காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் ( 6)

This entry is part 13 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

( 6 )
அன்று ஆய்வுக் கூட்டம் இருக்கிறது என்ற நினைப்பே உடல் அயற்சியில் மறந்து போய் விட்டதை எண்ணியவாறே பரபரப்பாக எழுந்த பாலன் வேகவேகமாகக் குளித்துவிட்டு அம்மா நீட்டிய டிபனை அள்ளி வாயில் திணித்துக்கொண்டு, மதியச் சாப்பாடு வேணாம்மா என்றுவிட்டுப் பறந்தான் அலுவலகத்துக்கு.
எதற்காக இப்படிச் சொல்லிவிட்டுப் போகிறான் என்பது புரியாமல் அவன் செல்வதையே பார்த்துக்கொண்டு நின்ற ஜெகதாம்பாள் அவனுக்கு முன்னால் எழுந்து ஓட்டமாய் ஓடிய தன் கணவனை நினைத்துக் கொண்டாள்.
இவன்தான் காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டதுபோல் ஓடுகிறான் என்றால் அவர் அதற்கு முன்னால் கிளம்பிவிட்டாரே! அப்படி என்னதான் வேலையோ இருவருக்கும்? ஒன்றும் புரியாமல் நல்லதே நடக்க வேண்டும் தெய்வமே! என்று கடவுளை வேண்ட ஆரம்பித்தாள்.
இவன் ஆபீசுக்குள் அடியெடுத்து வைத்த போது கூட்டம் ஏற்கனவே ஆரம்பித்திருந்தது.
தேவையான கோப்புகளையெல்லாம் முதல் நாள் மாலையே அலுவலரின் அறைக்கு அனுப்பிவிட்டான். ஒரே ஒரு அட்டவணை மட்டும் தயார் செய்ய வேண்டியிருந்தது. அதையும் தயாரித்து முடித்துவிட்டு காலையில் பிரின்ட் எடுத்துக்கொள்வோம் என்று கிளம்பியிருந்தான்.
இப்போது அதன் ஒரு நகல் அவனின் டேபிளில் வைக்கப்பட்டிருந்தது. எப்போதும் கூட்டத்திற்கு இவனும் ஆஜராவது வழக்கம். அன்று மாறுதலாக மேலாளர் உள்ளே அமர்ந்திருப்பதாகச் சொன்னார்கள். நடப்பது ஆய்வுக் கூட்டம்தானா என்று சந்தேகம் வந்தது.
உங்களை இங்கே வெயிட் பண்ணச் சொன்னாங்க சார் .மானேஜர்…என்று வந்து சொன்னான் பியூன் ராமலிங்கம்.
உள்ள யார் யார் இருக்காங்க என்றான் இவன்.
மினிஸ்டர் பி.ஏ. வந்திருக்காரு சார்…நீங்க பார்க்கலையா? எட்டு மணிக்கெல்லாம் வந்துட்டாங்கல்ல…என்றான் பதிலுக்கு.
கசகசவென்று சத்தம் பெரிதாக இருந்தது வாசலில். கட்டடத்திற்கு வெளியே இரண்டு மூன்று கார்கள் புதிதாக நின்றன. அவற்றுக்கு நடுவே அந்த ஆள் பிச்சாண்டியின் காரும் நிற்பதை அதன் எண்ணை வைத்துக் கண்டு கொண்டான் இவன்.
அந்த அலுவலகத்திற்கு வந்து முதன் முறையாக அவன் போய் அமராமல் அந்தக் கூட்டம் நடக்கிறது என்று தோன்றியது இவனுக்கு. எத்தனை விஐபிக்கள் இருந்தாலும் அவனை அழைத்து அருகில் அமர வைத்துக் கொள்ளும் அலுவலர் இன்று தன்னைக் கண்டு கொள்ளாததும், தான் தயாரித்து வைத்திருந்த கோப்பில் முன்னதாகவே செய்துகொள்ளும் ஒரு டிஸ்கஷனும் இல்லாமல் போனதும் இவனை என்னென்னவோ நினைக்க வைத்தன. கூட்டம் முடிந்து எல்லோரும் கிளம்பியபோது மணி ஒன்றைத் தாண்டியிருந்த்து.
ஒவ்வொருவராக வெளியே வர ஆரம்பித்திருந்தார்கள். கேட்டுக்கு வெளியே நிற்கும் கார்கள் தனித்தனியே சீறிக்கொண்டு கிளம்ப ஆரம்பித்திருந்தன. படிப்படியாக ஆட்கள் அதிகமாகி வெள்ளை வேட்டியும், சட்டையுமாக நிறையப்பேர் வாயில் பகுதிகளில் தென்பட ஆரம்பித்தார்கள். வெளியே சாலைகளில் எங்கெங்கோ கலைந்து கலைந்து நின்றவர்கள் எல்லாம் ஒன்று கூடி விட்டாற்போலிருந்தது.
கொத்துக் கொத்தாகப் பலரும் வெளியேறியதும், அந்த அலுவலகமே ஒரு திடீர் அமைதிக்குத் தயார் ஆனது.
எல்லாரும் போய்ச் சேர்ந்த பின்னர் கடைசியாக பியூன் ராமலிங்கம் பின் தொடர அலுவலர் வெளியே வந்து நேர் திசையில் உள்ளே நோக்கினார். தன்னைத்தான் தேடுகிறார் போலும் என்கிற எதிர்பார்ப்பில் வாயிலுக்கு விரைந்தான் பாலன்.
அந்த ஃபைலை எடுத்திட்டு வா…என்றார்.. ராமலிங்கம் வேகமாய்ச் சென்று எடுத்து வந்து நீட்டினான்.
பாலன், இதை வாங்கிக்குங்க….அதுல இருக்கிற நோட் ஆர்டர்படி ஒரு உத்தரவை உடனே தயார் பண்ணிடுங்க…இன்னைக்கு சாயங்காலமே பார்ட்டிக்குக் கொடுத்தாகணும்….
சரி என்று இவன் கையை நீட்டியபோது, திடீரென்று மானேஜர் குறுக்கே வந்தார்.
எல்லாம் ரெடி சார்….ஏற்கனவே தயார் பண்ணி டெஸ்பாட்ச் ஸ்டேஜ்ல வச்சிருக்கேன்…நீங்க சொன்னா அனுப்பிட வேண்டிதான்…
அப்டியா….ஓ.கே., ஓ.கே., கொண்டாங்க கையெழுத்துப் போட்டுட்டே போயிடுறேன்…என்றவாறே மீண்டும் தன் அறைக்குள் நுழைந்தார். பாலன் அப்படியே நின்று கொண்டிருந்தான். மானேஜர் உள்ளே ஓடினார். அங்கேயே நிற்பதா, உள்ளே போவதா, அல்லது தன் இருக்கைக்குப் போவதா என்று தெரியாமல் லேசாக ஸ்தம்பித்தான்.
எல்லாமும் இன்னைக்கே ஸ்பீடு போஸ்டுல போயிடணும்…என்றவாறே மானேஜரை நோக்கிச் சொல்லிக் கொண்டு மீண்டும் வெளியே வந்து காறில் ஏறினார்.
ஓ.கே. சார்., எல்லாமும் இன்னைக்கே போயிடும்….- சொல்லிக்கொண்டே கார் கதவுவரை போய் ஒரு சல்யூட் அடித்து விட்டு கார் கதவையும் சாத்திவிட்டு உள்ளே வந்தார் மானேஜர்.
நீங்க போங்க பைலைக் கொடுத்தனுப்பறேன்…என்று பாலனைப் பார்த்துச் சொல்லிக்கொண்டே தன் இடத்திற்குப் போனார்.
பாலன் அமைதியாக வந்து தன் இருக்கையில் அமர்ந்தான். கொஞ்ச நேரத்தில் அந்தக் கோப்பு வந்தது அவனிடம்.
வச்சிட்டுப் போ…என்றவாறே குனிந்த நிலையில் ஏதோ ஒரு பதிவேட்டில் சில பதிவுகளைச் செய்து கொண்டிருந்தான்.
வந்திருந்த கோப்பினைத் திறந்து பார்க்க மனசே இல்லை. பார்த்து என்ன ஆகப்போகிறது? என்றிருந்தது.
மதியம் வெளியில் போய் மனசில்லாமல் என்னத்தையோ சாப்பிட்டுவிட்டு வந்திருந்தான். அன்று எதிர்பார்த்ததுபோல் கூடைக்காரியிடம் அம்மா சாப்பாடு கொடுத்து விடாதது சங்கடமாயிருந்தது.சே! என்று அலுத்துக் கொண்டான். கொடுத்துவிடுவாள் என்கிற எதிர்பார்ப்பில்தான் காலையில் அப்படி ஓடி வந்தது என்று சொல்லியது மனம். இடையில் ஒரு போன் பண்ணியாவது தெரிவித்திருக்கலாம். எதுவுமே சொல்லவில்லையென்றால் அம்மாதான் என்ன செய்வாள்?
மாலை கிளம்பும்போதுதான் மறந்திருந்த அந்தக் கோப்பைப் பார்த்தான் பாலன். அது அன்றைய கூட்டத்திற்காகத் தான் அனுப்பிய கோப்பாக இருந்தது. அந்தக் கூட்டம்தான் நடக்கவேயில்லையே? அனுப்பியதுபோலவே திரும்பியிருந்தது அது.
இவன் எதிர்பார்த்திருந்த அந்த முன் கோப்பு இன்னும் வரவில்லை. என்னவோ ஆகட்டும் நமக்கென்ன என்று நினைத்தான். டேபிளில் இருந்தவைகளை எடுத்து பீரோவில் அடுக்கிப் பூட்டி, டேபிளைச் சுத்தமாக்கி விட்டுக் கிளம்பினான்.
வாசல் படி இறங்கிய போது மனம் அந்தப் பாட்டு வரிகளை முனகியது.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே…
இவனுக்காகவே வீசுவதுபோல் எங்கோ பெய்த மழையின் எதிரொலியாகக் குளுமையான காற்று மெல்ல இவனை வந்து தழுவ, அந்த சுகத்தை இதமாக அனுபவித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான் பாலன்.
அப்பாதான் எதிர்கொண்டார்.
டேய்…!ஆர்டர் பார்த்தியா….வாங்கிட்டேனாக்கும்…இன்னைக்கும் உன்னைத் தொந்தரவு பண்ணலை…சரிதானே…? நான் வந்திருக்கிறதே உனக்குத் தெரிஞ்சிருக்காதே? மினிஸ்டர் பி.ஏ. கூடல்ல இருந்தேன்….என்றவாறே நீட்டினார் இவனிடம். அவர் முகத்தில் இருந்த பெருமை இவனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அது அப்பாவின் பெயரிலேயே இருந்ததும், அடியில் அவர் ஒப்பந்ததாரராகப் பதிவு செய்திருந்த சான்றிதழின் நகலுமாய் அவனை அதிர வைத்தது. அப்பா எல்லாவற்றிற்கும் களத்தில் இறங்கிவிட்டார் என்று தோன்றியது. இனி அவரைப் பிடிக்க முடியாது. எங்குபோய் அதுவே முடிகிறதோ அதுதான் இறுதி. இந்த உலகத்தில் யாரையும் யார் சொல்லியும் திருத்த முடியாது. அவரவரே அனுபவப்பட்டு மீண்டு வரவேண்டியதுதான்.
அந்தப் பிச்சாண்டிக்காக நான் வேலை செய்யப் போறேன்….எனக்காக அவன் ஒண்ணு செய்து தரப் போறான்….இதுதான் எங்களுக்குள்ள ஒப்பந்தம்….இந்த உலகத்துல ஒண்ணைக் கொடுத்துத்தான் ஒண்ணை வாங்கணும். எதுவுமே கொடுக்காம நமக்கு எதுவும் கிடைக்காது. அப்படிக் கிடைச்சாலும் அது நிலைக்காது. இன்னும் கொஞ்ச நாள்ல பாரு…டவுன்லயே நம்ம கடையை அடிச்சிக்க எதுவுமில்லேன்னு ஆயிடும்…ஜனம் பூராவும் அங்க வந்துதான் விழப்போவுது – படு குஷியாகச் சொன்னார் நாகநாதன்.
அப்பா சொல்வதை அமைதியாய் நின்று கேட்டுக் கொண்டான் இவன். அப்பாவிடம் எது நிலைக்கப் போகிறதோ, எது கழன்று ஓடப் போகிறதோ தெரியவில்லை இவனுக்கு. அம்மா பாவம், அவளால் எதுவுமே சொல்ல முடியாது. எல்லாவற்றையும் வெறுமே பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடியும். தன்னால் மட்டும் முடியுமா? அதுவும் சாத்தியமில்லை. ஆவது ஆகித்தான் ஓயும். முடிந்தவரை குடும்பத்தைப் பாதுகாக்க முயற்சிக்க வேண்டியதுதான். அதுதான் தன்னின் கடமை. பெற்றோருக்குத் தான் செய்யும் நன்றிக் கடன். நிதானமான தன் எண்ண ஓட்டங்களை நினைத்து அவனுக்கே பிரமிப்பாய் இருந்தது. ஆனாலும் அந்த அதிர்ச்சியிலிருந்து அவன் மீள்வதற்குள், எதிர்பாராத இன்னொரு வெடி குண்டும் பாலனை நோக்கி வேகமாய் வந்தது.
உனக்கு ஒண்ணு அன்னைக்கே சொல்லணும்னு நினைச்சேன்…இப்பத்தான் சரியான வேளை..அதையும் சொல்லிப்புடறேன். இந்தக் குடும்பத்தைப் பொறுப்பா நீ கொண்டு செலுத்தணும்னுதான், செலுத்துவேன்னுதான் இதைச் சொல்றேன். உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால கவனமாக் கேளு. .உன் ஆபீசுல வேலை பார்க்குதே நந்தினின்னு ஒரு பொண்ணு..எனக்கு எப்படித் தெரியும்னு பார்க்காதே…தெரியும்…அவ்வளவுதான்…..அதோட அண்ணன் கூட நீ அன்னைக்கு டீக்கடைலருந்து வர்றதை நான் பார்த்தேன். அவனோடல்லாம் சகவாசம் வச்சிக்காதே….அது எதுவாயிருந்தாலும் இன்னியோட விட்டிடு…எதைப்பத்தியும் நான் கேட்கலை..கேட்க விரும்பலை….அவங்கப்பனோட பார்ட்னரா இருந்து என்னோட சாப்பாட்டுத் தொழில்ல மண்ணைப் போட்டவன் அந்தத் துரோகி. பெருத்த நஷ்டத்தை அடைஞ்சவன் நான்…ஏமாற்றப்பட்டவன்…அதுக்கு அவனோட மகனும் ஒரு முக்கிய காரணம்.ஒரு வகைல அதுதான் என்னை உசுப்பி விட்டதுன்னு சொல்லணும்… என்னை நம்பிக்கை மோசம் பண்ணினவன் அவன். அதுக்குப் பெறகு வாழ்க்கைல காலூன்றுறதுக்கு நான் பெரும்பாடு பட்டுப் போனேன்.எத்தனையோ இழிவு? எவ்வளவோ அவமானங்கள்? எனக்குத்தான் தெரியும் அந்த வலி! என் கூட நின்னு எல்லாத்தையும் சுமந்த உன் அம்மாவுக்குத் தெரியும். இன்னைக்கு அவன் எனக்குக் கீழதான்…அன்றைக்கு மனசுல வச்ச வன்மம் இதுதான்…அதுல ஜெயிச்சுட்டுத்தான் ஓய்ஞ்சேன்..இப்போ உன் மூலமா திரும்பக் கைகோர்க்கணும்னு எதிர்பார்க்கிறான்னு நினைக்கிறேன். அது வேண்டாம்…மறந்திடு…இன்னையோட மறந்திடு…எதுவும் இருந்திச்சுன்னா உதறிடு…முழுசா விட்டு உதறிடு….சொல்லிட்டேன்…நீ படிச்ச பையன்…உனக்கு இதுக்கு மேல சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன்…
நிதானமாக, அழுத்தமாகப் பொழிந்துவிட்டு, அவன் முகத்தைக் கூடப் பார்க்காமல் கொல்லைப் புறம் நோக்கிச் சென்று விட்டார் நாகநாதன். வெகு நாட்களுக்குப் பிறகு அவன் பார்த்த கண்டிப்பு. அப்படியே அதிர்ந்து போய் நின்றான் பாலன். உடம்பில் மெல்லிய நடுக்கும் பரவியிருப்பதை அவனால் தவிர்க்க முடியவில்லை. எல்லாமும் தெரிந்திருக்கிறது அப்பாவுக்கு. அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கிறது. அவரிடம் தெளிவாக அறிய என்று தனியே பேச வேண்டியதில்லை. அவரின் தீர்மானமான் இந்தப் பேச்சு போதும். இவனுக்கு மொத்தமும் புரிந்தது போலிருந்தது. ஜெகதலப்பிரதாபன், ஜெகதலப்பிரதாபன்….வாய் முனகியது இவனுக்கு.
அண்ணனுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத அதிர்வைக் கண்டு பதறிய தங்கைகள் மூவரும் அவனுக்கு ஆறுதல் சொல்வதுபோல் வந்தபோது எந்தச் சலனமும் இல்லாதவனாய், தன்னை வெகுவாய் நிதானப்படுத்திக் கொண்டவனாய், அவர்களை நேர் பார்வையில் நோக்கிச் சிரிக்க முயன்றான் பாலன். ஏனோ அப்படி முடியாமல் அமைதியான, அழகான, கருணை பொழியும் ஆதுரமான நந்தினியின் அழகு முகம் அவன் மனக்கண் முன் தோன்றி அவனைச் சங்கடப்படுத்த ஆரம்பித்தது..
————————————————-

உஷாதீபன், 8-10-6 ஸ்ருதி இல்லம், சிந்து நதித் தெரு, மகாத்மாகாந்தி நகர், மதுரை – 625 014. ———————————————————- செல்- 94426 84188

Series Navigationபொன்னியின் செல்வன் படக்கதை -2
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *