குள்ளன. இறுதியாக செயிண்ட் கி தேவாலயம் வந்தோம். மிகப் பிரம்மாண்டமான ஆலயம். பிராஹா கோட்டையில் மிகமுக்கியமானதொரு இடம். இதன் வெளி முகப்பும் சரி, உள் விதானங்களும் தனி அழகு. அவற்றின் கண்ணாடிஓவியங்கள், குறிப்பாக சிலுவையில் அறைந்த இயேசுவின் மரச்சிற்பம், ‘புனித கி'(Saint Guy)யின் கல்லறை என எழுத நிறைய உண்டு.

Vacek Jaroslav
வாச்செக் யார்ஸ்லோ• என உச்சரிக்கவேண்டும். தமிழில் குறிப்பாக செவ்விலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளவர்களுக்கு இப்பெயர் அன்னியமானதல்ல. இவரை அதிகம் அறிந்திராத நண்பர்களுக்காக வேண்டுமானால் சில கூடுதல் தகவல்கள்: எனக்கும் அவரைப்பறிக் கூடுதலாகத் தெரியவந்தது அண்மையில்தான். பிராகு பல்கலைகழகத்தின் மொழியியல் பீடத் தலைவர். ஏற்கனவே ‘கமில்’ என்கிற செக்நாட்டு தமிழறிஞர் பற்றி அறிந்திருக்கிறோம். அடுத்தது இவர். அண்மையில் இந்திய அரசால் குறள் பீட விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டவர். இந்திய மொழிகளில் தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் ஆழ்ந்த ஞானம். அவருடைய தமிழ்ப் பங்களிப்பை எழுத இங்கே இடம்போதாது ஒரு பக்கம் எழுதலாம். தமிழ் மொழி சார்ந்து பணி யாற்றுகிற நமது தமிழர்களிடம் நான் பேச அஞ்சுவதுண்டு. பெய்த மழையில் வள்ளுவர் நனைந்தார், இரண்டு நாள் அவர் சிலைக்குக் குடைபிடித்தேன் என்றெல்லாம் தமிழ்ச் சாதனையாளர்கள் பெருகிவிட்ட காலமிது. சுயபுராணம் படிக்காத ஒரு தமிழரை கண்டு பிடித்தல் அரிது. அதிலும் தற்போதெல்லாம் மனிதர்களின் ஆற்றலை தொலைகாட்சிகள், ஊடகங்களின் தராசுகொண்டு எடைபோட ஆரம்பித்த பிறகு; அடக்கமாய், நமது தொலைகாட்சிபெட்டிகள், ஊடங்களின் பிடியில் சிக்காத ஒரு மனிதரை, பிரான்சுநாட்டைசேர்ந்த வொரெயால் தமிழ்ச் சங்கமும், தலைவர் இலங்கைவேந்தனும் சங்கத்தின் பிற உறுப்பினர்களும் அழைத்துவைந்து பாராட்டநேர்ந்தது ஓர் அதிசய நிகழ்வுதான். கடந்த வருடத்தில், பாரீஸ் நகருக்கு அழைத்து அவரை கௌவரவித்திருக்கிறார்கள். இவர்கள் அவருக்குப் பாராட்டு தெரிவித்த அதே ஆண்டு குறள்பீட விருதும் கிடைத்திருக்கிறது. அம்மானிதர் Náměstí Republiky என்ற இடத்திற்கு வொரெயால் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்தவ்ர்களைத் தேடிவந்து தனது பல்கலைக்கழகப் பீடம் வரை அழைத்துச்சென்றதும் உரையாடியதும் மனம் நெகிழ்ந்த தருணங்கள். வந்திருந்த பலரும் தமிழ் சினிமாப் பார்த்துவிட்டு தியேட்டரைவிட்டு வெளியில் வரும் சினிமா ரசிகர்கள், ‘படம் ரொம்ப சூப்பர்’ எனக் கருத்துத் தெரிவிக்கும் மனப்பாங்கைக் கொண்டவர்கள். ‘சூப்பரா தமிழ் பேசுவார்’ என ஒருவர் கூறியது இப்போதும் காதில் ஒலிக்கிறது. இருந்தும் அவர் பேசியபோது உள்ளன்போடு வார்த்தைகள் வெளிவந்தன. குறள்பீடம் விருதைப்பற்றி அதிகம் வாய் திறக்காத; அதனைத் தமது சாதனைப்பட்டியலில் குறிப்பிட விரும்பாத முனைவர் வாச்சக் (Vacek), இவர்கள் கௌரவித்ததை மகிழ்ச்சியோடு ஏற்றார் எனில், அவர்மீது வொரெயால் தமிழ்ச்சங்கத்தினர் கொண்டிருந்த அன்பு முழுமையானது, கபடமற்றது -குறள்பீட விருது அரசியலுக்கு அப்பாற்பட்டது எனபதை மனமார உணர்ந்திருந்தார்.
(தொடரும்)

———

Series Navigation
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *