மிஸ்டர் மாதவன்

This entry is part 1 of 13 in the series 8 நவம்பர் 2020

குமரி எஸ். நீலகண்டன்

கொரோனா காலம் எல்லா மனிதர்களைப் போல் என்னையும் வீட்டில் முடக்கியது. எல்லோரையும் வீட்டிற்குள் அனுப்பி விட்டு  சாலைகளையெல்லாம் கடவுள் தூசி தட்டிக் கொண்டிருக்கிறார். காற்றையும் தண்ணீரையும் அண்ட வெளிகளையும் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஏன்? ஓசோன் துளையைக் கூட கடவுள் அடைத்து விட்டாரென்று கேள்விப் பட்டேன். இதையெல்லாம் பார்த்த போது நம் வீட்டை மட்டும் தூசியாக வைத்திருக்கலாமாவென எனக்கு தோன்றியது. அதனால் என் வீட்டையும் சுத்தப் படுத்தத் தொடங்கினேன்.

இறுக்கி அடைத்து வைத்திருந்த அட்டைப் பெட்டிகளுக்குள்ளிருந்து பல்லி, கரப்பான் பூச்சிகளென எல்லா ஜீவ ராசிகளும் அவர்களுடைய பூமியில் பூகம்பம் வந்தது போல் பறந்து ஓடின. எனது ஆரம்ப காலக் கதைகள், கவிதைகள் இவைகளோடு பழைய தினமணிக் கதிர், கல்கி, விகடன், குமுதம், மங்களம், சுபமங்களா, புதிய பார்வை, கணையாழி என பல பழைய இதழ்களும் என் கண்ணில் பட்டன. புத்தகங்களுக்குள் மாறி மாறி மேய்ந்து கொண்டிருந்தன சில்வர் பூச்சிகள்.

நான் எடுத்த பணிக்கு ஊரடங்கு கொடுத்து விட்டு அந்த பழைய இதழ்களை புரட்டி அதில் மூழ்கத் தொடங்கினேன். ஒரு பழைய புதிய பார்வை இதழை பிரித்த போது எனது நண்பர் மேனகா புஷ்பனின் கதை இருந்தது. அவர் மறைந்து இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும்.

பெரிது பெரிதாய் உருட்டி உருட்டி எழுதும் அவரது கையெழுத்து என் மனதையும் உருட்டிப் போட்டது. மேனகா புஷ்பன் என்பது அவரது புனைப் பெயர். அவரது பெயர் எம். மாதவன். சிறந்த எழுத்தாளர். வானொலியில் மிகவும் நேர்மையான நிகழ்ச்சி அதிகாரி, பாடகர், ஓவியரென சிறந்த கலைஞரென்று சொல்லலாம். இப்போது மட்டும் அவர் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் நிறைய விருதுகளுடன் மிகப் பிரபலமான எழுத்தாளராக இருந்திருப்பார். அவர் ஒரு கலைப்ரியன். இலக்கியம், இசை, பாட்டு, ஓவியமென எல்லாவற்றிலும் ஈடுபாடு அதிகம்.

செடிகளின் மீது தீராத காதல். தாவரங்களின் மீது அவர் தண்ணீர் விடும் அழகு குழந்தைகளுக்கு பாலூட்டுவது போல் இருக்கும். அவரது கடைக்குட்டி ராதிகா செடியின் இலையை அறியாமல் பிய்த்தால் கூட இலையை பிடுங்காதே… செடிக்கும் வலி உண்டு என்று குழந்தையையும் செடியையும் ஈரமாய் வளர்த்தார்.

மர வேலைப்பாடுகளில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. பென்சிலில் பேப்பரில் புதிய புதிய ஓவியங்களுடனான மர வேலைப்பாடுகளுடன் கூடிய கட்டில் நாற்காலிகளை வரைந்து அந்த வடிவத்தில் மர வேலைக் கலைஞரிடம் செய்யச் சொல்வார். தச்சு வேலை செய்பவரும் இவரது புதுமையான கலை வடிவங்களை பார்த்து வியந்து அதே போல் செய்தும் கொடுப்பார்.

அவருக்கு நகைச்சுவை உணர்வும் அதிகம். ஒல்லியான நான் தொளதொளவென்று சட்டை போட்டிருப்பேன். பல வேளைகளில் ‘’பிரதர்.. நீங்க சட்டை போட்டிருக்கிங்களா. சட்டை உங்களை போட்டிருக்கிறதா’’ என்று கூறுவார். பின் ‘’உங்கள் சட்டை நன்றாக இருக்கிறது. எப்போது பார்ட்டி’’ என்பார்.

ஒரு தடவை காய்கறி கடைக்காரரிடம் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தார். கடைக்காரர் கத்திரிக்காய்க்கு அதிக விலை சொன்னார். உடனே மாதவன் ‘’என்ன இவ்வளவு விலை சொல்றீங்க?’’ என்றார். உடனே கடைக்காரர் ‘’கத்தரிக்காய் இப்போ தங்கம் விலை விக்குது’’ என்றார். உடனே மாதவன் அவரிடம் ‘’அப்படின்னா அஞ்சு கிராம் கத்தரிக்காய் கொடுங்க’’ என்றார். உடனே கடையிலே இருந்தவர் ‘’என்னங்க இப்படி கேட்கறீங்க.. கத்தரிக்காயை எப்படி அஞ்சு கிராம் அளந்து தர்றது’’ என்றார். உடனே மாதவன் ‘’நீங்கதானே சொன்னீங்க தங்கம் விலைக்கு கத்தரிக்காய் விக்குதுன்னு? அப்போ தங்கம் வாங்கிற மாதிரிதான் கத்தரிக்காயையும் வாங்க முடியும்’’என்றார்.

அவருடைய இனிஷியல் எம் என்று இருக்க எம். மாதவனை அலுவலகத்தில் மறக்கிற மாதவனென்றும் அவரிடமே விளையாட்டாய்  சொல்வார்கள். உண்மையில் மறதி என்ற இயல்பு அவரிடம் அப்படியொன்றும் ஒட்டி இருக்கவில்லை. குறையொன்றும் இல்லாமல் பலமாக இருக்கும் மனிதர்களிடம் பலகீனத்தை தேடும் சக சமூகம். எதுவும் அகப்படாத போது அதுவே ஒரு கருப்பு புள்ளியை பலமான மனிதரின் முகத்தில் பலகீனமாக வைத்துவிடும். அப்படிதான் மாதவன் மறக்கிற இயல்புடைய மனிதராக அறியப்பட்டார்.   அவருடைய பணிக் காலத் தொடக்கத்தில் இரண்டொரு தடவை ஏதாவது முக்கியமில்லாத விஷயத்தை மறந்துவிட்டு நண்பர் அதைக் கேட்ட போது ‘’ஐயோ சாரி. மறந்திட்டேன்’’ எனச் சொல்லி இருக்கக்கூடும். இன்னொரு நாளும் அவர் அதைச் சொல்லி இருக்கக் கூடும். உடனே நண்பர் அவரது சகாக்களின் மத்தியில் மாதவன் எல்லாத்தையும் மறந்திடுவார் என்ற வார்த்தையை பதிவு செயது பதிவு செய்து சமூகத் தொற்று போல அந்த வானொலிப் பணியாளர்கள் சமூகத்தினிடையே மாதவன் எல்லாவற்றையும மறந்து விடுவார் என்ற பெயர் ஆழமாக பதிவாகி விட்டது.

இன்னும் அவர்மீது பொறாமை கொண்ட பல சக நண்பர்கள் கூட சில அலுவலகத் தவறுகளை மாதவன்டே சொல்லிட்டேன் அவர்தான் மறந்திட்டாரு என்று அவர் மேல் பழிபோட்டுக் கொண்டு தப்பித்த கதைகளும் உண்டு. இன்னும் அவரோடு பணியாற்றிய சக நண்பர்கள் அவர்கள் மாற்றலாகி சென்ற ஊர்களிலெல்லாம் அவரை மறக்கிற மனிதராகவே பதிவு செய்து விட்டார்கள். இதற்கெல்லாம் இன்னுமொரு முக்கிய காரணம் அவரே தன்னைப் பற்றி ‘’நான் மறந்திடுவேன் தம்பி’’ என அடிக்கடி கூறுவார். ஆனால் அவருக்கு கலைத் தொடர்பான விஷயங்களில் அபாரமான நினைவுத்திறன் உண்டு. இன்னும் அவர் சுதந்திரமான கலைஞர். தேவையானவை மட்டுமே மனதில் உள்வாங்கி தேவையற்றவற்றை மறந்துவிடுகிற கலையுலகில் பரவசிக்கிற சுதந்திரக் கலைஞன் அவர்.

அவர் மாற்றலாகி வேறு ஊருக்கு செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு ஏதோ ஒரு புத்தகம் வாங்கும்போது அவரிடம் சில்லரை இல்லை என்று அவருக்கு ஒரு ஐம்பது ரூபாய் நான் செலவு செய்தேன். பின்னர் அவரை தொடர்ந்து சந்தித்த இரண்டொரு வேளைகளில் ‘’பிரதர்.. அந்த ஐம்பது ரூபாயை வாங்கிடுங்க. நான் ஆபிஸ் வேலையில் மறந்து போயிடுவேன்’’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அவர் தந்த போதும் நான் வாங்க மறுத்தேன்…

அதன்பின் அவர் திடீரென மாற்றலாகி வேறு ஊருக்கு சென்றதைத் தொடர்ந்து துரதிர்ஷ்டவசமாய் அவருக்கு பல பிரச்சனைகள், நோய், மரணமென்று முடிந்து விட்டது.

மாதவனை எப்படி நான் மறக்க முடியும்? நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனியில்தான் அவருடைய வீடு. காலையில் புன்னைநகர் கொல்லா மரங்களுக்கிடையே ஆள் அரவமற்ற வெளியில் ஏ.எம்.ராஜாவின் பாட்டு கேட்கும். அங்கே மாதவன்தான் வீட்டிலிருந்து பாடிக் கொண்டே கனவுலகில் மிதந்து கொண்டு அலுவலகம் நோக்கி அந்த மரங்கள் நிறைந்த சிறிய காடுகளினிடையே நடந்து வந்து கொண்டிருப்பார். பறவைகளின் சப்தம் மட்டுமே கேட்கிற அந்த வெட்ட வெளியில் எந்த சங்கோஜமும் இல்லாமல் உரக்கப் பாடிக் கொண்டே வருவார். பி.பி. சீனிவாஸ் குரலிலும் உணர்வுபூர்வமாகஅழகாக பாடுவார். ஏ.எம்.ராஜா ஓடுகிற ரயிலில் ஏறி கால்இடறி விழுந்து இறந்த போது இவர் பட்ட துயரம் இன்னமும் என் கண்களில் இருக்கிறது.

மாதவனுக்கு மூன்று, ஐந்து, ஏழு என்று வயதுகளில் மூன்று பெண் குழந்தைகள். ஆண் குழந்தைகள் வேண்டுமென்று பலரும் ஆவலுடன் காத்திருக்கும் அந்தக் காலக் கட்டத்தில் அவர் மூன்றும் பெண் குழந்தைகளென்பதை கடவுள் தந்த வரமாகவே நிறைவாகக் கருதினார். அவர் வீட்டிற்குச் சென்றால் அந்த மூன்று குழந்தைகளும் அப்பாவோடு உருண்டு பெரண்டு போட்டி போட்டுக் கொண்டு தனது பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். அதைக் காணும் போது அப்பாவிற்கும் அந்த குழந்தைகளுக்குமிடையேயான விளையாட்டு என்பது பூனைக் குட்டிகள் தன் தாயின் மேல் காட்டுகிற அன்பைப் போல் இருக்கும். ஆனால் அவர் அந்த சிறு வயதிலேயே புலிக் குட்டிகளின் வீரத்தையும் அந்த குழந்தைகளுக்கு அளிக்கத் தவறவில்லை.

அவ்வாறு அவர் குழந்தைகள் அவரிடம் குறும்பு காட்டி சீண்டிக் கொண்டிருக்கும் வேளையிலும் அவர் தனது ஏழு வயது பெண் குழந்தையைப் பார்த்து சொல்வார். ‘’இப்போ என் பெரியம்மா அங்கிளுக்கு ரொம்ப சுவையான டீ போட்டுட்டு வருவா பாருங்க’’ என்று சொன்னதுமே அந்த மூத்தக் குழந்தை மிகுந்த சிரத்தையுடன் அடுக்களைக்கு ஓடி விடும். உடனே அடுத்து ‘’அப்பாவுக்கும் ஒரு கப்’’ என்பார்.

‘’கேஸ் அடுப்பிலே ரிஸ்க் இல்லையா’’ என்பேன். ‘’இல்லை. என் ராணியம்மா மிகவும் பத்திரமா டீ போட்டிடுவா பாருங்க’’ என்பார். உண்மையில் அந்த டீயின் உயர்ந்த சுவை இன்றும் என் நாக்கில் எஞ்சி இருக்கிறது. அந்த முதல் பெண்ணை மனைவியின் துணையுடன் மிகுந்த பாதுகாப்பாக சமையல் செய்யும் அளவில் வெற்றிகரமாக பயிற்சி அளித்திருக்கிறார். கடைக்குட்டி ராதிகாவும், ரேகாவும் அப்பாவின் தோள் மேல் ஏறி போட்டி போட்டுக் கொண்டு துள்ளிக் குதிக்கும் போது தன் கையிலிருக்கும் சுவையான தேநீர் சிந்தி சிதறாமல் சிரித்துக் கொண்டே போராடுவார்.

குழந்தைகளிடம் அவருக்கு எந்த அளவிற்கு அன்போ அதே அளவு அவருடைய மனைவியிடமும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அலுவலகம் விட்டபின் கோணத்திலிருந்து மணிமேடை சந்திப்பிற்கு வந்து அங்கே நடைபாதை கடைகளில் விற்கும் பழைய நாவல்களை மனைவிக்காக பைநிறைய வாங்கிப் போவார். புத்தகப்புழுவான மனைவியும் அவற்றையெல்லாம் ஓரிரு தினங்களில் படித்தும் முடித்துவிடுவார். அவர் படித்து முடிக்க முடிக்க தடையின்றி அவருக்கு புத்தகங்களை வாங்கிக் கொடுக்க அவர் தவறுவதில்லை.

எழுத்து என்ற அளவில் நானும் அவரும் தமிழின் இலக்கியங்கள் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் தத்தம் படைப்புக்கள் குறித்தும் சதா பேசிக் கொண்டே இருப்போம். எழுத்தையும் இலக்கியத்தையும் அவ்வாறு அவரது வாழ்க்கையில் உயிரோட்டமாய் வைத்திருந்தார்.

அவருடைய வானொலிப் பணியிலும் புதிய புதிய உத்திகளில் நிகழ்ச்சிகளை வழங்குவதில் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டிருக்கிறார்.

அலுவலக வாகனத்திற்குள் அந்த நகரவீதிகளைப் பற்றி மிகவும் பரிச்சயமான ஒருவரின் கண்களை கட்டி வைத்துக் கொண்டு வாகனத்தை நகரத்திற்குள் வலம் வரச் செய்வார். ஓடும் வாகனத்தில் அவரிடம் தற்போது வாகனம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்று கேட்டு அவரின் பதிலை ஒலிப்பதிவு செய்து அதை நிகழ்ச்சியாக்கி ஒலிபரப்புவார். வாகனத்திற்குள் இருண்ட உலகத்தில் இருப்பவர் வண்டி திரும்புவது, சாலையில் இருந்த வேகத் தடைகள், மேடு பள்ளங்கள், வெளியே கேட்கிற சபதங்கள், வண்டியின் வேகம், வண்டி செல்கிற கால அளவு என எல்லாவற்றையும் மனதில் உற்று உணர்ந்து, வண்டி எந்த சாலையில் செல்கிறது, எந்த இடத்தை எட்டி இருக்கிறது ஆகியவற்றை ஒலி வாங்கியில் நேரடியாக வர்ணனை செய்வார்.

கண்களை மூடினால் நமக்கு பரிச்சயமான இடங்கள் சுற்றுப்புற ஒலிகளின் மூலம் எப்படி நம் மூளையில் வெளிச்சமாகின்றன என்பதற்கு ஒரு தேர்வுதான் அது. ஒரு பார்வையற்றவனின் அன்றாட அனுபவத்தை ஒரு பார்வையுள்ளவனுக்கு குறுகிய கால அளவுக்கு வழங்குகிற அனுபவமாக கூடச் சொல்லலாம். அப்படி வித்தியாசமான முயற்சிகளை வானொலியில் வெற்றிகரமாக செய்த பெருமைக்குரியவர் மாதவன்.

பலரும் செய்யத் துணியாத முயற்சிகளை துணிச்சலுடன் செய்யும் ஆர்வமும் அவரிடம் நிரம்ப இருந்தது.  பல அரசியல் காரணங்களால் அந்த ஊரில் ஒரு குறிப்பிட்ட சாலையில் தொடக்கப்பட்ட பால வேலைகள் பாதியில் நின்று விட்டன. பல பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன. எதுவுமே நடக்கவில்லை. ஒரு நாள் ஒலிப்பதிவுக் கருவியோடு அலுவலக சகாக்களோடு போய் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களைப் பதிவு செய்து அதைச் செவ்வனே நெறிப்படுத்தி வானொலியில் ஒலிபரப்பினார். அதில் பிரச்சனையோடு தொடர்புடைய அதிகாரிகளிடம் தனது கேள்விகளால் துளைத்தெடுத்தார். அது ஒரு வெற்றிக் கதையானது. இரண்டே வாரங்களில் பால வேலை தொடங்கியது. வானொலியின் வலிமையை அந்த சமூகத்திற்கு உணர்த்தினார். அது அவரது மகத்தான சாதனை.

தொண்ணூறுகளின் துவக்க காலக் கட்டத்தில் ஒரு பெரும்புயல் தென் தமிழ்நாட்டில் பெரிய அளவில் தாக்கியது. தொடர்ந்த மழை காரணமாக வழக்கத்திற்கு மாறாக நாகர்கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் பெரும் வெள்ளம். திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவிலுக்கு வரும் பாதை துண்டிக்கப்பட்டது. சுசீந்திரம் தனித்தீவு போல் காட்சி தந்தது. கரியமாணிக்கபுரத்திற்கு அடுத்துள்ள தாழ்ந்த பகுதிகளிலுள்ள வீடுகள் மூழ்கின. சிலர் அங்குள்ள மரங்களின் மேல் ஏறி உயிரை பிடித்துக் கொண்டிருந்தனர். சில தொண்டுள்ளம் கொண்ட இளைஞர்கள் உயிரை பணயம் வைத்துக் கொண்டு நீந்தி அவர்களை மீட்டனர்.

இரவு பகலாக ஒலிபரப்பு தொடர்ந்து கொண்டிருந்தது. இணையத் தொடர்போ மின்சாரமோ இல்லாத அந்தக் காலக் கட்டத்தில் வானொலியே மக்களுக்கு மிகுந்த துணையாக இருந்தது. அப்போது வானொலி நிலையத்திலேயே நாங்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றிக் கொண்டிருந்தோம்.

அன்றைய தினம் காலையில் நான் பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பேட்டி கண்டு வானொலித் தொகுப்பாக அளித்தேன்.

இன்னொரு புறம் நிகழ்ச்சி பொறுப்பாளரான மாதவன் சுசீந்திரத்தில் வெகுவாக பாதிப்பிற்குள்ளான பகுதிக்கு சென்றார். அங்குள்ள மக்களின் பேட்டியோடு மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முகத்தையும் முடித்து விட்டு மாலை நிலையம் வந்தார்.

மாலையில் மீண்டும் நான் ஒலிபரப்பு பணியில் இருந்தேன். அறிவிப்பு செய்து நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது எனது பணியாக இருந்தது. மாதவனுக்கோ அவரது பிறப் பணிகளுடன் நேர்முகம் கண்டவர்களை வைத்து ஒரு சிறப்பு தொகுப்பு நிகழ்ச்சியினை இரவு 9:16 க்கு தயார் செய்து கொடுக்க வேண்டும். நேர்முகம் கண்டவர்களின் குரல்களெல்லாம் இரண்டு மூன்று நாடாக்களில் இருந்தன.

நிலைய அரங்கில் நிகழ்ச்சியின் துவக்கத்தில் கூறும் முன்னுரையினையும் இடையில் உள்ள இணைப்புரைகளையும் தனியாக இன்னொரு நாடாவில் அறிவிப்பாளர் குரலில் ஒலிப்பதிவு செய்ய வேண்டி இருந்தது. அவ்வாறு அன்றைய மழை பாதிப்பு குறித்த முன்னுரையினை முதலில் ஒலிபரப்ப வேண்டிய ஒலி நாடாவில் சேர்த்தார். பின் அதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த போது என்ற அறிவிப்பை சேர்த்து விட்டு தொடர்ந்து சுசீந்திரத்திலிருந்து ஒலிப்பதிவு செய்த பாதிக்கப்பட்டவர்களின் குரலையும் சேர்த்தார். வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கூறுகையில் என்ற இணைப்புரையை அடுத்து சேர்த்து ஆட்சித் தலைவரின் குரலையும் அந்த ஒலி நாடாவில் மாற்ற வேண்டும். நேர நிர்ப்பந்தம் காரணமாக மாவட்ட ஆட்சித் தலைவர் தொடர்பான அறிவிப்பாளரின் இணைப்புரையை அதில் சேர்க்காமல் 10 நொடிகள் பாஸ் – இடைவெளி விட்டுவிட்டு ஆட்சித் தலைவரின் நேர்முகத்தை அதில் சேர்த்துவிட்டு ஒலிபரப்பு அறையில் அந்த ஒலிநாடாவை என்னிடம் தந்துவிட்டார்.  அந்த 10 நொடிகள் ஒலி இல்லாத இடைவெளி இருக்கும் இடத்தில் ஒரு சிறிய காகித துண்டையும் அடையாளமாக வைத்திருந்தார்.  

என்னிடம் அவர் ஒலிபரப்பிற்கான ஒலிநாடாவைத் தந்து ‘’ பிரதர். நீங்க ஒரு உதவி பண்ணனும். இந்த டேப்பிலே மழையினால் பாதிக்கப்பட்டவர்களின் குரல்வரை எல்லாம் ஒழுங்காக போய்விடும். அது முடிகிற இடத்தில் நான் அடையாளமாக ஒரு காகிதத் துண்டை வைத்திருக்கிறேன். டேப் ஓடிக் கொண்டிருக்கிற போது அந்த இடம் வரும்போது காகிதத் துண்டு கீழே விழும். நீங்கள் உடனே டேப்பை நிறுத்தி மைக்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நிவாரணப்பணிகள் குறித்து கூறுகையில் என்று கூறி அந்த டேப்பை மீண்டும் பிளே செய்ய வேண்டும்’’ என்றார்.

உடனே நான் அவரிடம் ‘’சார்! நான் இணைப்புரை கூற வேண்டிய இடத்தில் எவ்வளவு பாஸ் இருக்கிறது’’ என மீண்டும் கேட்டேன். உடனே அவர் ‘’பிரதர்! டேப் ஓடுகிற போது அந்த காகித துண்டு கீழே விழுந்த பின் பத்து விநாடிகள் கழிந்த பின்தான் மாவட்ட ஆட்சித்தலைவரின் குரல் வரும்’’ என்றார்.

உடனே நான் ‘’சார்! கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் டியூட்டி ரூம் சென்று ரேடியோவில் நிகழ்ச்சியைக் கேளுங்கள்’’ என்றேன்.           ஆனால் அவர் ஒலிபரப்பு அறையை விட்டுப் போகவில்லை.

‘’பிரதர்! சரியா பண்ணிடுவீங்க நீங்க .. எனக்கு நம்பிக்கை இருக்கு. கலெக்டர் நிகழ்ச்சியை கேட்டுக்கிட்டு இருப்பாரு’’ என்றார்.

நான் மீண்டும் அவரை சமாதானப்படுத்தினேன். அதற்குள் இன்னொரு சக நண்பர் ஆங்கிலத்தில் இருந்த வானிலை அறிவிப்பு தந்தியை மொழிபெயர்க்காமல் வெகு நேரம் வைத்துவிட்டு கடைசி நேரத்தில் என்னிடம் தந்து விட்டு போனார். அது டெலக்ஸ் நாடாக்களில் அச்சு செய்யப்பட்ட ஆங்கில வார்த்தைகள். அவை தந்தியில் தாறுமாறாக கோணலாக ஒட்டப் பட்டிருக்கும் அச்சிடப்பட்ட காகித நாடாக்கள். தந்தி செய்திகளானதால் நிறைய பிழைகள் வேறு… புயல் நேரமானதால் புதிது புதிதாக வார்த்தைகள். பாவம்.. கடமை உணர்ச்சியில் ஐந்து கிலோமீட்டர் அந்த மழையில் மிதிவண்டியில் மிதித்து அந்தத் தந்தியை தந்திக்காரர் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக அலுவலகத்தில் தந்துவிட்டு போயிருக்கிறார். அப்போதே அந்தத் தந்தியை என் சக அலுவலர் என்னிடம் தந்திருந்தால் நான் அவரிடம் மொழி பெயர்க்க சொல்லுவேனெனக் கருதி கடைசி நேரத்தில் ஒலிபரப்பு செய்ய வேண்டிய நேரத்தில் என்னிடம் வந்து தந்து விட்டு போயிருக்கிறார்.

நான் இருக்கும் பரபரப்பை பார்த்து ‘’தம்பி ! சரியா பண்ணிடுங்க தம்பி…’’ என்று மீண்டும் எச்சரித்து விட்டு ஒலிபரப்பு அறையை விட்டு வெளியே சென்று விட்டார் மாதவன்.

ஒலிபரப்பு அறை என்பது எங்களுக்கு தியான அறை போலானது. யாருடைய இடையூறும் இல்லாத போது எங்களுக்கு அறுபது நொடிகள் கூட ஒரு பெரிய கால அளவாக இருக்கும். அந்த ஒரு நிமிடத்திற்குள் ஒலிபரப்பு சம்பந்தமான நிறைய பல்வேறு ரகமான வேலைகளை எங்களால் விரைவாக செய்திட முடியும். குரங்காய் அலைகிற சிதறிய மனது கூட அங்கே ஒலிபரப்பு அறைக்கு வந்ததும் ஒரு தியானியின் மனநிலைக்கு ஒருங்கிணைந்து விடும். அப்போதுதான் தவறில்லாமல் ஒலிபரப்புப் பணியை அறிவிப்பாளரால் சிறப்புற செய்ய இயலும்.         

ஒன்பது மணி ஆங்கிலச் செய்திகள் முடிந்ததுமே ராஜேந்திர பிரசாத், டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்ற பழைய தலைவர்கள், அறிஞர்களின் பொன்மொழிகள் 30 நொடிகள் டெல்லியிலிருந்து ஒலிபரப்பாகும். அந்த நொடிகள் என்னை அடுத்து வரும் முக்கிய பணிக்கு தயார் படுத்தின. அந்த நொடிகளில் தவறி தடுமாறி என்னால் நிகழ்ச்சி விழுந்து விடக் கூடாது.

ஒரு விண்வெளி ஏவுதளத்தில் ராக்கெட் ஏவும் அந்த துல்லிய மணித்துளிகளுக்கு சற்றும் குறைவில்லாத சிரத்தை அந்த நொடிகளில் அப்போது என்னிடம் இருந்தது. அதன்பின் நான் அந்த சிறப்பு புயல் எச்சரிக்கையை அறிவித்துவிட்டு மாதவன் சார் தந்த நிகழ்ச்சியை முறையான அறிவிப்புடன் கவனமாக ஒலிபரப்பு செய்ய வேண்டும். அந்த குறுகிய ஒரு நிமிடத்திற்குள் அந்த வானிலை அறிவிப்பை ஒருதடவை படித்துப் பார்த்து கொண்டேன். அதை அப்படியே தமிழில் மனதில் மொழிபெயர்த்து அப்படியே படிக்க வேண்டிய சூழல்.

குமாரி சரஸ்வதியின் வீணை இசைத் தட்டை அதனைச் சுற்றுகிறக் கருவியில் க்யூ செய்தேன். அந்த வீணை இசைதான் எனக்கு ஒலிபரப்பினிடையே மூச்சுவிட நேரம் தரப்போகிறது. எந்தத் தவறோ தடுமாற்றமோ வந்தால் அந்த இசைத்தட்டை சுழல விட்டால் அது அந்த நிகழ்ச்சியினிடையே உள்ள பொருத்தமான இசையாக நேயர்களுக்கு கேட்கும். அதற்குள் நான் சிந்தித்து எதிர்பாராத தடங்கல்களை நிவர்த்தி செய்துவிட இயலும். அதற்கான முன்னேற்பாடாகத்தான் அந்த வீணை இசைத் தட்டை அதை இயக்கும் கருவியான ரிக்கார்டு பிளேயரில் பொருத்தி வைத்திருந்தேன்.

மணி 916 ஆனது. ஃபேடரை ஆன் செய்து ஆங்கிலத்திலிருந்த வானிலை அறிவிப்பை அப்படியே பார்த்து தமிழில் தவறின்றி நேரலையாகஅறிவிக்க இயன்றது. அடுத்து மாதவன் சார் தந்த ஒலி நாடாவை உரிய அறிவிப்புடன் ஒலி பரப்பினேன். ஐந்து நிமிடங்கள் ஆகி இருக்கும்.

அந்தக் காகிதக் கொடி சுழலும் ஒலிநாடாவிலிருந்து விழுகிற நேரம். அப்போது மாதவன் மீண்டும் ஒலிபரப்பு அறையில் மெதுவாக கதவைத் திறந்து நுழைந்தார். அவர் அமைதியாக நின்று கொண்டிருந்தார். எனது திட்டமானது ஓடிக் கொண்டிருக்கும் ஒலிநாடாவை நிறுத்தாமல் அதில் வருகிற ஒலிப்பதிவு இல்லாத பத்து நொடிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் பற்றிய இணைப்புரையை நான் மைக்கில் சொல்லி விட்டால் எந்த தடங்கலுமில்லாமல் நிகழ்ச்சி ஓடிவிடுமென்பது.

அந்தக் காகிதக் கொடி விழுந்ததுமே நான் அறிவிப்பு செய்ய வேண்டிய ஃபேடரை திறந்து உரிய அறிவிப்பை சொல்லிக் கொண்டிருக்கும் போது மாதவன் சார் ஓடிக் கொண்டிருக்கிற ரிக்கார்ட் பிளேயரின் ஃபாஸ்ட் பார்வார்டை அமுக்கி விட்டார்.

ஒரு நொடியில் உலகமே தகர்ந்தது போல் ஆகி விட்டது எனக்கு. ஒலி நாடா முன்னோக்கி ஓடிக் கொண்டிருந்தது. நான் உடனடியாக அறிவிப்பு ஃபேடரை குளோஸ் செய்தேன். ஆபத்துபாந்தவனாக வைத்திருந்த குமாரி சரஸ்வதியின் வீணையை ஒலிபரப்பினேன். எனது ரத்த அழுத்தம் உச்சத்திலிருந்தது.

மாதவன் சார் கோபத்தில் கத்தினார்.

‘’என்ன தம்பி நீங்க இப்படி பண்ணிட்டீங்க. நான் கொடி விழுந்ததும் டேப்பை நிறுத்த சொன்னேன். நீங்க நிறுத்தல்லே. நான் பிளேயருக்கு அந்த பக்கத்திலே இருந்து ஸ்டாப் பண்ணினதினாலே ஃபாஸ்ட் பார்வார்டை தவறுதலா ஸ்டாப் பட்டன்னு நினைச்சு அமுக்கிட்டேன் என்று சொல்லி பயங்கரமாக கத்திக் கொண்டிருந்தார். அந்த நேரம் மிக உன்னதமான நேரம். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒலிபரப்பு அறையில் நடக்கிற தவறு வெளியேத் தெரியக்கூடாதென்பது மிகவும் முக்கியம்.

நான் வேறு வழியின்றி ‘’சார். ப்ளிஸ்.. இந்த ரூமை விட்டு போயிடுங்க. பிளீஸ் கெட் அவுட் சார்’’ என்றேன்.

எனது பதிலை சற்றும் எதிர்பாராத அவர் வெளியே சென்று விட்டார். எனக்கு தற்போதைய சவால் மாவட்ட ஆட்சித் தலைவரின் குரலிலிருந்த இடத்தை சரியாக கண்டுபிடித்து அதிலிருந்து உடனடியாக ஒலிபரப்பு செய்ய வேண்டும். ரீவைண்ட் அடித்து அந்த ஐந்து நிமிடங்களை நிறுத்துவதற்கு டேப் ரிக்கார்டரின் எல் இ டி கவுண்டர் 1111 என்றே காட்டியது. அது சரியாக வேலை செய்யவில்லை.

உடனடியாக ஒலிபரப்பு அறையின் கடிகாரத்தை பார்த்தேன். 9 21 ஆகி இருந்தது. 916 க்கு நிகழ்ச்சிக்கு ஆரம்ப அறிவிப்பு செய்தேன். அப்படியென்றால் டேப்பின் ஆரம்பத்திலிருந்து தோராயமாக நான்கு நிமிடங்களுக்குள் மாவட்ட ஆட்சித்தலைவரின் குரல் இருக்குமென ஊகித்தேன். ரீவைண்டு செய்து சுற்றி இருக்கிற டேப்பின் தடிமனை வைத்து தோராயமாக நான்கு நிமிடத்தை கணித்து டேப்பை நிறுத்தினேன். சரியாக மாவட்ட ஆட்சித் தலைவரின் குரல் வந்தது. உடனடியாக குமாரி சரஸ்வதியின் வீணையை மெதுவாக குறைத்து விட்டு ஆட்சித்தலைவரின் குரலை ஒலிபரப்பினேன். இதெல்லாம் பிரச்சனை உருவான 45 நொடிகளில் சரி செய்யப்பட்டு விட்டது.

எனது சென்ற உயிர் மீண்டு வந்தது. இனி அடுத்த கவலை. வேலையில் சேர்ந்து ஒரு வருடம்தான் ஆகி இருக்கிறது. பிரொபேஷன் காலம் வேறு. என்னுடைய உயர் அதிகாரியை கெட் அவுட் பிளீஸ் சார் என்று கூறி விட்டேன். ஆனால் என் உள்மனதில் கெட் அவுட் என்ற வார்த்தையின் நிஜமான வலிமையில் நான் சொல்லவில்லை. அந்த முக்கியமான குறுகிய தங்க மணித் துளிகளில் நான் இயங்க வேண்டிய தனிமை என்னை மிகவும் தாழ்ந்த குரலில்தான் சொல்ல வைத்தது.  அவர் கொதித்து போய் என் அறையை விட்டு சென்றிருக்கிறார்.

மற்றபடி நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இக்கட்டான சூழ்நிலையை சரியாகவே சமாளித்திருக்கிறேன் என்ற திருப்தி இருந்தது. நடப்பது நடக்கட்டும் என்று அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஒலிபரப்பு அறையை விட்டு வெளியே வந்தேன். அவர் மிகவும் அன்பான தனிப்பட்ட நண்பர் வேறு. அவர் முகத்தை பார்க்கவே எனக்கு துணிவில்லை. குனிந்து கொண்டே வெளியே வந்தேன் .

அங்கே காத்திருந்த மாதவன் சார் என்னை இறுக்கி கட்டி அணைத்தார். ‘’தம்பி! ரெம்ப அருமையா பண்ணினீங்க தம்பி. நான் பிளேயரை ஃபார்வார்டு பண்ணினதுதான் தப்பா போச்சு. நீங்க நல்லா சமாளிச்சிட்டீங்க. ஒரு தவறும் வெளியிலே தெரியல்லை. கலெக்டர் இப்போதான் ஃபோன் பண்ணி பாராட்டினார்’’ என்றார்.

அவரின் அன்பிலும் அவர் உயர்ந்த குணத்திலும் நான் தடுமாறிப் போனேன். அன்று நான் தூங்கவே இல்லை.

சில மாதங்கள் கழித்து இன்னொரு இடத்திற்கு மாற்றலாகிச் சென்றார் மாதவன். அடிக்கடி அவருக்கு வயிறு சீரணம் தொடர்பான பிரச்சனைகள் வந்திருக்கின்றன. முதலில் அவர் பாரம்பரிய மருந்துகளை வைத்து தற்காலிக நிவாரணம் தேடி இருக்கிறார். வயிறு வலி அதிகமாக ஒரு பெரிய மருத்துவரிடம் சென்ற போது அவரது உடலை பூரணமாக பரிசோதித்து அவருக்கு வயிற்றில் புற்று நோய் என்றிருக்கிறார்கள்.

மாதவனால் தனக்கு புற்று நோய் என்பதை நம்பவே இயலவில்லை. தனது நோயை யாரிடமும் சொல்லவும் துணிவில்லை. அவர் அந்த விஷயத்தை தன் மனைவியிடமோ, குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களிடமோ, உற்றார் உறவினர்களிடமோ, நெருங்கிய நண்பர்களிடமோ, அலுவலக சகாக்களுடனோ பகிர்ந்து கொள்ளவில்லை. காரணம் அவருடைய நோய்க்காக அவர்கள் படும் வருத்தத்தை அவரால் பார்க்கத் துணிவில்லை.

மருத்துவர் அவரை சென்னையிலுள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள பரிந்துரைத்திருக்கிறார். ஆனால் அவர் அதை விரும்பவில்லை. அவரை பொறுத்தவரை வயிற்றிலுள்ள கட்டியை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டாலே எல்லாம் சரியாகி விடுமென்ற சுய நம்பிக்கை. அது கடவுள் சார்ந்த நம்பிக்கையா அல்லது அறுவை சிகிச்சைக்கு பின் இயற்கை சார்ந்த மருத்துவத்தில் எல்லாவற்றையும் சரி செய்து விட முடியுமென்ற அவரது நம்பிக்கையா எனத் தெரியவில்லை. அல்லது தனக்கு தேவையான நெடிய சிகிச்சைக்காக மூன்று சிறிய பெண் குழந்தைகளோடு மனைவி அடைய வேண்டிய அவஸ்தைகளை எதிர்கொள்ளும் வலிமை அவரிடம் இல்லாமல் இருந்திருக்க வேண்டும்.       அப்பொழுதெல்லாம் அலைபேசிகள் புழக்கத்தில் இல்லாத காலம்.

மனைவியிடம் ஒருவார அலுவலகப் பயணமென்று பக்கத்து நகரத்திற்கு வந்தார். அங்கே அவருக்கு பழக்கமான ஒரு சாதாரண மருத்துவரை அணுகி அவரிடம் எப்படி அறுவை சிகிச்சை செய்து கொண்டாரென்பது யாருக்கும் தெரியாது. நான்கைந்து நாட்களில் அவருடைய உடல்நிலை இன்னும் மோசமானது. அந்த மருத்துவர் மூலமாகவே மனைவி, உறவினர்கள், நண்பர்களென செய்தி பரவியது.

அதிரச்சியான எல்லோரும் அவரை திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றார்கள். அவரது உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் செய்த அறுவை சிகிச்சை தேவையற்றதென்றும் அதனாலேயே அவரது நோயின் தாக்கம் இன்னும் அதிகமாகி விட்டதாக கூறினர். அவருக்காக ரத்தம் தேவைப்பட்ட போது நண்பர்களெல்லாம் ரத்தம் அளிக்கக் குவிந்தனர்.

கலைப் பொருட்களின் மீது அளவுகடந்த காதல் கொண்ட அவர் நிறைய கலைப் பொருட்களை வாங்கி வீட்டில் அலங்காரமாக வைத்திருந்தார். அவருடைய வருமானத்தில் பெரும்பங்கை கலைப் பொருட்கள் வாங்குவதிலேயே செலவழித்தார். அவருடைய அபரிதமான மருத்துவச் செலவிற்கு உதவி செய்யக்கூட பலரும் காத்திருந்தார்கள். அவ்வாறு கலைப் பொருட்களைப் போலவே எல்லோருடைய அன்பையும் நிறைவாக சேர்த்து வைத்திருந்தார்.

அவர் மருத்துவமனையிலிருந்த போதே அவருடைய மோசமான உடல்நிலை குறித்து அவருக்கே தெரிந்திருந்தது. இருந்தும் அவர் மீது அன்பு கொண்டு அவரை பார்க்க வந்த நண்பர்களின் முக சோகத்தை பார்த்து ‘’எல்லாம் சரியாயிடும்மா கவலைப்படாதீங்க’’ என்று பார்க்க வந்தவர்களுக்கு அவர் தைரியம் ஊட்டினார். இயல்பில் அவரது மனைவி எங்குமே தனியாக செல்ல மாட்டார். மாதவனுக்கு அலுவலகத்தில் நிறைய வேலை இருக்கும் தருணங்களில் ஊர் போக வேண்டிய அவசரத்திற்கு மனைவியை தனியாக ஊருக்கு பஸ் ஏற்றி விடுகிறேனென்று சொன்னால் கூட அவரைத் துணைக்கு அழைக்கும் இயல்புடையவர் அவர்.

நெருங்கும் மரணத்தை உணர்ந்துவிட்ட அவர் மனைவியைப் பார்த்து ‘’நீ பழைய மாதிரி இருக்காதே… மூணு பெண் குழந்தைகள் இருக்குது. தைரியமா எல்லா இடங்களுக்கும் தனியாக போக கத்துக்கணும். வீட்டிலே நா வச்சிருக்கிற மர சாமான்கள், கலைப் பொருட்களையெல்லாம் யாரும் தூக்கி எறிஞ்சிடாம… அதைப் பத்திரமா வச்சு பிள்ளைங்க வளர்ந்து அவங்க கல்யாணம் கழிஞ்ச பின்னாடி கொடு’’ என்றார்.

இவர் மருத்துவமனையில் இருக்கும் போது அவரது இசை ஆர்வம் துளி அளவும் குறையவில்லை… பக்கத்திலுள்ள ஒருவர் இவரின் இசை ஆர்வத்தை அறிந்து அவரைப் பாடச் சொல்லி இருக்கிறார். உடனே அவர் ‘’நிலவே என்னிடம் நெருங்காதே நீ மயங்கும் வகையில் நானில்லை’’ என்ற ராமு படப்பாடலை மிகவும் உணர்வு பூர்வமாக பாடி இருக்கிறார். உடனே அவர் ‘’நல்லா பாடறீங்க… ஏன் இந்த சமயத்திலே இப்படி சோகப் பாட்டு பாடறீங்க.. சந்தோஷமா ஒரு பாட்டுப் பாடுங்க’’ என்ற போதும் மாதவன் மறுக்கவில்லை… மகிழ்ச்சியாக வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் இன்பம் பொங்கும் வெண்ணிலாப் பாடலை மகிழ்ச்சியாகப் பாடினார். இயற்கையின் போக்கில் இயல்பாகவே பயணிக்கிற அதி உன்னத மனிதர் மாதவன்.

அவர் மருத்துவமனையில் இருந்த சமயம் ஓணப் பண்டிகை. அப்போது அவருக்கு சிகிச்சை செய்த ஒரு செவிலியர் வீட்டிலிருந்து பாயசம் கொண்டுவந்து கொடுத்தார். அதை சுவைத்து சுவைத்து குடித்து அந்த செவிலியரை மிகவும் பாராட்டினார். அவர் இறந்த அன்று அந்த செவிலியர் ஒரு உறவினரை இழந்தது போல கண்ணீர் விட்டு அழுதார். காரணம் அவர் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு அந்த செவிலியரிடம்  ‘’அம்மா! நான் ஒண்ணு கேட்பேன். தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். நீங்க ஓணத்தண்ணைக்கு பிரதமன் செய்து தந்தீங்களா. ரொம்ப சுவையா இருந்தது. அதை இண்ணைக்கு கொஞ்சம் செஞ்சு கொண்டு வருவீங்களா. முடிஞ்சா போதும்‘’ என்று கேட்டிருக்கிறார்.

உரிமையாக அவர் கேட்ட போது அந்த செவிலியர் மிகவும் கண்ணீர் விட்டார். உடனே அவருக்காக வீட்டிலிருந்து அடைப் பாயாசம் செய்து கொண்டு கொடுத்தார். அதை சுவைத்து சுவைத்து குடித்த போதே அன்பின் மிகுதியிலும் நன்றி உணர்ச்சியிலும் அவருடைய கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வந்து கொண்டிருந்தது. அப்போதும் அவர் அந்த செவிலியரிடம் கூறினார்  ‘’கவலைப் படாதீங்கம்மா. எனக்கு எல்லாம் சரியாயிடும்’’ என்றார்.

அடுத்த நாளே மிஸ்டர் மாதவன் இறந்து விட்டார் என்ற தந்தி வந்தது. ஒரு கணம் விரைந்த காலத்தின் வேகத்தை எண்ணி பிரமித்து உட்கார்ந்தேன். மறைந்த மாதவனின் அன்பும் முத்திரை சிரிப்பும் இன்னும் என் மனதில் ஆழமாய் சித்திரமாய் இருக்கிறது. என்னுள்ளே அவர் இவ்வளவு மறக்க இயலாத சித்திரமாய் உருக் கொண்டிருந்தால் அவருடைய குடும்பத்தாருள் அவர் எந்த அளவிற்கு தாக்கம் கொண்டிருப்பார் என்று அதன் எல்லையை என்னால் கற்பனை செய்ய இயலவில்லை.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக மிகுந்த சிரத்தையுடன் உதவிகள் செய்த அவருடைய நண்பர் வி.எஸ். நாயர் ஐந்து வருடங்கள் கழித்து அலுவலக வேலையாக திருநெல்வேலி வந்த போது அவர் குடும்பத்தைத் தேடிச் சென்று பார்த்திருக்கிறார். அவர் மனைவி மிகுந்த உறுதியோடு பொருளாதாரப் போராட்டங்களைக் கடந்து நிதானத்துடன் அந்தக் குழந்தைகளை வளர்த்து வருவதை அறிந்த போது நண்பருக்கு மனதில் மிகுந்த ஆறுதல்.

அப்போது ‘’அங்கிள்! அப்பாவிற்கு பிடித்தமான அப்பாவுடைய பர்னிச்சர்களை பார்க்கறீங்களா… வாருங்க’’ என்று அந்த மூன்று பெண் குழந்தைகளும் ஒருங்கே நண்பரை அந்த அறைக்கு அழைத்துச் சென்றனர். உள்ளே பார்த்தால் பல்வேறு கலை வடிவங்களுடனான மிகவும் அழகான மர வேலைப்பாடுடனான மேஜை, நாற்காலிகளுடன் இன்னும் பல கலைப் பொருட்களும் அலங்காரமாய் அங்கே இருந்தன. நான்கு சுவர்கள் முழுவதும் விதவிதமான கையெழுத்தில் விதவிதமான வண்ணங்களில் எழுதப்பட்ட குழந்தைகளின்  கிறுக்கல்கள். அது கிறுக்கல்களல்ல அப்பாவிற்கு அவர்கள் எழுதிய குறுஞ்செய்திகள். அப்பா நீ எங்கே இருக்கிறே? – மேனகா, அப்பா உன்னை நிரம்ப தேடுது? – ரேகா, அப்பா நீ எப்போ வருவே? – ராதிகா, அப்பா உன்னை எங்களுக்கு ரெம்ப பிடிக்கும் போன்ற சாக்பீஸ் வரிகள் மனதை நெருடும் அளவில் இருந்தன. அந்த அறையைப் பார்த்த போது மாதவனே அங்கு முழுவதும் அன்பால் நிரம்பி இருந்தார்.

தொடர்ந்து பழைய புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தேன். அதில் ஒரு பழைய புதிய பார்வை இதழ் ஒன்று என் கண்ணில் பட்டது. அதில் மாதவன் ஏதோ தொலைபேசி எண்ணை எழுதி வைத்திருந்தார். அது என்னிடம் படிக்க வாங்கி அவர் திருப்பித் தந்த இதழாக இருக்கும். அவர் கையெழுத்தைப் பார்த்த போது மனதில் ஒரு மகிழ்ச்சி தோன்றியது… பக்கங்களை புரட்டினேன்.

அதில் ஒரு பழுப்பு நிறத்தில் ஒரு காகிதத் துண்டும் ஐம்பது ரூபாய் நோட்டும் இருந்தது. ‘’அன்பு சகோதரா… நீங்கள் அன்று புத்தகத்திற்கு கொடுத்த ஐம்பது ரூபாய் இதோ…. நேரில் தந்த போது நீங்கள் வாங்க மறுக்கிறீர்கள்… அதனால்தான் இங்கே இணைத்துள்ளேன் ‘’ என்று அவருக்கே உரித்தான முரட்டு கையெழுத்தில் அந்தக் குறிப்பும் இருந்தது. அன்று அவர் தந்த பழைய இதழை இப்போதுதான் நான் திறந்திருக்கிறேன்.

இனி யாராவது சொல்லட்டும் அவரை மறதி மாதவனென்று.

குமரி எஸ்.நீலகண்டன்

Cell no – 9444628536                                                

punarthan@gmail.com

Series Navigationவரிக்குதிரையான புத்தகம்
author

குமரி எஸ். நீலகண்டன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *